Type Here to Get Search Results !

In Forbes Magazine, Information About The Pastor's Work | Godson Vincent Bible Study in Tamil | போதகரின் பணியை பற்றி வந்த தகவல் | Jesus Sam

============================
போர்ப்ஸ் பத்திரிகையில்... போதகரின் பணியை பற்றி வந்த தகவல்
===============================
(விசுவாசிகள் மத்தியில் மற்ற அழைப்புள்ள ஊழியரைவிட தங்களுக்கு அதிக ஆதரவும் மரியாதையும் பெருவேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் அல்லது மற்ற அழைப்புள்ள ஊழியர்களைவிட மேய்ப்பரின் ஊழியமே பெரியது அல்லது சிறந்தது என்று காண்பிக்கும் நோக்கில் இந்த செய்தியை தீவிரமாய் பரப்பிவரும் பாஸ்டர்கள், தங்கள் ஊழியத்தைப்பற்றி உண்மையில் தங்களுக்கு வேத அடிப்படையிலான தெளிவு இல்லை என்பதை வெளிப்படையாய் காண்பித்துக்கொள்வது வருந்தத்தக்கது!)

*இந்த உலகத்தில் மிகவும் கடினமான ஐந்து வேலைகளில் போதகர் பணி (Pastors Jop) மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதற்காக ஒரு சபையின் போதகரை பேட்டி எடுத்த போது அந்த போதகர் சொன்ன பதில் இதோ....*

(தேவன் தமது சபைக்கு ஐந்துவிதமான ஊழியர்களை ஏற்படுத்தியிருக்கையில் (எபே.4:11-13), பாஸ்டர் பணி மட்டுமே மிகவும் கடினமானது என்று இந்த பாஸ்டர் எப்படி கண்டுபிடித்தார்? ஐந்துவிதமான அழைப்பிலும் இறுதிவரை ஊழியம் செய்துவிட்டு இவர் இந்த முடிவுக்கு வந்தாரா? புதிய ஏற்பாட்டு சபையில் அப்போஸ்தலர், தீர்க்கதரிசி, சுவிசேஷகர் மற்றும் போதகர் இவர்களைவிட கடினமாக ஊழியஞ்செய்த ஒரு பாஸ்டரையாகிலும் இவர் பார்த்திருக்கிறாரா? இறுதிவரை அப்போஸ்தலராகவோ, தீர்க்கதரிசியாகவோ, சுவிசேஷகராகவோ, போதகராகவோ இராத இவர், அவர்களின் ஊழியங்கள் மேய்ப்பர் ஊழியத்தைவிட லேசானவை என்கிற முடிவுக்கு எப்படி வரமுடியும்?)

*நான் ஒரு சபையின் போதகர். எனக்கு 24×7 அதாவது இருபத்தி நான்கு மணி நேரமும் வேலை உண்டு. ஒரு வீட்டில் மரணம் என்றால் நான் அங்கு இருக்க வேண்டும் அது மட்டுமல்ல எந்த நல்ல காரியமோ கெட்ட காரியமோ அந்த வீட்டில் இருந்தாலும் முதல் ஆளாக நான் போய் நிற்க வேண்டும். கடைசி வரை அந்த குடும்பத்திற்கு துணை நிற்க வேண்டும்.*

(ஒருநாளின் 24 மணிநேரமும் ஊழியத்தைப்பற்றி மட்டுமே சிந்திக்கிற, ஊழியத்தை மட்டுமே செய்கிற ஒரு பாஸ்டரை இந்த பாஸ்டரால் உலகத்தில் எங்காவது காண்பிக்கமுடியுமா? சரி, ஐந்துவிதமான ஊழியரும் சேர்ந்து செய்யவேண்டிய ஊழியத்தை (அப்.15:2,22) இந்த பாஸ்டர் மட்டுமே செய்ய விரும்புகிறதின் காரணம் என்ன? சபையாரின் பணமும் கனமும் தனக்கு மட்டுமே சேரவேண்டும் என்பதற்காகத்தானே? இல்லையேல், மற்ற அழைப்புள்ளவரை சேர்த்துக்கொண்டு அல்லது மற்ற அழைப்புள்ளவரோடு சேர்ந்து (அப்.13:1) இவர் சபையாருக்கு துணையாக நிற்கலாம் அல்லவா?)

*நான் நல்ல பிரசங்கம் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் மக்கள் வேறு சபைக்கு போய் விடுவார்கள்.*

(தான் நல்ல பிரசங்கம் செய்யாவிட்டாலும் மக்கள் தொடர்ந்து தன்கூடவே இருக்கவேண்டும் என்று இந்த பாஸ்டர் எதிர்பார்க்கிறாரா? நல்ல சம்பளம், நல்ல விசாரிப்பு இல்லாத ஸ்தாபனத்தில் எத்தனை பாஸ்டர்களால் கடைசிவரை நிலைத்திருக்கமுடியும்? சரி, நல்ல பிரசங்கம் பண்ணுகிறதில் இந்த பாஸ்டருக்கு என்ன பிரச்சனை? இது இவருடைய கடமைதானே? (2கொரி.2:17; 1தெச.2:3-5; 2தீமோ.2:15; தீத்து 2:1-8) அதற்காகத்தானே சபையார் இவருக்கு காணிக்கைக் கொடுக்கிறார்கள்? (கலா.6:6; 1தீமோ.5:17,18) இதை ஏன் இவர் ஒரு பெரிய சாதனையாகக் காண்பித்துக்கொள்ளவேண்டும்? தன்னால்

நல்லப் பிரசங்கம் பண்ணமுடியவில்லையென்றால், "ஐந்துவிதமான ஊழியர்கள்" செய்யவேண்டிய பிரசங்கத்தை என் ஒருவனால் மட்டுமே செய்யமுடியாது" என்று இவர் சபையாரிடம் அறிக்கையிடுவதோடு, மற்ற அழைப்புள்ள ஊழியர்களையும் இவர் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, அல்லது அவர்களை வரவழைத்து சபையாருக்கு பிரசங்கம்பண்ணவைக்கலாமே?)

*நல்ல உபதேசம் செய்ய வேண்டும் இல்லை என்றால் என்னை கள்ள பிரசங்கி என்று முத்திரை குத்திவிடுவார்கள்.*

(நல்ல உபதேசம் செய்யாவிட்டாலும் சபையார் தன்னை நல்ல உபதேசி என்று பாராட்டவேண்டுமென்று இந்த பாஸ்டர் எதிர்பார்க்கிறாரா? நல்ல உபதேசத்தை கொடுப்பதைப் பார்க்கிலும் இவருக்கு வேறு என்ன பெரியவேலை இருக்கிறது? (அப்.6:4) கள்ளப்பிரசங்கிகளிடம் இருந்து காக்கவும், நல்ல போதகத்தைக் கொடுக்கவுந்தானே கர்த்தர் இவரையும் தமது சபைக்கு ஐந்துவிதமான ஊழியரில் ஒருவராக ஏற்படுத்தியிருக்கிறார்? (எபே.4:14,15))

*பொருளாதாரம் அதாவது பணப்பிரச்சினை சபையில் எழும்பும் போது எனது தலை தான் உருளும்.*

(சபையாரின் பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்பட வழிகாட்டவேண்டிய இடத்தில் இருக்கிற இவர் (அப்.2:42,44,45; 4:32,34,35; ரோமர் 12:13; கலாத்.6:10; 1தீமோத்.6:17-19; யாக்.2:15,16; 1யோவான் 3:16-18),

சபையாரின் பொருளாத பிரச்சனைகளிலிருந்து ஏன் தப்பிச்செல்ல விரும்புகிறார்?

சபையாரிடம் பொருளாதார லாபம் அடைகிற இவர், சபையாரின் பொருளாதார பிரச்சனையை குறித்து கவலையற்றவராக இருக்கமுடியுமா?)

*எதற்கு எடுத்தாலும் குறை சொல்லும் பாஸ்களுக்கு அதாவது விசுவாசிகளுக்கு தலைவனாக நான் இருக்கிறபடியால் எனது வார்த்தையிலும் நடக்கையிலும் மிகவும் கவனமாக நடக்க வேண்டும்.*

(வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிருக்கவேண்டியது ஒரு ஊழியக்காரனின் கடமைதானே? (1தீமோ.4:12)

தன்னைக்குறித்தும் தன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிருந்து, தன்னையும் தன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளவேண்டியது ஒரு ஊழியக்காரனின் கடமைதானே? (1தீமோத்.4:16) இதை செய்யத்தவறினால் சபையார் குறைசொல்லத்தானே செய்வார்களன? இப்படியிருக்க, தான் செய்ய அவசியமில்லாதக் காரியத்தை சபையார் தன்னிடம் எதிர்பார்க்கிறதாக இவர் அலுக்கொள்ளவேண்டியது என்ன?)

