புருஷன் மனைவி அமைவதெல்லாம் | விடா முயற்சி | குடும்பப் பொறுப்பு
=================
குட்டிக் கதை
புருஷன் மனைவி அமைவதெல்லாம்
================
ஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்
இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான் அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்.
அவன் வாழ்கை உழைப்பும், ஊடலுமாக அன்பும் மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக்கொண்டிருந்தது.
எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது.
நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது, கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது, வருமானம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது.
கொல்லனுக்கோ குடும்ப வாழ்க்கையிலும், கொஞ்சம் கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடிகொண்டது சோகமே உருவாகிவிட்டான்,,,
ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது, அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள்,
"ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குதீக, இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே, அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே" என்றாள்.
புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில், கொல்லன் விறகுவெட்டி ஆனான்
அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது. வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது.
ஒருநாள் ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்
"மாமோய்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே, என்ன அது?"
விறகுவெட்டியான நம்ம கொல்லன் சொன்னான்
"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் கறிக்கொழம்புமாய் இருக்கும்.
இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதான்டி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு ...
இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலயே"என்றவனுக்கு கண்கலங்கவும் தவித்துப் போனாள் அவள்
"வேணாஞ்சாமி வேணாம், நீக ஏங் குலசாமி, கண்ணு கலங்காதீக.
என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே,,, அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம், காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்,
கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும" என்றாள்.
மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகுவெட்டியானவன் விறகுக்கடை முதலாளியானான், வருமானம் பெருகியது, எல்லையில்லா சந்தோஷம் வந்தது.
அப்புறமென்ன வீட்டில் கறிசோறுதான்.
ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன, வந்தது கெட்ட நேரம், விறகு கடையில் தீ விபத்து அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது.
தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி. நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து, எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்
மனைவி வந்தாள்.
கண்ணீர் துடைத்தாள் அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியனைத்தாள்,கண்ணீர் மல்க சொன்னாள்;
"இப்போ என்ன ஆயிடுச்சுனு எஞ்சாமி அழுதீக,
விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு, கரியாத்தானே ஆகியிருக்கு, நாளைலயிருந்து கரி யாவாரம் பண்ணுவோம்" தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது. இன்று வரை காி வியாபாரம் நடக்கிறது.
என் அன்பு வாசகரே,
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். சும்மாவா சொல்லி வைத்தார்கள்.
இன்னும் கல்யாணம் ஆகாத ஆணானாலும், பெண்ணானாலும், சரி நீங்கள் உங்கள் வாழ்க்கையை தேவனிடப்ம் ஒப்படையுங்கள். உங்கள் எதிா்கால வாழ்வு எப்படியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. காலங்கள் அவா் கையிலிருக்கிறது.
முக்காலங்களையும் அறிந்தவா் நம் தேவனாகிய கா்த்தா் உங்கள் வாழ்வில் உங்கள என்னென்ன திட்டமும், நோக்கமும், தீர்மானமும் இருக்கிறதோ அதற்கேற்படி எல்லாவற்றையும் நடப்பிக்கிற உங்கள் தகுதிகேற்ற துணையை தருவார்.
தப்பி தவறிக்கூட நீங்களே உங்கள் துணையை தேர்ந்தெடுத்து விடாதீா்கள். அப்புறம் வாழ்க்கை கசந்து போய் பாதியிலேயே ஏதாவதொரு நிலையில் முடிக்க நேரிடும்.
நீடித்த நிலையான துணை புருஷன் மனைவி மட்டும்தான் .ஆதரவு, பாிவு, பராமரிப்பு, ஆறுதல், தேறுதல் ஆகிய சகலமும் கிறிஸ்துவும் சபையும் போல புருஷன் மனைவி மனதில் தேவன் இசைவை ஏற்படுத்தி வைத்துள்ளார்.
புருஷன் போவாஸுக்கு அடையாளமாகவும், மனைவி ரூத் வுக்கு அடையாளமாகவும் சொல்லலாம். (ரூத் 4:11)
அதில் பினவருமாறு சொல்லியிருக்கிறது.
உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக.
நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
To Get Daily Story In What's App Contact +918148663456
ஒரு குடும்பத்திற்கு பாக்கியமான சகல நன்மைகளையும் கொண்டு வருகிறவன் புருஷன். ப்மட்டுமல்ல புகழையும், மதிப்பையும் உயா்வையும் தேடி தருகிறவன் புருஷன்.
மனைவி குடும்பத்திற்கு பெருமை சோ்க்கும்படி பிள்ளைகளை பெற்றெடுத்து குடும்பத்தை அன்பினாலும், அரவணைப்பினாலும் கட்டுகிறவள் மனைவியே.
