Type Here to Get Search Results !

Thomas Bible Study | பாவ மனிதன் பரிசுத்தமாக வாழ முடியுமா? | அபிகாயில் | Jesus Sam

===================
சஞ்சலம் நிறைந்த மானிட வாழ்வுக்கு பின்னர் பேரின்ப வாழ்வுக்கு ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட அவசியமாகும்
======================
    மனித வாழ்க்கையை மிகவும் துயரம் நிறைந்ததோர் வாழ்க்கையாகும். அவன் இந்த உலகத்தில் வந்து பிறந்தது சஞ்சலங்களை அனுபவிக்க பிறந்திருக்கிறான் என்றார் யோபு பக்தன். "மனுஷன் வருத்தம் அனுபவிக்க பிறந்திருக்கிறான்" (யோபு 5:7) பிரசங்கி அதை குறித்து இப்படி பேசுவார் "அவன் தன் நாட்களெல்லாம் இருளிலே பசித்து மிகவும் சலித்து நோயும் துன்பமும் அடைகிறான்" (பிர 5:17).

    வெளி பார்வைக்கு நல்ல வஸ்திரங்களை உடுத்தி முகத்தில் எப்பொழுதும் சிரிப்பும் மகிழ்ச்சியாய் இருக்கும் மக்களை நாம் பார்த்ததும் பூ உலகிலே இவர்கள்தான் பாக்கியசாலிகள் இவர்களுக்கு உலகத்தில் ஒரு கவலையும் பாரமும் கிடையாது என்று நாம் எண்ணுவோம். ஆனால் அவர்களை தனியே அழைத்து அவர்கள் குடும்ப வாழ்வையும் தனிப்பட்ட வாழ்வின் காரியங்களும் கேட்டுப் பாருங்கள். நமக்கே ஆச்சரியமாக இருக்கும். எப்படி இத்தனை கவலைகளோடு இந்த மக்கள் உலகில் உயிருடன் வாழ முடியும் என்றும் நாம் எண்ணும் அளவிற்கு அவர்களுடைய துயரம் எல்லை தாண்டியதாக இருக்கும்.

    வீட்டில் எல்லா வகையான ஆகாரங்கள் இருந்தபோதிலும் வியாதிகள் காரணமாக அவற்றை உண்ணும் நிலை இழந்த மக்கள் எத்தனை பேரோ உண்டு. ஒரு சமயம் ஒரு ஐஸ்வர்யமுள்ள சகோதரி என்னிடம் "சகோதரரே வீட்டில் நான் சாப்பிடும் உணவு ஒரு நாய் கூட சாப்பிட யோசிக்கும். அப்படிபட்ட உணவை என்னுடைய சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் போன்றவற்றின் நிமித்தம் புசிக்கின்றேன் என்றார்கள்". அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார்கள் அந்த பணக்கார அம்மாவின் வீட்டு உணவை உப்போடும், காரத்தோடும், இனிப்போடும் உண்டு களித்து செல்லுகையில் அந்த அம்மா எந்த ஒரு சுவையுமற்ற வெரும் கோதுமை சோற்றை சாப்பிடுகின்றார்கள். எத்தனை பரிதாப நிலை.

    நம்முடைய வாழ்க்கையைத் தான் எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தை பருவ நாட்கள் துரிதமாக ஓடி மறைந்து வாலிபம் வந்து நிற்கிறது. வாலிபத்தை வைத்து நாம் அழகு கொஞ்சிக் கொண்டிருந்த நாட்களில் தானே ஆண்டுகள் பல ஓடிச் சென்று துயர விருத்தாப்பியம் தன் சுருக்கு விழுந்த முகத்தை மெல்ல காண்பிக்க தொடங்கி விடுகின்றது.

    விருத்தாப்பியம் மிகவும் துயரம் நிறைந்த ஒன்றாகும். விருத்தாப்பிய பெற்றோரை தங்களுடன் வைத்து ஆதரிக்க மனமற்று தள்ளுகின்ற பிள்ளைகளை நாம் உலகத்தில் காண்கின்றோம். அப்படி தங்களுடன் கஷ்டத்துடன் அவர்களை வைத்திருந்தாலும் அந்த பெற்றோருடன் பேசி பழகி, அவர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு கவனித்து அவர்களை அன்பாய் நேசிக்கிறவர்கள் சொற்பம். அவர்களை அற்பமாகவும், நாய்களைப் போலவும் நடத்துகின்ற பிள்ளைகளை நான் பார்த்திருக்கிறேன். எத்தனையோ வயது சென்று போனவர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆதரவும் அரவணைப்பும் இல்லாதபடியால் தங்களின் சாவை தேடி அங்கலாய்ப்பதை நான் கண்டிருக்கிறேன். இதற்கிடையில் அவர்கள் கண் பார்வை இழந்து போனால் அந்த ஏழை பெற்றோர் படும் துயரத்தை மனுஷ வார்த்தைகளால் எழுதி விவரிக்க இயலாது. மருமகளிடத்தில் ஒரு பிடி சோற்றுக்காக நாய்களைப் போல காத்திருக்கும் பெற்றோர்கள் எத்தனை எத்தனை பேர். அந்த ஒரு பிடி சோற்றையும் ஏச்சோடும், வசை மொழி பாடலலோடும் கொடுக்கும் அன்பான மருமக்கள் அநேகர். விருத்தாப்பியருடன் இளம் வயதினர், மற்றும் பொல்லாத சமுதாயம் அதிகமாக பேசுவதில்லை. அவர்களுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்வதில்லை. மானிட சமுதாயத்தின் புறக்கணிக்கப்பட்ட மக்களாக அவர்கள் எண்ணபபடுகின்றார்கள்.

