Type Here to Get Search Results !

வெற்றியின் ரகசியம் | பாசம் குட்டி ஸ்டோரி | Message Short Stories | Tamil Christian Story | Jesus Sam

அந்த இரு நெருப்பு விழிகள் | வெற்றியின் ரகசியம் | பாசம் 

அந்த இரு நெருப்பு விழிகள்

பள்ளித் தேர்வு நெருங்கிக் கொண்டு இருந்தது. அதே சமயத்தில் பக்கத்து நகரில் ஒரு ஆங்கிலத் திகில் படம் ஓடிக் கொண்டிருந்தது. “திகில் படம்’ என்றால் சம்பத்துக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் தேர்வுக்குப் படித்துக் கொண்டு இருந்த பாலுவை கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு திகில் படம் பார்க்கச் சென்றான் சம்பத்.



படம் முடிந்ததும் அவர்கள் இருவரும் தங்கள் சைக்கிள்களில் ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருந்தார்கள். அதற்குள் இடி, மின்னல்களுடன் மழை கொட்டத் தொடங்கியது. அவர்கள் நனைந்துக் கொண்டே வீட்டிற்கு சென்றனர்.




கதவைத் தட்டினான் சம்பத்.




அப்பா தான் கதவைத் திறந்தார்.




“”ஏன் இப்படி மழையில் நனைந்து கொண்டு வந்து நிற்கிறாய்? தேர்வு சமயத்தின் போது படம் பார்த்தாக வேண்டுமா? சரி,சரி. உள்ளே போய் முதலில் உடைகளை மாற்றிக் கொள்,” என்றார் அப்பா.

சம்பத் வீட்டிற்குள் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு, அம்மா வைத்த தோசையை சாப்பிட்டு விட்டு, கடிகாரத்தை பார்த்தான்.




மணி பதின்னொன்று. அதிகாலையில் எழுந்து படிப்பதற்காக நான்கு மணிக்கு அலாரம் வைத்து விட்டு, “கொஞ்ச நேரம் படிக்கலாம்’ என்று எண்ணிப் பாடப்புத்தகத்தை எடுத்துப் படிக்கலானான் சம்பத்.




அந்த நேரத்தில் அம்மா பால் கொண்டு வந்தாள்.




“”அதை மேஜையில் வைத்து விட்டுப் போ அம்மா! சூடு ஆறியதும் குடிக்கிறேன்,” என்றான் சம்பத்.

அம்மா மேஜையில் பாலை வைத்து விட்டுப் போனாள். சம்பத் ஆழ்ந்து படித்ததால், பாலையே மறந்து விட்டான்.




திடீரென்று, “கரென்ட்’ போய் விட்டது. எங்கும் இருள் சூழ்ந்தது. வெளியே மழை பலமாக பெய்து கொண்டு இருந்தது. “கரென்ட் எப்போது வருமோ?” என்று பக்கத்தில் இருந்த கட்டிலில் படுத்தான் சம்பத்.




சிறிது நேரத்தில், ஏதோ சத்தம் கேட்கவே சம்பத்தின் மனம், “திக், திக்’ என்று அடித்துக் கொண்டது. பயத்துடன் பார்த்தான். இருட்டுக்குள் சிவப்பாக இரண்டு நெருப்புத் துண்டுகள் அறைக்குள் சுற்றி வந்தன.




அதைப் பார்த்ததும், அந்தத் திகில் படம் அவன் நினைவுக்கு வந்தது. அந்தப் படத்தில் இப்படித்தான் இரண்டு பேய்க் கண்கள் ஒருவனைப் பழி தீர்க்கத் தேடி அலையும்.




அவர்கள் படம் பார்த்துவிட்டுத் திரும்பி வரும் வழியில் ஒரு புளிய மரம் இருந்தது. அதில் கொள்ளி வாய்ப் பிசாசு இருப்பதாக, ஊரில் பேசிக் கொள்வார்கள். அந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுதான் என்னை பின் தொடர்ந்து வந்து விட்டதோ?




அப்படி எண்ணிய சம்பத்தின் உடல் நடுங்கியது. அந்த மழை நேரத்திலும் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. போர்வையை எடுத்து முகத்தில் போர்த்திக் கொண்டான்.




திடீரென்று ஏதோ விழுந்து உடைவது போல ஒரு சத்தம் வந்தது. அதற்குப் பிறகு எதையோ துழாவிக் குடிக்கும் ஒலி கேட்டது.




