Type Here to Get Search Results !

Mary Moffat Livingstone LIfe History | ராபர்ட் மொஃபாட் வாழ்க்கை சரித்திரம் | 6 மிஷனெரிகளின் வாழ்க்கை சரித்திரம் | Jesus Sam

மேரி மொஃபாட் லிவிங்ஸ்டன் - Mary Moffat Livingstone || ராபர்ட் மொஃபாட் - Robert Moffat || ஆரோன் (ஆறுமுகம் பிள்ளை) - Aaron (Arumugam Pillai) || எட்வர்ட் எம். பவுண்ட்ஸ் - Edward M. Bounds || ஈவன் ராபர்ட்ஸ் - Evan John Roberts || ஜான் விக்லிஃப் - John Wycliffe
==========================
மேரி மொஃபாட் லிவிங்ஸ்டன் - Mary Moffat Livingstone
===========================
மண்ணில் : 12.04.1821
விண்ணில் : 27.04.1862
ஊர் : கிரிக்வாடவுன்
நாடு : ஆப்பிரிக்கா
தரிசன பூமி : ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவின் குருமன் என்ற இடத்தில் உள்ள பெச்சுவானா மக்களிடையே லண்டன் மிஷனரி சொசைட்டியை சேர்ந்த ராபர்ட் மொஃபாட் மற்றும் மேரி மொஃபாட் ஆகியோர் பணியாற்றினர். இந்த மிஷனரி தம்பதியினரின் மூத்த மகளே மேரி. சிறு வயதிலிருந்தே தேவ பயத்தில் வளர்க்கப் பட்ட மேரி, ஆப்பிரிக்காவில் ஒரு மிஷனரியாக பணியாற்ற எப்போதும் வாஞ்சை கொண்டிருந்தார். பின்னர் ஆசிரியராகப் பயிற்சி பெற்ற அவர் குருமனில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்தார். ஒரு திறமையான ஆசிரியராகவும் மற்றும் இல்லத்தரசியாகவும் அவர் உள்ளூர் பழங்குடியினரிடையே நன்கு மதிக்கப்பட்டார்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு மருத்துவ மிஷனரியும் ஆப்பிரிக்க கண்டத்தின் ஆராய்ச்சியாளரான டேவிட் லிவிங்ஸ்டன் உடன் 1845 ஆம் ஆண்டில் மேரிக்கு திருமணம் நடந்தது. தனது கணவரின் மிஷனரி சேவைக்கு தன்னை முழுமையாக அவர் அர்ப்பணித்துக்கொண்டார். எனவே, ஊழியத்தின் பகுதியாக லிவிங்ஸ்டன் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியிலும் தனது ஆதரவை அளித்து கணவருக்கு ஒரு நல்ல தோழரானார். சிங்கங்களால் தாக்கப்பட்டு பயந்துபோன மபோட்சா கிராம மக்களுக்கு லிவிங்ஸ்டனுடன் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தைரியமாக புறப்பட்டார். ஒரு தீவிர ஆய்வாளரான அவரது கணவருடன் குழந்தைகளை எடுத்துக்கொண்டு பெரும்பாலும் ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகள் வழியாக பயணம் செய்தார் மேரி. மிகவும் கடினமான அந்த பயணங்கள் ஆபத்தானவை. பல நாட்கள் தண்ணீர் இல்லாத சூழ்நிலைகளிலும் பயணம் தொடர்ந்து செய்த நேரங்கள் உண்டு. அவர்களின் முதல் பயணத்தில் மேரி கடுமையாக நோய்வாய்ப்பட்டது மட்டுமல்லாமல், அவர்களது பிறந்த மகளையும் இழந்தார். நோயோ, கர்ப்பத்தின் கடினமான சூழ்நிலைகளோ, அல்லது குழந்தையை இழந்த மன வேதனையோ, அவை எதுவும் அவர் கணவரின் சேவையில் ஒத்துழைப்பதைத் தடுக்க முடியவில்லை. மேரி நான்காவது முறையாக குழந்தையுடன் கர்ப்பமாக இருந்தபோதிலும், மகோலோலோ மக்களுக்கு கணவருடன் சுவிசேஷத்தை பிரசங்கிக்க கலஹாரி பாலைவனம் வழியாக 1500 மைல் தூரம் பயணிக்க பின்வாங்கவில்லை.

ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் கடுமையான வறுமையை எதிர்கொண்ட போதிலும், எந்த தாழ்ச்சியும் அறியாமல் குடும்பத்தை வழிநடத்திய ஒரு புத்திசாலியான பெண்மணி மேரி. குழந்தைகளின் கல்விக்காக அவர் தனது கணவரை விட்டு 1852-56 வரை இங்கிலாந்தில் வசித்து வந்தார். மிஷனரி ஊழியத்தில் ஆப்பிரிக்காவின் காடுகளில் தனது பயணங்களைத் தொடர்ந்து செய்திருக்கிற தனது கணவரின் நலன் பற்றி அறியாமல் இருந்த சூழ்நிலைகளிலும் குழந்தைகளை வளர்த்து, ஒழுங்குபடுத்திக்கொண்டு இருந்த அந்த நான்கு ஆண்டுகள் அவருக்கு மிகவும் கடினமானவை. அவர் திருமண வாழ்க்கையில் அனுபவித்த தனிமையையும் பல கஷ்டங்களையும் மௌனமாக சகித்தார். ஜாம்பெசி நதியை ஆராய்ந்து கொண்டிருந்த தனது கணவரை சந்திக்க 1858 ஆம் ஆண்டில் மேரி ஆப்பிரிக்காவுக்கு திரும்பிசென்றார். அங்கு ஷுபங்கா மிஷன் முகாமில் மலேரியாவால் பாதிக்கப்பட்ட மேரி மூன்று மாதங்களுக்குப் பிறகு மரணமடைந்தார்.

பிரியமானவர்களே, மிஷனரி சேவையில் உங்கள் பங்கு என்ன? 

“கர்த்தாவே, உலகெங்கிலும் நடந்து வரும் மிஷனரி சேவையில் எனது பங்கை ஆற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்!"

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


==================
ராபர்ட் மொஃபாட் - Robert Moffat
===================
மண்ணில் : 21.12.1795
விண்ணில் : 09.08.1883
ஊர் : ஆர்மிஸ்டன்
நாடு : ஸ்காட்லாந்து
தரிசன பூமி : தென்னாப்பிரிக்கா

ஸ்காட்லாந்தை சேர்ந்த ராபர்ட் மொஃபாட் லண்டன் மிஷனரி சொசைட்டி மூலம் ஒரு மிஷனரியாக ஆப்பிரிக்காவில் பணியாற்றினார். அவர் ஒரு பிரபலமான மிஷனரி மற்றும் ஆராய்ச்சியாளரான டேவிட் லிவிங்ஸ்டனின் மாமியார் ஆவார். சிறு வயதிலிருந்தே அவர் கிறிஸ்தவ மதத்தின் மூலமாக நல்ல செல்வாக்கை பெற்று இருந்தார். பின்னர் வேலைக்காக இங்கிலாந்து சென்ற அவர் அங்கு ஒரு தோட்டக்காரராக பணிபுரிந்தார். அங்கு அவர் தனது மெதடிஸ்ட் நண்பர்களால் இரட்சிப்பின் அனுபவத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மிஷனரி வேலையில் ஆர்வம் கொண்டிருந்த அவர் ஒரு நாள் "தி லண்டன் மிஷனரி சொசைட்டி" என்று எழுதியுள்ள ஒரு பலகையைப் பார்த்தார். அந்த பார்த்தார். அந்த வார்த்தை கர்த்தரின் ஊழியத்திற்கான வாஞ்சையை அவர் உள்ளத்தில் எழுப்பியது. அந்த சொசைட்டியில் அவர் சந்தித்த ரெவ்.டபிள்யூ.ராபி அவரை ஏற்றுக்கொண்டு. எதிர்கால ஊழியத்திற்காக அவரை ஆயத்தப்படுத்தினார்.

