Type Here to Get Search Results !

சுயசித்தம் என்பது என்ன? | What is self-determination? | அழமான ஆசீர்வாத பிரசங்க குறிப்புகள் | Blessing Sermon Points Tamil | Jesus Sam

===================
சுயசித்தம்
சுயசித்தம் என்பது என்ன?
=====================
'சுய' என்பதற்கு *ἴδιος* (idios) என்கிற கிரேக்கப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. (1கொரிந்.7:37)

'இடியோஸ்' என்பதற்கு சொந்த அல்லது தனிப்பட்ட என்று அர்த்தம்.

'சித்தம்' என்பதற்கு *θέλημα* (thelēma) என்கிற கிரேக்கப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. (1கொரிந்.7:37)

'தெலெமா' என்பதற்கு விருப்பம், ஆசை, சாய்வு, தேர்வு, நோக்கம் என்று அர்த்தம்.

'சுயசித்தம்' என்பதற்கு சொந்த அல்லது தனிப்பட்ட விருப்பம், ஆசை, சாய்வு, தேர்வு, நோக்கம் என்று அர்த்தம்.


சுயசித்தம் தேவசித்தத்திற்கு எதிரானதா? அல்லது ஆதரவானதா?

1] தேவனுடைய சித்தத்திற்கு முரண்படாத ஒருவரின் சுயசித்தம், தேவசித்தத்திற்கு ஆதரவானதாகவே இருக்கும்.

பவுல் கொரிந்து சபையாருக்கு தன் சொந்த விருப்பத்தின்படி சொன்ன சில யோசனைகள் தேவனுடைய வார்த்தைகளுக்கு முரண்படாதவகையிலும், சபையாரின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் இருக்கிறதை காணமுடியும். (1கொரிந்.7:1-8, 12-17, 25-35, 36-40)

ஒருவருக்கு நலமாய்த் தோன்றுகிற ஒரு காரியம் தேவனுடைய சித்தத்தின்படியானதாகவும் இருக்கக்கூடும்! (எஸ்றா 7:18)

தனது சுயசித்தம் தேவனுடைய சித்தத்தை மீறுகிறதாக இராதபடிக்கு காத்துக்கொள்ளவேண்டியக் கடமை தேவபிள்ளைக்கு உண்டு. (மாற்கு 14:36)

2] ஒருவரின் சுயசித்தம் தேவனுடைய சித்தத்திற்கு எதிராகவும் இருக்கக்கூடும்!

பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்
                  நீதி.18:1
என்கிற வசனத்தில் உள்ள 'இச்சை' என்கிற வார்த்தைக்கு, תּאוה (ta'ăvâh) என்கிற எபிரேய வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

'தாயாவ்வா' என்பதற்கு ஒருவரின் இதயத்தின் ஆசை, ஏக்கம், காமம், பேராசை (மோசமான உணர்வு) என்று பொருள்.

தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறவர், தனது இதயத்தின் ஆசை, ஏக்கம், காமம் மற்றும் பேராசையின்படி செய்யப்பார்க்கிறார்.

மனிதனுடைய சுய இச்சை (சுயசித்தம்) பெரும்பாலும் தேவனுடைய சித்தத்திற்கு எதிராகவே இருக்கிறது. (யாக்.1:14,15; 2தீமோத்.4:10)

க. காட்சன் வின்சென்ட்
          (கோயம்பத்தூர்)
               8946050920








=========================
தேவனால் கட்டுப்படுத்தப்படும் மனிதசித்தம்!
=========================

மனதின் யோசனைகள் மனுஷனுடையது: நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும். (நீதி.16:1)

சீட்டு மடியிலே போடப்படும்: காரிய சித்தியோ கர்த்தரால் வரும். (நீதி.16:13)

விரும்புகிறவனாலும்அல்ல, ஓடுகிறவனாலும்அல்ல, இரங்குகிறதேவனாலேயாம். (ரோமர் 9:16)

ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது, பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது, ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது, தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது, அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.
(பிரசங்கி 9:11)


தேவனுடைய சித்தத்தை மீறி உலகத்தார் ஒன்றும் செய்துவிடமுடியாது!