To Get Daily Story In What's App Contact +917904957814




“சரிதான்! பிசாசு ஏதேதோ செய்கிறது, கண்களை இறுக மூடிக்கொண்டான்.




சிறிது நேரத்திற்குப் பிறகு கரெண்ட் வந்தது. விளக்கு எரிந்தது. சம்பத் போர்வையை விலக்கினான்.

பால் இருந்த பளிங்குக் கிண்ணம் கீழே உடைந்து கிடப்பதையும், அதில் இருந்து வழிந்து ஓடிய பாலை ஒரு பூனை குடித்துக் கொண்டு இருப்பதையும் பார்த்தான் சம்பத்.




படிக்கும் கவனத்தில், அம்மா பால் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனதை சம்பத் மறந்தே போனான். ஆனால், ஒரு திருட்டுப் பூனை அதைப் பார்த்து விட்டு இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு பாலைக் கொட்டிக் குடித்துக் கொண்டிருந்தது.




வெளிச்சத்தைப் பார்த்ததும் பாலைக் குடித்துக் கொண்டிருந்த பூனை, ஜன்னல் வழியாக வெளியே குதித்து ஓடி விட்டது.




தன் வீண் பயத்தை எண்ணித் தனக்குத்தானே சிரித்துக் கொண்டான் சம்பத்.




“இரவு நேரத்தில் பூனையின் கண்கள் பார்ப்பதற்கு நெருப்புத் துண்டுகள் போல இருக்கும், என்று கீழ் வகுப்பில் படித்தது அப்போது நினைவுக்கு வந்தது. அதைக் கொள்ளி வாய்ப் பிசாசு என்று எண்ணியது எவ்வளவு முட்டாள்தனம்?’ என்று எண்ணிய போது, சம்பத்துக்கு வெட்கமாக இருந்தது.

“இனி எதற்கும் பயப்படக்கூடாது’ என்று தீர்மானித்துக் கொண்டான் சம்பத்.




என் அன்பு வாசகர்களே,

வீணாக எதையும் பார்க்கக்கூடாது தேவையில்லாத நேரத்தில் எதையும் குறித்து சிந்திக்க கூடாது என்பதுதான் இக்கதையின் கருத்து.







இன்றைய காலகட்டத்தில் அநேகர் இதுபோன்று தேவையற்ற நேரத்தில் தேவையில்லாத அநேக காரியங்களில் ஈடுபட்டு பின்னர் வருந்துகின்றேன். உதாரணமாக இப்போது கொரோனா நோய் தொற்று காரணமாக அத்தியாவசியமின்றி யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று ஆணை பிறப்பித்திருந்தாலும் சிலர் அதை அலட்சியப்படுத்தி அந்த ஆணையை மீறி வெளியே சென்றதால் அவர்களுக்கு கிடைத்த பரிசை நாம் செய்திகளில் கேட்டிருப்போம்.




இதுபோலத்தான் அநேகர் தேவையுள்ளதை விட்டு தேவையில்லாததை பற்றிக்கொள்கின்றனர். மரியாளை பற்றி இயேசு இவ்வாறு கூறுகிறார்,




*42 தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்*




லூக்கா 10:42




நல்ல பங்கு என்றால் என்ன?? அதற்கு மரியாள் செய்த காரியத்தை தான் கூர்ந்து கவனிக்க வேண்டும்.




*39 அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள், அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

லூக்கா 10:39*







நாமும் நல்ல பங்காகிய தேவனுடைய பாதத்தை இந்நாட்களில் உறுதியாய் பற்றிக்கொள்வோம் தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.

*நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!*



வெற்றியின் ரகசியம்

ஜப்பான் நாட்டு சிறுவன் ஒருவன் பத்து வயதாக இருக்கும் போது ஒரு விபத்தில் சிக்கி தனது இடது கையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிகழ்வு சிறுவயது முதல் பெரியதொரு ஜுடோ ஜாம்பவானாக வேண்டும் என்ற கனவிற்கு பெரியதொரு முட்டுக்கட்டையாக அமைந்தது.




இதனால் கவலையடைந்த சிறுவனின் தந்தை பிரபலமான ஒரு ஜுடோ ஆசிரியரிடம் சென்று தன் மகனுக்கு உதவும்படி வேண்டிக்கொண்டார். அவரும் அந்த சிறுவனை தனது மாணவனாக மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.