1817 ஆம் ஆண்டில் லண்டன் மிஷனரி சொசைட்டி ராபர்ட்டை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பியது. அவருக்கு ஒப்படைக்கப்பட்ட முதல் பொறுப்பு நமக்வாலாந்தில் பணியாற்றுவதாகும். அச்சமயத்தில் அஃப்ரிகானெர் என்ற ஒரு சட்டவிரோத மனிதனின் கட்டுப்பாட்டில் அந்த பகுதி இருந்தது. கடந்த காலத்தில் மிஷனரிகளை அச்சுறுத்தி, மிஷன் ஸ்தலங்களை அழித்த ஒரு கொள்ளைக்காரன் அவர். இருப்பினும், அந்த கடினமான பயணத்தை தைரியமாகத் தொடங்கிய ராபர்ட் அந்த கிராமத்தில் எதிர்ப்பை மட்டுமே சந்தித்தார். ஆனால் அவர் அந்த கஷ்டங்கள் அனைத்தையும் பொறுமையுடன் சகித்து, அங்குள்ள மக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். இதன் விளைவாக அஃப்ரிகானெரின் மனக்கண்கள் திறக்கப்பட்டு, அவர் ஒரு நல்ல கிறிஸ்தவராக மாறினார். பின்னர் அவர் மிஷனரி ஊழியத்தில் ராபர்ட்டுக்கு நல்ல உதவியாளராகவும் செயல்பட்டார். இந்த நிகழ்வு ராபர்ட்டுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொண்டுவந்தது.

தனது ஊழியத்தில் ஒரு பங்காளியாக இருந்த மேரி ஸ்மித்தை 1819 ஆம் ஆண்டில் ராபர்ட் மணந்தார். பின்னர் குருமன் என்ற பகுதியிக்கு சென்ற அந்த மிஷனரி தம்பதியினர் அங்குள்ள பாட்ஸ்வானா மக்களிடையே பணியாற்றினர். கர்த்தரை சேவிக்க மிகுந்த வாஞ்சை கொண்டிருந்த அவர்கள் அங்கு எதிர்கொண்ட பல கஷ்டங்களையும், துன்பங்களையும், அவமானங்களையும், அச்சுறுத்தல்களையும் சகித்துக்கொண்டு, தங்கள் சேவையைத் தொடர்ந்தார்கள். அவர்கள் பல நாட்கள் பசியுடன் தூங்கிய அநேக சம்பவங்கள் உண்டு. சில சமயங்களில் பசியின் வலியை தாங்க வயிற்றைக் இறுக்கமாக கட்டுவார்கள். இத்தகையான சூழ்நிலைகளுக்கு நடுவில் ராபர்ட் துஸ்வானா மொழிக்கான ஒரு பாணியை உருவாக்கி, 1840 இல் அந்த மொழியில் புதிய ஏற்பாட்டையும், 1857 இல் முழு வேதாகமத்தையும் வெளியிட்டார். அங்குள்ள ஆபத்தான பெச்சுவானா மற்றும் மான்டட்டி பழங்குடியினருக்கும் ராபர்ட் தைரியமாக சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். பின்னர் உடல்நலக்குறைவால் ராபர்ட்டும் அவரது மனைவியும் தங்களுக்கு பிரியமான குருமனிடம் விடைபெற்று 1870 ஆம் ஆண்டில் இங்கிலாந்து திரும்பி சென்றனர். அங்கு தொடர்ந்து பிரசங்கித்து, மிஷனரி சேவைக்காக மக்களை ஊக்குவித்த ராபர்ட் மொஃபாட் தனது வாழ்நாள் முழுவதையும் கர்த்தரின் ஊழியத்திலே செலவிட்டார்.

பிரியமானவர்களே, சட்டவிரோதமாக வாழ்பவர்கள் மற்றும் குற்றவாளிகளை பற்றி கிறிஸ்து கொண்டிருக்கிற பாரம் உங்களிடம் இருக்கிறதா?

“கர்த்தாவே, கைதிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் உமது அன்பை அறிவிக்க எனக்கு தைரியம் தாரும். ஆமென்!"

