=======================================
எருசலேம் சபையில் இயேசுவின் தாயாகிய மரியாள்!
=======================================
அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள். அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். (அப்1:13,14)
இயேசுவின் சீஷியாக மரியாள்!
எருசலேம் சபையின் துவக்கத்தில் அப்போஸ்தலர் உட்பட அங்கிருந்த 120 சீஷரில் இயேசுவின் தாயாகிய மரியாளும் இருந்தார்கள்.
திருச்சபையைக் கட்டுகிறவரும், அதன் உரிமையாளருமான (மத்.16:18; அப்.20:28; ரோமர் 16:16) இயேசுவின் தாயார் ஸ்தானத்தில் இருந்த மரியாளுக்கு, எருசலேம் சபையில் மற்றவருக்கு மேலாக எந்தவித சிறப்பு சலுகையும் அளிக்கப்படவில்லை.
இயேசுவின் தாயார் என்கிற தோரணையில் மரியாள் எந்தவித செல்வாக்கையும் சபையில் செலுத்தவில்லை.
தான் ஆண்டவரின் தாயார் என்கிற சிந்தையில் மரியாள் அவரை அணுகியபோதெல்லாம், அவள் தனது தாயின் ஸ்தானத்தில் இருக்கிற ஒரு சராசரி பெண்மணிதான் என்பதை ஆண்டவர் அவளுக்கு நினைவுபடுத்தத் தவறியதில்லை. (லூக்கா 2:48-51; மத்.12:46-50 யோவான் 2:1-5)
தூதருடைய அறிவிப்பினாலே தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்ட மேய்ப்பர்கள், அந்தப் பிள்ளையை (இயேசுவைக்) குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியை மட்டுமே பிரசித்தம்பண்ணினார்கள்.* (லூக்கா 2:8-17)
யோசேப்பு மற்றும் மரியாளை குறித்து அவர்கள் பிரசித்தம்பண்ணவில்லை.
இயேசு பிறந்தபோது கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள்
வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து பிள்ளையை மட்டும் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் பிள்ளைக்குக் காணிக்கையாக வைத்தார்கள். (மத்.2:1,11)
யோசேப்பையும் மரியாளையும் சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்துகொண்டு, அவர்களுக்கு காணிக்கை செலுத்தவில்லை.
மரியாள் இயேசுவின் அசல் தாயாக இருந்திருந்தால் அவருக்கு செலுத்தப்பட்ட மரியாதை அனைத்தும் அவளுக்கும் செலுத்தப்பட்டிருக்கும்.
"இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை" என்று சொன்ன மரியாள்
(லூக்கா 1:38): இடையில் இயேசுவின் தாய் என்கிற சிந்தையில் சிலநேரம் தடுமாறினாலும், இறுதிவரை அவள் ஆண்டவரின் தாழ்மையுள்ள அடிமையாகவே இருந்தாள். (லூக்கா 1:48)
அப்போஸ்தலர் 1:14 தவிர்த்து எருசலேம் சபையில் மரியாளின் நடபடிகள் வேறு எங்கும் காணப்படவில்லை.
சராசரி பெண்மணியாக மரியாள்!
மரியாள் ஒரு சராசரி பெண்மணியாக மற்ற 119 சீஷருடன் ஒருமனப்பட்டு ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தாள். (அப்.1:14,15)
பெந்தெகொஸ்தே நாளில் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்து,
பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசின 120 சீஷர்களில் மரியாளும் ஒருத்தியாக இருந்தாள். (அப்.2:1-4)
தாங்கள் கூடியிருந்த இடம் அசையத்தக்கதாக ஜெபம்பண்ணி, பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னவர்களில் மரியாளும் இருந்திருக்கக்கூடும். (அப். 4:24-31)
"ஆண்டவரின் தாயார்"* என்று சிறப்பு மரியாதை அளித்து, மரியாளுக்கு சபையில் உயர்ந்த இடம் எதையும் அப்போஸ்தலர் அளிக்கவில்லை.
மரியாள் யார் என்கிற வெளிப்பாட்டை அவர்கள் சரியாக பெற்றிருந்தார்கள்.
கத்தோலிக்க போப்பு முதல் கடைகோடி பங்குதந்தைகள் வரை இந்த வெளிப்பாட்டைப் பெற்றுக்கொண்டால் எவ்வளவு நலமாக இருக்கும்.
தான் ஆண்டவரின் தாயார் என்று மரியாள் சபையில் எந்த சிறப்பு மரியாதையையும் எதிர்பார்க்கவில்லை. மற்ற சீஷர்களைப்போலவே அவளும் இயேசுவை பின்பற்றும் சீஷியாகவே இருந்திருக்கிறாள்.
பந்திவிசாரிப்பு பொறுப்பிலிருந்த ஸ்தேவான் மற்றும் பிலிப்பு போன்றவர்களைக்கொண்டு தேவன் பெரிய அற்புத அடையாளங்களை செய்திருக்கிறார். (அப்.6:8; 8:5-7)
ஆனால் மரியாளைக்கொண்டு தேவன் என்னசெய்தார் என்கிற தகவலே இல்லை.
இதிலிருந்து ஆதிசபையில் இருந்த மற்றப் பெண்மணிகளைப்போலவே தேவன் மரியாளையும் நடத்தியிருக்கிறார் என்று விளங்குகிறதல்லவா?
தங்கள் தாய், மனைவி, மகள், மறுமகள் போன்ற ஸ்திரிகளை சபையில் முக்கிய பொறுப்புகளில் வைத்து அழகுபார்க்கும் ஊழியர்கள் இதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்!
தனது குடும்பத்து பெண்மணிகள் என்பதற்காக தேவனுடைய சபையில் சிறப்பு அந்தஸ்தையும், முக்கியப் பொறுப்புகளையும் ஒரு ஊழியர் கொடுப்பது தனது ஊழிய அழைப்பை துஷ்பிரயோகம் செய்து, தேவனுடைய சபையை சிறுமைப்படுத்துவதாகும்!
திருச்சபையிலுள்ள மற்ற சகோதரிகளுக்கு கொடுத்துள்ள அதே இடத்தை தங்கள் குடும்பத்து சகோதரிகளுக்கும் கொடுப்பதுதான் ஆரோக்கியமான ஊழியருக்கு அடையாளமாகும்!
தங்கள் குடும்பத்து ஸ்திரீகளுக்கு திருச்சபையில் சிறப்பு அந்தஸ்தையும், ஊழியத்தையும் ஊழியக்காரர்கள் கொடுக்கவேண்டும் என்கிற பரிந்துரை எதையும் தேவன் செய்யவில்லை.
சுவிசேஷகர் பிலிப்புவுக்கு தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் இருந்தார்கள். (அப்.21:9)
இது சிறப்பு அந்தஸ்தோ அல்லது அழைப்போ அல்ல. அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லும் வரத்தை உடையவர்களாக இருந்தார்கள்.
தீர்க்கதரிசனவரம் ஊழியக்காரரின் குடும்பத்தாருக்கு மட்டுமே பாத்தியப்பட்டதல்ல, அது அனைவருக்கும் பொதுவானது. (ரோமர் 12:6; 1கொரி.14:1,4,5)
திருச்சபை தேவனுக்கு மட்டுமே சொந்தமானது. (1கொரி.1:2; 10:33; 11:16,22; 15:9; 2கொரி.1:2; கலாத். 1:13; 2தெச.1:4; 1தீமோத்.3:5,15) சபைக்கு தேவனால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற ஐந்துவித ஊழியரில் (எபேசி.4:11-15) எவரும் தேவனுடைய சபையை "என் சபை" என்று உரிமைகொண்டாடமுடியாது!
சபையாரின் காணிக்கையைக் கொண்டு தங்கள் குடும்ப அறக்கட்டளையின் மூலம் வாங்கப்பட்ட பொருட்களையும், நிலங்களையும், வாகனங்களையும், கட்டப்பட்டக் கட்டிடங்களையும் (வேத அடிப்படையற்றக் காரியம் என்றாலும்) சட்டப்படி தங்கள் குடும்பத்திற்கு சொந்தமானதாக ஊழியர்கள் உரிமைப்பாராட்டிக்கொள்ளக்கூடும்.
