தலையின் எடை என்ன? | கொக்குக்கு எத்தனை கால்?? | பாத்திரங்களின் குட்டி
தலையின் எடை என்ன?
முன்னொரு காலத்தில் சந்தனப்பட்டி என்ற சிற்றூரில் உழவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதுமை அடைந்த உழவன் இறந்துவிட, அண்ணன், தம்பி இருவரும் வறுமையில் வாடினர்.
“”தம்பி! நாம் இருவரும் இந்த ஊரில் கடினமாக உழைக்கிறோம். இருந்தும் வயிறார உண்ண முடியவில்லை. நான் வெளியூர் சென்று பொருள் ஈட்டித் திரும்புகிறேன். நீ அதுவரை நம் வீட்டைப் பார்த்துக்கொள். அதன்பிறகு, வளமாக வாழலாம்!” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
நெடுந்தொலைவு நடந்து ஓர் ஊரை அடைந்தான். அந்த ஊர் பண்ணையாரிடம் வேலை கேட்கச் சென்றான். அவரை பண்ணையார் என்று அறிந்துகொண்ட அவன், “”ஐயா! வேலை தேடி ஊருக்கு வந்தேன். எனக்கு ஏதேனும் வேலை கொடுங்கள்,” என்று வேண்டினான்.
“”நல்ல இடத்திற்குத்தான் வந்துள்ளாய். எனக்கு ஒரு வேலையாள் தேவை. நல்ல ஊதியம் தருவேன். ஆனால்…” என்று இழுத்தார் அவர்.
“”எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படியே நடந்து கொள்வேன்!” என்றான் அவன்.
“”நீ என்னிடம் ஓராண்டு வேலை செய்ய வேண்டும். ஆண்டு முடிவில் மூன்று பொற்காசுகள் கூலியாகத் தருவேன். நான் என்ன வேலை சொன்னாலும் நீ செய்து முடிக்க வேண்டும். அப்படி உன்னால் முடிக்க முடியாத ஒவ்வொரு வேலைக்கும், ஒவ்வொரு பொற்காசுகளைக் குறைத்துக் கொள்வேன்!” என்றார் அவர்.
சூழ்ச்சியை அறியாத அவன், “”இன்றே வேலையில் சேர்ந்து கொள்கிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் செய்து முடிக்கிறேன்!” என்றான். அவரிடம் வேலைக்குச் சேர்ந்த அவன் உண்மையாக உழைத்தான். நாட்கள் ஓடின. ஓராண்டு முடிய இன்னும் ஒருநாள் தான் இருந்தது.
“மூன்று பொற்காசுகள் நாளை கிடைக்கும்; ஊருக்குச் சென்று தம்பியுடன் வளமாக வாழலாம்’ என்று மகிழ்ச்சியுடன் இருந்தான் அவன். பொழுது விடிந்தது.
பண்ணையாரிடம் சென்ற அவன், “”ஐயா! இன்றோடு ஓராண்டு முடிகிறது. நீங்கள் சொல்லிய கூலியைக் கொடுத்தால் நான் ஊருக்குச் செல்வேன்!” என்று இழுத்தான்.
“”இன்று மாலை தான் நான் சொன்ன ஓராண்டு முடிகிறது. உனக்கு மூன்று எளிய வேலைகள் வைக்கிறேன். மாலைக்குள் அவற்றை முடித்துவிட்டுக் கூலியை வாங்கிக்கொள். பிறகு மகிழ்ச்சியுடன் உன் ஊருக்குச் செல்,” என்றார் அவர்.
“”முதல் வேலை என்ன சொல்லுங்கள்?” என்று கேட்டான் அவன்.
“”அதோ பார்… அங்கே இரண்டு விலை உயர்ந்த பீங்கான் ஜாடிகள் உள்ளன. ஒன்று பெரிய ஜாடி; இன்னொன்று சிறிய ஜாடி. அந்தச் சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை வைக்க வேண்டும். இதுதான் நீ செய்ய வேண்டிய முதல் வேலை,” என்றார் அவர்.
“”ஐயா! எப்படி சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை வைக்க முடியும். யாராலும் செய்ய முடியாத செயலைச் செய்யச் சொல்கிறீர்களே! இது என்ன அநியாயம்!” என்று அலறினான் அவன்.