    இப்படி நம்முடைய துயரம் நிறைந்த மானிட வாழ்க்கையுடன் நம்முடைய காரியங்கள் முடிவடையுமானால் இந்த உலகில் நம்மை விட பரிதபிக்கப்பட்டவர்கள் எவருமே இருக்க முடியாது. ஒரு மெய்யான தேவப் பிள்ளையின் பூரண பாக்கிய வாழ்வு பரலோகத்தில் தான் உள்ளது. அந்த தேவபிள்ளை தன்னுடைய பரம தகப்பனாகிய இயேசு அப்பாவின் வீட்டில் தான் மோட்சசானந்த பாக்கியங்கள் யாவற்றையும் யுகாயுகங்களாக அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த உச்சித பட்டணத்தில் இயேசு தகப்பனின் சமூக பிரசன்னத்திலிருந்து அவரால் அருளப்படும் பரம ஈவுகளை அவருடன் பெற்று ஆனந்திக்க நம்முடைய பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.


====================
பாவ மனிதன் பரிசுத்தமாக வாழ முடியுமா?
====================
    ஸ்திரீயீனடத்தில் பிறந்தவன் சுத்தமாய் இருப்பது எப்படி (யோபு 25:4) என்று கர்த்தருடைய வார்த்தை சொல்லும் விதமாக பாவம் நிரம்பிய பூமியிலே மனுஷன் பரிசுத்தமாக வாழ்வது என்பது அத்தனை இலகுவான காரியம் அல்ல. உலகத்தில் நடுவில் வாழ்ந்து கொண்டு ஒரு பரிசுத்தமான ஜீவியத்தை செய்ய முடியாது என்று காரணத்திற்காகதான் பூர்விக பக்தர்கள் மனுஷ சஞ்சாரமற்ற வனாந்தரத்திற்கும், கெபிகளுக்கும், மலைகளுக்கும் ஓடி சென்றனர். அங்கு அவர்கள் ஏகாந்தமான நிலையிலே தேவனோடு சஞ்சரிக்க முயன்றனர். ஆனால் தந்திர சாத்தான் அவர்களை சோதிக்க தன் சேனைகளோடு அங்கு போய் விடுகின்றானே. நமது ஆண்டவரை அவன் அந்த தனித்த வனாந்தரத்தில் தானே சோதித்தான்.

    உண்மைதான் தேவ மக்கள் பரிசுத்தமாக வாழ பிசாசு ஒருபோதும் விடவே மாட்டான். தங்கள் அன்பின் ஆண்டவருக்கு முன்பாக ஒரு பரிசுத்தமான வெற்றியுள்ள ஜீவியம் நடத்த விடாதபடி அவர்களை அலைக்கழிக்கிறான். 10 நாட்கள் பரிசுத்தமாக வாழ்ந்திருந்தால் அந்த 10 நாட்களில் வெற்றி வாழ்வை ஒருநாள் பாவ ஜீவியத்தில் அழித்து நீர்மூலமாக்கி விடுகின்றான். சத்ருவாகிய பிசாசின் இவ்விதமான உடும்பு பிடியில் சிக்கி "நிர்பந்தமான மனிதன் நான், இந்த மரண சரிதத்தினின்று யார் என்னை விடுதலை ஆக்குவார் ? (ரோ 7:24) என்று மக்கள் கதறிக் கொண்டிருக்கிறனர். செல்போனும், டிவியும், சினிமாவும், உள்ளத்தை கறைபடுத்தும் அசுத்தமான புத்தகங்களும், பத்திரிகைகளும் மலிந்து கிடைக்கும் இறுதி காலம் இது. பட்டணத்தின் தெருக்களில் சென்றால் வலது இடது பக்கம் உள்ள சுவர்களை நாம் கண்ணேறிட்டு பார்க்க முடியாது. பஸ்ஸில் பரிசுத்தமான சிந்தியோடு அமர்ந்து பிரயாணம் செய்ய இயலாது. பஸ்ஸில் ஆபாசமான சினிமா பாடல்களை ஒலிபரப்புகின்றனர். Cell phone திறந்தால் அசுத்தமான படங்கள், புத்தகக் கடைகளிலே விற்கப்படும் மாதாந்திர, வாராந்திர பத்திரிகைகளை நாம் வாங்கி வாசிக்க முடியாத அளவு அசுத்தமான படங்கள் இல்லாமல் இருப்பதில்லை. முழு சமுதாயமும் சத்துருவானவனுடைய பிடியில் சிக்கி உள்ளது. "நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் (1 பேது 1:16) என்றார் இயேசு. நாம் செய்ய முடியாத காரியத்தை செய்யும்படி இயேசு சொல்ல மாட்டார். இந்த நிலையில் நாம் பரிசுத்தமாக வாழ்வது எப்படி ?

1) நமது சிந்தனைகள் பரிசுத்தமாக பாதுகாக்கபடல் அவசியம்
    நமது சிந்தனைகள் தேவனுக்கு பிரியமற்ற விதத்தில் அங்கும் இங்கும் தாவிக் குதித்து கொண்டிருக்க நாம் இடம் கொடுக்க கூடாது. ஒழுக்கமற்ற மற்றும் கற்பு நெறியற்ற அசுத்தமான சிந்தனைகள்தான் நம்மை பாவத்தில் தலைகீழாக விழத்தள்ளுகின்றன. அசுத்த சிந்தனை உள்ளத்தில் தோன்றிய அந்தக் கணத்திலேயே அதை கிள்ளி எறிந்து போடல் வேண்டும். மனதிற்குள் அப்படியே அதை வைத்து சிந்திப்பதைப் போல கேடு வேறு எதுவுமே கிடையாது.

