முழு வேதாகமம் கொடுக்கப்படும் காலம்வரை, இயேசுகிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டை கொடுப்பதற்காக சபையாருக்கு தீர்க்கதரிசனம் உரைக்கும் வரம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லுகிறது சரியா?*
✍️ முழுமையான வேதாகமத்தை பெறுவதற்காகவே ஆதிசபையாருக்கு தீர்க்கதரிசனம் உரைக்கும் வரம் கொடுக்கப்பட்டதாக சிலர் நினைக்கிறதாகத் தெரிகிறது.
தீர்க்கதரிசனம் உரைக்கும் வரத்தின்மூலம் ஆதிசபையார் சொன்ன காரியங்கள் அனைத்தும் வேதமாக தொகுக்கப்பட்டு நமது கரத்தில் கொடுக்கப்பட்டுள்ளதா?
பவுல் தங்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவியை பெற்று அந்நியபாஷைகளைப் பேசி, எபேசு சீஷர்கள் சொன்ன தீர்க்கதரிசனங்கள் (அப்.19:6), சுவிசேஷகர் பிலிப்புவின் நாலு குமாரத்திகள் சொன்ன
தீர்க்கதரிசனங்கள் (அப்.21:8,9), எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், கொரிந்து சபையில் தீர்க்கதரிசனம் உரைக்கும் வரத்தை பெற்றவர்கள் சொன்ன தீர்க்கதரிசனங்கள் (1கொரி.14:31) என்னவென்று வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை. அல்லது அவர்கள் சொன்ன காரியங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு நமது கரத்தில் வேதமாகக் கொடுக்கப்படவில்லை.
முழுமையான வேதாகமத்தை பெறுவதற்காகவே தீர்க்கதரிசனம் உரைக்கும் வரம் ஆதிசபையாருக்குக் கொடுக்கப்பட்டதென்றால், தீர்க்கதரிசனம் உரைக்கும் வரத்தைப் பெற்ற ஆதிசபையார் உறைத்த காரியங்கள் அனைத்தும் ஏன் வேதாகமமாக தொகுக்கப்படவில்லை?
*"வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது"* (2தீமோ.3:16) என்பதின் சரியான பொருள் என்ன?
வேதவாக்கியங்களெல்லாம் தீர்க்கதரிசனம் உரைக்கும் வரத்தை உடையவர்கள் மூலம் அருளப்பட்டது என்று அர்த்தமா?
தேவஆவியியை பெற்றவர்களின் மனதில் தேவன்
வேதவாக்கியங்களை பதியவைத்தார், அல்லது வேதவாக்கியங்களை எழுதும்படி தேவன் தமது ஆவியை பெற்றவர்களை
ஏவினார் என்று இதற்கு பொருள்.
தீர்க்கதரிசனம் உரைக்கும் வரம் பெற்றவர்கள் மட்டுமா தேவஆவியை பெற்றிருக்கிறார்கள்?
ஆவியின் எந்த வரத்தை உடையவரும், ஆவியின் கனிகொடுக்கிறவரும் தேவஆவியை பெற்றவரே!
இவர்களில் எவருடைய மனதிலும் தேவன்
வேதவாக்கியங்களை பதியவைக்கவும் அல்லது வேதவாக்கியங்களை எழுதும்படி இவர்களில் எவரையும்
ஏவவும் தேவனால் கூடும்.
தீர்க்கதரிசனம் உரைக்கும் வரம்பெற்றவர்களின் மூலம் உரைக்கப்பட்டவைகளும் (1பேதுரு 1:10-12; 2பேதுரு 1:19), தீர்க்கதரிசனம் உரைக்கும் வரத்தை பெறாதவர்களின் மனதில் தேவனால் பதியவைக்கப்பட்டவைகளும் (யோவான் 14:26; 16:13-15; 1கொரி.2:9-13) தொகுக்கப்பட்டே நம்முடைய கரங்களில் பரிசுத்த வேதாகமமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. (எபேசி.2:20)
புதிய ஏற்பாட்டு சபையில் தீர்க்கதரிசனம் உரைக்கும் வரத்தை பெற்றவர்கள் உரைத்த தீர்க்கதரிசனங்கள் சில வேதாகமத்தில் சேர்க்கப்பட்டிருந்தாலும் (அப்.11:27,28; 21:4,10-12), அனைத்துக் காரியங்களும் வேதாகமத்தில் சேர்க்கப்படவில்லை என்பதையும் நாம் அறியவேண்டும்.
