Type Here to Get Search Results !

குட்டி கதைகள் | ஆபத்து | அழுகுரல் | உன்னால் முடியும் | இலைசாப்பாடுஅறிவியல் | தயக்கம் | Christion Short Story's in Tamil | Jesus Sam

-ஓர் குட்டிக் கதை-

    தேவன் நம்மிடம் நேரடியாக பேசத்தான் விரும்புகிறார். ஆனால் நாமோ அவரிடம் பேச இடைத்தரகர்களை ஏற்படுத்தி நமக்கும் அவருக்கும் பெரிய இடைவெளி ஏற்படுத்தி விடுகிறோம். எனவே ஆபத்து நேரத்தில் கூட நாம் நேரடியாக தேவனை நோக்கி பார்க்காமல் மூனறாம் நபர் மூலம்தான் மன்றாடுகிறோம். நமக்கு ஒரு நன்மை கிடைத்தால் கூட அதற்கான நன்றியைக்கூட நாம் நேரடியாக செலுத்துவதில்லை. ஆனாலும் நம் தேவனோ நாம் எவ்வளவு தான் விலகி சென்றாலும் நம்மை விட்டு விலகாமல் நம்மோடு நேரடியாக பேசுவதற்காக மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்.

இதை இச்சிறுகதை மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

==================
ஆபத்து!!
==================

    ஒருதடவை முல்லா கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே கப்பலில் நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். கப்பல் பயணிகளில் பெரும்பாலோர் முடிந்தவரை உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர்.

    அவர்கள் எல்லாருமே மது அருந்தியதால் நிலை தடுமாறியிருந்தனர். ஒருவருக்கொருவர் கேலிபேசியும், வேடிக்கைகள் செய்தும், சண்டை சச்சரவுகள் செய்தும் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் சில பயணிகள் முல்லாவைச் சூழ்ந்து கொண்டு கேலியும், கிண்டலும் செய்தனர்.

    “”என்ன முல்லா அவர்களே! கடவுளோடு உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது! உம்முடன் உரையாடும் அளவுக்கு கடவுள் அவ்வளவு எளிமையானவராகி விட்டாரா?” என்று ஏளனப் பேச்சு பேசத் தொடங்கினர்.
முல்லா அவர்களை ஏளனமாக நோக்கினான். அவர் சற்றும் கோபம் அடையவில்லை.

    “”என் நண்பர்களே! கடவுள் என்னுடன் மட்டுமல்ல, தம்மைச் சந்திக்க வரும் எவ்வளவு எளியவரிடமும் உரையாட விரும்பும் கருணை உள்ளம் படைத்தவர்!” என்று மற்ற பயணிகளை நோக்கி கூறினார் முல்லா.

    “”அப்படியானால் கடவுளிடம் எங்களுக்கு ஏதாவது உதவிவேண்டும் என்றால் உமது மூலமாக அதைப் பெறலாம் போலிருக்கிறதே!” என்று கூறிவிட்டுப் பயணிகள் கேலியாகச் சிரித்தனர்.

    “”கடவுளின் தயவைப் பெறவேண்டுமானால் என்னுடைய தயவே தேவையில்லை. கடவுளிடம் கையேந்தினால், அவர் நிச்சயமாக யாருக்கும் உதவி செய்வார்!” என்று அடக்கமான குரலில் கூறினார் முல்லா.
அவருடைய பேச்சைக் கேட்டுப் பயணிகள் பரிகாசச் சிரிப்பொலி எழுப்பினர்.
முல்லா சக பயணிகளின் நடவடிக்கைப் பற்றிச் சற்றும் கவலைப்படவில்லை. தன்போக்கில் அமைதியாக இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார்.
திடிரென்று வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. பெரும் சூறாவளிக் காற்றுடன் பெருமளவு மழை கொட்டத் தொடங்கியது.

    கடலில் எழுந்த பெரும் அலைகளின் நடுவே கப்பல் தத்தளிக்கத் தொடங்கியது. கப்பலை கட்டுப்படுத்த மாலுமி முயன்றார். கப்பல் திசைமாறித் தாறுமாறாகச் செல்லத் தொடங்கியது.

    கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளுக்கு அச்சமும், குழப்பமும் ஏற்பட்டது. கப்பல் கவிழ்ந்து தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று பீதியடைந்தனர்.

    அப்போது கப்பல் மாலுமி அளித்த செய்தி பயணிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

    “”கப்பல் திசைமாறித் தன் போக்கில் நடுக்கடலுக்குச் சென்றுவிட்டது. சமீபத்தில் கரை இருக்குமா என்பது தெரியவில்லை. நாளைக் காலைக்குள் நாம் கரையை அடையாவிட்டால் நம்மிடம் இருக்கும் உணவும், தண்ணீரும் காலியாகி விடும். பசியும், பட்டினியுமாகக் கிடந்து நடுக்கடலில் நாம் இறக்க வேண்டியதுதான்!” என்று மாலுமி அறிவித்தார்.

    கப்பல் பயணிகள் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. ஒவ்வொருவரும் தத்தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள யோசனை செய்தனர். உயிர் தப்புவதற்கு அவர்களுக்கு வேறு எந்தவழியும் புலப்படவில்லை. அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு முல்லாவிடம் ஓடிவந்தனர்.

    “”முல்லா அவர்களே! சற்றுமுன் நாங்கள் கடவுளைப் பற்றி இழித்தும், பழித்தும் பேசியதன் காரணமாகத்தான் இப்படி ஓர் ஆபத்தில் சிக்கிக் கொண்டோமோ என்று தோன்றுகிறது. தாங்கள் கடவுளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர் என்பதால் கடவுளுடன் தொடர்பு கொண்டு, எங்கள் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்!” என்று பயணிகள் வேண்டிக்கொண்டனர்.

