Type Here to Get Search Results !

Foreign language Bible study Part 11-15 | Does one say that foreign language is not a gift, it is more than a gift? | அந்நியபாஷை | Jesus Sam

அந்நியபாஷை
(ஓர் ஆய்வு)
1️⃣1️⃣ அந்நியபாஷை என்பது ஒரு வரம் அல்ல, அது வரத்திற்கும் மேற்பட்டது என்று ஒருவர் சொல்லுகிறாரே?

1கொரிந்.12:10ல் சொல்லப்பட்டுள்ள
 "பற்பல பாஷைகள்" என்பது அந்நியபாஷை அல்ல என்றும், தூதர் பாஷைதான் (1கொரி.13:1) அந்நியபாஷை என்றும் சாதிக்கிற சிலர் இருக்கிறார்கள்.

தூதர்பாஷையும் அந்நியபாஷைகளில் ஒன்றுதான் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

மூலமொழி வேதாகமத்தையும், ஆங்கில வேதாகமங்களையும் சரியாய் பகுத்தறிந்து பார்க்கிறவர்கள்: அந்நியபாஷைகள் (1கொரி.14:2,4,13,19,26,27),
நவமான பாஷைகள் (மாற்கு 16:17), வெவ்வேறு பாஷைகள் (அப்.2:4), பல பாஷைகள் (அப்.10:45), பற்பல பாஷைகள் (1கொரிந்.12:10), பலவித பாஷைகள் (1கொரிந்.12:28,30), மனுஷர் & தூதர் பாஷைகள் (1கொரிந்.13:1) அனைத்தும் ஒரே அர்த்தம் கொண்டவை என்பதை அறிந்துகொள்ளலாம்.

"அந்நியபாஷை என்பது ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார் என்பதை அடையாளப்படுத்துகிறதற்காய், அவர் ஆவியைப் பெறும்போது கொடுக்கப்படுகிற ஒரு அடையாளம். அது ஆவியின் வரங்களில் ஒன்றல்ல. பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிற அனைவரும் ஆவியின் வரங்களில் ஒன்றான பற்பல பாஷைகளைப் பேசாவிட்டாலும், ஆவியின் வரத்திற்கும் மேலான அந்நியபாஷையை கண்டிப்பாகப் பேசவேண்டும்" என்று சொல்லுகிற சிலரும் உண்டு.

அந்நியபாஷை என்பது உண்மையில் என்ன?
அந்நியபாஷை என்பது பேசுகிறவருக்கு தெரியாத, அவருக்கு அந்நியமான பாஷையாகும்.
 *"அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்"* என்று பவுல் சொல்லுகிற ஆலோசனை கவனிக்கத்தக்கது.
(1கொரிந்.14:13)

அந்நியபாஷையில் பேசுகிறவருக்கே தான் பேசுகிற பாஷைகள் என்னவென்றும், அவைகளின் அர்த்தம் என்னதென்றும் தெரியாது.

*தான் அந்நியபாஷையில் பேசுகிறது என்னவென்று தனக்கு அருகில் உள்ளவருக்கு சொல்லத்தக்கதாக அதின் அர்த்தத்தை தேவன் தனக்கு வெளிப்படுத்தும்படி அந்நியபாஷையில் பேசுகிறவர் ஜெபிக்கவேண்டியது அவசியம். ஏனெனில், தேவன் வெளிப்படுத்தாவிட்டால் அந்நியபாஷையில் பேசுகிறவருக்கு தான் பேசுகிற பாஷையின் அர்த்தம் என்னவென்று தெரியாது.* 

இப்படியிருக்க, அந்நியபாஷை என்பது ஆவியின் வரங்களுக்கு அப்பாற்பட்டதோ அல்லது மேலானதோ அல்ல என்பதையும், ஆவியின் வரங்களில் ஒன்றான பற்பல பாஷைகளே அந்நியபாஷைகள் என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

அந்நியபாஷை என்பது நாம் அறிந்திராத பாஷை என்று புரிந்துகொண்டால் போதுமானது.

பற்பல பாஷைகளும் அந்நியபாஷைகளும் ஒன்றே என்பதற்கான வேத ஆதாரங்கள்!
    அந்நியபாஷைகள் என்பவை ஆவியின் வரங்களுக்கு அப்பாற்பட்டவையல்ல, அவை ஆவியின் வரங்களில் ஒன்றான பற்பல பாஷைகளே என்பதை வசனவெளிச்சத்தில் ஆராய்வோம்!

வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், *வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும்,* வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. 
          1கொரிந்.12:10

தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், *பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்.* 
          1கொரிந்.12:28

மேலே 1கொரிந்.12:10ல் குறிப்பிடப்படுகிற பற்பல பாஷைகளுக்கும், 1கொரிந்.12:28ல் குறிப்பிடப்படுகிற பலவித பாஷைகளுக்கும் எழுத்து வித்தியாசத்தைத் தவிர, அர்த்தத்தில் எந்த வித்தியாசமும் இல்லை.