ஏனெனில், புதிய ஏற்பாட்டு சபைக்கு கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனம் உரைக்கும் வரமானது, முழுவேதாகமத்தை உருவாக்கும் நோக்கத்திற்காகக் கொடுக்கப்பட்டதல்ல. மாறாக, மனுஷருக்குப்பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசவும் (1கொரி14:3),
அவிசுவாசியை உணர்த்துவிக்கவும், நிதானிக்கவும்,
அவருடைய இருதயத்தின் அந்தரங்கங்களை வெளியரங்கமாக்கவும் (1கொரி.14:24,25),
சபையாரை கற்பிக்கவும், தேறப்பண்ணவும், (1கொரி.14:31); தனிப்பட்ட நபருக்கோ (அப்.21:4,10,11) உலகம் முழுவதுமோ (அப்.11:27,28) எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் காரியங்களை வெளிப்படுத்தவும் கொடுக்கப்பட்டதாகும்!
இப்படியிருக்க, வேதாகமத்தை முழுமையாக்க சபைக்கு தீர்க்கதரிசனம் உரைக்கும் வரம் கொடுக்கப்பட்டது என்றும், முழுமையான வேதம் நமக்கு கொடுக்கப்பட்டுவிட்டதால், தற்பொழுது சபைக்கு தீர்க்கதரிசனம் உரைக்கும் வரம் கொடுக்கப்படுவதில்லை என்றும், வேதாகமத்தை மற்றவருக்கு போதிக்கிறதே தீர்க்கதரிசனம் உரைக்கிறதுதான் என்றும் சொல்லுகிறது சரியல்ல என்பதை நாம் அறியவேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைக்கும் வரம் ஸ்தல சபையின் பக்திவிருத்திக்காக கொடுக்கப்பட்டது. இந்த வரம் இன்றைய சபைகளுக்கும் கொடுக்கப்படுகிறது என்பதில் ஐயமில்லை!!
க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
1கொரிந்தியர் 12:10ல் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் உரைக்கும் வரம் குறித்து நாம் அறியவேண்டியது என்ன?*
✍️ 1கொரிந்தியர் 12:10ஐ சரியாகப் புரிந்துகொள்ளவேண்டுமானால், 12:1 மற்றும் 12:7ஐ சரியாகப் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
*"அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை"* என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள். (1கொரி.12:1)
ஆவியின் வரங்களைப் பற்றி இதுவரை ஒன்றுமே அறியாதவர்களுக்கு பவுல் இப்படி எழுதவில்லை.
யாதொரு வரத்திலும் குறைவில்லாத கொரிந்து சபையாருக்கே அவர் இவ்விதம் எழுதுகிறார். (1கொரி.1:7; .14:12,13,23-32)
அவர்கள் ஆவியின் வரங்களைப்பற்றி அறிந்திருந்தார்கள், வரங்களை பெற்றிருந்தார்கள். ஆனால், சபைக்கு பக்திவிருத்தி உண்டாக்கும் விதத்தில் அவைகளை பயன்படுத்த அறியாதிருந்தார்கள்.
"ஆவியினுடைய அநுக்கிரகம் *அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று* அளிக்கப்பட்டிருக்கிறது" என்று பவுல் சொல்லுகிறதையும் கவனியுங்கள். (1கொரி.12:7)
மேற்காணும் வசனத்தின் சரியான பொருள்: "ஆவியினுடைய அநுக்கிரகம் நாம் ஒருவருக்கொருவர் உதவும்படி அளிக்கப்பட்டிருக்கிறது" அல்லது "ஆவியினுடைய அநுக்கிரகம்
ஒவ்வொரு நபருக்கும் பொது நன்மைக்காக கொடுக்கப்பட்டுள்ளது" அல்லது "ஆவியினுடைய அநுக்கிரகம் அனைவரின் நன்மைக்காக ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது" அல்லது "ஆவியினுடைய அநுக்கிரகம் மற்ற எல்லா விசுவாசிகளுக்கும் நன்மை செய்வதற்காக ஒவ்வொரு விசுவாசிக்கும் அளிக்கப்பட்டுள்ளது" என்பதாகும்.
