Type Here to Get Search Results !

தேவதை கடாட்சம்! | பெரியதை எடு! கிறிஸ்தவ குட்டி கதைகள் | Bible Short Storys Tamil | Kutty Story | Jesus Sam

சோழ நாட்டு வீரச்சிறுவன் | தேவதை கடாட்சம்! | பெரியதை எடு! | 
சோழ நாட்டு வீரச்சிறுவன்

சோழநாட்டை குலோத்துங்கன் என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். இவர்தான் “சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று வரலாற்றில் பேசப்படும் மன்னர். சோழ மரபிற்கு ஒரே வாரிசு.குலோத்துங்கன் ஆட்சியில் கல்வியில் சிறந்த புலவர்கள் அரசனை நாடிப் பொன்னும் பொருளும் பெற்றுச் சென்றனர். அதே போல் வீரர்கள் தங்கள் வீரத்தைக் காட்டிப் பரிசுகள் பல பெற்றனர். நாடெங்கிலும் திருவிழாக்கள் கோலாகலமாய் நடந்தன. மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி நடத்தி வந்தார்.

அக்காலத்தில் கடோத்கஜன் என்ற மாளவ நாட்டு மல்லன் ஒருவன் நாடெங்கும் போரிட்டு வெற்றிக்கொடி நாட்டி வந்தான். வட இந்தியாவில் பல மல்லர்களை ஜெயித்த அவன் தென்னகத்திற்கும் விஜயம் செய்தான்.மற்போரில் மட்டுமல்லாமல், வில்வித்தைகளிலும், வாட்போரிலும் வாகை சூடிவந்தான். அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வீரர்கள் நடுநடுங்கினர்.

அவனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்ற வீரர்களின் தலைகளை மொட்டை அடித்து அவர்களைத் தன் அடிமைகளாக்கினான். தான் செல்லும் தேசங்கள் தோறும் அவர்களைப் பரிவாரங்களாக அழைத்துச் சென்றான். அதனால் சிறந்த வீரர்களும் கூட அவனை எதிர்க்க அஞ்சினர். சோழநாட்டிற்கு வந்த அவன் மன்னன் குலோத்துங்கனைக் கண்டு “”என் சவாலை ஏற்கக் கூடிய வீரர்கள் உம் நாட்டில் உள்ளனரா?” என்று ஆணவத்துடன் கேட்டான். மன்னன் பறை முழங்கி வீரர்களுக்கு இச்செய்தியை அறிவித்தார்.

சோழநாடு வீரத்தில் என்றும் சோடை போனதில்லை. வீரர்கள் பலர் திரண்டனர். விற்போருக்கும், மற்போருக்கும் நாட்கள் குறிக்கப்பட்டன.அன்று அரண்மனை மைதானத்தில் மன்னர் முன் ஆயிரக் கணக்கானோர் கூடினர். போட்டி ஆரம்பமாயிற்று.


முதல் நாள் வாட்போர்—



பத்துக்கும் மேற்பட்ட சோழநாட்டு வீரர்கள் கடோத்கஜனிடம் வரிசையாகத் தோற்றனர். அவர்களால் பத்து நிமிடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.தோற்ற வீரர்களை கடோத்கஜனின் ஆட்கள் கூடாரத்திற்கு இழுத்துச் சென்று உடனுக்குடன் மொட்டை போட்டு அவமானப்படுத்தி அடிமையாக்கினர்.


மறுநாள் மற்போர்—

சோழநாட்டின் மானத்தைக் காக்க வீரன் ஒருவன் இன்றாவது வருவானா என்று மன்னன் ஏங்கிக் கொண்டிருந்தார்.கடல் அலையெனத் திரண்டிருந்த கூட்டத்தில் சிங்கமெனக் கர்ஜித்தான் கடோத்கஜன். அவனது திண்ணிய தோள்களும், விம்மிப்புடைத்த மார்பும், வலிமைபொருந்திய கால்களும், தினவெடுத்த கைகளும், அனல்கக்கும் பார்வையும் அனைவரையும் அச்சமுறச் செய்தன. கோதாவில் நின்று கொக்கரித்த அவனை எதிர்க்க யாரும் முன்வரவில்லை.