ஆனால், தேவஜனங்களாகிய நிஜமான திருச்சபையை தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மட்டுமே சொந்தமானவர்களாக உரிமைப்பாராட்டவும், தங்கள் குடும்பத்தாரை மட்டுமே அவர்களுக்குள் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கவும் எவருக்கும் உரிமையில்லை.
தேவனுடைய பண்ணையிலும் மாளிகையிலும் கூலிக்கு வேலைசெய்கிறவர்கள் (1கொரி.3:5-9), பண்ணையும் மாளிகையைும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மட்டுமே சொந்தம் என்று சொல்லக்கூடுமா?
ஆனால் இந்த அநியாயத்தை இன்று ஊழியக்காரர்கள் செய்கிறோம்!
"என் ஊழியத்தின் வளர்ச்சிக்கு என் மனைவிதான் காரணம், என் மனைவி இல்லாவிட்டால் என் ஊழியமே இ்ல்லை" என்று தங்கள் மனைவிகளை கொண்டாடுகிற ஊழியர்கள் சிலர் உண்டு.
ஒருவேளை இவர்களுடைய மனைவிகளே இவர்களுக்கு தெய்வமாக இருக்கலாம்! இவர்களுடைய மனைவிகளே இவர்களை ஊழியத்திற்கு அழைத்திருக்கலாம்! இவர்களுடைய மனைவிகளே இவர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு பெலன் கொடுத்திருக்கலாம்! இவர்களுடைய மனைவிகளே இவர்கள் அற்புதங்களை செய்கிறதற்கு வல்லமை வரங்களைக் கொடுத்திருக்கலாம்! இவர்களுடைய மனைவிகளின் நாமத்தினாலேயே இவர்கள் பிசாசுகளைத் துரத்தியிருக்கலாம்! இவர்களின் மனைவிகளின் வார்த்தைகளையே இவர்கள் வேதவாக்காகப் பிரசங்கித்திருக்கலாம்!
"எங்க பாஸ்டர் ஒன்னுமில்ல, எங்க பாஸ்டரம்மா இல்லனா சபையே இல்ல" என்று சில சபை மக்கள் சொல்லுகிறதையும், அதை பாஸ்டர்கள் இரசிக்கிறதையும் பார்க்கமுடிகிறது!
புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் தங்களைக்கொண்டு நடப்பித்தவைகளை (ரோமர் 15:18) இவர்கள் மறுதலிக்கிறார்கள் அல்லவா?
தங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு தாங்கள் தங்களாலே தகுதியானவர்களாய் இராமல், தேவனால் தகுதியடைந்ததையும். புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, தேவனே தங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினதையும் (2 கொரிந்.3:5,6) இவர்கள் மறுதலிக்கிறார்கள் அல்லவா?
எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறத்தும்படிக்கு, அவரையே தாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ண,
போராடிப் பிரயாசப்படும்படிக்கு தங்களுக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற கிறிஸ்துவினுடைய பலத்தை (கொலோ.1:28,29) இவர்கள் மறுதலிக்கிறார்கள் அல்லவா?
தாங்கள் தேவனுடைய தேவகிருபையினாலே இருக்கிறதையும்,
, தங்களுடனே இருக்கிற தேவகிருபையே .
தங்களை அதிகமாய்ப் பிரயாசப்படவைத்தது (1கொரிந்.15:10) என்பதையும் இவர்கள் மறுதலிக்கிறார்கள் அல்லவா?
"ஆண்டவரின் தாயார்" என்று கத்தோலிக்கத் திருச்சபையினர் மரியாளின் விக்கிரகத்தை தங்கள் திருச்சபையில் உண்டாக்கிவைத்திருக்கிறார்கள். பெந்தெகொஸ்தே சபையினர் நமது தாயார், மனைவி, மகள், மறுமகள், பேர்த்தி போன்ற பெண்மணிகளை சபையாருக்கு முன்பாக நடமாடும் விக்கிரகங்களாக்கி வைத்திருக்கிறோம்!
தங்கள் மனைவிகளின் ஜெபத்தினாலும் உழைப்பினாலுமே சபை வளர்ந்திருக்கிறது என்று பெருமைப்படுக்கொள்ளுகிற ஊழியர்கள்: சபை, சபை நிர்வாகம், சபை ஊழியம், சபைக்கான உபதேசம் இவைகளைப்பற்றி சத்திய அடிப்படையிலான அறிவற்ற தங்கள் மனைவிகளின் ஆலோசனைகளுக்கு இடமளித்ததினால், தேவன் எதிர்பார்த்த அளவுக்கு அவருடைய சபை வளராதிருக்கிறதை அறிந்துகொண்டால் எவ்வளவு நலமாக இருக்கும்!
["நமக்குப்பின்பு சபை, சபையின் வருமானம், சபையின் ஆஸ்தி நமது குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் இருக்காது" என்று ஊழியர்கள் தங்கள் துணைவியார்களிடம் சொல்லட்டும், அவர்களில் எத்தனைப்பேர் ஆண்டவருக்காக தங்கள் புருஷருடன் இணைந்து உழைக்கிறார்கள் என்பது அப்போதுத் தெரிந்துவிடும்!]
"இயேசுவின் தாயார்" என்று அப்போஸ்தலர் மரியாளை எருசலேம் சபையின் தலைமை நிர்வாகியாக வைத்திருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்!
இயேசுவின்மேல் மரியாளுக்கு பாசம் இருந்தது. ஆனால் அவளுக்கு அவரைப்பற்றிய சரியான அறிவு இல்லை. (லூக்கா 2:48,49; யோவான் 2:1-4; 19:25,26)
இயேசுவைப்பற்றி சரியான தெளிவில்லாத மரியாளிடம் சபையை ஒப்புவித்திருந்திருந்தால் எருசலேம் சபை எவ்வளவுத் தெளிவில்லாததாய் இருந்திருக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள்!
சபை, சபை ஊழியம், சபை நிர்வாகம் இவைகளைப்பற்றிய வேதஅடிப்படையிலான அறிவற்ற ஊழியக்காரர்களே தங்கள் காலத்தில் தங்களுக்கு சமமான இடத்திலும், தங்களுக்குப் பின்பு தங்கள் இடத்திலும் சபை, சபை ஊழியம், சபை நிர்வாகம் இவைகளைப்பற்றிய வேதஅடிப்படையிலான அறிவற்ற தங்கள் குடும்பத்துப் பெண்மணிகளை நியமித்துக்கொள்கிறார்கள்.
தேவனுடைய திருச்சபையில் சகோதரிகளுக்கும் ஊழியம் உண்டு என்பதை மறுக்கமுடியாது. (லூக்கா 8:3; அப்.12:5,12,13; 18:24-26; 21:9; ரோமர் 16:1-5) ஆனால் அவர்கள் ஊழியக்காரர்களின் குடும்பத்து சகோதரிகளாகத்தான் இருக்கவேண்டும் என்பதற்கு வேதாகம விதி எதுவும் இல்லை.
தங்கள் குடும்பத்து பெண்மணிகளை திருச்சபையின் தலைமை பொறுப்பில் வைக்கிற ஊழியக்காரர்கள் கெங்கிரேயா ஊர் சபையின் ஊழியக்காரியாகிய சகோதரி பெபேயாளை உதாரணமாகக் காண்பிக்கிறார்கள். (ரோமர் 16:1,2)
பெபேயாள் கெங்கிரேயா ஊர் சபையில் தலைமை ஊழியக்காரியாக அல்ல, பணிவிடை ஊழியக்காரியாக (deeakonos) இருந்தவள் என்பது இவர்களுக்கு விளங்கவில்லை. மேலும் பெபேயாள் தன் கணவனுடைய ஊழியத்தைப் பிடித்துக்கொண்டவள் அல்ல என்பதையும் நாம் அறியவேண்டும்.
