=====================
முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாறு:
கற்பகம் சத்திய நாதன் (1752-1815)
=======================
யார் இந்த கற்பகம்?:
1772 ஆம் ஆண்டு திருச்சியில் தங்கியிருந்து ஊழியம் செய்து வந்த ஆங்கிலேய மிஷனெரி கிறிஸ்டியன் பிரடெரிக் சுவார்ட்சு ஐயர் (Christian Frederick Schwartz) அவர்கள், திருச்சிக்கு சமீபமாயிருந்த உறையூரில் உபதேசிமார்களுடன் சென்று இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து வந்தார். அப்போது இருபது வயதான கற்பகம் என்ற ஒரு இருபது வயது வாலிபன் கிறிஸ்துவின் போதனைகளை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தான். சுவார்ட்சு ஐயரோடு இருந்த தேவநேசம் என்ற உபதேசியார் இந்த வாலிபனுடைய இருப்பிடத்தை அறிந்துகொண்டு தினமும் கிறிஸ்துவைப் பற்றி போதித்தார்.
அப்போது ஒருநான் நான் என் மனைவியையும், தாயையையும் அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்ற இந்த வாலிபன், சிலநாள் கழித்து தன் தாயை மட்டும் அழைத்துக் கொண்டு வந்தான். அப்போது சுவார்ட்சு ஐயரின் போதனையைக் கேட்டு அந்த வாலிபன் மனந்திரும்பினான். கற்பகம் என்ற அந்த வாலிபனுக்கு 'சத்தியநாதன்' என்ற பெயரிலும் அவருடைய தாயாருக்கு 'சாந்தாயி' என்ற பெயரிலும் சுவார்ட்சு ஐயர் ஞானஸ்நானம் கொடுத்தார்.
பாடுகளின் நடுவே ஆண்டவருக்காக சத்தியநேசன்:
இளமையில் அதிக படிப்பறிவு இல்லாவிட்டாலும் கற்பகம் சத்தியநாதனுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரிந்திருந்தது. அவர் சுவார்ட்சு ஐயரோடு தங்கி வேத போதனைகளைக் கேட்கவும், வேதாகமத்தை வாசிக்கவும் தொடங்கினார். அவருடைய அர்ப்பணிப்பும், ஆண்டவரைப் பற்றிய தாகமும் சுவார்ட்சு ஐயரை வெகுவாகக் கவர்ந்தன. கற்பகம் சத்தியநாதன் உத்தமபாளையத்தைச் சார்ந்தவர். திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இளம் வயதிலேயே திருமணம் முடித்தவர். இவர் தனது இருபதாவது வயதில் இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவராக மாறினபொழுது, உறவினர்கள் மூலம் இவருக்கு கடும் எதிர்ப்பு உண்டானது. அவருடைய மனைவி அவருடன் வாழ மறுத்து தாய் வீட்டிலேயே தங்கி விட்டார்.
சத்தியநாதன் சுவார்ட்சு ஐயரோடு தங்கியிருந்து, வேதாகம் சத்தியங்களைக் கற்று வரும்போது அவருடைய மைத்துனர் ஒரு நாள் வந்து பலத்த சத்தத்துடன் சத்தியநாதனை வசைபாடினார். அப்பகுதி மக்களெல்லாம் திரண்டு வந்து வேடிக்கை பார்க்குமளவுக்கு அவர் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் சத்தியநாதன் பொறுமையோடு அமைதியாக இருக்க, அவரோடிருந்த உபதேசிமார் அவருடைய மைத்துனரோடு அன்பாகவும், சாந்தமாகவும் பேசினார்கள். அவர்களுடைய சாந்தத்துக்கு முன்பு மைத்துனரின் கோபம் அடங்கிப் போனது. அவரும் மறுநாளிலிருந்து நற்செய்தியைக் கேட்டு வீட்டிற்குப் போய் குடும்பத்தை அழைத்து வருவதாக மகிழ்ச்சியோடு சொல்லிச் சென்றார்.