*1கொரிந்தியர் 12:10ல் பற்பல பாஷைகளைப் பேசும் வரத்தை குறித்து சொல்லிவிட்டு, 1கொரிந்தியர் 12:28ல் "தேவனானவர் சபையிலே....பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்" என்று சொல்லுகிற பவுல், 1கொரிந்தியர் 12:30ல் "எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா?" என்று கேட்பதிலிருந்து: பற்பல பாஷைகள், பலவித பாஷைகள், அந்நியபாஷைகள் என்று சொல்லப்படுகிறவை வெவ்வேறானவை அல்ல, அவை ஒன்றே என்பதை அறிந்துகொள்ளலாம்.* 

1கொரிந்தியர் 12:10ல் பற்பல பாஷைகளைப் பேசுகிறதையும், பாஷைகளை வியாக்கியானம்பண்ணுகிறதையும் ஆவிக்குரிய வரங்களின் பட்டியலில் அடுத்தடுத்து குறிப்பிடுகிற பவுல்: 1கொரிந்தியர் 12:30ல் "எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?" என்று அடுத்தடுத்து கேட்கிறதை கவனியுங்கள்.

இதிலிருந்தே அந்நியபஷைகள் என்பதும் பற்பலபாஷைகள் என்பதும் ஒன்றே என்பது விளங்குகிறதல்லவா?

பற்பல பாஷைகளும் அந்நியபாஷைகளும் ஒன்றானால், அந்நியபாஷைகள் ஆவியின் வரங்களில் ஒன்று என்று புரிகிறதல்லவா?

அன்பை நாடுங்கள். ஞானவரங்களையும் விரும்புங்கள். விஷேசமாய்த் *தீர்க்கதரிசனவரத்தை* விரும்புங்கள். 
            1கொரிந்.14:1
ஏனெனில் *அந்நியபாஷையில்* பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். 
            1கொரிந்.14:2
*தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ* மனுஷருக்குப்பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான். 
            1கொரிந்.14:3
*அந்நியபாஷையில் பேசுகிறவன்* தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான். தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான். 
            1கொரிந்.14:4
நீங்களெல்லாரும் *அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்.* ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன். ஆதலால் நீங்கள் *தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.* 
            1கொரிந்.14:5

மேற்காணும் வசனங்களில் தீர்க்கதரிசன வரத்தின் பயன்பாட்டுடன் அந்நியபாஷையின் பயன்பாட்டை பவுல் ஒப்பிடுகிறார் என்றால், அந்நியபாஷையும் ஆவிக்குரிய வரங்களில் ஒன்றுதான் என்பது உறுதியாகிறதல்லவா?

நீங்களும் *ஆவிக்குரிய வரங்களை* நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக *அவைகளில் தேறும்படி நாடுங்கள்.* 
          1கொரிந்.14:12
*அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன்* அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்
          1கொரிந.14:13
என்று பவுல் சொல்லுகிறதைப் பாருங்கள்.

ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்கள் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடவேண்டும் என்று சொல்லுகிற பவுல்: அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக தேறவேண்டும் என்று ஆலோசனை சொல்லுகிறார். 

இதிலிருந்து அந்நியபாஷையும் ஆவிக்குரிய வரங்களில் ஒன்று என்பது புரிகிறதல்லவா?

*அந்நியபாஷை என்பது ஆவியின் வரங்களுக்கு அப்பார்ப்பட்டது அல்லது மேலானது என்கிற போதனை, அந்நியபாஷைகளைக் குறித்த வேதவிதிகளுக்கு முரணானதாகும்!*

அந்நியபாஷையை குறித்து வேதம் சொல்லுகிறதற்கும் மிஞ்சி நாம் மேன்மைப்பாராட்டினால், அது ஆவியானவருக்கு மிகவும் பிடிக்கும் என்கிற நம்பிக்கையுள்ளவர்கள் பலர் இன்றைய சபைகளில் இருக்கிறதை காணமுடிகிறது.

*எந்த ஆவிக்குரியக் காரியத்தைக் குறித்தும், அதைகுறித்த வேதவரையறைக்கு மிஞ்சி நாம் வியாக்கியானம் பண்ணுகிறதற்கு பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் நம் பங்காளியாக இருக்கமாட்டார்!* 

அந்நியபாஷையை குறித்து வேதம் என்ன போதிக்கிறதோ, அதை மட்டுமே நாம் எடுத்துக்கொண்டால், பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் மகிழ்ச்சியடைவார்!! 

க. காட்சன் வின்சென்ட்
8946050920

அந்நியபாஷை
(ஓர் ஆய்வு)
1️⃣2️⃣அந்நியபாஷை பரலோகபாஷை என்றும், அதில் ஜெபம்பண்ணினால் சாத்தானுக்கு புரியாது என்றும், நமது ஜெபம் தடையில்லாமல் தேவனிடத்திற்கு செல்லவேண்டுமானால் நாம் அந்நியபாஷையில் ஜெபிக்கவேண்டும் என்றும் சிலர் சொல்லுகிறார்களே?

பூமியிலே மனுஷர் பேசுகிற பாஷையானாலும், பரலோகத்திலே தூதர் பேசுகிற பாஷையானாலும் (1கொரி.13:1), பேசுகிறவருக்கு விளங்காத அவருக்கு அந்நியமான பாஷையே அந்நியபாஷை ஆகும்.

