=======================
உண்மையுள்ள உக்கிராணக்காரர்
=======================
1 கொரிந்தியர் 4: 1
இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரனென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்!
தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரர்!
கிறிஸ்துவின் ஊழியக்காரர் தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரராக இருக்கவேண்டும்.
தேவனுடைய இரகசியங்கள்?
தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்கள்
லூக்கா 8: 10
1. தேவன் ஒருவரே ஞானமுள்ளவர்!
ரோமர் 16: 25-27
நம்மை ஸ்திரப்படுத்த வல்லவர்!
ரோமர் 16: 25, 26
2. சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்து மகிமையின் கர்த்தர்!
கொரிந்தியர் 2: 7-9
தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்
1 தீமோத்தேயு 3: 16
3. கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருக்கிறார்
கொலோசெயர் 1: 25-27
முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த நம்மை பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்
கொலோசெயர் 1: 21-23
4. கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் தேவனுடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்
எபேசியர் 1: 11, 12
இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி தேவன் நம்மை முன்குறித்திருக்கிறார்
எபேசியர் 1: 6
புறஜாதிகள் சுவிசேஷத்தினால் (யூதருக்கு) உடன் சுதந்தரருமாய், (யூதருடன்) ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் தேவன் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு (யூதருக்கு) உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்கள்
எபேசியர் 3: 3, 6
எபேசியர் 2: 13-18
கிறிஸ்துவை பற்றும் விசவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது
எபேசியர் 3: 9-12
5. சபை கிறிஸ்துவினால் சுத்திகரிக்கப்பட்டு, போஷிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுவரும் அவருடைய மணவாட்டி!
எபேசியர் 5: 23-27,29,30,32
6. நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்
1 கொரிந்தியர் 15: 51-53
காலங்கள் நிறைவேறும்போது பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டும்
எபேசியர் 1: 9, 10
கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்
1 தெசலோனிக்கேயர் 4: 16, 17
========================
தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரர்!
========================
உக்கிராணக்காரர்
உண்மையுள்ளவர்களாய் இருக்கவேண்டும்.
1 கொரிந்தியர் 4: 2
1. விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறதில்
1 தீமோத்தேயு 3: 9
2. விசுவாசிகள் பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்று மன்றாடுகிறதில்.
கொலோசெயர் 2: 1, 2
பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியம்
கொலோசெயர் 2: 12-15
3. தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் சபைக்கு அறிவிக்கிறதில்
அப்போஸ்தலர் 20: 26, 27
4. மனுஷரை நாடிப் போதியாமல், தேவனை நாடி போதிக்கிறதில், மனுஷரை பிரியப்படுத்தப்பார்க்காமல், தேவனை பிரியப்படுத்தப்பார்க்கிறதில்
கலாத்தியர் 1: 10
வஞ்சகத்தோடும் துராசையோடும் கபடத்தோடும் போதியாமல்,
சுவிசேஷத்தை தங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் தங்களை உத்தமரென்றெண்ணினபடியே, மனுஷருக்கு அல்ல, தங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறதில்
1 தெசலோனிக்கேயர் 2: 3, 4
ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லாமல், பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணாமல் இருக்கிறதில்
1 தெசலோனிக்கேயர் 2: 5
அநேகரைப்போல, தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறதில்
2 கொரிந்தியர் 2: 17
5. கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருந்தாலும் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டியபிரகாரமாகப் பேசி, அதை வெளிப்படுத்துகிறதில்
கொலோசெயர் 4: 4
கொலோசெயர் 1: 23, 24
எபேசியர் 6: 18, 19
2 தீமோத்தேயு 2: 8, 9
6. கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்த அறிவில் தேறுகிறதில்
எபேசியர் 3: 4, 5
========================
கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக விசுவாசிகள் பேசலாமா?
========================
பேசக்கூடாது என்றுதான் ஊழியக்காரர்கள் சொல்லிக்கொடுத்திருக்கிறோம்.
விசுவாசிகளும் ஆவியினால் அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள்தான் என்பதை மறந்துவிடுவிகிறோம்.
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது என்று வேதம் செல்லுகிறதே!
1 யோவான் 2: 27
தாவீதை துணைக்கு அழைக்கும் ஊழியர்கள்!
ஊழியக்காரர்களை விசுவாசிகள் குற்றப்படுத்தவோ, அவர்களுடைய தவறுக்குத்தக்க நடவடிக்கைகளை எடுக்கவோ கூடாது என்பதற்கு ஊழியர்களாகிய நாம் தாவீதை துணைக்கு அழைக்கிறோம்.
அவன் (தாவீது) தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன் மேல் என் கையைப்போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக. அவர் கர்த்தராலே அபிஷேகம்பண்ணப்பட்டவர் என்று சொல்லி,
1 சாமுவேல் 24: 6
தன் மனுஷரைச் சவுலின்மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்.
1 சாமுவேல் 24: 7
மேற்காணும் வசனங்களை விசுவாசிகளுக்கு போதித்து, "ஊழியக்காரர்கள் என்ன தவறுசெய்தாலும், கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்ட அவர்களை நீங்கள் குற்றப்படுத்தவோ, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ கூடாது, கர்த்தர் அவர்களை பார்த்துக்கொள்வார்" என்று சொல்லி, விசுவாசிகளை ஊழியர்கள் பயமுறுத்தி வைத்திருக்கிறோம்.
சவுலை கொல்லுவதற்கு இரண்டாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோதும்,
"கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமல்போகிறவன் யார்?" என்று அபிசாயிடம் சொல்லி, சவுலை கொல்லாதபடிக்கு அவனை தாவீது தடுத்ததையும் (1 சாமுவேல் 26: 7-9) சபையாருக்கு சொல்லி, அவர்களுக்கு பீதியுண்டாக்கி வைத்திருக்கிறோம் அல்லவா?
இதனால் நாம் என்ன அக்கிரமம் செய்தாலும், எவ்வளவு அசுத்தமாய் வாழ்ந்தாலும், எவ்வளவு தவறாக போதித்தாலும் அதை சகித்துக்கொண்டு, "கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம்வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்துக்குப்போய் மாண்டாலொழிய, நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்" என்று சவுலை குறித்து தாவீது சொன்னதுபோல (1 சாமுவேல் 26: 10, 11) இன்று விசுவாசிகளும் ஊழியர்களைக் குறித்து சொல்ல அவர்களை பழக்கப்படுத்திவிட்டோம் அல்லவா?
சவுல் - தாவீது நிகழ்வு, ஊழியர் - விசுவாசிகளுக்கு பொருந்துமா?
தாவீது சவுலை கொல்லுவதற்கு ஏற்ற சமயம் உண்டானபோது சவுல் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனாகவே இருந்தானா?
அப்பொழுதும் அவன் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்ட இராஜாவாகவே இருந்தானா?
இல்லை!
கர்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார். கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாதஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.
