Type Here to Get Search Results !

Foreign Language Bible Study | அந்நியபாஷை (ஓர் ஆய்வு) Part 16 - 20 | Jesus Sam

அந்நியபாஷை (ஓர் ஆய்வு)
1️⃣6️⃣ அந்நியபாஷை எவருக்கும் விளங்காத மொழியா? நமது அ.பா பிரியர்கள் அந்நியபாஷை எவருக்கும் விளங்காது என்றும், விளங்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் வாதிடுகிறார்களே?

அந்நியபாஷை பிரியரானாலும் அந்நியபாஷையில் பிரியப்படாதவராயினும், தாங்கள் சொல்லுகிற காரியங்களுக்கு வேத ஆதாரத்தைக் காண்பிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

எவரோ எப்போதோ சொல்லிக்கொடுத்த வேத அடிப்படையில்லாதக் காரியங்களை கிளிப்பிள்ளையைப் போல சொல்லிக்கொண்டிருக்கிற எவராயினும், தாங்கள் வேதத்திற்கு எதிராகப் பேசிக்கொண்டிருக்கிறதை உணரவேண்டும்!

*இன்று அந்நியபாஷைப் பேசுகிறவர்களை விமர்சிக்கிற அநேகர், தாங்கள் அந்நியபாஷையில் ஏன் பிரியப்படுகிறதில்லை, ஏன் அந்நியபாஷையில் பேசுகிறதில்லை என்பதை சத்தியத்தின்படி விளக்கும் திராணியற்றவர்களாய் இருக்கிறதைக் காணமுடிகிறது. ஆவியின் வரங்கள் இன்றும் இருக்கிறது என்று விசுவாசியாத பல அவிசுவாசிகள், அந்நியபாஷையை பேசுகிறவர்களை விமர்சிக்கிறது மிகவும் துணிக்கரமாகும்!*

ஆவியின் வரங்களை இன்றும் விசுவாசிக்கிறவர்கள், குறிப்பாக அந்நியபாஷையில் பேசும் வரமுள்ளவர்களே, அந்நியபாஷையை குறித்தத் தெளிவற்றவர்களுக்கு, தெளிவாய் போதிக்கத் தகுதியுள்ளவர் ஆவர்!

அந்நியபாஷை எவருக்கும் விளங்காத மொழியா?
பேசுகிறவருக்கும் கேட்கிறவருக்கும் விளங்காத மொழிதான் அந்நியபாஷை.

*.... அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக* விண்ணப்பம்பண்ணக்கடவன்
          1கொரிந்.14:13
என்று பவுல் சொல்லுகிறதிலிருந்து, கர்த்தர் வெளிப்படுத்தாவிட்டால், தான் பேசுகிறது என்ன மொழி என்று அந்நியபாஷையில் பேசுகிறவருக்கே விளங்காது என்பதை அறிந்துகொள்ளலாம்.

.... அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், *அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல்,* தேவனிடத்தில் பேசுகிறான்
            1கொரிந்.14:2
என்று பவுல் சொல்லுகிறதிலிருந்து, ஒருவர் அந்நியபாஷை பேசுகிறதை கேட்கிற உள்ளூர்க்காரருக்கும் அது என்ன மொழியென்று விளங்காது என்பதை அறிந்துகொள்ளலாம்.

அந்நியபாஷை எவருக்கும் விளங்கவேண்டிய அவசியம் இல்லையா?
"நாங்கள் பேசுகிற அந்நியபாஷை எவருக்கும் விளங்கவேண்டிய அவசியம் இல்லை, விளக்கவேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை" என்று தாங்கள் சொல்லுகிறது நியாயம்தானா என்று பொதுவெளியில் அந்நியபாஷையில் பேசுவோர் யோசித்துப் பார்க்கவேண்டும்.

நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், *சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக* அவைகளில் தேறும்படி நாடுங்கள். 
          1கொரிந்.14:12
அந்தப்படி *அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக* விண்ணப்பம்பண்ணக்கடவன். 
          1கொரிந்.14:13
*இல்லாவிட்டால்,* நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, *கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.* 
          1கொரிந்.14:16
நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், *ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே* 
          1கொரிந்.14:17
என்று பவுல் சொல்லுகிற காரியங்களை அந்நியபாஷையில் பேசும் வரம் உள்ளவர்கள் நன்றாக கவனிக்கவேண்டும்.

ஆவியின் வரங்கள் அனைத்தும் சபையார் ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாக்கும்படி பயன்படுத்தவே கொடுக்கப்பட்டுள்ளன. (1கொரி.12:7-10)

அந்நியபாஷையில் பேசுகிறவன் *தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்* பேசுகிறான்
            1கொரிந்.14:4
என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.