பரலோகத்தில் பேசப்படுகிற பாஷை என்னவென்று நமக்கு தெரியாததினால்பூமியில் இருக்கிறவரை அதுவும் நமக்கு ஒரு அந்நியபாஷையே. 

நமக்கு தெரியாத பரலோகபாஷை சாத்தானுக்கும் தெரியாது என்று நினைக்கிறது தவறாகும்.

*சாத்தான் ஒருகாலத்தில் தேவனுடைய விசேஷித்த தூதனாக பரலோகத்தில் இருந்தவன் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. (ஏசாயா 14:12-15; எசேக்.28:12-14)* 

ஒருகாலத்தில் பரலோகத்தில் இருந்தவனுக்கு பரலோகபாஷை எப்படி தெரியாமல் இருக்கும்?

இரட்சிக்கப்பட்ட ஒருவர் பின்மாற்றமடைந்துவிட்டால், தனது ஆவிக்குரியக் காரியங்களைப் பற்றிய நினைவு அவருக்கு அழிந்துவிடுமா? இரட்சிக்கப்பட்டவராயிருந்தபோது தான் பேசின பாஷை அவருக்கு மறந்துவிடுமா?

நாம் பாவிகளாய் இருந்தபோது பேசின பாஷையை இரட்சிக்கப்பட்டப் பின்பு மறந்துவிட்டோமா?

நமது பழைய ஜீவியத்தைப் பற்றிய நமது நினைவுகள் முற்றிலும் அழிந்துவிட்டதா?

கடந்தகாலத்தில் நாம் யாராக இருந்தோம், என்னவென்லாம் பேசினோம் என்பது நமக்கு மறந்துவிட்டதா?

*சாத்தான் விழுந்துபோனதும் பரலோகபாஷை அவனுக்கு மறந்துவிட்டது என்று வேதம் எங்காகிலும் சொல்லுகிறதா?*

பரலோகபாஷையை (தூதர் பாஷையை) சாத்தான் மறந்துவிட்டிருந்தால், பிரதான தூதனாகிய மிகாவேலுடன் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்து அவன் எந்த பாஷையில் தர்க்கித்துப் பேசியிருப்பான்?
(யூதா 1:9)

இப்படியிருக்க, சாத்தானுக்கு பரலோக பாஷையாகிய அந்நியபாஷை தெரியாது என்றும், அந்நியபாஷையில் ஜெபிக்கும்போது சாத்தான் ஜெபத்தை தடைசெய்யமுடியாது என்றும் சொல்லுகிறது சரியான போதனை அல்ல.

*பரலோக மற்றும் பூலோக மொழிகள் எதில் ஜெபம்பண்ணினாலும், தேவனுக்குப் பிரியமானவர்களின் ஜெபத்தை சாத்தானால் ஒருபோதும் தடைப்பண்ணமுடியாது!* (சங்.34:18; நீதி.15:8)

இப்படியியிருக்க, அந்நியபாஷையைக் குறித்து நாம் நினைக்கிறக் காரியங்களையெல்லாம் ஆவியானவர்தான் நமக்கு சொல்லிக்கொடுக்கிறார் என்று நம்பி, அவைகளை உபதேசமாக்குவது பரிசுத்த ஆவிக்கு எதிரான செயலாகும்!

*அந்நியபாஷையை குறித்து மட்டுமல்ல, எந்தக் காரியத்தைக் குறித்தும் வேத அடிப்படையற்ற போதனைகளுக்குப் பின்னால் நிச்சயம் பரிசுத்த ஆவியானவர் இருக்கமாட்டார்!*

க. காட்சன் வின்சென்ட்
8946050920

அந்நியபாஷை
(ஓர் ஆய்வு)
அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது என்பதின் அர்த்தம் என்ன?

இந்தக் கேள்விக்கான பதிலை நிதானமாக ஆராய்வோம்.
 *மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்.* ஆகிலும் அவர்கள் எனக்கு செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிதே. 
          1கொரிந்.14:21
அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. 
          1கொரிந்.14:22

மேலே பவுல் பழைய ஏற்பாட்டு வசனங்களை மேற்கோள் காட்டி சொல்லுகிற காரியத்தை நாம் நன்கு நிதானிக்கவேண்டியது அவசியம்.

சகலமும் பரிபூரணமாயிருக்கையில், மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் தன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போகும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக, அவர்களுக்கு தெரியாத பாஷையைப் பேசுகிற ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்திரத்திலிருந்து அதன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவதாக கர்த்தர் எச்சரித்தார். (உபா.28:50)

தமது வார்த்தையை அசட்டைப்பண்ணுகிற இஸ்ரவேல் ஜனத்தோடு பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் தாம் பேசப்போகிறதாக கர்த்தர் அவர்களுக்கு முன்னறிவித்தார். (ஏசாயா 28:10-11)

அதாவது, அவர்களைத் தண்டிக்க தாம் அவர்களுக்கு விரோதமாக அனுப்பும் அசீரியப் சேனைகளின் அந்நிய மொழியை அவர்கள் கேட்பார்கள் என்றார். (ஏசாயா 28:11-13).