1 சாமுவேல் 16: 14
தாவீது சவுலை கொல்லுவதற்கு ஏற்ற சமயம் உண்டானபோது,
கர்த்தருடைய ஆவியை இழந்து பொல்லாத ஆவியையுடைய மனுஷனாக இருந்தான் சவுல்.
தம்முடைய வார்த்தையைப் புறக்கணித்த சவுலை, இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு புறக்கணித்துத் தள்ளி, அவனிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு, அவனைப் பார்க்கிலும் உத்தமனாயிருந்த தாவீதுக்கு அதைக் கொடுத்திருந்தார் கர்த்தர்
1 சாமுவேல் 15: 26, 28
சவுலை கொல்லுவதற்கான சந்தர்ப்பம் தாவீதுக்கு நேரிட்டபோது, சவுல் அபிஷேகம்பண்ணப்பட்டவனாகவோ, தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ராஜாவாகவோ இருக்கவில்லை.
கர்த்தர் சவுலின் ராஜ்யபாரத்தை அகற்றி, தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற தாவீதை தமக்குத் தேடி, அவனை தம்முடைய ஜனங்களின்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டிருந்தார்
1 சாமுவேல் 13: 14
அப்பொழுது தாவீதே தேவனால் ராஜாவாகத் தெரிந்துகொள்ளப்பட்டு, அபிஷேகம்பண்ணப்பட்டிருந்தார். கர்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்.
1 சாமுவேல் 16: 1, 2, 13
கர்த்தரால் இஸ்ரவேலின் இராஜாவாக அபிஷேகப்பண்ணப்பட்டு, தேவனுடைய ஆவியைப் பெற்றிருந்த தாவீது: கர்த்தரால் இராஜாவாயிராதபடிக்கு தள்ளப்பட்டு, தேவஆவியை இழந்து பொல்லாத ஆவியில் நிறைந்திருந்த சவுலை, "கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன் மேல் என் கையைப்போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக. அவர் கர்த்தராலே அபிஷேகம்பண்ணப்பட்டவர்" என்று சொல்லி தப்பவிட்டது சரியல்ல!
"இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன். உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் சொன்ன நாள் இதுதானே" என்று தனது மனுஷர் சொன்னதை தாவீது கேட்கவில்லை
1 சாமுவேல் 24: 4
சவுலை கொல்லுவதற்கு தாவீதுக்கு இரண்டாவது ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்தபொழுது அபிசாப் தாவீதைப் பார்த்து: "இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். இப்பொழுதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக்குத்தட்டுமா?" என்று கேட்டும், தாவீது அபிசாயைப் பார்த்து: "அவரைக் கொல்லாதே. கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமல்போகிறவன் யார்?" என்று சொல்லி, அவனை தடுத்து, சவுலை உயிரோடே விட்டுவிட்டார்.
1 சாமுவேல் 26: 8, 9
தாவீது நல்ல மனதுள்ளவரும், தேவனுக்கு பயப்படுகிறவருமாயிருந்தாலும், தனக்கு கிடைத்த இரண்டு சந்தர்ப்பதையும் நழுவவிட்டு தவறுசெய்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
தனக்கு கர்த்தர் கொடுத்த சந்தர்ப்பத்தை தாவீது சரியாகப் பயன்படுத்தி சவுலை கொன்றிருப்பாரானால், அல்லது சவுலை கொல்லுவதற்கு அபிசாயையாவது அனுமதித்திருப்பாரானால், "சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவர் போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே" என்று கதறவேண்டிய அவசியமே அவருக்கு வந்திருக்காது.
2 சாமுவேல் 1: 21
சவுலின் மரணம் விருத்தசேதனமுள்ள, தேவனால் அபிஷேகப்பண்ணப்பட்ட இராஜாவாகிய தாவீதின் கைகளால், அல்லது விருத்தசேதனமுள்ள அபிசாயின் கைகளால் மேன்மையாக நேர்ந்திருக்கும்.
சவுல் விருத்தத்தசேதனமில்லாத ஒரு அமலேக்கியனின் கைகளால் மடிந்து, இழிவான ஒரு முடிவை சந்திக்க (2 சாமுவேல் 1: 1-15) தாவீது தானே வாய்ப்பளித்துவிட்டு, பிறகு புலம்புகிறதில் நியாயமில்லையே!
இப்படியிருக்க, அபிஷேகம்பண்ணப்பட்ட தாவீது, அபிஷேகத்தை இழந்த சவுலை, கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனாக எண்ணி விட்டுவிட்டதை மாதிரியாகக் காண்பித்து: பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தும் தவறுசெய்கிற ஒரு ஊழியரை, பரிசுத்தஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிற விசுவாசிகள் குற்றப்படுத்தவோ, அவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்று ஊழியக்காரர்கள் விசுவாசிகளுக்கு போதிக்கிறது கொஞ்சமும் பொருத்தமில்லை!
அபிஷேகத்தை இழந்த ஒருவரை அபிஷேகத்தால் நிறைந்திருந்தவர் விட்டுவிட்டதை காண்பித்து: அபிஷேகம் பெற்றிருக்கிற தாங்கள் செய்யும் தவறுகளுக்காய், அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிற விசுவாசிகள் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று ஊழியக்காரர்கள் விசுவாசிகளை அச்சுறுத்துவது நியாயம் கிடையாது!
தவறுசெய்யும் ஊழியர்மேல் நடவடிக்கை எடுப்பது தண்டணைக்குரிய குற்றமா?
கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிற ஊழியர் ஒரு தவறும் செய்யாதபட்சத்தில், அவர்மேல் பொய்யாய் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிற விசுவாசிகள் நிச்சயம் தேவனுடைய தண்டனைக்கு தப்பமுடியாது!
கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டிருந்தும் தவறாக வாழ்கிற, அல்லது தவறாக போதிக்கிற ஒரு ஊழியரை விசுவாசிகள் திருத்த முற்சிக்கிறதும், அவர் திருந்தாதபட்சத்தில் அவர்மேல் தேவையான நடவடிக்கை எடுக்கிறதும், தேவனால் தண்டிக்கப்படத்தக்க குற்றமாகுமா?
கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்ட ஊழியரை குற்றப்படுத்தவோ, அவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கவோ விசுவாசிகளுக்கு உரிமையில்லை என்றால்; கர்த்தரால் அபிஷேகப்பண்ணப்பட்டிருக்கிற விசுவாசிகளின் குற்றங்களை ஊழியர்கள் சுட்டிக்காட்டுவதும், அவர்களுடைய குற்றங்களுக்குத்தக்க நடவடிக்கை எடுப்பதும், சிலரை சபையைவிட்டே நீக்குவதும் நியாயமாகுமா?
கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டிருந்த தாவீது, அபிஷேகத்தை இழந்திருந்த சவுலின்மேல் நடவடிக்கை எடுத்திருந்தால், அது தேவனால் பாவமாகவே கருதப்பட்டிருக்காது.
கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்ட ஊழியரால் கண்டிக்கப்படவோ, சபையைவிட்டு நீக்கப்படவோக்கூடிய அளவுக்கு ஒரு விசுவாசி தவறு செய்கிறாரென்றால், "அவர் நிச்சயம் அபிஷேகத்தை இழந்தவராகத்தான் இருக்கவேண்டும், அபிஷேகத்தை இழந்த அவர்மேல் அபிஷேகிக்கப்பட்ட ஊழியர் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை" என்று விசுவாசிகள் காரியத்தில் ஊழியர்கள் சுலபமாய் தீர்ப்புசெய்துவிடுவோம்!
ஆனால், விசுவாசிகள் சபையை விட்டு வெளியேற்றக்கூடிய, அல்லது தாங்கள் சபையைவிட்டு வெளியேறக்கூடிய அளவுக்கு ஒரு ஊழியர் தவறு செய்கிறாரென்றால், அல்லது தவறாகப் போதிக்கிறாரென்றால், *"அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவர்"* என்று சொல்லி அவரை பாதுகாப்போம்!
இது எந்தவிதத்தில் நியாயம்?
மேலும், தாவீது விசுவாசியோ, சவுல் ஊழியக்காரரோ அல்ல. இருவருமே இஸ்ரவேலின் இராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள்!
ஒருவர் அபிஷேகம் பண்ணப்பட்டவர், ஒருவர் அபிஷேகத்தை இழந்திருந்தவர்.
இராஜாவாயிராதபடிக்கு கர்த்தரால் தள்ளப்பட்டு, அபிஷேகத்தை இழந்திருந்த ஒருவனை, இராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டு, ஆவியில் நிறைந்திருந்த ஒருவர் கொல்லாமல் விட்டுவிட்டதற்கும்; ஆவியினால் அபிஷேகம்பண்ணப்பட்டும் தவறுசெய்கிற ஊழியர்கள்மேல், ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருக்கிற விசுவாசிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
ஊழியக்காரரின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை திருத்த முயற்சிக்கிற, அல்லது திருந்தாத ஊழியர்கள்மேல் சபையின் நலன்கருதி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிற சபையார் அல்ல, தங்களை தற்காத்துக்கொள்ளும்படிக்கு தாவீது - சவுல் நிகழ்வை, விசுவாசிகளை
பயமுறுத்தும்படி திரித்து போதிக்கிற ஊழியக்காரர்களே தேவனுடைய தண்டனைக்குரிய குற்றவாளிகளாகிறோம்!
சத்தியத்தை நமக்கு சாதகமாய் திரிப்பதற்கு பதிலாக, நம் தவறுகளை திருத்திக்கொள்ளப் பழகலாமே!!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
தேவன் மேய்ப்பரை தமது சபையில் நான்காவது இடத்தில் ஏற்படுத்தியிருப்பது, நான்காவது விரலில் மோதிரம் அணிந்துகொள்வதற்கு அல்ல.
சபையார் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலையை செய்யவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை பக்திவிருத்தி அடையப்பண்ணவுமே, தேவன் மேய்ப்பர் உட்பட ஐந்துவிதமான ஊழியர்களை தமது சபைக்கு ஏற்படுத்தியிருக்கிறார்
எபேசியர் 4: 11-13
தேவனுடைய சபையை கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராக்க, ஐந்துவிதமான ஊழியரும் இரண்டு முக்கியமான காரியங்களை செய்யவேண்டும்.
முதலாவது சபையார் குழந்தைகளாகவும், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாகவும் இராதபடிக்கு அவர்களை பாதுகாக்கவேண்டும்.
எபேசியர் 4: 14
இரண்டாவது அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், வளருகிறவர்களாயிருக்கும்படி சபையாரை வழிநடத்தவேண்டும்.
எபேசியர் 4: 15
தனது அழைப்பின் நோக்கத்தை விளங்கிக்கொள்ளாத ஒருவர், ஒரு சபையின் மேய்ப்பராயிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது!
சபையார் ஆவிக்குரிய ஜீவியத்தில் குழந்தைகளாகவும், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாகவும் இராதபடிக்கு அவர்களை பாதுகாக்க அழைக்கப்பட்டிருக்கிற ஒரு மேய்ப்பர்: சபையாரை ஆவிக்குரிய ஜீவியத்தில் குழந்தைகளாக வைத்திருப்பதோடு, சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகத்தை செய்கிறவராக இருப்பாரானால், அவர் நடத்துகிற சபைக்கு செல்வதை தவிர்த்து, அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவின் குணங்கள் எல்லாவற்றிலேயும் நீங்கள் வளரும்படி, திருவசனத்திலும் உபதேசத்திலும் உண்மையாய் பிரயாசப்படுகிற உண்மையுள் ஊழியர் (1தெசலோனிக்கேயர் 5: 12, 13) (1 தீமோத்தேயு 5: 17) நடத்துகிற ஒரு சபையில் ஐக்கியமாவது நல்லது.
தங்கள் அழைப்பை குறித்த தேவனுடைய நோக்கத்திற்கு எதிராக செயல்படும் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகளாகள், சுவிசேஷகர், மேய்ப்பர் மற்றும் போதகரிடமிடமிருந்து தங்கள் ஆத்துமாவை காத்துக்கொள்ள தேவஜனங்கள் விழிப்பாக இருக்கவேண்டும்!
வேதத்தை தூக்கினவர் எல்லாரும் தேவனுடைய ஊழியர் அல்ல, அவர்கள் போதிக்கிற எல்லாமே சத்தியமும் அல்ல!
காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய விசுவாசிகளை: தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களையே விளங்கிக்கொள்ளமுடியாத கேள்வியில் மந்தமுள்ளவர்களாயும், மறுபடியும் உபதேசிக்கப்படவேண்டியதாயிருக்கிற பாலை உண்ணத்தக்கக் குழந்தைகளான நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவர்களாயும், நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானோந்திரியங்கள் அற்றவர்களாயும் (எபிரெயர் 5: 11-14) வைத்திருக்கிற; அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் (அவருடைய சுபாவங்கள்) எல்லாவற்றிலேயும் வளருகிறவர்களாயிருக்கும்படி (எபேசியர் 4: 15) சபையாரை வழிநடத்தாத ஐந்துவித ஊழியரில், (எந்த சபைபிரிவை சேர்ந்த) எந்த ஊழியர் செய்வதும் சரியான ஊழியம் அல்ல!
இவர்கள் கிறிஸ்துவாகிய அஸ்திபாரத்தின்மேல், அக்கினியில் வெந்துப்போகத்தக்க மரம், புல், வைக்கோல்களாக விசுவாசிகளைக் கட்டுகிறவர்கள்
1 கொரிந்தியர் 3: 10-13
இவர்களோடு செலவழிக்கும் நேரம், இவர்களுக்குக் கொடுக்கும் காணிக்கை & தசமபாகம், இவர்களுடைய ஊழியங்களுக்காய் கொடுக்கும் உடல் உழைப்பு, படும் பிரயாசம் இவைளில் ஒன்றும் பரலோகம் செல்லப் பயன்படாது!