பர்னபா பவுல் தவிர அன்று இருந்த அப்போஸ்தலர் அனைவரும் திருமணமானவர்களே. (1கொரி.9:5,6) ஆனால், நம்மைப்போன்று அவர்கள் தேவனுடைய சபையில் தங்களுக்கு இணையான அல்லது தங்கள் இடத்தில் தங்கள் துணைவியார்களையோ, தங்கள் குடும்பத்துப் பெண்களையோ நியமித்ததில்லை என்பதை அறியவேண்டும்.
"அப்போஸ்தலர்கள் தங்கள் மனைவிகளுக்கு சபையில் தங்களுக்கு சமமான இடத்தை அல்லது தங்கள் இடத்தை தரவில்லை என்று பைபிள் சொல்லுகிறதா?" என்று கேட்கிற மேதாவிகள் சிலர் இருக்கக்கூடும்!
இல்லாததை இருந்திருக்கலாம் என்று யூகித்து செயல்படுத்துகிற இந்த திருக்குள்ள இருதயத்திற்கு சொந்தக்காரர்கள்: ஆதிசபை ஊழியர்கள் தங்கள் குடும்பத்தாரல்லாத விசுவாசிகளை எப்படி திருச்சபையில் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பது வெளிப்படையாகக் காணப்பட்டாலும் அதை செயல்படுத்தமாட்டார்கள்!
நமது குடும்பத்து பெண்மணிகளை நாம் தேவனுடைய திருச்சபையில் எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்கு ஆதிஅப்போஸ்தலரையே நாம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவேண்டும்!
"சபை என்னுடையதல்ல, தேவனுடையது" என்கிற எண்ணமுள்ளவர்களலால் மட்டுமே அப்படிச் செய்யக்கூடும்! மரியாளைப்போன்ற தாழ்மையான இருதயமுள்ள ஆண்டவரின் அடிமைகளான ஊழியர்களின் துணைவியார்களான சகோதரிகளால் மட்டுமே இதற்கு தங்கள் புருஷருக்கு ஒத்துழைக்கமுடியும்!!
க. காட்சன் வின்சென்ட்.
8946050920
===============================
அமாவாசை ஜெபம் , பவுர்ணமி ஜெபம் என்ற பெயரில் சபையில் ஜெபக் கூட்டங்களை நடத்துகிறார்களே, இது சரியா? தவறான கிறிஸ்தவ மதத்தை நாம் உலகத்துக்கும் கிறிஸ்தவர்களுக்கும் காண்பிக்கலாமா? இரவு ஜெபக்கூட்டத்தை "விழித்திருந்து ஜெபிக்கும் கூடுகை" என்றும், உபவாசக் கூட்டத்தை "பரிசுத்த உபவாச ஜெபக்கூடுகை" என்றும் வேதாகமப் பெயரில் நடத்தலாமா?
============================
வசன வெளிச்சத்தில் இதை ஆராய்வோம்.
அமாவாசை ஜெபம் , பவுர்ணமி ஜெபம் என்ற பெயரில் சபையில் ஜெபக்கூட்டங்களை நடத்துகிறது சரியா?
குறிப்பிட்ட நாட்களில் தேவனை ஆராதிப்பதும் ஜெபிப்பதும் யூதருடைய வழக்கமாக இருந்தது. (1நாளாக.23:30; 2நாளா.31:3; சங்.55:17; தானி.6:10)
யூதர்கள் அதை கிறிஸ்தவர்களிடமும் எதிர்பார்த்தனர். அவர்களுக்கு இசையவேண்டாம் என்று அப்போஸ்தலர் சபையை எச்சரித்தனர். (கொலோ.2:13-23)
அமாவாசைகளில் இஸ்ரவேலர் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளை செலுத்தியிருக்கிறார்கள் . (1நாளா.23:30)
ஆண்டவரும், ஆதிஅப்போஸ்தலரும் ஜெபிக்கிறதற்கோ தேவனை ஆராதிப்பதற்கோ குறிப்பிட்ட இடத்தையோ, காலத்தையோ, நாட்களையோ திருச்சபைக்கு அறிமுகப்படுத்தவில்லை.
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து ஆண்டவர் கற்பித்திருக்கிறார்
(லூக்கா 18:1-7)
அதற்காக எந்தக் குறிப்பிட்ட நாளையும் அவர் குறிப்பிடவில்லை.
ஆதிஅப்போஸ்தலர் குறிப்பிட்டநாள் என்று இல்லாமல், சபையாருக்காக எப்பொழுதும் ஜெபிக்கிறதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். (கொலோ.1:5; 4:12 1தெச.1:4; 2தெச.2:13)
எந்தசமயத்திலும் தேவனை ஸ்தோத்திரிக்கவும் (எபேசி.5:19,20), சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணவும்
(எபேசி.6:18), இடைவிடாமல் ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருக்கவும்
(கொலோ.4:2-4) அவர்கள் சபையாருக்கு போதித்தார்கள்.
அமாவாசை முழுஇரவு ஜெபம், பவுர்ணமி முழுஇரவுஜெபம், பாட்டிமை முழுஇரவு ஜெபம்,
கிருத்திகை முழுஇரவு ஜெபம் என்று சபையாரை அவர்கள் மூடநம்பிக்கைக்குள் நடத்தவில்லை.
சபை, சபை ஊழியம், சபைக்கான உபதேசம், சபை நிர்வாகம் பற்றி சத்தியத்தின் அடிப்படையிலான அறிவில்லாமல் சபையை நடத்துகிறவர்களே இப்படிச் செய்கிறார்கள்!
"அமாவாசை அன்று இரவுதான் மந்திரவாதிகள் பில்லிசூனியம் வைத்து ஆவிகளை ஏவுவார்கள். அன்று இரவு ஜெபம் செய்தால் அவைகள் அழிக்கப்பட்டுவிடும்" என்று சொல்லிதான் ஊழியக்காரர்கள் அன்று இரவு சபையாரை கூட்டிவைத்து ஜெபிக்கிறார்கள்.
"என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்" என்று சொன்ன ஆண்டவரின் நாமத்தின்மேலும் (மாற்கு 16:17), "அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" என்கிற தேவனுடைய வார்த்தையிலும்
(மத்தேயு 10:1) தங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை இவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அமாவாசை இரவு அன்று ஜெபம்பண்ணினால்தான் அசுத்தஆவிகளின் கிரியைகளை அழிக்கமுடியும் என்பதற்கு வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை!
இந்த விஷயத்தில் ஊழியக்காரர்களை திருத்துவது கடினம். இவர்களை நம்புகிற மக்களின் கண்கள் திறக்கப்படத்தான் அதிகம் ஜெபிக்கவேண்டும்!
தவறான கிறிஸ்தவ மதத்தை உலகத்துக்கும் கிறிஸ்தவர்களுக்கும் காண்பிக்கலாமா?
காண்பிக்கக் கூடாதுதான். ஆனால் நாம் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம்.
அதற்காகத்தான் ஆண்டவர் நமக்கு சம்பளம் கொடுக்கிறார் என்பதுபோல நடந்துகொள்கிறோம்!
முதலாம் நாற்றாண்டு கிறிஸ்தவ மார்க்கத்தாருக்கும், இன்றைய கிறிஸ்தவ மதத்தினருக்கும்; ஆதிசபைக்கும், இன்றைய சபைகளுக்கும்; ஆதிசபை ஊழியர்களுக்கும், இன்றைய சபை ஊழியர்களுக்கும்; ஆதிசபையின் ஊழியங்களுக்கும், இன்றைய சபைகளின் ஊழியங்களுக்கும்; ஆதிசபையின் உபதேசங்களுக்கும், இன்றைய சபைகளின் உபதேசங்களுக்கும் பெரும்பாலும் தொடர்பில்லை என்கிறதை அப்போஸ்தலர் நடபடிகள் மற்றும் நிருபங்களை கருத்தாய் ஆராய்வோர் அறிந்துகொள்ளலாம்!