    ஆண்டவர் இயேசுவுக்கு எதிராக எழும்பும் எல்லா தீய சிந்தனைகளையும் நீர்முலமாக்கி அவற்றை கீழ்ப்படிய சிறைபடுத்துகிறவர்களாக நாம் காணப்படல் அவசியமாகும் (2கொரி 10:5) ஸ்தோத்தரியாமலிருந்து தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்* (ரோ 1:21) ல் வாசிக்கிறோம். . துதி எப்போதும் நமது உள்ளத்தில் காணப்பட்டால் கெட்ட சிந்தனை வராது.

2) நமது கண் பார்வை பரிசுத்தமாக இருக்க வேண்டும்
    உன் கண் தெளிவாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாய் (பரிசுத்தமாய்) இருக்கும் (மத்தேயு 6:22) என்றார் இயேசு. போத்திபார் மனைவி யோசேப்பின் மேல் கண் போட்டாள் என்று (ஆதியாகமம் 39:7) ல் வாசிக்கிறோம். யோசேப்பு அழகான வாலிபன். கண் போட்டாள் என்பதற்கு அர்த்தம் திரும்ப திரும்ப பார்த்தாள். ஒரு பெண்ணை ஒரு முறை பார்ப்பது தப்ப அல்ல, இரண்டாவது மறுபடியும் பார்க்க தூண்டும் பார்வைதான் பாவம் ஆகும். அதனால்தான் இயேசு "ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரஞ் *செய்தாயிற்று* (மத் 5:28) "உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை பிடுங்கி எறிந்து போடு (மத்தேயு 5:29).

    இந்த உலகில் நாம் ஆண்களோடு/பெண்களோடு பழகாமல் இருக்க முடியாது. அனால் கண்களில், உள்ளத்தில் இச்சையோடு பழக கூடாது. சகோதர/சகோதரிகளாக பழக வேண்டும். சிம்சோனின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று அவன் தன் கண்களை கட்டுப்பாடின்றி அலைய விட்டான்.

3) வேத வசனம் இருதயத்தில் இருந்தால் பாவம் செய்ய மாட்டோம்
(சங்கீதம் 119:11)
    வேத வசனங்களை நாம் மனப்பாடமாக படித்து அவைகளை நமது இருதயத்தில் பொக்கிஷ வைப்பாக வைத்து கொள்ளல் வேண்டும். நாம் படித்த வசனங்களை அடிக்கடி நமது நினைவிற்குக் கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் அந்த தேவ வசனங்கள் ஒருக்காலும் நமது மனதைவிட்டு நீங்கவே நீங்காது. தேவன் அந்த வசனங்களின் மூலமாக அவ்வப்போது நம்மோடு பேசுவார்.

    அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை (சங் 37:31)

    கர்த்தருடைய வார்த்தைகளை எவ்வளவு இருதயத்தில் பதித்து கொள்கிறோமோ அவ்வளவுக்கு ஆசிர்வாதம் நமக்கு உண்டு.

    நான் உமக்கு விரோதமாக பாவம் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன் (சங்கீதம் 119:11)

    இன்று நான் உனக்கு கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்ககடவது (உபா 6:6)


4) தேவ பயம் வேண்டும்
    தேவன் நம்மை காண்கிறார் என்ற தேவ பயம் நமக்கு வேண்டும். பூமி எங்கும் உலாவி நோக்கும் அந்த சர்வ வல்லவரின் கண்களை (2 நாளா 16-9) எந்த ஒரு மனிதனாலும் மூடி மறைக்க இயலாது. வசதி, படிப்பு, உலக நன்மைகள் பெருகும் போது தேவபயம் குறைகிறது. தேவ பயத்தை பிசாசு இருதயத்தில் இருந்து எடுத்து விடுகிறான். ஆரம்பத்தில் தெய்வபயம் உள்ளவர்களாக இருக்கலாம், ஆனால் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர வளர தேவபயம் குறைய கூடாது. கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள் (நீதி 16:6) என்று ஞானி சொன்னது எவ்வளவு உண்மை. நானோ தேவனுக்கு பயத்தினால் இப்படி செய்யவில்லை (நெகேமியா 5:15) நீ நாடோறும் கர்த்தரை பற்றும் பயத்தோடிரு (நீதி 23:17) உனது ஆண்டவருடைய கண்களுக்கு மறைவாக நீ எதையும் செய்ய இயலாது. அவர் உன்னை எப்பொழுதும் சூழ்ந்து இருக்கிறார் (சங் 139-3) என்ற தேவபயத்தோடு உனது இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படு (பிலி 2:12)

5) தேவனை அறிகிற அறிவு வேண்டும்:-
    கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினால் உலகத்தின் அசுத்தங்களுக்கு தப்பினவர்கள் என்று 2 பேதுரு 2:20 ல் வாசிக்கிறோம் தேவ பிள்ளையே உனது சர்வ வல்லவராம் தேவன் எப்படிப்பட்டவர் என்பதை நீ ஒவ்வொரு நாளும் ஆழ்ந்து தியானிப்பாயானால் அந்த தியானம் உன்னை பாவத்தில் இருந்து கட்டாயம் விலக்கி காக்கும்.

6) இருதயத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
    இருதயத்தில் இருந்து புறப்படுவதே மனுஷனை தீட்டுப்படுத்தும் (மாற்கு 7:23)

    எல்லா காவலோடும் உன் இருதயத்தை காத்துக் கொள்ள (நீதி 4:23). இருதயம் குப்பைத் தொட்டியாக இருக்க கூடாது. கண்டதை போட்டு குழப்பி கொண்டு இருக்க கூடாது. நமது இருதயத்தை கறைபடுத்தக் கூடிய பார்வைகள், எண்ணங்கள், சம்பாஷணைகள், பழக்கவழக்கங்கள், mobile ல் பார்க்கும் காரியங்களை குறித்து நாம் சர்வ ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் (சங்கீதம் 51:10) என்று தாவீதை போல அனுதினமும் ஜெபி.