நித்தியம் வரை நிலைத்திருக்க விரும்புகிற கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட ஊழியர்களை விட்டு விலகி, தங்களை கிறிஸ்துவின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல் போன்று உறுதியாகக் கட்டப் பிரயாசப்படுகிற (1 கொரிந்தியர் 3: 12, 14) உத்தம ஊழியர்களைக் கண்டுபிடித்து, அவர்களோடு ஐக்கியப்படுவதுதான் புத்திசாலித்தனம்!!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
தவறாக வாழ்கிற மற்றும் உபதேசிக்கிற ஒரு ஊழியர் நடத்தும் சபையை விட்டு விலகி வேறொரு சபைக்கு செல்வதற்கு பதிலாக, விசுவாசிகள் ஊழியரின் தவறை சுட்டிக்காட்டி, அவரை திருத்தி, அந்த சபையிலேயே நிலைத்திருக்கலாம் அல்லவா?
இப்படி செய்கிறதுதான் ஆரோக்கியமானதும் அருமையானதுமான அணுகுமுறையாகும்.
தங்கள் தவறுகளை சுட்டிக்காட்ட ஊழியக்காரர்கள் விசுவாசிகளுக்கு வாய்ப்பளிக்கவேண்டும்.
பவுல் சொல்லுகிறபடி முதிர்வயதுள்ளவரை தகப்பனைப்போலவும், முதிர்வயதுள்ள ஸ்திரிகளைத் தாய்களைப்போலவும்,
பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், பாலிய ஸ்திரிகளை சகோதரிகளைப்போலவும் பாவிக்கிற ஊழியர்கள் (1 தீமோத்தேயு 5: 1, 2), தங்கள் ஆவிக்குரிய தகப்பன், தாய், சகோதரர், சகோதரிகள் தங்கள் தவறுகளை சுட்டிக்காட்ட தாராளமாய் அனுமதிக்கக்கூடும்!
விசுவாசிகளும் ஊழியர்களை தங்கள் மகனாக, சகோதரராக பாவித்து, அவர்களுடைய தவறுகளை அன்புடனும் அக்கறையுடனும் சுட்டிக்காட்டவேண்டியது அவசியம்.
விசுவாசிகள் அனுமதிக்கப்படுகிறார்களா?
தங்கள் ஜீவியத்திலும் ஊழியத்திலும் உள்ள குறைகளை தங்களுக்கு சுட்டிக்காட்டி, தங்களை திருத்துவதற்கு விசுவாசிகளை அனுமதிக்கிற ஊழியர்களை இன்று காணமுடிகிறதா?
தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
ரோமர் 8: 33
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர், அவரே எழுந்துமிருக்கிறவர், அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே
ரோமர் 8: 34
என்கிற வசனங்களை காண்பித்து, "ஊழியக்காரர்களை கேள்விகேட்கவோ, குற்றப்படுத்தவோ உங்களுக்கு அதிகாரமில்லை" என்று விசுவாசிகளின் வாய்களை அடைத்துவிடுகிற ஊழியர்களையே இன்று அதிகம் காணமுடிகிறதல்லவா?
உண்மையில் மேற்காணும் வசனங்கள் விசுவாசிகள் மற்றும் ஊழியர்கள் இருசாராருக்கும் பொதுவானது என்பது அநேக ஊழியர்களுக்கு தெரியவில்லை, விசுவாசிகளுக்கும் புரியவில்லை!
ஊழியத்திற்கு அல்ல, பரலோகத்தில் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்தவர்களைப் பற்றி பொதுவாகப் பேசுகிற வசனங்கள் அவை
ரோமர் 8: 29-32
மேற்காணும் வசனங்களின்படி தேவன் தெரிந்துகொண்ட ஊழியர்களின் தவறுகளை விசுவாசிகள் சுட்டிக்காட்டக்கூடாது என்றால், தேவன் தெரிந்துகொண்ட விசுவாசிகளின் குறைகளை ஊழியர்களும் சுட்டிக்காட்டி பிரசங்கிக்கவோ, கண்டிக்கவோ, புத்திசொல்லவோ கூடாதல்லவா?
உலகம் தேவனுடைய பிள்ளைகளை குற்றப்படுத்தவோ, நியாயந்தீர்க்கவோ முடியாது என்பதை குறித்து பேசுகிற வசனங்களை, "விசுவாசிகள் ஊழியர்களை குற்றப்படுத்தவோ, நியாயந்தீர்க்கவோ கூடாது" என்று கூறுவதாக வியாக்கியானம்பண்ணி, ஊழியர்கள் தங்களை தற்காத்துகொள்வது சரியல்ல.
விசுவாசிகளுக்கு உரிமை உண்டு!
ஊழியர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் உரிமை விசுவாசிகளுக்கு உண்டு.
நேர்மையான ஊழியர்களுக்கு அடையாளம் சரியான சாட்சிகளுடன் தங்கள் குற்றங்களை சுட்டிக்காட்டி, தங்கள்மேல் நடவடிக்கை எடுக்க விசுவாசிகளை அனுமதிப்பதுதான்.
மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.
1 தீமோத்தேயு 5: 19
மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்
1 தீமோத்தேயு 5: 20
என்று எபேசு சபை கண்காணிகளுக்கு பொருப்பாளராயிருந்த தீமோத்தேயுவுக்கு பவுல் சொல்லுகிற ஆலோசனை கவனிக்கத்தக்கது.
ஊழியருக்கு விரோதமாக சரியான சாட்சிகளுடன் கொடுக்கப்படும் புகாரை அவர்களுக்கு மேலாக இருக்கிற ஊழியர் நேர்மையாக விசாரித்து, சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார் பவுல்.
அப்படியானால், ஊழியர்களுடைய குற்றங்களை சுட்டிக்காட்டவும், அவர்கள் தங்களை திருத்திக்கொள்ளவில்லையென்றால், அவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கவும் விசுவாசிகளுக்கு உரிமை உள்ளது என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
ஊழியரின் தவறுகளை இரண்டொருதரம் விசுவாசிகள் அன்புடனும் மரியாதையுடனும் தனிமையில் சுட்டிக்காட்டலாம்.
சுட்டிக்காட்டப்படும் தன் தவறுகளை ஊழியர் சரிசெய்துகொள்வாரானால், அவருடன் தொடர்ந்து பயணிக்கலாம்.
தனிமையில் சுட்டிக்காட்டப்பட்டும் தன் தவறுகளைத் திருத்திக்கொள்ளாத ஊழியர்மேல் நடவடிக்கை எடுக்க சரியான சாட்சிகளுடன் நிர்வாகத்திடம் விசுவாசிகள் புகார் அளிக்கலாம்.
நிர்வாகமும் ஊழியரின் தவறுகளை கண்டுகொள்ளாமல் அவருக்கு ஆதரவாக இருக்கிறதென்றால், அந்த ஊழியர் தங்களுக்கு வேண்டாம் என்று முழுசபையும் புறக்கணிக்கலாம். தாங்கள் புறக்கணித்தும் ஊழியர் சபையைவிட்டு விலகாமலும், தன்னை திருத்திக்கொள்ளாமலும் இருப்பாரானால், விசுவாசிகள் அவரைவிட்டு விலகிப்போகலாம்.