புருஷன் சோா்ந்துபோகும் போதெல்லாம் உற்சாகப்படுத்தி புதுபுது யோசனைகளை தந்து புருஷனுக்கு பின் இருந்து உற்சாகப்படுத்தி தேற்றுகிறவள் மனைவியே.
ஒருவேளை உங்கள் குடும்பத்தில் பலவிதமான குழப்பத்தோடும், வேதனையோடும் நீங்கள் காணப்படலாம்.
இன்று
மகிழ்ச்சியான குடும்பமாக தேவன் மாற்ற அவா் கைகளில் உங்கள் குடும்பத்தை ஒப்புவியுங்கள். விசுவாசமாக நல்லதை பேசுங்கள். இதுவரை இருந்த கெட்டது அத்தனையும் குடும்பத்தை விட்டு ஓடி போய்விடும். உங்கள் மகிழ்ச்சியான குடும்பமாக மாறிவிடும்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
========================
குட்டிக் கதை - விடா முயற்சி
=========================
போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான்.
அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை.
எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான்.
அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.
ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது.
அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள் ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது.
சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.
இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது.
கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்
நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான்.
அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.
தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான்.
கடைசியில்
போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.
To Get Daily Story in What's App contact +917904957814
என் அன்பு வாசகரே,
உங்கள் வாழ்வில் தோல்விக்கே இடமில்லை. ஏனென்றால் இயேசு சிலுவையில்... நாம் எதிா் கொள்கிற அத்தனை விஷயங்களுக்கும் அவரே ஜெயம் பெற்று விட்டாா்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே,
கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து,
நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களுமாயிருப்பீர்களாக.
(1 கொரிந்தியர் 15:57,58)
நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார். (கொலோசெயர் 2:14,15)
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
2 கொரிந்தியர் 2:14
வாலிபரே,
பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். . வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
1 யோவான் 2:13,14
இவ்வசனங்களின்படி
ஏற்கனவே வெற்றியையும் ,ஜெயத்தையும் இயேசு சிலுவையில் பாடுபட்டு இரத்தம் சிந்தி மாித்ததினால் ஏற்படுத்தி விட்டாா் என்பதை விசுவாசியுங்கள்.
அவரை ஏற்றுகொண்டிருக்கிற நமக்கு ....
நாம் எதிா்கொள்கிற விஷயங்கள் அவ்வப்போது வருகிறபோதெல்லாம் அவருடைய ஜெயமும் அந்த நேரத்தில் நமக்கு வருகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
அப்படி
அறிந்திருப்பீா்களென்றால் நீங்கள் சோா்ந்து போவதில்லை. இந்த அரசனைப்போல் குகையில் பயந்து ஒளிய வேண்டியதில்லை.
இயேசு கிறிஸ்துவை தெய்வமாய் ஏற்றுகொண்ட நம்மைப்போல சிலாக்கியமும் ,பாக்கியமும் பெற்றவர்கள் உலகில் வேறு யாருமே இல்லை.
அவரை மையமாக வைத்து வாழுங்கள். ஜெயத்தை பெற்றுக்கொள்ளுங்கள்
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
===========================
குட்டிக் கதை - குடும்பப் பொறுப்பு
==========================
ஒரு ஊரில் வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
ஐந்து மருமகள்களும் அந்தப் பெரிய வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தனர்.
குடும்பத் தலைவிக்கு அதிகம் வயதாகிவிட்டது. நோயும் நிறைய வந்துவிட்டது. அதனால் அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பை, யாராவது ஒரு பொறுப்புள்ள மருமகளிடம் ஒப்படைக்க நினைத்தாள்.
ஐந்து மருமகள்களில் யாரிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற குழப்பம்.
யோசித்தாள். ஒரு நல்ல யோசனை தோன்றியது.
ஒருநாள் ஐந்து மருமகள்களையும் அழைத்து ஆளுக்கு ஒரு படி வேர்க்கடலையைக் கொடுத்தாள்.
""மருமகள்களே! ஆறு மாதம் சென்ற பிறகு இந்த வேர்க்கடலைகளைக் கேட்பேன். கொண்டு வந்து தரவேண்டும்!'' என்றாள்.
மருமகள்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.
ஆறுமாதம் சென்றது. குடும்பத் தலைவி தனது ஐந்து மருமகள்களையும் அழைத்து, தான் கொடுத்த வேர்க்கடலைகளைத் திருப்பிக் கேட்டாள்.
