Type Here to Get Search Results !

Lent Days Special Message Part 19 & 20 | லெந்துகால சிந்தனை | கல்லறைக்குக் காவல் | Jesus Sam

லெந்துகால சிந்தனை (19)
கல்லறைக்குக் காவல்!

 ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே *பிரதான ஆசாரியரும் பரிசேயரும்* பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:
            மத்தேயு 27:62
ஆண்டவனே, *அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்றுநாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.* 
            மத்தேயு 27:63
ஆகையால், *அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும்,* முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், *நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும்* என்றார்கள். 
            மத்தேயு 27:64
அதற்குப் பிலாத்து: *உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே, போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்* என்றான். 
            மத்தேயு 27:65
*அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.* 
            மத்தேயு 27:66

வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் ஆண்டவரால் ஒரு அடையாளத்தைக் காண விரும்பினார்கள்.
(மத்தேயு 12:38)

யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் என்று ஒரு அடையாளத்தைக் சொல்லியிருந்தார் ஆண்டவர்.
(மத்தேயு 12:40)

இயேசுவை 'ஏமாற்றுக்காரன்' என்ற இந்த அவிசுவாசக்கூட்டத்தார், அவர் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருக்கப்போவதாக சொன்னதை 'ஏமாற்றுவேலை' என்றனர்.

ஆண்டவரின் சீடர்கள் இராத்திரியிலே வந்து, அவரைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று ஜனங்களுக்குச் சொல்லிவிடுவார்கள் என்கிற அச்சத்தில்,
பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

தங்கள் காவல்சேவகர்களைக்கொண்டு தங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளும்படி பிலாத்து அவர்களுக்கு உத்தரவு அளித்தான். 

அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள். 

இயேசு எழுந்திருக்கப் போவதில்லை என்று நினைத்த அவர்கள், அவருடைய சரீரத்தை களவாட எவ்விதத்திலும் அவருடைய சீஷர்களை விடுவதில்லை என்கிறதில் உறுதியாக இருந்தார்கள்

*"நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா"* என்று அவரைத் தாங்கள் தூஷித்தபோது அவர் இறங்கிவராததினாலும் (மத்.27:40), *"தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும்"* என்றபோது தேவன் அவரை இரட்சிக்காததினாலும் (மத்.27:43), அவர் தேவனுடைய குமாரன் இல்லையென்றும், தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழப்போவதில்லை என்றும் அவர்கள் தப்புக்கணக்குப் போட்டிருக்கலாம்.

ஆனால் நடந்தது வேறு.

தள்ளப்பட்டக் கல், விழுந்துப்போனக் காவலர்!

ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் *கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.* 
              மத்தேயு 28:1

இயேசுவை மரித்தவராகவே மனதில் நிறுத்திக்கொண்டு, அவரை நன்கு அறிந்திருந்த அவர்கள் அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு. வந்தார்கள்! (மாற்கு 16:1)

கல்லறையின் வாசலிலிருந்த மிகவும் பெரிய கல்லை தங்களுக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்கிற கவலையோடு வந்தவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.
அந்த பெரிய கல் தள்ளப்பட்டிருந்தது! (மாற்கு 16:3,4)

அவர்கள் கல்லறைக்கு வருவதற்கு முன்பு ஒரு காரியம் நிகழ்ந்திருந்தது.

அப்பொழுது, *பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன்* வானத்திலிருந்திறங்கிவந்து, *வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.* 
              மத்தேயு 28:2
அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. 
              மத்தேயு 28:3
*காவலாளர்* அவனுக்குப் பயந்ததினால் *திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்.* 
              மத்தேயு 28:4

தேவதூதனை கண்டக் காவலாளர் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்!

கல்லறையை காவல் செய்த தங்களுக்கு இப்படி நேரிடும் என்று அவர்கள் கற்பனைசெய்துகூடப் பார்த்திருக்கமாட்டார்கள்!

இயேசுவின் உயிர்த்தெழுதலை தடுக்கிற வல்லமை எவருக்கும் இல்லையே!

ரூபிக்கப்பட்ட தேவகுமாரன்!