கொரிந்து சபையரோ சபையிலுள்ள மற்றவர்கள் பக்திவிருத்தியடையும்படி ஆவியின் வரங்களை பயன்படுத்த அறியாதிருந்தார்கள், அல்லது அதில் அக்கறையில்லாதிருந்தார்கள்.
"நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான். ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? *சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது"* என்று பவுல் கொரிந்து சபையாருக்கு ஆலோசனை தருவதை கவனியுங்கள். (1கொரி.14:26)
சங்கீதம் பாடுகிறதானாலும், போதகம்பண்ணுகிறதானாலும், அந்நியபாஷையைப் பேசுகிறதானாலும், இரகசியத்தை வெளிப்படுத்துகிறதானாலும், வியாக்கியானம்பண்ணுகிறதானாலும், சகலமும் சபையின் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படவேண்டும் என்கிறார் அவர்.
"நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், *சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக* அவைகளில் தேறும்படி நாடுங்கள்" என்று அவர் சொல்லுகிறதையும் கவனியுங்கள். (1கொரி.14:12)
அந்நியபாஷையில் பேசுதல், தீர்க்கதரிசனம் உரைத்தல் உட்பட, ஆவியின் வரங்களை சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும்படி நல்லொழுக்கமாயும் கிரமமாயும் பயன்படுத்துகிறதில் தேறுவதற்கான ஆலோசனைகளை தொடர்ந்து கொடுக்கிறார் பவுல்.
(1கொரி.14:12-40)
இது தனது சொந்த கருத்து அல்லவென்றும், கர்த்தருடைய கற்பனையென்றும் அவர் சொல்லுகிறார்.
"ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், *நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று* அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்" என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.
(1கொரி.14:37)
தீர்க்கதரிசனம் உரைத்தலைப்பற்றி அவர் கர்த்தருடைய கற்பனையாக சொல்லுகிறவைகளை காண்போம்.
*"தீர்க்கதரிசிகள்* இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். *அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால்,* முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன். *எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும்,* நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் *தீர்க்கதரிசனஞ்சொல்லலாம்"* என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.
(1கொரி.14:29-31)
சபையில் தீர்க்கதரிசனம் உரைப்பதின் நோக்கம் எல்லாரும் கற்பதும் தேறுவதுமாகும்.
"தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ *மனுஷருக்குப் பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப்* பேசுகிறான்" என்று பவுல் சொல்லுகிறதும் இங்கு கவனிக்கத்தக்கது. (1கொரி.14:3)
*"எல்லாரும், தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில்,* அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், *அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும்* இருப்பான்.
அவனுடைய *இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்.* அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, *தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்"* என்று அவர் சொல்லுகிறது இதற்கு அத்தாட்சியாகும்.
(1கொரி.14:24,25)
ஒவ்வொரு ஸ்தல சபையிலும் மனுஷருக்குப் பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகவும்
(1கொரி.14:3),
எல்லாரும் கற்கவும், தேறவும், சபையில் சிலருக்கு தீர்க்கதரிசனஞ்சொல்லும் வரம் (இன்றும்) அளிக்கப்படுகிறது. (1கொரி.14:31)
ஒவ்வொரு சபையின் சூழலுக்கேற்ப சொல்லப்படும் தீர்க்கதரிசனம் வேறுபடலாம்.
சுவி.பிலிப்புவினுடைய நான்கு குமாரத்திகள் செசரியா சபையில் சொன்ன தீர்க்கதரிசனங்கள் என்னவென்று நமக்கு தெரியவில்லை. அவை அந்த சபையின் சூழலுக்கேற்றவை என்பதால், அவைகளை பதிவுசெய்யாமல் விட்டிருக்கலாம்.