“”மன்னா! உம்மிடம் மலைபோல் படையிருந்தும் என்னை எதிர்க்க எந்த மல்லனும் வரவில்லை. பார்த்தீர்களா என பராக்கிரமத்தை?” என்று இறுமாப்புடன் சொன்னான். மன்னன் வெட்கித் தலைகுனிந்தான்.


அதே நேரத்தில்—

“”இதோ, நானிருக்கிறேன்,” என்று கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.அனைவரும் திரும்பிப் பார்த்தனர். பத்து வயது சிறுவன் ஒருவன் திறந்த மார்புடன் வெளியே வந்தான். “”ஏய் சிறுவனே, நீயா எனக்கு எதிரி? மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன். உயிர் பிழைக்க ஓடிவிடு,” எனக் கர்ஜித்தான் கடோத்கஜன்.

என்ன ஆச்சரியம்! கண் சிமிட்டும் நேரத்தில் பறந்து சென்ற சிறுவன், மல்லனின் தோள்களில் அமர்ந்து தன் வலக்கையை நீட்டி அவன் கழுத்தில் மின்னலாய் ஒரு வெட்டு வெட்டினான். அவ்வளவுதான்… கடோத்கஜனின் கழுத்து நரம்பொன்று சுளுக்கி வலப்பக்கம் 45 டிகிரி கோணத்தில் முகம் பின்புறம் திரும்பிக் கொண்டது. அவனது விழிகள் சுழன்றன. கற்சிலையாய் அசைவற்று நின்றான்.தோள்களிலிருந்து கீழே குதித்த சிறுவன் மல்லனின் இடது காலை வாரி அவனை மண்ணைக் கவ்வச் செய்தான். கூட்டம் ஆரவாரித்தது. சிறுவனைத் தலை மேல் துõக்கி வைத்துக் கூத்தாடியது. யாரிந்தச் சிறுவன்?



உடலின் நரம்புகளின் ஓட்டம் அறிந்து இன்ன நரம்பைத் தட்டினால் இப்படி ஆகும் என்று கூறும் வர்ம சாஸ்திரக் கலை நிபுணர் வரகுணபதியின் மகன் கபிலன் தான் அவன்.கடோத்கஜினின் மனைவியும், மக்களும் மன்னனிடம் மன்னிப்புக் கேட்க, சிறுவன் கபிலன் கழுத்து நரம்பில் மற்றுமொரு தட்டு தட்டிவிட்டு தலைக்கோணலைச் சரியாக்கினான். கடோத்கஜன்வெட்கித்தலைகுனிந்தான். அவனுடைய ஆணவம் அன்றோடு அழிந்தது. தான் அடிமைபடுத்தி இருந்த ஆட்களை எல்லாம் அன்றே விடுதலை செய்து அனுப்பி வைத்தான்.


என் அன்பு வாசகர்களே,
இக்கதையில் வருவது போல நம் வேதாகமத்திலும் ஒரு சரித்திரம் நாம் நன்றாய் அறிந்தது ஒன்று உண்டு. தாவீது, கோலியாத்தின் சரித்திரம். சிறுமையும், எளிமையுமான சிறிய தாவீதைக்கொண்டு தேவன் பலத்தவனான கோலியாத்தை ஒரே அடியில் வீழ்த்தினான்.


சரி தாவீது எவ்வாறு கோலியாத்தை வீழ்த்தினான் என்றால் ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவோம் தேவ பெலத்தை கொண்டு தான் வென்றான் என்று. ஆம் அது உண்மைதான். எனினும் ஏன் நெற்றியில் குறி வைத்து கல்லை எறிய வேண்டும் என்றால் அந்த இடம் மட்டும் தான் திறந்திருக்கும் மற்ற இடமெல்லாம் கவசங்களால் மூடி மறைத்திருப்பான் என்று பதில்.


