Tongue and Stomach | சனிப் பெயர்ச்சி | தினம் ஒரு வேத ஆய்வு | Daily Bible Short Devotion in Tamil | Bible Study in Tamil | Jesus Sam
Jesus Sam8/06/2024 08:52:00 AM
0
================
நாவும் வயிறும்
================
ஒரு நாள் வெளியூருக்கு ஒரு வேலையாக சென்றிருந்தேன். மாலை 4 மணியாகிவிட்டது, இன்னும் சாப்பிடவில்லை. சரியான பசி! நான் பயணித்து வந்த வழி முழுக்க கிராமங்கள். அங்கு ஒரு கிராமத்தில் ஒரு ஹோட்டல் இருந்தது. அங்கு சென்று அமர்ந்தேன். அங்கு புரோட்டாவை பிச்சிப் போட்டு, முட்டையை உடைத்து ஊற்றி, கல்லில் போட்டு கொத்திக் கொண்டிருந்தார்கள், சால்னாவின் மனம் வேறு என்னை கவர்ந்து இழுத்தது.
ஆனால் எனக்கு அல்சர் பிரச்சனை இருப்பதனால், என் வயிறு எளிமையான தயிர்சாதம் சாப்பிட கேட்டது. ஆனால் புரோட்டா சால்னா ருசி அறிந்த என் நாவு புரோட்டா, முட்டை கலக்கி என கேட்டது.
நாவு, வயிறு இவ்விரண்டும் இருவேறு சக்திகளாய் என்னை இரண்டு புறம் இழுத்தார்கள். கடைசியில் நாவு ஜெயித்தது. புரோட்டாவை வாங்கி நன்கு ருசித்து சாப்பிட்டேன். அதன் விளைவு, என் வயிறு வலிக்க ஆரம்பித்தது. அங்கிருந்து வீடு வருவதற்குள் நான் வெகுபாடு பட்டுப்போனேன். அன்றிலிருந்து மனம்திரும்பினேன்.
நாவும் வயிறும் இரண்டு விதமான காரியங்களை குறிக்கின்றது. நாவு தற்கால சுகத்தை குறிக்கின்றது. வயிறு என்பது நீண்ட கால ஆரோக்கியத்தை குறிக்கின்றது. தற்கால சுகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றவர்கள், தங்கள் நீண்ட கால நலனை ஆபத்தில் வைக்கின்றார்கள்.
இன்று சரீரத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல், நாவின் ருசிக்காக துரித உணவு வகைகளை மக்கள் அதிகம் வாங்கி உண்ணுகின்றார்கள். இது மக்களின் சுகபோக மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றது.
தற்கால சுகத்தை (ருசியை) முக்கியப்படுத்தாமல், நீண்ட கால நலனை முக்கியப்படுத்துபவர்கள்தான் முதிர்ந்த விசுவாசிகள்.
விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டான் என்று வேதம் சொல்கின்றது. (எபிரெயர் 11:26)
மோசே அரண்மனையில் இருந்து கொண்டு அநித்தியமான உலக சந்தோஷங்களை அனுபவிப்பதை பார்க்கிலும், தேவனுடைய ஜனங்களோடே இருந்து அவர்கள் துன்பங்களில் பங்கு பெறுவதை தெரிந்து கொண்டான். அதனால் தேவன் அவனை பயன்படுத்தி 30 லட்சம் பேரை எகிப்திலிருந்து விடுவித்தார்.
இது நம்முடைய தெரிந்து கொள்ளதலில் தான் உள்ளது.
இன்று தற்கால சந்தோஷங்கள் உலகில் பெருகி விட்டது. போனில் மணிக்கணக்காய் வீடியோக்கள் பார்த்தல், வீடியோ கேம் விளையாடுதல், களியாட்டுகள், போதை வஸ்துக்கள், ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளை அதிகம் உண்ணுதல் இவ்வாறு மனிதன் தற்கால சுகபோகத்திற்காகவே வாழ்ந்து வருகின்றான். இப்படிப்பட்டவைகளில் அதிகம் ஈடுபடுபவர்கள், தங்கள் வாழ்க்கையில் எதற்கும் பிரயோஜனமில்லாதவர்களாய் மாறிவிடுவார்கள்.