தம்மை விசுவாசியாத இஸ்ரவேலருக்கு எதிராக அவர்கள் அறியாத பாஷையை (அந்நியபாஷையை) பேசுகிற தேசத்தாரைக் கொண்டுவருவதின் மூலம், தாம் தேவன் என்பதை அவர்களுக்கு புரியவைக்க தேவன் விரும்பினார்.

இந்தக் தீர்க்கதரிசனம் பெந்தெகொஸ்தே நாளில் அல்ல, கி.மு எட்டாம் நூற்றாண்டிலேயே நிறைவேறிவிட்டது. (2இராஜா.15:19-17:23)

*இந்தக் காரியங்களை மேற்கோள் காட்டுகிறதின்மூலம், அந்நியபாஷையை தம்மை விசுவாசியாதவர்களுக்கு தம்மை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாக தேவன் பயன்படுத்தினதாக பவுல் குறிப்பிடுகிறார் என்று எண்ணத்தோன்றுகிறது.* 

இங்கு நாம் கவனிக்கவேண்டிய ஒரு காரியம் உண்டு.

தேவனால் இஸ்ரவேலுக்கு எதிராக அனுப்பப்பட்ட அசீரியர், இஸ்ரவேலரிடம் ஆவியில் நிறைந்து வேறொரு பாஷையில் பேசவில்லை. அவர்கள் தங்கள் சொந்தமொழியிலேயே பேசினார்கள். அசீரியருடைய பாஷை இஸ்ரவேலருக்கு அந்நியபாஷையாக இருந்தது.

*1கொரிந்தியர் 14ஆம் அதிகாரத்தில் பவுல் குறிப்பிடுகிற அந்நியபாஷையோ, ஒருவர் தான் அறியாத பாஷையில் பேசும் ஒரு வரமாகும்.* 

அசீரியர் பேசின அவர்களுடைய சொந்தபாஷை இஸ்ரவேலருக்கு தேவனை அடையாளம் காட்டினதைவிட, ஆவியில் நிறைந்து தேவஜனங்கள் பேசும் அந்நியபாஷை இன்னும் பலமாய் தேவனை அடையாளம் காட்டுகிறதாய் இருக்கிறது.

அந்நியபாஷை தேவனை எப்பொழுது அவிசுவாசிகளுக்கு அடையாளம் காட்டும்?
அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, *ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.* 
                 அப்போ.2:4
வானத்தின்கீழிருக்கிற *சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள்* அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். 
                 அப்போ.2:5
அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஐனங்கள் கூடிவந்து, *தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே* கலக்கமடைந்தார்கள். 
                 அப்போ.2:6
எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து; *இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?* 
                 அப்போ.2:7
அப்படியிருக்க, *நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே,* இதெப்படி? 
                 அப்போ.2:8
பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, 
                 அப்போ.2:9
பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும், 
               அப்போ.2:10
கிரேத்தரும், அரபியருமாகிய *நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே* என்றார்கள். 
               அப்போ.2:11

உலகத்தின் பல தேசங்களிலிருந்து தேவபக்தியுள்ள யூதர்கள் எருசலேம் பண்டிகைக்கு வந்திருந்தனர்.

அவர்கள் தேவபக்தியுள்ளவர்களானாலும் இயேசுகிறிஸ்துவை விசுவாசியாதவர்கள் ஆவர்.

*அப்போஸ்தலர் பிரசங்கிக்கப்போகிற தமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை அவர்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவுண்டாகும்படிக்கு அவர்களுடைய பாஷைகளில் பேசும் வரத்தை ஆவியானவரின் மூலமாக தேவன் தமது சீஷர்களுக்கு அருளினார்.* 

உள்ளூர் யூதர்கள் உலகம் முழுவதிலிமிருந்து வந்திருக்கிற தங்கள் தங்கள் பாஷைகளில் பேசுகிறதைக் கண்ட அயல்நாட்டு யூதர்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அன்று அப்போஸ்தலரின் பிரசங்கத்தைக் கேட்டு, ஆண்டவருக்கு தங்களை ஒப்புவித்து ஞானஸ்நானம் பெற்றனர்! (அப்.2:14-41)

*நமக்கு அருகிலுள்ள வேறுமொழிக்காரர்களுக்கு, நம்மடைய ஊர்க்காரரானாலும் வேறு மொழியை அறிந்துள்ளவர்களுக்கு, நாம் அறிந்திராத ஆனால் அவர்கள் அறிந்திருக்கிற மொழியில் நாம் எப்போது பேசுகிறோமோ, அப்போதுதான் நாம் பேசுகிற அந்நியபாஷை அவிசுவாசிகளான அவர்களுக்கு அடையாளமாகிறது!* 

நாம் அறிந்திராத, பிறர் அறிந்திருக்கிற மொழியில் நாம் அவர்களுக்கு முன்பாகப் பேசுகிறது, நம்முடைய ஆண்டவர் உண்மையிலேயே இருக்கிறார் என்பதையும், நம்மை இவ்வாறு பேசவைக்கிற அவரே மெய்யான தேவன் என்பதையும் அவர்களுக்கு அடையாளம் காட்டுகிறது.