*என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பினவர்கள் எனக்கு மரியாதை கொடுக்காதவர்களுக்கும் நான் மரியாதையும் அன்பும் ஆதரவும் செலுத்த வேண்டும்.*

(ஆம், தான் விசுவாசிகளில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறானோ அவ்வளவு குறைவாய் அவர்களால் அன்புகூரப்பட்டாலும், மிகவும் சந்தோஷமாய் தான் அவர்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் வேண்டியது ஒரு ஊழியனின் கடமைதானே?

(2கொரி.12:15) கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும், தன்னை தேவஊழியனாக விளங்கப்பண்ணவேண்டியது ஒரு ஊழியக்காரனின் கடமைதானே? (2கொரி.6:8-10) இப்படியிருக்க, தன்னிடம் எதிர்பாக்கக்கூடாதக் காரியத்தையெல்லாம் சபையார் எதிர்பார்க்கிறதாக இவர் எப்படி அலுத்துகொள்ளமுடியும்?

*பல நேரங்களில் நானே சபையின் பாத்ரூமை சுத்தம் செய்து சபையையும் பெருக்கி சேர் போட்டிருக்கிறேன்.*

(விசுவாசிகளுக்கு அவர்களுடைய கிருபை வரங்களுக்கேற்ற பொறுப்புகளை (ரோமர் 12:6-8) பகிர்ந்துகொடுக்க மனதில்லாத, ஆவியின் வரங்களைப்பற்றி சபையாருக்கு போதித்து, அவைகளைப் பெற்று சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பயன்படுத்த (1கொரி.12:1-10) பயிற்றுவிக்காத பாஸ்டர்கள், இவரைப்போலவே பாத்ரூமை சுத்தம் செய்து, சபை கூடும் இடத்தையும் பெருக்கி, சேர் போடவேண்டியதுதான்! சபையில் தான் மட்டுமே எல்லாமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறவர் எல்லா வேலையையும் தான்தானே செய்யவேண்டும்?)

*ஒரு நாள் அப்படி வாஷ்ரூமை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு சகோதரி என்னிடம் டாய்லெட் கிளீன் பேப்பர் இல்லை என்றார்கள். இன்னொருவர் பக்கத்தில் உள்ள டாய்லெட்டில் தண்ணீர் போகவில்லை அடைத்திருக்கிறது என்று சொன்னார்கள் நான் மனம் கோனாமல் சுத்தம் செய்தேன். அந்த டாய்லெட் கிளீன் பேப்பரை எடுத்து கொடுத்தேன்.*

(ஒரு ஊழியன் சத்தியத்தின் அடிப்படையில் சபையாருக்கு ஊழியஞ்செய்தால், சபையாரும் அவருக்கு சத்தியத்தின் அடிப்படையிலான மரியாதையை கொடுப்பார்கள் அல்லவா? (அப்.2:42; 5:11-13; 16:14,15; 21:5) தங்களை எந்தவிதத்திலும் உருவாக்காத ஒரு ஊழியருக்கு விசுவாசிகள் எப்படி ஒத்துழைப்பார்கள்? தங்களை ஆராதனை செய்யவைப்பது, அந்நியபாஷையில் பேசவைப்பது, கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்கவைப்பது தவிர, தேவனுக்கு பயன்படத் தங்களை உருவாக்கும் (1கொரி.12:31; 14:1,12; 1பேதுரு 4:10,11) தரிசனமில்லாத ஒரு ஊழியனுக்கு எப்படி சபையார் சேவைசெய்வார்கள்?)

*எனது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருந்தது ரொம்ப குறைவு. திருப்தி அடையாத விசுவாசிகளை திருப்திபடுத்தவே பல யுக்திகளை நான் கையாளுகிறேன்.*

(ஐந்துவிதமான அழைப்புள்ளவர்கள் செய்யவேண்டிய அத்தனை வேலைகளையும் (1கொரி.3:5-10) தான் ஒருவரே செய்யநினைக்கும் இந்த பாஸ்டருக்கு குடும்பத்துடன் செலவிட எப்படி நேரம் கிடைக்கும்? இது இவரது தவறல்லவா? தனது குடும்பத்தோடு நேரம் செலவழித்து, அவர்களை நடத்தத் தவறும் இவர் எப்படி தேவனுடைய சபையை சரியாக நடத்துகிறவராக இருப்பார்? (1தீமோ.3:6)

திருப்தி அடையாத விசுவாசிகளை திருப்திபடுத்த இவர் ஏன் பல யுக்திகளை கையாளவேண்டும்? மனுஷரை நாடிப் போதித்து, மனுஷரை பிரியப்படுத்தப்பார்க்கிற இவர், தான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்ல என்று ஒத்துக்கொள்வாரா? (கலாத்.1:10) ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களானவர்களின் சுய இச்சைகளுக்கேற்ற போதகராக தான் இருக்கிறதை இவர் அறிக்கையிடுவாரா? (2தீமோத்.4:3) பொருளாசையுடையவராய் தந்திரமான வார்த்தைகளால் விசுவாசிகளைத் தனக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்வதாக ஏற்றுக்கொள்வாரா? (2பேதுரு 2:1,3))

*என்னிடம் மக்கள் சொல்லும் இரகசியங்களை பாதுகாக்க மிகவும் சிரமப்படுகிறேன்.*

(ஒரு நல்ல ஆலோசகராக மக்கள் சொல்லும் இரகசியங்களை பாதுகாக்கவேண்டியது ஒரு ஊழியனின் கடமையல்லவா? இரகசியங்களை பாதுகாக்க சிரமப்படுகிற இவர், இரகசியங்களைப் பாதுகாக்க வல்லவர்களான தன் உடன் ஊழியரை அல்லது நல்ல முதிர்ச்சியும் சாட்சியுமுள்ள விசுவாசிகளை ஆலோசனை கொடுக்கும் ஊழியத்தில் பயன்படுத்தலாமே? (ரோமர் 12:8; 15:14; 2கொரி.8:7)

அதற்கு அவர்களுக்கு சிறப்பு பயிற்சியையும் ஏற்பாடு செய்யலாம் அல்லவா? எல்லாவற்றையும் தானே செய்யவேண்டும் என்கிற வேதத்திற்கு முரணான சிந்தயைுள்ள ஒரு பாஸ்டர் இப்படிப்பட்ட நெருக்கடிகளை சந்திப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?)

சொந்த குடும்பத்தின் புரிதலுக்கு நான் அந்நியனாகுகிறேன்.

(தன் மனைவி மற்றும் பிள்ளைகளால் புரிந்துகொள்ளமுடியாதவராக ஒரு பாஸ்டர் இருக்கவேண்டும் என்று இயேசுகிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறாரா? தன் குடும்பத்தாரையே எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கமுடியாத ஜென்மசுபாவத்தாராக வைத்திருக்கும் இவரால் (1கொரி.2:1415), சபையாரை எப்படி ஆவிக்குரிய முதிர்ச்சிக்கு நேராக நடத்தமுடியும்? தன் குடும்பத்தாராலேயே புரிந்துகொள்ளமுடியாத இவரை சபையார் எப்படி புரிந்துகொள்ளமுடியும்? ஒரு ஊழியனுடைய ஊழியமும் (பிலி.4:15; 1தெச.1:5; 2தெச.2:1,12; 2தீமோ.3:11), ஜீவியமும் (1தெச.2:10; 2தெச.3:7) பிறருக்கு திறந்த புத்தகமாக இருக்கவேண்டாமா? ஒரு ஊழியக்காரன் தன் குடும்பத்தாருக்கே எப்படி புரியாத புதிராக இருக்குடியும்? தன்னையே புரிஞ்சிக்கமுடியாத தன் குடும்பத்தாரை நம்பி, ஒரு ஊழியர் தேவனுடைய சபையை அவர்களிடம் எப்படி ஒப்படைக்கிறார்?)

*எந்த இடத்திற்கும் நான் நிம்மதியாக போயிட்டு வர முடியாது எப்பவும் சபை சபை என்ற நினைப்பு தான் என் மனது நிறைந்திருக்கும்.*

(எந்த இடத்திற்கும் ஏன் இவரால் நிம்மதியாகப் போய்வரமுடியவில்லை? எப்பவும் 'சபை', 'சபை' என்று ஏன் இவருக்கு மனது அடித்துக்கொள்கிறது? சபையார்மேல் இவருக்கு நம்பிக்கையில்லாததுதானே இதற்குக்காரணம்? தனக்கு இணையாகவோ, இடைஞ்சலாகவோ ஒருவர் சபையில் எழும்பிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறவர்களுக்கு இந்த பதற்றம் இருப்பது இயல்புதானே? உடன் ஊழியருக்கு போதுமான உரிமை கொடுக்காத, விசுவாசிகளுக்கு பொறுப்புகளை பகிர்ந்தளிக்காத ஒரு ஊழியரால் எப்படி எங்கும் நிம்மதியாகப் போய்வரமுடியும்?)