தாங்கள் ஒரே கூட்டமாயும், அனைவருக்கும் ஒரே பாஷையும் இருந்தபடியால், தாங்கள்செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று எண்ணி,
"நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள்" என்று சொல்லி, பாபேல் கோபுரத்தை கட்டின மனுஷரின் பாஷையைக் கர்த்தர் தாறுமாறாக்கி, அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். (ஆதி.11:1-9)

கன்மலை வெடிப்புகளாகிய தன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, "என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார்?" என்று தன் இருதயத்தில் சொன்ன ஏதோமை, "நீ கழுகைப்போல உயரப் போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத் தள்ளுவேன்" என்று எச்சரித்தார் கர்த்தர். (ஒபதியா 1:4)

ஏதோமியர்: "நாம் எளிமைப்பட்டோம். ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம்" என்று சொன்னார்கள். அதற்குக் கர்த்தர்: "அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன்" என்றார். (மல்கியா 1:4)

தேவனுடைய சித்தத்தை மீறி மனுஷர் பூமியில் தங்கள்


தேவஊழியரின் விருப்பம் தேவனுடைய விருப்பத்திற்கு கட்டுப்பட்டதே!

தனக்காக வந்து இஸ்ரவேலர்களைச் சபிக்கவேண்டும் என்று
சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜாவால் கேட்டுக்கொள்ளப்பட்ட பிலேயாமிடம் தேவன், *"நீ அவர்களோடே போகவேண்டாம், அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்"* என்று கட்டளையிட்டார். (எண்.22:8-12)

பாலாக் தனக்கு செய்யவிருக்கும் கனத்தினிமித்தமும், தான் சொல்வதையெல்லாம் செய்வதாக வாக்குப்பண்ணினதினிமித்தமும், மறுபடியும் கர்த்தர் தனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு காத்திருந்த பிலேயாமிடம் தேவன், *"அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடே கூடப்போ, ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும்"* என்று சொல்லியே, போக அனுமதித்தார். (எண்.22:15-20)

தேவனுடைய கட்டளையை மீறி தன் சுயலாபத்திற்காகக சென்ற தன்னை தேவதூதனானவர் கொல்லவிருந்ததை அறிந்த பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: "நான் பாவஞ்செய்தேன், வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன், இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப்போய்விடுகிறேன்" என்றபோது: "அந்த மனிதரோடேகூடப்போ, நான் உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ சொல்லக்கடவாய்" என்றார் கர்த்தருடைய தூதனானவர்.
(எண்.22:21-35)

தன்னை மிகுந்த மரியாதையுடன் வரவேற்ற பாலாக்கிடம், "இதோ, உம்மிடத்திற்கு வந்தேன், ஆனாலும், ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன்" என்று உறுதியாக சொன்னான் பிலேயாம். (எண்.22:35-38)

மூன்றுவிசை வெவ்வேறு இடங்களில் ஏழு பலிபீடங்களைக்கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டு நிமித்தம் பார்த்தும், இஸ்ரவேலருக்கு ஆசீர்வாதமான வார்த்தைகளையே பிலேயாமுக்கு தேவன் அருளினார். (எண்.23:1-24:9)

தான் எதிர்பார்த்ததற்கு மாறாக இஸ்ரவேலரை ஆசீர்வதித்த பிலேயாமின்மேல் பாலாக் கோபம் மூண்டவனாகி, "என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன், நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய். ஆகையால் உன் இடத்துக்கு ஓடிப்போ, உன்னை மிகவும் கனம்பண்ணுவேன் என்றேன்; நீ கனமடையாதபடிக்குக் கர்த்தர் தடுத்தார்" என்றான். (எண்.24:10,11)

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: "பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக்கூடாது, கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று, நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?" என்றான். (எண்.24:13)

"பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது" என்று பிலேயாம் சொன்னது கவனிக்கத்தக்கது. (எண்23:19,20)

இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்டபோது, அவன் முந்திச் செய்துவந்ததுபோல அவர்களை சபிக்க நிமித்தம்பார்க்கப் போகவில்லை. (எண்.24:1)

தேவனுடைய சித்தத்ததை மீறி தேவஊழியரானாலும் ஒன்றையும் சாதித்துவிடமுடியாது. 

தேவசித்தத்தை மீறி தன் சுயசித்தத்தை நிறைவேற்ற ஒரு ஊழியர் முயற்சித்தாலும், தேவன் நிச்சயித்ததை அவரால் மாற்றமுடியாது!