உபதேசியரான சத்தியநாதன்:
தேவநேசம் என்ற உபதேசியாரோடு சேர்ந்து, சத்தியநாதன் தன்னுடைய மாமியார் இருந்த ஊருக்கே போய் ஊழியம் செய்தார். இவரைக் கண்டவுடனே, அவருடைய மாமியார் ஆவேசமாகக் கத்தினார். "நீயா, எங்களுக்குப் புத்தி சொல்லுவது?, அந்தப் பெரியவர் உன்னோடு வந்ததினால் நீ தப்பித்துக் கொண்டாய். இல்லையெனில், உன்னை சங்கிலிகளினாலே கட்டி வீட்டுக்குள் அடைத்து வைத்திருப்பேன்" என்ற மாமியாரின் கோப வார்த்தைகளைக் கேட்ட சத்தியநாதன், "நான் உண்மையான கடவுளைப் பற்றித்தான் பேச வந்திருக்கிறேன்." என்றார். உடனே மாமியார் "என்னிடம் வீடு நிறைய தெய்வங்கள் இருக்கிறார்கள். இன்னொரு தெய்வம் எதற்கு? என்று கத்தினார். தேவநேசம் உபதேசியாரும், சத்தியநாதனும் தொடர்ந்து அவ்வூருக்குச் சென்று ஊழியம் செய்யவே நிலைமை மாறியது. சத்தியநாதனின் மனைவி அவரோடு வந்து சேர்ந்து ஆண்டவரையும் ஏற்றுக் கொண்டார். சிலகாலங்கள் சென்ற நிலையில் இவருடைய மாமியாரும் மனம் மாறி ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். இதனால் சத்தியநாதன் தஞ்சாவூர் பகுதியில் உபதேசியாராக நியமிக்கப்பட்டார்.
சத்தியநாதனின் உபதேசியார் பணி:
உபதேசியாராக நியமிக்கப்பட்ட கற்பகம் சத்தியநாதன், எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லாத அக்காலத்தில் தஞ்சாவூர் பகுதியில் இருந்து திருநெல்வேலி வரை வந்து உற்சாகமாக ஊழியம் செய்தார். அப்போது பாளையங்கோட்டையில் இருந்த கிளாரிந்தா ஆலயத்திலும், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள பற்பநாதபுரம், பூவாணி, தேரிவிளை முதலிய இடங்களிலும் கிறிஸ்துவை பற்றிய நற்செய்தி பணியை செய்து மீண்டும் தஞ்சாவூர் திரும்பினார்.
மேற்கண்ட கிராமங்களில் கிளாரிந்தா அம்மையாரிடம் வேலை பார்த்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், அக்கால ஆங்கிலப் படையில் சிப்பாயாகப் பணிபுரிந்த தமிழர்கள், மற்றும் கிளாரிந்தா அம்மையார் வரி வசூல் செய்ய உரிமை பெற்றிருந்த கிராமங்களைச் சார்ந்தவர்கள் ஆகியோர் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் மத்தியில் கற்பகம் சத்தியநாதன் ஊழியம் செய்தார். சுவார்ட்சு ஐயருடைய உதவியினாலே பூவாணி, பற்பநாதபுரம் ஆகிய இடங்களில் ஆலயங்கள் கட்டப்பட்டன. இவர்களில் பலர் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்திலிருந்து வந்தவர்களும், புறமதத்திலிருந்து வந்தவர்களுமாவார்கள்.
இக்காலத்தில் தரங்கம்பாடியிலிருந்தோ, அல்லது தஞ்சாவூரிலிருந்தோ வருடத்திற்கு ஒருமுறை ஆங்கிலேய குருவானவர்கள் திருநெல்வேலி பகுதிக்கு வந்து ஆங்கிலேய இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்து திருவிருந்து ஆராதனை நடத்திச் செல்வார்கள்.