*யாராவது சபையை விட்டு போனால், அதை நினைத்து வேதனைப்பட்டு சாப்பிடாமல், வியாதிப்படுகிறேன்.*

(சபையைவிட்டு சிலர் ஏன் வெளியேறுகிறார்கள்? சபையார் வெளியேறுகிறதற்கு இவரோ, இவருடைய குடும்பத்தாரோ ஒருபோதும் காரணமாக இருந்ததில்லையா? வெளியேறுகிறவரைத் திரும்பக் சபைக்குள் கொண்டுவர இவர் எடுக்கிற முயற்சி என்ன? (மத்.18:12-14) அவர்களுடைய ஆத்துமாக்களைக்குறித்த கவலையுள்ளவராக சாப்பிடாமல் இவர் வியாதிப்படுகிறாரா? அல்லது அவர்களால் வரும் ஆதாயத்தை இழந்ததற்காக வேதனைப்பட்டு சாப்பிடாமல் வியாதிப்படுகிறாரா? தங்கள் ஆத்துமாவைக் குறித்து கவலைப்படுகிற இவரைவிட்டு சபையார் எப்படி வெளியேறமுடியும்? (எபிரே.13:17) இவர் தங்கள் ஆத்துமாவைகுறித்து அதிக பாரப்படுகிறவர் என்பதை அறிந்திருந்தும் இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து சபையைவிட்டு வெளியேறுகிறவர்களுக்காக (2தீமோ.4:10) இவர் ஏன் வேதனைப்பட்டு, சாப்பிடாமல் வியாதிப்படவேண்டும்?)

*கால்பந்து மைதானத்தில் உள்ள பந்தை போல நான் அநேக வேளைகளில் எல்லோராலும் உதைக்கப்படுகிறேன். அவர்கள் கோலுக்காக என்னை உதைக்கிறார்கள்.*

தேவனுடைய கால்பந்து மைதானத்தில் பாஸ்டர் என்கிற ஒரே பந்துக்கு மட்டுமே வேலையில்லை. அப்போஸ்தலர், தீர்க்கதரிசி, சுவிசேஷகர், போதகர் என்கிற மற்ற நான்கு பந்துகளுக்கும் அங்கு வேலை உண்டு என்பதை இவர் அறியாதவரா? (அப்.1:26; 13:1; 15:2,22,32-34; 20:28; 21:8-10) கால்பந்து மைதானத்தில் தான் ஒருவரே, ஒரே பந்தாக இருக்கவேண்டும் என்று விரும்புகிற இவர் மட்டுமே உதைபடுவதில் ஆச்சரியம் என்ன?)

*எனது தேவைகளை உணர்வுகளை மற்றவர்களை போல வெளியே சொல்லமுடியாது அப்படி சொன்ன பின்னர் ஏன் இதை சொன்னோம் என்று மனது படபடக்கும்.*

(ஒரு ஊழியன் தனது உணர்வுகளையும் (1கொரி.4:9-14; 9:15; 2கொரி.11:16-31) தேவைகளையும் (1கொரி.9:6-12; 2கொரி.11:8; கலாத்.6:6; 1தீமோ.5:17,18) தன்னால் நடத்தப்படுகிற ஜனங்களிடம் ஏன் சொல்லக்கூடாது? சத்தியத்தின்படி அவர்கள் தனக்கு கொடுக்கவேண்டியதை போதிக்கிறது தவறாகுமா? சத்தியத்தின்படி ஊழியம் செய்யாமல், மக்களிடம் தேவைகளை தெரிவிப்பதனாலேயே இவருடைய மனம் படபடப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?)

*கடைசியாக நான் ஒன்று உங்களுக்கு சொல்கிறேன் இதெல்லாம் தெரிந்துதான் நான் இந்த பணியை செய்கிறேன். காரணம் என்னை அழைத்த எனது பாஸ் அதாவது தலைவர் ரொம்ப நல்லவர்.*

(கஷ்டங்கள் மற்றும் பாடுகள் இல்லாத ஒரு ஊழியத்தை செய்யவா தேவன் ஒரு ஊழியனை அழைத்திருக்கிறார்? (லூக்கா 9:23; மத்.10:16-19; யோவான் 15:18-21; 16:33) ஊழியத்திலுள்ள நெருக்கங்களையெல்லாம் அறிந்தே ஊழியத்திற்கு வந்த ஒரு பாஸ்டர், தான் உலகத்தில் மூன்றாவது கடினமான வேலையை செய்கிறதாக பெருமைப்பட்டுக்கொள்வதோ, அல்லது சுயபரிதாபங்கொள்வதோ அருவருப்பான செயல் அல்லவா? மற்ற அழைப்புள்ளவர்களைவிட பாஸ்டர்களுக்கே தேவனுடைய சபையில் பொறுப்பும் பாடுகளும் அதிகம் என்கிற வேத அடிப்படையற்ற ஒரு கற்பனைவாதத்தை கட்டமைக்க இவர் முயற்சிக்கிறாரா? "தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும்,.... ஏற்படுத்தினார்" என்று சொல்லப்பட்டிருக்க (1கொரி.12:28), தேவனுடைய சபையின் முதன்மை நிர்வாகிகளான அப்போஸ்தலர், தீர்க்கதரிசி மற்றும் போதகரைவிட மேய்ப்பர்கள் அதிக கஷ்டப்படுகிறவர்களாக இருக்கக்கூடுமா? மற்ற அழைப்புள்ளவர்களைவிட அதிக கஷ்டப்பட்டு ஊழியஞ்செய்த ஒரு மேய்ப்பரையாகிலும் இவரால் புதிய ஏற்பாட்டு சபையில் காண்பிக்கமுடியுமா? மற்ற அழைப்புள்ளவர்களைவிட பாஸ்டரின் ஊழியம்தான் அதிக பொறுப்பும் பாடுகளும் நிறைந்தது என்பதற்காக ஆதாரத்தை இவரால் புதிய ஏறபாட்டு சபையிலிருந்து காண்பிக்கமுடியுமா? மற்ற அழைப்புள்ளவர்கள் படுகிற பாடுகளைப்பற்றி இவருக்குத் தெரியுமா? ஒரு அப்போஸ்தலருக்கு இணையான ஊழியத்தை செய்யவும் (2தீமோத்.1:10,11;

ரோமர் 15:18-21), ஒரு அப்போஸ்தலருக்கு இணையாய் பாடுபடவும் (1கொரி.4:9-14; 2கொரி.11:16-31) ஒரு பாஸ்டரால் கூடுமா?)

*நண்பர்களே இந்த பதிவை எழுதும்போது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. காரணம் நானும் கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் இதை அனுபவித்து கொண்டு வருகிறேன். தயவுசெய்து ஒவ்வொரு போதகர்களையும் இரட்டிப்பான கனத்திற்கு பாத்திரராக எண்ணுங்கள். எந்த ஒரு போதகரையும் அற்பமாக அவமானமாக எண்ணாதிருங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.*

(சுகபோகமாக வலம்வரும் சில அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர் மற்றும் போதகர்களைப் போலவே, சுகபோகமாய் வலம்வரும் சில பாஸ்டர்களும் உண்டல்லவா? அப்படியே, மேய்ப்பர்களுக்கு இணையாகவோ அல்லது கூடுதலாகவோ மற்ற அழைப்புள்ளவர்களில் பலர் தேவனுடைய ஜனங்களாகிய அவருடைய சபையை பக்திவிருத்தியடையப்பண்ணப் பிரயாசப்பட்டும், பாடுபட்டும் வருகிறார்கள் அல்லவா? மேய்ப்பர்கள் ஊழியத்திலும் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் மற்றும் போதகரின் ஊழியம் தேவனுடைய சபையில் முதன்மையானவையாக இருக்க, மேய்ப்பர் ஊழியமே முக்கியமானதென்றும், அதிக பொறுப்புள்ளதென்றும், தியாகமானதென்றும் ஒரு கற்பனையான கருத்தை மக்கள் மனங்களில் கட்டமைத்து, மற்ற அழைப்புள்ள ஊழியர்களைவிட தங்களை அதிகமாய் நேசிக்கவும், போஷிக்கவும், மதிக்கவும் அவர்களை திருப்புகிறதற்காய், ஆறுமாதத்திற்கு ஒருமுறை இப்படி பாஸ்டர்களைப் பற்றி பெருமையாய் பேசும் செய்திகளை வைரலாக்கி, "தேவமக்களே, பாஸ்டர்களாகிய எங்களுக்கே அதிக மரியாதை கொடுங்கள், பாஸ்டர்களாகிய எங்களையே அதிகம் கவனியுங்கள்" என்று மறைமுகமாகக் கெஞ்சுவது தங்களைத்தாங்களே பாஸ்டர்கள் சிறுமைப்படுத்திக்கொள்ளும் காரியம் இல்லையா?