தன் தவறை உணராமலும், தன்னைத் திருத்திக்கொள்ளாமலும், தன்னை நியாயப்படுத்துகிற ஒரு ஊழியர், நிச்சயம் தேவனுடைய சபையை தேவனுடைய திட்டத்தின்படி (எபேசியர் 4: 11-16) நடத்தவேமாட்டார்.
அவருடன் தொடர்ந்து பயணிப்பது விசுவாசிகளின் ஆத்துமாவுக்கு மிகுந்த சேதத்தை உண்டாகும்!
அப்படியே, தங்கள் ஊழியர்கள் வேதத்தை புரட்டிப் பேசுகிறதை விசுவாசிகள் திட்டமாய் அறிந்துகொண்டால், இரண்டொருதரம் அவர்களுக்கு புத்திசொல்லவேண்டும். அவர்கள் தங்கள் போதகக்தவறுகளை திருத்திக்கொண்டால் அவர்களுடன் பயணத்தைத் தொடரலாம், இல்லையேல் அவர்களைவிட்டு விலகுவதுதான் உத்தமம்.
"வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு" என்று ஊழியர் தீத்துவுக்கு ஆலோசனை சொல்லுகிறார் பவுல். (தீத்து 3: 10)
ஒரு நல்ல ஊழியரே வேதத்தைப் புரட்டுகிற கள்ள ஊழியரைவிட்டு விலகியிருக்கவேண்டுமானால், வேதத்தை புரட்டுகிற ஒரு கள்ள ஊழியரிடமிருந்து விசுவாசிகள் விலகியிருக்கவேண்டியது எவ்வளவு அவசியம்!
இவர்களைவிட்டு விலகாத விசுவாசிகள் பரலோகத்தைவிட்டு விலக்கப்படவேண்டியிருக்கும்!! (2 பேதுரு 2: 1-3)
க. காட்சன் வின்சென்ட்
8946050920
*இந்து முன்னனி என்கிற அமைப்பின் மாநில பேச்சாளர் சிவகங்கை பிரபாகரன் என்பவர் கிறிஸ்தவ மார்க்கத்தை கொச்சைப்படுத்தியதற்காக, அவரை வன்மையாகக் கண்டிப்பதோடு, தமிழ்நாடு அரசும் காவல்துறையும் அவர்மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிறிஸ்தவ அமைப்புகள் வேண்டுகோள் விடுப்பது சரியா?*
சத்திய வேதத்தையும், வேதத்தின் நாயகன் இயேசுகிறிஸ்துவையும் உண்மையாய் நேசிக்கிற உத்தமக் கிறிஸ்தவரால்: கிறிஸ்தவ மார்க்கத்திற்கு எதிராகப் பேசுகிற, செயல்படுகிற எவரையும் கண்டிக்கவோ, அவரை தண்டிக்கும்படி அரசுக்கும், காவல்துறைக்கும் கோரிக்கை வைக்கவோ முடியாது!
தம்மை சமாரியன் (கீழ்ஜாதிக்காரன்) என்றும், பிசாசுபிடித்தவனைன்றும் (யோவான் 8:48), பயித்தியக்காரன் என்றும் (யோவான் 10:20) பழித்து, கலகக்காரன் என்று குற்றப்படுத்திய யூதர்களை (லூக்கா 23:2,5) இயேசுகிறிஸ்து கண்டிக்கவோ, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை வைக்கவோ இல்லை!
*இன்றைக்கும் இயேசுகிறிஸ்துவை நிந்திக்கிற எவரை குறித்தும் கிறிஸ்தவர்கள் அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய எந்த நிந்தனையும் அவருடைய புகழை மங்கச்செய்திடமுடியாது!*
தமதுனிமித்தம் உலகம் நம்மை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் நம்பேரில் பொய்யாய்ச் சொல்லும்போது: நமக்கு
பரலோகத்தில் உண்டாகும் மிகுதியானப் பலன் நிமித்தம் சந்தோஷப்பட்டு களிக்கூரவே நமது குருவானவர் நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்! (மத்.5:11,12)
தரமான கிறிஸ்தவர்களுக்கு அடையாளம் கிறிஸ்துவினிமித்தம் தங்களுக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் பிரியப்படுவதுதான்! (2கொரிந்.12:10)
*கிறிஸ்துவினிமித்தம் வரும் பலவீனம், நிந்தை, நெருக்கம், துன்பம், இடுக்கண் இவை எதிலும் பிரியப்படாமல்; ஆசீர்வாதம், ஐசுவரியம், சுகம், சுகபோகம் என்று ஒரு பாதுகாப்பான மண்டலத்தை மட்டுமே வாஞ்சிக்கும் போலிகிறிஸ்தவ உலகமே, கிறிஸ்தவ மார்க்கத்துக்கு எதிரானவர்களுக்கு எதிர்வினையாற்றும்!*
தாம் கைதுசெய்யப்படும்போது தமது சீஷர்கள் *"ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா"* என்றுசொல்லி, அந்தப்படியே அவர்களில் ஒருவனான பேதுரு பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டி எதிர்வினையாற்றியபோது: *"இம்மட்டில் நிறுத்துங்கள்"* என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தின கருணாமூர்த்தி நமது கர்த்தர்! (லூக்கா 22:49-51)
தமது முதல் இரத்தசாட்சி ஸ்தேவானை கொலைசெய்த கூட்டத்திற்கு தலைமை தாங்கியதோடு (அப்.7:58), தமது மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தி,
(அப்.22:4), தமது சபையை பாழாக்கிக்கொண்டிருந்த (அப்8:1-3) திருச்சபையின் எதிரியான சவுலின் பாதம் (ஆத்துமா) சேதமாகிறதையே விரும்பாமல், *"முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்"* என்ற அன்பின் சொரூபியல்லவா நமது ஆண்டவர்! (அப்.9:5)
நூறு ஸ்தேவனுக்கு இணையான ஊழியத்தை செய்து, மூன்று கண்டங்களில் தேவனுடைய திருச்சபையை ஸ்தாபித்த பவுலை, கிறிஸ்தவ மார்க்கத்தின் எதிரிகள் கூட்டத்திலிருந்துதான் தேவன் தெரிந்துகொண்டார் என்பதை கிறிஸ்தவர் மறந்துவிடக்கூடாது!
*"உங்கள் ஆண்டவர் காதல் தோல்வியடைந்து தாடிவளர்த்துக்கொண்டவர், சிலுவையில் தன்னையே காப்பாற்றிக்கொள்ளமுடியாதவர், உங்களை எப்படி காப்பாற்றுவார்?"* என்று, எனக்கு நற்செய்தி சொன்ன என் கல்லூரி நண்பர்களை ஒருகாலத்தில் பரியாசம் செய்த என்னையும் தமது தொண்டனாக்கி, பல லட்சம் மக்களுக்கு சத்தியத்தை விதைக்கும் பாத்திரமாகவும், பல நூறு ஊழியர்களை திருச்சபை ஊழியத்தில் பயிற்றுவிக்கும் ஊழியனாகவும் பயன்படுத்திவருகிற என் நேசர் இயேசுவை ஸ்தோத்திரிக்கிறேன்!
