வேதவசனங்களை மற்றவர்களுக்கு போதிக்கிறதுதான் ஆவியினாலே தீர்க்கதரிசனம் உரைத்தல் என்று சொல்லுகிறது சரியா?
✍️ "தீர்க்கதரிசனம் உரைத்தல்" என்று 1கொரிந்தியர் 12:10ல் சொல்லப்பட்டுள்ள வரத்திற்கும், வேதவசனங்களை போதிக்கிறதற்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறேன்.
*"அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு.* பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் *இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்"* என்று பேதுரு சொல்லுகிறதைக் வைத்து (2 பேதுரு 1:19), வேதவசனமே அதிக உறுதியான தீர்க்கதரிசனம் என்றும், வேதவசனத்தை பிரசங்கிப்பதே தீர்க்கதரிசனம் உரைத்தல் என்றும் கிறிஸ்தவரில் ஒரு பிரிவினர் நினைக்கின்றனர்.
*"வேதத்திலுள்ள எந்தத் தீர்கதரிசனமும்* சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. *தீர்க்கதரிசனமானது* ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. *தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்"* என்று பேதுரு சொல்லுகிறதை கவனியுங்கள். (2பேதுரு 1:20,21)
இங்கு பேதுரு முழு வேதத்தை அல்ல, வேதத்திலுள்ள தீர்க்கதரிசனங்களைப் பற்றியே பேசுகிறார்.
குறிப்பாக அவர் இயேசுகிறிஸ்துவையும், அவரால் மனுகுலத்திற்கு உண்டாகும் மீட்பையும் பற்றி (2பேதுரு 1:1-18) வேதாகமத்தில் காணப்படுகிற தீர்க்கதரிசனங்களையே "அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனம்" என்று குறிப்பிடுகிறார் என்பதை அறியவேண்டும்.
இயேசுகிறிஸ்துவைப்பற்றி உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களை மற்றவருக்கு போதிக்கிறதுதான் தீர்க்கதரிசனம் உரைத்தல் என்றால், தீர்க்கதரிசனம் உரைக்கும் வரம் இல்லாத ஊழியரோ, விசுவாசிகளோ வேதாகமத்திலுள்ள இயேசுகிறிஸ்துவைப்பற்றிய தீர்க்கதரிசனங்களை பிறருக்கு விளக்கிக் காண்பிக்கமுடியாதே!
இயேசுகிறிஸ்துவைப்பற்றி பழைய ஏற்பாட்டில் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களை புதிய ஏற்பாட்டு சபையாருக்கும், சபைக்கு வெளியே உள்ளவர்களுக்கும் விளக்கிக் காண்பித்த அனைத்து அப்போஸ்தலரும், ஆதிசபை விசுவாசிகள் அனைவரும் தீர்க்கதரிசனம் உரைக்கும் வரத்தைப் பெற்றிருந்தார்களா?
தீர்க்கதரிசனம் உரைக்கும் வரத்தைப் பெறாத ஊழியரும் விசுவாசிகளும் இயேசுகிறிஸ்துவைப்பற்றி வேதாகமத்தில் காணப்படுகிற தீர்க்கதரிசனங்களை பற்றி பிறருடன் பேசமுடியாதா?
மேலும், வேதவசனங்களை மற்றவருக்கு போதிக்கிறதுதான் தீர்க்கதரிசனம் உரைத்தல் என்றால், பரிசுத்த ஆவியையும், ஆவியின் மற்ற வரங்களையும் பெற்றிருந்தும், தீர்க்கதரிசனம் உரைக்கும் வரத்தை பெறாத ஊழியரும் விசுவாசிகளும் வேதவசனங்களை மற்றவருக்கு போதிக்கமுடியாதா? அல்லது போதிக்கக்கூடாதா?
மேலும், இயேசுகிறிஸ்துவையும், அவரால் நமக்கு உண்டாகும் மீட்பையும் குறித்து *ஏற்கனவே உரைக்கப்பட்டிருக்கிற* அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனங்களை ஒருவர் பிறருக்கு எடுத்துசொல்லுகிறது எப்படி தீர்க்கதரிசனம் உரைப்பதாகும்?
முழுமையான வேதம் நமக்கு கிடைத்துவிட்டதால் தீர்க்கதரிசன வரம் ஒழிந்துபோய்விட்டது என்றும், அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமான வேதத்தை போதிக்கிறதே இப்பொழுது தீர்க்கதரிசனம் உரைப்பதாகும் என்றும் ஒரு பிரிவினர் நினைக்கின்றனர்.
இதற்கு இவர்கள், *"தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம்"* என்று பவுல் சொல்லுகிறதை ஆதாரமாகக் காண்பிக்கிறார்கள். (1கொரி.13:8),
அவர்களின் கூற்றுப்படியே தீர்க்கதரிசனம் உரைக்கும் வரம் ஒழிந்துபோய்விட்டதென்றால், ஒருவர் இனி எப்படி தீர்க்கதரிசனம் உரைக்கமுடியும்?
மேலும், வேதவசனங்களை போதிக்கிறதை
"தீர்க்கதரிசனம் உறைத்தல்" என்று பவுல் குறிப்பிட்டிருக்கமுடியாது. (1கொரி.12:10) *"நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது (முழுமையானது அல்ல)"* என்கிறார் அவர். (1கொரி.13:9)
பரிசுத்த வேதாகமம் முழுமையானது என்றால், "தீர்க்கதரிசனம் உரைத்தல்" என்பது வேதவசனங்களை பிரசங்கிப்பதாகாது. ஏனெனில், தீர்க்கதரிசனம் உரைப்பது முழுமையானது அல்ல.