மக்களிடம் மரியாதையை இப்படி கெஞ்சிக்கேட்டா வாங்கவேண்டும்!

கர்த்தரால் புகழப்படாமல், தன்னைத்தான் புகழுகிறவனா உத்தமனா? (2கொரி.10:18) மனுஷரால் வரும் மகிமையை எதிர்பார்ப்பதா ஊழியம்? (மத்.23:7; யோவான் 5:41; 12:43) இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிற ஒருவர் பிதாவானவரிடத்தில் அல்லவா கனத்தை எதிர்பார்க்கவேண்டும்? (யோவான் 12:26)

இப்படி மலிவான விளம்பரத்தின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடிக்க போட்டிப்போடுகிறததை விட்டுவிட்டு, தேவனுடைய மனதில் இடம்பிடிக்க தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தை அனைத்து அழைப்புள்ளவரும் உண்மையும் உத்தமுமாய் செய்ய முன்வரவேண்டும்!!(மத்.25:14-23)

*"எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல. எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது"* என்று பவுல் சொல்லுகிறதை அனைத்து அழைப்புள்ள ஊழியரும் மனதில் பதித்துக்கொள்ளவேண்டும்!!

(2கொரி.3:5)

[வளர்ந்துவரும் இளம் பாஸ்டர்கள் தங்களைகுறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணுவதற்குத் தூண்டும் இந்த வேத அடிப்படையற்ற செய்தி, தங்கள் அழைப்பையும் சபை நிர்வாகத்தைக் குறித்த வேத அடிப்படையிலான தெளிவில்லாத பாஸ்டர்களால் வெளியரங்கமாய் வைரலாக்கப்படுவதால், வளரும் ஊழியர்களை இப்படிப்பட்ட மேட்டிமையான சிந்தையிலிருந்து தப்புவிக்கும் நோக்கில், இந்த செய்திக்கு வெளியரங்கமாய் பதிலளிக்கவேண்டிய நிர்பந்தம் அடியேனுக்கு உண்டாகிவிட்டது]

க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920


============================
அந்தரங்கமாக இருக்கவேண்டிய உபவாச ஜெபத்தை உலகத்திற்கே தெரியும்படி டிவியில் add, பிட் நோட்டீஸ் மற்றும் பேனர் இவைகளின் மூலம் விளம்பரப்படுத்தி, கூட்டம் முடிந்தவுடன் அன்பின் விருந்து உண்டு, நுழைவு கட்டணம் ரூ.200/ என்று கூறுவது சரியா?
==========================
பொதுவாக நாம் இரண்டுவகையில் உபவாசித்து ஜெபிக்கிறோம்.

ஒன்று பலராகக் கூடி உபவாசித்து ஜெபிக்கிறோம். (நியா.20:26; 1சாமு.7:6; நெகே.9:1; எஸ்தர் 4:3; 9:30; எரே.36:6; யோவேல் 2:12; யோனா 3:5; அப்.13: 2,3; 14:23)

அடுத்து தனிமையாக உபவாசித்து ஜெபிக்கிறோம். (2சாமு.12:16; 1இராஜா.21:27; நெகே.1:4; சங்.35:13; 69:10; 109:24; தானி.9:3; மத்.4:2; லூக்கா 2:37; அப்.10:3; 1கொரி.7:5; 2கொரி.6:5; 11:27)

உபவாசத்தை விளம்பரப்படுத்தலாமா?

"பரிசுத்த உபவாசநாளை *நியமியுங்கள்,* விசேஷித்த ஆசரிப்பைக் *கூறுங்கள்,* மூப்பரையும் தேசத்தின் எல்லாக் குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே *கூடிவரச்செய்து* கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்" என்று யோவேல் யூதரை எழுப்பிவிடுகிறார். (யோவேல் 1:14)

"சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், *பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்,* விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்" என்று கர்த்தர் யூதரை ஏவுகிறார். (யோவேல் 2:15)

பரிசுத்த உபவாசநாளை நியமிப்பது, விசேஷித்த ஆசரிப்பைக் கூறுவது, தேவஜனங்களை அவர் சமூகத்தில் கூடிவரச்செய்வது தவறில்லை.

மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தபோது, அவன் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் *உபவாசத்தைக் கூறுவித்தான்.* (2நாளா.20:1-3)

யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் ஐந்தாம் வருஷத்து ஒன்பதாம் மாதத்திலே, எருசலேமிலிருக்கிற எல்லா ஜனத்துக்கும், யூதாவின் பட்டணங்களிலிருந்து எருசலேமுக்கு வருகிற எல்லா ஜனத்துக்கும், கர்த்தருக்கு முன்பாக *உபவாசம் செய்யவேண்டுமென்று கூறப்பட்டது.* (எரே.36:9)

யூதர் தங்கள் தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்துகிறதற்கும், தங்களுக்காகவும் தங்கள் பிள்ளைகளுக்காகவும் தங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், எஸ்ரா பாபிலோனின் அகாவா நதியண்டையிலே *உபவாசத்தைக் கூறினார்.* (எஸ்றா 8:21-23)

ஆமானால் யூதருக்கு வரவிருக்கும் அழிவை கேள்விப்பட்ட எஸ்தர், சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிக்கப்போகிற தனக்காக சூசானில் இருக்கிற *யூதரையெல்லாம் கூடிவரச்செய்து,* மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, *உபவாசம்பண்ணும்படி* மொர்தெகாயைக் கேட்டுக்கொண்டாள். (எஸ்தர் 4:16)

சரியானக் காரணங்களுக்காய் முறையாக உபவாசித்து ஜெபிக்கிறதற்கு கூடிவரும்படிக்கு தேவஜனங்களுக்கு (கிறிஸ்தவர் மட்டும் பயன்படுத்தும் ஊடகங்கள் வழியாக) அறிவிப்புக்கொடுக்கிறதோ, அழைப்பு விடுக்கிறதோ தவறில்லை.

ஆகிலும், தாங்கள் கூடி உபவாசித்து ஜெபிக்கிறது மற்ற சபைகளுக்கும், மற்ற சபை பிரிவினருக்கும், ஊரிலுள்ள யாவருக்கும் கட்டாயம் தெரியவேண்டும் என்கிற நோக்கில் டிவியில் add கொடுப்பது, துண்டு வெளியீடு (Bit notice) கொடுப்பது, மற்றும் பதாகை (banner) வைப்பது போன்ற காரியங்கள், மனுஷர் காணவேண்டும் என்று செய்கிற விளம்பரமாகும். இதை கர்த்தர் அருவருக்கிறார்.

இன்று உபவாச ஜெபங்களுக்கான சுவரொட்டிகளையும், பதாகைகளையும் தெருக்கள்தோறும் காண்பது விளம்பரமாகவே தெரிகிறது!!


தனிநபரின் அந்தரங்க ஜெபத்தை வெளியரங்கமாக்கலாமா?
"நீங்கள் உபவாசிக்கும்போது, *மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்,* அவர்கள் உபவாசிக்கிறதை *மனுஷர் காணும்பொருட்டாக,* தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள், அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நீயோ உபவாசிக்கும்போது, *அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல்,* அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, *உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.*

அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்" என்கிறார் உபவாச நாயகன் இயேசுகிறிஸ்து. (மத்.6:16-18)

தமது சீஷரின் உபவாசத்திற்கும் மாயக்காரரின் உபவாசத்திற்கு வித்தியாசம் காணப்படவேண்டும் என்று விரும்பினார் அவர்.

மாயக்காரராகிய வேதபாரகரும் பரிசேயரும் தாங்கள் உபவாசிக்கிறது மனுஷருக்கு கட்டாயம் தெரியவேண்டும் என்று தங்கள் முகங்களை வாடப்பண்ணினார்கள்.

தங்கள் உபவாசத்தை கர்த்தர் காண்கிறாரா? இல்லையா? தங்களுக்கு பதிலளிக்கிறாரா? இல்லையா? என்பதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்பட்டதில்லை.

மனுஷரிடம் மரியாதையையும் ஆதாயத்தையும் பெறும்படிக்கு தங்கள் உபவாசம் கட்டாயம் மனுஷருக்கு தெரியவேண்டும் என்கிறதில் அவர்கள் கவனமாய் இருந்தார்கள்.