தேவபிள்ளைகளின் விருப்பம் தேவனுடைய சித்தத்திற்கு கட்டுப்பட்டதே!

தனக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட தேவன் எவரையும் கேட்டுக்கொள்ளாதபோதும் (1நாளா.17:5,6) தேவனுக்கு ஆலயத்தைக் கட்ட தான் பாத்திரவானாய் இராதபோதும் (1நாளா.28:3) தாவீது, *நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும், என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை, என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை"* என்று, கர்த்தருக்கு ஆணையிட்டு பொருத்தனை பண்ணினதினிமித்தம் (சங்.132:2-5), அவனுடைய விருப்பத்தை அவனுடைய குமாரனின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள அனுமதித்தார் தேவன்.
(1நாளா.28:5,6,10)

ஆகிலும் தேவாலயத்தின் வரைபடத்தை தேவன் தாவீதின் இருதயத்தில் தமது ஆவியினால் அருளினார். (1நாளா.28:11-19)

தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுவது தனது எண்ணமாக இராதபடியினால், பின்னாட்களில் சாலமோன் விக்கிரகக் கோயில்களையும் கட்டத்துணிந்தான்! (1இராஜா.11:4-8)

இஸ்ரவேலர்கள் தேவனை ஆராதிக்கத் தகுதியற்றவர்களானபோது, அவர்கள் ஆராதனை செய்துகொண்டுவந்த தமது ஆலயத்தை அந்தியரைக் கொண்டுவந்து அழித்தார் தேவன்! (2இராஜா.25:9,13-17)

தமது ஆலயம் தமது இருதயத்திற்கு ஏற்றவனின் இருதயத்தில் உண்டான விருப்பமானாலும், தமக்கு விருப்பம் இருக்கும்வரை அதை இருக்க செய்தார் தேவன். தமக்கு விருப்பமில்லாதபோது அதை அழித்துப்போட்டார்.

தேவனுடைய பிள்ளைகள் விரும்பும் காரியங்களானாலும், தேவன் விரும்பினால் மட்டுமே அவை சாத்தியமாகும், நிலைநிற்கும்!!

க. காட்சன் வின்சென்ட்
          (கோயம்பத்தூர்)
               8946050920







===============================
நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான தேவசித்தம்!
===========================

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், *தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம்* இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" 
                 ரோமர் 12:2
என்று தேவசித்தத்தை அறிய அழைக்கிறார் பவுல்.


தேவனுடைய சித்தத்தை அறியுங்கள்!
தேவனுடைய சித்தம் நன்மையானதும், அவருக்கு பிரியமானதும், பரிபூரணமானதும் ஆகும்!

அதை தேவனுடைய பிள்ளைகள் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். அதாவது, தேவனுடைய பார்வைக்கு நன்மையான காரியம் எது? தேவனை சந்தோஷப்படுத்தும் காரியம் எது? தேவன் விரும்பும் ஒரு முழுமையான வாழ்வு வாழ்வது எப்படி? என்பதை தேவஜனங்கள் பகுத்தறியவேண்டியது கட்டாயம்!


தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள?

தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள, நாம் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகவேண்டும்! (ரோமர் 12:2)

நமது சிந்தையை மாற்றுகிறதின்மூலம் தேவன் நம்மை புதிய மனிதர்களாக மாற்றும்பொழுது நாம்: தேவனுடைய பார்வைக்கு நன்மையான காரியம் எது? தேவனை சந்தோஷப்படுத்தும் காரியம் எது? தேவன் விரும்பும் ஒரு முழுமையான வாழ்வு வாழ்வது எப்படி? என்பதை பகுத்தறியக்கூடியவர்களாகிறோம்!

மனம் புதிதாகிறதின்மூலம் மறுரூபமாகிறவர்களுகே தேவன் தமது சித்தத்தை வெளிப்படுத்துகிறார்.


மறுரூபமாவதற்கு மனம் புதிதாகவேண்டுமானால்?

நாம் மறுரூபமாவதற்கு நமது மனம் புதிதாகவேண்டுமானால்,
இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரிப்பதை நாம் தவிர்க்கவேண்டும். (ரோமர் 12:2)

அதாவது, இவ்வுலகத்திற்குரியவர்களைபோல இருக்க நம்மை நாம் விட்டுக்கொடுக்கக்கூடாது.