*நமது சத்துருக்களைச் சிநேகிக்கவும், நம்மைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதிக்கவும், நம்மைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யவும், நம்மை நிந்திக்கிறவர்களுக்காகவும் நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணவுமே நாம் நம் எஜமான் இயேசுவினால் கட்டளையிடப்பட்டிருக்கிறோம்!* (மத்.5:44)
சத்துருக்களுக்கு சத்துருவாகவும், சபிக்கிறவர்களைச் சபிக்கவும், பகைக்கிறவர்களுக்கு தீமைசெய்யவும், நிந்திக்கிறவர்களோடும் துன்பப்படுத்துகிறவர்களோடும் சண்டையிடவும் இயேசுவின் உண்மை சீஷனுக்கு அனுமதியில்லை!
*"என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே"* என்று கிறிஸ்து சொன்னதை (யோவான் 18:36) கிறிஸ்தவர் நினைவில் நிறுத்தவேண்டும்!
நமது ஆண்டவரின் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதாயிராதபடியினால், அவருடைய ஊழியர் அவருக்காய் உலகத்தோடு போராடவேண்டிய அவசியமே இல்லை!
*முடிவில்லாத அவருடைய நித்திய ராஜ்யதிற்கு முடிவுரை எழுதுவது இந்த உலகத்திற்கு ஒருபோதும் சாத்தியமில்லை!* (லூக்கா 1:33)
நமது எஜமான் இயேசுவை உண்மையாகவே கனம்பண்ணுகிற கிறிஸ்தவர்கள், *"பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்"* என்கிற அவருடைய கட்டளையின்படி: நமது பரமபிதாவின் பூரணசற்குணத்தை பூமில் உள்ள சகமனுஷரிடம் காண்பிக்கவேண்டியதே இன்று நமக்கு அவசியமாயிருக்கிறது. (மத்.5:48)
*நமது பரமபிதா தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்!* (மத்.5:45)
தங்களைச் சிநேகிக்காதவர்களையும் சிநேகிக்கிற இயேசுவின் சீடர்களை இந்த உலகம் தேடுகிறது! (மத்.5:46)
தங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்தாமல், எதிரிகளையும் வாழ்த்தும் இயேசுவின் சீடர்களை இந்த உலகம் தேடுகிறது! (மத்.5:47)
*புறஜாதிகள் நம்மை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் நமது நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ள கிறிஸ்தவர் கடமைபட்டுள்ளோம்!* (1பேதுரு 2:12)
உலகத்தாரால் எத்தரென்னப்பட்டாலும் *நிஜஸ்தராகவும்,* அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் *நன்றாய் அறியப்பட்டவர்களாகவும்,* சாகிறவர்கள் என்னப்பட்டாலும் *உயிரோடிருக்கிறவர்களாகவும்,* தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் *கொல்லப்படாதவர்களாகவும்,*
துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் *எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும்,* தரித்திரர் என்னப்பட்டாலும் *அநேகரை (ஆவிக்குரிய) ஜசுவரியவான்களாக்குகிறவர்களாகவும்,* ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும், *(ஆவிக்குரிய) சகலத்தையுமுடையவர்களாகவும்* நம்மை விளங்கப்பண்ண, குறிப்பாக ஊழியக்காரர்கள் கடமைப்பட்டிருக்கிறோம்! (2கொரிந்.6:8-10)
*உலகத்தார் பரியாசம்பண்ணக்கூடிய அளவுக்கு திருச்சபைகளில் காணப்படும் வேதத்திற்கு முரணான மூடப்பழக்கங்களை திருத்திக்கொள்ளவேண்டியக் கடமை திருச்சபைகளுக்கு இருக்கிறது!*
நம்மைத் திருத்திக்கொள்ளாமல் பரியாசம் செய்வோரை பகைப்பது, ஆண்டவரே சகிக்கவியலாத அயோக்கியத்தனமாகும்!
ஆகவே, *"இம்மட்டில் நிறுத்துங்கள்"* என்கிற ஆண்டவரின் சத்தம், கிறிஸ்தவ மார்க்கத்திற்கு எதிரானவர்களுக்கு எதிர்வினையாற்றும் திருச்சபைகளின் செவிகளில் கேட்கட்டும்!
திருச்சபையின் மாண்பை உண்மையாகவே விரும்புகிற கிறிஸ்தவர்கள், திருச்சபைக்கு வெளியே இருந்து சத்தியத்தை அறியாமல் திருச்சபைகளுக்கு எதிராக செயல்படுகிறவர்களைவிட்டு: ஜாதிபலத்தாலும், பணபலத்தாலும், ஆள்பலத்தாலும், அரசியல் பலத்தாலும் திருச்சபையில் முக்கிய இடத்தை ஆக்கிரமித்து, தேவனுடைய சபையை கள்ளர் குகையாக்கிவிட்டவர்களுக்கும்; பலருடைய ஜெபத்தினாலும், உழைப்பினாலும், தியாகமான காணிக்கையினாலும் வளர்ந்த சபையை, ஸ்தாபனத்தை பரம்பரைப் பரம்பரையாய் தங்கள் குடும்பத்தார் மட்டுமே ஆளுகைசெய்வதற்கேற்ப தங்கள் குடும்பசொத்தாக்கிக்கொண்ட கொள்ளையர்களுக்கும்; சுகபோகப்பிரியரான செழிப்பின் உபதேசிகளுக்கும்; ஊழியத்தை ஆதாயத்தொழிலாக்கிக்கொண்ட வேதப்புரட்டர்களுக்கும்; பூமிக்குரிய ஆசீர்வாதங்களை மட்டுமே போதிக்கும் இயேசுவின் சிலுவைக்கு (பாடுகளுக்கு) பகைஞரான தங்கள் வயிற்றை தேவனாகக் கொண்டவர்களுக்கும் எதிராக, தங்கள் கண்டனத்தைத் திருப்பவேண்டியது அவசியம்!
*திருச்சபையின் பிரதான எதிரிகள் திருச்சபைக்கு வெளியில் அல்ல. கிறிஸ்தவர் & ஊழியர் என்கிற போர்வையில் திருச்சபைக்கு உள்ளேயே இருக்கிறார்கள்! தேவனுடைய சபை அதிகம் பாதிக்கப்படுவதும், பாழாவதும் இவர்களாலேயே!!*
இவர்களிடமிருந்து தேவன் தமது சபையை பாதுகாக்கவே கிறிஸ்தவர்கள் அதிகம் போராடி ஜெபிக்கவேண்டும்!
பொதுவாக, திருச்சபைக்கு உள்ளே இருக்கும் திருச்சபையின் எதிரிகளே, வெளியே இருக்கும் எதிரிகளுடன் திருச்சபையின் பாதுகாப்புக்காக மல்லுகட்டுவார்கள்!