ஆனால், இதை ஒத்துக்கொள்ளும் நிலையில் இன்று பெரும்பாலான ஊழியர்களும் கிறிஸ்தவர்களும் இல்லை.
கடைசிநாட்களின் கொடிய காலங்களில் காணப்படுவார்கள் என்று பவுல் பட்டியலிடும் தற்பிரியரையும், பணப்பிரியரையும், வீம்புக்காரரையும், அகந்தையுள்ளவர்களையும், தூஷிக்கிறவர்களையும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களையும், நன்றியறியாதவர்களையும், பரிசுத்தமில்லாதவர்களையும், சுபாவ அன்பில்லாதவர்களையும், இணங்காதவர்களையும், அவதூறு செய்கிறவர்களையும், இச்சையடக்கமில்லாதவர்களையும், கொடுமையுள்ளவர்களையும், நல்லோரைப் பகைக்கிறவர்களையும், துரோகிகளையும், துணிகரமுள்ளவர்களையும், இறுமாப்புள்ளவர்களையும், தேவப்பிரியராயிராத சுகபோகப்பிரியரையும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களையும் (2தீமோத்.3:1-5) இன்று அனைத்துபிரிவு சபைகளிலும் திரளாய் காணமுடிகிறதல்லவா?
"அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்" என்று பவுல் சொன்னது (2தீமோத்.4:3,4),
இன்று நமது திருச்சபைகளின் அனுபவமாகிவிட்டதல்லவா?
"கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள். அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்" என்று பேதுரு சொன்னது (2பேதுரு 2:1,2), இன்றைய கிறஸ்தவ உலகத்தை நினைவுபடுத்துகிறதல்லவா?
பூமிக்கு தமது குணங்களாகிய சாரம் நிறைந்த உப்பாகவும், தமது குணங்களாகிய வெளிச்சத்தை உலகத்தில் வீசும் விளக்காகவும் இருந்து, பரலோகத்திலிருக்கிற பிதாவுக்கு மனுஷரில் மகிமை உண்டாக்கவே ஆண்டவர் நம்மை தமது சீடராக அழைத்திருக்கிறார்! (மத்.5:1-16)
இன்றைய ஊழியர்கள் மத்தேயு 5:3 முதல் 10 வரை ஆண்டவர் கற்பித்துள்ள அவருடைய குணங்களை உடையவர்களாய் இருந்து, அவருடைய குணங்களை உடையவர்களாயிருக்க சபைகளுக்கு போதித்திருந்தால் (மத்.5:19) இன்றைய கிறிஸ்தவ உலகத்தில் உலகம் கிறிஸ்துவை பார்த்திருக்கக்கூடும்!
ஊழியம் பெரும்பாலும் ஆதாயத்தொழிலாகவும் (1தீமோத்.6:3-5), சபைகள் பெரும்பாலும் கள்ளர்குகைகளாகவும் (லூக்கா 19:46), ஜெபவீடுகள் பெரும்பாலும் வியாபார வீடுகளாகவும் (யோவான் 2:16) மாறிவிட்ட
இன்றைய கிறிஸ்தவ மதத்திற்கும் கிறிஸ்துவுக்கும் உண்மையில் தொடர்பில்லை!
இரவு ஜெபக்கூட்டத்தை "விழித்திருந்து ஜெபிக்கும் கூடுகை" என்றும், உபவாசக் கூட்டத்தை "பரிசுத்த உபவாச ஜெபக்கூடுகை" என்றும் வேதாகமப் பெயரில் நடத்தலாமா?
வேதாகமப் பெயரில் நடத்துவது நல்ல விஷயம்தான். அதேவேளையில் வேதாகம அடிப்படையில் நடத்துகிறோமா என்பதுதான் முக்கியம்!
வேதாகமப் பெயரைக் கொண்டிருக்கிற அநேக ஊழியங்களுக்கும் வேதத்திற்கும் இன்று தொடர்பில்லையே!
வேதாகமப் பெயரைத் தாங்கிநிற்கிற அநேக சபைகளுக்கும் வேதத்திற்கும் இன்று தொடர்பில்லையே!
"விழித்திருந்து ஜெபிக்கும் கூடுகை" உலக ஆசீர்வாதங்களுக்கான மன்றாட்டுகளாய் இராமல், நமது விசுவாசத்திற்கு எதிரான சத்துருவின் சோதனையிலிருந்து தப்புவதற்கான வேண்டுதல்களாய் இருக்கவேண்டியது அவசியம். (மத்.26:40,41; லூக்கா 22:31,32)
"பரிசுத்த உபவாச ஜெபக்கூடுகை" உலகத்தேவைகளை தேவனுக்கு பட்டியலிட்டுக்காட்டும் முறையீடாக இராமல், தேவனுடைய கோபத்திற்குத் தப்புவித்துக்கொள்ள நமது இருதயங்களைக் கிழித்துக்கொண்டு அவரிடத்தில் திரும்பும் மன்றாட்டுக்களாய் இருக்கவேண்டியது அவசியம்! (யோவேல் 1:14-2:14)
க. காட்சன் வின்சென்ட்
8946050920
========================
ஆவிக்குரிய பூசாரிகளை அடையாளம் கண்டுகொள்வது எப்படி?
==================
"ஞாயிற்றுக்கிழமை சபைக்கு வராவிட்டால் பரலோகம் போகமாட்டாய்" என்று விசுவாசிகளை பயமுறுத்துவார்கள்!
ஆனால், சபை கூடிவருகிறதின் நோக்கமான அன்புக்கும் நற்கிரியைக்கும் (எபிரே.10:24,25) நேராக சபையாரை ஒருபோதும் நடத்தமாட்டார்கள்.
"தசமபாகம் கொடுக்காவிட்டால் உன் சம்பாத்தியத்தையெல்லாம் மருத்துவமனைக்குதான் கொடுப்பாய்" என்று சபையாருக்கு சாபம்போடுவார்கள்!
நியாயப்பிரமாணக் காலத்திற்கு முற்பட்ட ஆபிரகாமைப்போல, நியாயப்பிரமாணக் காலத்திற்கு பிற்பட்ட அவருடைய ஆவிக்குரிய சந்ததியாராகிய கிறிஸ்தவர்கள் (கலாத்.3:29) மனமுவந்து கொடுத்தால் மட்டுமே தசமபாகத்தை வாங்கலாம் என்பதை அறியாமல்; இவர்கள் நியாயப்பிரமாணத்தை நினைவுபடுத்தி (உபா.12:1,6,7,10-12,17,18), பழைய ஏற்பாட்டு வசனங்களால் பயமுறுத்தி (மல்.3:8,9), சபையாரிடம் கட்டாயமாய் தசமபாகம் வாங்குகிறதில் கவனமாய் இருப்பார்கள்.
"உன் போதகரைதவிர வேறு யாரிடத்திலும் ஆவிக்குரிய காரியங்களில் தொடர்புவைத்துக்கொள்ளக் கூடாது" என்று விசுவாசிகளுக்கு தடைபோடுவார்கள்!
தட்சணை வேறு தட்டுக்குப் போய்விடும் என்கிற அச்சம்தான் இதற்குக் காரணம்! அதனால், தேவனுடைய சபையாகிய தங்களை சத்தியத்தில் நடத்தவே, தேவன் ஐந்துவிதமான ஊழியர்களையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதையும், ஐந்துவிதமான ஊழியர்களின் தொடர்பில் இருந்தால் மட்டுமே தாங்கள் கிறிஸ்துவின் குணங்கள் எல்லாவற்றிலேயும் வளரமுடியும் (எபேசி.4:11-15) என்பதையும் விசுவாசிகளுக்கு மறைத்துவிடுவார்கள்!
"உன் வாழ்க்கையில் உன் போதகரை கேட்காமல் எதையும் செய்யக்கூடாது" என்று விசுவாசிகளை அச்சுறுத்துவார்கள்!