இந்நிலையில் 1778 ஆம் ஆண்டு சுவார்ட்சு ஐயர் திருநெல்வேலிக்கு வந்து, கிளாரிந்தா அம்மையார் மற்றும் சில ஆங்கிலேய இராணுவ அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்து விட்டுச் மீண்டும் தஞ்சாவூர் சென்றார். ஆகவே பாளையங்கோட்டை பகுதியில் குளோரிந்தா மூலமாக கிறிஸ்துவை ஏற்றுகொண்ட பல தமிழ் மக்களுக்கு 1785 வரை உபதேசிமார்பலரும், குருவானவர்களும் தஞ்சாவூர் பகுதியில் இருந்து அவ்வப்போது வந்து கிறிஸ்துவை பற்றி போதித்து, புதுவிசுவாசிகளுக்கு ஞானஸ்நானமும் கொடுத்து வந்தார்கள்.
திருநெல்வேலி பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தபோது சுவாட்ஸ் ஐயர் நெல்லைத் திருச்சபையின் முதல் உபதேசியாராக திரு. கற்பகம் சத்தியநாதனை ஜெபத்துடன் அனுப்பி வைத்தார்.
தஞ்சாவூரிலிருந்து கற்பகம் சத்தியநாதன், தன் குடும்பத்தாரோடு நடந்தே பல மாவட்டங்களைக் கடந்து பாளையங்கோட்டைக்கு வந்து (நெல்லை) முதல் உபதேசியராக ஆண்டவருடைய ஊழியத்தை செய்யத் தொடங்கினார்.
திருநெல்வேலியில் கிறிஸ்தவம்:
திருநெல்வேலி பகுதிக்கு முதல் உபதேசியாராக நியமிக்கப்பட்ட கற்பகம் சத்தியநாதன், எவ்வித போக்குவரத்து வசதியும் சுகாதார வசதியும் இல்லாத காலத்தில் கிறிஸ்துவின் பணியை உற்சாகமாக ஊழியம் செய்தார். முதலில் பாளையங்கோட்டையில் கட்டப்பட்ட கிளாரிந்தா ஆலயத்திலும், அப்படியே செய்துங்கநல்லூர் அருகேயுள்ள பற்பநாதபுரம், பூவாணி, தேரிவிளை முதலிய இடங்களிலும் அவர் ஊழியம் செய்து வந்தார். மேற்கண்ட கிராமங்களில் கிளாரிந்தா அம்மையாரிடம் வேலை பார்த்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், அக்கால ஆங்கிலப் படையில் சிப்பாயாகப் பணிபுரிந்த தமிழர்கள், மற்றும் கிளாரிந்தா அம்மையார் வரி வசூல் உரிமை பெற்றிருந்த கிராமங்களைச் சார்ந்தவர்கள் ஆகியோர் வசித்து வந்தார்கள். இவர்கள் மத்தியில் கற்பகம் சத்தியநாதன் கர்த்தருடைய ஊழியத்தை செய்துவந்தார்.
சுவார்ட்சு ஐயருடைய உதவியினாலே பூவாணி, பற்பநாதபுரம் ஆகிய இடங்களில் புதிதாக ஆலயங்கள் கட்டப்பட்டன. இவர்களில் பலர் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்திலிருந்து வந்தவர்களும், புறமதத்திலிருந்து வந்தவர்களுமாவர்.
யுத்தகாலத்திலும் நற்செய்திப்பணி:
அக்காலத்தில் தரங்கம்பாடியிலிருந்தோ, அல்லது தஞ்சாவூரிலிருந்தோ வருடத்திற்கு ஒருமுறை திருநெல்வேலி பகுதிகளுக்கு குருவானவர்கள் வந்து ஞானஸ்நானம் கொடுத்து, திருவிருந்து ஆராதனை நடத்திச் செல்வார்கள்.