    “”அன்பார்ந்த நண்பர்களே! இந்த ஆபத்து நிறைந்த நேரத்தில் கூட கடவுளை நினைத்துப் பிரார்த்தனை செய்ய உங்களுக்குத் தோன்றவில்லை. உங்களைப் போன்ற சாமானிய மனிதனாகிய என்னிடம் வந்துதான் முறையிடுகிறீர்கள். நீங்களெல்லாம் கடவுளை அவமரியாதை செய்தாலும் கடவுள் உங்களைக் கோபிக்க மாட்டார். உலகத்திலுள்ள மக்கள் அனைவருமே கடவுளின் குழந்தைகள் அல்லவா? கருணை உள்ளம் படைத்த கடவுள் நம்மை நிச்சயம் காப்பாற்றுவார்!”

    இவ்வாறு சற்றும் பதற்றமில்லாமல் அமைதியான குரலில் கூறினார் முல்லா.
“”கடவுள் நம்மையெல்லாம் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?” என்று பரபரப்போடு வினவினர் கப்பல் பயணிகள்.

    “”என் அன்பு நண்பர்களே! அதோ பாருங்கள் தொலைவில் கரை தெரிகிறதை!” என்று ஒரு திசையைக் காட்டினார் முல்லா.

    உடனே அங்கிருந்த கலக்கமும், குழப்பமும் அகன்றன. மகிழ்ச்சியடைந்த கப்பல் பயணிகள், “”இனி ஆபத்தில்லை!” என்று ஆனந்தக் கூத்தாடத் தொடங்கினர். முல்லா மகிழ்ச்சிக் கூத்தாட்டம் நடத்திய பயணிகளை வேதனையோடு நோக்கினார்.

    “இந்த நேரத்தில் கூட இந்த மக்களுக்கு கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தோன்றவில்லையே!’ என்று மிகுந்த வருத்தத்தோடு தனக்குத்தானே கூறிக் கொண்டார் முல்லா.

To Get Daily Story In What's app Contact +917904957814

என் அன்பு வாசகரே,
    நாம் அனுதினமும் தேவனோடு உறவாடி அவருடன் நேரம் செலவிட தேவன் மிகுந்த ஆவலுடன் ஏங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால் நாமோ நமது குடும்பம் வேலைப்பழு காரணமாக நாம் தேவனோடு உறவாடுவதை விட்டுவிடுகிறோம்.  அதன் விளைவோ நமக்கு கஷ்டம் நஷ்டம் வரும் சமயங்களில் நாமே ஒரு மனிதனை நாடித்தான் செல்கிறோமே தவிற தேவனை தேடுவதில்லை. நமது உணர்வு இக்கதையில் வருவதுபோல தேவனை தேடுவதில்லை எந்த சூழ்நிலையென்றாலும் மனிதனை மாத்திரம் தான் தேடுகிறது. 

    எனவே இன்று முதல் வேத வாசிப்பிலும், ஜெபத்திலும் தேவனோடு ஒன்றாய் இணைந்து அவருடைய உணர்வு நமது உணர்வாய் மாறும்போது மிகுந்த ஆசீர்வாதமாய் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சங்கீதம் 14: 2
    தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.

    வாசகரே, நாமும் தேவன் தேடுகிற உணர்வுள்ளவர்களாய் மாறுவோம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.






-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

ஓர் குட்டிக் கதை 

==================
அழுகுரல்
==================


        மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமம்... தென்னந்தோப்புகளும், பாக்கு தோட்டங்களும், ரப்பர் தோட்டங்களும் நிறைந்தபகுதி அது! நிலத்தை ஒட்டிய பகுதியில் வீடுகட்டி ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்துகொண்டு இருந்தது!

    நடுத்தர வயதை ஒட்டிய ஒரு கணவன் மனைவி, அவர்களுக்கு பத்து வயதில் ஒரு பெண் குழந்தை! ஒரு நாள் அந்த வீட்டை சேர்ந்த பெண் தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக தென்னந்தோப்புக்கு செல்கிறாள்! அவள் புல் அறுத்துக்கொண்டு இருக்கும்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கொஞ்சம் கொஞ்சமாக கேட்கிறது!

    அவள் பதட்டத்துடன் எங்கிருந்து வருகிறது என்று தேட கொஞ்ச நேரத்தில் அந்த குழந்தையின் அழுகுரல் நின்று விடுகிறது! திரும்பவும் மீண்டும் ஒரு முறை அதே அழுகுரல் கேட்கிறது! பயத்துடன் அந்த அழுகுரல் வரும் திசையை நோக்கி நடக்கிறாள்! ஒரு தென்னை மரத்தில் இருந்து அந்த அழுகுரல் வருவதை கவனிக்கிறாள்! தென்னை மரத்தில் ஏதாவது குழந்தை இருக்கிறதா என்று மேலே பார்த்தபடி தேடுகிறாள்! எந்த குழந்தையும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை!

    ஒரு நாளைக்கு நாலைந்து முறையாவது அந்த அழுகுரல் கேட்டுக்கொண்டே இருக்கும்! பயந்து போய் தன்னுடைய கணவனுக்கு சொல்கிறாள்! அவன் முதலில் ஏதாவது உன்னுடைய பிரம்மையாக இருக்கும் என்று பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்இருக்கிறான்! அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டு படுக்கும்போது, இரவு பத்து மணிக்கு மேல் மீண்டும் ஒரு முறை அந்த குழந்தையின் அழுகுரல் கேட்கிறது!

    அவன் இப்போது தான் மனைவி சொன்னதை நம்புகிறான்! கையில் பெரிய டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு அந்த தென்னந்தோப்புக்குள் நுழைகிறான்! அவனுடைய மனைவி வேண்டாம் என்று மறுக்கிறாள்! ஆனாலும் அவன் தைரியமானவன் என்பதாலும் அதே கிராமத்தில் சிறுவயதில் இருந்து வாழ்ந்து பழக்கப்பட்டவன் என்பதாலும் தைரிய மாக தோப்புக்குள் செல்கிறான்!