7) சிற்றின்ப பாவ படுகுழியிலிருந்து நம்மை விலக்கிக் காத்துக் கொள்ள தொடர்ச்சியான ஜெபம் நமக்கு தீராத அவசியமாகும்
    ஒவ்வொரு நாளும் திட்டமான ஜெப வேளைகளை ஒதுக்கி வைத்து ஒழுங்கும் கிரமமுமாக நாம் அதை கைக்கொண்டு வந்தால் அத்தனை எளிதாக பாவம் நம்மை மேற்கொள்ள இயலாது. காலை, மத்தியானம், சாய்ங்காலம் முன்று வேளைகளிலும் சங்கிதக்காரர் ஜெபித்ததாக நாம் பார்க்கின்றோம் (சங் 55:17) தானியேல் தினமும் 3 வேளை ஜெபித்த ஜெபம் அவனை சிங்கங்கள் வாயில் இருந்து காப்பாற்றியது.

    "நீங்கள் சோதனைக்குட்படாதபடி விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்" (மத் 26:41) "இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்" (1 தெச 5:17) "எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள்" (லூக் 21:36) "ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்" (1பேது 4:7) "ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்" (ரோ 12:12) என்ற தேவ வார்த்தைகள் எல்லாம் ஒரு உறுப்புகூட விலகாமல் அப்படியே நம்மால் கடைபிடிக்க வேண்டியவைகளாகும்.

    தேவ ஜனமே, சாத்தானுடைய சிற்றின்ப பாவ படுகுழியாம் கண்ணிக்கு நீ தப்பித்துக் கொள்ள வேண்டுமானால் நொறுங்குண்ட இருதயத்தோடு ஒவ்வொரு நாளும் அதிகமான நேரத்தை ஜெபத்தில் செலவு செய்ய கர்த்தர் விரும்புகின்றார். ஜெப வேளை குறைந்து அல்லது ஜெபத்தில் நிர்விசாரம், சோம்பல் தலைதூக்குமானால் சாத்தானுடைய அம்புக்கு நீ சரியான இலக்காவாய்


======================
உம்முடைய வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம் 
சங் 119:97
====================
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு, அவர்களுக்கு இடறலில்லை - சங் 119:165

    18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராட்சத பரிசுத்தவான் ஜியார்ஜ் முல்லர் அவர்கள் கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை 100 தடவைகள் வாசித்து முடித்திருந்தார்.

    "தேவனுடைய வார்த்தைகளோடு நான் வேண்டிய நேரத்தை செலவிடாதபட்சத்தில் அந்த நாளை நஷ்டப்பட்ட ஒரு நாளாகவே நான் துயரத்தோடு கருதுகின்றேன்" என்று அவர் கூறினார். "நான் அநேக காரியங்களை செய்ய வேண்டும். எனக்கு மிகுந்த அலுவல்கள் உண்டு. பலரையும் நான் சந்தித்துப் பேசவேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளை வாசித்து தியானிக்க எனக்கு நேரம் எங்கே?" என்று எனது நண்பர்கள் பலர் அடிக்கடி என்னிடம் சொல்லுவதை நான் துக்கத்தோடு கேட்டிருக்கின்றேன். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனில்:-

    "50 ஆண்டுகளுக்கும் கூடுதலான எனது வாழ் நாட் காலத்தில் ஒரு நாளை கூட நான் தேவனுடைய வார்த்தைகளோடு போதுமான நேரம் செலவிடாமல் கை நழுவ விடவில்லை. ஆண்டுக்கு 30000 கடிதங்கள் உலகத்தின் நானா தேசங்களிலிருந்தும் எனது கரங்களுக்கு வருகின்றன. அவைகளை நான் வாசித்து அவைகளுக்கு நான் பதில் அளிக்க வேண்டும். 10000 (பத்தாயிரம்)அநாதை குழந்தைகளை பசி பட்டினியின்றி போஷித்து பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு இருக்கின்றது. அத்துடன் 1200 விசுவாசிகளைக் கொண்ட ஒரு தேவனுடைய சபைக்கு நான் மேய்ப்பனாக இருந்து அந்த விசுவாச மக்களின் ஆவிக்குரிய ஆகாரத்தை நான் அவர்களுக்கு கொடுத்து அவர்களை ஜீவ பாதையில் வழிநடத்த வேண்டிய பரிசுத்த கடமை எனக்கு இருக்கின்றது. இத்தனை கடினமான அலுவல்களின் மத்தியிலும் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளோடு தினமும் சில மணி நேரங்கள் செலவிட்ட பின்னரே அந்த நாளை நான் ஆரம்பிக்கின்றேன்." (ஜியார்ஜ் முல்லர்)