""ஆறு மாதம் வேர்க்கடலையை வைத்திருந்தால் புழுத்துப் போகாதா? அதனால் அவை வீணாகிவிடுமே. ஆகவே, அதை உடனே வறுத்து, குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டோம்!'' என்றாள் மூத்த மருமகள்.
""நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை அப்படியே ஓர் அடுக்குப் பானைக்குள் போட்டு வைத்திருந்தேன். நீங்கள் கேட்கும்போது இதைத் திருப்பிக் கொடுப்பது தானே மரியாதை. இந்தாருங்கள்!'' என்று அந்த ஒருபடி வேர்க்கடலையைத் திருப்பிக் கொடுத்தாள் இரண்டாவது மருமகள்.
""ஓர் ஏழைக் குடும்பம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை. ஆகவே, அவர்கள் மீது இரக்கப்பட்டு ஒரு படி வேர்க்கடலையையும் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்!'' என்றாள் மூன்றாவது மருமகள்.
""ஊரிலிருந்து என் பெற்றோர் ஒருமுறை வந்திருந்தனரே, அவர் களிடம் தம்பி, தங்கைகளுக்குக் கொடுக்கும்படி கூறிக் கொடுத்து அனுப்பிவிட்டேன்!'' என்றாள் நான்காவது மருமகள்.
ஐந்தாவது மருமகள் இரண்டு ஆட்களின் துணையோடு ஒரு மூட்டை வேர்க்கடலையைக் கொண்டு வந்து தன் மாமியாரின் முன்னே போட்டாள்.
""அத்தை! நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை ஆறு மாதங்கள் அப்படியே வைத்திருப்பதால் என்ன பயன்... என்ன லாபம்...? என்று யோசித்தேன். என் தந்தை வீட்டுத் தோட்டத்தில் விதைத்தால் ஒன்றுக்குப் பத்தாக விளைந்து லாபம் கிடைக்குமே என்று நினைத்தேன்.
நிலத்தைப் பண்படுத்தி ஒருபடி வேர்க்கடலையையும் விதைத்தேன். இந்த ஆறு மாதத்தில் அது ஒரு மூட்டை வேர்க்கடலையாகப் பெருகி விட்டது. இந்தாருங்கள்!'' என்றாள். அதைக் கண்ட மாமியார் மகிழ்ந்து போனாள்.
பெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் தகுதியும், பொறுப்பும் அவளுக்கே உண்டு என்று தீர்மானித்தாள். உடனே பொறுப்பை ஐந்தாவது மருமகளிடம் ஒப்படைத்தாள்.
அதை மற்ற நான்கு மருமகள்களும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டனர்.
என் அன்பு வாசகரே,
குடும்ப பொறுப்பு மிக்க பெண்ணாக மனைவியை தேவன் வைத்திருக்கிறாா். அவர்களால் குடும்பம் கட்டப்படும். பிள்ளைகள் ஆசீா்வதிக்கப்படுகிறாா்கள். ஆஸ்தியும் ஐஸ்வா்யமும் வீட்டுக்கு, வருவதற்கு காரணமானவா்கள் மனைவியே.. இப்படி
பல சிறப்பம்சங்களுடன் தேவன் பெண்ணை படைத்திருக்கிறாா்.
புத்தியுள்ள மனைவி கா்த்தா் அருளும் ஈவு.. (நீதிபதி 19 :14 )
மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
நீதிமொழிகள் 18 :22
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்: அவன் சம்பத்துக் குறையாது. அவள் உயிரோடிக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையல்ல, நன்மையே செய்கிறாள்.
ஆட்டுமயிரையும் சணலையும் தேடி தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள். அவள் வியாபாரக் கப்பல்களைப் போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.
இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள். ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
தன்னைப் பெலத்தால் இடைகட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.
தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்;
இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.
சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.
To Get Daily Story in What's App contact+917904957814
மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள். அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது: வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.
தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது. அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.
அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்:
அவள் புருஷனும் அவளைப்பார்த்து: அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு: நீயோ அவர்கள் எல்லோருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.
(நீதிமொழிகள் 31: 10-29)
குடும்ப பொறுப்புமிக்க பெண்ணை பைபிள் தெளிவாக சுட்டிகாட்டுகிறது. இதன்படி உண்மையாகவே ஒவ்வொரு பெண்ணும் தன் மனைவி ஸ்தானத்தில் இருந்தால் ஐந்தாம் மருமகள் போல நீங்கள் சொத்து சுகத்தோடு வாழ தேவன் கிருபை செய்வாா்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
Thanks for using my website. Post your comments on this