Type Here to Get Search Results !

பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு | நல்ல நிலம் எது? | Alwin Johnson Bible Study | Daily Bible Deviations in Tamil | வேதாகம தின தியானம் | Jesus Sam

பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு | நல்ல நிலம் எது? | கர்த்தருடைய நேரம் | புதிய சாகசம் | கோபம் = நஷ்டம் 

=========================
பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு
=========================
  யவீரு என்ற மனிதன் தன் மகன் வியாதியினால் சாகின்ற நிலைமையிலிருந்த போது, எப்படியாவது அவளை குணமாக்க வேண்டுமென்று இயேசுவை அழைக்கச் சென்றான். இயேசு வருவதற்கு தாமதமாகிக் கொண்டிருந்த வேளையில், அவன் வீட்டிலிருந்து சிலர் வந்து, உங்கள் மகள் மரித்துப் போனாள் என்றார்கள். இந்த வார்த்தையைக் கேட்டு அவன் பதில் பேசுவதற்கு முன், இயேசு அவனைப் பார்த்து பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்றார்.
     மாற்கு 5:36

  ஒரு கெட்ட செய்தியைக் கேட்டவுடன் எந்த மனிதனும் ஐயோ என்று புலம்ப ஆரம்பிப்பார்கள். அப்படித்தான் இந்த யவீருவும் செய்வதற்கு தன் வாயைத் திறக்கும் முன், இயேசு பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று, தம் வார்த்தையால் அவன் வாயை அடைத்தார். அதன்பின் அவன் வீட்டிற்கு சென்று அவனுடைய மகளை எழுப்பினார்.

  எந்த சூழ்நிலையிலும் நாம் விசுவாசமில்லாமல் புலம்புவதைக் கர்த்தர் விரும்பவில்லை. கடலில் இயேசுவும் சீஷர்களும் சென்று கொண்டிருந்த போது, கடும் புயல் வந்தது. அங்கு சீஷர்கள் வந்து அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள். அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று.

  நான் சாகப் போகின்றேன், நான் தோற்க போகின்றேன், என் வாழ்க்கை அவ்வளவு தான், எல்லாம் எனக்கு எதிர்மறையாகவே இருக்கின்றது, யாரும் எனக்கு ஆதரவாக இல்லை... இப்படி ஒரே புலப்பமாய் புலம்பிக்கொண்டிருக்கின்றவர்களா நீங்கள்?

  கர்த்தர் வெறுப்பது இப்படிப்பட்ட வார்த்தைகளைத்தான். 30 லட்சம் இஸ்ரவேலர் வனாந்திரத்தில் அழிக்கப்பட்டதும் இதற்காகத்தான். எதற்கெடுத்தாலும், நாங்கள் சாகப் போகின்றோம், இதற்காகவா எங்களை வனாந்திரத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தீர்கள், எகிப்திலேயே எங்களுக்கு கல்லறை இருந்தது, இந்த மன்னாவைத்தவிர ஒன்றுமில்லை, அது சரியில்லை, இது சரியில்லை என்று ஒரே புலம்பல்.

  இன்று எதைக் கண்டு பயந்து புலம்பிக் கொண்டிருக்கின்றீர்ளோ, அந்த காரியத்திற்காக கர்த்தர் உங்களிடத்தில் சொல்கின்றார்: பயப்படாதே விசுவாசமுள்ளவனாயிரு! பயந்து அவிசுவாசமான வார்த்தைகளை கொட்டி விடாதே! முறுமுறுத்து கர்த்தருக்கு எரிச்சலுட்டிவிடாதே!

 கர்த்தரை நம்புங்கள். அவர் முகத்தை நோக்குங்கள். பதற்றப்படாதிருங்கள். அவசரப்பட்டு வார்த்தையை விடாதிருங்கள்.

 கர்த்தர் உங்களை அற்புதமாய் நடத்துவார்!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006




=========================
நல்ல நிலம் எது?
=========================
  விதைக்கிறவன் உவமை வாயிலாக சத்தியத்தை போதித்த இயேசு, வழியருகே உள்ள நிலம், கற்பாறை நிலம், முள்ளுள்ள நிலம் ஆகியவை பலன் தராத கெட்ட நிலம் என்று அடையாளங்காட்டினார். ஆனால் நல்ல நிலத்தை மாத்திரம் நல்ல நிலம் என்று மட்டும் சொல்கின்றார். அது எப்படிப்பட்டது என்று சொல்லவில்லை. ஏனென்றால் கெட்ட நிலத்தின் பண்புகளில்லாத நிலம் அனைத்தும் நல்ல நிலம்தான்.