“”செய்ய முடியுமா, முடியாதா என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் சொன்ன இந்த வேலையைச் செய்யாவிட்டால், உன் கூலியில் ஒரு பொற்காசைக் குறைத்துக் கொள்வேன்!” என்று சொன்னார் அவர். வேறு வழியில்லாமல், “”ஐயா! அடுத்த வேலை என்ன? அதைச் சொல்லுங்கள்,” என்று கேட்டான்.
“”அந்த அறைக்குள், ஈரமான நெல் உள்ளது. நெல்லை நீ வெளியே எடுத்துச் செல்லாமல் காய வைக்க வேண்டும். அதுதான் இரண்டாவது வேலை,” என்றார் அவர். திடுக்கிட்ட அவன், “”ஈர நெல்லை வெளியே எடுத்துச் செல்லாமல் எப்படிக் காய வைக்க முடியும்? நீங்களே வழி சொல்லுங்கள்!” என்று கோபத்துடன் கேட்டான்.
“”வழி எல்லாம் எனக்குத் தெரியாது. நான் என்ன சொல்கிறேனோ அதை நீ செய்ய வேண்டும்!” என்றார் அவர்.
இரண்டு பொற்காசுகள் போய்விட்டன. ஒரு பொற்காசாவது கிடைக்காதா என்ற எண்ணத்தில், மூன்றாவது வேலை என்ன என்று சோகத்துடன் கேட்டான் அவன்.
“”இந்த வேலை மிக எளிய வேலை. என் தலையின் எடையை மட்டும் நீ சரியாக அளந்து சொல்ல வேண்டும்; அவ்வளவுதான்!” என்றார் அவர்.
“”ஐயா! உங்கள் தலையின் எடையை மட்டும் எப்படிச் சொல்ல முடியும்? ஓராண்டு உங்களிடம் உண்மையாக உழைத்தேன். என் மீது இரக்கம் காட்டுங்கள்,” என்று கெஞ்சினான் அவன்.
“”நான் சொன்ன மூன்று வேலைகளை நீ செய்யவில்லை. ஒப்பந்தப்படி உனக்குத் தர வேண்டிய மூன்று பொற்காசுகளை நான் தர வேண்டாம். போய் வா. இனி நீ கெஞ்சுவதாலோ, அழுவதாலோ என் உள்ளம் இரங்காது!” என்று கண்டிப்புடன் சொன்னார் அவர்.
தான் நன்றாக ஏமாற்றப்பட்டது அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. தள்ளாடியபடி தன் ஊர் வந்து சேர்ந்தான் அவன். தம்பியிடம் நடந்ததை எல்லாம் சொல்லி அழுதான்.
“”அண்ணா! உன்னை ஏமாற்றிய அந்தப் பண்ணையாரைப் பழிக்குப் பழி வாங்குகிறேன்!” என்று கோபத்துடன் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் தம்பி. அண்ணன் வேலை பார்த்த அதே ஊரை அடைந்தான்.
பண்ணையாரைச் சந்தித்த அவன், “”ஐயா! நான் வெளியூர். வேலை தேடி இங்கு வந்தேன். ஏதேனும் வேலை கிடைக்குமா?” என்று பணிவுடன் கேட்டான்.
“ஏமாளிக்கு உலகில் பஞ்சமே இல்லை. புதிதாக ஓர் ஏமாளி கிடைத்திருக்கிறான். இவனை ஏமாற்றி வேலை வாங்க வேண்டும்’ என்று நினைத்தார் அவர்.
“”எனக்கும் உன்னைப் போல ஒரு வேலையாள் தேவை. நீ என்னிடம் ஓராண்டு வேலை செய்ய வேண்டும். அப்படி வேலை செய்து முடிந்ததும், உன் கூலி மூன்று பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் செல்லலாம்,” என்றார்.
ஓராண்டு முடிவடைந்தது. ஏதும் அறியாதவன் போல், “”ஐயா! இன்றோடு ஓராண்டு முடிகிறது…” என்றான்.
“”உனக்கு மூன்று எளிய வேலைகள் வைத்திருக்கிறேன். அவற்றை முடித்துவிட்டு உன் கூலியை வாங்கிக்கொள்,” என்றார் பண்ணையார்.
“”இதோ! இங்கே விலை உயர்ந்த இரண்டு பீங்கான் ஜாடிகள் உள்ளன. ஒன்று பெரியது, இன்னொன்று சிறியது. நீ செய்ய வேண்டிய வேலை, அந்தச் சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை வைக்க வேண்டும். செய்துவிட்டு வா!” என்றார் அவர்.