காணிக்கையை இழக்கநேரிடும் என்கிற கவலைதான் இதற்குக் காரணம்! இதனால், தங்கள் போதகர்களைக் கேட்காமலேயே ஆதிசபையார் அவர்களுக்கு இணையாக அற்புதங்களை செய்ததை (அப்.2:43; 6:8; 8:6,7), சுவிசேஷம் அறிவித்ததை (அப்.7:1-53; 8:4; 11:19,20), ஞானஸ்நானம் கொடுத்ததை (அப்.8:12,13; 9:10-18; 22:14-16), சபையை நிறுவியதைப்பற்றி (அப்.8:5-14: 11:19-21) விசுவாசிகளிடம் மூச்சுவிடமாட்டார்கள்!
"சபையில் நடக்கிற எல்லா ஜெபத்திற்கும் நீ வரவேண்டும். அப்படி வராவிட்டால், நீ நரகம்தான் போவாய்" என்று சபையாரை மிரளவைப்பார்கள்.
ஆனால், ஆதிசபை ஊழியர்கள் விசுவாசிகளுக்காய் எதற்கெல்லாம் ஜெபித்தார்களோ (எபேசி.1:15-19; 3:15-19; பிலிப்.1:3-6; கொலோ.1:3-5,9-11; 4:12,13; பிலே.1:5,6) அதற்காக ஜெபிக்கமாட்டார்கள், ஆதிசபை ஊழியர்கள் விசுவாசிகளை எதற்கெல்லாம் ஜெபிக்கவைத்தார்களோ (அப்.4:24-31; எபேசி.6:19,20; எபிரே.13:18,19; யாக்.5:16) அதற்காக ஜெபிக்கவைக்கமாட்டார்கள்!
"என்னிடத்தில் சொல்லாமல் விசுவாசிகள், மற்ற விசுவாசிகளின் வீட்டுக்கு போகவோ, பேசவோக் கூடாது" என்று சபையாருக்குள் வேலியடைப்பார்கள்!
விசுவாசிகள் தங்களுக்கு எதிராகத் திட்டமிட்டு, தங்கள் பூசாரிவேலைக்கு பூட்டுப்போட்டுவிடுவார்கள் என்கிற அச்சம்தான் இதற்குக் காரணம்! எனவே, சபையார் ஒருவரில் ஒருவர் ஊக்கமாய் அன்புகூரவும் (1பேதுரு 1:22), ஒருவரையொருவர் ஆதரிக்கவும் (கலாத்.6:10; யாக்.2:15,16; 1யோவான் 3:16-18) ஒருவருக்கொருவர் புத்திசெல்லவும் (ரோமர் 15:14; எபிரே.10:24,25) ஆதிசபை ஊழியர்கள் அனுமதித்திருக்கிறதை விசுவாசிகளின் கண்களுக்குக் காண்பிக்கமாட்டார்கள்!
"உங்கள் வீடுகளில் நடக்கக்கூடிய திருமணம், மற்றும் மற்ற விசேஷங்கள் என் தலைமையில்தான் நடைபெறவேண்டும். அப்படி நடக்கவில்லையென்றால், நான் அதற்கு வரமாட்டேன்" என்று சபையாரிடம் முரண்டுபிடிப்பார்கள்!
ஆனால் இவர்களின் வீட்டு திருமணத்தை ஆண்டவரின் தலைமையில் நடத்தாமல், ஜாதி, படிப்பு, வரதட்சணை இவைகளின் தலைமையில்தான் நடத்துவார்கள்! (1தீமோத்.6:9,10; மத்.6:24)
"இவரை எனக்கு பிடிக்காது. ஆகவே இவர் வந்தால் நான் வரமாட்டேன். அவர் ஆவி என்னோடு ஒத்துப்போகாது. அவர் இருக்கும் இடத்தில் நான் இருக்கமாட்டேன்" என்று அடம்பிடிப்பார்கள்!
ஆனால், தேவனுக்கு பிடிக்காதவர்களோடும், தேவஆவியோடு ஒத்துப்போகாத பொல்லாத ஆவியுள்ள கிறிஸ்தவரோடும், ஊழியர்களோடும் ஒரேமேடையில் அமர்ந்து கொஞ்சிக்குலாவுவார்கள்! (சங்.50:16-18)
"இது நான் கட்டின சபை. நான் சொல்லுவதை கேட்பதாக இருந்தால் இங்கே இருக்கலாம். கேட்காதவர்கள் சபையைவிட்டு வெளியேறலாம்" என்று இவர்களுக்கு ஒத்துவராத விசுவாசிகளை விரட்டிவிடுவார்கள்!
சபையை கட்டுகிறவர் இயேசுகிறிஸ்துதான் (மத்.16:18), தாங்கள் கூலிக்கு வேலைசெய்யும் வேலையாட்கள்தான் (1கொரி.3:5-9), சபைக்குள் ஆத்துமாக்களைக் கொண்டுவரும் கர்த்தரே (அப்.2:47) அவர்களை சபையை விட்டு வெளியேற்றும் அதிகாரம் உள்ளவர் என்கிற அறிவில்லாத இவர்கள்: பவுலைப்போல துணிக்கரமான பாவத்தினிமித்தம் விசுவாசிகளை சபையைவிட்டு தள்ளிவைக்காமல் (1கொரி.5:1-11), தங்கள் சொந்த லாபத்துக்காகவும், விருப்பு வெறுப்புக்காகவும் விசுவாசிகளை சபையைவிட்டு வெளியேற்றுவார்கள்! (3யோவான் 1:9,10)
"என்னை பகைத்துக் கொண்டால், கர்த்தர் உன்னை நடுரோட்டில் நிறுத்தி விடுவார்" என்று மிரட்டுவார்கள்!
ஒருகாலத்தில் நடுரோட்டில் நின்ன தங்களை, தேவன் கிருபையாய் இவ்வளவு உயரத்திற்கு கொண்டுவந்ததை மறந்து (2கொரி.3:5,6; 1கொரி.15:10), பெருமைக்கு இடங்கொடுத்து, இவர்கள் தேவனையே பகைத்துக்கொள்வார்கள்! (யாக்.4:6)
இப்படிப்பட்ட ஆவிக்குரிய பூசாரிகளிடம் சிக்கியிருப்பவர்கள் தங்களைத் தப்புவித்துக்கொள்ள வகைப்பார்க்கவேண்டும்!
இல்லையேல், நரகத்தின் மக்களாகிய இவர்கள், உங்களை தங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மக்களாக்கிவிடுவார்கள்!! (மத்.23:15)
க. காட்சன் வின்சென்ட்
8946050920
================================
மத்தேயு 25:40ல் "மிகவும் சிறியவராகிய என் சகோதரர்" என்றும், யோவான் 12:8ல் 'தரித்திரர்' என்றும் ஆண்டவரால் குறிப்பிடப்படுகிறவர்கள் ஒரே பிரிவினரா?
=============================
வசன அடிப்படையில் இதை ஆராய்வோம்.
மிகவும் சிறியவராகிய கிறிஸ்துவின் சகோதரர்!
மத்தேயு 25:40ல் *"மிகவும் சிறியவராகிய என் சகோதரர்"* என்று ஆண்டவரால் குறிப்பிடப்படுகிறவர்கள் அவருடைய சீஷர்களாக இருக்கவேன்டும்!
"என் சகோதரர்" என்று இயேசுகிறிஸ்து குறிப்பிடுகிறது இங்கு கவனிக்கத்தக்கது.
ஆகவே, இவர்கள் கிறிஸ்துவின் சகோதரராகிய கிறிஸ்தவர்களே!