    அவளும் கணவனுக்கு ஏதாவது ஆகிடுமோ என்று பயந்து பின்னாலேயே போகிறாள்! அவளுக்கு கேட்ட அதே அழு குரல் அதே தென்னை மரத்திலிருந்து கேட்கிறது! அவன் கீழிருந்தபடி உயரமான அந்த தென்னை மரத்தில் டார்ச் அடித்து பார்க்கிறான்! அந்த மரத்தில் இருந்து ஏதோ ஒரு பறவை மட்டுமே பறந்து செல்கிறது! அருகில் வரும் வரை கேட்டுக் கொண்டிருந்த அந்தஅழுகை குரல் இப்போது கேட்க வில்லை!

    போலாம் வாங்க என்று மனைவி அழைத்ததால் இருவரும் வீடு திரும்புகிறார்கள்! அடுத்த நாள் அவளுடைய அண்ணனுக்கு இந்த தகவலை சொல்கிறாள்! மீண்டும் அழுகுரல் வந்தால் எனக்கு போன் செய்யுங்கள் நான் ஆட்களோடு வந்து பார்க்கிறேன் என்று சொல்கிறான்! அவள் அந்த அழுகுரலுக்கு பயந்து அந்த தோப்பின் பக்கமே போகாமல் இருக்கிறாள்! அடுத்த நாள் இரவு எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது எட்டு மணிக்கெல்லாம் அந்த அழுகை குரல் கேட்கிறது!  அவளும் அண்ணனுக்கு போன் செய்கிறாள்!அவளுடைய அண்ணன் நாலைந்து ஆட்களை அழைத்துக்கொண்டு வருகிறான்! அங்கே இருக்கும் சில மரக் கட்டை களில் துணியை இறுக்கமாக சுற்றிக்கொண்டு அவற்றின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டு அந்த தென்னந்தோப்பிற்கு கிளம்புகிறார்கள்!

    வீட்டில் இருக்கும்போது குறைவாக கேட்கின்ற அந்த அழுகை சத்தம் அருகேசெல்லச் செல்ல அதிகமாககேட்கிறது! பின் கொஞ்ச நேரத்திற்கெல் லாம் முழுவதும் நின்றுவிடுகிறது! அந்த குறிப்பிட்ட மரத்தின் அருகில் சென்று தீப்பந்தத்தை காட்டி மேலே சுற்றி சுற்றி பார்க்கிறார்கள்! எதுவுமே தெரியவில்லை! அழுகுரலும் நின்றுவிட்டது! தீயை பார்த்தால் எந்த பேயாக இருந்தாலும் பயந்துவிடும் என்று கூட்டத்தில் இருந்த நாலு பேரில் ஒருவன் உறுதியாக கூறுகிறான்!

    அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மீண்டும் அழுகுரல் சத்தமாக கேட்க ஆரம்பிக்கிறது! எல்லோருமே பயந்துவிடுகிறார்கள்!அந்த இடத்தை விட்டு உடனே ஓடிவந்து விடுகிறார்கள்! அடுத்த நாள் ஒரு பெரிய சாமியாரை அழைத்துவந்து அந்த தென்னை மரத்தை சுற்றி மஞ்சள் கயிறால் கட்டு கட்டி, ஒரு தென்னங்கன்றுக்கு பாலாபிஷேகம் செய்து நிறைய சடங்குகள் எல்லாம் செய்து, பூஜைகள் எல்லாம் செய்துவிட்டு, இனிமேல் நிச்சயம் அந்த அழுகுரல் கேட்காது என்றுசொல்லி விட்டு போகிறார்!

அவர்களும் நிம்மதியாக தூங்குகிறார்கள்!
    ஆனால் அடுத்த நாள் விடியற் காலையிலேயே அந்த அழு குரல்கேட்க ஆரம்பிக்கிறது! இந்த முறை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது! இடைவெளி இல்லாமல் திரும்ப திரும்ப கேட்கிறது! தோப்பின் பக்கம் யாரோ ஆள் நடமாட்டம் இருப்பது போல் அவர்களுக்கு தெரிய பயமாக இருந்தாலும் யாரென்று பார்ப்பதற்காக, கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போகிறார்கள்.

    அருகில் போகப்போக மரத்தின் மேல் ஏதோ ஒரு உருவம் இருப்பது போல் தெரிகிறது! தென்னை ஓலைகளும் மட்டையும் அசைகின்ற சத்தம் கேட்கிறது! திடீரென்று மரத்திலிருந்து ஒரு உருவம் சரசரவென இறங்கிகீழே வருகிறது! இவர்கள் நடுங்கிப்போய் பார்க்க .... மரத்திலிருந்து இறங்கிய மரமேறி, 

    ஒண்ணும் இல்லம்மா நாலு நாள் முன்னாடி தேங்காய் பறிக்க ஏறும்போது போனை மேலயே விட்டுட்டு வந்துட்டிருக் கேன், எங்கடா காணோம் காணோம்னு நாலு நாளா தேடிட்டு இருந்தேன், ஒவ்வொரு தோப்பா போயி ஊரெல்லாம் போன் பண்ணி போன் பண்ணி தேடிட்டு இருந்தேன்! கடைசியில உங்க தோப்புலயே இருந்திருக்கு! என்று அவன் சந்தோஷப்பட அதற்குள் மீண்டும் அந்த அழுகுரல் ரிங்டோன் ஒலிக்க அதை அட்டென்டு செய்து போனு கிடைச்சிடுச்சிம்மா, கடைசியில நம்ம துர்கா அக்கா தோட்டத்துல தான் இருந்திருக்கு, போனை பார்த்த பின்னாடி தான் எனக்கு உயிரே வந்திருக்கு, என்று அவன் பேசியபடி நடந்துசெல்ல, பாவம் இவர்களுக்கும் அப்போது தான் உயிரே வந்தது..!!!

என் அன்பு வாசகர்களே,
    உங்களுக்கும் இப்போது தான் நிம்மதி வந்திருக்கும் என்று நம்புகிறேன். நல்ல காரியமானாலும், கெட்ட காரியமானாலும் தேவையற்ற பயம் மனிதனை கொல்லும்.  அநேகர் இவ்வாறு தான் தேவையற்ற காரியத்திற்காக பயந்துக்கொண்டு போதகர்களையும், விசுவாசிகளையும் அழைத்து உபவாச ஜெபம் செய்வர் இறுதியில் பார்த்தால் அது அற்பமான காரியமாய் இருக்கும். 