*ஆண்டவரின் உண்மை சீடரான ஊழியர்களும் விசுவாசிகளும் அவருடைய வழியிலேயே எதிர்ப்பாளர்களை எதிர்கொள்ளுவார்கள்!!*
[தேவனுக்கு பயந்த கிறிஸ்தவரும் ஊழியரும் மட்டுமே இதை ஏற்றுக்கொள்ளுவார்கள், மற்றவருக்கும் பகிருவார்கள்]
க. காட்சன் வின்சென்ட்
8946050920
*நமது தேவனுடைய நாமத்தை கோலியாத், ஆமான், சன்பல்லாத்து, தொபியா தூஷிக்கிறான்! தாவீதுக்களும், நெகேமியாக்களும், மொர்தெகாய்களும், எஸ்தர்களும் கொதித்தெழவேண்டாமா? கர்த்தர் வேடிக்கை பார்க்கவா நம்மை வைத்திருக்கிறார்?*
திருச்சபையில் காணப்படும் அரசியலையும், செய்யப்படும் ஊழலையும், தலைதூக்கும் ஜாதிவெறியையும், வர்க்கபேதங்களையும், குடும்ப ஆதிக்க ஊழியங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்!
இதையெல்லாம் வன்மையாகக் கண்டிக்க என்றைக்காவது நமக்கு உணர்வு வந்திருக்கிறதா? உணர்ச்சியற்றவர்களாகத்தானே இருக்கிறோம்?
ஆண்டவரை அறிந்தவர்கள் தேவனுடைய சபையை கெடுக்கும்போது வராத வைராக்கியம், ஆண்டவரை அறியாதவர் அவருக்கு எதிராக ஏதாகிலும் பேசும்போது மட்டும் எங்கிருந்து வருகிறது?
*"எங்கள் தேவனையும், அவருடைய சபையையும் அசிங்கப்படுத்தும் உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு, அதை வெளியிலுள்ள எவருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம்"* என்கிறோமா?
இன்று அநேக கிறிஸ்தவர்கள் இன்னும் யூதமார்கத்திலேயே இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் கிறிஸ்தவ மார்க்கத்தாராக மாறவேயில்லை!
இன்று திருச்சபைக்கு எதிராக செயல்படுவோர் கோலியாத், ஆமான், சன்பல்லாத், தொபியாக்களும் அல்ல. நாம் தாவீது, நெகேமியா, மொர்தெகாய், எஸ்தர் போன்ற இஸ்ரவேலர்களும் அல்ல!
*பழைய ஏற்பாட்டு பக்தர்களான இஸ்ரவேல் ஜனங்கள், இராஜாக்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் தங்கள் பகைஞரையும், அந்நிய தேசத்தவரையும் அணுகியதுபோல அணுக புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்கு அனுமதியில்லை!*
தங்களுக்கு தீமைசெய்தவர்களுக்கு அதே தீமையை செய்ய பழைய ஏற்பாட்டு
பக்தர்களை தேவன் அனுமதித்திருந்தார்! (மத்.5:38)
தேவனுடைய குமாரனோ, *"தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம், ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ"* என்று தமது சீஷருக்கு கட்டளையிட்டிருக்கிறார்! (மத்.5:39-41)
வேதபாரகரும் பரிசேயரும் "உனக்கடுத்தவனை (யூதனை) சிநேகித்து, உன் சத்துருவை (புறஜாதியானை) பகைப்பாயாக" என்று யூதருக்கு வசனத்தை திரித்து போதித்திருந்தனர். (மத்.5:43)
அதாவது யூதர்கள் தங்கள் சத்துருக்களை எதிர்க்கவும், தங்களைச் சபிக்கிறவர்களைச் சபிக்கவும், தங்களைப் பகைக்கிறவர்களுக்கு தீமை செய்யுவும், தங்களை நிந்திக்கிறவர்களை நிந்திக்கவும், தங்களைத் துன்பப்படுத்துகிறவர்களைத் துன்பப்படுத்தவும் பரிசேயரால் பழக்குவிக்கப்பட்டிருந்தனர்.
நமது குருவான இயேசுகிறிஸ்துவோ, *"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்"* என்று தமது சீஷருக்கு கட்டளையிட்டிருக்கிறார். (மத்.5:44)
"ஊழியர்கள்" என்கிற பெயரில் இருக்கிற சில பரிசேயர்கள்: விசுவாசிகள் தங்கள் சத்துருக்களை எதிர்க்கவும், தங்களைச் சபிக்கிறவர்களைச் சபிக்கவும், தங்களைப் பகைக்கிறவர்களுக்கு தீமைசெய்யுவும், தங்களை நிந்திக்கிறவர்களை நிந்திக்கவும், தங்களைத் துன்பப்படுத்துகிறவர்களைத் துன்பப்படுத்தவும் அல்லவா பழக்குவித்துவருகிறார்கள்!
*தம்மை சமாரியன் (கீழ்ஜாதிக்காரன்) என்றும், பிசாசுபிடித்தவனைன்றும் (யோவான் 8:48), பயித்தியக்காரன் என்றும் (யோவான் 10:20) பழித்து, கலகக்காரன் என்று குற்றப்படுத்திய யூதர்களுக்கு (லூக்கா 23:2,5) எதிராக இயேசுகிறிஸ்து எடுத்த நடவடிக்கை என்ன?*
அவர்களை அவர் கண்டித்தாரா? அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை வைத்தாரா?
தங்களுக்குப் பிடிக்காத எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்த இயேசுவை சமாரியர் தங்கள் ஊரில் ஏற்றுக்கொள்ளாததினால், அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் , *"ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா?"* என்று கேட்டபோது, *"நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள்"* என்று அதட்டி, *'மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார்"* என்று அறிவுறுத்தி, அவர்களை வேறொரு கிராமத்துக்கு அழைத்துச் சென்றாரே நமது ஆண்டவர்! (லூக்கா 9:53-56)
எதிரிகளை சுட்டெரித்து அழிக்கும் எலியாவின் ஆவியை உடையவர்களாய் இருக்க அல்ல, எவரையும் இரட்சிக்கும் தமது அன்பின் ஆவியை உடையவர்களாய் இருக்கவே ஆண்டவர் நம்மை அழைத்திருக்கிறார்!
*உலகத்திற்கு இன்று எலியாக்கள் அல்ல, இயேசுக்கள்தான் வேண்டும்!*
இன்று எலியாவின் ஆவியைக் கேட்கிறவர்களை இயேசுகிறிஸ்து அதட்டவே செய்கிறார்!
பிரதான ஆசாரியனின் சேவகன் தம்மை அறைந்தபோது,
இயேசு அவனை நோக்கி: *"நான் தகாத விதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி, நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய்"* என்று கேட்டார். (யோவான் 18:22,23) ஆனால், தம்மை அடித்தவன்மேல் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்று அவர் நிற்கவில்லை.