ஆனால் நீண்ட நாள் நலனுக்காக, ஜெபித்தல், வேதம் வாசித்தல், கல்வி கற்றல், அவசியமான திறமைகளை வளர்த்தல், உடல் நலம் பேணுதல், ஆரோக்கியமான உணவுகளை உண்டல், நேரத்தை வீணடிக்காமல் பிரயோஜனமான காரியங்களை செய்தல் ஆகியவை பெரும்பாலும் ருசி நிறைந்தவைகளாய் இருக்காது ஆனால் உங்கள் எதிர்கால வாழ்வை வளப்படுத்தும்.
இன்று ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் செய்யும்படி தெரிந்தெடுக்கும் செயல்கள், உங்கள் எதிர்கால வாழ்வை நிர்ணயித்துக் கொண்டிருக்கின்றது. சுகபோகங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து உங்கள் எதிர்கால வாழ்வை அழித்துப் போடாதீர்கள்.
கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற சரியானவைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
நாவா, வயிறா, எதை தெரிந்து கொள்ளப் போகின்றீர்கள்?
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
===============
சனிப் பெயர்ச்சி
================
புதிதாய் திருமணமான ஒரு கணவனும் மனைவியும், நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது கீழே கிடந்த கல் ஒன்றில் மனைவி தெரியாமல் இடறிவிட்டார்கள். அப்போது கால் பெருவிரல் கல்லில் மோதி, நகம் பெயர்ந்து இரத்தம் வந்தது. உடனே அந்த கணவனுக்கு வந்தது கோபம், "எந்த சனியன் இந்த ரோட்ல கல்ல போட்டது" என்று கல்லை அங்கே போட்டவர்களை சரமாறி திட்ட ஆரம்பித்தார்.
சில வருடங்கள் கழிந்தது. மறுபடியும் ஒரு நாள் அவர்கள் இருவரும் நடந்து கொண்டு வரும் போது, மனைவி அறியாமல் ஒரு கல்லில் இடறிவிட்டார்கள். அதே போல நகம் பெயர்ந்து இரத்தம் வந்தது. இப்போதும் அந்த கணவனுக்கு பயங்கர கோபம் வந்தது. ஆனால் இப்போது கல்லை போட்டவர்கள் மேல் அல்ல, மனைவியின் மேல் கோபம் வந்தது. "சனியனே, கீழ பாதைய பார்த்து வரமாட்டியா?" என்று மனைவியை சரமாறி திட்ட ஆரம்பித்தார்.
முதலில் கல்லை போட்டவர்களை சனியனே என்று திட்டியவர், இப்போது கல்லில் இடறிய மனைவியை சனியனே என்று திட்டுகின்றார். சில வருடங்களில் கல்லை போட்டவர்களிடமிருந்து மனைவியிடம் பெயர்ந்து வந்தது விட்டது, இந்த சனி. *இது தான் நவீன சனிபெயர்ச்சி.
இது நகைச்சுவையாக இருந்தாலும், இது தான் நம்முடைய வாழ்க்கையிலும் நடக்கின்றது. பூரண அன்பிருக்கும் போது, மற்றவர்கள் தவறுசெய்யும் போது கூட, அவர்கள் மேல் உள்ள தவறை பார்க்க நமக்கு மனமிருக்காது. அந்த பழியை வேறு யாரிடமாவது போட்டுவிடுவோம். ஆனால் அன்பு குறையும் போது, எடுத்ததெற்கெல்லாம் அவர்களை பழித்து பேச ஆரம்பிக்கின்றோம்.
இதனால்தான் பேதுரு அப்போஸ்தலன் நம்மை அறிவுறுத்துகின்றார்: "எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்" (1 பேதுரு 4:8)
நம் சபையிலும், நம் குடும்பத்திலும், நம்மை சுற்றியுள்ள அனைவரிலும் குறைவில்லாத மனிதர்கள் எவரும் இல்லை. ஆனால் அன்பு குறையும் போது அந்த குறைகள் பெரிதாய் தெரியும். நாம் நீதிமான்கள் போலவும் மற்றவர்கள் பாவிகள் போலவும் தெரிய ஆரம்பிக்கும். அன்பு பெருகும் போது, அந்த குறைகள் நம் கண்ணுக்கு தெரியாது.
மற்றவர்களின் குறைகளை பார்க்க ஆரம்பித்தால், அவர்களை நேசிக்க நேரமிருக்காது என்று அன்னை தெரசா கூறியிருக்கின்றார்.