இவர்கள் இயேசுகிறிஸ்துவினால் பரிசுத்தம்பண்ணப்பட்ட அவருடைய சகோதரர். (எபிரே.2:11)
பரலோகத்திலிருக்கிற கிறிஸ்துவினுடைய பிதாவின் சித்தத்தின்படி செய்கிற அவருடைய சகோதரர். (மத்.12:50)
உலகத்தில் தரித்திரராயிருந்தாலும் விசுவாசத்தில் ஐசுவரியவான்களாயிருக்கிற ஆண்டவரின் சகோதரர். (யாக்.2:5)
கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதினிமித்தம் தரித்திரரான அவருடைய சகோதரர். (லூக்கா 6:20)
கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசத்தினிமித்தம் உண்டான உபத்திரவங்களால் தரித்திரரான அவருடைய சகோதரர். (2கொரி.8:2)
கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறதினிமித்தம் தரித்திரரான அவருடைய சகோதரர்! (2கொரி.6:10)
தமதுநிமித்தம் பசியாயிருக்கிற இவர்களுக்குப் போஜனங்கொடுக்கிற, தாகமாயிருக்கிற இவர்களின் தாகத்தைத் தீர்க்கிற, அந்நியரான இவர்களைச் சேர்த்துக்கொள்ளுகிற, வஸ்திரமில்லாதிருக்கிற இவர்களுக்கு வஸ்திரங்கொடுக்கிற, வியாதியாயிருக்கிற இவர்களை விசாரிக்க வருகிற, காவலிலிருக்கிற இவர்களைப் பார்க்கவருகிற கிறிஸ்தவர்களைப் பார்த்துதான், "வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லப்போகிறார் இயேசுகிறிஸ்து! (மத்.25:34-36)
"சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான்" என்று ஆண்டவர் சொன்னது இங்கு கவனிக்கத்தக்கது. (மத்.10:42)
கிறிஸ்துவினிமித்தம் தரித்திரரானவர்களை நினைத்துக்கொள்ளுபடி புறஜாதிகளுக்கு மிஷனரிகளாகப் புறப்பட்ட பர்னபாவையும் பவுலையும் ஆதிசபையில் தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும் கேட்டுக்கொண்டார்கள். அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே பவுலும் கருத்துள்ளவராயிருந்தார். (கலாத்.2:9,10)
அப்போஸ்தலர் தங்களுக்கு அளித்த உபதேசத்தின் அடிப்படையில் தரித்திரராகிய தங்கள் விசுவாச சகோதரர்களின் குறைவை நிறைவாக்கும்படி காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள் எருசலேம் சபையார். (அப். 2:42,44,45; 4:32,34,35)
ஆதரவற்ற முதிர்வயதுள்ள விதவைகளை சபையாரே பராமரித்தனர். (அப்.6:1-6; 1தீமோத்.5:3,5,9,10)
உலகபஞ்சத்தில் பாதிக்கப்பட்ட யூதேயாவிலிருந்த தரித்திரரான சகோதரரை, புஜாதிகளுக்குள் இருந்த சபைகள் பணம் சேகரித்து அனுப்பித் தாங்கின. (அப்.11:27-30; ரோமர் 15:25-28)
ஆதிஅப்போஸ்தலர் திருச்சபைக்கு அளித்த முக்கியமான உபதேசங்களில் ஒன்று தரித்திரராகிய விசுவாச சகோதர சகோதரிகளை, பணக்காரரான விசுவாச சகோதர சகோதரிகள் ஆதரிக்கவேண்டும் என்பதே! (ரோமர் 12:13; 2கொரி.8:1-9:15; கலாத்.6:8-10; 1தீமோத்.6:17-19; யாக்.2:1-16; 1யோவான் 3:16-22)
உலகிலுள்ள பொதுவான தரித்திரர்!
யோவான் 12:8ல்
எப்பொழுதும் நம்மிடத்தில் இருக்கிற
தரித்திரராக ஆண்டவரால் குறிப்பிடப்படுகிறவர்கள், பொதுவாக உலகத்தில் உள்ள ஏழைகளாக இருக்கவேண்டும்!
"இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன?" என்று யூதாஸ்காரியோத்து கேட்டதினினிமித்தம் (யோவான் 12:5), "தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன்"* என்று சொன்னார் ஆண்டவர். (யோவான் 12:8)
"இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, விசுவாசிகளான தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன?" என்று யூதாஸ் கேட்கவில்லை. ஏனெனில் அப்பொழுது சபை இருக்கவில்லை. பொதுவான தரித்திரருக்குக் கொடுப்பதைக்குறித்தே அவன் கேட்டிருக்கிறான்.
யூதாஸிடம் இருந்த பணப்பைக்கு வந்த பணத்தில் ஒருபகுதி தரித்திரருக்கு உதவிசெய்யப் பயன்படுத்தப்பட்டது. (யோவான் 13:29)
இதில் பயனடைந்தவர்கள் விசுவாசிகளான தரித்திரர் அல்ல, அன்று இருந்த பொதுவான தரித்திரரே.
தமது சீஷர்களுடன் திருச்சபையில் இருக்கப்போகும் விசுவாசிகளாகிய தரித்திரரையும் சேர்த்து இயேசுகிறிஸ்து அப்படி சொல்லியிருக்கலாம்.
ஆதிஅப்போஸ்தலர் தங்கள் பார்வையை திருச்சபையிலுள்ள தரித்திரரோடு சுருக்கிக்கொள்ளாமல், சபைக்கு வெளியேயிருக்கிற தரித்திரரைக் குறித்தும் கரிசனையுள்ளவர்களாக இருந்தனர்!
இயேசுகிறிஸ்து எல்லா தரித்திரரைக் குறித்தும் கரிசனையுள்ளவராக இருக்கிறார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருந்தார்கள்.
எனவே, தேவனுடைய பிள்ளைகள் திருச்சபைக்கு உள்ளே இருக்கிற ஏழை சகோரரைத் தாங்குவதோடு, திருச்சபைக்கு வெளியே இருக்கிற ஏழைகளின் பக்கமும் தங்கள் இருதயத்தைத் திருப்ப அவர்கள் ஆலோசனை கொடுத்தனர். (ரோமர் 12:13,20; கலாத்.6:10; யாக்.1:27)
திருச்சபைக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிற தரித்திரருக்கு தேவையான உதவியை செய்ய தேவபிள்ளைகள் அழைக்கப்பட்டருக்கிறோம்! (எபேசி. 2:10)
ஊழியக்காரர்கள் ஏழைகளைக்குறித்த அதிக கரிசனையுள்ளவர்களாக இருந்து, அவர்களின் தேவைகளை சந்திக்க திருச்சபையாரை ஏவவேண்டியது அவசியம்!! (கலாத்.2:9,10)
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
========================
எங்கள் சபைக்கு வந்த ஒரு ஊழியக்காரர், "இந்த வருடம் கர்த்தருக்கு எத்தனை ஆயிரம் கொடுக்கப்போகிறோம் என்று நியமியுங்கள். கர்த்தருக்கு கொடுப்பதாக நியமித்துவிட்டு ஊருக்கெல்லாம் கொடுத்துகிட்டு இருக்கக்கூடாது. ஏழைகளுக்கு கொடுக்கிற தர்மபணம் கர்த்தருக்குக் கொடுப்பதல்ல. ஏழைகளுக்கு கொடுப்பது வேறு, கர்த்தருக்கு கொடுப்பது வேறு. கர்த்தருக்கென்று நியமித்ததை கர்த்தருக்குதான் கொடுக்கவேண்டும்" என்று போதித்தார். இது சரியான போதனைதானா?
===========================
உங்கள் சபைக்கு வந்து பிரசங்கித்ததாக நீங்கள் குறிப்பிடும் ஊழியக்காரர், ஒரு விசுவாசி சபைக்கு கொடுப்பதாக நியமித்துக்கொண்டப் பணத்தை வேறு எங்கும், எவருக்கும் கொடுக்கக்கூடாது என்று சபையாரின் மனதில் பதியவைக்க முயன்றிருக்கிறார்.
அவருடைய போதனை சரியா? தவறா என்பதை வசனத்துடன் ஒப்பிட்டுதான் தீர்கமானிக்கமுடியும்.