அருகிலுள்ள அல்லது ஆலயத்திற்குள் வருகிற அயல் மொழியினருக்கு அல்லது நமது சொந்தமொழியினருக்கு தெரியாத பாஷைகளில், நாம் 
அவர்களுக்கு முன்பாகப்
ஆவியில் நிறைந்து பேசும்போது, அவை நம்மை அவர்களுக்கு பைத்தியங்களாக அடையாளம் காட்டிவிடுகிறது!

ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, *எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது,* அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், *அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?* 
          1கொரிந்.14:23
என்று பவுல் கேட்கிறதை நாம் சிந்திக்கவேண்டும்.

சபையில் உள்ள எல்லாரும் ஒருவருக்கும் விளங்காத மொழியில் பேசுகிறபோது, அதை கேட்கிற அவிசுவாசிகள் அல்லது சபைக்கு புதிதாக வருகிறவர்கள் பக்திவிருத்தி அடைவதற்கு பதிலாக, நம்மை 'பைத்தியங்கள்' என்பார்கள் என்கிறார் பவுல்.

இப்படியிருக்க, மற்றவர்களுக்கு நம்மை பைத்தியங்களாக அடையாளம் காட்டும் விதத்தில் அந்நியபாஷை பேசுகிறதிலிருந்து, மெய்யாகவே தேவன் நம்மோடிருக்கிறார் என்று அடையாளம் காட்டத்தக்க விதத்தில் அந்நியபாஷைகளைப் பேச, இந்த வரத்தைப் பெற்றிருக்கிறவர்கள் முன்னேறவேண்டும்!

*நான் குழந்தையாயிருந்தபோது* குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன். *நான் புருஷனானபோதோ* குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்
          1கொரிந்.13:11
என்று பவுல் சொல்லுகிறதை அந்நியபாஷை பேசும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

அந்நியபாஷை வரத்தைப் பெற்று பல ஆண்டுகளாகியும் இன்னும் குழந்தையைப்போலவே பேசுகிறவர்களில் பரிசுத்த ஆவியானவர் மகிழ்ச்சியடையமாட்டார்!

*ஒருவருக்கும் புரியாத விதத்தில் அந்நியபாஷைகளில் பேசுகிறவர்கள், தாங்கள் பேசும் அந்நியபாஷைகள் அவிசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கிறது என்று நம்புகிறது அறியாமையாகும்!!*

க. காட்சன் வின்சென்ட்
                 8946050920


அந்நியபாஷை (ஓர் ஆய்வு)

1️⃣4️⃣ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறார் என்பதற்கு அந்நியபாஷையில் பேசுகிறது மட்டுமே அடையாளமா?
ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறார் என்பதற்கு அவர் அந்நியபாஷையில் பேசுகிறதை மட்டுமே அடையாளமாகக் கொள்வோமானால், பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிற அநேகரை பரிசுத்த ஆவியைப் பெறாதவர்களாகவே பார்க்கும் தவறை நாம் செய்துவிடுவோம்!

அந்நியபாஷை மட்டுமே அடையாளம் அல்ல!
ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறார் என்பதற்கு அவர் அந்நியபாஷையில் பேசுகிறது மட்டுமே அடையாளம் அல்ல.

தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், *பலவித பாஷைகளையும்* ஏற்படுத்தினார்.
          1கொரிந்.12:28
எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? 
          1கொரிந்.12:29
எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? *எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா?* எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா? 
          1கொரிந்.12:30

என்று மேலே பவுல் சொல்லுகிறதை நன்கு கவனிப்போமானால், ஒரு சபையில் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிற அனைவரும் அந்நியபாஷையில் பேசமுடியாது என்பதையும், அந்த வரத்தைப் பெற்றவர்கள் மட்டுமே அந்நியபாஷையில் பேசமுடியும் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

*ஆவியினவர் அருளப்பட்ட ஆரம்பநாட்களில் ஆவியைப்பெற்ற அனைவரும் அந்நியபாஷைகளைப் பேசினதை எவரும் மறுக்கமுடியாது.*
(அப்.2:3,4; 10:44-46; 19:6)

ஆவியானவர் சபைக்கு பல வரங்களை கொடுக்க ஆரம்பித்தபோது அனைவருக்கும் அந்நியபாஷையில் பேசும் வரத்தைக் கொடாமல், தமக்கு சித்தமான சிலருக்கு மட்டும் அந்த வரத்தை கொடுத்தார், இப்பொழுதும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

எப்படியெனில், *ஒருவனுக்கு* ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், *வேறொருவனுக்கு* அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், 
            1கொரிந்.12:8 *வேறொருவனுக்கு* அந்த ஆவியினாலேயே விசுவாசமும், *வேறொருவனுக்கு* அந்த ஆவியினாலே குணமாக்கும் வரங்களும், 
            1கொரிந்.12:9
*வேறொருவனுக்கு* அற்புதங்களைச் செய்யும் சக்தியும், *வேறொருவனுக்குத்* தீர்க்கதரிசனம் உரைத்தலும், *வேறொருவனுக்கு* ஆவிகளைப் பகுத்தறிதலும், *வேறொருவனுக்குப்* பற்பல பாஷைகளைப் பேசுதலும், *வேறொருவனுக்குப்* பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. 
          1கொரிந்.12:10
இவைகளையெல்லாம் அந்த ஒரே அவியானவர் நடப்பித்து, *தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்* 
          1கொரிந்.12:11
என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.