    வாசிக்கும் அன்பான தேவப்பிள்ளையே, நமது வாழ் நாட்காலம் மிகவும் குறுகியது. அந்த குறுகிய நாட்களை தேவனுடைய வார்த்தைகளை நம்மால் முடிந்தவரை அதிகமாக வாசித்து தியானிக்க, அவைகளை மனப்பாடம் செய்ய விழிப்பாக இருப்போம். இராக்காலங்களில் நமது படுக்கையில் நித்திரை நமது கண்களுக்கு விலகி, சத்துருவாம் பிசாசானவன் பற்பலவிதமான நினைவுகளைக் கொண்டு வந்து நமது இருதயத்தை கலங்கப்பண்ண முயற்சிக்கையில் நாம் மனப்பாடாக படித்து பொக்கிஷ வைப்பாக வைத்திருக்கும் தேவனுடைய வசனங்களை நாம் நமது நினைவுக்கு கொண்டு வந்து அவைகளை நாம் நமது நெஞ்சத்துக்குள்ளே சொல்ல ஆரம்பிப்போமானால் நமது இருதயம் தேவ சமாதானத்தால் நிரம்பும். அன்பின் ஆண்டவருடைய சிலுவைப்பாடுகளைக் குறித்த வேத பகுதிகள், குறிப்பாக ஏசாயா 53 ஆம் அதிகாரம், அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் அடிகளார் தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பட்ட பாடுகள் குறித்த பட்டியல் 2 கொரி 11 : 23 - 33. தேவனுடைய படைப்பின் மாட்சிமையை தனக்கே உரிய பரலோக நடையில் வர்ணித்திருக்கும் சங்கீதக்காரரின் 104 ஆம் சங்கீதம். இன்னும் எத்தனை எத்தனையோ அருமையான வேத பகுதிகளை எல்லாம் நாம் மனப்பாடம் செய்து அவைகளை நாம் நமது இராக்கால இளைப்பாறுதல்களில் நமது நினைவுக்கு கொண்டு வருவோமானால் நிச்சயமாக பேரின்பம் காண்போம். அதற்கான கிருபைகளை தேவன்தாமே உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வாராக.

    காலத்தின் இந்தக் கடைசி நாட்களில் தொலைக்காட்சி மற்றும் Cell phone மூலமாக வெகு திரள் திரளான தேவனுடைய செய்திகளும், உலகச் செய்திகளும் சமுத்திரத்தில் கடல் அலைகள் அடுத்தடுத்து மலைபோல புரண்டு வருவது போல வந்த வண்ணமாக இருக்கின்றன. இணையதளத்தில் முகநூல் FACE BOOK என்ற அமைப்பு கரை காணா சமுத்திரமாக உள்ளது. அவைகளை நாம் வாசிக்கவும், அறிந்து கொள்ளவும் நமது சிறிய வாழ்நாட்காலம் போதாது. இப்படிப்பட்ட அமைப்புகள் வெளியிடும் செய்திகளையும், குறும் படங்களையும் Videos இரவும் பகலும் மாந்தர் பார்த்து பார்த்தே தங்கள் பொன்னான காலங்களை விரயமாக்கிக் நாசமாக்கிக் கொண்டிருக்கின்றனர். நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகளும், கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டியவைகளும் இவைகளில் எவ்வளவோ இருந்தபோதினும் ஒரு மனிதனை பாவப்படுகுழிக்குள் வீழ்த்தி அழிக்கும் கொடிய கண்ணிகளையும் நமது ஆத்தும அழிம்பன் பிசாசானவன் இந்த வலைத்தளங்களுக்குள் மனம்போல அள்ளி வீசியிருக்கின்றான் என்பதை நாம் மறக்கலாகாது. அது உங்களுக்குத் தெரியாததல்ல.

    தேவன் நமக்கு ஈவாக கொடுத்த நமது சிறிய ஆயுட்காலத்தை அவரோடு சஞ்சரிப்பதிலும், அவருடைய மாட்சிமையான வேதாகமத்தை வாசித்து தியானிப்பதிலும், அவைகளை மனப்பாடம் செய்வதிலும் மிகுந்த விழிப்போடு செலவிடுவோம். "தேவனோடு செலவிட்ட நேரமே, சிறப்பாக செலவிடப்பட்ட நேரம்" Time spent with God, time well spent என்று ஒரு தேவ பக்தன் கூறினார். எத்தனை உண்மையும், சத்தியமான வார்த்தைகள்!

    மற்ற உலக மக்களைப்போல உலக மாயைகளுக்கு நமது வாழ்நாட் காலத்தை கையளித்து பகல் முழுவதும் தொலைக்காட்சிகள், செய்தி தாட்கள் வாசித்து முடித்து, இனஜனத்தார், நண்பர்கள், அண்டை அயலகத்தாருடன் உலகக் கதைகள் பேசி இறுதியில் நஷ்டப்பட்டவர்களாக நமது மாட்சிமையான வாழ்நாட்காலத்தை ஓடி முடிக்காமல் இந்த கிருபையின் நாட்களில் நமது இரட்சண்ய கன்மலையை அண்டிக்கொள்வோம். நமது ஆத்தும நேசருக்கும் நமக்கும் உள்ள நமது பரலோக உறவை துண்டிக்கும் எந்த ஒரு உலக மாயாபுரி சந்தை சரக்கையும் சாமுவேல் தீர்க்கன் ஆகாகை கில்காலிலே தேவனுக்கு முன்பாக துண்டித்துப்போட்டது (1 சாமு 15:33) போல நாமும் துண்டித்துப் போடுவோம். அதற்கான தேவகிருபைகளை தேவன் தாமே நமக்குத் தந்தருள்வாராக. ஆமென்.


====================
உங்களில் அவனவன் தன் தன் சரீர பாண்டத்தை பரிசுத்தமாக காத்துக் கொள்ளகடவன்
(1 தெச 4:5)
===================
    அநேக ஆண்டுகளுக்கு முன் இராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு சிறு பகுதியை வீரமுள்ள இந்து மன்னன் ஆண்டு வந்தான். ஒரு முகமதிய மன்னன் இவனது நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தான். இந்த இந்து மன்னனுக்கு கற்புள்ள ஒரு அழகான மனைவி இருந்தாள். அந்த அழகிய பெண்ணை தனக்கு மனைவியாக கொள்ளும் நோக்கத்திலே அந்த இச்சை நிறைந்த முகமதிய மன்னன் போர் தொடுத்து இருந்ததான். இந்து மன்னன் முகமதிய அரசனை எதிர்த்து கடும் போர் புரிந்து இறுதியில் போர்க்களத்தில் மடிந்து விட்டான்.