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


=====================
ஆரோன் (ஆறுமுகம் பிள்ளை) - Aaron (Arumugam Pillai)
======================
மண்ணில் : 1698
விண்ணில் : 1745
ஊர் : கடலூர்
நாடு : இந்தியா
தரிசன பூமி : இந்தியா

ஆரோன் அவர்களின் இயற்பெயர் ஆறுமுகம் பிள்ளை. அவர் உயர் சாதியைச் சேர்ந்த ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியுடன் வர்த்தகம் செய்த அவரது தந்தை சொக்கநாத பிள்ளை, வியாபாரத்தில் பெரும் இழப்பை அடைந்த பின்பு குடும்பத்துடன் அரசபுரத்திற்கு சென்றார். அங்கு அவர்கள் வசித்து வந்த பகுதியில் புராட்டஸ்டன்ட் மிஷன் ஒரு பள்ளியை நிறுவியது. அந்த பள்ளியில் தரங்கம்பாடி லூத்தரன் மிஷனால் அச்சிடப்பட்ட தமிழ் பாடப்புத்தகங்களிலிருந்து தமது கல்வியைப் பெற்றுக் கொண்ட மாணவர்களில் ஆறுமுகமும் ஒருவர்.

ஆறுமுகத்திற்கு 19 வயதாக இருந்தபோது சவரிமுத்து என்ற ஆசிரியர் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை அவருக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் 1718 ஆம் ஆண்டில் பார்தலோமேயு சீகன்பாக் என்பவரால் தரங்கம்பாடியில் ஞானஸ்நானம் பெற்றார். அப்பொழுது அவருக்கு ஆரோன் என்ற கிறிஸ்தவ பெயர் வழங்கப்பட்டது. ஆரோன் தனது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்பை சந்தித்த போதிலும் விசுவாசத்தில் உறுதியாக நின்றார். அவர் ஒரு தமிழ் இறையியல் பள்ளியில் வேதாகமத்தை பயின்றார். பின்னர் தரங்கம்பாடியில் உள்ள நியூ ஜெருசலேம் சபையில் உதவி கேடெசிஸ்ட், என்றால் கிறிஸ்தவத்தின் நியமங்களைக் கற்பிக்குபவராக நியமிக்கப்பட்டார். தனது மக்களை பற்றி மிகுந்த பாரம் கொண்டிருந்த ஆரோன், அவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க நீண்ட தூர பயணமானாலும் செல்வார். அவர் தமிழ்நாட்டின் பொறையார், சீர்காழி மற்றும் சந்திர்பாடி ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். ஊழியத்திற்க்காக அவர் கொண்டிருந்த வாஞ்சையை கண்ட ஜெர்மன் லூத்தரன் மிஷனரிகள் 1733 ஆம் ஆண்டில் அவரை ஒரு பாதிரியாராக நியமித்தனர். பாதிரியாராக நியமிக்கப்பட்ட முதல் ஐரோப்பியர் அல்லாதவர் அவரே.

ஆரோன் நல்ல பேச்சாற்றல் திறன் கொண்டவர். அவர் கொண்டிருந்த நல்ல தனிப்பட்ட உறவுகள் உள்ளூர் மக்களுக்கு ஆவிக்குரிய ஆறுதலையும் ஐரோப்பியர்களுக்கு ஊழியத்தில் சரியான யோசனைகளையும் வழங்க உதவியது. ஆரோன் தமிழ் மக்களுக்கும் ஐரோப்பிய மிஷனரிகளுக்கும் இடையில் ஒரு பாலமாக மாறினார். அவர் மிகுந்த தைரியம், நேர்மை மற்றும் ஞானமுள்ள மனிதராக வாழ்ந்தார். மோதல்களை மோதல்களை எதிர்கொள்ளும் போது வெட்கப்படாமல் நேரடியாக எதிர்கொண்டு அவற்றை சமாதானத்துடன் தீர்த்தார். பகுத்தறிவு விளக்கங்களை கொண்டு உள்ளூர் மக்களிடையே காணப்பட்ட மூடநம்பிக்கைகளை தகர்க்க முயன்றார். அவருடைய ஊழியத்தின் நாட்கள் நீண்டதல்ல. என்றாலும், அவர் பணியாற்றிய பகுதிகளில் கிறிஸ்தவர்களிடமிருந்தும் இந்துக்களிடமிருந்தும் அன்பையும் மரியாதையையும் பெற்றவராக திகழ்ந்தார் ஆரோன்.