அநேகருடைய திருமண வாழ்க்கையிலும், ஆரம்பத்தில் இருந்த அன்பு இப்போது இல்லை. ஒருவருக்கொருவர் குறைகளையே நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதனால் சமாதானமில்லாத சூழ்நிலை குடும்பங்களில் ஏற்படுகின்றது. இதனால் பிள்ளைகளுடைய மனநிலை பாதிக்கப்பட்டு, அவர்கள் எதிர்காலம் பாழாகின்றது.
சபையிலும் அப்படித்தான். மற்றவர்களுடைய குறைகளை கண்டுபிடித்து அவைகளையே ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டிருந்தால், என்ன வல்லமையான ஊழியம் செய்தாலும் சபை வளராது, கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து போய் விடும். ஒருமனமில்லாத இடத்தில் கர்த்தர் கிரியை செய்ய முடியாது.
இதை வாசிக்கும அன்பான தேவ பிள்ளையே, "நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை" ( 1 கொரிந்தியர் 13:2) என்று பவுல் சொல்கின்றார்.
எத்தனை மகத்தான காரியங்களை நீங்கள் செய்தாலும் குடும்பத்திலும், சபையிலும் அன்பை வெளிப்படுத்தாவிட்டால் நீங்கள் ஒன்றுமில்லை. ஆரம்பத்தில் இருந்த உங்கள் அன்பு இப்போது இல்லை. அதனால் குறைகள் உங்கள் கண்களுக்கு பெரியதாய் தென்படுகின்றது. குறைகளுள்ளவர்கள் மேல் தெய்வீக அன்பை வெளிப்படுத்துங்கள். அவர்கள் பூரணராகும் படி ஜெபியுங்கள். உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாகும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
=========================
சாத்தான் பயன்படுத்துகின்ற பாத்திரம்
=========================
1933 முதல் 1945 வரை ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி ஹிட்லர், தன் 12 வருட ஆட்சி காலத்தில் சுமார் (1,63,00000) ஒரு கோடியே அறுபத்து மூன்று லட்சம் பேரை கொன்று குவித்திருக்கின்றான். இதில் கொடுமை என்னவென்றால் வலிமையான ஜெர்மனியை வடிவமைக்கிறேன் என்று சொல்லி அக்காலத்தில் ஜெர்மனியில் இருந்த உடல் ஊனமான 1,73,500 பேரை ஈவு இரக்கமின்றி கொன்றிருக்கின்றான். இது மட்டுமல்லாமல் சுமார் 8 கோடி பேர் போரினால் மரித்த இரண்டாம் உலகப்போரை துவக்கினதும் இந்த பாவிதான்.
ஒரு மனிதனை சாத்தான் பயன்படுத்தி எத்தனை கோடி பேரை கொன்று குவித்திருக்கின்றான் பாருங்கள்.* நாம் தேவன் பயன்படுத்துகின்ற பாத்திரங்களை குறித்து அதிகம் தியானிக்கின்றோம். தேவன் பயன்படுத்தும் நபர்கள் எப்படி கோடிக்கணக்கானோருக்கு ஆசீர்வாதமாயிருக்கின்றார்களோ, அது போல பிசாசு பயன்படுத்தும் நபர்கள் கோடிக்கணக்கானோருக்கு சாபமாயிருப்பார்கள்.
இதனால் தான் வேதம் சொல்கின்றது: பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். (எபேசியர் 4:27). ஒரு மனிதன் பிசாசுக்கு தன் வாழ்க்கையில் இடம் கொடுக்கும் போது, பிசாசு அவனை பயன்படுத்தி பெரும் சேதத்தை உண்டாக்குவான்.
ஏவாள் என்ற ஒரு மனுஷி அன்று சாத்தானுக்கு இடம் கொடுத்து, தேவனுக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்தாள். விளைவு என்ன? மனிதன் தேவ பிரசன்னத்தை இழந்தான், ஏதேன் என்ற பரலோகத்தை இழந்தான். இன்று வரை முழு மனுக்குலமும் பாவத்திற்குள்ளும் சாபத்திற்குள்ளும் கிடக்கின்றது.
பிசாசுக்கு இடம் கொடுப்பது என்பது பிரமாண்டமாக நடக்கும் காரியமல்ல. நீங்கள் அவனுக்கு அழைப்பிதழ் கொடுத்து அழைக்கப்போவதில்லை. அவன் மிக தந்திரமாய், ஆசை காட்டி, உங்களை பாவத்தில் விழப்பண்ணி, உங்களுக்குள் வந்து, உங்கள் மூலமாய் உங்கள் குடும்பத்தையே சீரழிப்பான்.