இவ்வுலகத்தை தகாதவிதமாய் அனுபவிக்கிறவர்களும் (1கொரிந்.7:31), இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களும் (கலாத்.4:3), இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொள்கிறவர்களும் (எபேசி.2:2) தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தத்தை அறியமுடியாது!

அந்தகாரப்பட்ட இருதயத்தில் ஆண்டவரின் சித்தம் வெளிப்படுகிறது அரிது!


இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாதிருக்க?

இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாதிருக்க விரும்புவோர், தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். (ரோமர் 12:1)

புத்தியுள்ள ஆராதனை செய்யும் இவர்களுக்கே தேவனுடைய சித்தம் புலப்படும்!

தமக்கு ஊழியஞ்செய்ய தேவன் தங்களுக்குக் கொடுத்துள்ள கிருபை வரங்களை இவர்களால் மட்டுமே கண்டுபிடிக்கமுடியும்!! (ரோமர் 12:3-8,11)

க. காட்சன் வின்சென்ட்
          (கோயம்பத்தூர்)
               8946050920






==========================
குணப்பட்டு, ஸ்திரப்படுத்துவோம்!
=============================
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். 
             லூக்கா 22:31
நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன், நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். 
             லூக்கா 22:32

இயேசுக்கு நேரிட்ட சோதனைகளில் அவரோடேகூட நிலைத்திருந்த சீஷர்களை (லூக்கா 22:28) புடைக்கிறதற்கு சாத்தான் உத்தரவு கேட்டுக்கொண்டான்.

பிதா இயேசுவுக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, அவரும் தம்முடையவர்களுக்கு ஏற்படுத்தும்
அவருடை ராஜ்யத்திலே சீஷர்கள் அவருடைய பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காரும் சிலாக்கியத்தை 
(லூக்கா 22:29,30) சாத்தான் தடுக்கநினைத்தான். எனவேதான் அவர்களை சோதிக்க ஆண்டவரிடம் அவன் உத்தரவு கேட்டுக்கொண்டான்.

பேதுரு பாறை என்னப்படுவான் என்று ஆண்டவர் சொல்லியிருந்தபடியால் (யோவான் 1:42), அவனுடைய விசுவாசத்தை அழிப்பதில் சாத்தன் அதிக கவனம் செலுத்தினான். மற்ற சீஷர்கள். முடிவெடுப்பதில் பேதுருவை பின்பற்றுகிறதை அவன் நன்கு அறிந்திருந்தான். (மத்.26:35; யோவான் 21:3)

பாறையை உடைத்துவிட்டால் மற்றவர்களை இலகுவாய் உடைத்துவிடலாம் என்று சாத்தான் எண்ணியிருக்கக்கூடும்.

மற்ற சீஷரைவிட இயேசுவை பின்பற்றுகிறதில் தாம் தீவிரமாய் இருப்பதைப்போல காண்பித்துக்கொண்டாலும் (மத்.14:26-31; 16:15,16,33-35,50,51), அவரை சுலபமாய் மறுதலிக்கக்கூடிய அளவுக்கு பேதுரு பலவீனமானவராகவே இருந்தார். (லூக்கா 22:32) மற்ற சீஷர்களோ ஸ்திரப்படுத்தப்படவேண்டியவர்களாக இருந்தார்கள்.

இயேசுகிறிஸ்துவின் ராஜ்யத்திலே அவருடன் மகிமைப்படவிருக்கிறவர்கள் குணப்படவேண்டியவர்களும் ஸ்திரப்படவேண்டியவர்களுமாய் இருந்தனர்!

பேதுரு அற்பவிசுவாசம் (மத்.14:30,31), சுயநலம் (மத்.16:21-26), சுயபெருமை (மத்.26:33), உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற வித்தியாசம் (யோவான் 13:6-8), முற்கோபம் (யோவான் 18:9,10) போன்ற காரியங்களிலிருந்து குணப்படவேண்டியிருந்தார்.

மற்ற சீஷர்கள் விசுவாசத்தில் ஸ்திரப்படவேண்டியிருந்தார்கள் (மத்.8:25,26; 16:5-11; 26:35,56)


ஸ்திப்படுத்துவோர் குணப்படவேண்டும்!