*"நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே* நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, *நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன்* விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்" என்று ரோமாபுரி சபையாருக்கு தீர்க்கதரிசனத்தின் வரையறையை பவுல் கொடுப்பதை கவனியுங்கள். (ரோமர் 12:6)
தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் நியாயப்பிரமாணத்தின் பக்கம் சபையாரை திருப்பும் வகையில் தீர்க்கதரிசனம் சொல்லாமல், புதிய ஏற்பாட்டு சபைக்கான விசுவாசப்பிரமாணத்தில் ஜனங்களை உறுதிபடுத்தும் வகையில் சொல்லவேண்டும் என்று எச்சரிக்கிறார் பவுல்.
*அதிசபைகள் அனைத்தும் ஆவியின் வரங்களை பெற்றவையாக இருந்தன. ஆனால், அனைத்து சபைகளிலும் தீர்க்கதரிசனம் உரைத்தவர்களின் அனைத்து தீர்க்கதரிசனங்களும் தனித்தனி நூல்களாக தொகுக்கப்பட்டு, நமது கைகளில் வேதாகமமாகக் கொடுக்கப்படவில்லை.*
ஆதிஅப்போஸ்தலர் மூலமாக எழுதப்பட்ட நிருபங்களும், கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தலும், பவுலுடன் பயணித்த மருத்துவர் லூக்கா எழுதின சுவிசேஷமும், அப்போஸ்தல நடபடிகளும், பவுல் பேதுரு போன்றோருடன் இருந்த மாற்கு எழுதின சுவிசேஷமும் ஒன்றாக தொகுக்கப்பட்டு, வேதாகமத்தின் ஒருபகுதியான புதிய ஏற்பாடாக நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படியிருக்க, ஆவியின் வரத்தின் அடிப்படையில் உரைக்கப்படுகிற தீர்க்கதரிசனங்கள்: ஆவியினால் ஏவப்பட்டவர்கள் மூலம் எழுதப்பட்டுள்ள வேதவார்த்தைகளுக்கு (2தீமோ.3:16,17) குறிப்பாக, புதிய ஏற்பாட்டு சபைக்கு அப்போஸ்தலர், தீர்க்கதரிகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ள உபதேசங்களுக்கு (எபேசி.2:20; 3:1-7) முரண்பட்டதாக இராதபடிக்கு, தீர்க்கதரிசனம் உரைக்கிறவர்கள் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும்.
ஆவியின் வரங்களால் மட்டுமே சபைக்கு பக்திவிருத்தியுண்டாகிவிடுகிறதில்லை. சபையின் பக்திவிருத்திக்கான முக்கிய ஆதாரம் சத்திய வேதமே! (2தீமோ.3:16,17; தீத்து 1:3,4)
வேதவசனங்களுக்கு முரண்பட்ட தீர்க்கதரிசனங்களை சபையார் கண்டுகொள்ளவேண்டிய அவசியமில்லை.
ஆனால், வேதவசனங்களுக்கு முரண்படாத தீர்க்கதரிசனங்களை அங்கீகரித்துக்கொள்ளவேண்டும்.
வேதவசனங்களில் அதிக பற்றுள்ள கிறிஸ்தவர்கள், தீர்க்கதரிசனம் சொல்லும் வரத்தையுடையவர்கள் சொல்லும் தீர்க்கதரிசனங்களை அற்பமாய் எண்ணுகிறதுண்டு.
*"தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.* எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, *நலமானதைப் பிடித்துக்கொள்ளங்கள்.* பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்" என்று பவுல் சொல்லுகிறதை இவர்கள் கவனிக்கவேண்டும்.
(1தெச.5:20-22)
வேத அடிப்படையிலான தீர்க்கதரிசனங்களை ஏற்றுக்கொள்ளவும், வேத அடிப்படையற்ற தீர்க்கதரிசனங்களை புறக்கணிக்கவும் கிறிஸ்தவர்கள் மனத்தெளிவுள்ளவர்களாய் இருக்கவேண்டியது அவசியம்!!
க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
"தசமபாகம் கொடுக்காதவங்களும், சபைக்கு தாமதமா வரவங்களும் செத்துவிழவேண்டும் என்று ரொம்பநாளா ஜெபிச்சிகிட்டிருக்கேன்" என்று ஒரு ஊழியக்காரர், ஒரு பெரிய சபையில் பிரசங்கிக்கும்போது சொல்லுகிறாரே?*
✍️ இப்படி ஜெபித்த ஒரு ஊழியராவது ஆதிசபையில் காணப்படுகிறார்களா என்று தேடிப்பார்த்தேன். ஒருவரையும் காணவில்லை.