அந்நியபாஷையில் பேசுகிறவர் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறார்.
          
தனது தனிப்பட்ட பக்திவிருத்திக்காக அந்நியபாஷை வரத்தை பயன்படுத்துகிற ஒருவர், சபையின் பக்திவிருத்திக்காகவும் அதை பயன்படுத்தமுடியும். 

*தனக்கு அர்த்தம் விளங்காவிட்டாலும் தனது பக்திவிருத்திக்காக தனிமையில் அந்நியபாஷையில் பேசுகிறவர், அடுத்தவரின் பக்திவிருத்திக்காக அர்த்தம் விளங்கும் வகையில் அடுத்தவர்முன்பு அந்நியபாஷையில் பேசவேண்டியது அவசியம்!* 

அதாவது, தான் பேசுகிறது என்னவென்று தனக்கு விளங்காவிட்டாலும் தன் பக்திவிருத்திக்காக தனிமையில் அந்நியபாஷையில் பேசுகிறவர், தனக்கடுத்த விசுவாசியின் முன்னிலையில் அந்நியபாஷையில் பேசும்போது, அந்த விசுவாசி பக்திவிருத்தி அடையத்தக்க விதத்தில் அவருக்கு விளங்கும்படி பேசவேண்டியது அவசியம்!

*"நாங்கள் அடுத்தவர் பக்திவிருத்திக்காக அந்நியபாஷை பேசவில்லை, எனவே அடுத்தவர்க்கு அர்த்தம் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை"* என்று அடுத்தவருக்கு விளங்காத விதத்தில் அந்நியபாஷையில் பேசுவோர் சொல்லுகிறது வேதத்திற்கு எதிரான துணிக்கரமாகும்!

ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்கள் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடவேண்டும் என்கிறார் பவுல். 

அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவர் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக ஜெபம்பம்பண்ணவேண்டும் என்கிறார்.

*அந்நியபாஷையில் பேசி தனக்கடுத்தவருக்கு அதின் அர்த்தத்தையும் சொல்லுகிறவரே, அந்நியபாஷை பேசும் வரத்தில் தேறியிருக்கிறார்!* 

"நான் பேசும் அந்நியபாஷைக்கு அர்த்தம் சொல்லமுடியாது, சொல்லவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்று சொல்லுகிறவர், தான் இன்னும் குழந்தையாகவே இருக்கிறதைத் தெரியப்படுத்துகிறார்.

அடுத்த விசுவாசியின் முன்பாக அந்நியபாஷையில் பேசுகிறவர் அதின் அர்த்தத்தை சொல்லாவிட்டால், அவர் ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, அவர் பேசுகிறது இன்னதென்று அறியாத அடுத்த விசுவாசி,
அவருடைய (அந்நியபாஷையிலான) ஸ்தோத்திரத்திற்கு 'ஆமென்" என்று சொல்லமுடியாதே!

அவர் நன்றாய் அந்நியபாஷையில் ஸ்தோத்திரம்பண்ணுகிறார், ஆகிலும் அருகிலுள்ள விசுவாசி பக்திவிருத்தியடையமாட்டாரே!

அடுத்தவர் பக்திவிருத்தியடையமுடியாதபடிக்கு, அவருக்கு புரியாதவகையில், அவருக்கு முன்பாக அந்நியபாஷையில் பேசுகிறது வேதத்திற்கு எதிரானக் காரியமாகும்!

*யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால்,* அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் *ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.* 
          1கொரிந்.14:27
*அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால்,* சபையிலே பேசாமல், *தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்* 
          1கொரிந்.14:28
என்று பவுல் சொல்லுகிறதை பாருங்கள்.

சபையில் அந்நியபாஷைகளில் பேசுகிறவர்கள், சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும் விதத்தில் பேசவேண்டியது அவசியம்.
 
அந்நியபாஷையில் பேசும் வரம் பெற்ற பலர் சபையில் இருந்தாலும், இரண்டு அல்லது மூன்றுபேர்மட்டில் சபையில்
பேசவேண்டும்.

அந்த இரண்டு அல்லது மூன்றுபேரும் ஒரேநேரத்தில் பேசாமல், 
ஒவ்வொருவராய்ப் பேசவேண்டும்.

அந்த இரண்டு அல்லது மூன்றுபேர் ஒவ்வொருவராய்ப் பேசும்போது, ஒருவர் அர்த்தத்தைச் சொல்லவேண்டும்.
     