    தேவையற்ற எண்ணங்களும், சிந்தனைகளும் கூட ஒரு மனிதனை பயப்படுத்தி அவனை விழப்பண்ணும். அதுதான் இன்றைய கதையிலும் நடந்தது. அது என்னவென்று ஆராய்ந்து பாராமல் தேவையில்லாமல் அதுவாய் இருக்குமோ, இதுவாய் இருக்குமோ என்று சிந்தித்து அந்த சிந்தனையினால் வீணரானார்கள். 

    வேதாகமத்தில் மோசே இஸ்ரவேல் கோத்திரத்தில் ஒருவராக பன்னிரண்டு பேரை கானானை வேவு பார்க்க அனுப்பினான். அவர்களும் வேவு பார்த்து திரும்பிவந்து அவர்கள் கண்ட காரியத்தையும் அதற்கு மேலான காரியத்தையும் தங்கள் சிந்தையில் இருந்த அனைத்தையும் இஸ்ரவேலரிடத்தில் சொன்னார்கள். 

    அவர்கள் அங்கே கண்ட காரியங்களை மிகைப்படுத்தி சொல்லி இஸ்ரவேலரின் இருதயங்களை கரையப்பண்ணினார்கள். ஆனால் இறுதியில் அந்த பட்டணத்தை மிக எளிமையாய் பிடித்துக்கொண்டார்கள். 

To get daily story and prayer requests in whats app contact +918148663456

    எனவே தேவையற்ற சிந்தனை, தேவையற்ற பேச்சுக்கள், தேவையற்ற பயம் என எல்லாவற்றையும் விட்டு தேவையானதை பற்றிக்கொள்வோம். வேதம் சொல்கிறது

லூக்கா 10: 42
    தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்

    ஆம் அன்பானவர்களே, மரியாளைப்போல தேவையான நல்ல பங்காகிய தேவனுடைய பாதத்தை பற்றிக்கொள்வோம், பயத்தை ஒழிப்போம்.



Daily Bible Quiz in Tamil


-x-x-x-x-xx-x-x-xx-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

---ஓர் குட்டிக் கதை 

==================
உன்னால் முடியும்!!!
==================

    முயல் சின்னுவுக்குப் பசி தாங்கமுடியவில்லை. ஓவ்... என்ன இப்படிப் பசிக்குது? பசி தாங்க முடியலே! அம்மா... என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டது. அம்மா முயல், சின்னுவைப் பாவமாகப் பார்த்தது. சின்னு கிளம்பு... இப்படியே உட்கார்ந்துட்டு இருந்தால், சாப்பிட ஒண்ணும் கிடைக்காது. ஆத்தோரமா புல்லு நிறைய இருக்கும். இஷ்டத்துக்கும் சாப்பிடலாம். போகலாம், வா... என்றது அம்மா முயல். ஆறு ரொம்ப தூரமாச்சே?ரொம்ப தூரம்தான்... இங்கே புற்கள் எல்லாம் காய்ஞ்சு கிடக்குது. நாம ஆத்தங்கரைக்குப் போறதைத் தவிர, வேற வழி இல்லே... சரிம்மா, போகலாம்... என்று முயல் சின்னு அரைமனதாகச் சொல்லிக்கொண்டு புறப்படத் தயாரானது.

    அம்மா முயலும் சின்னுவும் ஆற்றை நெருங்கி விட்டன. ஆற்றங்கரையைப் பார்த்த சின்னு திகைத்துப் போய்விட்டது. என்னம்மா இது... இங்கே நிறைய புல் இருக்கும்னு சொன்னே! வெறும் பாறைதான் இருக்கு... சின்னு ஏமாற்றத்தோடு சொன்னது. இக்கரையில பார்க்காதே... அக்கரையில பாரு! என்றது அம்மா முயல். அக்கரையைப் பார்த்த சின்னுவின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. ஆவ்... எவ்வளவு புல்லு? இவ்வளவு புல்லை நான் பார்த்ததே இல்லே! சின்னு... ஆத்தைத் தாண்டிப் போகலாம், வா... எ...என்னது? என்று சின்னு திடுக்கிட்டது. ஏன் சின்னு... என்னாச்சு? இவ்வளவு பெரிய ஆத்தை எப் படித் தாண்டிப் போக முடியும்? சின்னு ஆற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் பெருமூச்சு விட்டது. என்னால தாண்ட முடியாதே! என்றது ஏக்கத்துடன்.

    அக்கரையில் ஏராளமான புற்கள் வளர்ந்திருந்தன. சின்னு, இது சின்ன ஆறுதான்... உன்னால சுலபமா தாண்ட முடி யும்! வா, தாண்டிப் போவோம்... அம்மா முயல் தாண்டுவதற்குத் தயாரானது. சின்னு, என்னால தாண்ட முடியாதும்மா... வா, திரும்பிப் போயிடலாம்! அம்மா முயல், சின்னுவைப் பார்த்தது. என்ன சின்னு இப்படிச் சொல்றே? இங்கே பார்... உன்னால ஆத்தைத் தாண்ட முடியும்! வீணா பயப்பட்டு, மனசைப் போட்டுக் குழப்பிக்கிறே... இந்த ஆத்தைத் தாண்ட முடியும்னு நம்பு... உன்னால தாண்ட முடியும்! சின்னு, சலசலத்து ஓடும் ஆற்றைப் பார்த்தது. ஆற்றின் அகலம் பத்து அடி இருக்கும். என்னால முடியாதும்மா... என்று சின்னு வேகமாகத் தலையசைத்து மறுத்தது.