மற்றவரை விசுவாசத்தில் ஸ்திரப்படுத்தவேண்டும் என்கிற பாரம் நமக்கு இருப்பது நல்லது.

அதற்கு முன்பு நாம் நமது ஜீவியத்திலும், ஊழியத்திலும், உபதேசத்திலும் உள்ள பிழைகளை திருத்திக்கொள்வது அவசியம். 

தன் சகோதரனின் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைப்பார்க்கிறவர், முதலாவது தன் கண்ணிலிருக்காற உத்திரத்தை அகற்றவேண்டும் என்று ஆலோசனை சொல்லுகிறார் ஆண்டவர். (மத்.7:3-5)

பிறருடைய ஜீவியம், ஊழியம், உபதேசம் இவைகளில் காணப்படுகிற குறைகளை சுட்டிக்காட்டுகிறதில் தீவிரமாய் இருக்கிற நாம், நமது ஜீவியம், ஊழியம், உபதேசம் இவைகளில் காணப்படுகிற குறைகளை ஆராய்ந்துபார்க்க ஆவலில்லாமலிருப்பது நியாயமில்லையே!

நம் சகோதரர் கண்ணிலிருக்கிற துரும்பு நம்மை உறுத்துகிற அளவுக்கு நமது கண்ணிலருக்கிற உத்திரம் உறுத்தவில்லையென்றால், நாம் எவ்வளவு உணர்வற்றவர்களாய் இருக்கிறோம்!


குணப்பட்டவர் ஸ்திரப்படுத்தவேண்டும்!

தனது கண்ணிலிருக்கிற உத்திரத்தை அகற்றியோரே, தன் சககோதரர் கண்ணிலிருக்கிற துரும்பை அகற்றத் தகுதியுள்ளவராகிறார். குணப்பட்டவர் ஸ்திரப்படுத்த எந்தத் தடையும் இல்லை.

குணப்பட்ட பலர் தங்கள் சகோதரரை ஸ்திரப்படுத்துவதை குறித்த தரிசனமற்றவர்களாய் இருக்கிறதைக் காணமுடிகிறது.

நாம் குணப்பட்டது நமது சகோதரரை ஸ்திரப்படுத்தவே என்பதை நாம் உணரவேண்டும்.

பேதுருவின் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு அவனுக்காக வேண்டிக்கொண்டு ஆண்டவர் உத்தரவாதம்பண்ணியிருக்க, தனது சகோதரரை ஸ்திரப்படுத்த பிரயாசப்படவேண்டியது பேதுருவின் கடமையாயிருக்கிறது.

"மீன்பிடிக்கப்போகிறேன்" என்று சீஷர்களை பின்மாற்றத்திற்கு அழைத்துசென்ற பேதுரு (யோவான் 21:2,3), மனுஷரைப் பிடிக்கிற ஊழியத்தில் அவர்களுக்கு முன்னுக்கு நின்றார்! (அப்.2:14)

இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று ஆலோசனை சங்கத்தார் அப்போஸ்தலருக்குக் கட்டளையிட்டபோது, "தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள். நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே" என்று யோவானோடு சேர்ந்து அவர்களுக்கு பிரதியுத்தரம் கொடுத்தார் பேதுரு! (அப்.4:18-20) 

"நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள்" என்று ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக பிரதான ஆசாரியன் அப்போஸ்தலர்களை நோக்கி சொன்னபோது: "மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது" என்று பேதுருவுடன் சேர்ந்து மற்ற அப்போஸ்தலரும் தைரியமாய் பதிலளித்தார்கள்! (அப்.5:27-29)

இவ்விதமாய் பேதுரு விசுவாசத்தில் பலவீனமாய் இருந்த அப்போஸ்தலரை விசுவாசத்தில் ஸ்திரப்படுத்த அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்.

நாம் குணப்பட்டு, நமது சகோதரரை விசுவாசத்தில் ஸ்திரப்படுத்தி, இயேசுகிறிஸ்துவின் ராஜ்யத்தின் மகிமையை சுதந்தரிக்க நாம் அனைவரும் சேர்ந்து ஆயத்தமாக தேவன் நமக்கு கிருபை பாராட்டுவாராக!!