  நல்ல நிலம் வழியருகே இருக்கக்கூடாது: நிலமாகவும் இல்லாமல், வழியாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக உள்ள மனதுதான் வழியருகே உள்ள நிலம். இப்படிப்பட்டவர்கள் அரைகுறை மனதோடு வசனத்தைக் கேட்பார்கள். இவர்கள் ஆட்கள் தான் சபைக்குள் இருப்பார்கள். மனது அலை பாய்ந்து கொண்டு வரும். வசனம் காதிற்குள்ளேயே போகாது. கேட்கும் வசனத்தை கவனமாக கேட்க வேண்டும். கவனத்தை திசை திருப்பும் எல்லா செல்போன் போன்ற பொருட்களை, பிரசங்க நேரத்தில் நம்மை விட்டு தூரமாக்க வேண்டும்.

நல்ல நிலம் ஆழமாக உழுது பண்படுத்தப்பட்டிருக்க வேண்டும்: இது தாகமுள்ள, வாஞ்சையுள்ள மனதைக் குறிக்கின்றது. உடைந்த இருதயத்தை குறிக்கின்றது. இப் படிப்பட்ட மனதோடு வசனத்தைக் கேட்டால், நாம் வசனத்தை அப்படியே நம் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு அர்ப்பணிப்போம். பின்னர் வசனம் நம் வாழ்வில் 100 சதவீதம் பலன் தரும். 

நல்ல நிலம் முட்செடிகளற்ற நிலமாயிருக்க வேண்டும்: வாழ்க்கையில் ஆயிரம் கவலைகள், பொருளாசைகள், இச்சைகள் கொண்டிருப்பவர்கள்தான் முட்கள் நிறைந்த நிலம். உலக காரியங்கள் மேல் கொண்டிருக்கும் நாட்டத்தை படிப்படியாக குறைக்க வேண்டும். நாம் சந்நியாசிகளாக மாறி இமய மலைக்கு போய்விட வேண்டியதில்லை. ஆனால் உலகத்திலிருந்து கொண்டே ஏனோக்கு போல தேவனோடு நடக்கலாம்.

மேற்கண்ட விதமாய் நாம் வாழும் போது நாம் கேட்கும் வசனங்கள் அனைத்தும் 30, 60, 100 ஆக நம் வாழ்வில் பலன் கொடுக்கும்.

  தேவனுடைய வார்த்தை என்பது விலையேறப்பெற்றது. வார்த்தைதான் வானம் பூமி சகலத்தையும் படைத்தது. வார்த்தை சர்வ வல்லமையுள்ளது. அந்த வார்த்தை நம்மை நோக்கி வரும்போது, நாம் எந்த விதத்தில் அதை ஏற்றுக் கொள்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

  ஒரு அரசியல் தலைவர் பேசும் போதே, அவருக்கு முன் அமர்ந்திருப்பவர்கள் கைகட்டி வாய்பொத்தி அமர்ந்திருப்பதை நான் பார்க்கின்றேன். அந்த தலைவர் சொல்வதை இமை தட்டாமல் கவனிப்பார்கள்.

  அதிகாரம் நிறைந்த மனிதர்கள் வார்த்தைக்கே இத்தனை மரியாதை கொடுத்து கவனிக்கின்றார்கள். ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைக்கு நாம் எத்தனை மரியாதை கொடுத்து கவனிக்கின்றோம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

  சவுல் ராஜா தேவனுடைய வார்த்தையை அசட்டை பண்ணினபோது, “நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார்” என்று சாமுவேல் தீர்க்கதரிசி கூறினார். (1 சாமுவேல் 15:23). தேவனுடைய வார்த்தையை அசட்டை செய்வதென்பது நமக்கு ஆசீர்வாதமாக இருக்காது.

  ஆனால் அதே தேவனுடைய வார்த்தையை பயபக்தியோடும், வாஞ்சையுள்ள இருதயத்தோடும் ஏற்றுக் கொண்டு கடைபிடிக்கும் போது, அது நம் வாழ்க்கையை கட்டியெழுப்பி பலன் கொடுக்க வைக்கின்றது.