பெரும்பாலான வேதாகம ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, கோலியாத் மட்டுமல்ல அவனை போன்ற இராட்சதர்கள் (Acromegaly) என்னும் ஒருவித நோயின் காரணமாக தான் இவ்வாறு அசுரத்தனமாக வளர்கின்றனர். மேலும் இவர்களுக்கு கிட்டப்பார்வை (short sight) குறைவாகத்தான் இருக்குமாம்.


To get daily message in whats app contact +918148663456


தாவீதின் கையிலிருந்தது ஏதோ பிள்ளைகள் விளையாடும் விளையாட்டு பொருளல்ல மாறாக ஒவ்வொரு ஆட்டு மேய்ப்பனும் காட்டு விலங்குகளிடமிருந்து தன்னையும் தன் மந்தையையும் பாதுகாக்க உபயோகப்படுத்துகிற ஒரு ஆயுதம் தான் அந்த கவண். சிந்தித்துப் பாருங்கள் ஒரு காட்டு விலங்கை துரத்த வேண்டும் என்றால் எப்பேற்பட்ட ஆயுதம் தேவைப்படும் என்று. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது தாவீது பயன்படுத்திய கவண் ஒரு துப்பாக்கியிலிருந்து (.45 caliber pistol) வெளிவரும் வேகத்திற்கு நிகரானது என்று.


இவ்வளவு வலிமை நிறைந்த ஆயுதத்துடன் தேவனுடைய பெலனும் சேர்ந்ததால் தாவீது கோலியாத்தை எளிதில் வென்றான். தாவீது சொல்கிறார்,


17 நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார், தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர், என் தேவனே, தாமதியாதேயும்.


சங்கீதம் 40:17


எனவே நம்மேல் நினைவாயிருக்கிற தேவன் அனுதினமும் நம்மை வழிநடத்தி கோலியாத்தை போன்ற எத்தனை பெரிய கஷ்டங்கள் வந்தாலும் நமக்கு உறுதுணையாய் நின்று நம்மை விடுவித்து நம்மை காத்துக் கொள்வார்.


#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!


தேவதை கடாட்சம்!

முன்னொரு காலத்தில் மாமுனிவர் ஒருவர் காட்டில் தவம்செய்து வந்தார். சிறு வயதிலிருந்தே தவக்கோலம் பூண்டு இறைவனை தொழுது வந்ததால், அந்த காட்டில் வசித்த கொடிய மிருகங்கள் கூட அவரிடம் குழந்தைகளை போல நடந்து கொண்டன. ஒரு நாள் அவர் முன் அழகிய பெண் ஒருத்தி தோன்றினாள். அவளது பேரழகு பிரமிக்க வைத்தது. இருப்பினும் மனம் சலனப்படாமல் அந்த அழகியை பார்த்து, “அம்மா நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்றார்.


“நான் தான் வனதேவதை; என்னுடைய விதி பயனால் சில நாட்கள் உங்களுடன் வசிக்க வந்துள்ளேன். நீங்கள் என்னை உதறி தள்ளினாலும் உங்களை விட்டு நான் போகமாட்டேன். இறைவன் கட்டளைப்படி நான் உங்களுடன் இருந்தாக வேண்டும்,'' என்றாள். தேவதை போகமாட்டாள் என்பதை அறிந்த முனிவர் அந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்.


“அம்மா நீங்கள் வரும் பொழுது என்னிடம் சொல்லி கொண்டு வந்தது போல போகும் போது சொல்லி கொண்டே போக வேண்டும்,'' என்றார். தேவதையும் சம்மதித்தாள். அன்றிலிருந்து தன் மீது தேவதையின் அருள் பூரணமாக இருப்பதை அறிந்தார். அதை சோதித்துத் பார்க்க விரும்பினார் முனிவர். எனவே, காட்டை விட்டு பொற்குன்றம் என்ற மாநகரை அடைந்தார். அந்த அரண்மனையின் அரசரும் மந்திரிகளும் அமர்ந்திருந்தனர்.