    போரில் வெற்றி கிடைத்தவுடன் மகிழ்ச்சியுடன் முகமதிய மன்னன் அரசியை தேடி சென்றான். அரசி இருக்கக்கூடிய அந்தபுரம், பள்ளியறை எங்கும் தேடியும் அந்த அழுகுள்ள அரசியை கண்டு பிடிக்க இயலவில்லை. அப்படியே அவன் தேடி வரும் சமயத்தில் அரண்மனையின் வெளி முற்றம் ஒன்றில் கோரக்காட்சியை கண்டாள். நடந்தது என்ன தெரியுமா தனது கணவன் போர்க்களத்தில் மடிந்து விட்டான் என்று கேள்விபட்ட உடன், நெருப்பு வார்த்து, அதில் குதித்து பிடிசாம்பலாகி விட்டாள் (உடன்கட்டை ஏறுதல்) அந்த உத்தம பத்தினி. இதைக் கண்ட முகமதிய மன்னன் கண் கலங்கி இனி மரண பரியந்தம் பெண் ஆசை கொள்ள மாட்டேன், எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்க மாட்டேன் என்று தீர்மானம் செய்தான். இது கட்டுக்கதையல்ல, உண்மையாய் நடந்த சம்பவம். இராஜஸ்தானில் இன்று வரை உடன்கட்டை ஏறுதல் ஆங்காங்கு நடந்து வருகிறது.

    இந்த நிகழ்ச்சி நமக்கு மாபெரும் சத்தியத்தை சுட்டிக் காட்டுவதை உணர்ந்து கொள்ளலாம். உன்னதபாட்டில் கர்த்தருக்கும் நமக்குள்ள உறவை கணவன் மனைவி உறவாகவே நாம் காண்கிறோம். இயேசுவின் இரத்தத்தால் என்று நாம் கழுவபட்டோமோ அன்று நாம் அவருக்கு சொந்தம். கிரயத்துக்கு கொள்ளபட்டீர்களே ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் ஆவியினாலும் சரிரத்தினாலும் தேவனை மகிமைபடுத்துங்கள் (1 கொரி 6-20)

    ஒரு ஆண்டவருடைய பிள்ளை இரயிலில் ஒரு சமயம் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். அவருக்கு அருகில் பிரயாணம் செய்த சிலர் நேரத்தை போக்குவதற்காக சீட்டு விளையாட தொடங்கினார்கள். விளையாட்டுக்கு ஒரு ஆள் குறைந்தபடியால் மேற்கண்ட ஆண்டவருடைய பிள்ளையை அனுகி அவர்களையும் சீட்டாட்டத்தில் கலந்து கொள்ள அழைத்தனர். அந்த ஆண்டவருடைய பிள்ளை சொன்னது:- "அன்பான நண்பர்களே வருந்துகிறேன், இந்த கரங்கள் எனக்குரியவைகள் அல்ல" என்றாராம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

    நமது சரீரம் தேவனுடைய ஆலயம் என்றும், ஒருவன் தேவனுடைய ஆலயத்தை கெடுத்தால் தேவன் அவனை கெடுப்பார் என்றும், தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது என்று 1 கொரி 3:16,17 ல் வாசிக்கிறோம்.

    தேவன் வாசம் பண்ண கூடிய சரித்தை பரிசுத்தமாக பாதுகாத்து கொள்ள வேண்டியது நமது கடமையாகும். புசித்தலிலும், குடித்தலிலும், உடுத்தலிலும், குடும்ப வாழ்விலும் கூட நம்முடைய இஷ்டபடி காரியங்களை செய்து விட முடியாது.

    அநேகர் ஆகார காரியங்களில் சரிரத்தை கறை படுத்துகின்றனர். வயிறு முட்ட சாப்பிட்டவன் தேவ சமுகத்தில் முழங்கால் இட்டு ஜெபிக்க முடியாது. பெருந்திண்டியினால் உங்கள் இருதயம் பாரம் அடைய கூடாது (லூக் 21-34). ஆகாரத்திற்கும் ஆவிக்குரிய ஜீவியத்திற்கும் இணைப்பு உண்டு.

    இமயமலை அடிவாரத்தில் உள்ள ஆசிரமத்தில் (இந்து ஆசிரமம்) எழுதபட்ட வார்த்தைகள்:-

1) ஆகாரமானது உனது உயிரை காத்து கொள்ளும் பொருட்டு நீ எடுக்கும் மருந்தாக இருக்கட்டும்

2) எளிமையான ஆகாரத்தை உட் கொள்

3) உன்னுடைய வயிற்றுக்கு மிதமிஞ்சிப் பழுவேற்றாதே

4) இன்பத்திற்காக ஆகாரம் புசித்தல் பாவம் ஆகும்

    உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. 1 தெச 5:23


================
"என் பாவங்களை எல்லாம் உமது முதுகுக்கு பின்னாக எறிந்து வீட்டீர்"
(ஏசாயா 38:17)
===============
"நம்முடைய பாவங்களை எல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விடுவார்" (மீகா 7:19)
    16.3.2000 தேதியிட்ட "இந்து" ஆங்கில நாளிதழில் ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி வெளி வந்தது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள லாகூர் பட்டணத்திலுள்ள நீதிமன்றத்தில் அல்லா பக்க்ஷ ரஞ்சா என்ற நீதிபதி இக்பால் ஜாவேத் என்ற குற்றவாளிக்கு கீழ்க்கண்டவாறு தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருந்தார்.