இந்நிலையில் வட தமிழகத்தில் ஆங்கிலேய படைகளுக்கும் ஆற்காடு நவாப் படைகளுக்கும் தென் தமிழகத்தில் திருநெல்வேலி பகுதியில் ஆங்கிலேய படைகளுக்கும் கட்டப்போம்மன் படைகளுக்கும் அடிக்கடி யுத்தங்கள் நடைபெற்று, இராஜ்ஜியங்களுக்குள் ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக, நீண்ட தூரப் பயணம், மற்றும் ஊழியர் பற்றாக்குறை என பல சூழ்நிலைகளில் ஆங்கிலேய குருவானவர்கள் திருநெல்வேலி பகுதிக்கு வந்து ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து ஆராதனைகள் நடத்திச் செல்வது மிகக் கடினமாக இருந்தது. எனவே உண்மையோடும், தாழ்மையோடும் ஊழியம் செய்யும் கற்பகம் சத்தியநாதனுக்கு குருத்துவ அபிஷேகம் செய்ய சுவார்ட்சு ஐயர் முடிவு செய்தார்.
குருவானவரான உபதேசியார்:
கற்பகம் சத்தியநாதன் வேதாகமக் கல்லூரிக்கு சென்றதில்லை. உலக படிப்பும் அதிகமில்லை. ஆனால் சுவார்ட்சு ஐயரிடம் படித்து பயிற்சி பெற்றது, அவரை அர்ப்பணிப்புள்ள ஊழியக்காரனாக செயல்பட வைத்தது. சுவார்ட்சு ஐயர், சத்தியநாதனைப் பற்றிக் குறிப்பிடும்போது. "நான் சத்தியநாதனுக்கு இணையான எவரையும் இதுவரை சந்தித்ததில்லை. கிறிஸ்துவின் மேலுள்ள அவரது அன்பும், தன் நாட்டு மக்களுக்கு ஊழியம் செய்யும் அவருடைய ஆர்வமும், வியப்புக்குரியது என்றும் தன் வீட்டிலும் அவர் நற்சாட்சியோடு திகழ்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படி நற்சாட்சி பெற்ற கற்பகம் சத்தியநாதனுக்கு 1790 டிசம்பர் மாதம் 26ம் தேதி தரங்கம்பாடி புதிய எருசலேம் தேவாலயத்தில் வைத்து குருத்துவ அருட்பொளிவு செய்யப்பட்டது. திருச்சி பகுதியில் மனந்திரும்பிய இவர் திருநெல்வேலியின் முதல் குருவானவராக தரங்கம்பாடியிலே அருட்பொழிவு பெற்றார்.
ஆண்டவர் அருளிய ஞானம்!:
ஏறக்குறைய 53 ஆண்டுகள் தரங்கம்பாடி பகுதியில் ஊழியம் செய்துவந்த ஆங்கிலேய மிஷனெரி Rev. J.B. கோலஃப் (Kohlhoff) அவர்கள், திருநெல்வேலி பகுதிகளுக்கு தமிழ் உபதேசிமார்களையும் ஆங்கிலேய குருவானவர்களை அனுப்பிவைக்க மிகவும் உறுதுணையாக இருந்தபோது 1790 டிசம்பர் 17 ஆம் தேதி இவர் மரணமடைந்தார். ஆகவே நெல்லை பகுதிகளுக்கு கூடுதல் பொறுப்பாக Rev. J.D. ஜெனிக்கே என்பவர் நியமிக்கப்ட்டார். தரங்கம்பாடியில் குருவானவராக நியமிக்கப்பட்ட சத்தியநாதன் செய்த தமிழ்ப் பிரசங்கத்தை Rev. J.C. கோலஃப் மற்றும் Rev. J.D. ஜெனிக்கேயும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, இங்கிலாந்திலுள்ள SPCK ன் தலைமையகத்துக்கு சுவாட்ஸ் ஐயர் அனுப்பி வைத்தார். இதன் மூலம் தென்தமிழகத்தின் முதல் குருவானவரின் வேதாகம அறிவு இங்கிலாந்து குருவானவர்கள் மத்தியிலும் அதிகமாக பேசும்பொருளானது.