வேகமாக சென்ற முனிவர் தனது இடது காலை துக்கி மன்னனது கிரீடத்தை ஒரு உதை விட்டார். மறுநிமிடம், “அடி! உதை அவனை பிடி!'' என்றபடியே ஆயிரம் சேவகர்கள் முனிவரை சூழ்ந்து கொண்டனர். உடனே அரசன், “முனிவரை ஒன்றும் செய்யாதீர்கள். அவர் திரிகாலமும் உணர்ந்த ஞானி. என் கிரீடத்தை பாருங்கள்,'' என்றான். கிரீடத்தில் விஷநாகம் ஒன்று படமெடுத்து கொண்டிருந்தது. உடனே எல்லாரும் மகாபுருஷரை திட்டிவிட்டோமே என்று நினைத்து வருந்தினர். அதற்குள் விஷநாகம் ஓடி மறைந்தது. உண்மையில் அது விஷ நாகமல்ல; தேவதைதான் நாக உருவெடுத்து முனிவரை காப்பாற்றினாள்.


அன்றிலிருந்து அரசன் மாமுனிவருக்கு மந்திரி பதவி கொடுத்து சர்வ அதிகாரமும் கொடுத்தான். முனிவருக்கு தேவதையின் கடாட்சம் இருந்ததால் அவர் செய்ததெல்லாம் பலித்தது. முனிவரும் நாட்டை நல்ல முறையில் ஆண்டார்.


இரண்டு வருடங்கள் ஓடின. மீண்டும் ஒரு நாள் தன்னுடன் தேவதை இருக்கிறாளா என்பதை அறிய விரும்பினார் முனிவர். அன்றிரவு அரசனும், அரசியும் துங்கிக் கொண்டிருந்த பள்ளியறைக்கு சென்றார். இருவரையும் துக்கிக் கொண்டு வெளியே வந்தார். கண் விழித்த மன்னன் அந்த கிழவனின் தலையை வெட்டினால் என்ன என்று நினைத்து ஆத்திரம் கொண்டார். அதற்குள் பள்ளியறை கட்டிடம் இடிந்து விழுந்தது. அதை பார்த்த அரசனுக்கு மாமுனிவர் மேல் அளவிடாத பாசம் வந்தது. “முனிவரே! நீர் இல்லாவிட்டால் நாங்கள் இருவரும் இறந்திருப்போம்!'' என்றான்.


இந்த விஷயத்தை அறிந்த நாட்டு மக்கள், முனிவரை தெய்வமாகவே பாவித்தனர். ஒரு நாள் அரசன் தன்னுடைய முக்கிய பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாட சென்றான். ஒரு மானை துரத்தி கொண்டு ஓடினார் மன்னன். அவன் பின்னாலே சென்றார் முனிவர். மான் தப்பிவிட்டது. களைத்து போன மன்னனும், முனிவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். முனிவரது மடியில் சற்று நேரம் இளைப்பாற விரும்பினார் மன்னர். முனிவரும் சம்மதித்தார். அப்பொழுது மேலே பார்த்தார் முனிவர். அந்த மரத்தின் கிளை மேல் கருடன் ஒன்று பெரிய நாகத்தை துக்கி வந்து தின்பதற்காக உட்கார்ந்திருந்தது. அந்த மரத்தின் கிளை அரசனுடைய மூக்குக்கு நேராக இருந்தது.


மாமுனிவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எழுந்து கருடனை விரட்டினால் மன்னனது தூக்கம் கெட்டுவிடும். நாகத்தினால் அரசனுக்கு தீங்கில்லை என நினைத்து விட்டுவிட்டார். கருடன் பாம்பை கொத்தியது. பாம்பு தன் விஷத்தை கக்கவே அது மன்னனின் கழுத்தில் வந்து விழுந்தது. கால சர்பத்தின் விஷம் என்ன பண்ணுமோ என பயந்த முனிவர், தன் கத்தியால் அதை வழிக்க நினைத்தார். அப்பொழுது தேவதை, “நான் தங்கள் விட்டு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது; செல்கிறேன்,'' என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள்.