    "இக்பால் ஜாவேத்தை பொதுமக்களுக்கு முன்பாக நிறுத்தி முதலில் அவன் கழுத்தை நெறித்துக் கொல்ல வேண்டும். அதன் பின்னர் அவனது உடலை 100 துண்டுகளாக வெட்டி அந்த துண்டுகளை எரி அமிலத்தில் போட வேண்டும்".

    நீதிபதியின் தீர்ப்பு இத்தனை பயங்கரமாக இருப்பதற்கு நியாயமான காரணம் உண்டு. இப்படி கொலை தீர்ப்பிடப்பட்ட இக்பால் ஜாவேத் 100 குழந்தைகளை கொன்ற பாதகன். முதலில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வான். அதன் பின்னர் அவர்கள் கழுத்தை நெரித்துக் கொல்வான். அதற்கப்பால் அவர்களை துண்டு துண்டாக வெட்டி எரி அமிலத்தில் போடுவான்.

    இக்பால் ஜாவேத்தை கழுத்தை நெரித்து கொன்று, அவன் உடலை 100 துண்டுகளாக வெட்டி எரி அமிலத்தில் போடுவதை தங்கள் குழந்தைகளை இழந்த 100 பெற்றோர்களும் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

    பழைய ஏற்பாட்டில் நாம் பார்க்கின்ற நியாயப்பிரமாணத்தின் தீர்ப்பான "கண்ணுக்கு கண்" "பல்லுக்கு பல்" "கைக்கு கை" "காலுக்கு கால்" "சூட்டுக்கு சூடு" "காயத்துக்கு காயம்" "தழும்புக்கு தழும்பு" "பழிக்கு பழி" (லேவி 21:24,25) என்ற தீர்ப்பை இஸ்லாமிய மக்களும் கடைபிடிக்கின்றனர்.

    மனிதன் மனிதனுக்கு இவ்விதமான தண்டனைகளை அவனுடைய அக்கிரம, அநியாயத்திற்குத் தக்கதாக வழங்குகிறாரன். ஆனால் அன்புள்ள தேவன், மனிதன் எத்தனை பெரிய பாவ அக்கிரமங்களை செய்தவனாயினும் அவனை முழுமையாக மன்னித்து தம்மண்டை சேர்த்துக் கொள்கின்றார். ஆ எவ்வளவு நல்ல தேவன்.

    தாவிது ராஜா சவுல் அரசனின் மகள் மீகாளை தனக்கு மனைவியாக கொள்வதற்கு 200 அப்பாவி பெலிஸ்த மக்களை படுகொலை செய்ததை வேதாகமத்தில் நாம் காண்கிறோம் (1 சாமு 18:27). சவுல் கேட்டது 100 பெலிஸ்தரின் நுனித்தோல்கள்தான் ஆனால் தாவீது ராஜா தனது பராக்கிரமத்தின் பெருமையை காண்பிக்க 200 பெலிஸ்தரை கொன்று தீர்த்தார். அந்த தாவீது அரசனின் கொடிய அக்கிரமத்தை தேவன் அவருக்கு மன்னித்தபடியால் அவர் "கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு என்று பாடினதுடன் தனது பாவ இரத்தக்கரை படிந்த தனது சொந்த இருதயத்தை பார்த்து "என் ஆத்மாவே, கர்த்தர் உன் அக்கிரமங்களை எல்லாம் மன்னித்தார் (சங் 103:3) என்று கூறி சங்கீதம் பாடினார்.

    தாவீது ராஜா ஒரு உலகத்தில் நீதிபதியால் நியாயம் தீர்க்கப்படுவாரானால் அந்த நீதிபதி அவரை உயிரோடு வைத்து 200 துண்டுகளாக வெட்டிக் கொல்ல அவருக்கு கட்டாயம் தீர்ப்பளித்து இருப்பார். ஆனால் பரம தந்தை அன்பின் சொருபியானவர் தேவன் அன்பாகவே இருக்கிறார் (1 யோ 4:8) என்று பரிசுத்த யோவான் அப்போஸ்தலர் எழுதினார். தேவனின் முழு உருவமே அன்புதான். அந்த அன்பு திரளான பாவங்களை மூடும் (1 பேது 4:8) என்ற பேதுரு நமது நிரூபத்தில் குறிப்பிடுகின்றார். அந்த பெரும் எண்ணிக்கை முன்பாக 100 மற்றும் 200 எல்லாம் நெருங்கி நிற்க முடியாது. "நம்முடைய பாவங்களை நாம் தேவனுக்கு அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார்" (1 யோ 1:9) என்ற தேவ வசனத்தில் "எல்லா அநியாயம்" என்ற வார்த்தையில் நமது அனைத்து பாவங்களும் அடங்கி விடுகின்றது.