🫵 *தசமபாகம் தாராததினாலா விழுந்து செத்தார்கள்?*
எருசலேம் சபையை சேர்ந்த அனனியாவும் சப்பீராளும் சபையிலுள்ள ஏழை விசுவாசிகளின் தர்மசகாயத்திற்கு கொடுக்கும்படி விற்ற நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்ததினால் விழுந்து செத்தார்களேயல்லாமல், ஊழியக்காரருக்கு கொடுக்கும் தசமபாகத்தை வஞ்சித்ததனால் விழுந்து சாகவில்லை. (அப்.4:34-37; 5:1-10)
மேலும், எருசலேம் சபையில் தசமபாகம் வாங்கும் அல்லது கொடுக்கும் வழக்கம் இருந்ததற்காண ஆதாரம் எதுவும் இல்லை.
ஆதிசபைகளில் தசமபாகம் வாங்கிய ஒரு ஊழியரையும், அல்லது தசமபாகம் கொடுத்த ஒரு விசுவாசியையும் காணமுடியவில்லை.
ஆதிசபையில் ஒரு ஊழியராவது மல்கியா 3:8-10 உள்ள வசனங்களின் அடிப்படையில் தசமபாகம் கொடுக்கவேண்டும் என்று சபைக்கு போதித்த, அல்லது தசமபாகம் கொடாவிட்டால் சாபம் வரும் என்று சபையாரை அச்சுருத்திய வரலாறு இல்லை.
🤔 "தசமபாகம் இல்லாவிட்டால் செத்துவிடுவோம்" என்று அஞ்சுகிற அவிசுவாசமான ஊழியர்களால் அல்லவா, தசமபாகம் கொடாதவர் விழந்து சாகவேண்டும் என்று ஜெபிக்கமுடியும்?
🫵 *பேதுரு நெடுநாளாக ஜெபித்துவந்ததாரா?*
தசமபாகம் கொடாத விசுவாசிகள் விழந்து சாகவேண்டும் என்று பேதுரு நெடுநாளாக ஜெபித்துவந்ததாக வேதாகமத்தில் தகவல் இல்லை.
தசமபாகம் கொடுக்கவேண்டும் என்று ஒருபோதும் பிரசங்கியாத பேதுரு, தசமபாகம் கொடாதவர்கள் விழுந்து சாகவேண்டும் என்று எப்படி ஜெபித்திருப்பார்?
நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியான தேவனிடத்தில் பொய்சொன்னதினால் அனனியா விழுந்து ஜீவனை விட்டானேயல்லாமல், தசமபாகம் கொடாதவர்கள் சாகவேண்டும் என்று பேதுரு நெடுநாள் ஜெபித்துவந்ததினால் அல்ல. (அப்5:3-5)
கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு தன் புருஷனுடன் ஒருமனப்பட்டதினால் சப்பீராள் பேதுருவின் பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாளேயல்லாமல், தசமபாகம் கொடாதவர்கள் சாகவேண்டும் என்று பேதுரு நெடுநாள் ஜெபித்துவந்ததினால் அல்ல. (அப்.5:9,10)
🤔 "தசமபாகம் கொடாதவர் சாகவேண்டும்" என்று ஜெபிக்கிறவர் எப்படி சபையாரில் உண்மையான அன்புள்ள ஒரு ஊழியராக இருக்கமுடியும்?
🫵 *சபைக்கு தாமதமாக வரும் விசுவாசிகள் விழுந்து சாகவேண்டுமா?*
சபைக்கு தாமதமாக வந்தவர் எவராவது விழுந்து செத்ததாக வேதாகமத்தில் எங்காவது காணமுடிகிறதா?
சபைக்கு சிலர் தாமதமாக வருகிறதற்கு சில நியாயமான காரணங்கள் இருக்கலாம். நியாயமானக் காரணங்கள் இல்லாமலும் இருக்கலாம்.
தேவனே அவர்கள்மேல் பொறுமையாக இருக்கும்போது, தேவஊழியர் ஏன் அவர்கள்மேல் இத்தனை வன்மம் கொள்ளவேண்டும்?