கத்தியை எடுத்து அரசரின் கழுத்தில் வைத்தார் முனிவர். உடனே கண் விழித்தான் அரசன், “இப்படிப்பட்ட பாதக செயலை நீங்கள் செய்வீர்கள் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை,'' என்று கோபப்பட்டான். முனிவரோ, “மன்னா நான் உன்னை கொல்லவேண்டுமென்றால் எப்பொழுதோ கொன்றிருக்கலாம். சற்று தலையை துக்கிப் பாருங்கள். கருடன் வாயிலிருக்கும் பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி விஷம் உங்கள் கழுத்தில் விழுந்துவிட்டது. அதை எடுக்கவே இப்படி செய்தேன். இனி நான் உங்களுடன் இருக்கமாட்டேன். தேவதையின் கடாட்சம் என்னை விட்டு போய்விட்டது,'' என்றார். மன்னன் மிகவும் மன்னிப்பு கேட்டான். தாங்கள் என்னை விட்டு செல்லக்கூடாது என கூறினான்.


நடந்தவைகளை எல்லாம் கூறிய முனிவர், “எனக்கு என்ன இருக்கிறது. நான் ஒரு முனிவர். தேவதை என்னுடன் இருந்தவரையில் எனக்கு ஆபத்து இல்லை. இனி நான் தங்களுடன் இருப்பதில் பயனில்லை. விடை கொடுங்கள் நான் காட்டிற்கு செல்கிறேன்,'' என்றார். மன்னன் எவ்வளவோ கெஞ்சியும் முனிவர் அவருடன் இருக்க சம்மதிக்கவில்லை. தன்னை விட்டு தேவதை போன பிறகு மன்னனுடன் இருப்பது தனக்கு மிகுந்த ஆபத்தை தரும் என்பதை உணர்ந்து அரசனிடம் விடைபெற்று காட்டிற்கு சென்றார் முனிவர்.




To Get Daily Story In What's App Contact +917904957814


*என் அன்பு வாசகர்களே,*
தேவதையின் அருள் இருக்கும் வரையில் அந்த முனிவர் செய்த காரியம் எல்லாம் பலித்தது. தேவதை அவரை விட்டுசென்ற அடுத்த வினாடியே காரியங்கள் தலைகீழாய் மாற ஆரம்பித்துவிட்டது.


கிறிஸ்தவர்களின் அன்றாட வாழ்வில் தேவனை சார்ந்து வாஜ பழகிக் கொள்ள வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரலோகம் செல்லும்போது, தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியை கொடுத்து சென்றார். அந்த பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டவர்கள் செந்த எல்லா காரியமும் வாய்த்தது.


இன்றைய கதையின் இறுதியில் அந்த முனிவரை விட்டு தேவதை சென்றுவிட்டது. ஆனால் இன்றோ நாம் தான் தேவனை விட்டு பின்வாங்கி செல்கின்றோம். வேதம் சொல்கிறது,


*8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
எபிரேயர் 13:8*


*27 நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.
சங்கீதம் 102:27*


நாம் பிரிந்து சென்றாலும் நம்மைவிட்டு பிரியாது, நம்மை கண்மனியைப் போல காக்கின்றவர் நம் தேவன் மாத்திரமே. எனவே அவர் மாறாதவராய், நம்மோடு இருந்து நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார். நாமும் அனுதினமும் அவரோடு இணைந்து வாழ்வோம் மேன்மையானதை சுதந்தரிப்போம்.


*நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!*


பெரியதை எடு!

உழவன் ஒருவன் வீட்டில் வெள்ளாடும் செம்மறி ஆடும் இருந்தன. அவை இரண்டும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. எங்கே சென்றாலும் ஒன்றாகவே சென்றன.


தோட்டத்தில் விளையும் செடிகளை எல்லாம் அவை கடித்து நாசம் செய்தன. கோபம் கொண்ட உழவன், நீங்கள் இனிமேல் இங்கே இருக்கக் கூடாது. இருந்தால் உங்களைக் கொன்று விடுவேன். எங்காவது போய் விடுங்கள், என்று விரட்டினான்.