    சரி சின்னு... இப்ப நான் ஆத்தைத் தாண்டிக் காட்டறேன். அதே மாதிரி நீயும் தாண்டு... என்று சொல்லிவிட்டு, அம்மா முயல் சர்ரென்று ஆற்றைத் தாண்டியது. அம்மா முயல் அக்கரையில் நின்றுகொண்டு சின்னுவைப் பார்த்தது. இப்படித்தான் சின்னு... நீயும் ஆற்றைத் தாண்டி வா! என்னால முடியாதும்மா! என்னை விட்டுடு... என்று சொல்லிவிட்டு, சின்னு கொஞ்சம் பின்னால் நகர்ந்தது. வா சின்னு... இங்கே பாரு, எத்தனை புல்லுனு! மாட்டேன்... என்று தீர்மானமாக மறுத்தது சின்னு. அம்மா முயல் கொஞ்சம் யோசித்தது. சின்னு, அம்மாவை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது.

    திடீரென்று அம்மா முயலின் முகம் மாறியது. சின்னு... ஆபத்து... என்று அலறியது. என்னம்மா? சின்னு அதிர்ச்சியோடு கேட்டது. உனக்குப் பின்னால... உனக்குப் பின்னால... எனக்குப் பின்னால... என்னம்மா? புலி ஒண்ணு வந்துட்டு இருக்குது! எ...என்னது..! பு...புலியா? கண்ணிமைக்கும் நேரம்தான்... சரக்கென்று ஒரே பாய்ச்சல்! ஆற்றைத் தாண்டிய வேகத்தில், சின்னு வேகமாக ஓடத் தொடங்கியது.

    சின்னு, சின்னு... ஏய் சின்னு, நில்லு... நில்லு... என்று கத்திக்கொண்டே அம்மா முயல் சின்னுவின் பின்னால் ஓடியது. சின்னு திரும்பிப் பார்க்காமல் ஓடியது. ஏய் சின்னு... நில்லு! புலியும் இல்லே... எலியும் இல்லே... நான் சும்மாத்தான் சொன்னேன்! என்று அம்மா முயல் கத்தியது. ஓடிக்கொண்டிருந்த சின்னு படக்கென்று நின்றது. தயக்கத்தோடு திரும்பிப் பார்த்தது. அட, ஆமா... புலி இல்லே! ஏம்மா புலி வருதுனு சொன்னே? சின்னு... நீ ஆற்றைத் தாண்டிட்டே! ஹே... ஆமா! நான் ஆற்றைத் தாண்டிட்டேன்! சின்னு ஆச்சரியமான உற்சாகத்தோடு எழுந்து நின்று கத்தியது. பார்த்தியா சின்னு... நான் சொன்னேனே, உன்னால தாண்ட முடியும்னு! உன்னால ஆற்றைத் தாண்ட முடியாதுனு நீயா நினைச்சுப் பயந்ததால, உன்னால ஆற்றைத் தாண்ட முடியலே,...

    ஆனா, உன் உயிருக்கு ஒரு ஆபத்துனு வந்தபோது, உன்னைக் காப்பாத்திக்க முயற்சி பண்ணி, இந்த ஆற்றைச் சுலபமா தாண் டிட்டே... முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால், எதையும் சாதிக்க முடியும்! என்றது அம்மா முயல்.

   என் அன்பு வாசகர்களே,
    தன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வருகிறது என்று தெரிந்தால் அதுவரை இல்லாத தெம்பும் தைரியமும் எப்படியாகிலும் எங்கிருந்தாவது வந்தடையும். அது மாத்திரமல்ல அதுவரை சோம்பேறியாய் இருந்த பலரும் அந்த சமயத்தில் மிகுந்த சுறுசுறுப்புடன் இருப்பார்கள். 

    மேலும் முயற்சி எதுவும் செய்யாமல் "என்னால் முடியாது" என்று பதிலளித்து விட்டு அவ்விடம் விட்டு செல்வர். முயற்சி செய்தால் நிச்சயம் முடியும் ஆனால் சோம்பல் காரணம் எதையும் செய்யாமல் தட்டிக் கழித்து விடுவார்கள்.

இவர்களை குறித்து சாலெமோன் ஞானி இவ்வாறு மொழிகிறார்
நீதிமொழிகள் 26:    13
    வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.


    நான் எங்கு சென்றாலும் அங்கு சிங்கம் இருக்கிறது, அது என்னை பீறிப்போடும் என்று சொல்லி தனக்கான காரியத்தை தட்டிக் கழித்துக்கொண்டே இருப்பர்.

To get daily story and prayer requests contact +918148663456

    வேதாகமத்தில் ஆபேலை கொலை செய்த காயீன் தேவன் அவனிடத்தில் விசாரித்த போது இல்லை என்று மறுத்தாலும் தன் ஜீவனுக்கு கேடு வரும் என்று உணர்ந்த சமயத்தில் தேவ பாதத்தை பற்றிக்கொண்டு அவரிடத்தில் மன்றாடினான். எனவே தேவன் காயீனை கொல்பவன்மீது எழுப்பி சுடரும் என்று உறுதியளித்தார். 

    எனவே அன்பானவர்களே, நாம் நமது தேவைக்காகவோ, இக்கட்டான சூழ்நிலையிலோ மாத்திரம் தேவ சமூகத்திற்கு செல்லாமல் தேவனை எப்போதும் நமது பங்கும், நமது சுதந்திரமுமாய் நம் வாழ்க்கையில் வைத்துக்கொள்ளும்போது நமது சுதந்திரமாகிய நமது பிள்ளைகளையும், சம்பத்தையும் பாதுகாத்து அனுதினமும் வழிநடத்துவார்.

சங்கீதம் 16: 5
    கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர், என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். 
Today Bible Question in Tamil



-x-x-x-x-xx-x-xx-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

தினம்------ஓர் குட்டிக் கதை 

==================
இலைசாப்பாடுஅறிவியல்
==================

    ஐயா, சாப்பிட வாங்க...என மாணவர்கள் ஆசிரியரை அழைத்தனர். என்னடா, இன்னிக்கு விசேஷம்? என்றவாறே தனது அறைக்குள் மதிய உணவு உண்பதற்கு உள்ளே நுழைந்தார் ஆசிரியர். 

    அப்பொழுது ஓர் மாணவன் இலையை மாத்திப் போடவே அதனைக் கண்ட ஆசிரியர், இலையை இப்படி போடக்கூடாது என வசதியாக இலையை போட்டு கொண்டார்.  