தேவன் சாப்பிடக்கூடாது என்று கட்டளையிட்டிருந்த கனியை சாப்பிடும்படி ஏவாளுக்கு பிசாசு ஆசை காட்டின போது, அவளுக்கு அந்த கனி, புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்கதுமாய் தெரிந்தது. மயங்கினாள், விழுந்தாள். அவள் சாப்பிட்டு தன் புருஷனுக்கும் கொடுத்தாள். முழு மனுக்குலமும் விழுந்தது.
இப்படியாக ஒரு மனிதனின் பாவத்தால் மற்ற அநேகர் கஷ்டப்படுகின்றார்கள். கணவனின் குடிப்பழக்கத்தினால் சீரழிகின்ற குடும்பங்கள் எத்தனை எத்தனை? இச்சைக்கு தன்னை விட்டுக் கொடுத்தவர்களால் சீரழிகின்ற குடும்பங்கள் எத்தனை எத்தனை? பண ஆசைக்கு உட்பட்டு நாட்டை கொள்ளையடித்தவர்களால் சீரழிகின்ற தேசங்கள் எத்தனை?
இன்று நாம் கவனிக்க வேண்டிய காரியம் என்னவென்றால் நாமும் அப்படிப்பட்ட மனிதராய் மாறிவிடக்கூடாது. உங்களால் உங்களைச் சுற்றியுள்ளோருக்கு சமாதானமும் சந்தோஷமும் உண்டாகின்றதா? அல்லது குழப்பமும் வேதனையும் உண்டாகின்றதா? நீங்கள் தேவன் பயன்படுத்தும் பாத்திரமா? அல்லது பிசாசு பயன்படுத்தும் பாத்திரமா?
சாத்தானின் தந்திரங்களை அறிந்து கவனமாய் தப்பித்து கொள்ளுங்கள். பாவ சோதனைகளிலும், பண ஆசைகளிலும் விழுந்து விடாதிருங்கள்.
ஒரு நாள் மிகுந்த மகிழ்ச்சியோடு நான் ஊழியத்திற்காய் சென்று கொண்டிருந்தேன். எனக்கு தெரிந்த ஒருவர் எனக்கு முன்னே வருவதை நான் பார்த்த போது, அவரைப் பார்த்து புன்னகையோடு வாழ்த்தினேன். ஆனால் நடந்தது என்ன? அந்த நபர் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே சென்றுவிட்டார். அந்த ஒரு நொடியில் என் மனதில் இருந்த மகிழ்ச்சியையும், முகத்தில் காணப்பட்ட புன்னகையையும் அந்த நபர் நொறுக்கிவிட்டு சென்று விட்டார்.
இப்படிப்பட்டவர்களைத்தான் David J. Pollay என்பவர் குப்பை வண்டிகள் என்று அழைக்கின்றார். *இந்த குப்பை வண்டிகள் தங்கள் மனதில் ஆயிரம் காயங்கள், விரக்தி, எரிச்சல், கோபம், பொறாமை, தாழ்வு மனப்பான்மை போன்ற குப்பைகளை நிரப்பி வைத்திருப்பார்கள். இந்த குப்பைகள் நிரம்பி வழியும் போது, அவர்கள் தன்னை சந்திப்பவர்கள் மீதெல்லாம் அந்த குப்பைகளை கொட்டிவிடுவார்கள்.
உங்கள் வாழ்க்கையிலும் இது போன்ற பலரை நீங்கள் சந்தித்திருக்கலாம். நிந்தனையான வார்த்தைகளை பேசி மனதை புண்படுத்திவிட்டு கடந்து போய்விடுவார்கள். காரணமில்லாத சாபங்களை விடுவார்கள். தேவையில்லாமல் நம்மை பகைப்பார்கள். அடிக்கடி கோவித்துக் கொண்டு நம்மோடு பேச மறுப்பார்கள். நாம் சிரித்தாலும் பதிலுக்கு முறைப்பார்கள்.
இவைகள் நம் சமாதானத்தை நொறுக்கி, அந்த நாளையே கெடுத்துப் போடுகின்றது. அதையே நினைத்து நினைத்து நாம் வருத்தப்பட்டு நம்மையே வருத்திக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் நாம் செய்ய வேண்டியது என்ன? வேதத்தில் சவுல் ராஜாவான போது, சிலர் இவனா நம்மை ரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனை அசட்டைபண்ணினார்களாம். ஆனால் சவுலோ காதுகேளாதவன் போல இருந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. (1 சாமுவேல் 10:27)
குப்பை வண்டிகள் தங்கள் மனதின் குப்பைகளை உங்கள் மீது கொட்ட வரும் போது, நீங்கள் காது கேளாதவர்கள் போல இருந்தால், அவர்களால் அந்த குப்பைகளை உங்கள் மீது கொட்ட முடியாது.