முதல் குருவானவரின் முத்தான ஊழியங்கள்!:
Rev. சத்தியநாதன் ஐயர் குருத்துவப் பணி செய்த முக்கியமான சில ஊர்களை மட்டும் பார்ப்போம்.
1) தூத்துக்குடி:
கி.பி. 1700ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் வியாபாரத்தின் காரணமாக தூத்துக்குடியில் வந்து தொழிற்சாலை மற்றும் வியாபாரத்தைப் பல இடங்களில் தொடங்கினார்கள். 1750 ல் டச்சுக்காரர்கள் ஆண்டவரை ஆராதிப்பதற்காக ஒரு ஆலயத்தைக் கட்டினார்கள். இதுதான் தென் தமிழகத்தில் கட்டப்பட்ட முதலாவது ஆலயமாகும். இன்றும் தூத்துக்குடி கடற்கரை சாலையில் இந்த ஆலயம் கிறிஸ்துவை பறைசாற்றிக்கொண்டு இருக்கின்றது. 1789 ஆம் ஆண்டு தரங்கம்பாடியிலிருந்து வந்த Rev. ராயப்பன் அவர்களும், பாளையங்கோட்டையிலிருந்த Rev. கற்பகம் சத்தியநாதன் அவர்களும் தூத்துக்குடியில் தமிழர்கள் நடுவில் ஊழியம் செய்து, முதன்முறையில் 46 நபர்களுக்கும், இரண்டாம் முறையில் 226 நபர்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். கற்பகம் சத்தியநாதன் ஐயருடைய பங்களிப்பு, தூத்துக்குடியில் கிறிஸ்தவம் மலர்வதற்குக் காரணமாயிருந்தது என்பதை எவரும்மறக்க முடியாது. இதன் பின்பு டச்சுக்காரர்கள் கட்டிய ஆலயத்தில் தமிழ் வழியில் ஆராதனைகள் நடக்க ஆரம்பித்தது.
2) முதலூர்:
சத்தியநாதன் ஐயர் 1797 ஆம் ஆண்டு சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் சென்று ஊழியம் செய்தார். அப்போது சாத்தான்குளத்திலும் அவர் நற்செய்தியை அறிவித்தார். விஜயராமபுரத்தில் தொடர்ச்சியாக ஊழியம் செய்து இருபது பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். அதைச் சுற்றியுள்ள 16 கிராமங்களுக்கும் சென்று ஊழியம் செய்து மேலும் 18 பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இதனால் இப்பகுதியில் இந்துமத பூசாரிகளின் தூண்டுதலினால் வந்த எதிர்ப்பாளர்களால் கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்பட்டது. அப்போது முதலூர் என்ற கிராமம் கிறிஸ்தவர்களுக்கென்று தனியாக வாங்கப்பட்டு, அங்கு ஆலயம் ஒன்று நிறுவப்பட்டது. அந்த ஆலயமானது நற்செய்தி எதிர்ப்பாளர்களால் இரண்டு முறை தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. ஆகவே கற்பகம் சத்தியநாதன் ஐயர் அடிக்கடி முதலூர் வந்து தங்கி அந்த மக்களை திடப்படுத்தி வந்தார். நெல்லை மாவட்டத்தில் உள்ள மக்கள் பலர் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதற்கு ஆண்டவர் பயன்படுத்திய பாத்திரம் முதலூர் பகுதியை சேர்ந்த திரு.தாவீது சுந்தரானந்தம் ஆவார். இவரும் குருவானவராகிய கற்பகம் சத்தியநாதனோடு இணைந்து பல இடங்களுக்குச் சென்று ஊழியம் செய்தார்.