    ஐயா,  நான் இலை போட்ட முறை தப்பா ? எப்படி போட்டால் என்ன ஐயா... இலையில் தானே சாப்பாடு போடப் போறேன் என்றான் மாணவன். இதற்கு ஏதாவது சடங்கு,  சம்பிரதாயம் இருக்கா ஐயா?.. 

    சடங்கெல்லாம் ஒன்றும் கிடையாது..ஆனால், ஒரு அறிவியல் உண்மை இருக்கிறது என்று கூறியவாறே வாழையிலையில் நீர் தெளித்து இலையை நன்கு சுத்தப்படுத்தினார். 

    ஐயா தண்ணீரில் கழுவியது தான் என்றான் மாணவன். 

    நாம் இலையில் தண்ணீர் விட்டாலே கழுவியதாகட எண்ணக்கூடாது...அதில் படிந்திருக்கும் தூசும் சரி , பறவைகளின் எச்சமும் சரி எளிதில் நீங்காது. எப்பொழுது இலையை போட்டாலும் தண்ணீர் வைத்த பிறகு விருந்தினர் அமர்ந்து இலையை கழுவிய  பிறகுதான் உணவு பரிமாற வேண்டும். இதனால் விருந்தினர் திருப்தியாக உண்பார்கள் உணவு வீணாகாது,. சரியா.. ? அது சரி ஐயா , இலையை ஏன் மாத்திப் போட்டுக்கிட்டிங்க ? சொல்றேன். நுனி இலை இடது பக்கமும் , வலது பக்கம் அடி இலை இருக்க வேண்டும். சாப்பிடும் பகுதி இலை அகலமாக இருப்பது மட்டுமல்லாமல் முற்றி இருப்பதால் சூடாக சோறு வைத்தாலும் வெந்து போகாது. நம் எதிர் பகுதியில் பதார்த்தஙகளை வைக்க வேண்டும். சாப்பிடுவதற்கு வலது கை உபயோகிப்பதால் எளிதில்  சாப்பிட ஏதுவாக இருக்கும் என்றார். கொழுந்து இலையில் சூடாக சாப்பாடு வைத்தால் இலையானது வெந்து உணவோடு சாப்பிட நேரும் என்றார் ஆசிரியர்.  ஐயா, சாப்பாடு வைக்கட்டுங்களா..  இனிப்பை முதலில் வை என்றார் ஆசிரியர். 

ஏன் ஐயா..? 

    விருந்தின் போது முதலில் இனிப்பைச் சாப்பிடுவதால் நம் வாயிலிருந்து உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீர் தான் நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாக உதவும்.  சாப்பிடுவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் நீர் அருந்த வேண்டும். சாப்பிட்டு முடித்து சுமார்15 நிமிடத்திற்கு பிறகு தான் நீர் அருந்த வேண்டும். இடையில் நீர் அருந்தக்கூடாது. அவ்வாறு அருந்தினால் உமிழ்நீர் சுரப்பது நின்று வயிற்று கோளாறு ஏற்படும்.  

சரிங்க ஐயா ரசம் போடட்டுமா ? என்றான் மாணவன். 

    பொறு..முதலில் சாம்பார் ,அடுத்து குழம்பு, ரசம் போட்டு ,  பாயாசம் பரிமாறிய பிறகு மோர் போட்டு சாப்பிட வேண்டும்.  'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்'
 முன் உண்ட உணவு செரித்த பின்னரே மீண்டும் உண்ணும் பழக்கமுடையோருக்கு வாழ்நாளில் மருந்து உண்ண வேண்டிய அலசியம் இராது என வள்ளுவப் பெருமான் கூறுகிறார்.
 
திட உணவு அரை வயிறும், திரவ உணவான நீர், பால், மோர் கால வயிறும், மீதம் கால் வயிறு காலியாகவும் இருக்க வேண்டும். காலை வேளையில் அரசனை போலவும், மதியம் வீரன் போலவும், இரவில் ஏழை போல அளவோடு உண்ண வேண்டும் என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர் என்றார் ஆசிரியர்.  விருந்தோம்பலில் இவ்வளவு விஷயமிருக்கா ஐயா என்றான் மாணவன்.  

    இன்னும் இருக்கு. சரியாக உணவு உண்ணாமல் போனால் குடற்புண் ஏற்பட வாய்ப்புண்டு. உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உற்பத்தியாகி உடலை விட்டு வெளியேறாமல் தொந்தி விழ காரணமாகிறது. நமக்கு ஆரோக்கியம் குன்ற இதுவும் ஒரு காரணமாகும்.  விருந்தின் போது ஆறு சுவையான வகையில் பரிமாறப்பட வேண்டும். விருந்தில் பரிமாறப்படும் உணவில் இருக்கிற கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை என ஒதுக்காமல சாப்பிட வேண்டும். ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம், பூண்டு எதையும் ஒதுக்காமல் உணவோடு சேர்த்து நொறுங்க தின்றால் நூறு ஆண்டுகள் வாழலாம் என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். விருந்து முடிந்த பின் இலையை நல் விருந்து என்றால் நம் பக்கமாக மூட வேண்டும். கெட்ட காரிய விருந்து என்றால் , வேண்டாமென்பது போல எதிர்புறமாக மூட வேண்டும். இது குறிப்பால் உணர்த்தும் முறை. நம் முன்னோர்கள் வகுத்த வழி. 

அருமை ஐயா...இதுதானா இன்னும் இருக்கா ஐயா  . .

    அவசரப்படாதே..விருந்தை தரையில் சம்மணமிட்டு அமர்ந்து உண்ண வேண்டும்.  பூமியின் ஈர்ப்பு சக்தியால் காலை மடக்கி சம்மணமிட்டு சுக ஆசனத்தில் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். விருந்துக்கு பிறகு , தாம்பூலம் தரிப்பார்கள்.  

தாம்பூலம்னா  என்ன ஐயா? 