ஆவியானவர் சபைக்குக் கொடுத்திருப்பதாக ஆவியின் ஒன்பது வரங்களை பவுல் மேற்காணும் வசனங்களில் பட்டியலிட்டிருக்கிறார்.

*ஆவியானவர் அனைவருக்கும் ஒரே வரத்தை கொடுக்கிறவர் அல்ல, ஒருவருக்கே அனைத்து வரங்களையும் கொடுக்கிறவரும் அல்ல, தாம் யாருக்கு எந்த வரத்தைக் கொடுக்க விரும்புகிறாரோ, அவருக்கு அந்த வரத்தை கொடுக்கிறவராக இருக்கிறார் என்பதை மேற்காணும் வசனங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.* 

இப்படியிருக்க, அந்நியபாஷை பேசுகிறவர் மட்டுமே பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறார் என்று நாம் நினைப்போமானால், ஆவியின் பிற வரத்தைப் பெற்றிருக்கிறவர்களை பரிசுத்த ஆவியை பெறாதவர்களாகக் கணித்துவிடுவோம்!

அநேக சபைகளில் அநேக ஆண்டுகள் விசுவாசிகளாக இருக்கிற சிலர், தேவன் தங்களுக்கு பரிசுத்தஆவியை தந்தருளும்படிக்கு ஜெபிக்க அடியேனிடம் கேட்டுக்கொண்டதுண்டு!

*"தேவன் உங்களுக்கு இன்னும் பரிசுத்த ஆவியை தரவில்லை என்று எப்படி சொல்லுகிறீர்கள்?"* என்று அடியேன் கேட்டதற்கு அநேகர் அளித்த பதில், *"நாங்கள் இன்னும் அந்நியபாஷை பேசவில்லை"* என்பதே!

"அந்நியபாஷையில் பேசாதவர்கள் இன்னும் ஆவியின் அபிஷேகத்தைப் பெறவில்லை" என்று கற்பித்து: மெய்யாய் இரட்சிக்கப்பட்டு, ஆவியின் அபிஷேகத்திற்காய் ஊக்கமாய் (உபவாசித்து) ஜெபித்து, பரிசுத்த ஆவியைப் பெற்று, வேறு வரத்தைப் பெற்றிருக்கிறவர்களை, பல ஆண்டுகளாய் பரிசுத்த ஆவியைப் பெற ஏங்குகிறவர்களாய் மாற்றியிருக்கிற அறியாமையிலிருந்து ஊழியர்களும், சகவிசுவாசிகளும் விடுபடவேண்டியகு அவசியமாகும்!
 
ஆவியின் வரங்கள் அனைத்தும் அடையாமே!
ஒருவர் பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறார் என்பதற்கு ஆவியின் வரங்களில் ஒன்றான அந்நியபாஷையில் பேசுவது மட்டுமே அடையாளம் அல்ல, ஆவியின் அனைத்து வரங்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதற்கான அடையாளங்களே!

*ஞானத்தைப் போதிக்கும் வசனம்* 

*அறிவை உணர்த்தும் வசனம்* 

*விசுவாசம்* 

*குணமாக்கும் வரங்கள்* 
 
*அற்புதங்களைச் செய்யும் சக்தி* 
 
*தீர்க்கதரிசனம் உரைத்தல்* 

*ஆவிகளைப் பகுத்தறிதல்* 

*பற்பல பாஷைகளைப் பேசுதல்* 

*பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல்* 

ஆகிய ஆவியின் வரங்கள் ஒன்பதும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதற்கான அடையாளங்களே.
(1கொரிந்.12:8-10)

மேற்காணும் வரங்களில் ஒருவர் எந்த வரத்தைப் பெற்றிருந்தாலும், அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறார் என்பதை 100 சதவீதம் நம்பலாம்!!

க. காட்சன் வின்சென்ட்
                 8946050920


அந்நியபாஷை (ஓர் ஆய்வு)

1️⃣5️⃣ஒருவர் பரிசுத்தஆவியைப் பெற்று, ஆவியானவரால் நடத்தப்படுகிறார் என்பதற்கு முக்கியமான அடையாளம் அவர் பெற்றிருக்கும் ஆவியின் வரங்களா? அல்லது அவர் கொடுக்கும் ஆவியின் கனிகளா?

தங்களை பரிசுத்தஆவியைப் பெற்றவர்களாகவும், ஆவிக்குரியவர்களாகவும் காண்பித்துக்கொள்ள இன்று அநேகக் கிறிஸ்தவர்கள், மற்ற கிறிஸ்தவர்கள் முன்பாக கட்டாயமாக ஓரிருவரிகளாவது அந்நியபாஷை பேசுகிறதைக் காணமுடிகிறது.

*ஒரு ஆராதனையில் அல்லது ஒரு கூட்டத்தில் ஒருமுறையேனும், ஓரிருவார்த்தையேனும் அந்நியபாஷையில் பேசாதவர்களை, பரிசுத்தஆவியைப் பெற்றவர்களாக ஆவிக்குரிய சபையாராகிய நாம் ஏற்றுக்கொள்ளுகிறதில்லையே!* 

ஆவியின் வரமாகிய அந்நியபாஷைதான் ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறதற்கான அடையாளம் என்று நம்புகிற நம்முடைய அறியாமையே இதற்கு காரணம்!