எதிர்காலத்தை குறித்த எல்லா வெளிப்பாடும் தீர்க்கதரிசனம் உரைக்கிறவர்களுக்கு முழுமையாக கிடைத்துவிடுகிறதில்லை.
*"இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம்,* அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். *இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன்,* அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்" என்று பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது. (1கொரிந்.13:12)
தீர்க்கதரிசனம் உரைக்கும் வரத்தின் மூலம் எதிர்காலக் காரியங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளமுடியாது என்பதையே அவர் இங்கு குறிப்பிடுகிறார்.
இந்த வாழ்க்கையில் நாம் அனைத்தையும் முழுமையாக புரிந்துகொள்ளமுடியாது. இப்போது நாம் ஒரு மங்கலான கண்ணாடியில் பார்ப்பதுபோல் விஷயங்களைப் பார்க்கிறோம். இப்போது நமக்கு சில விஷயங்கள் தெரியும், நாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்று தேவன் விரும்புகிற பகுதியை மட்டும் இப்பொழுது அவர் தீர்க்கதரிசனத்தின்மூலம் நமக்கு தெறிவிக்கிறார்.
நாம் பரலோகத்திற்குள் பிரவேசித்தப் பிறகு எல்லாவற்றையும் தெளிவாகப் புரிந்துகொள்வோம். அப்பொழுது நாம் எல்லாவற்றையும் உள்ளபடியே தெளிவாகப் பார்ப்போம். தேவன் நம்மை முழுவதுமாக அறிந்திருப்பது போல, நாம் அனைத்தையும் முழுமையாக அறிவோம்.
*மறைவானவைகள்* நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள், *வெளிப்படுத்தப்பட்டவைகளோ,* இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்
உபாக.29:29
தேவன் சில விஷயங்களை நமக்கு வெளிப்படுத்தாமல் ரகசியமாக வைத்திருக்கிறார். ஆனால், நாமும் நம் சந்ததியும் என்றென்றும் கீழ்ப்படியும்படிக்கு, அவர் தம்முடைய கட்டளைகளை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
தேவனுடைய இருதயத்தலுள்ள எல்லாவற்றையும் தீர்க்கதரிசிகள் வெளிப்படுத்திவிடவில்லை. அப்படியே நமது எதிர்காலத்தை குறித்தும், பரலோகத்தை குறித்தும் நாம் போதுமான வெளிப்பாட்டை பெற்றிருக்கிறோமேயல்லாமல், முழுமையான வெளிப்பாட்டை பெற்றுவிடவில்லை.
வெளிப்படுத்தின விசேஷத்தை நமக்கு பெற்றுகொடுத்த யோவான், "பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், *இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை.* ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்" என்று சொல்லுகிறதை கவனிக்கவும்.
(1யோவான் 3:2)
பரலோகத்தை பற்றி நமக்கு நிழலாட்டமான வெளிப்பாடு கொடுக்கப்பட்டுள்ளதேயல்லாமல் (வெளிப்.1:3; 22:7), பரலோகம் இருக்கிறவண்ணமாகவே முழுவதும் தெளிவாகக் காண்பிக்கப்படவில்லை.
"மேலும் காணப்படுகிறவைகளையல்ல, *காணப்படாதவைகைள* நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், *காணப்படாதவைகளோ* நித்தியமானவைகள்" என்று பவுல் சொல்லுகிறதை கவனிக்கவும். (2கொரி.4:17,18)
நாம் காணாத எத்தனையோ காரியங்கள் பரலோகத்தில் இருக்கின்றன, அல்லது பரலோகத்திலுள்ள அநேகக் காரியங்களை நாம் இன்னும் காணவில்லை என்கிறார் பவுல்.
*"நாம் தரிசித்து நடவாமல்,* விசுவாசித்து நடக்கிறோம்" என்று அவர் சொல்லுகிறதும் கவனிக்கத்தக்கது. (2கொரி.5:6)
நமக்கு மறுமையில் உண்டாகும் அனுபவம் அனைத்தையும் (2கொரி.5:1-6) நாம் கண்ணாரக் கண்டு, நாம் பரலோகத்தை நோக்கி பயணிக்கவில்லை. வேதாகமத்தின் வழியாய் கேள்விப்படும் அந்ந அனுபவங்களை (1கொரி.15:35-57) விசுவாசித்து நாம் பயணிக்கிறோம்.
ஆகிலும், பரலோக வாழ்வுக்கு தகுதியடையும்படிக்கு நாம் அறிந்துகொள்வதற்கும், கைகொள்வதற்கும் போதுமான காரியங்களை பரிசுத்த வேதாகமம் வழியாக தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார் என்பதை நாம் அறியவேண்டும்
ஆகிலும், எழுதப்பட்ட அல்லது உரைக்கப்பட்ட வேதவசனங்களை மற்றவருக்கு போதிக்கிறதும், ஆவியின் வரத்தின் அடிப்படையில் தீர்க்கதரிசனம் உரைக்கிறதும் ஒன்றல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
Thanks for using my website. Post your comments on this