இன்று அநேக ஊழியரும் கிறிஸ்தவரும் தாங்கள் 3 நாள், 21 நாள், 40 நாள் உபவாசித்து ஜெபிக்கிறது மற்றவருக்குத் தெரியவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதை அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்துகிறதில் ஆர்வமாய் இருக்கிறார்கள்.

ஜனங்கள் தங்களை பெரிய ஜெபவீரர் என்றோ, தங்களுக்காக ஜெபத்தில் பாரத்தோடு போராடுகிறவர் என்றோ, மிகுந்த ஆவிக்குரியவர் என்றோ நினைத்துக்கொள்ளவேண்டும் என்று இவர்கள் இவ்விதம் செய்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களின் ஜெபத்தினால் அவர்களுக்கோ, தங்களுக்கோ எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை ஜனங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

தமது சீஷர்கள் தாங்கள் உபவாசிக்கும்போது, அந்தரங்கத்தில் பார்க்கிற தங்கள் பிதா தங்களுக்கு வெளியரங்கமாய் பலனளிப்பதற்கு ஏதுவாய், தாங்கள் உபவாசமிருக்கிறதை ஒருவரும் அறியாதபடிக்கு தங்கள் தலைக்கு எண்ணெய் பூசி, தங்கள் முகத்தைக் கழுவி, தாங்கள் எப்பொழுதும் இருப்பதுபோல் காணப்படவேண்டும் என்று விரும்புகிறார் ஆண்டவர்.

மனுஷர்கள் காணாத இவர்களுடைய உபவாசத்தினாலேயே உண்மையில் மனுஷர்களுக்கு பலன் உண்டாகிறது.

மறைமுகமான இவர்களுடைய உபவாசத்தை தேவன் மட்டுமே கண்டு, வெளியரங்கமாக பலனளிக்கிறார்!

ஒருவர் சிலநாட்கள் உபவாசமிருப்பது அவருடைய குடும்பத்தினருக்கு தெரியக்கூடும். இதை சுயவிளம்பரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

உபவாசக் கூட்டத்திற்குப் பின்பு அன்பின் விருந்து அளிப்பதும், பெங்குபெறுவோரிடம் அதற்காய் கட்டணம் வாங்குகிறதும் சரியா?
சுயநல மற்றும் சுயவிளம்பர நோக்கமில்லாமல், பொதுவான நன்மைகளுக்காகவும் தேவனுக்கு மகிமையாகவும், தேவனால் ஏவப்பட்டு உற்சாகமாய் கூடி உபவாசித்து ஜெபிக்கிறவர்கள்: கூட்டத்தின் முடிவில் கொடுக்கப்படுகிற ஆகாரத்திற்கான செலவுகளை பகிர்ந்துகொள்வதில் தவறில்லை.

"இத்தனை ரூபாய், அத்தனைப்பேரும்" என்று கட்டாயப்படுத்தாமல், அவரவரால் முடிந்தவரை உற்சாகமாகக் கொடுக்கக் கேட்டுக்கொள்ளலாம். (2கொரி.8:7)

கூட்டத்திற்கான தேவைகள் என்ன? என்னென்ன வசதிகள் செய்துகொடுக்கப்படவிருக்கிறது? எத்தனைபேர் பங்கெடுக்கப்போகிறோம்? எவாவளவு செலவாகும்? என்பதை பங்குபெறுவோர்க்கு விபரமாக தெரிவித்தால், எவ்வளவு கொடுக்கலாம் என்று தீர்மானிக்க அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

"கட்டணம் செலுத்தாதவர்களுக்கு கட்டாயம் அனுமதியில்லை" என்று சொல்லக்கூடாது. அப்படி செய்தால், அது சரியான நோக்கத்தைக் கொண்ட உபவாச ஜெபமாக இருக்கமுடியாது. தேவன் தங்கள் ஆகாரத்திற்கானத் தேவைகளை சந்திப்பார் என்கிற விசுவாசமில்லாதவர்களின் உபவாச ஜெபத்தினால் என்ன விளைவு உண்டாகிவிடும்?

க. காட்சன் வின்சென்ட்.
கோயம்பத்தூர்.
8946050920


============================
"மந்தையில் இருந்த மேய்ப்பர்களுக்கே இயேசுவின் பிறப்பின் நற்செய்தி முதலில் அறிவிக்கப்பட்டது என்பதை சிந்தையில் வைத்து, மேய்ப்பர்களை கனம்பண்ணுங்கள்" என்று ஒரு மேய்ப்பர் (பாஸ்டர்) கூறுவதும், அநேக மேய்ப்பர்கள் (பாஸ்டர்கள்) அதை ஆமோதிக்கிறதும் சரியா?
=========================

சரியா அல்லது தவறா என்று வேதக்கண்ணாடியின் வழியாகவே காண்போம்.

சபையை நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவாகளை, சபையார் இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டியது அவசியம்! (1தீமோ.5:17)

தங்களை நடத்துகிறவர்கள், தங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்கு சபையார் கீழ்ப்படிந்து அடங்கவேண்டியது கட்டாயம்! (எபி.13:17)

1தீமோத்தேயு 5:17ல் 'மூப்பர்கள்' என்றும், எபிரேயர் 13:17ல் 'நடத்துகிறவர்கள்' என்றும் குறிப்பிடப்படுகிறவர்கள் மேய்ப்பர்கள் மட்டுமே அல்ல, அவர்கள் அனைத்துவித அழைப்புள்ள ஊழியர்கள் என்பதை முதலில் இன்றைய மேய்ப்பர்கள் அறியவேண்டும்!

ஆதிசபைகள் அனைத்தும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அழைப்புள்ளவர்களாலேயே நடத்தப்பட்டன என்பதை அப்போஸ்தலர் நடபடிகளை கிரமமாய் படிக்கிறவர்கள் சிரமமின்றி அறிந்துகொள்ளலாம். (அப்.1:26; 15:2; 13:1)

ஒரே ஒரு மேய்ப்பரின் நிர்வாகத்தின் கீழ் அல்லது மேய்ப்பராக அழைக்கப்பட்டவர்களின் நிர்வாகத்தின்கீழ் மட்டுமே ஒரு சபை இயங்குவது வேத அடிப்படையற்றக் காரியமாகும்.

ஒரு சபை ஒரு மேய்ப்பராலோ, அல்லது சில மேய்ப்பர்களாலோ நடத்தப்பட்டாலும், பிற அழைப்புள்ளவர்களையும் அழைத்து சபையில் பயன்படுத்திக்கொள்வது ஒழங்கும் கிரமுமாகும். (அப்.11:27-30; 15:27,28,30-34; தீத்து 3:13)

சபையாரோடு தொடர்ந்து பயணிக்கிறவர்களும், அழைக்கப்பட்டு பயன்படுத்திக்கொள்ளப்படுகிறவர்களும், சபை ஊழியரும் சபையை நடத்துகிறவர்களுமாய் இருக்கிறார்கள்!

தேவன் தமது சபையை நடத்த ஐந்துவிதமான ஊழியரை ஏற்படுத்தியிருக்கிறதை எவரும் மறுக்கமுடியாது! (எபே.4:11-15)

ஒன்றுக்கும் மேற்பட்ட அழைப்புள்ளவர்கள் சேர்ந்து ஒரு சபையை நடத்துவார்களானால் அவர்களே அந்த ஆத்துமாக்களுக்கு உத்தரவாதிகள். அவர்களுக்குள் மேய்ப்பர் மட்டுமே உத்தரவாதியல்ல!

அழைக்கப்பட்டு தற்காலிகமாக பயன்படுத்தப்படுகிறவர்களும் உத்தரவாதத்தோடு ஊழியம் செய்யவேண்டியது அவசியம்! (அப்.15:32,33)

இப்படியிருக்க, மேய்ப்பர் உட்பட சபையாரின் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிற, நன்றாய் விசாரணைசெய்கிற, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிற ஐந்துவித ஊழியரும் சபையாரின் இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரமானவர்களே! இவர்கள் சபையாரின் மதிப்பைப் பெற அதிக மெனக்கெடுவதில்லை.

மேய்ப்பர் அழைப்பு இல்லாமல் தங்களை மேய்ப்பராக எண்ணுகிறவர்களும், சபையென்றால் என்னவென்று விளங்காத, சபை ஊழியம் என்றால் என்னவென்று புரியாத மற்றும் சத்தியத்தின்படி சபையை நடத்தத் தெரியாதவர்களே, சபையாரின் மரியாதையை பெற மிகவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்!

