Type Here to Get Search Results !

foreign language Part 9 & 10 | அந்நியபாஷை | அந்நியபாஷையில் நாம் தேவனோடு என்ன பேசுகிறோம்? | Jesus Sam

அந்நியபாஷை
(ஓர் ஆய்வு)
9️⃣அந்நியபாஷையில் பேசினால் அற்புதங்கள் நடக்கும் என்று சிலர் சொல்லுகிறார்களே?

அந்நியபாஷையில் பேசுகிறதே ஒரு பெரிய அற்புதம்தான்!

பெந்தெகொஸ்தே நாளிலே பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்ட 120பேர் *ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே* வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினபோது, *திரளான ஜனங்கள் தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை கேட்டு கலக்கமடைந்தார்களே!* (அப்.2:5,6)

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து; *"இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?* (படிக்காதவர்கள் அல்லவா)
அப்படியிருக்க, *நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?"* என்று பிரமித்து ஆச்சரியப்பட்டார்களே! (அப்.2:7,8)

பல தேசங்களிலிருந்து அன்று எருசலேமில் கூடியிருந்த யூதர்கள், *"நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே"* என்று வியந்தார்களே!
(அப்.2:9-12)

ஒருவர் ஆவியில் நிறைந்து, தான் அறிந்திராத; தனக்கு அடுத்தவர் அறிந்திருக்கிற மொழியில் (அந்நிய பாஷையில்) பேசுகிறது அற்புதமே!

ஆனால், அந்நிய பாஷையில் பேசினால் அற்புத அடையாளங்கள் நடக்கும் என்பதற்கான ஆதாரம் எதுவும் வேதத்தில் காணப்படவில்லை.

*அந்நியபாஷையில் பேசுகிற ஒருவர், தனக்கு அளிக்கப்பட்டிருக்கிற குணமாக்கும் வரங்களினாலோ (1கொரிந்.12:9) அல்லது அற்புதங்களைச் செய்யும் சக்தியினாலோ (1கொரிந்.12:10) அல்லது தனது விசுவாசத்தினாலே (1கொரிந்.13:2) அற்புதங்களை செய்யக்கூடும். அவர் பலநாட்கள் ஜெபித்த ஜெபங்களுக்கு பதிலாகக்கூட அவருக்கு அற்புதங்கள் நடக்கக்கூடும்! (லூக்கா 18:7,8)*

இப்படியிருக்க, தான் பேசுகிற அந்நியபாஷையினால்தான் இந்த அற்புதங்கள் நடக்கிறது என்று அவர் நம்புகிறது அவருடைய தவறான புரிதலே!

மேலும் அந்நியபாஷையில் பேசுகிற வரத்தையுடைய அனைவருக்கும் குணமாக்கும் வரங்களும், அற்புதங்களைச் செய்யும் சக்தியும் கண்டிப்பாக அளிக்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் எதையும் தேவன் அளிக்கவில்லை.

அப்படியே, அந்நியபாஷை பேசுகிற அனைவரும் மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதற்கான ஆதாரமும் வேதத்தில் இல்லை. (1கொரிந்.13:2)

*தேவன் சிலருக்கு அந்நியபாஷை வரத்துடன் கூடுதலாக குணமாக்கும் வரங்களையும், அற்புதங்களைச் செய்யும் சக்தியையும், அதிக விசுவாசத்தையும் கொடுத்திருக்கலாம்.* 

தாங்கள் அந்நியபாஷயில் பேசுகிறதினால்தான் தங்களால் அற்புதங்களை செய்யமுடிகிறது என்றும், தங்களுக்கு அற்புதங்கள் நடக்கிறது என்றும் இவர்கள் நம்புகிறது வேத அடிப்படையற்ற நம்பிக்கை என்பதை அறியவேண்டும்!!

க. காட்சன் வின்சென்ட்
                 8946050920


அந்நியபாஷை
(ஓர் ஆய்வு)
1️⃣0️⃣அந்நியபாஷையில் நாம் தேவனோடு என்ன பேசுகிறோம்?

ஆதிசபையார் பேசின அந்நியபாஷைகளிலிருந்து, அந்நியபாஷைகளில் நாம் தேவனோடு என்ன பேசுகிறோம் என்பதை அறிந்துகொள்ளலாம்.