அன்றிலிருந்து சுமார் பத்து வருடங்கள் அந்த ஆசிரியரிடம் பயிற்சி பெற்றான் அந்த சிறுவன். ஆனால் ஒரு விஷேசம் என்னவென்றால், அந்த ஆசிரியர் இந்த பத்து வருட காலமும் ஒரே வகையான யுக்தியையே கையாளும் திறமையையே கற்றுக்கொடுத்தார். அந்த சிறுவன் ஓரிரு வருடங்களிலேயே குறித்த உத்தியை கைத்தேறக் கற்றுக்கொண்டு தனக்கு வேறு வகையான யுக்திகளை கற்றுக்கொடுக்க ஆசிரியரை வேண்டினான்.




ஆனால் அந்த ஆசிரியரோ, "இந்த யுக்தியை இன்னும் நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும், காலம் வரும்போது ஏனையவற்றை கற்றுத் தருகிறேன்" என்றார். இவ்வாறு பத்து வருடங்கள் கழிந்த பிறகும் இதே பதில் தான் ஆசிரியரிடமிருந்து வந்தது.




திடீரென ஒருநாள் ஆசிரியர் அந்த சிறுவனிடம் வந்து "உன்னை தேசிய அளவிலான போட்டிகளுக்காக தேர்வு செய்துள்ளேன். அதற்கான ஆயத்தங்களை செய்" என்றார். அந்த சிறுவன் ஆச்சரியத்துடன் கூடவே அதிர்ச்சியும் அடைந்தான். தெரிந்ததோ ஒரே ஒரு யுக்தி, அதிலும் வலது கை மட்டுமே உள்ளது.




இந்த நிலையில் தேசிய அளவில் கடும் தேர்ச்சிப் பெற்ற பிரபல வீரர்களோடு போட்டியிட்டு வெற்றிக்கொள்வது சாத்தியமற்றது. இருப்பினும் ஆசிரியரின் மீதிருந்த மரியாதை நிமித்தம் எதிர்த்து பேசாது, தன்னால் இயன்றவரை போட்டிக்கு பயிற்சி செய்வதென முடிவெடுத்தான்.




தேசிய அளவிலான முதல் போட்டி ஆரம்பமானது, தனக்கு தெரிந்த ஒரே ஒரு யுக்தியை பயன்படுத்தி இலகுவாக வென்றான். அதேபோல் இரண்டாம், மூன்றாம் சுற்று என் எல்லா போட்டிகளிலும் வென்றான். இறுதி சுற்றில் தன்னை விட அனுபவம் உள்ள ஒரு போட்டியாளரோடு மோத வேண்டிய சூழ்நிலை இருப்பினும் தனக்கு தெரிந்த அந்த ஒரே யுக்தியை கொண்டே அந்த எதிராளியை வீழ்த்தி சாம்பியனாக மாறினான்.




இந்த விஷயங்களை அந்த சிறுவனால் நம்ப முடியவில்லை. வேகமாக ஓடி தன் ஆசிரியரிடம் சென்று இவை எப்படி சாத்தியமானது என்று கேட்டான். அதற்கு அந்த ஆசிரியர், இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது, கடந்த பத்து வருடங்களாக நீ மேற்கொண்ட கடும் பயிற்சி உன்னை அந்த யுக்தியில் வல்லுநராக்கி விட்டது. எந்த அளவிற்கு எனில் அந்த யுக்தியை இந்த உலகில் உன்னைவிட யாரும் சிறப்பாக செய்திட முடியாது என்கிற அளவிற்கு.




இரண்டாவது, இந்த யுக்தியை முறியடிக்க வேண்டுமானால் ஒரே ஒரு வழிதான் உள்ளது, உன் எதிராளி உன் இடது கையை பிடிக்க வேண்டும். ஆனால் உனக்கு இடது கை இல்லை, அதுவே உனக்கு பெரும் பலமாய் அமைந்தது என்றார். அந்த சிறுவனோ, தன் கண்களில் கண்ணீர் மல்க அந்த ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.




*என் அன்பு வாசகர்களே,*

உடல் வலிமை என்னத்தான் அளவுக்கடந்து காணப்பட்டாலும் மன வலிமை இல்லையேல் பிரயோஜனமில்லை. ஒருவேளை இந்த காரணங்களை முதலிலேயே அந்த சிறுவனிடம் சொல்லியிருந்தால் நிச்சயம் அவனுள் பெருமை ஏற்படும் மாத்திரமல்ல அவனால் எந்த போட்டிகளிலும் வென்றிருக்க முடியாது..