"கர்த்தருக்கு (சபைக்கு) இவ்வளவு கொடுப்பேன்" என்று மனதில் நியமித்துக் கொடுக்கிறது சரியா?
புதிய ஏற்பாடு முழுவதும் அடியேன் தேடிப்பார்த்தும் ஆதிசபையில், *"இந்த வருஷம் இத்தனை ஆயிரம் ரூபாய் கர்த்தருக்குக் கொடுப்பேன் என்று மனதில் நியமித்து அல்லது பொருத்தனைசெய்து கொடுங்கள்"* என்று போதித்த ஒரு ஊழியரையும் காணமுடியவில்லை.
"இந்தவருடம் நான் கர்த்தருக்கு (சபைக்கு) இத்தனை ஆயிரம் கொடுப்பேன்" என்று மனதில் நியமித்து, அல்லது பொருத்தனை செய்து கொடுத்த ஒரு விசுவாசியையும் ஆதிசபையில் காணமுடியவில்லை!
இதிலிருந்தே மனதில் நியமித்து சபைக்கு கொடுப்பது புதிய ஏற்பாட்டு சபை வழக்கமல்ல என்பதை அறிந்துகொள்ளலாம்.
மனதில் நியமித்து யாருக்குக் கொடுக்கவேண்டும்?
"அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" என்கிற வசனத்தை (2கொரிந்.9:7), ஸ்தலசபைக்கு கொடுப்பதைக் குறித்து போதிக்கவே இன்று அநேக ஊழியர்கள் பயன்படுத்துகின்றனர்.
எருசலேமில் வறுமையில் இருந்த பரிசுத்தவான்களுக்கு செய்யவேண்டிய தர்மசகாயத்தைப் பற்றியே பவுல் இங்கு கொரிந்துசபையாருடன் பேசுகிறார். (2கொரி.8:4,5,15,20; 9:1,5,9,13)
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, *தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்.* உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்
2கொரிந்.9:7
என்று சொல்லுகிற பவுல்:
மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
2கொரிந்.9:8
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்
2கொரிந்.9:9
என்று சொல்லுகிறதையும் நாம் கவனிக்கவேண்டும்.
அவனவன் விசனமாயுமல்லாமல், கட்டாயமாயுமல்லாமல், தன் மனதில் நியமித்தபடியே ஏழை பரிசுத்தவான்களுக்கு கொடுப்பதைப் பற்றியே பவுல் இங்கு பேசுகிறார்.
மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்
ரோமர் 15:26
என்று பவுல் சொல்லுகிறதும் இங்கு கவனிக்கத்தக்கது.
எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்த தீர்கதரிசிகளில் ஒருவனாகிய அகபுவினால் முன்னறிவிக்கப்பட்டு, கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டானக் கொடிய உலகபஞ்சத்தில் பாதிக்கப்பட்ட யூதேயா சகோதரருக்கு உதவியாக, அவரவர் தங்கள் திராணிக்குத்தக்கதாக பணஞ்சேகரித்து அனுப்பவேண்டுமென்று அந்தியோகியா சீஷர்கள் தீர்மானம்பண்ணி, அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடையகையில் கொடுத்து, எருசலேம் சபை மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள். (அப்.11:27-30)
இந்த தர்மசகாயதிட்டம் புறஜாதியார் நாடுகளிலிருந்த சபைகள்வரை விரிவுபடுத்தப்பட்டது.
மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டார்கள். இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்.
எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களின் ஞானநன்மைகளில் பங்குபெற்றிருந்த இவர்கள், சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய கடனாளிகளாயிருந்தார்கள். (ரோமர் 15:26,27)
அகாயாநாட்டு கொரிந்துசபையில் தர்மசகாயத்திட்டத்தை தீத்து துவக்கிவைத்தார். (2கொரிந்.8:6)
மக்கெதோனியா நாட்டுச் சபைகளான பிலிப்பி, தெசலோனிக்கே மற்றும் பெரோயா சபையினர் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே யூதேயாவில் இருந்த ஏழை கிறிஸ்தவர்களுக்கு மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுக்க தேவன் கிருபை அளித்தார். (2கொரிந்.8:1,2)
தேவகிருபையினாலே அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்கள். (2கொரிந்.8:3)
தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் தர்மசகாயத்திற்கு பணம் சேகரித்த பவுல் குழுவினர் ஏற்றுக்கொள்ளும்படி அவர்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள். (2கொரிந்.8:4)
இவர்களை உதாரணமாகக் காண்பித்தே பரிசுத்தவான்களுக்கான தர்மசகாயத்திற்கு உற்சாகமாய் கொடுக்கும்படி கொரிந்து சபையாரை கேட்டுக்கொள்கிறார் பவுல். (2கொரிந்.8:1-9:15)
"சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்" என்கிற வசனத்தையும் (2 கொரிந்.9:6) ஊழியத்திற்கு கொடுப்தைப்பற்றிப் போதிக்கவே இன்று அநேக ஊழியர்கள் பயன்படுத்துகின்றனர்.
பவுல் அப்படி சொல்லுகிறதற்கு முன்பு "ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது* லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது" என்று (2கொரிந்.9:5) சொல்லுகிறதை இவர்கள் கவனிக்கத்தவறிவிடுகின்றனர்.
கொரிந்துசபையார் தாங்கள் வாக்குப்பண்ணியிருந்த தர்மசகாயத்திற்கு
உதாரத்துவமாய்க் கொடுக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்துவதற்கே, "சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்" என்று சொல்லுகிறார் பவுல்.
மேற்காணும் வசனங்களின்படி ஒரு கிறிஸ்தவர், ஏழ்மையிலுள்ள பரிசுத்தவான்களாகிய ஊழியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குதான் தன் மனதில் நியமித்து கொடுக்க கொடுக்கவேண்டும்.
சபையார் தங்கள் மனதில் நியமித்து ஊழியத்திற்கும் கொடுப்பது தவறில்லை. ஆனால், ஊழியர்கள் மேற்காணும் வசனங்களைக் கொண்டு, விசுவாசிகள் தங்கள் மனதில் நியமித்து ஏழைகளுக்கு கொடுப்பதைப்பற்றி போதியாமல், ஊழியத்திற்கு கொடுப்பதைப் பற்றி போதிக்கிறது தவறாகும்!
ஏழைகளுக்கு கொடுப்பது வேறு, கர்த்தருக்கு கொடுப்பது வேறா?
இதைப்பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்" என்கிறது வேதம். (நீதி.19:17)
ஏழைக்குக் கொடுப்பதை தமக்குக் கொடுப்பதாகவே எடுத்துக்கொண்டு, ஏழைக்குக் கொடுப்பவர்களுக்கு திரும்பக் கொடுக்கிறார் கர்த்தர்.
"சீஷன் (கிறிஸ்தவன்) என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான்" என்று நிச்சயமாய் சொல்லுகிறார் ஆண்டவர். (மத்.10:42)
"மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்" என்று சொல்லுகிறார் ஆண்டவர். (மத்.25:40)
வாரியிறைக்கவும் ஏழைகளுக்குக் கொடுக்கவும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கவும், தேவனே தமது ஜனங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்கிறார். (2கொரிந்.9:8,9)
வாரியிறைத்து ஏழைகளுக்குக் கொடுக்கிற தமது பிள்ளைகளின்
நீதி என்றென்றைக்கும் நிற்கவும், அவர்களின் நீதியின் விளைச்சலை வர்த்திக்கவும் செய்கிறார் தேவன். (2கொரிந்.9:9,10)
"உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு (ஏழை கிறிஸ்தவர்களுக்கு) ஊழியுஞ்செய்ததினாலும் (உதவிசெய்ததினாலும்) செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே" என்று வேதம் சொல்லுகிறதும் கவனிக்கத்தக்கது. (எபிரே.6:10)
ஏழைகளுக்கு கொடுப்பது கர்த்தருக்கே கொடுப்பதாக வேதம் இவ்வளவு நிச்சயமாய் சொல்லியிருக்க, "ஏழைகளுக்கு கொடுப்பது வேறு, கர்த்தருக்கு கொடுப்பது வேறு. ஏழைகளுக்குக் கொடுப்பது கர்த்தருக்குக் கொடுப்பதல்ல" என்று ஒரு ஊழியக்காரன் போதிக்கிறது கொடிய வஞ்சகமாகும்!