பிரியமானவர்களே, புதிய அர்ப்பணிப்புடன் கர்த்தருக்கு சேவை செய்ய நீங்கள் ஆயத்தமா?

“கர்த்தாவே, இன்னும் அதிக உண்மையுடனும் விடாமுயற்சியுடனும் உமக்கு ஊழியம் செய்ய எனக்கு உதவி செய்யும். ஆமென்!"

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


======================
எட்வர்ட் எம். பவுண்ட்ஸ் - Edward M. Bounds
=======================
மண்ணில் : 15.08.1835
விண்ணில் : 24.08.1913
ஊர் : ஷெல்பிவில்லே, மிஸ்ஸோரி
நாடு : அமெரிக்கா
தரிசன பூமி : அமெரிக்கா

எட்வர்ட் மெக்கென்ட்ரீ பவுண்ட்ஸ் அமெரிக்காவில் மெதடிஸ்ட் எபிஸ்கோபல் சபையை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற சுவிசேஷகர் ஆவார். 1835 ஆம் ஆண்டில் பிறந்த இவர் தனது 14 வயதில் தந்தையை இழந்தார். அவர் சட்ட படிப்பை பயின்று ஒரு வழக்கறிஞராக வெற்றி பெற்றார். என்றபோதிலும், 1857-58 க்கு இடையில் அமெரிக்காவில் எழும்பிய பெரிய ஆவிக்குரிய எழுப்புதலின்போது பரிசுத்த ஆவியினால் தொடப்பட்ட எட்வர்ட் அவர்களும் தனது வாழ்க்கையை கர்த்தருடைய ஊழியத்திற்காக அர்ப்பணித்தார். எனவே 1858 ஆம் ஆண்டில் வழக்கறிஞரான தனது தொழிலை விட்டுவிட்டு மிசோரியில் உள்ள சென்டினரி செமினரி என்ற ஒரு வேதாகம கல்லூரியில் பயின்றார். பின்னர் அவர் மிஸ்ஸோரியின் மான்டிசெல்லோ மெதடிஸ்ட் சபையில் ஒரு போதகராக நியமிக்கப்பட்டார்.

அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அவர் கான்ஃபெடரேட் இராணுவத்தில் மதகுருவாக பணியாற்றிருந்தார். இரண்டாவது ஃபிராங்க்ளின் போரின் போது அவர் யூனியன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக ஃபெடரல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். எவ்வாறாயினும், சிறைச்சாலையில் அவர் சுதந்திரமாக பிரசங்கித்து கைதிகளுக்கு உதவி செய்த்துக்கொண்டு தனது நேரத்தை பிரயோஜனப்படுத்திக்கொண்டார். விடுதலையான பிறகு அவர் டென்னசியில் உள்ள ஃபிராங்க்ளின் நகரத்திற்குத் திரும்பினார். அங்கு மக்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காக வாராந்திர ஜெபக் கூட்டங்களைத் தொடங்கினார். அவருடைய ஊழியத்தின் மூலம் அந்த நகரத்தில் ஒரு பெரிய ஆவிக்குரிய எழுப்புதல் நிகழ்ந்தது. அதன் விளைவாக நூற்றுக்கணக்கானவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள், மேலும் பலர் தங்கள் வாழ்க்கையை புதிய அர்ப்பணிப்புடன் கர்த்தருக்கு சமர்ப்பித்துக்கொண்டனர். தேவனுக்காக கடினமாக ஊழியம்செய்த எட்வர்டின் பராமரிப்பில் எட்டு கிறிஸ்தவ சபைகள் வளர்ந்தன. தாம் தொகுப்பாளராக பணியாற்றிய மெதடிஸ்ட் பத்திரிகையான தி கிறிஸ்டியன் அட்வகேட்' மூலம், கிருபையும் இரக்கமும் நிறைந்த ஒரு பக்தியுள்ள வாழ்க்கையை வாழ கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார்.