“”எளிய வேலை தான்!” என்ற அவன், அங்கே ஒரு மூலையில் இருந்த தடி ஒன்றை எடுத்தான். அந்தத் தடியால் அவன் கண் எதிரிலேயே பெரிய ஜாடியை ஓங்கி அடித்தான். விலை உயர்ந்த அந்த ஜாடி உடைந்து நொறுங்கியது.
பதைபதைத்த அவர், “”டேய்! நான் என்ன சொன்னேன். நீ என்ன செய்கிறாய்?” என்று அலறினார்.
“”ஐயா! பெரிய ஜாடியை உடைத்தால் தான் அதைச் சிறிய ஜாடிக்குள் வைக்க முடியும். அதனால்தான் அந்த ஜாடியை உடைத்தேன்,” என்றான் அவன். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார் பண்ணையார்.
“”ஐயா! நான் செய்ய வேண்டிய இரண்டாவது வேலை என்ன?” என்று பணிவுடன் கேட்டான் அவன்.
“என்னிடமா உன் திறமையைக் காட்டுகிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று தனக்குள் கறுவினார் அவர்.
“”அந்த அறைக்குள் ஈர நெல் உள்ளது. அந்த நெல்லை நீ வெளியே எடுத்துச் செல்லாமல் காய வைக்க வேண்டும்,” என்றார்.
“”இதுவும் எளிய வேலைதான்,” என்ற அவன், அந்த வீட்டுக் கூரையின் மேல் ஏறி, கூரையைப் பிரித்துக் கீழே தள்ளத் தொடங்கினான். இதைக்கண்டு பதறிய அவர், “”டேய்! கூரையைப் பிரித்து என் வீட்டையே நாசம் ஆக்குகிறாயே! கீழே இறங்கு,” என்று கோபத்துடன் கத்தினார்.
To Get Daily Story In What's App Contact +917904957814
“”ஐயா! அறைக்குள் இருக்கும் நெல்லைக் காய வைக்கச் சொன்னீர்கள். கூரையைப் பிரித்தால் தானே கதிரவன் ஒளி நேராக அறைக்குள் படும். அங்கிருக்கும் நெல் காயும். அதனால்தான் கூரையைப் பிரித்து எறிகிறேன். ஒவ்வொரு முறையும் வேலை இடுகிறீர்கள். அதை நான் செய்து முடிப்பதற்குள் நீங்களே தடுத்து விடுகிறீர்கள். இந்த முறையாவது முழுமையாகச் செய்ய விடுங்கள்!” என்றபடியே, மேலும் கூரையைப் பிரித்து எறிந்தான். அந்த வீடு, கூரை இல்லாமல் குட்டிச் சுவரைப்போல் காட்சியளித்தது. சரியான அறிவாளியிடம் மாட்டிக் கொண்டோம் என்ற உண்மை அப்போதுதான் அவருக்குப் புரிந்தது.
“நான் இடும் மூன்றாவது வேலையை எந்தக் கொம்பனாலும் செய்ய முடியாது. இவன் ஏமாற்றம் அடைவதைப் பார்த்து மகிழ வேண்டும்’ என்று நினைத்தார் அவர்.
“”என் தலையின் எடை என்ன? நீ அதைச் சரியாகச் சொல்ல வேண்டும். இதுதான் நீ செய்ய வேண்டிய மூன்றாவது வேலை,” என்றார் அவர்.
“”கடினமான வேலையாக இருக்கும் என்று நினைத்தேன். எளிய வேலைதான் தந்திருக்கிறீர்கள்!” என்ற அவன், தோட்டத்திற்குச் சென்றான். பெரிய பூசணிக்காய் ஒன்றைப் பறித்தான். அதைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்த அவன், “”உங்கள் தலையின் எடையும், இந்தப் பூசணிக்காயின் எடையும் ஒன்றுதான். இதோ தராசு உள்ளது. இதில் ஒரு தட்டில் பூசணிக்காயை வைக்கிறேன். இன்னொரு தட்டில் உங்கள் தலையை வெட்டி வைக்கிறேன். இரண்டும் சமமாக இருப்பதை நீங்களே பார்க்கலாம்!” என்று சொல்லிக்கொண்டே, கையில் கத்தியுடன் அவர் தலையை வெட்டுவதற்காக வந்தான்.