இரண்டு ஆடுகளும் தங்கள் பொருள்களை ஒரு சாக்குப் பையில் போட்டன. அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டன.


செம்மறி ஆடு வலிமை உள்ளதாக இருந்தது. ஆனால் கோழையாக இருந்தது. மாறாக வெள்ளாடோ வீரத்துடன் விளங்கியது. ஆனால் வலிமை இல்லாமல் இருந்தது. சிறிது தூரம் நடந்த இரண்டும் ஒரு வயலை அடைந்தன. அங்கே இறந்து போன ஓநாய் ஒன்றின் தலை கிடந்தது. அந்த ஓநாயின் தலையை எடுத்துக் கொள். நீதான் வலிமையுடன் இருக்கிறாய், என்றது வெள்ளாடு.


என்னால் முடியாது நீதான் வீரன். நீயே எடு, என்றது செம்மறி ஆடு. இரண்டும் சேர்ந்து அந்த ஓநாயின் தலையைச் சாக்கிற்குள் போட்டன. சாக்கைத் தூக்கிக் கொண்டு இரண்டும் நடந்தன. சிறிது தொலைவில் நெருப்பு வெளிச்சத்தை அவை பார்த்தன. அந்த நெருப்பு எரிகின்ற இடத்திற்குப் போவோம். குளிருக்கு இதமாக இருக்கும். ஓநாய்களிடம் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம், என்றது வெள்ளாடு.


இரண்டும் நெருப்பு இருந்த இடத்தை நோக்கி நடந்தன. அருகில் சென்றதும் அவை அதிர்ச்சி அடைந்தன. அங்கே மூன்று ஓநாய்கள் உணவு சமைத்துக் கொண்டிருந்தன.


ஓநாய்கள் தங்களைப் பார்த்து விட்டன. தப்பிக்க வழியில்லை, என்பதை உயர்ந்தன ஆடுகள்.
நண்பர்களே! நீங்கள் நலந்தானே என்று தைரியத்துடன் கேட்டது வெள்ளாடு.


அச்சத்தால் செம்மறி ஆட்டின் கால்கள் நடுங்கின.
நண்பர்களா நாய்கள்? எங்கள் உணவு தயார் ஆகட்டும். அதன் பிறகு உங்களைக் கவனிக்கிறோம். எங்கே ஓடிவிடப் போகிறீர்கள்? என்றது ஒரு ஓநாய்.


இவற்றிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது வெள்ளாடு. செம்மறி ஆடே! இன்று நாம் கொன்றோமே ஓநாய்கள். அவற்றில் ஒன்றின் தலையை எடுத்து இவர்களிடம் காட்டு. நாம் யார் என்பது புரியும்? என்று உரத்த குரலில் சொன்னது அது. செம்மறி ஆட்டிற்கு அதன் திட்டம் புரிந்தது. சாக்கிற்குள் கையை விட்டு ஓநாயின் தலையை எடுத்தது.


ஏ! முட்டாள் ஆடே! பெரிய ஓநாயின் தலையை எடுத்துக் காட்டு என்றேன். நீ சிறிய தலையை எடுத்துக் காட்டுகிறாயே, பெரியதை எடு, என்று கத்தியது வெள்ளாடு. அந்தத் தலையைச் சாக்கிற்குள் போட்டது செம்மறி ஆடு. மீண்டும் அதே தலையை வெளியே எடுத்துக் காட்டியது.
கோபம் கொண்டது போல் நடித்தது வெள்ளாடு.


இருக்கின்ற ஓநாய்த் தலைகளில் பெரியதை எடு. மீண்டும் நீ சிறிய தலைகளையே எடுத்துக் காட்டுகிறாய். இதைப் போட்டுவிட்டு பெரிய தலையாக எடு, என்று கத்தியது.
அந்தத் தலையைப் போட்டுவிட்டு அதே தலையை மீண்டும் வெளியே எடுத்தது செம்மறி ஆடு.
இதைப் பார்த்த மூன்று ஓநாய்களும் நடுங்கின.