சபைக்கு கொடுப்பது மட்டுமே கர்த்தருக்கு கொடுப்பதா?
சபைக்கு, குறிப்பாய் தாங்கள் அங்கமாய் இருக்கும் சபைக்கு கொடுப்பது மட்டுமே கர்த்தருக்குக் கொடுப்பது என்று விசுவாசிகளை ஊழியர்கள் மூளைசலவை செய்கிறது அப்பட்டமான சுயநலமாகும்!
தங்களைத் தவிர காணிக்கையை, குறிப்பாக தசமபாகத்தை வேறு ஊழியருக்கு விசுவாசிகள் கொடுத்துவிடக்கூடாது என்கிறதில் சில ஊழியர்கள் மிகவும் விழிப்பாய் இருக்கிறதைக் காணமுடிகிறது.
"கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு"* என்கிற வசனத்தைக் காண்பித்து (உபாக.12:13), "நீ போகும் சபையைத் தவிர, வேறு எந்த சபைக்கும் காணிக்கைக் கொடுக்காதே" என்று விசுவாசிகள் அச்சுறுத்தப்பட்டக் காலமும் உண்டு!
இதற்குக் காரணம், இன்றைய ஊழியர்களில் பலர் தங்களை பழைய ஏற்பாட்டு ஆசாரியராகவும், தாங்கள் நடத்துகிற சபையை எருசலேம் தேவாலயமாகவும், விசுவாசிகளை இஸ்ரவேல் ஜனங்களாகவும் கற்பனைசெய்துகொண்டிருப்பதுதான்.
புது உடன்படிக்கையின் ஊழியக்காரராக இவர்களின் இருதயம் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை! (2கொரி.3:1-13)
ஊழியத்திற்கு கொடுப்பதைப் பற்றி புதிய ஏற்பாட்டில் எத்தனையோ அருமையான உபதேசங்கள் இருந்தும், இவர்கள் பழைய ஏற்பாட்டு காணிக்கை, பொருத்தனை, தசமபாகத்தைப் பற்றியே விசுவாசிகளுக்கு போதிக்க விரும்புகின்றனர்.
தசமபாகம் பற்றிய பிரமாணத்தை (உபா.12:6,11,17; 14:22,23,28) போதித்தும், பழைய ஏற்பாட்டு வசனங்களால் (மல்.3:8,9) பயமுறுத்தியும், சபையாரிடம் தசமபாகம் வாங்கின ஒரு ஊழியரையும், ஊழியருக்கு தசமபாகம் கொடுத்த ஒரு விசுவாசியையும் ஆதிசபையில் காணமுடியவில்லை.
நீதியும் இரக்கமும் செய்யவேண்டும், தசமபாகம் கொடுப்பதையும் விடாதிருக்கவேண்டும் என்று தசமபாகப் பிரமாணத்திற்கு கீழ் இருந்த வேதபாரகர் பரிசேயரிடம் ஆண்டவர் சொன்னதை (மத்.23:23) தங்களுக்கும் சொன்னதாக ஆதிசபையார் எடுத்துக்கொண்டிருந்திருந்தால்: அப்போஸ்தலர் தசமபாகத்தைக்குறித்து சபைக்கு போதித்து தசமபாகம் வாங்கியிருப்பார்கள், விசுவாசிகளும் தசமபாகம் கொடுத்திருப்பார்கள்!
இப்படியிருக்க, சபைக்கு கட்டாயம் தசமபாகம் கொடுத்தல், மனதில் நியமித்து அல்லது பொருத்தனைசெய்து கொடுத்தல் பற்றிய போதனைகள், கொடுப்பதை பற்றிய புதிய ஏற்பாட்டு உபதேசங்களுக்கு முரணானவை என்பதை அறியவேண்டும்!
தங்கள் வருமானத்தில் 5 சதவீதமோ, 10 சதவீதமோ, 50 சதவீதமோ, 100 சதவீதமோ, மனதில் நியமித்தோ, விசுவாசிகள் மனமுவந்து கொடுப்பதையே ஊழியர்கள் ஊழியத்திற்கு பெற்றுக்கொள்ளவேண்டும்
சபைக்குக் கொடுப்பதுதான் கர்த்தருக்கு கொடுப்பது என்று போதிக்கக் காரணம்?
இன்று அநேகக் கிறிஸ்தவர்கள் தசமபாகத்தை பிரித்து தங்கள் ஊழியருக்கும், மற்ற ஏழை ஊழியர்களுக்கும், ஏழைகளுக்கும் கொடுக்கிறார்கள்.
ஒருகாலத்தில் ஒரே இடத்தில் வந்து குவிந்த காணிக்கை தசமபாகம் இன்று பல இடங்களுக்கு பிரிந்துபோவதால் உண்டாகும் நஷ்டத்தை சரிசெய்யவே, "சபைக்கு வருடத்தில் இத்தனை ஆயிரம் கொடுக்கிறேன்" என்று மனதில் நியமித்து கொடுத்தல், பொருத்தனை செய்து கொடுத்தல் போன்ற பழைய ஏற்பாட்டுப் பாணியை அறிமுகம் செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள் புதிய ஏற்பாட்டு ஆண்டவரின் அடியார்கள்!
மேலும் "சபைக்குக் கொடுப்பதுதான் கர்த்தருக்குக் கொடுப்பது, சபைக்கு வெளியே கொடுப்பது கர்த்தருக்கு கொடுப்பதல்ல" என்கிற ஒரு நூதனமான போதனையின்மூலம், விசுவாசிகள் சபைக்கு கொடுப்பதைத் தவிர வேறு ஒருவருக்கும் கொடுக்காதபடிக்கு இவர்கள் தந்திரமாய் அணைபோட முயற்சிக்கிறார்கள்.
சபைக்கு கொடுப்பதைப் பற்றி ஒரு விசுவாசி மனதில் நியமித்துக்கொள்ளுகிறதோ, பொருத்தனை செய்கிறதோ, அதை நிறைவேற்றுகிறதோ தவறல்ல. ஆனால் ஊழியக்காரர்கள் அதற்கு விசுவாசிகளைக் கட்டாயப்படுத்தக்கூடாது!
ஆதிசபை ஊழியரில் ஒருவரும் அப்படிச் செய்ததில்லை.
இன்று சில ஊழியர்கள், சில காரியங்களுக்கு விசுவாசிகள் எவ்வளவு கொடுக்க வாக்குப்பண்ணுகிறார்கள் என்பதை ஒரு சீட்டில் எழுதி காணிக்கைப் பெட்டியில் போடச்சொல்லுகிறதாகக் கேள்விப்படுகிறோம். சிலர் படிவத்தை நிரப்பித்தர கேட்கிறதையும் பார்க்கிறோம்!
ஆதிசபை ஊழியரில் ஒருவரும் சபையாரை இப்படி நிர்பந்தத்திற்குள்ளாக்கவில்லை என்பதை நாம் அறியவேண்டும்!
இப்படியிருக்க, "பொருத்தனை செய்து அல்லது மனதில் நியமித்து சபைக்கு கொடுப்பது மட்டுமே கர்த்தருக்குக் கொடுப்பதாகும், வேறு எங்கோ, ஏழைகளுக்கோ கொடுப்பது கர்த்தருக்குக் கொடுப்தல்ல"* என்கிற போதகம் தவறான உபதேசமாகும்!
ஊழியருக்கு, ஊழியத்திற்கு, ஏழைகளுக்கு கொடுப்பது எல்லாமே கர்த்தருக்கு கொடுப்பதுதான் என்பதை நாம் அறியவேண்டும்!!
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
Thanks for using my website. Post your comments on this