“”ஐயோ! இவனிடம் நன்றாக மாட்டிக் கொண்டேனே. என் தலையை எடுக்காமல் விட மாட்டான் போல இருக்கிறதே!” என்று நடுங்கினார் அவர். இரக்கப்பட்ட அவன், “”இனிமேலும் ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதை விட்டுவிடுங்கள். எனக்குரிய மூன்று பொற்காசுகளுடன், என் அண்ணனை ஏமாற்றி எடுத்துக்கொண்ட மூன்று பொற்காசுகளையும் சேர்த்துக் கொடுங்கள். உங்களை உயிருடன் விடுகிறேன்,” என்றான் அவன். ஆறு பொற்காசுகளை அவனிடம் தந்தார் அவர். வெற்றியுடன் அங்கிருந்து புறப்பட்டான் அவன். பண்ணையாரும், அன்றிலிருந்து மற்றவர்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டார்.
*என் அன்பு வாசகரே,*
ஞானத்தோடு செயல்பட்டால் எந்த காரியமானாலும் இலகுவாக வெற்றி பெறலாம் என்பதே இக்கதையின் கருத்து. இக்கதையில் வரும் சம்பவமும் உணர்த்துவது அதைத்தான். அல்லாமலும் மற்றவர்கள் உழைத்து சம்பாதிப்பதை அபகரிக்க நினைத்தால் அதுவும் ஓர் நாளில் இந்த பண்ணையாருக்கு நேர்ந்தது போலவே ஜீவனுக்கு பங்கம் விளைவிக்கும்.
வேதம் கூறுகிறது,
*ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி: என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
நீதிமொழிகள் 4:7*
எனவே ஞானத்தையும், புத்தியையும் சம்பாதித்து மற்றவர்களை ஏமாற்றாமல் அந்த அறிவை நல்ல காரியங்களுக்கு உபயோகப்படுத்துவோம் அதன் மூலம் தேவ ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோம்.
*நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!*
கொக்குக்கு எத்தனை கால்??
முதலாளி அன்று வேட்டைக்கு சென்று திரும்பினார். அவர் கையில் வேட்டையாடி பிடித்த கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கை சமையல் காரனிடம் கொடுத்து இன்று இரவு உணவிற்கு இதை அருமையாக சமைத்து வை நானும் என் நண்பர்களும் சாப்பிட வருவோம் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
சமையல்காரன் அந்தக் கொக்கை விதவிதமான மசாலா போட்டு குழம்பு வைத்தான். குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்கமுடியாது கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.
முதலாளி கேட்கமாட்டார், கேட்டாலும் ஏதாவது சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான் அவன். இரவு சாப்பாட்டு நேரம் வந்தது. முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலை சுவைத்த முதலாளி தன் அருகில் நின்ற சமையல்காரனை நோக்கி, மிக மிக நன்றாக உள்ளது மற்றொரு காலையும் கொண்டுவா என்று கட்டளையிட்டார்.
திகைத்துப்போன சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இருந்தாலும் தன் மனதை திடப்படுத்திக் கொண்டு, "கொக்கிற்கு ஒரு கால்தான் உள்ளது முதலாளி எப்படி இன்னொரு காலை கொண்டு வர முடியும்" என்று கேட்டான். நண்பர்கள் முன்பில் சமையல்காரனிடம் சண்டையிட விரும்பாத முதலாளி நாளை காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்துவிட்டு சாப்பிட்டுவிட்டு தன் படுக்கைக்கு சென்று விட்டார்.
மறுநாள் பொழுது விடிந்தது சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வயல்வெளிக்கு சென்றார். வயலில் ஏராளமான கொக்குகள் நின்று கொண்டிருந்தனர் அப்போது அவர் தன் சமையல்காரரை நோக்கி கொக்கிற்கு ஒரு காலா?? இரண்டு காலா?? இப்பொழுது சொல் என்று சொன்னார்.
சமையல்காரன் மறுமொழியாக, ஐயா அதோ பாருங்கள் எல்லாக் கொக்குகளும் ஒரே ஒரு காலில்தான் நின்று கொண்டு இருக்கின்றன எனவே கொக்கிற்கு ஒரு கால்தான் உள்ளது என்று பதிலளித்தான் சமையல்காரன். முதலாளி கொக்கு நின்று கொண்டிருந்த கூட்டத்தினருகே சென்று "ச்சூ, ச்சூ" என்று கூச்சல் போட்டு விரட்டினார். ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது தூரம் தாவி பின் பறந்து சென்றன.
இப்பொழுது என்ன சொல்கிறாய் கொக்கிற்கு ஒரு காலா?? இரண்டு காலா?? என்று மறுபடியும் தன் சமையல்காரரை நோக்கிக் கேட்டார் முதலாளி. அதற்கு பதிலளித்த சமையல்காரன், ஐயா நீங்கள் சாப்பிடும் போதும் இப்படி "ச்சூ, ச்சூ" என்று சத்தம் போட்டு இருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே என்று சாமர்த்தியமாக பதில் சொன்னால் சமையல்காரன்.