3) நாசரேத்:
1799 ம் ஆண்டு சத்தியநாதன் ஐயர் ஊழியம் செய்த இடம் சான்பத்து என்ற கிராமம் ஆகும். 1800 ஆம் ஆண்டில் இங்கே எட்டு பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள். இக்கிராமமே பின்பு நாசரேத் என பேரிடப்பட்டது. கற்பகம் சத்தியநாதன் ஐயர், வாழையடி, அத்திக்காடு, ஜெருசலேம், குலசேகரபட்டிணம், பெத்லகேம், அப்புவிளை, திசையன்விளை, புத்தியிருப்புவிளை, இடையன்குடி, உவரி, குண்டல், பள்ளிப்பத்து, அச்சம்பாடு, மணப்பாடு, ஆனைகுடி, சொக்கலிங்கபுரம், நந்தன்குளம் முதலிய இடங்களுக்கும் சென்று கிறிஸ்துவைபற்றி அறிவித்து, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு ஞானஸ்நான ஆராதனையை நடத்தியிருக்கிறார். சில இடங்களுக்கு Rev. ஜெனிக்கேயும், (Jaenicke) சில இடங்களுக்கு Rev. கேரிக்கும், (Gericke) சென்று ஞானஸ்நானம் கொடுத்து, திருவிருந்து ஆராதனை நடத்திவந்தார்கள். 1800 ஆம் ஆண்டு Rev. சத்தியநாதன் திருநெல்வேலிக்கு அருகே பாஞ்சாலங்குறிச்சிவரை சென்று அங்கு தங்கியிருந்து நற்செய்திபணி அறிவித்தார்.
Rev. சத்தியநாதன் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டிருந்த ஆலயங்களுக்கு சென்று கிறிஸ்துவை பற்றி போதித்து ஞானஸ்நானம் கொடுத்து திருவிருந்து ஆராதனைகளை நடத்தி புதிய கிராமங்களில் நற்செய்திபணி செய்துவந்தார்.
இவர் தன்னுடைய வசதி குறைவுகளை பொறுத்துக் கொண்டு, ஏழை பணக்காரன் என்ற வித்தியாச மில்லாமல், எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்று, 35 க்கும் அதிகமான கிராமங்களில் திருச்சபைகளை உருவாக்கினார். இந்த நாசரேத்தில் கட்டப்பட்ட புனித யோவான் ஆலயமே, இன்று தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தில் பேராலயமாக உயர்ந்து நிற்கிறது.
திருச்சபையில் சாதீய பிரச்சினைகள்:
Rev. கற்பகம் சத்தியநாதன், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டுமல்ல, திருவனந்தபுரம் வரை மாட்டுவண்டிகளிலும், நடந்தும் சென்று கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து வந்தார். இன்றைய குமரிப்பகுதியில் இருக்கும் பிச்சைக்குடியிருப்பு என்ற ஊரிலும் அவர் ஒரு திருச்சபையை உருவாக்கியிருந்தார். பின் நாட்களில் திருவாங்கூர் சமஸ்தானத்திற்க்கு மிஷனெரியாக Rev. ரிங்கள் தோபே மைலாடிக்கு வந்தபோது பிச்சைக் குடியிருப்பின் உபதேசியாரை சந்தித்ததைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
1804 மற்றும் 1805 ஆம் ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியதால் பல திருச்சபைகள் எழும்பின. இதில் பல்வேறு சாதீயை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இந்நிலையில் திருநெல்வேலி பகுதியில் திருச்சபையில் கருத்து வேறுபாடுகளும், சாதீய பிளவுகளும் ஏற்படத் தொடங்கின. இது கற்பகம் சத்தியநாதன் ஐயருக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்தது. அவர் கிறிஸ்தவர்களிடம் எவ்வித பாகுபாடும் காட்டாமல் ஆத்தும பாரத்தோடு ஊழியம் செய்தவர்.