இவை சாதாரண ஆடுகள் அல்ல. நீ அவற்றைக் கேலி செய்திருக்கக் கூடாது. சாக்கிற்குள் இருந்து ஒவ்வொரு ஓநாய்த் தலையாக எடுக்கின்றன, என்றது ஒரு ஓநாய். மூன்றும் சிறிது நேரம் அமைதியாக இருந்தன.


ஆடுகளைப் பார்த்து ஓநாய் ஒன்று, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, குழம்பு நன்றாகக் கொதிக்கிறது, இன்னும் சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும், நான் சென்று தண்ணீர் கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது.
சிறிது நேரம் சென்றது. இரண்டாவது ஓநாய், அந்த ஓநாயிற்கு நம் அவசரமே தெரியாது. போய் எவ்வளவு நேரம் ஆகிறது? நான் சென்று அதை அழைத்துக் கொண்டு தண்ணீருடன் வருகிறேன், என்று புறப்பட்டது.


பரபரப்புடன் இருந்த மூன்றாவது ஓநாய், இருவரும் எங்கே தொலைந்தார்கள்? நான் சென்று அவர்களை அழைத்து வருகிறேன் என்று புறப்பட்டது. தப்பித்தோம் என்ற மகிழ்ச்சியில் ஓட்டம் பிடித்தது


செம்மறி ஆடே! நம் திட்டம் வெற்றி பெற்று விட்டது. ஓநாய்களிடம் இருந்து தப்பித்து விட்டோம். விரைவாகச் சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து புறப்படுவோம். உண்மை தெரிந்து மீண்டும் அவை இங்கே வரும், என்றது வெள்ளாடு. இரண்டும் அங்கிருந்த உணவை வயிறு முட்ட உண்டன. மகிழ்ச்சியுடன் ஏப்பம் விட்டுக் கொண்டே புறப்பட்டன.
ஓடிய மூன்று ஓநாய்களும் வழியில் சந்தித்தன.


ஆடுகளுக்குப் பயந்தா நாம் ஓடி வருவது? என்று கேட்டது ஒரு ஓநாய். நம்மை அவை ஏமாற்றி இருக்கின்றன. நாமும் ஏமாந்து விட்டோம், என்றது இன்னொரு ஓநாய்.


மூன்றாவது ஓநாய், நாம் உடனே அங்கு செல்வோம், அவற்றைக் கொன்று தின்போம், என்றது.
மூன்று ஓநாய்களும் அங்கு வந்தன. உணவை உண்டு விட்டு இரண்டு ஆடுகளும் ஓடி விட்டதை அறிந்தன.


ஏமாந்து போன ஓநாய்கள் பற்களை நறநறவென்று கடித்தன. பாவம் அவற்றால் வேறு என்ன செய்ய முடியும்?


*என் அன்பு வாசகர்களே,*
ஏமாறுகிறவர்கள் இருக்கின்றவரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதே இக்கதையின் கருத்து.


To Get Daily Story In What's App Contact +917904957814


நாம் ஏமாற்றுகிறவர்களாகவோ, ஏமாறுகிறவர்களாகவோ இருக்க கூடாது எப்போதும் நேர்மையாய் வாழ வேண்டும். நேர்மையாய் வாழும்போது தேவன் நம்மோடு கூட இருந்து நமக்கு தேவையான எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.


வேதத்தில் ஆமான், எஸ்தர் ராஜாத்தியையும் மொர்தேகாயையும் ஏமாற்றி தான் ராஜ பதவியை அடைய தீர்மானித்தான் ஆனால் நடந்ததோ ஏமாற்ற நினைத்து முடிவில் அவனே ஏமாந்து தன் ஜீவனையும் நஷ்டப்படுத்திக்கொண்டான்.


*15 நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,
ஏசாயா 33:15*


*16 அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான், கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும், அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும், அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.
ஏசாயா 33:16*


ஆகவே நாமும் நீதியாய் நடந்து, செம்மையானவைகளை பேசுவோம் உயர்ந்த இடங்களில் வாசம் பண்ணுவோம்.


*நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.