அமைதியான இயல்புடைய எட்வர்ட், தனது எல்லா பொருள் தேவைகளுக்கும் ஆண்டவரையே நம்பியிருந்தார். திருமணமான நான்கு ஆண்டுகளில் உடல்நலக்குறைவு காரணமாக மனைவியையும் இரண்டு மகன்களையும் இழந்தார். ஆனால் ஆண்டவர் மட்டுமே அவருடைய பெலனாக இருந்தார். அழிந்துபோகின்ற ஆத்துமாக்களுக்காகவும், வீழ்ந்த நிலைமையிலுள்ள ஊழியக்காரர்களுக்காகவும் அவர் இடைவிடாமல் ஜெபித்தார். ஒவ்வொரு நாள் அதிகாலையில் மூன்று மணிநேரமும், மாலையில் இன்னும் பல மணிநேரமும் ஜெபத்தில் செலவிட்ட அவருடைய வாழ்க்கை நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது. மிகுந்த அதிகாரத்துடன் பிரசங்கித்த எட்வர்ட், சுதந்திரமாக வாழ ஊக்கமளிக்கும் இறையியலை கண்டித்தார். அவர் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவற்றில் சில புத்தகங்கள் குறிப்பாக ஜெபத்தை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளன. அவருடைய புத்தகங்கள் கிறிஸ்துவின் அடையாளத்தை கிறிஸ்தவர்களை இன்றைக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.

பிரியமானவர்களே, உங்கள் ஜெப வாழ்க்கை பெலனுள்ளதாய் இருக்கிறதா?

“கர்த்தாவே, எனது ஜெப வாழ்க்கையை உயிர்ப்பித்து, உம்முடைய ஒரு புதிய படைப்பாக என்னை மாற்றும். ஆமென்!"

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


===================
ஈவன் ராபர்ட்ஸ் - Evan John Roberts
=====================
மண்ணில் : 08.06.1878
விண்ணில் : 29.01.1951
ஊர் : லவ்ஹர்
நாடு : வேல்ஸ்
தரிசன பூமி : இங்கிலாந்து

ஹென்றி மற்றும் ஹன்னா ராபர்ட்ஸின் இரண்டு மகன்களில் ஈவான் ராபர்ட்ஸ் இளையவர். ஒரு கால்வினிஸ்டிக் மெதடிஸ்ட் இல்லத்தில் வளர்க்கப்பட்ட அவர், கர்த்தருக்கு பயப்படும் குழந்தையாக வளர்ந்தார் மற்றும் தவறாமல் தேவாலயத்திற்குச் சென்றார். மிக இளம் வயதிலேயே, அவர் தனது தந்தையுடன் நிலக்கரி சுரங்கங்களில் வேலை செய்யத் தொடங்கினார், பின்னர் ஒரு கறுப்பராகப் பயிற்சி பெற்றார். வேலை செய்யும் போது, ​​ ஈவான் நிலக்கரிச் சுரங்கத்தின் புழுதியில் முழங்கால் படியிட்டு ஜெபம்/பிராத்தனை செய்வதை வழக்கமாக செய்துவந்தார். அவர் சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட கிழிந்த பள்ளியில் (ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளி) கற்பித்தார் மற்றும் அவர்களின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்தார்.