க. காட்சன் வின்சென்ட்
          (கோயம்பத்தூர்)
               8946050920







=============================================
தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கையில், வாக்குத்தத்த வசனங்களை எடுத்து விசுவாசிகளுக்கு கொடுப்பது தவறாகுமா?
===================================
தேவன் இஸ்ரவேலருக்கு பூமிக்குரிய பொதுவான ஆசீர்வாதங்களைகுறித்து சில வாக்குத்தத்தங்களை கொடுத்தார். (எண்.10:29; உபா.7:12-15; 26:19; 28:1-12; 1இராஜா. 8:56; சங்.105:42-45; ஏசாயா 41:8-20; 43:1-6; 44:1-5)

இஸ்ரவேலரில் சிலருக்கு தனிப்பட்டவிதத்தில் சில வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். (ஆதி.12:1-4; 13:14-17; 15:4,5; 17:1-8; 22:15-18; 28:13-15; 37:5-10; யாத்.4:12,17, 34:10; யோசுவா 1: 5-9; நியா.12-16; 2சாமு.7:11-17; 1இராஜா.3:11-14; எரே.1:5,7-10)

இஸ்ரவேலர் மற்றும் பிறவினத்தாருக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக உண்டாகும் மீட்பை குறித்த வாக்குத்தத்தங்களையும் கொடுத்தார். (ஏசாயா 9:1; 40:5; 42:7; 49:6; யோவேல் 2:28-30; ஆகாய் 2:7)

பொதுவான இஸ்ரவேலருக்கோ, இஸ்ரவேலில் தனிப்பட்ட நபருக்கோ தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்களை எடுத்து வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர வாக்குத்தத்தமாக விசுவாசிகளுக்குக் கொடுக்கும் வழக்கம் ஆதிசபையில் காணப்படவில்லை.

"எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே" என்று சொன்ன பவுலும் (2கொரிந்.1:19,20): இன்றைக்கு கிறிஸ்தவர்களுக்கு நாம் வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர வாக்குத்தத்தமாகக் கொடுக்கிற வசனங்களை எடுத்து ஆதிசபையாருக்கு வாக்குத்தத்தங்களாகக் கொடுத்ததில்லை. 

"தேவனுடைய வாக்குத்தத்தங்கள்" என்று இன்று நாம் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கும் பூமிக்குரிய ஆசீர்வாதங்களைக்குறித்த வாக்குத்தத்தங்களை பவுல் குறிப்பிடவில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.


தேவனுடைய வாக்குத்தத்தங்களாக பவுல் எவைகளை குறிப்பிடுகிறார்?

நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை. அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி. 
            2கொரிந்.1:18
என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார்
            2கொரிந்.1:19
என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.

தங்களால் பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து நிச்சயமுள்ளவராக இருக்கிறதுபோல, தாங்கள் கொரிந்தியருக்குச் சொன்ன வார்த்தையும் நிச்சயமானவைகள் என்கிறார் பவுல்.

அப்படியானால், தாங்கள் கொரிந்தியருக்கு சொன்ன தேவவார்த்தைகளையே பவுல் இங்கு தேவனுடைய வாக்குத்தத்தங்களாகக் குறிப்பிடுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம்.

பவுல் கொரிந்தியருக்கு சொன்ன தேவவார்த்தைகள் எவை?

ஏனென்றால், நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன். 
            2கொரிந்.1:13
கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே
            2கொரிந்.1:14
என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளில் உண்டாகும் புகழ்ச்சியைப்பற்றி அதாவது நித்தியவாழ்வை குறித்து தாங்கள் எழுதின காரியங்களையே கொரிந்தியருக்கு சொன்ன தேவவார்த்தைகளாக பவுல் குறிப்பிடுகிறார்.

அப்படியெனில், நித்தியஜீவனைப்பற்றி தாங்கள் சொன்ன வார்த்தைகளையே தேவனுடைய வாக்குத்தத்தங்கள் என்று பவுல் சொல்லுகிறதை புரிந்துகொள்ளலாம்.

உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே. 
            2கொரிந்.1:21
அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்
            2கொரிந்.1:22
என்று பவுல் சொல்லுகிறதையும் கவனியுங்கள்.