அந்த முயற்சியாகவே சம்பந்தமில்லாத வசனங்களையெல்லாம் தங்கள் அழைப்புடன் தொடர்புபடுத்தி, மற்ற அழைப்புள்ளவரிலும் தங்களை சபையாரின் முன்பாக மதிப்புமிக்கவர்களாகக் காண்பிக்க ஆசிக்கிறார்கள்!

இயேசுவின் பிறப்பின் நற்செய்தி முதலாவது அறிவிக்கப்பட்டது சபை மேய்ப்பர்களுக்கா?
சபையை நடத்துகிறவர்கள் 'மேய்ப்பர்கள்' என்றும் சபையார் 'மந்தை' என்றும் உருவகப்படுத்தப்படுகிறார்களேயல்லாமல், பாஸ்டர்கள் அசல் மேய்ப்பர்களோ, சபையார் அசல் ஆடுகளோ அல்ல.

கிறிஸ்து பிறந்தபொழுது அந்த நாட்டிலே வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்த அசல் மேய்ப்பர்களுக்கே தேவதூதர்கள் கிறிஸ்து பிறப்பின் நற்சய்தியை அறிவித்தார்கள். (லூக்கா 2:8-12)

சபை என்கிற ஒரு அமைப்பே உருவாகாத அந்நாட்களில் தூதர்கள் எப்படி சபை மேய்ப்பர்களுக்கு நற்செய்தியை அறிவித்திருக்கமுடியும்?

சபை மேய்ப்பருக்கே முதலாவது நற்செய்தி அறிவிக்கப்பட்டதென்றால்?
இரட்சகர் பிறந்திருக்கிற நற்செய்தி முதலாவது அசல் மேய்ப்பருக்கு அறிவிக்கப்பட்டதை, சபை மேய்ப்பராகிய தங்களுக்கே முதலாவது அறிவிக்கப்பட்டதாக இன்றைய பாஸ்டர்கள் எடுத்துக்கொள்வார்களானால், தாங்களே முதலாவது இரட்சிக்கப்படவேண்டியவர்கள் என்று அவர்களே அறிக்கையிடுகிறதாகிவிடும்!

மேய்ப்பர் உட்பட அனைத்து அழைப்புள்ளவரிலும் பலர் உண்மையிலேயே இரட்சிக்கப்பட்டிருக்கிறோமா என்கிற கேள்வி மக்களுக்கு எழாமல் இல்லை!

நற்செய்தி முதலாவது அறிவிக்கப்பட்ட மேய்ப்பர்களை கனப்படுத்தவேண்டுமானால்?
முதலாவது நற்செய்தி அறிவிக்கப்பட்ட மேய்ப்பர்களை கனப்படுத்தவேண்டுமானால், அதற்கு இன்று சாத்தியமே இல்லை. ஏனெனில் அவர்களில் ஒருவரும் இன்று உயிரோடு இல்லை!

அவர்கள் நினைவாக மேய்ப்பர் வர்க்கத்தை கனப்படுத்தவேண்டுமானால், இன்று அசல் ஆடுகளை மேய்க்கிறவர்களையே கனப்படுத்தவேண்டும்!

முதன்முதல் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி அறிவிக்கப்பட்ட மேய்ப்பர்களை கனப்படுத்தவேண்டும் என்று தேவன் கட்டளையிடவுமில்லை.

கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி முதலாவது அறிவிக்கப்பட்ட மேய்ப்பர்களே: "கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி முதலாவது எங்களுக்குதான் அறிவிக்கப்பட்டது. ஆகையால் மக்களே இதை சிந்தையில் வைத்து எங்களை கனம்பண்ணுங்கள்" என்று ஊர் ஊராய் போய் விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை!


இன்றைய மேய்ப்பர்கள் தங்களை திருத்திக்கொள்ளாவிட்டால்?
இன்றைய சபை மேய்ப்பர்கள் தங்கள் ஊழியமே மேலானது என்றும், மற்ற அழைப்புள்ளவர்களின் ஊழியம் தங்கள் ஊழியத்திற்கு கீழானவை என்றும் அகந்தை கொள்வது ஏன்? இதற்கு வேதத்திலிருந்து ஒரு ஆதாரத்தையாகிலும் காண்பிக்கமுடியுமா?

வேத ஒழுங்கின்படி பிற அழைப்புள்ளவர்களுடன், குறிப்பாக அப்போஸ்தலர் மற்றும் தீர்க்கதரிகளுக்கு அடுத்த இடத்திலிருந்து (1கொரி.12:28) சபையை நடத்த இவர்கள் மறுப்பது ஏன்?

பிற அழைப்புள்ளவர்களை சபை ஊழிய அழைப்பில்லாதவர்களாகவும், சபையை நடத்தும் அனுபவமற்றவர்களாகவும், தங்களை சபை ஊழியராகவும், சபையை நடத்தும் உரிமை தங்களுக்கு மட்டுமே இருப்பதாகவும், தாங்கள் மட்டுமே ஆத்துமாக்களின் உத்தரவாதிகள் என்றும் ஒரு போலியான பிம்பத்தை கட்டமைப்பதேன்?

தங்கள் ஊழியத்துடன் சற்றும் தொடர்பில்லாதக் காரியங்களையெல்லாம் தங்கள் ஊழியத்துடன் தொடர்புபடுத்தி தங்கள் அழைப்பை சபையார் முன்பு பிரமாண்டமாகக் காண்பிக்கக் காரணம் என்ன?

"தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்" என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்க (2 கொரி.10:18), இவர்கள் தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்ளக் காரணம் என்ன?

"ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்" என்று ஆண்டவர் சொல்லியிருக்க

(யோவான் 12:26), இவர்கள் மனுஷரின் கனத்தைப்பெற ஆவலாயிருப்பது அருவருப்பல்லவா?

ஆதிசபை ஊழியர்கள் மனுஷரால் வரும் மகிமையை தேடாதிருக்க (1தெசலோ.2:6), மனுஷரின் மகிமையைத் தேடி அலையும் பகுத்தறிவில்லாத மேய்ப்பர்கள் தங்களை திருத்திக்கொள்ளாவிட்டால், வேதத்தை நன்றாய் பகுத்தறியும் மக்களின் மதிப்பை இழந்துபோக நேரிடும் அல்லவா?

மேய்ப்பர் உட்பட எந்த அழைப்புள்ளவரும் மற்றவரின் அழைப்பைவிட தங்கள் அழைப்பே சிறந்தது என்றோ, மற்ற அழைப்புள்ளவர்களைவிட தாங்களே சிறப்பாக ஊழியம் செய்கிறதாகவோ மேட்டிமைகொள்வது கண்டனத்திற்குரியதாகும்!

தேவன் நம்மை போட்டி நடத்த அழைக்கவில்லை. தமது சபை நடத்தவே அழைத்திருக்கிறார். ஊழியங்களில் வித்தியாசம் காணப்பட்டாலும் நோக்கம் ஒன்றுதான் என்பதை ஐந்தவித அழைப்புள்ள ஊழியரும் உணரவேண்டும்!! (எபே.4:13-15)
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920


1. பண ஆசையை, பொருளாசையை, ஐசுவரியவான்களாகவேண்டும் என்கிற விருப்பத்தை தூண்டாமல், போதுமென்கிற மனதுடன் தேவனைப் பற்றிக்கொள்ளத் தூண்டுகிறவைகளாக ....* [எபி.13:5; 1தீமோ.6:6-10]

*2. அநுதின தேவைகளுக்கு தேவனை சார்ந்துகொள்ளத் தூண்டுகிறவைகளாக ....* [மத்.6:11, 19]

*3. நாளைக்காகக் கவலைப்படாதிருக்க வழிநடத்துகிறவைகளாக ....* [மத்.6:33,34]

*4. தேவன் நமது தேவனாகவும், நாம் அவருடைய ஜனங்களாகவும் இருப்பதற்கேற்ப, ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்க நம்மை தூண்டுகிறவைகளாக ....* [2கொரி.6:14-7:1]

*5. இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகத் தூண்டுகிறவைகளாக ....* [2பேதுரு 1:3-8; தீத்து 2:11-13]

*6. நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப் பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் உண்டாகும்படி வழிநடத்துகிறவைகளாக ....*
[தீத்து 1:3; 2:12]

*7. கிறிஸ்துவுக்குள்ளான ஆவிக்குரிய சகல உன்னத ஆசீர்வாதத்தையும், அவருக்குள் வாக்குப்பண்ணப்பட்ட பரலோக வாழ்வையும் நாடப்பண்ணுகிறவைகளாக ....* [எபே.1:3; மத். 6:20,21; 2கொரி.1:18-22]
இருக்கவேண்டும்!!
க. காட்சன் வின்சென்ட்


===========================
தயவு செய்து "உலகம்" பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள்..... பல போதகர்கள் இதைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் அவர்கள் சினிமா ஹீரோக்கள் போல் ஆடை அணிந்து தங்கள் ஆடிட்டோரியத்தை டிஸ்கோ வழிபாட்டு இடமாக மாற்றுகிறார்கள்! உலகம் மற்றும் ஆன்மீகம் என எங்கே கோடு போடுவது?
================================
'உலகம்' என்பது என்ன என்பதை இன்று அநேக கிறிஸ்தவர்கள், குறிப்பாக ஊழியர்கள் விளங்கிக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை!