    அதுவா வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்ந்தது தான் தாம்பூலம். இது ஜீரணமாவதற்கு அருமையான மருத்துவம்.  பாக்கில் கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தையும், வெற்றிலையில் உள்ள காம்பை நீக்கிட அதிலுள்ள உரைப்பு கபத்தையும், சண்ணாம்பிலுள்ள காரம் வாதத்தையும் போக்கும் தன்மையுடையது. அதனால தான் வெற்றிலைச் செல்வம் என கூறுகின்றனர். புகையிலையை எக்காரணத்தை கொண்டும் சேர்க்க கூடாது , போதுமா? 

    அருமை ஐயா.. நீங்கள் சாப்பிடாமலே விவரமாக சொல்லி விட்டீர்கள்.. இனி நீங்கள் சாப்பிடுங்கள் ஐயா, என்றான் மாணவன். அது சரி ஐயா...வயதானவர்கள் மட்டுமே தாம்பூலம் தரிக்கிறார்கள்...பல பேர் போடுவதில்லை ஐயா...என் போன்றோர் வெற்றிலை பாக்கு போடுவதில்லை ஐயா...

    நல்ல கேள்வி ! இளையோர் ஓடியாடி விளையாடுவதால் எளிதில் செரிக்கும். முதியோர்களால் இயலாத காரணத்தால் தான் தாம்பூலம் தரிக்கிறார்கள்...புரிந்ததா ?

    அருமையோ அருமை ஐயா. பள்ளியில் படிக்கும் பாடத்தை எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் , இது போன்ற சமூக அனுபவங்களின் பாடத்தை  உங்களை தவிர வேறு யாரும் சொல்ல முடியாது ஐயா... நன்றி ஐயா..

    விருந்தோம்பல் என்பது மிகப்பெரிய கலை. அதை எவரும் முறையாக பின் பற்றுவதில்லை எனகூறியவாறு பேசாமல் உணவருந்தினார் ஆசிரியர்.!!!!!    


To Get Daily Story in What's app Contact +917904957814                 

என் அன்பு வாசகர்களே,
    விருந்தோம்பல் மாத்திரமல்ல ஒவ்வொரு காரியத்திற்கும் பலவிதமான கருத்துக்கள் மறைந்திருக்கின்றன. விருந்தோம்பலைக் குறித்து சிலர் அறிந்துள்ளனர் பலருக்கு இப்படியெரு வார்த்தை தமிழில் இருப்பதே தெரியாது. 

    அதுபோலவே வேதாகமத்திலும் நாம் அறியாத பல வார்த்தைகள், அந்த வார்த்தைகளுக்கு பலவித அர்த்தங்கள் என மறைந்திருக்கின்றன. அதை நாம் ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே அதனுடைய அர்த்தங்களை விளங்கிக்கொள்ள முடியும்.

வேதம் சொல்கிறது,
யோவான் 5: 39
    வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
    ஒரே வார்த்தையை பல தேவ மனிதர்கள் பலவிதமாய் வியாக்கியானம் செய்வதுண்டு. காரணம் ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு முறையில் ஆராயும்போது ஒவ்வொரு வெளிப்பாடு உண்டாகும். அதுபோல நாமும் நமக்கு தேவன் கொடுத்த அறிவை பயன்படுத்தி நம்முடைய பாணியில் நாம் ஆராயும்போது நமக்கும் தேவன் வேறுவிதமான வெளிப்பாடுகளை தேவன் கொடுப்பார்.

    எனவே அனுதினமும் வேதத்தை ஆராய்ந்து புதிய புதிய வெளிப்பாடுகளை பெறுவோம், அநேகருக்கு ஆசீர்வாதமாய் வாழ்வோம்.



-z-z-z-z-z-z-z-z-z-z-z-z-z-z-z--z-z-z-z-z-z-z-z-z-z-z-z-z-z-z--z-z-z-z-z-z-z-zz

தினம்------ஓர் குட்டிக் கதை 

==================
தயக்கம்
==================

    நம்மில் பெரும்பாலானவர்களிடம் இருந்து களையப்படவேண்டிய குணம் தயக்கமே ஆகும். தயக்கம் என்பதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட முடியாது. தயக்கங்களின் காரணமாக பல நிகழ்வுகள் அரங்கேறாமலேயே போயிருக்கின்றன.

    வாழ்கையில் பல முன்னேற்றங்களையும், புதிய திருப்பங்களையும் இந்த தயக்கம் என்ற ஒரே பதம் இல்லாமல் செய்துவிடுகின்றது.உலகில் வெற்றியாளர்களில் 100 வீதம் பேர், ஏதோ ஒருகட்டத்தில் அவர்களின் முன்னாலே தோன்றிய தயக்கங்களை தகர்த்துதெறிந்துவிட்டு முன்வந்தவர்களாகவே இருப்பார்கள்.  தயக்கம் என்பது, ஒரு விதமான அச்ச உணர்வே, ஏன் வீணாக இதற்கு முயற்சி செய்யவேண்டும? இப்போது வேண்டாம், முதலில் யாராவது முயற்சிக்கட்டும் பிறகு நான் பார்க்கலாம், எனக்கேன் இந்த தேவையில்லாதவேலை!, என்பவை போன்ற சிந்தனைகள்தான் தயக்கத்தின் தூதுவர்கள், முக்கியமாக தன்னம்பிக்கை இன்மையே இந்த தயக்கங்களையும் அதன் தூதுவர்களையும் மனிதர்களின் மனங்களினுள் அழைத்துவந்து மனிதர்களை முழுச்சோம்பேறி ஆக்கிவிடுகின்றது.

    ஒருவனின் சுய முன்னேறத்தில் ஏராளமான காரணங்களை தோரணங்களாகக்கட்டி தயக்கம் திருவிழா கொண்டாடுகின்றது, தன்னம்பிக்கையோ இந்த திருவிருவிழாவில் தொலைந்துவிட்ட குழந்தையின் மனோநிலையினைப்போல பரிதவிக்கின்றது. உலகின் வெற்றியாளர்கள் பலரின் வாழ்கைக்குறிப்புக்களை எடுத்துப்பாருங்கள், அவர்கள் சில நடவடிக்கைகளை தமது வாழ்க்கையில் எடுப்பதற்கு தயங்கியது கிடையாது என்பது தெரியவரும்.