கிறிஸ்துவுக்குள் தேவன் தங்களை ஸ்திரப்படுத்தி, அபிஷேகம்பண்ணி முத்திரித்து, தங்களுடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறதைப் பற்றி தாங்கள் சொன்ன சத்தியங்களையே பவுல் தேவனுடைய வாக்குத்தத்தங்களாகக் குறிப்பிடுகிறார் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

"பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம். தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம். இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம். இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், *மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப்* போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம். 
இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே. ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே" என்று பவுல் சொல்லுகிறதும் கவனிக்கத்தக்கது. (2கொரிந்.5:1-5)

பரலோகத்திலே நமக்கு இருக்கிற நித்திய வீட்டுக்கு நம்மை ஆயத்தப்படுத்தவும் அதற்கான ஆதாரமாகவுமே பரிசுத்தஆவியானவர் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறார்.

"அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்" என்று பவுல் சொல்லுகிறதும் கவனிக்கத்தக்கது. (எபேசி.1:14) 

அப்போஸ்தலர் 13:23,33; 26:6,7; ரோமர் 1:4,5; 4:14-16; 9:8; 15:8; கலாத்தியர். 3:14-19,22,29; 4:23,24; எபேசியர் 3:3; 1தீமோத்தேயு 4:8; 2தீமோத்தேயு 1:1; தீத்து 1:3,4 ஆகிய வசனங்களில் பவுல் குறிப்பிடும் வாக்குத்தத்தங்கள் இயேசுகிறிஸ்துவின் மூலமாக உண்டாகும் இரட்சிப்பு மற்றும் நித்திய மகிமையுடன் தொடர்புடையவையாகும்.

இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதாக பவுல் சொல்லும் தேவனுடைய வாக்குத்தத்தங்கள், இயேசுகிறிஸ்துவின் மூலமாக உண்டாகும் இரட்சிப்பு மற்றும் நித்திய மகிமையுடன் தொடர்புடையவை என்பதை ரோமர் 1:4; 15:8,9; கலாத்தியர் 3:14,17,18,22,29; எபேசியர் 3:3; 2தீமோத்தேயு 2:1 ஆகிய வசனங்களின் வழியாய் நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.

இப்படியிருக்க, நம்மில் பலர் வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்தர வாக்குத்தத்தமாகக் கொடுக்கும் பூமிக்குரிய ஆசீர்வாதங்களைப்பற்றியக் காரியங்கள் கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், ஆமென் என்றும் இருக்கிறதாக அர்த்தப்படுத்துகிறது சரியல்ல.

நமது இம்மைக்குரிய வாழ்வுக்கான வாக்குத்தத்தங்கள் நிறைவேறுகிறதிலும் கிறிஸ்து முக்கிய பங்காற்றுகிறார். எனினும், மறுமை வாழ்வுக்கான வாக்குத்தத்தங்களில் தேவஜனங்களை நடத்துகிறதிலேயே ஊழியர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்பதே இயேசுகிறிஸ்துவின் விருப்பமாகும்!

மறுமை வாழ்வுக்காக முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுகிறவர்களின் இம்மை வாழ்வுக்கான தேவைகள் கொடுக்கப்படும் என்று இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணியிருக்கிறார். (மத்.6:31-33)

நாளையத் தேவைகளுக்காகக் கவலைப்பட அவசியமில்லாத இயேசுவின் சீடனுக்கு (மத்.6:34), நாளைய மறுநாளின் தேவைகளுக்கான வாக்குத்தத்தங்கள் அவசியமில்லை.

"நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணங்கள். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே" (எபிரே.13:5) என்று போதிக்கிற ஆதிசபை ஊழியரைப் போலவே, தேவஜனங்களை நாளையதினத்தைக் குறித்த நம்பிக்கையுள்ளவர்களாக நடத்தவேண்டும்!

உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களுக்கான வாக்குத்தத்த வசனங்களுக்காய் அலைகிறவர்களாக தேவஜனங்களை மாற்றுவது, அன்றன்றுள்ள ஆகாரத்தை மறவாமல் அளிக்கும் தேவன்மேல் உள்ள அவர்களுடைய விசுவாசத்தை சேதப்படுத்துவதாகும்!!

க. காட்சன் வின்சென்ட்
          (கோயம்பத்தூர்)
               8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.