    இந்த முழு உலகத்திலும் ஒரு மாபெரும் கொடும் தீச்செயலை புரிந்த மனிதன் ஜெர்மன் தேசத்தின் ஹிட்லர் என்ற கொலை பாதகன்தான். சிறியோர், பெரியோர், வாலிபர், குழந்தைகள், விருத்தாப்பியர் என்று அனைத்து பிரிவினரும் அடங்கிய 60 லட்சம் பாவமறியா அப்பாவி யூத மக்களை அந்த பஞ்சமா பாதகன் விஷவாயு உலைகளில் தள்ளி எரித்து சாம்பல் தூள் ஆக்கினான். அந்த கொடியவன் கூட தனது பாதகச் செயலுக்காக தனது வாழ்வின் இறுதி மணி நேரத்தில் மனங் கசந்து அழுது புலம்பி, மார்பில் அடித்து தேவனிடம் மன்னிப்புக்காக கதறியிருந்தால் திரளான பாவங்களை மூடும் அன்பின் கருணாகரன் இயேசு கிறிஸ்து அவனது பாவங்களையும் மன்னித்து, அவனுக்கும் மோட்ச பாக்கியம் அளித்திருப்பார். அதுவேதான் இயேசு இரட்சகரின் கல்வாரி அன்பின் கிறிஸ்தவ மார்க்கம்.


=============
அபிகாயில்
===============
    அபிகாயில் மகா புத்திசாலியும் ரூபவதிமான ஒரு பெண். ஆனால் முரடனும் குடிகார கணவனுக்கும் மனைவியாக இருந்தாள். அவன் பெயர் நாபால். அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருந்தான். மேலும் அவன் பேலியாளின் மகனும் பைத்தியக்காரனுமாய் இருந்தான் (1 சாமு 25:25).

    தாவீது தனது ஊழியக்காரர்களை நாபாலிடம் அனுப்பிய போது அவர்கள் தவறாக நடத்தப்பட்டதை அறிந்தவுடன் மிகவும் கோபத்துடன் அவர்களை அழிக்க முற்பட்டார். தன்னிடத்தில் வந்த தாவீதின் ஆட்களை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பினதை பார்த்த நாபாலின் வேலைக்கார் நடந்த காரியங்களை நாபாலின் மனைவியாக அபிகாலியிடம் அறிவித்தனர். அந்த வேலைக்காரன் கூறிய வார்த்தை என்னவென்றால் இப்பொழுது நீர் செய்ய வேண்டியதை கவனித்து பாரும். நம்முடைய எஜமான் மேலும் அவருடைய வீட்டார் மேலும் நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாய் இருக்கிறது (1 சாமு 25:17) ஆம் நடந்த மற்றும் நடக்க போகின்ற காரியங்களை கவனித்துப் பார்த்தாள் அபிகாயில். அடுத்த நிமிடமே மிகுந்த தீவிரத்தோடு செயல்பட்டாள். தாவீதுக்கும் அவனோடு இருந்த உடன் ஆட்களுக்கு தேவையான உணவு பதார்த்தங்களை எடுத்துக் கொண்டாள். ஒரு சில வேலை ஆட்களை தனக்கு முன்பாக அனுப்பி பின்பாக அவள் சென்றாள். தான் செய்கின்ற காரியங்களை தன் புருஷனுக்கு கூட அவள் அறிவிக்கவில்லை. ஏனென்றால் அவளுக்குத் தெரியும் இப்பொழுது சொன்னால் விளைவு விபரீதம். அபிகாயில் புறப்பட்டு சென்று தாவீதை காண்கையில் தாவீதுக்கு நேராக தரையில் முகங்குப் புற விழுந்து வணங்கினாள். மேலும் இந்த பாதகம் என் மேல் சுமரட்டும் என்றாள். ஒருவர் பழியை மற்றவர் சுமப்பது அல்லது ஏற்றுக் கொள்வது என்பது லேசான காரியம் அல்ல. இது ஒரு கடினமான செயல்.

    அபிகாயில் அவள் ஒரு சாதாரண பெண் அல்ல. அவள் ஒரு தொழிலதிபரின் மனைவி. ஆனாலும் அவள் தன்னை அறிமுகப்படுத்தும்போது உம்முடைய அடியாள் என்று தாழ்த்துகிறாள். அவள் ஒரு பெண் அவள் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும் என்று சொல்லி அவளை அலட்சியபபடுத்தவில்லை தாவீது. அவள் கூறுவதை பொறுமையோடு கேட்டார்.

    விளைவு என்னவாயிற்று ? தாவீது விருதாவாக இரத்தம் சிந்தாமலும், பழிவாங்காமலும், தவறு செய்யாமலும் பாதுகாக்கப்பட்டார். மேலும் நாபாலும் அவன் வீட்டார் அனைவரும் கூட பாதுகாக்கப்பட்டனர். தான் தவறு செய்யாமல், தடை பண்ண தேவனால் அனுப்பப்பட்டவள்தான் அபிகாயில் என்பதை அறிந்தவராய் தாவீது அபிகாயிலை நோக்கி "உன்னை இன்றைய தினம் என்னை சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக. நீயும் ஆசீர்வதிக்கப்படுவயாக என்றான் (1 சாமு 25:32,33)

    ஒருவேளை அவள் இந்த காரியத்தை தீவிரமாய், துரிதமாய் செய்யாமல் காலதாமதமாய் செயல்பட்டு இருந்தாலும் அல்லது வரப்போகின்ற ஆபத்தை தடுத்த நிறுத்த கொடுக்கப்பட்ட தருணத்தை உபயோகப்படுத்தாமல் இருந்திருந்தால் விளைவு என்னவாய் இருக்கும் யோசித்துப் பாருங்கள். அவளும் சேர்ந்து அழிந்து போயிருப்பாள் ஆனால் அவள் புத்தியுள்ள ஸ்திரியாய் தன் வீட்டை கட்டினாள் (நீதி 14:1) தனது கணவன் அனனியா செய்த தவறுக்கு துணை போன சப்பிராள் கணவனோடு சேர்ந்து தானும் அழிந்தாள். தனது கணவன் நாபாலின் தவறுக்கு துணை போகாத அபிகாயில் தானும் மீண்டும், தன் மக்களையும் அழிவிலிருந்து மீட்டாள்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.