சபைக்கு தாமதமாக வருகிற விசுவாசிகள் விழுந்து சாகநேர்ந்தால், பிரசங்கிக்க அழைக்கப்படுகிற இடங்களுக்கு தாமதமாக செல்லும் ஊழியக்காரர்களின் நிலை என்னவாகும்?
சபைக்கு தாமதமாக வருகிற விசுவாசிகள் விழுந்து சாகநேர்ந்தால், ஊழியர் கூடுகைகளுக்கு தாமதமாக வருகிறதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் ஊழியர்களின் நிலை என்னவாகும்?
விசுவாசிகள் சரியான நேரத்திற்கு சபைக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிற பல ஊழியர்கள், தாங்கள் பிரசங்கிக்க அழைக்கப்படுகிற இடங்களுக்கு சரியான நேரத்திற்கு செல்வதில்லையே?
விசுவாசிகள் சரியான நேரத்திற்கு சபைக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிற பல ஊழியர்கள், ஊழியர் கூடுகை அல்லது ஊழியர் கருத்தரங்கிற்கு சரியான நேரத்திற்கு செல்வதில்லையே?
🤔 தாங்கள் 'அல்லேலூயா' என்று சொல்லும்போது, விசுவாசிகள் 'அல்லேலூயா' என்று சொல்லாவிட்டால் மிகவும் கண்டிக்கிற ஊழியர்கள் பலர், ஊழியர் கூடுகைகளில் 'அல்லேலூயா' என்று சொல்ல வாயை திறக்கிறதே இல்லையே!
🫵 *சத்தியமில்லாதவர்கள் எப்படி பெரிய சபைகளில்?*
தசமபாகம் தராதவரும், சபைக்கு சரியான நேரத்திற்கு வராதவரும் விழுந்து சாகவேண்டும் என்று நெடுநாளாக ஜெபித்துவருகிற சத்தியமில்லாத ஊழியர்களுக்கு பெரிய சபைகளின் பிரசங்கப்பீடங்களில் எப்படி எளிதாக இடம் கிடைத்துவிடுகிறது?
சத்தியத்தை சரியாக அறியாதவர்களே இன்று பெரிய ஊழியக்காரர்களாக இருப்பதால், இது சாத்தியமாகிறதா?
சில காரியங்களை சரியாக பேசுகிறதினால், அனைத்து காரியங்களையும் சரியாக அறிந்திருப்பார்கள் என்கிற நம்பிக்கையில் பிரசங்கப்பீடத்தில் ஏற்றப்படுகிறார்களா?
பிரபல ஊழியர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக அவர்களை பிரசங்கப்பீடத்தில் ஏற்றிவிடுகிறார்களா?
பெரிய சபைகளை நடத்துகிற ஊழியக்காரர்களுக்கு அதிகப் பொறுப்பிருக்கிறது.
தவறாக போதித்துவிடாதபடிக்கும், தவறாக போதிக்கிறவர்களை பிரசங்கப்பீடத்தில் ஏற்றிவிடாதபடிக்கும் இவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!
அப்படியே, பிரபல ஊழியர்களுக்கும் பெரிய சபைகளில் பிரசங்கிக்க அழைக்கப்படுகிறவர்களுக்கும் அதிக பொறுப்பிருக்கிறது.
புதிய ஏற்பாட்டு சபைக்கான அப்போஸ்தலர் மற்றும் தீர்க்கதரிசிகளின் அஸ்திபாரமான உபதேசங்களுக்கு (எபேசி.2:20) முரண்பாடானக் காரியங்களை போதியாதபடிக்கு இவர்கள் மிக ஜாக்கிறதையாக இருக்கவேண்டும்!
எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும், மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள். (லூக்கா 12:47,48)
சத்தியமில்லாதவர்களுக்கு பிரசங்கப்பீடங்களை கொடுத்து, சபையாரின் காணிக்கைகளை அவர்களுக்கு வாரிவழங்குகிற சபையின் மேய்ப்பர்கள், பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது, அவருக்கு பதில் சொல்லியாகவேண்டும்!!
*- க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
Thanks for using my website. Post your comments on this