ஈவான் பிரார்த்தனையில் ஈடுபட்டவர் மற்றும் நீண்ட இரவுகளை முழங்காலில் கழித்தார். ஒரு இரவு, அவர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, ​​அவர் விசித்திரமாக நடுங்கத் தொடங்கினார், மேலும் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக நினைத்தார். ஆனால் விரைவில் நடுக்கம் தணிந்தது, மேலும் அவர் தனது அறையில் கர்த்தருடைய பிரசன்னத்தை இருப்பதை உணர்ந்தார். அவர் சுமார் நான்கு மணி நேரம் தேவனுடன் தெய்வீக உறவை அனுபவித்தார், இது அவரது வாழ்க்கையை மாற்றியது. அவர் தனது வாழ்க்கைக்கான தேவனின் நோக்கத்தை அறிந்திருந்தார் மற்றும் 1904 இல் நியூகேஸில் எம்லின் கல்லூரியில் ஊழியத்திற்காக படிக்கத் தொடங்கினார். சேத் யோசுவாவின் சேவைகளில் ஒன்றில் கலந்துகொண்டபோது, ​​ ஈவான் பரிசுத்த ஆவியால் ஆழமாக தொடப்பட்டார். அவர் நவம்பர் 1904 மற்றும் ஜனவரி 1906 க்கு இடையில் தொடர்ச்சியான எழுப்புதல் கூட்டங்களை நடத்தினார். அவருடைய பிரசங்கங்கள் முக்கியமாக பாவங்களை ஒப்புக்கொள்வது, விசுவாசத்தின் தொழில் மற்றும் பரிசுத்த ஆவிக்கு மறைமுகமாக கீழ்ப்படிதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. ஒரு சக்திவாய்ந்த ஆன்மீக விழிப்புணர்வு வேல்ஸ் முழுவதும் பரவியது மற்றும் ஆயிரக்கணக்கானோர் மாற்றப்பட்டு தேவாலயத்தில் சேர்க்கப்பட்டனர்.

ஈவான் ஒரு தாழ்மையான மனிதராக இருந்தார், அவர் தேவனைச் சேவிப்பதற்கான சக்திவாய்ந்த வைராக்கியத்தால் நிறைந்திருந்தார். தேவனுடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவதற்கான அவரது விருப்பமும், முழங்காலில் இருக்கத் தயாராக இருப்பதும் அவரை தேவாலயத்தில் எழுப்புதலுக்கான சக்திவாய்ந்த கருவியாக மாற்றியது. வேல்ஸ் தேசத்தின் எழுப்புதலுக்காக 13 மணிநேரம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததாக அவர் ஒருமுறை கூறினார். ஈவான் பல கவிதைகளையும் பாடல்களையும் இயற்றினார். அவர் தனது இறுதி ஆண்டுகளை பரிந்து பேசும் ஊழியத்தில் முழுமையாக செலவழித்தார்..

பிரியமானவர்களே, உங்களின் மூலம் எந்த இடத்தில் ஆன்மீக எழுப்புதல் ஏற்படப் போகின்றது?

“கர்த்தாவே, என் வீட்டில் எழுப்புதல் ஏற்பட, அந்த எழுப்புதலை முதலில் எனக்குத் தாரும். ஆமென்!"

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்


=================
ஜான் விக்லிஃப் - John Wycliffe
================
மண்ணில் : 1325
விண்ணில் : 1384
ஊர் : யார்க்ஷயர்
நாடு : இங்கிலாந்து
தரிசன பூமி : இங்கிலாந்து

இங்கிலாந்து நாட்டின் யார்க்ஷயரில் பிறந்த ஜான் விக்லிஃப், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். மாணவராக இருந்தபோது அவரது வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. அவரது பொருளாதார நிலை மிகக் குறைந்ததாக இருந்தபோதிலும், அவர் 1369 இல் தெய்வீக இறையியலில் இளங்கலை பட்டமும், 1372 இல் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர் அவர் ஆக்ஸ்போர்டின் முன்னணி தத்துவஞானிகள் மற்றும் இறையியலாளர்களில் ஒருவரானார். 1374 ஆம் ஆண்டில் லுட்டர்வர்த்தில் உள்ள செயின்ட் மேரி திருச்சபையின் ரெக்டராக (பாரிஷ் மதகுருவாக) நியமிக்கப்பட்டார்.