 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


=========================
கர்த்தருடைய நேரம்
=========================
  சீன தேசத்திலுள்ள ஒரு வகை மூங்கில் மரம் வித்தியாசமானது. அது விதைக்கப்பட்டு, அதிக காலம் அது முளைப்பதற்கான எந்த அறிகுறியும் வெளியே தெரிவதில்லை. அதிக காலம் என்றால் ஒரு வாரம், இரண்டு வாரம் அல்ல, 5 வருடங்களுக்கு அது நிலத்திற்கு வெளியே முளைத்து வருவதில்லையாம். 

  அவற்றை பராமரிப்பவருக்கு எத்தனை பொறுமை வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். வெறும் நிலத்திற்கு 5 வருடத்திற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். பராமரிக்க வேண்டும். 

  ஆனால் 5 வருட அமைதிக்குப் பின்பு, அந்த மூங்கில் மரம், 5 வாரத்திலேயே அதிரடியாக, 90 அடி வரை வளர்ந்துவிடுமாம். 5 வருட பொறுமைக்கு பின்பு அதிரடி வளர்ச்சி!

  நம் வாழ்க்கையிலும் அநேக காரியங்கள் நடப்பதற்கான அறிகுறியே இல்லாமலே காலங்கள் கடந்து கொண்டிருக்கின்றது. நாமும் ஜெபிக்கிறோம், முயற்சிக்கின்றோம். ஆனால் நாம் எதிர்பார்க்கும் எந்த வளர்ச்சியும் இல்லை. இதனால் அநேகந்தரம் சோர்ந்து போகின்றோம். நாம் செய்வது சரிதானா? சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கின்றோமா? நம்மை தேவன் மறந்துவிட்டாரா? அல்லது கடவுள் இருக்கின்றாரா? என்று கூட நமக்கு சந்தேகங்கள் வருகின்றன.

  இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான் (யாக்கோபு 5:7) என்று வேதம் சொல்கின்றது. மேலும், கானாவூர் கல்யாண வீட்டில், அற்புதம் செய்ய கேட்டுக்கொண்ட போது, என் நேரம் இன்னும் வரவில்லை* என்று இயேசு சொன்னதையும் கவனியுங்கள்.

  கர்த்தருடைய நேரம் என்று ஒன்று இருக்கின்றது. அவர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாக செய்கின்றவர் (பிரசங்கி 3:11). பொறுமையோடு காத்திருக்கின்றவர்கள் நிறைவான ஆசீர்வாத்தை அடைவார்கள். எத்தனை காலம் பொறுமையாயிருக்க வேண்டும்? கர்த்தருடைய நேரத்தை ஒருவரும் அறிய முடியாது. ஆனால் அவர் சரியான நேரத்தில் சரியானவற்றை செய்வார் என்கின்ற நிச்சயம் மட்டும் எனக்கு உண்டு.

  பாதியிலே பொறுமை இழந்து செடிக்கு தண்ணீர் ஊற்றாமல் போட்டுவிட்டீர்களென்றால், வரப்போகும் ஆசீர்வாதத்தை இழந்து போவீர்கள்.

  இன்று 2 நிமிடத்தில் நூடுல்ஸ் என்பது போல, நமக்கு எல்லாமே உடனே நடந்து விட வேண்டும் என்று நினைக்கின்றோம். அப்படி நடக்கவில்லை என்றால் பதற்றமும், அவநம்பிக்கையும் ஏற்படுகின்றது. அநேகர் காத்திருக்க முடியாமல், பதற்றப்பட்டு தங்கள் முயற்சிகளை கைவிட்டுவிடுகின்றார்கள்.

  பொறுமையாயிருப்பதற்கு உங்களுக்கு தேவை கர்த்தர் மேல் நம்பிக்கை. வேதத்தில் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து பொறுமையாய் காத்திருந்த தேவ மனிதர்கள், கர்த்தருடைய கரத்திலிருந்து நன்மைகளை பெற்றுக் கொண்டார்கள்.

தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடலை பாடி இந்த சத்தியத்திற்கு ஒப்புக் கொடுங்கள்: 

உன் வழியை கர்த்தருக்கு கொடுத்துவிடு, அவரையே நம்பியிரு காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு, காரியத்தை வாய்க்கச் செய்வார்

கர்த்தர் அவருடைய நேரத்தில் சகலவற்றையும் உங்கள் வாழ்வில் செய்து முடிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006



=========================
புதிய சாகசம்
=========================
  கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

  ஆபிரகாமின் 75வது வயதில் கர்த்தர் அவனை அழைத்து தம் திட்டத்தை அவனுக்கு வெளிப்படுத்தினார். அதன் பின்னர் 100 வயதில் அவனுக்கு ஈசாக்கை அளித்து, 175 வயது வரை வாழவைத்தார்.