ஆவியின் கனிகளே முக்கிய அடையாளம்!
அந்நியபாஷையில் பேசுதல் உட்பட ஆவியின் அனைத்து வரங்களும் ஒரு கிறிஸ்தவருக்கு அவசியமானவையானாலும், அவர் பரிசுத்த ஆவியைப் பெற்று, ஆவியானவரால் நடத்தப்படுகிறார் என்பதை உலகுக்கு அடையாளம் காட்டுவது அவரது ஆவியின் கனிகளே!

*"அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்"* என்று ஆண்டவர் அடையாளம் காட்டுகிறாரேயல்லாமல் (மத்.7:20), *"அவர்களுடைய வரங்களால் அவர்களை அறிவீர்கள்"* என்று ஒருபோதும் அடையாளம் காட்டியதில்லை.

*"நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்"* என்று ஆண்டவர் சொல்லுகிறாரேயல்லாமல் (யோவான் 15:8), *"நீங்கள் மிகுந்த வரங்களை உடையவர்களாய் இருப்பதனால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்"* என்று ஒருபோதும் அவர் சொன்னதில்லை.

பரிசுத்த ஆவியைப் பெற்ற அநேகர் ஆண்டவருடன் தொடர்பில்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது!

*அந்நாளில் அநேகர்* என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே *தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா?* உமது நாமத்தினாலே *பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா?* உமது நாமத்தினாலே *அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?* என்பார்கள். 
                        மத்.7:22
அப்பொழுது, *நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை,* அக்கிரமச் செய்கைக்காரரே, *என்னைவிட்டு அகன்றுபோங்கள்* என்று அவர்களுக்குச் சொல்லுவேன்
                        மத்.7:23
என்று இயேசுகிறிஸ்து சொல்லுகிறதை கவனியுங்கள்.

பரிசுத்தஆவியைப் பெறாமல் ஒருவரும்
தீர்க்கதரிசனம் உரைக்கவோ, பிசாசுகளைத் துரத்தவோ, அநேக அற்புதங்களைச் செய்வோ முடியாது.
 *பரிசுத்தஆவியைப் பெற்றவர்களில்தான் குணமாக்கும் வரங்கள், அற்புதங்களை செய்யும் சக்தி, தீர்க்கதரிசனம் உரைத்தல் போன்ற வரங்கள் செயல்படும்.* (1கொரி.12:9,10)

பரிசுத்தஆவியைப் பெற்று, ஆவியின் வரங்களை செயல்படுத்திய அநேகரை பார்த்து: *"நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்"* என்று தாம் சொல்லப்போவதாக ஆண்டவர் எச்சரிக்கிறார்!

அவர்கள் வரங்களை பயன்படுத்தியதில் எந்த குறையையும் ஆண்டவர் காணவில்லை.
அவர்களுடைய செய்கையில் ஆண்டவர் குறைகளை கண்டிருக்கிறார்.

*"அக்கிரமச் செய்கைக்காரரே"* என்று ஆண்டவர் அவர்களை கடிந்துகொள்வது கவனிக்கத்தக்கது.

பரிசுத்தஆவியின் வரங்களைப் பெற்றிருந்த அவர்கள் ஆவியின் கனிகளை உடையவர்களாய் இருக்கவில்லை!

*கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு* எச்சரிக்கையாயிருங்கள், *அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு* உங்களிடத்தில் வருவார்கள், *உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.* 
                        மத்.7:15
*அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்,* முட்செடிகளில் *திராட்சப்பழங்களையும்,* முட்பூண்டுகளில் *அத்திப்பழங்களையும்* பறிக்கிறார்களா? 
                        மத்.7:16
அப்படியே *நல்ல மரமெல்லாம்* நல்ல கனிகளைக் கொடுக்கும், *கெட்ட மரமோ* கெட்ட கனிகளைக் கொடுக்கும். 
                        மத்.7:17
*நல்ல மரம்* கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது, *கெட்ட மரம்* நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது 
                        மத்.7:18
என்கிற ஆண்டவரின் எச்சரிக்கையை ஜாக்கிரதையாய் கவனிக்கவேண்டும்.

*ஒருவருடைய தோன்றத்தை மட்டும் கணக்கில் கொண்டு, அவர் ஒரு கிறிஸ்தவர் அல்லது ஊழியர் என்று ஏமாந்துவிடக்கூடாது. அவரது செய்கையை கவனித்தப் பிறகே அவரை குறித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்!* 

ஆண்டவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டு. அவைகளின்படி செய்கிறவரே, நல்ல கனிகொடுக்கும் நல்ல மரமாக இருக்கிறார். (மத்.7:24)

ஆண்டவர் சொல்லிய வார்த்தைகளைக்கேட்டு, அவைகளின்படி செய்யாதிருக்கிறவர், கெட்ட கனிகளைக் கொடுக்கும் கெட்ட மரமாக இருக்கிறார். (மத்.7:26)