தேவனுடைய மகத்துவங்களைப் பேசுகிறோம்!
பெந்தெகொஸ்தேநாளில் பரிசுத்த ஆவியைப் பெற்ற 120பேர் பேசின அந்நியபாஷைகளைக் கேட்ட பலதேசத்து யூதர்கள், *"நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே"* என்றார்கள். 
(அப்.2:4,5,9-11)

அந்நியபாஷைகளில் நாம் தேவனுடைய மகத்துவங்களைப் பேசுகிறோம்.

தேவனைப் புகழுகிறோம்!
 கொர்நேலியுவின் வீட்டார், அவருடைய உறவின்முறையாரையார், விசேஷித்த சிநேதிதர்மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினபோது
 *அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், *தேவனைப் புகழுகிறதையும்,** பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்டு பிரமித்தார்கள். 
(அப்.10:24,44-46)

பல பாஷைகளில் நாம் தேவனைப் புகழுந்து பேசுகிறோம்.

.... *நான் ஆவியோடும் பாடுவேன்,* கருத்தோடும் பாடுவேன். 
          1கொரிந்.14:15
இல்லாவிட்டால், *நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது,* கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே. 
         1கொரிந். 14:16
*நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய்,* ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.
          1கொரிந்.14:17

மேற்காணும் வசனங்களின் வழியாய், நாம் அந்நியபாஷையில் தேவனை பாடிப் புகழ்ந்து ஸ்தோத்திரிக்கிறோம் என்பதை அறியமுடிகிறது.

விண்ணப்பம்பண்ணுகிறோம்!
    என்னத்தினாலெனில், *நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால், என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி* என் கருத்து பயனற்றதாயிருக்கும். 
         1கொரிந். 14:14
இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? *நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன்,* கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்.
          1கொரிந்.14:15

மேற்காணும் வசனங்களின் வழியாய், நாம் அந்நியபாஷைகளைப் பேசுகிறபோது ஆவியில் ஜெபிக்கிறோம் என்பதை அறியமுடிகிறது.

அந்நியபாஷையில் நாம் நம் ஆவிக்குரியத் தேவைகளுக்காக தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறோமா அல்லது பூமிக்குரியத் தேவைகளுக்காக விண்ணப்பம்பண்ணுகிறோமா என்கிற கேள்வி எழுகிறதா?

*அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்* 
            1கொரிந்.14:4
என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.

அந்நியபாஷையில் பேசுகிறவர் பக்திவிருத்தி அடைகிறார்.

அழிந்துபோகிற பூமிக்குரியத் தேவைகளுக்காக ஒருவர் ஆவியில் ஜெபம்பண்ணி பக்திவிருத்தி அடையமுடியுமா?

*அந்நியபாஷையில் விண்ணப்பம்பண்ணுகிற ஒருவர் பக்திவிருத்தியடைகிறார் என்றால், அவர் நிச்சயம் தன் ஆவிக்குரியத் தேவைகளுக்காகத்தான் ஆவியில் விண்ணப்பம்பண்ணியிருக்கவேண்டும்!* 

சரியாய் வியாக்கியானம் பண்ணுகிற வரத்தை உடையவர் ஒருவர் இருப்பாரானால், இன்று எத்தனைப்பேர் உண்மையாகவே அந்நியபாஷைகளைப் பேசுகிறோம் என்பதை கண்டுபிடித்துவிடமுடியும்!

அடியேனுக்குத் தெரிந்த மூத்த பெந்தெகொஸ்தே சபை ஊழியர் ஒருவர், *"இன்று அந்நியபாஷையில் பேசுகிறவர்களில், பாதிக்கு மேற்பட்டவர்கள் பேசுகிறது உண்மையான அந்நியபாஷை இல்லை"* என்று கூறினார்.

அந்நியபாஷையில் ஆவியினாலே தேவனோடு இரகசியங்களைப் பேசுகிறவர்கள், தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை அறியாவிட்டாலும், எந்தக் காரியங்களைக் குறித்து பேசுகிறோம் என்பதை வசனத்தின் வழியாய் அறிந்திருக்கவேண்டியது அவசியம்!!

க. காட்சன் வின்சென்ட்
                 8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.