உலகம் என்பது என்ன?
*"உலகத்திலும்* உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் *உலகத்தில்* அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய *உலகத்திலுள்ளவைகளெல்லாம்* பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் *உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும்* ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்" என்று யோவான் சொல்லுகிறதை கவனியுங்கள். (1யோவான் 2:1517

யோவானின் கூற்றின்படி: மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இவை எங்கே இருக்கின்றனவோ, அல்லது மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இவைகளை எது உண்டாக்குகிறதோ அதுதான் உலகம்!

தேவனுடைய சித்தத்திற்கு மாறான எந்தக் காரியமும் அல்லது இச்சையை உண்டாக்கும் எந்தக் காரியமும் 'உலகம்' என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.

உலகத்துக்குப் பின்னால் இருப்பது யார்?

"மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் *பிதாவினாலுண்டானவைகளல்ல"* என்கிற யோவான், *அவை உலகத்தினாலுண்டானவைகள்"* என்று அடையாளம் காட்டுகிறார். (1யோவான் 2:16)

    அப்படியானால்,உலகத்துக்குப் பின்னால் இருப்பது யார்?

"இந்த உலகத்தின் அதிபதி" என்று இயேசுகிறிஸ்துவினால் அடையாளம் காட்டப்படுகிற பிசாசானவனே
(யோவான் 14:30)

மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இவைகளை உண்டாக்குகிற

உலகத்துக்கு பின்னால் செயல்படுகிறான். "ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவி" என்று பவுல் அவனைக் குறிப்பிடுகிறார்.
(எபே.2:2)

தேவனுக்கு கீழ்ப்படியாதிருக்கவும், இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடி வாழவும் தூண்டுகிறவன் அவனே.

"உலகத்தின் ஆவி" என்றும் பவுல் இவனை குறிப்பிடுகிறார். (1கொரி.2:12) தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியானவர், தேவனுடையவர்களுக்கு தேவனால் அருளப்பட்டவைகளை அறிவிக்கிறதுபோல, உலகத்தின் ஆவி மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இவைகளை உண்டாக்குகிற காரியங்களில் உலகத்துக்குரியவர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

கிறிஸ்தவரும் உலகத்தாரும் ஒன்றா?
உலகத்தின் ஆவியைப்பெற்றிருக்கிற உலகத்து மக்களும், தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றிருக்கிற (1கொரி.2:12) கிறிஸ்தவர்களும் ஒன்றாகிவிடமுடியுமா? உலகத்து மக்களும் கிறிஸ்தவரும் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரேமாதிரி ஜீவிக்கமுடியுமா?

"நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும், *நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும்,* உலகம் உங்களைப் பகைக்கிறது" என்று ஆண்டவர் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது. (யோவான் 15:19)

கிறிஸ்தவர்கள் மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இவைகளை உண்டாக்கும் உலகத்துக்கு (உலகக் காரியங்களுக்கு) உரியவர்கள் அல்ல.

மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இவைகளை உண்டாக்கும் உலகத்திலிருந்து நம்மை ஆண்டவர் தமக்கென்று தெரிந்துகொண்டிருக்கிறார்.

இப்படியிருக்க, மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமையுள்ள உலகத்தாரைப்போல, கிறிஸ்தவரால் ஒருபோதும் வாழமுடியாது!

உலகத்தை அனுபவிக்க கிறிஸ்தவனுக்கு அனுமதியுண்டா?
"உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் *அன்புகூராதிருங்கள்.* ஒருவன் உலகத்தில் *அன்புகூர்ந்தால்* அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை" என்று எச்சரிக்கிறார் யோவான். (1யோவான் 2:15)

ஒரு கிறிஸ்தவன் மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இவைகளுக்கு இடந்தரவோ, இவைகள் உண்டாகக் காரணமாயிருக்கும் காரியங்களில் மனதை செலுத்தவோ கூடாது. (1யோவான் 3:16)

தன் நெஞ்சின் வழிகளிலும், தன் கண்ணின் காட்சிகளிலும் நடக்க கிறிஸ்தவனுக்கு அனுமதியில்லை. (பிர.11:9)

தனக்குள்ளவைகளைக் குறித்தப் பெருமையுள்ளவனாக இருக்கவும் அவனுக்கு அனுமதியில்லை. (1தீமோ.6:17)

"விபசாரரே, விபசாரிகளே, *உலக சிநேகம்* தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் *உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன்* தேவனுக்குப் பகைஞனாகிறான்" என்று யாக்கோபு எச்சரிக்கிறது கவனிக்கத்தக்கது. (யாக்.4:4)

தன்னில் மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இவைகளை உண்டுபண்ணக்கூடிய காரியங்களில் ஆர்வமுள்ள கிறிஸ்தவன், தேவனுடனான உறவில்: தன் மனைவிக்கு உண்மையாயிராத புருஷனைப்போலபோலவும், தன் புருஷனக்கு

உண்மையாயிராத மனைவியைப்போலவும் உண்மையற்றவனாக இருக்கிறான்!

தனக்கு உண்மையாயிராத புருஷனோடு மனைவியும், தனக்கு உண்மையாயிராத மனைவியோடும் புருஷனும் எப்படி ஐக்கியம் பாராட்டமுடியாதோ, அப்படியே மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இவைகளை உண்டுபண்ணக்கூடியக் காரியங்களுக்கு (உலகத்துக்கு) இடங்கொடுக்கிற கிறிஸ்தவனோடு தேவன் ஐக்கியம் பாராட்டமுடியாது!

ஒரு கிறிஸ்தவனால், குறிப்பாக ஒரு ஊழியனால் எப்படி உலகத்தானைப்போல இருக்கமுடிகிறது?

"நீங்கள் *இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,* தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே *மறுரூபமாகுங்கள்"* என்று கிறிஸ்தவருக்கு ஆலோசனைத் தருகிறார் பவுல்.(ரோமர் 12:2)

தாங்கள் நினைக்கும் விதம் தேவனால் மாற்றப்பட்டு,

புதிய மனிதர்களாக மாறி, தாங்கள் எப்படி வாழ வேண்டும், தாங்கள் என்ன செய்ய தேவன் விரும்புகிறார், எது நல்லது, தேவனுக்கு எது மகிழ்ச்சி அளிக்கும் என்பதை புரிந்துகொண்டவர்களால்: நடை உடை பாவணைகளில், விருப்பங்களில், தேர்வுசெய்கிறதில் உலகத்தாரைப் போலவே இருக்கமுடியாது. அதாவது, இந்த உலகத்தார் எதை பெரிதாகக் கருதுகிறதுகிறார்ளோ, அதையே பெரிதாகக் கருதவும்; உலகத்தார்

எதன்பின்னால் ஓடுகிறார்களோ, அதன்பின்னால் ஓடவும்; உலகத்தார் எவ்வாறு புசிக்கிறார்களோ குடிக்கிறார்களோ உடுத்துகிறார்களோ, அவ்வாறெல்லாம் புசிக்கவும் குடிக்கவும் உடுத்தவும் அவர்களால் கூடாது.

*"இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள்* அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும். *இவ்வுலகத்தின் வேஷம்* கடந்துபோகிறதே" என்று அறிவுறுத்துகிறார் பவுல். (1கொரி.7:31)

இந்த உலகத்தின் வேஷம் (fashion - நடப்பு வழக்கு) நிலையானது அல்ல. அது ஒழிந்துப்போகக் கூடியது. உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். (1யோவான் 2:17) இந்த உலகத்தை கிறிஸ்தவன் தகாதவிதமாய் அனுபவிக்கக்கூடாது. அதாவது, இந்த உலகில் உள்ள விஷயங்கள் முக்கியமில்லை என அவன் வாழவேண்டும்.