அவர் இங்கிலாந்தில் ஆரம்பகால கிறிஸ்தவ சீர்திருத்தத்திற்கான கூட்டங்களின் மேலாளர்களில் ஒருவர் ஆவார். கிறிஸ்தவ சபையில் வேரூன்றிய வேதப்பூர்வமற்ற நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் அவர் கண்டித்தார். சபையானது உலக பிரகாரமான பொருள் மற்றும் அதிகார ஏக்கத்தினால் தீட்டுப்படுத்தப்பட்டு பாவத்தில் விழுந்துவிட்டது என்பது அவரது கருத்தாக இருந்தது. சபைக்கு எதிரான அவரது விமர்சனம், கிறிஸ்தவ சபையின் சீர்திருத்தத்திற்காக அவர் கொண்டிருந்த ஆர்வத்திற்கும், உண்மையான ஆழ்ந்த வாஞ்சைக்கும் அடையாளமாக இருந்தன. சீர்திருத்தத்திற்கான அவரது ஊழியம் போப்பால் கண்டிக்கப்பட்டது. அதனால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும், அவர் எந்த அச்சுறுத்தல் களுக்கும் பின்வாங்காமல், 1381 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்படும் வரை அங்கு வேதாகம கோட்பாடுகளை தொடர்ந்து கற்பித்தார்.

கிறிஸ்தவ கோட்பாட்டின் ஆதாரம் வேதாகமம் மட்டுமே என்றும், உலக சம்பந்தமான எந்த அதிகாரமும் வேதத்தில் உள்ளதை மாற்ற முடியாது என்றும் விக்லிஃப் உறுதியாக வாதிட்டார். அந்த நேரத்தில் வேதாகமத்தின் லத்தீன் மொழிபெயர்ப்புகள் மட்டுமே கிடைத்ததால் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் வேதாகமம் கிடைக்க வேண்டும் என்று அவர் வாஞ்சித்தார். எனவே, அவர் தனது சகாக்களான ஜான் பர்வி மற்றும் ஹியர்ஃபோர்டின் நிக்கோலஸ் ஆகியோருடன் சேர்ந்து முதன்மையாக ஆங்கிலத்தில் வேதாகமத்தை மொழிபெயர்த்தார். அவரைப் பின்பற்றுபவர்கள் 'லொல்லார்ட்ஸ்' என்று கேலிக்குரியவர்களாக அழைக்கப்பட்டாலும், அவர்கள் அவர்கள் கிறிஸ்தவ சபையை சீர்திருத்துவதில் முக்கிய பங்கு வகித்தனர்.

1384 ஆம் ஆண்டில் அவர் மரணம் அடையும் வரை தொடர்ந்து எழுதினார். அவரது எழுத்துக்கள் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்திற்கான அடித்தளத்தை அமைத்தன. அவரது மரணத்திற்குப் பிறகு அவர் மத விசுவாசத்திற்கு எதிரான போதனைகள் செய்பவர் என்று அறிவிக்கப்பட்டார், மேலும் அவருடைய எழுத்துக்கள் கத்தோலிக்க திருச்சபையால் தடை செய்யப்பட்டன. ஆனாலும் விக்லிஃப்பின் போதனைகள் தொடர்ந்து பரவின. அதனால், அவர் மரணமடைந்த 43 வருடங்களுக்குப் பிறகு 1428 ஆம் ஆண்டில் கத்தோலிக் சபையின் அதிகாரிகள் அவரது உடலைக் வெளியேற்றி தகனம் செய்து, அந்த அஸ்தியை ஸ்விஃப்ட் நதியில் எறிந்ததின் மூலம் அவர் மறுக்கப்பட்டார் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தினர். எவ்வாறாயினும், ஏழு நூற்றாண்டுகள் கழித்து, அவருடைய போதனைகள் இன்றைக்கும் பலரின் வாழ்க்கையில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருகின்றன.

பிரியமானவர்களே, தவறான கோட்பாட்டிலிருந்து உண்மையான பாதைக்குள் மக்களை வழிநடத்த உங்கள் முயற்சி என்ன? 

“கர்த்தாவே, எனது தனிப்பட்ட வாழ்க்கையில் வேதவசனங்களின் உண்மைகளை இறுக்கமாகப் பிடிக்கவும், மக்களை சரியான கோட்பாடுகளுக்கு வழிநடத்தவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்!"

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: V. வீர சுவாமிதாஸ்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.