To Get Daily Story In What's App Contact +917904957814




மனவலிமை அடைய சில சூழ்நிலைகளை சகித்து கொள்ளத்தான் வேண்டும். எந்தவொரு காரியத்தில் நாம் மறுபடியும் மறுபடியும் தேர்ச்சி பெறுகிறோமோ அந்த காரியத்தில் நாம் கைதேர்ந்தவர்களாய் மாறுகிறோம்.




வேதாகமத்தில் மோசே என்னும் மனிதனை நாம் நன்றாய் அறிந்ததே. ஆரம்ப காலகட்டத்தில் திக்கு வாயும், மந்த நாவும் உள்ளவனாய் மன வலிமையற்று இருந்த மனிதனை தேவன் அழைத்து ஒவ்வொரு படியாய் அவனை முன்னேற்றி இன்று வரையிலும் யாரும் செய்ய முடியாத அநேக அதிசயங்களை மோசே மூலம் தேவன் செய்தார். பத்து வாதைகள், யோர்தான் நதியை இரண்டாக பிரித்தது, வனாந்தரத்தில் காடைகள், கன்மலையிலிருந்து தண்ணீர் என‌ சொல்லிக்கொண்டே போகலாம்.




அது மாத்திரமல்ல தேவனுடைய ரூபத்தை முகமுகமாய் கண்டான். இஸ்ரவேலருக்கு கட்டளைகள், கற்பனைகள் என தன் தகுதிக்கு அப்பாற்பட்ட காரியங்களை செய்தான். காரணம் தேவன் மோசேயை ஊழியத்தின் பாதையில் எத்தனை துன்பம் வந்த போதும் சோராது முன்னேற கிருபை செய்தார்.




இன்றைய காலத்திலும் தேவன் நம்மை எவ்விதத்தில் நடத்தினாலும் அதில் எத்தனை கஷ்டம் வந்தாலும் மோசேயையும், அந்த சிறுவனையும் போல நிலைத்திருந்தால் நிச்சயம் ஒரு நாளில் இந்த உலகமே வியந்து போற்றும் ஓர் உன்னத மனிதனாய் தேவன் நம்மை மாற்றுவார்.




*6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

சங்கீதம் 23:6*




*7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
யோவான் 15:7*
*நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!*


பாசம்

துருக்கி நாட்டில் உள்ள மருத்துவமனையில் நடந்த உண்மை சம்பவம்.




திடீரென வியாதிக்குள்ளான தனது இரண்டு வயது பெண் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்த பெற்றோர் பதட்டத்துடன் அவசர சிகிச்சை பிரிவிற்கு வெளியே டாக்டர் வருவதற்காக காத்திருந்தனர். சிறிது நேரத்திற்குப் பின் வெளியேறிய டாக்டர் குழந்தையை குணப்படுத்துவது சாத்தியமானதே. ஆனால் இதற்காக மிகக் குறுகிய நேரத்திற்குள் இதே நோயால் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம் பெறப்பட்டு குழந்தைக்கு ஏற்றப்பட வேண்டும் என்று கூறினார்.




அந்தத் தாய் தந்தையரின் முகத்தில் உடனே ஒரு நம்பிக்கை ஒளி பிறந்தது, காரணம் தற்போது 5 வயதில் உள்ள அவரது மூத்த மகன் குழந்தைப் பருவத்தில் குறிப்பிட்ட அதே நோய்க்கு உள்ளாகி அபூர்வமாக குணமடைந்தான். அதை டாக்டரிடம் சொன்னபோது டாக்டரின் நம்பிக்கையும் அதிகரித்தது.




ஆனால் சிறுவனுக்கு 5 வயது தான் என்பதாலும் ரத்த தானம் குறித்து அவனுக்கு எதுவும் தெரியாது என்பதாலும் முடிந்த அளவிற்கு அவரிடம் விளக்கி பார்க்கலாம் என்று டாக்டர் அவனிடம் பேசினார். சிறுவனை முன்னால் அமர வைத்து அன்பாக நிலைமையை விவரித்துவிட்டு, உனது தங்கையின் உயிரைக் காப்பதற்காக இரத்தம் வழங்க விருப்பமா??? என்று கேட்டார்.




சிறுவனும் சிறிதுநேரம் மௌனமாக சிந்தித்துக் கொண்டிருந்தான். பின்னர் ஆழ்ந்த ஒரு பெருமூச்சு விட்டு என் தங்கையை எனக்கு மிகவும் பிடிக்கும், அவளுக்காக என் ரத்தத்தை தருவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று கூறினான். உடனடியாக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு சிறுமி வைக்கப்பட்டிருந்த அறைக்கு அந்த சிறுவன் கொண்டு செல்லப்பட்டான்.