ஆனால் தஞ்சாவூரிலிருந்து வந்த சில உயர்ஜாதி உபதேசிமார்கள் சாதீய பாகுபாடுகளைக் கடைபிடித்தார்கள். இந்நிலையில் திருச்சபையில் பிரச்சினைகள் ஏற்படுவதை விரும்பாமல், ஆண்டவருடைய நாமம் மகிமைப்படுவதையே விரும்பிய Rev. கற்பகம் சத்தியநாதன், திருநெல்வேலி பகுதியில் இருந்து வெளியேற விரும்பினார்.
கோதுமைமணி யான சத்தியநாதன்:
திருநெல்வேலி பகுதியில் திருச்சபைகளில் பிரச்சினைகள் ஏற்பட்ட காலகட்டத்தில் சத்தியநாதனை உருவாக்கிய சுவாட்சு ஐயரும் மரித்துவிட்டார். ஆகவே தஞ்சாவூரிலிருந்த கோலஃப் ஐயருக்கு தன்னை திருநெல்வேலி பகுதி ஊழியத்திலிருந்து விடுவித்து விடும்படி Rev. சத்தியநாதன் கடிதம் எழுதவே கோலஃப் ஐயரும் அதற்கு சம்மதித்தார்.
தன்னுடைய இறுதிகாலத்தில் தஞ்சாவூர் சென்ற Rev. சத்தியநாதன் தொடர்ந்து 10 ஆண்டுகள் அங்கு திருச்சபை பணியை செய்து 1815 ல் மரணமடைந்தார். Rev. கற்பகம் சத்தியநாதன் 1785 ல் திருநெல்வேலி பகுதிக்கு வந்த போது ஒரு திருச்சபையும் 100 கிறிஸ்தவர்களும் இருந்தனர், ஆனால் இவர் 1805 ஆண்டில் திருநெல்வேலியையை விட்டுச் செல்லும் போது 35 திருச்சபைகளும் சுமார் ஐயாயிரம் கிறிஸ்தவர்களும் இருந்தனர்.
தமிழ் திருச்சபையின் உபதேசியாராக இருந்து குருவானவராக ஆக்கப்பட்ட கற்பகம் சத்தியநாதன் அவர்களின் அற்பமான ஆரம்ப ஊழியமே இன்று திருநெல்வேலி திருமண்டலம் மற்றும் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலங்களாக வளர்ந்து ஆலமரமாய் செழித்து, மிஷனெரிகளை இந்தியா முழுவதும் அனுப்பிக்கொண்டு இருக்கின்றது. தென் தமிழகத்தின் முதல் குருவானவரான கற்பகம் சத்தியநாதன் அவர்களை மகிமையாய்ப் பயன்படுத்திய ஆண்டவர் உங்கள் ஒவ்வொருவரையும் அவருடைய ராஜ்யத்தை கட்ட பயன்படுத்துவாராக! ஆமென்.
உதவியாக இருந்த நூல்: C.F. சுவாட்ஸ் ஐயர் உருவாக்கிய நன்முத்துக்கள் by Eva. J. J. Gurusingh, Tirunelveli.
இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
கிறிஸ்துவவில் அன்பானவர்களே!.இந்த மிஷனெரிகள் சரித்திரம் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களால் வாசிக்கப்படுகின்றது. ஆகவே இந்த சரித்திர குழுவின் இனைப்பை உங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவருக்கும் அனுப்பு வைக்கும்போது, அவர்களும் உங்களைப்போல மிஷனெரி தரிசனத்தை பெற்றுக்கொள்வார்கள். நன்றி
May God Bless You and Use You for the Extensions of His Kingdom. With Love and Prayer...Rev. D. David Paramanantham B.Sc, M.A, B.D, Gamaliel Bible College, Mumbai, India
Thanks for using my website. Post your comments on this