மத்தேயு 5:3-10ல் ஆண்டவர் குறிப்பிட்டிருக்கிற அவரது எட்டு அருங்குணங்களையும் உடையவர்களாகத் தங்களை மாற்ற ஆவியானவருக்கு இடங்கொடுத்து, கிறிஸ்துவின் சாயலாக ஆவியானவரால் மாற்றப்பட்டு வருகிறவர்களே உண்மையில் பரிசுத்தஆவியானவரைப் பெற்று, அவரால் நடத்தப்படுகிறவர்கள் ஆவர்! (2கொரி.3;17,18)

கனியற்ற வரங்கள் ஒன்றுமில்லை!
ஆவியின் வரங்களின் மூலமாக தங்களை ஆவிக்குரியவர்களாகக் காண்பித்துக்கொள்ளும் ஆர்வம் இன்றைய கிறிஸ்தவரிடம் அதிகம் உண்டு.

*ஆவியின் வரம் பெற்றவர்களையே ஆவிக்குரியவர்களாக அங்கீகரிக்கும் கிறிஸ்தவரே இன்று அதிகம்!* 

எவ்வளவு பரிசுத்தமாக ஜீவிக்கிறவர்களானாலும் ஆவியின் வரங்களற்ற கிறிஸ்தவர்களுக்கு இன்றைய கிறிஸ்தவ உலகத்தில் மதிப்பில்லை!

*"நாங்கள் கனிகளை கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவோம், வரங்கள் எங்களுக்கு தேவையில்லை"* என்று வரங்களை பல கிறிஸ்தவர்கள் ஒதுக்குகிறதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

கனிகளுடன் கூடிய வரவங்கள் அவசியமானவை.
கனிகளற்ற, வரங்கள் மட்டுமே உள்ள வாழ்வினால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள். *இன்னும் அதிக மேன்மையான வழியை உங்களுக்குக் காண்பிக்கிறேன்.* 
         1கொரிந். 12:31
*நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும்,* அன்பு எனக்கிராவிட்டால், *சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.* 
             1கொரிந்13:1
*நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து,* சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், *மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும்,* அன்பு எனக்கிராவிட்டால் *நான் ஒன்றுமில்லை* 
            1கொரிந்.13:2
என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.

முக்கியமான வரங்களை நாடச்சொல்லுகிற பவுல், "இன்னும் அதிக மேன்மையான வழியை உங்களுக்குக் காண்பிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு, அன்பில்லாத தான்
மனுஷர் மற்றும் தூதர் பாஷைகளாகிய அந்நியபாஷைகளைப் பேசினாலும்; மிகத் துள்ளியமான தீர்க்கதரிசன வரத்தை உடையவராயிருந்தாலும்; வல்லமையான விசுவாச வரத்தை உடையவராக இருந்தாலும்; தாம் ஒரு வெறுமையான பாத்திரம் என்றும், தாம் ஒன்றுமில்லை என்றும் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது.

முக்கியமான வரங்களிலும் மேன்மையானது ஆவியின் கனியாகிய அன்பு என்பதை நாம் அறியவேண்டும்!

*அன்பை நாடுங்கள்.* ஞானவரங்களையும் விரும்புங்கள். விஷேசமாய்த் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்
            1கொரிந்.14:1
என்று பவுல் சொல்லுகிறதை கேளுங்கள்.

ஞானவரங்களை, விஷேசமாய்த் தீர்க்கதரிசனவரத்தை விரும்புவதற்கு முன்பு அன்பை நாடச்சொல்லுகிறார் பவுல்.

*ஓர் உண்மை கிறிஸ்தவன் வரங்களைவிட கனிகளுக்கே மேன்மையான மற்றும் முதன்மையான இடத்தைக் கொடுக்கவேண்டும்!* 
         
வரங்களுக்கு மேன்மையான மற்றும் முதன்மையான இடத்தைக் கொடுத்து, கனிகளைக் கண்டுகொள்ளாத அருவருப்பை இன்றைய கிறிஸ்தவ உலகத்தில் காணமுடிகிறது.

*ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற்று, ஆவியானவரால் நடத்தப்படுகிறார் என்பதற்கு வரங்களல்ல, கனிகளே உண்மையான அடையாளங்களாகும்.* 

அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய ஆவியின் கனிகளே ஒருவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, ஆவியானவரால் நடத்தப்படுகிறார் என்பதற்கு அடையாளங்களாகும்! (கலாத்.5:22,23)

வரங்களை மட்டுமே உடையவர்களை பரிசுத்தஆவியைப் பெற்றவராக ஏற்றுக்கொள்ளமுடியும், ஆனால் கனியற்ற அவர்கள் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளமுடியாது!

*ஒரு கிறிஸ்தவருக்குள் பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணி அவரை நடத்துகிறார் என்பதற்கு, அவர் ஆண்டவரின் வார்த்தையின்படி வாழ்வதே அடையாளமாகும்!* (யோவான் 14:16,17,21,23)

வரங்களினால் அல்ல, கனிகளாலேயே ஒருவருக்குள் கர்த்தருடைய ஆவியானவர் வசிக்கிறதை நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும்!!

க. காட்சன் வின்சென்ட்
      8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.