அவனுடைய கெட்டிக்காரத்தனமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த முதலாளி இனி இப்படி நடந்து கொள்ளாதே பொய் சொல்லுவது ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டு வாங்கிக்கொள் அல்லது வாங்கி சாப்பிடு என்று கட்டளையிட்டார். முதலாளி என்னை மன்னித்து விடுங்கள், இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று உறுதி மொழியோடு அங்கிருந்து இருவரும் தங்கள் வீட்டுக்கு சென்றனர்.
*என் அன்பு வாசகர்களே,*
மற்றவர்களிடமிருந்து நமக்கு என்ன தேவைப்படுகிறதோ அது பணமாகிலும், பொருளாகிலும் மற்ற எந்த காரியமானாலும் அவர்களின் அனுமதியோடு பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு அனுமதியின்றி எடுத்துக்கொள்ளும் சிறியதாயினும், பெரியதாயினும் அது பாவமே.
To Get Daily Story In What's App Contact +917904957814
உதாரணமாக பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ அவர்களின் அனுமதி இல்லாமல் அல்லது அவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய பணத்தை எடுத்துக்கொண்டால் நாம் நினைத்த காரியம் நிச்சயம் நடைபெறும். ஆனால் அவர்கள் அந்த பணத்தை வைத்திருந்தபடியால் அதை குறித்து அநேக காரியங்களை சிந்தித்திருப்பர். ஏதாகிலும் ஒரு தேவைக்காக அந்த பணத்தை தேடும்போது அது இல்லையெனில் அவர்கள் படும் துக்கத்தை விவரிக்க முடியாது.
வேதாகமத்தில் தன் மாமனாகிய லாபான் தன் ஆடுகளை மயிர்கத்தரிக்க போயிருந்த சமயத்தில் யாக்கோபு தன் பிள்ளைகளையும், மனைவிகளையும், பதான் அராமில் சம்பாதித்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு லாபானுக்கு அறிவியாமல் திருட்டளவாய் போய்விட்டான். இதை ஆதியாகமம் 31ம் அதிகாரத்தில் வாசித்து அறிந்து கொள்ளலாம்.
லாபான் யாக்கோபை சந்தித்த போது லாபான் சொன்னது,
*26 அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: நீ திருட்டளவாய்ப் புறப்பட்டு, என் குமாரத்திகளை யுத்தத்தில் பிடித்த சிறைகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செய்கை?
ஆதியாகமம் 31:26*
*27 நீ ஓடிப்போவதை மறைத்து, எனக்கு அறிவியாமல், திருட்டளவாய் என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னைச் சந்தோஷமாய், சங்கீதம் மேளதாளம் கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே.
ஆதியாகமம் 31:27*
*28 என் பிள்ளைகளையும் என் குமாரத்திகளையும் நான் முத்தஞ்செய்ய விடாமல் போனதென்ன? இந்தச் செய்கையை நீ மதியில்லாமல் செய்தாய்.
ஆதியாகமம் 31:28*
ஒரு தகப்பன் எத்தனை கொடூரனாயினும் தன் பிள்ளைகள் காரியத்தில் அநேக ஏக்கங்களும் ஆசைகளும் இருக்கும். அவற்றை நிச்சயம் மதிக்க வேண்டும். 27, 28 வசனங்களில் லாபானின் ஏக்கத்தை புரிந்துக்கொள்ளலாம்.
எனவே மற்றவர்களின் உணர்வோடும், ஏக்கத்தோடும் ஒருபோதும் விளையாடாது உள்ளதை உள்ளதென்று சொல்லுங்கள்.
*37 உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
மத்தேயு 5:37*
*நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!*
பாத்திரங்களின் குட்டி
விஜய நகரத்தில் ஒரு வட்டி கடைக்காரன் வசித்து வந்தான். அவன் மக்களிடம் அநியாயமாக வட்டி வாங்கி சம்பாதித்தான். இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கிய மக்கள் மிகவும் அவதியுற்றனர். இதனை அறிந்த தெனாலிராமன் அந்த வட்டிக்காரனுக்கு தக்க பாடம் புகட்ட எண்ணினான்.