உலகத்திலுள்ள எல்லாவற்றையும் அநுபவிக்க கிறிஸ்தவருக்கும் அதிகாரம் இருக்கலாம், ஆகிலும் எல்லாம் கிறிஸ்தவ ஜீவியத்திற்கு தகுதியாயிராது. எல்லாவற்றையும் அநுபவிக்க கிறிஸ்தவருக்கும் அதிகாரம் இருக்கலாம், ஆகிலும் ஒன்றிற்கும் அடிமைப்படக்கூடாது! (1கொரி.6:12) எல்லாவற்றையும் அனுபவிக்க நமக்கு அதிகாரமிருந்தாலும், கிறிஸ்தவ ஜீவியத்திற்கு தகுதியாயிராத, பக்திவிருத்தியை உண்டாக்காத உலகத்தின் எந்தக்காரியத்தையும் நாம் அனுபவிக்கக்கூடாது! (1கொரி.10:23)

நேர்மையாய் உழைத்து தேவனுடைய கிருபையினால் கிறிஸ்தவர் ஐசுவரியவான்களாய் இருப்பது தவறல்ல. (1தீமோ.6:17) ஆனால், ஐசுவரியவான்களாக விரும்பி சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிற கிறிஸ்தவர்கள் உலகத்துக்குள் சிக்கிக்கொள்ளுகிறார்கள்.
(1தீமோ.6:9)

நேர்மையான வழியில் கிறிஸ்தவர்கள் பணக்காரராவது தவறில்லை. ஆனால், எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிற பண ஆசைக்கு இடங்கொடுத்து, பணத்தை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொள்ளுகிற கிறிஸ்தவர்கள் உலகத்தாராகிவிடுகிறார்கள். (1தீமோ.6:10)

ஐசுவரியவானான கிறிஸ்தவன் உலகத்தானல்ல, ஐசுவரியவானாகவேண்டும் என்று தவறான வழியைத் தேர்ந்தெடுக்கிற கிறிஸ்தவனே உலகத்தான்!

பணக்காரணாக இருக்கும் கிறிஸ்தவன் உலகத்தானல்ல, பணக்காரனாக தவறான வழியைத் தேர்ந்தெடுக்கிற கிறிஸ்தவனே உலகத்தானாகிறான்!

உலகத்தாரைப்போலவே ஜீவிக்கிற கிறிஸ்தவர்களில் இருப்பது உலக ஆவியா? அல்லது தேவஆவியா?

தங்கள் நடை உடை பாவணைகளில், விருப்பங்களில், தெரிந்தெடுப்பில், வாழ்க்கை முறையில் அப்படியே உலகத்தாரைப் பின்பற்றுகிற கிறிஸ்தவர் மற்றும் ஊழியர் அநேகரை இன்று காணமுடிகிறது!

இவர்கள் உலகத்தாரைப்போலவே தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,

தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருக்கிறார்கள். (2தீமோ.3:2-5)

*"நான் சினிமா ஹீரோவைப்போல இருப்பதாக சிலர் சொல்லுகிறார்கள். நான் சினிமா ஹீரோவைபோல இல்லை. சினிமா ஹீரோதான் என்னைப்போல இருக்கிறான். தேவன் என்னை இப்படித்தான் வைத்திருக்கிறார். நான் என்னை மாற்றிக்கொள்ளமுடியாது"* என்று பகிரங்கமாய் அறிக்கையிட்டார் (மறைந்த) பிரபல ஊழியர் ஒருவர்.

இன்று பல கிறிஸ்தவர்கள் குறிப்பாக பல ஊழியர்களும் ஊழியக்காரிகளும் சினிமா ஹீரோ மற்றும் ஹீரோயின்களைபபோலவே காட்சியளிக்க விரும்புகிறார்கள். இவர்கள் தங்கள் ஆராதனைக் கூடங்களை திரையரங்குகளாகவும், தங்களைப் பின்பற்றுகிற கிறிஸ்தவர்களை தங்கள் ரசிகர் கூட்டமாகவும் மாற்றிவருகிறார்கள்!

இவர்களுடைய அலங்காரம், கவர்ச்சியான உடை, அசிங்கமான நடனம், ஈனக்குரல் பாடல், காதை கிழிக்கும் இசை இவையனைத்தும் சினிமா உலகையே நினைவுபடுத்துகின்றன.

இவர்கள் உலகத்தினாலுண்டான மாம்சத்தின் இச்சையையும், கண்களின் இச்சையையும், ஜீவனத்தின் பெருமையையும் உடையவர்களாய் இருக்கிறார்கள்! (1யோவான் 2:16) ஆகிலும் தாங்கள் ஆவியில் நிறைந்து அந்நியபாஷைப் பேசுகிறதினால், தங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருப்பதாக அறிக்கையிடுகிறார்கள்.

*இன்று அநேகக் கிறிஸ்தவர்கள் பேசுகிறது உண்மையான அந்நியபாஷையோ, அவர்கள் பெற்றிருக்கிறது உண்மையில் பரிசுத்தஆவியோ அல்ல!*

பரிசுத்தஆவியின் அபிஷேகத்தைக்குறித்த அடிப்படை வேதஅறிவே இல்லாத இன்றைய பல அபிஷேக ஆராதனை வீரர்களால் சில வார்த்தைகளை ஒப்பிக்க பழக்குவிக்கப்பட்டு, கூடுதலாக சில வார்த்தைகளை சேர்த்துக்கொண்டு, பல ஆண்டுகளாக அவைகளையே திரும்பத் திரும்ப ஒப்பித்துக்கொண்டு, ஜீவியத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், தாங்கள் பரிசுத்தஆவியைபெற்றிருக்கிறதாக தங்களை வஞ்சித்துக்கொண்டிருக்கிற ஒரு பெரிய கூட்டம் இன்றைய ஆவிக்குரிய கிறிஸ்தவ உலகத்திலும்; உண்மையான மனந்திரும்புதல் இல்லாமல், முழுக்கு ஞானஸ்நானம் பெறாமல், இயேசுவை விசுவாசித்தபோதே, அல்லது தெளிக்கப்பட்டபோதே தங்களில் ஆவியானவர் வந்துவிட்டதாக தங்களை வஞ்சித்துக்கொள்ளும் ஒரு பெரியக்கூட்டம் இன்றைய பாரம்பரிய சபைகளிலும் உண்டு. ஜீவியத்தில் இந்த இரண்டு கூட்டமும் ஒரேமாதிரி இருப்பார்கள்!

இவர்களுக்குள் உண்மையில் இருப்பதும், இவர்களில் உண்மையில் கிரியை செய்கிறதும் உலகத்தின் ஆவியே!

*ஆவியின் கனிகள் வெளிப்படாத (கலா.5:22,23; மத்.7:15-20); இயேசுகிறிஸ்துவின் சாயலை வெளிப்படுத்தாத (மத்.5:3-10; 2கொரி.3:18); மாம்சத்தின் இச்சையையும், கண்களின் இச்சையையும், ஜீவனத்தின் பெருமையையும் வெளிப்படுத்துகிற (1யோவான் 2:16) கிறிஸ்தவனுக்குள் இருப்பது நிச்சயம் பரிசுத்தஆவியல்ல, அது இந்த உலகத்தின் அதிபதியின் ஆவியே!*

[மெய்யான அபிஷேகம், சரியான அந்நியபாஷை வரம் பற்றி சத்திய அடிப்படையில் அறிந்துகொள்ள வாஞ்சிப்போர், அவைகுறித்து அடியேன் எழுதியுள்ள தொடரை பெற்றுக்கொள்ள அணுகவும்]

இப்படியிருக்க, உலக ஆவியுள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் ஊழியர்களையும்; தேவஆவியுள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் ஊழியர்களையும் பொதுவாக கிறிஸ்தவராகப் பார்க்கிறதைத் தவிர்க்கவேண்டும்!

*"தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால்,* நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். *கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல" என்கிறார் பவுல். (ரோமர் 8:9)

கிறிஸ்துவின் ஆவியையுடையவர்கள் நிச்சயம் மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இருக்கமாட்டார்கள்! கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்கள் மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிற தேவனுடைய புத்தரராயிருக்கிறார்கள்! (ரோமர் 8:1,14)

*மாம்சத்தின்படி நடக்கிற கிறிஸ்தவர்களுக்கும், குறிப்பாக ஊழியர்களுக்கும் தேவனுடைய ஆவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!*

உலக ஆவியால் இயக்கப்படுகிற உலகப்பிரியர்களான ஊழியர்களை திருத்த எடுக்கிற முயற்சி பெரும்பாலும் வீணாகிவிடும்! மாறாக, அறியாமல் அவர்களிடம் சிக்கியிருக்கிறவர்களின் மனக்கண்கள் திறக்கப்பட ஜெபிக்கவும்; புதிதாக எவரும் அவர்களுடைய வஞ்சக வலையில் சிக்கிக்கொள்ளாதபடிக்கு எச்சரிக்கவும் வேண்டியதே அவசியம்!!
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.