கல்லறையின் வாசலிலிருந்த மிகவும் பெரிய கல்   
தள்ளப்பட்டிருந்ததை கண்ட ஸ்திரீகள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனை (தூதனைக்) கண்டு பயந்தார்கள். 
(மாற்கு 16:3-5)

தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள், *சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள்* என்று அறிவேன். 
              மத்தேயு 28:5
*அவர் இங்கே இல்லை, தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்,* கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். 
              மத்தேயு 28:6
சீக்கிரமாய்ப் போய், *அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார்* என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். *அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அங்கே அவரைக் காண்பீர்கள்,* இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். 
             மத்தேயு 28:7

சிலுவையில் அறையப்பட்டவராகவே தாங்கள் கற்பனை செய்துகொண்டுவந்தவர், உயிரோடெழுந்தார் என்கிற செய்தி அவர்களை மிகுந்த ஆச்சரியத்தில் மூழ்கடித்தது!

நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், *அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்:* அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற் போனார்கள். 
(மாற்கு 16:8)

பின்பு இயேசுகிறிஸ்து தம்மை உயிரோடெழுந்தவராக மகதலேனா மரியாளுக்கும் தமது சீஷர்களுக்கும் காண்பித்தார். (மாற்கு 9:9-14)

 *தாம் சொன்னபடியே இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தது, தாம் சொன்னபடியே அவர் தேவனுடைய குமாரன் என்பதை உறுதிப்படுத்தியது!* 

"மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், *பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்"* என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.
(ரோமர் 1:5)

இயேசுகிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பி, அவர் தம்முடைய குமாரன் என்று உலகுக்கு, குறிப்பாக இஸ்ரவேலருக்கு பலமாய் அறிவித்தார் தேவன்!

*"நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள்"* என்று பேதுரு யூதர்களுக்கு சொல்லுகிறதை கவனியுங்கள். (அப்.2:36)

இதைத்தான் பவுல், *"தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,* பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக *இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்"* என்று அறிக்கையிடுகிறார். (பிலிப்.2:9-11)

தங்கள் ஆண்டவரும் கிறிஸ்துவுமானவரையே தாங்கள் சிலுவையில் அறைந்துவிட்டதாக பேதுரு சொல்லக்கேட்ட *இஸ்ரவேல் குடும்பத்தார் இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி,* பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து; 'சகோதரரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்" என்று கேட்டார்கள். (அப். 2:37)

அப்போஸ்தலருடைய வழிநடத்துதலின்படி *அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர்* ஆண்டவரை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றார்கள்!
(அப்.2:38-41)

மரித்தோர் & ஜீவனுள்ளோரின் ஆண்டவர்!

கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் *ஆண்டவராயிருக்கும்பொருட்டு,* மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்
                 ரோமர் 14:9
என்கிறார் பவுல்.

கிறிஸ்து மரித்தோர்மேல் ஆண்டவராயிருக்கும்பொருட்டு மரித்தும், ஜீவனுள்ளோர்மேல் ஆண்டவராயிருக்கும்பொருட்டு எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்!

தம்மை விசுவாசித்து மரித்தவர்களுக்கும், உயிரோடிருந்து தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கும் அவர் ஆண்டவராக இருக்கிறார்.

அவர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவரும்போது, *தமக்குள் மரித்தவர்களை முதலாவது எழுப்புவார். பின்பு உயிரோடிருந்து தம்மை விசுவாசிக்கிறவர்களையும் தம்மோடு எடுத்துக்கொண்டு,* எப்பொழுதும் தம்முடனே வைத்துக்கொள்ளுவார்! (1தெசலோ.4:16,17)

"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், *என்னை விசுவாசிக்கிறவன்* மரித்தாலும் பிழைப்பான், 
 *உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும்* என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், *இதை விசுவாசிக்கிறாயா?"* என்று மார்த்தாளிடம் கேட்டக் கேள்வியையே ஆண்டவர் இன்று நம்மிடமும் கேட்கிறார். (யோவான் 11:25,26)

அவரை விசுவாசித்தால் மரித்தாலும் பிழைப்போம்,
உயிரோடிருந்து அவரை விசுவாசிக்கிறவர்கள் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்போம்!!

க. காட்சன் வின்சென்ட்
                 8946050920


லெந்துகால சிந்தனை (20)

அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் *அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி,* தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே *அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.* 
                          அப்.1:3

உயிர்த்தெழுந்த ஆண்டவர் தம்முடையவர்களுக்கு தரிசனமாகி, தம்மை உயிருள்ளவராகக் காண்பித்தார்.

வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, *மகதலேனா மரியாளுக்கு* முதல்முதல் தரிசனமானார். (மாற்கு 16:9)

அதன்பின்பு சீஷர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.
(மாற்கு 16:12)

அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமானார்.  
(மாற்கு 16:14)
 *கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,* 
            1கொரிந்.15:3 அடக்கம்பண்ணப்பட்டு, *வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளிலே உயிர்த்தெழுந்து,* 
            1கொரிந்.15:4
கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் *தரிசனமானார்.* 
            1கொரிந்.15:5
அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் *ஒரேவேளையில் தரிசனமானார்.* அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள். 
            1கொரிந்.15:6
பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் *தரிசனமானார்.* 
            1கொரிந்.15:7
எல்லாருக்கும் பின்பு, *அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்* 
            1கொரிந்.15:8 என்று பவுல் சாட்சியிடுகிறார்.

தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்கு ஏன் தரிசனமாகவில்லை?

உயிர்த்தெழுந்த இயேசு தம்மை தேவனுடைய குமாரன் என்று நம்பாமல், சிலுவைக்கு அனுப்பிய பிரதான ஆசாரியருடைய கூட்டத்தாருக்கு தரிசனமாகியிருந்தால் சுவிசேஷப்பணி எவ்வளவு எளிதாகியிருக்கும்!
(மத்.26:63-66)

தன் போர்ச்சேவகரோடுகூட தம்மை நிந்தித்துப் பரியாசம்பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை தமக்கு உடுத்தி அவமானப்படுத்தின ஏரோது ராஜாவுக்கு அவர் தரிசனமாகியிருந்தால் எவ்வளவு நலமாக இருந்திருக்கும்!
(லூக்கா 23:6-11)

தமமைச் சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்த பிலாத்துவுக்கு தரிசனமாகியிருந்தால் எவ்வளவு நலமாக இருந்திருக்கும்!
(யோவான் 19:16)

தம்மை அடித்து அவமானப்படுத்தி, முகத்தில் துப்பி, முள்முடியை தலையில் வைத்து அடித்து துன்பப்படுத்தி, சிலுவையில் அறைந்த பிலாத்துவின் போர்சேவகருக்கு தரிசனமாகியிருந்தால் எவ்வளவு நலமாக இருந்திருக்கும்!
(மத்.26:27-35)

சிலுவையில் தொங்கும்போது தம்மை தூஷித்தவர்களுக்கு தரிசனமாகியிருந்தால் எவ்வளவு நலமாக இருந்திருக்கும்! (மத்.26:39-43)

ஏன் ஆண்டவர் இவர்களுக்கு தரிசனமாகவில்லை?

அவரை (இயேசுவை) மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.
                     அப்.10:39
மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார்.
                     அப்.10:40
*ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல்,* அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு *அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.* 
                     அப்.10:41
என்று பேதுரு சொல்லுகிறதை கவனியுங்கள்.

உயிர்த்தெழுந்த இயேசு எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகக் காணப்படாமல், தம்மோடே புசித்துக் குடித்தவர்களுக்கு மட்டும் தரிசனமாகக் காரணம் என்ன?

இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு அவர்கள் தேவனால் நியமிக்கப்பட்ட சாட்சிகளாயிருந்தார்கள்!

உயிர்த்தெழுதலுக்கு எதிரான பொய் பிரசங்கிகள்!

 *..... காவல்சேவகரில் சிலர்* நகரத்துக்குள்ளே வந்து, *நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.* 
            மத்தேயு 28:11
இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, *சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து.* 
            மத்தேயு 28:12
நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள். என்று சொல்லுங்கள். 
            மத்தேயு 28:13
இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச்உ சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள். 
            மத்தேயு 28:14
*அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு,* தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். *இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது* 
            மத்தேயு 28:15
என்று மத்தேயு பதிவுசெய்திருக்கிறதைப் பாருங்கள்.

காவல்சேவகர் சொன்ன சாட்சியைக் கேட்டு குணப்படுகிறதற்கு பதிலாக பிரதான ஆசாரியர் மனக்கடினப்பட்டார்கள்.

காவல்சேவகருக்கு பணம் கொடுத்து தாங்கள் நித்திரைபண்ணுகையில், ஆண்டவருடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவரைக் களவாய்க் கொண்டு போய்விட்டதாக ஒரு பொய்யை பரப்பும்படி அவர்களை கேட்டுக்கொண்டார்கள்.