  இது மிகவும் ஆச்சரியமான ஒரு காரியமாயிருக்கின்றது. வாழ்க்கை இவ்வளவுதான் என்று செட்டில் ஆகியிருக்கும் நேரத்தில், கர்த்தர் ஒரு புது துவக்கத்தை ஆபிரகாமின் வாழ்க்கையிலே கொண்டுவந்தார். இதை வெறும் புது துவக்கம் என்று மட்டும் சொல்ல முடியாது, ஒரு புது சாகச பயணம் என்றுதான் சொல்ல வேண்டும்.

  கர்த்தருடைய திட்டத்திற்கு அப்படியே செவி சாய்த்த ஆபிரகாம், கர்த்தரை முழு நிச்சயமாய் நம்பி, ஒரு புதிய துவக்கத்திற்குள் கடந்து சென்றான். தேவன் அவனை பரிபூர்ணமாய் ஆசீர்வதித்து, தம் திட்டத்தை அவன் வாழ்க்கையில் முழுமையாய் நிறைவேற்றினார்.

 உங்கள் வாழ்க்கையின் எந்த வயதிலும், எந்த நிலையிலும் கர்த்தரால் ஒரு புதிய துவக்கத்தை கொண்டுவர முடியும். நம்முடைய வயது, உடல் நிலை, பொருளாதார நிலை மற்றும் மற்ற சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு கிரியை செய்கின்றவர் அல்ல நம் கர்த்தர்.

  வாட்ச்மன் நீ ஜோப் என்ற மிஷனரி தன் இரண்டு கிட்னியும் செயலற்று போன நிலையில், கிட்னி மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டார். ஆனால், தன் உடல் பெலவீனமான நிலையில், தன் ஊழியம் அவ்வுளவுதான் என்று அவர் நின்றுவிடவில்லை. வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டே ஏதாகிலும் செய்வோம் என சிந்திக்கவில்லை. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் போதே கர்த்தர் அவருக்கு கொடுத்த தரிசனத்தின் அடிப்படையில், வாலிபர்கள் மத்தியில் எழுப்புதலை கொண்டுவர, தேசமெங்கும் அலைந்து தீவிரமாய் உழைப்பதைக் கண்டு அதிசயித்தேன்.  

  எல்லாம் முடிந்தது என்ற நிலையிலிருந்து ஒரு புதிய துவக்கத்தை உருவாக்க தேவன் வல்லவராயிருக்கின்றார். கர்த்தருடைய அழைப்பிற்காக காத்திருங்கள். இனிமேல் நான் எப்படி இத்தனை பெரிய காரியத்தை செய்வது என்று தயங்காதீர்கள். கர்த்தரல்லவோ உங்களை பெலப்படுத்துகின்றவர். உங்கள் சூழ்நிலையை கருதி தேவனுடைய திட்டத்தை தவறவிடாதிருங்கள்.

உங்கள் வாழ்விலும் ஒரு புதிய துவக்கம் உருவாகட்டும்.
 
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006



=========================
கோபம் = நஷ்டம்
=========================
  ஒரு முறை நான் ஒரு கடைக்கு சென்று பொருள் வாங்கச் சென்ற போது, அந்த கடைக்காரர் எனக்கு செவி கொடுக்காமல் மற்றவர்களுக்கு எடுத்து கொடுத்துக் கொண்டேயிருந்தார். கொஞ்ச நேரம் பொறுத்து பொறுத்து பார்த்தேன், ஆனால் முடியவில்லை. கோபம் கொப்பளித்து கொண்டு வந்தது. அந்த கடைக்காரரை திட்டி விட்டு கடையை விட்டு வெளியே வந்தேன். 