உங்கள் வீட்டிலோ, சாலையிலோ, பணி புரியும் இடத்திலோ அல்லது சபையிலோ, யார் உங்களை காரணமில்லாமல் நிந்தித்தாலும், உங்கள் மேல் எரிந்து விழுந்தாலும், அதை காதில் வாங்காமலும், பதிலுக்கு எந்த வார்த்தையும் பேசாமலும், புன்னகையோடு அமர்ந்திருங்கள். அப்பொழுது அவர்கள் குப்பை உங்களை அசுத்தப்படுத்தாது. உங்கள் மன சமாதானத்தை கெடுக்கவும் முடியாது.
எனவே இப்படிப்பட்ட குப்பை வண்டிகளுக்கு ஜாக்கிரதையாயிருங்கள்!
தேவன் நம்மை குப்பை வண்டியாய் அல்ல, சமாதான வண்டியாய் பிறரை ஆசீர்வதிக்கவே அழைத்திருக்கின்றார். நாம் செல்லுகிற இடமெல்லாம் நம் மூலமாய் சமாதானமும் சந்தோஷமும் உண்டாக வேண்டும்
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். (ஆதியாகமம் 1:26)
மனிதனை கர்த்தர் படைத்த போது இந்த பூமியை ஆளும்படியாகத்தான் படைத்தார். தேவனுடைய பிரதிநிதியாக இந்த பூமியை ஆளவும், பராமரிக்கவும் மனிதன் ஏதேன் தோட்டத்தில் வைக்கப்பட்டான். மனிதனுக்கு தீங்கு செய்வதற்கு அவ்வுலகில் எவரும் இல்லை. எல்லா மிருகங்கள், பறவைகள், நிலம், நீர், காற்று, நெருப்பு என அத்தனையும் மனிதனுடைய ஆளுகைக்குட்பட்டு, அவனுக்கு நன்மையையே செய்தன.
ஆனால் பாவத்தால் அந்த மகத்தான ஆளுகையை மனிதன் இழந்து போனான். அப்படி என்ன பொல்லாத பாவம்? தன்னை ஆளத்தெரியாத பாவம் தான் அந்த பாவம்.
தேவன் சாப்பிடக்கூடாது என்று சொன்ன கனியை சாப்பிட்டார்கள். விளைவு அத்தனை ஆளுகையும் போச்சு!
தன் உணர்ச்சி, ஆசை இச்சைகளை ஆளத்தெரியாமல், அலைபாய்கின்ற எவனாலும் இந்த உலகை ஆள முடியாது
எல்லாமே எனக்கு விரோதமாக நடக்கின்றது, எனக்கு யாராவது ஜெபியுங்கள், உதவி செய்யுங்கள் என்று புலம்பிக் கொண்டிருக்கும் தேவ பிள்ளையே, உங்கள் சூழ்நிலைகளை ஆளும் சக்தியை கர்த்தர் உனக்குள் கொடுத்திருக்கின்றார். ஆனால் அதற்கு முன் நீங்கள் உங்களையே ஆள கற்றுக் கொள்ள வேண்டும்.
அதிகாலை 5 மணிக்கு எழும்பி உங்களால் ஜெபிக்க முடியவில்லை, ஒழுங்காக வேதத்தை வாசித்து தியானிக்க முடியவில்லை, இச்சைகளுக்கு விலகி ஓட முடியவில்லை, செல்போன் அடிமைத்தனத்திலிருந்து எழும்ப முடியவில்லை, கோபம், எரிச்சல் போன்ற உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்று நீங்கள் சொல்வீர்களானால் உங்களையே உங்களுக்கு ஆளத்தெரியவில்லை என்று தான் அர்த்தம்.
இரட்சிக்கப்ட்ட தேவ பிள்ளைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் ஆளப்பிறந்தவர்கள். ஆனால் உங்களை நீங்கள் ஆளத்தவறிய காரணத்தால் அடிமைகளாக, கூனி, குறுகி காணப்படுகின்றீர்கள். மனம் திரும்புங்கள், ஆளுகையை திரும்பப் பெறுங்கள்.*
Thanks for using my website. Post your comments on this