சிறுவனிடம் இருந்து ரத்தம் நேரடியாக குழந்தைக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவனுக்கு பக்கத்தில் பெற்றவரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்த சிறுவனை தைரியம் ஊட்டுவதற்காக ஒரு முறை கட்டி அணைத்துக் கொண்டனர். பின்னர் ரத்தப் பரிமாற்றம் ஆரம்பமானது.




சிறுவன் புன் முறுவலுடன் தனது தங்கையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் செல்ல செல்ல குழந்தையிடம் நம்பிக்கையுடன் கூடிய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. அதேவேளையில் சிறுவனது முகம் வாடிக் கொண்டே சென்றது. இறுதியில் சிறுவனின் முகத்தில் இருந்த புன்னகையும் அணைந்து போய் டாக்டரை பார்த்து டாக்டர் நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்து விடுவேன் தானே?? இறக்கும் போது கஷ்டமாக இருக்குமோ?? என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்.




அந்த அறையில் இருந்த டாக்டர் பெற்றோர் உறவினர் செவிலியர் என அனைவருமே சிறுவனிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்கவில்லை. அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர். சுதாரித்துக்கொண்ட டாக்டர் அவன் இறப்பதற்கான எந்தவித காரணமும் காரியமும் இல்லை என்றும் சிறுது நேரத்தில் அவனும் அவனுடைய தங்கையும் பூரணமாய் குணமடைந்து விடுவார்கள் என்றும் அவனுக்கு ஆறுதல் கூறினார்.




ஆனால் சிறுவனின் சிறியதொரு தவறான புரிதலால் அவன் கேட்ட கேள்வி அவர்களை அதிர்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது. அந்தக் கேள்விக்குப் பின்னால் இருந்த அவனுடைய மாபெரும் அன்பு அவர்களின் உள்ளங்களை உடைத்துவிட்டது. கண்ணீரை அவர்களால் நிறுத்த முடியவில்லை.




ஏனெனில் சிறுவன் ஆரம்பத்தில் தனது உடலிலிருந்து முழு இரத்தத்தையும் எடுக்கப்போவதாக தவறாக நினைத்துக் கொண்டிருந்தான். தன்னுடைய உயிர் போனால்தான் தன் தங்கை பிழைப்பாள் என்று அவர் கருதியிருக்கிறான். என்றபோதும் அவன் தன் தங்கைக்காக அவள் மேல் வைத்திருந்த அன்பிற்காக இந்த மாபெரும் தியாகத்தை செய்ய முன்வந்து இருந்தான். எனவே தான் ரத்தம் செல்ல செல்ல தன் இறந்து விடப் போவதாக அந்த பிஞ்சு மனம் பயந்து பரிதவித்தது.







To Get Daily Story In What's App Contact +917904957814




*என் அன்பு வாசகர்களே,*

அன்பிற்கு முன்னால் எந்தவித காரியமும் நிலைநிற்காது. அது மலையானாலும், புயலானாலும் அன்பிற்கு முன் அது அடிபணிந்து விடும். என்னத்தான் உயரிய படிப்பு படித்திருந்தாலும், உயரிய பதவியில் இருந்தாலும் அன்பு அந்த மனிதனிடம் இல்லையென்றால் எந்த பயனுமில்லை.




ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இருப்பதால் மட்டுமே இன்றும் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு குழந்தைக்கு 16கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஊசி செலுத்தப்பட்டது. அதற்கு காரணம் அன்பு மட்டுமே‌. ஏனெனில் அந்த குழந்தையின் பெற்றோரால் அவ்வளவு பெரிய தொகையை செலுத்த இயலாது. ஆனால் அன்பும் நல்லள்ளமும் கொண்ட அநேகர் தங்களால் இயன்றதை கொடுத்த போது அசாத்தியமானது சாத்தியமானது.




வேதம் சொல்கிறது,

*13 இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

1 கொரிந்தியர் 13:13*




நம்மீது அன்பு கொண்டதால் தான் இயேசுவும் தம் ஜீவனை கொடுத்தார்‌. ஏனெனில் அன்பு எல்லாவற்றையும் பார்க்கிலும் பெரியது. எனவே நாமும் நம் அன்றாட வாழ்க்கையில் அன்பை மட்டுமே மற்றவர்களுக்கு கொடுப்போம், அன்பில் வேரூன்றி வாழ்வோம்.


*நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.