  நான் வெளியே வரும் வேளையில் அந்த கடைக்காரர், இங்க வாங்க சார் தருகிறேன் என்று கூப்பிட்டார். இருப்பினும் என் கோபத்தால் நான் அடுத்த கடைக்கு வாங்கச் சென்றேன். அடுத்த கடைக்கு மட்டுமல்ல சிவகாசியில் உள்ள எல்லா கடைகளுக்கும் சென்றும் அந்த பொருள் கிடைக்கவில்லை. திரும்பி பழைய கடைக்கு சென்று வாங்குவதும் எனக்கு மான பிரச்சனையாக தெரிந்தது. ஆக மொத்தம் நஷ்டம் எனக்குத்தான்.

  ஒரு பார்முலாவை தெரிந்து கொள்ளுங்கள். கோபம் = நஷ்டம். சிறிய கோபம் சிறிய நஷ்டம். பெரிய கோபம் பெரிய நஷ்டம்.

  நமக்கு விரோதமான காரியம் அல்லது நமக்கு பிடிக்காத ஒரு காரியம் நடக்கும் போது அதை எதிர்க்க நமக்குள்ளிருந்து வரும் உணர்ச்சியே கோபமாகும். ஒரு வேகம், உந்துதல் நமக்குள்ளே ஏற்படும். ஆனால் அந்த உணர்ச்சி இரண்டு வகையாக கிரியை செய்ய வாய்ப்புண்டு. ஒன்று, அந்த உணர்ச்சி நேர்மறை சக்தியாக மாறி ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்யும். அல்லது எதிர் மறையான சக்தியாக மாறி அழிவுக்கேதுவான காரியங்களை செய்யும். 

  கோபமில்லாத மனிதன் இருக்கவே முடியாது. கோபம் என்கின்ற உணர்ச்சி பாவமும் அல்ல. ஆனால் அந்த கோபத்தின் வெளிப்பாடு எதிர்மறை சக்தியாக இருந்தால் அது பாவம். அதனால்தான் வேதம் சொல்கின்றது, நீங்கள் கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள் (எபேசியர் 4:26). உங்கள் கோபம் பாவமாய் மாறுவதும், நீதியாய் மாறுவதும் உங்கள் கையில் தான் இருக்கின்றது.

  வேதத்தில் தேவன் அநேக இடத்தில் சினங்கொண்டார் என்று எழுதியிருக்கிறது. (மாற்கு 3:5). கர்த்தர் அவருக்கு பிரியமில்லாத காரியங்களை காணும் போது கோபங் கொள்கிறார். அந்த சினத்தின் விளைவு ஆக்கப்பூர்வமான அற்புதம் அங்கு நடக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் அப்போஸ்தலர் 16:18ல் குறி சொல்லுகிற பெண்ணை பார்த்து சினங்கொள்கிறார். பலன் அசுத்த ஆவி அந்த பெண்ணை விட்டு நீங்கி அவள் சுகமானாள்.

  இவ்வுலகின் சமூக அநீதிகளையும், அநியாயங்களையும் பார்த்துவிட்டு சுரணையற்று இருக்க வேண்டாம். அவைகளை பார்க்கும்போது கோபப்படுங்கள். நன்றாக கோபப்படுங்கள். ஆனால் அந்த கோபத்தின் வெளிப்பாட்டை ஆக்கப்பூர்வமான செயலாக காட்டுங்கள். அந்த அநியாயங்களுக்கு ஒரு நடைமுறை தீர்வை கண்டுபிடியுங்கள். அப்படி செய்தால் அநேகர் உங்கள் மூலம் பயனுறுவார்கள். இவ்வுலகம் ஆசீர்வதிக்கப்படும்.

  ஆனால் எதிர்மறை சக்தியாக வெளியே வரும் கோப உணர்ச்சி அநேகருக்கு தீமைகளை விளைவிக்கும். கோபத்தில் குடும்பத்தையே கொலை செய்த மனிதர்களும் உண்டு. இது தான் நமக்கு நஷ்டத்தை கொண்டுவரும். கோப உணர்ச்சி வெளியே வரும் போது, தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல் எதையாவது அழிப்பார்கள். 

  இது உங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. உங்கள் வாழ்க்கையில் இந்த கோபத்தினால் நீங்கள் இழந்த காரியங்கள் எத்தனை? எத்தனை?

  உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய எதிரி உங்களுக்கு வெளியே இல்லை. உங்களுக்கு உள்ளே தான் இருக்கிறது. உங்களை ஒரு நொடியில் அழித்துவிடும் டைம் பாம். அது தான் உங்கள் கோபம்.

உணருங்கள்! மாறுங்கள்!! ஆசீர்வதிக்கப்படுங்கள்!!!

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.