கிறிஸ்துவை விசுவாசிப்பதினிமித்தம் நமக்கு அநியாயம் இழைக்கப்படும்போது நியாயம் கேட்பதில் தவறில்லை. ஆனால், அநியாயம் செய்தவர்மேல் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்று நிற்பது கிறிஸ்துவை வெளிப்படுத்தும் அணுகுமுறையில்லை!
சவுக்கால் அடித்து விசாரிக்கப்பட தான் வாரினால் அழுந்தக் கட்டப்படும்போது, பவுல் சமீபாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி; *"ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா?"* என்று கேட்டு, தனது ரோமக் குடியுரிமையைப் பயன்படுத்தி, அடித்து விசாரிக்கப்படுவதிலிருந்து தன்னைக் காத்துக்கொண்டது உண்மைதான்.
சட்டப்படியான நமது உரிமைகளைப் பயன்படுத்தி நம்மை தற்காத்துக் கொள்வது தவறல்ல, ஆனால் நமது விசுவாசத்தினிமித்தம் நமக்கு எதிராக செயல்படுகிறவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பது கிறிஸ்துவின் சீடர்களுக்கு அழகல்ல!
யூதர்கள் தன்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு தேசாதிபதி பெஸ்து என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடாதபடிக்கு ரோமசக்கரவர்த்தி இராயனுக்கு பவுல் அபயமிட்டது உண்மைதான். (அப்.25:7-11)
"யூதர்கள் அதற்கு (என் விடுதலைக்கு) எதிர்பேசினபோது, நான் இராயனுக்கு அபயமிடவேண்டியதாயிருந்தது. *ஆயினும் என்ஜனத்தார்மேல் யாதொரு குற்றஞ் சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை'*
(அப்.28:18,19) என்று பவுல் சொல்லுகிறதையும் நாம் கவனிக்கவேண்டும்.
அநியாயமான குற்றசாட்டுகளால் வரும் தண்டனையிலிருந்து தப்புவதற்கு ஒரு கிறிஸ்தவர், மேலான அதிகாரங்களுக்கு அபயமிடுவது தவறல்ல. ஆனால், தன்னை குற்றப்படுத்துகிறவர்களை குற்றப்படுத்தி, அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர முனைவது பவுலின் மாதிரி அல்ல!
ஸ்தேவான் யூதர்களால் கொலைசெய்யப்பட்டபோது *தேவபக்தியுள்ள மனிதர்கள் அவனை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்களேயல்லாமல், கிறிஸ்தவர்களை யூதர்களுக்கு எதிராகத் தூண்டிவிடவில்லையே!* (அப்.7:57-8:2)
சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரிகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தபோது, *சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்களேயல்லாமல், பவுலை சபித்து, அவனுடைய அழிவைக்காண அமர்ந்திருக்கவில்லையே!* (அப்.8:1,3,4)
யூதரின் ஆலோசனை சங்கத்தார் தங்களை அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு அனுப்பினபோது, *அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று அப்போஸ்தலர் பிரசங்கித்தார்களேயல்லாமல்,* திருச்சபையாரை ஆலோசனை சங்கத்துக்கு எதிராக ஏவிவிடவில்லையே! (அப்.5:42)
சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத்தொடங்கி.
*யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்த ஏரோதுராஜாவுக்கு எதிராக திருச்சபை எடுத்த நடவடிக்கை என்ன?* (அப்.12:1,2)
பிலிப்பியில் *குற்றஞ்சாட்டப்பட்டு, வஸ்திரங்கள் கிழிக்கப்பட்டு, அநேக அடிகள் அடிக்கப்பட்டு, சிறைச்சாலையிலே உட்காவலறையிலே அடைத்துவைக்கப்பட்டு, கால்கள் தொழுமரத்தில் மாட்டிவைக்கப்பட்ட பவுலும் சீலாவும்* (அப்.16:16-24) அதற்கு காரணமானவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன?
"கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, *அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது"* என்று பிலிப்பியரை பாடுபட ஆயத்தப்படுத்துவதோடு (பிலிப்.1:29), *"நீங்கள் என்னிடத்தில் கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு"* என்று பிலிப்பி சபையாருக்கு முன்னறிவித்தாரே பவுல்! (பிலிப்1:30)
தெசலோனிக்கேயாவிலிருந்தபோது, *"நமக்கு உபத்திரவம் வரும்"* என்று சபைக்கு முன்னறிவித்ததோடு, அப்படியே நேரிட்டபோது, *"இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம்"* என்று அவர்களை திடப்படுத்தினாரே பவுல்! (1தெச.3:3,4)
*"ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்"* என்று கிறிஸ்தவர்களை பாடுபட பலப்படுத்தினாரே பேதுரு! (1பேதுரு 4:16)
இப்படி ஆதிசபை ஊழியர்கள் பாடுபட்டதோடு, சபையாரையும் பாடுபட ஆயத்தப்படுத்தியிருக்க, நமக்கும் நமது சபையாருக்கும் பாடுகளற்ற ஒரு உலகத்தைப் படைக்க நாம் முயற்சிப்பது சரியா?
*அன்புக்குரிய உடன் ஊழியர்களே, நாம் வாழ்கிற வாழ்வும், செய்கிற ஊழியமும் ஆதிசபை ஊழியரின் வாழ்வையும் ஊழியத்தையும் மாதிரியாகக் கொண்டதல்ல என்பதை தயவாய் உணருவோம்!*
ஆண்டவருக்கு சீடர்களை அல்ல, அவருடையப் பாடுகளுக்கு பங்காளிகளாகும் மனதற்ற, ஆசீர்வாத, ஐசுவரிய, சுகபோகப் பிரியர்களையே நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதையும் அறிந்திடுவோம்!
*ஆண்டவரும் ஆதிசபை ஊழியரும் கற்பிக்காதவைகளை கற்பித்து, கிறிஸ்து இல்லாத ஒரு கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபிக்கிறதிலிருந்து முதலாவது நாம் மனந்திரும்புவோம்!!*
தேவனுடைய ஜனங்களை திருச்சபைக்கு எதிரானவர்களுக்கு எதிராக நடத்துவதற்கு பதிலாக, தங்கள் அன்பினால் தங்களிலிருக்கும் கிறிஸ்துவை எதிராளிகளுக்குள் கடத்துவதற்கு பழக்குவிப்போம்!
இனிவரும் காலம் கிறிஸ்தவ மார்க்கத்தாருக்கு மிகுந்த நெருக்கடியானக் காலமாகவும் இருக்கலாம்!
*கிறிஸ்தவர்களுக்கு எதிரானவர்களுக்கு எதிராக சிலுவைப்போர் நடத்த அல்ல, நம்மைநாமே வெறுத்து, நமது சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, ஆண்டவரின் பின் நடக்க ஆயத்தமாவோம்! திருச்சபையை ஆயத்தப்படுத்துவோம்!!*
- உங்கள் உடன் ஊழியன்....
*க. காட்சன் வின்சென்ட்.*
8946050920
Thanks for using my website. Post your comments on this