    சீனாவின் பிரபல தொழிலதிபரும், அந்த நாட்டின் முக்கிய பணக்காரர்களில் ஒருவருமான ஹ_கான் ஸியாங் தெரிவிக்கும் கருத்தினை பாருங்கள், “ ஆரம்பகாலத்தில் நான் பல தொழில்ரீதியான சரிவுகளை கண்டேன், சொல்லப்போனால் அதற்குரிய காரணங்களை கண்டறியவே நான் தயங்கியவனாகவே இருந்தேன். இறுதியில்தான் தயக்கமே என் தொழில் எதிரி என்பதை தெரிந்துகொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

    நம்மில் பலருக்கு தொழிலில் மட்டுமின்றி பழக்கவழங்கங்களிலேயே தயக்கங்கள் உண்டு. குறிப்பாக சிலரை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு மற்றவர்களிடம் சகஜமாகப்பழகவே தயக்கமாக இருக்கும், இன்னும் சிலருக்கு தம்மிடம் பல திறமைகள் இருந்தும் அதை வெளிக்காட்டத் தயக்கம் இருக்கும், வேறு சிலருக்கு சந்தர்ப்பங்கள் தானே அமைந்தாலும் கூட, அந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தவே தயக்கமாக இருந்து அந்த சந்தர்ப்பங்களை மட்டும் இன்றி வாழ்கையினையே தொலைத்த சம்பவங்கள் பலவற்றை நாம் காணலாம்.

    நிகழ்காலத்தில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை தயக்கங்களால் கைவிட்டுவிட்டால், எதிர்காலத்தில் அதை எண்ணி வேதனையடைய வேண்டிய நிலை கண்டிப்பாக ஏற்படும்.முக்கியமான ஒன்றை கவனித்துக் பாருங்கள், உங்களிடம் அதீத திறமைகள் இருக்கும், ஆற்றல்கள் இருக்கும், ஆனால் உங்களைவிட அறிவிலும், திறமையிலும் குறைந்தவர்கள், உங்கள் துறையில் வின்னர்களாக இருப்பார்கள்!, அதேபோல நீங்கள் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பங்களை பெற்று அவர்கள் முன்னேறி இருப்பார்கள். காரணம், நீங்கள் தயங்கியதும், பின்நின்றதுமே ஆகும். அது மட்டுமின்றி உங்களைவிட திறமை குறைந்த அவர்களே இவ்வாறு முன்னேற முடியுமென்றால் அந்த சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்திருந்தால், சும்மா பிரட்டிப்போட்டிருக்கமாட்டீர்களா?

    தயக்கம் கூடாது என்பதற்காக ஆராயமல் ஒரு செயலில் தணிந்து இறங்குவது என்று பொருள் கொள்ளவும் கூடாது. சரி…தயக்கங்களை எவ்வாறு களைவது? ஒரு மழைநாளில் நனைந்துகொண்டு வீதியில் செல்லவேணடும் என உங்களுக்கு ஒரு ஆசை இருக்கலாம்! ஆனால் தயக்கம் இருக்கும்…விட்டுவிடுங்கள் தயக்கத்தை மழைவந்தவுடன் வீதிக்கு இறங்கி நடை போடுங்கள், இப்படி அன்றாடம் உங்கள் சின்னச்சின்ன ஆசைகளுக்கு (விபரீதம் இல்லாத ஆசைகள் மட்டும்) எற்படும் தயங்கங்களை தகர்க்க ஆரம்பியுங்கள். 

    உங்களை நாளுக்குநாள் புதுப்பித்துக்கொள்ளுங்கள், கண்ணாடிக்கு முன் நின்று, உங்கள் பிம்பத்தை பார்த்து கட்டளை இடுங்கள், நீ சாதிக்கப்பிறந்தவன் என்று அறிவுறுத்துங்கள், உங்கள் துறைகளில், உங்கள் திறமைகளை மேலும் மேலும் மெருகூட்டி வையுங்கள், உங்கள் திறமைகளை கால ஓட்டத்திற்கு தக்கவாறு மெருகேற்றுங்கள், அவற்றை வெளிக்காட்ட சந்தர்ப்பங்கள் கிட்டும்போது தைரியமாக எழுந்து நில்லுங்கள், இருக்கும் மட்டும்தான் புல்லும் மலைபோல தோன்றும், எழுந்து விட்டால் மலையும் புல்தான்.

To Get Daily Story in what's App Contact +917904957814

என் அன்பு வாசகர்களே,
    தயக்கம் அல்லது கூச்சம் உள்ள மனிதன் எந்த துறையிலிருந்தாலும் அவனால் வெற்றியை அனுபவிக்க முடியாது. 
    
    வேதாகமத்தில் ராஜாத்தியாகிய எஸ்தர் ராஜாவினிடத்தில் போய் தன் ஜனங்களுக்காக மன்றாட தயக்கம் காட்டினபோது மொர்தேகாய் இவ்வாறு சொல்கிறார்,

எஸ்தர் 4:13, 14
    13. மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக் கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.
    14. நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால் யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.

    இறுதியில் தான் தயங்கின காரியத்தில் தைரியமாய் செயல்பட முற்பட்ட போது எல்லாம் அனுகூலமாய் முடிந்தது. தன் ஜனங்கள் முழுவதையும் மரணத்திலிருந்து தப்புவித்தாள். அதுவரை பயந்து நடுங்கின காரியம் இலகுவாய் முடிந்தது.

    அதுபோலத்தான் எந்தவொரு காரியத்தையும் செய்யும்வரை‌ கடினமாக இருக்கும் அதுவே செய்து முடித்தபின் இவ்வளவு தானா என்று தோன்றும். எனவே எந்த காரியத்திலும் தயக்கம் இல்லாமல் அதாவது நல்ல காரியங்களுக்கு மட்டும் தயக்கம் இல்லாமல் திடமனதோடு நாம் முயற்சி செய்வோம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

யோசுவா 1: 9
    நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.