இந்தப் பொய் யூதருக்குள்ளே பிரசித்தமாயிருந்தது!

உயிர்த்தெழுதலின் சாட்சிகளுக்கே தரிசனம்!

தம்மை ஒருபோதும் நம்பாதக் கூட்டத்திற்கு தரிசனமாவதைவிட, ஒருகாலத்தில் தம்மை நம்பினவர்களுக்கு தரிசனமாகிறதையே விரும்பினார் ஆண்டவர்.

அவர்கள் ஆண்டவரின்மேல் இருந்த நம்பிக்கையை முற்றிலும் இழந்துப்போயிருந்தனர்.

வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். 
                 மாற்கு 16:9 அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள். 
               மாற்கு 16:10
*அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை* . 
               மாற்கு 16:11
அதன்பின்பு அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார். 
               மாற்கு 16:12
 *அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்: அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.* 
               மாற்கு 16:13
*அதன்பின்பு* பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, *உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம்* அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் *அவர்களைக் கடிந்துகொண்டார்.* 
               மாற்கு 16:14

தம்மை நம்பாமற்போனதினிமித்தம் தம்முடையவர்களை கடிந்துகொண்டாலும், தாம் உயிர்த்தெழவில்லை என்கிற பொய்யைப் பரப்புகிறவர்களுக்கு முன்பாக, அவர்களை தம்முடைய உயிர்த்தெழுதலுக்கு வல்லமையான சாட்சிகளாய் நிறுத்த ஆண்டவர் விரும்பினார்.

அவர் பாடுபட்டபின்பு, *நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி,* தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, *அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்து,* அவர்களை திடப்படுத்தினார். (அப்.1:3)

தமது உயிர்த்தெழுதலைக் குறித்து சாட்சியிட பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டப்பின்பே எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போக அவர்களை அறிவுறுத்தினார். (அப்.1:4,5)

*"பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து* எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், *எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்"* என்று அவர்களை உற்சாகப்படுத்தினார். (அப்.1:8)

யூதர்களுக்குப் பயந்து கதவுகளை பூட்டிகொண்டிருந்தவர்களை (யோவான் 20:19), *"ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள். அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார். அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்"* என்று அவர்களிடம் சாட்சியிடத்தக்கவர்களாய் பலப்படுத்தினார் பரிசுத்த ஆவியானவர். (அப்.3:15)

*"நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே* தேவன் *ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று* இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள்" என்றும் (அப். 2:36)

"அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி *தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி,* முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார்" என்றும் (அப்.3:26) அப்போஸ்தலர்
யூதருக்கு பலமாய் சாட்சிகொடுத்தார்கள்.

*இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று ஆலோசனை சங்கத்தார் தங்களுக்குக் கட்டளையிட்டபோது:* பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக; *"தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள்"* என்று தைரியமாய் சொன்னார்கள். (அப்.4:18,19)

*கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்,* அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது. 
(அப்.4:33)

*"நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று* நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? *அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி,* அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள்" என்று பிரதான ஆசாரியன் சொன்னபோது:
பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்; *"மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது*
நீங்கள் மரத்திலே தூக்கிக்கொலைசெய்த *இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,*
இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, *அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்"* என்று உறுதியாக சாட்சியிட்டார்கள்?
(அப்.5:27-31)

"உயிர்த்தெழுந்த இயேசு" என்கிற செய்தியினால், "இயேசு உயிர்த்தெழவில்லை" என்கிற பொய் செய்தியை அடித்து துவசம்பண்ணினார்கள் அப்போஸ்தலர்.

*தேவவசனம்* விருத்தியடைந்தது . *சீஷருடைய தொகை* எருசலேமில் மிகவும் பெருகிற்று. *ஆசாரியர்களில் அநேகரும்* விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள். 
(அப்.6:7)

உயிரோடெழுந்த கிறிஸ்துவை அறிந்திடும் கிருபையை தேவன் நமக்குக் கொடுக்கக் காரணம், அவருடைய உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளாய் இருக்கவே!

*உயிர்த்தெழுந்த இயேசுவுக்கு உயிருள்ள சாட்சிகளாய் இருக்க நம்மை ஒப்புக்கொடுப்போம்!* 

தேவவசனம் விருத்தியடையட்டும்! தேசம் சந்திக்கப்படட்டும்!!

 க. காட்சன் வின்சென்ட்
                 8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.