அந்த வட்டிக்காரன் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் வட்டிக்காரனை சந்தித்து தன் மகனுக்கு காதணி விழா நடைபெற இருப்பதாகவும், அதற்கு சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும், விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும் கூறினான்.
அதன்படியே வட்டி காரணம் பாத்திரங்களை தெனாலிராமனுக்கு கொடுத்தான். சில நாட்கள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான். இதைப் பார்த்த வட்டிக்காரன், நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன், சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே, அவற்றையும் ஏன் கொடுக்கிறாய் என்று கேட்டான்.
அதற்குத் தெனாலிராமன் உமது பாத்திரங்கள் குட்டி போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்து எடுத்து வந்தேன் என்றான். இவன் சரியான வடிகட்டிய முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணிய வட்டிக்காரன் ஆமாம் இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன, ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான்.
சில மாதங்கள் கழித்து தெனாலிராமன் தன் வீட்டில் விசேஷம் நடைபெற இருப்பதாகவும், அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப் பாத்திரங்களும் வேண்டும் என்றும் அந்த வட்டிகாரணிடம் கேட்டான். தெனாலிராமனின் நாணயத்தை அறிந்த வட்டிக்காரன் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான்.
கொடுக்கும்போது இவை கர்ப்பமாக இருக்கின்றன, விரைவில் குட்டிபோடும் இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான். சரி என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். பல மாதங்கள் கடந்தன பாத்திரங்கள் திரும்பி வரவில்லை.
ஆகையால் வட்டிக்காரன் தெனாலிராமன் வீட்டிற்கு சென்றான். தெனாலிராமனை சந்தித்து இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை என்று மிகவும் கோபத்துடன் கேட்டான். அதற்கு தெனாலிராமன் சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை என்றான்.
இப்பொழுது சொல் என்ற வட்டிக்காரனிடம், "பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா பிரசவம் கஷ்டமாக இருந்தது அதனால் அனைத்துப் பாத்திரங்களும் இறந்து விட்டன" என்று கூறினான் இதைக் கேட்ட வட்டிக்காரன், "என்ன விளையாடுகிறாய் பாத்திரங்கள் சாகுமா" என்று மிகவும் கோபத்துடன் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது என்று கேட்டான்.
என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்பின் படியே நடந்து கொள்வோம் என்று தெனாலிராமன் கூறியதும் வட்டிக்காரன் வேக வேகமாக அவ்விடத்தை விட்டு நகர முயன்றான். இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச் சென்று பாத்திரங்கள் பிரசவத்தில் இருந்ததை பற்றி தெரிவித்தார்.
எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது இறக்கக் வாய்ப்புகள் அதிகம். எனவே பாத்திரங்கள் திருப்பித்தர வாய்ப்பில்லை. ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு என புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர் தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மனமாரப் பாராட்டி அவனுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
To Get Daily Story In What's App Contact +917904957814
*என் அன்பு வாசகர்களே,*
அநியாமாய் வட்டி மட்டுமல்ல பிறருக்கு விரோதமாய் அநியாயமாய் செய்த எந்த காரியமானாலும் அதற்கேற்ற பிரதிபலனை நிச்சயம் ஒருநாள் பெற்றுக்கொள்ள தான் வேண்டும்.
வேதாகமத்தில் அநியாயமாய் வட்டி வாங்கிக்கொண்டிருந்த மனிதனாகிய சகேயு இயேசு கிறிஸ்துவை கண்டதும் தான் வாங்கியதை பார்க்கிலும் நாலத்தனையாய் திரும்ப கொடுத்தான் என்று வாசிக்கிறோம்.
வேதம் சொல்கிறது,
*11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
வெளிப்படுத்தினத விசேஷம் 22:11*
அவர்கள் செய்கிற காரியங்களை அவர்கள் செய்து கொண்டே இருக்கட்டும். அது நன்மையாயினும், தீமையாயினும் அவர்கள் என்ன செய்கிறார்களே அதற்கேற்ற பிரதிபலன் நிச்சயம் உண்டு. ஒருவேளை மனந்திரும்ப வேண்டும் என்று விரும்புகிறவர்கள்,
*9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
1 யோவான் 1:9*
எனவே அநியாயமாய் வருகிற சம்பாத்தியத்தை விடுத்து எல்லா காரியத்திலும் நியாயத்தோடு நடப்போம் உண்மையும், நீதியும் உள்ளவர்களாய் வாழ்வோம்.
*நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!*

Thanks for using my website. Post your comments on this