*சபையில் அர்த்தஞ் சொல்லுகிறவரில்லாவிட்டால், அவர்கள் சபையிலே பேசாமல், தங்களுக்கும் தேவனுக்கும் தெரியப் பேசிக்கொள்ளவேண்டும்!* 

சபைக்கு பக்திவிருத்தியுண்டாகும்படிக்கு அந்நியபாஷையை வியாக்கியானம்பண்ணும் வரமுள்ளவர்கள் இருந்தால் மட்டுமே சபையில் இரண்டு அல்லது மூன்றுபேர், ஒவ்வொருவராக அந்நியபாஷையில் பேசவேண்டும். 
வியாக்கியானம்பண்ணுகிற வரம் பெற்ற ஒருவரும் சபையில் இல்லாத பட்சத்தில், ஒருவரும் சபையில் அந்நியபாஷையில் பேசாமல், தனிமையில் பேசிக்கொள்ளவேண்டும் என்கிறார் பவுல்.

*அர்த்தம் சொல்லாமல் அனைவரும் அந்நியபாஷை பேசுகிறதினால் சபைக்கு ஒரு லாபமும் இல்லை, ஒருவரும் சபையில் அந்நியபாஷையில் பேசாததினால் சபைக்கு ஒரு நஷ்டமும் இல்லை!* 

இது சபைக்கான பவுலின் சொந்த ஆலோசனை அல்ல, கர்த்தருடைய கட்டளையாகும்.

ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், *நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று* அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்
          1கொரிந்.14:37
என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.

1கொரிந்தியர் 14ஆம் அதிகாரத்தில், சபையில் ஒழுங்கும் கிரமுமாய் அந்நியபாஷையை பேசுகிறதைப் பற்றியும், தீர்க்கதரிசனம் உரைக்கிறதைப் பற்றியும் பவுல் சொல்லுகிற ஆலோசனை அவரது சொந்த யோசனை அல்ல, அது தேவனுடைய கற்பனையாகும். 

*உண்மையான தீர்க்கதரிசிகள் மற்றும் உண்மையாகவே பரிசுத்தஆவியைப் பெற்றவர்களால் மட்டுமே பவுல் எழுதியிருக்கிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று ஒத்துக்கொண்டு, கர்த்தருடைய கற்பனையின்படி அந்நியபாஷையில் பேசமுடியும்!* 

தேவனை அறிந்தவர்கள் முன்னிலையிலேயே அவர்களுக்கு புரியும் விதத்தில் அந்நியபாஷையில் பேசவேண்டுமென்றால், தேவனை அறியாதவர்கள் மத்தியில் அவர்களுக்கு விளங்காத விதத்தில் அந்நியபாஷையில் பேசுகிறது ஒழுங்குதானா என்று உண்மையிலேயே பரிசுத்தஆவியைப் பெற்றவர்கள் யோசிக்கவேண்டும்!!

க. காட்சன் வின்சென்ட்
           8946050920



அந்நியபாஷை (ஓர் ஆய்வு)

1️⃣7️⃣ "எல்லாரும் அந்நியபாஷையில் பேசுங்கள்" என்று சபையாரை ஊழியக்காரர்கள் உற்சாகப்படுத்துகிறார்களே? சபையில் உள்ள எல்லாரும் அந்நியபாஷையில் பேசமுடியுமா? எல்லாருக்கும் ஆவியானவர் அந்நியபாஷையில் பேசும் வரத்தைக் கொடுத்துவிடுவாரா?

திருவசன வெளிச்சத்தில் இதை தெளிவாய் ஆராய்வோம்.

"எல்லாரும் அந்நியபாஷையில் பேசுங்கள்" என்று ஊழியக்காரர்கள் சபையாரை உற்சாகப்படுத்துகிறது சரியா?
முழுசபைக்குமான பக்திவிருத்தியையும், புத்தியையும், ஆறுதலையும் வாஞ்சிக்கிற ஊழியர்கள், விசுவாசிகள் எல்லாரும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறதையே விரும்புவார்கள் (1கொரிந்.14:3). 

அந்நியபாஷையில் பேசுகிறவன் *தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.* தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ *சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.* 
            1கொரிந்.14:4
நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன். ஆகிலும், *அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால்,* தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன். *ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.* 
            1கொரிந்.14:5
என்று பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது.

ஒருவருக்கும் விளங்காத அந்நியபாஷையில் சபையிலுள்ள அனைவரும் பேசுகிறதிலும், சபையார் பக்திவிருத்தியடையும்படி, அவர்கள் அறிந்திருக்கிற மொழியில் எல்லாரும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறதையே பவுலைப் போன்ற பகுத்தறிவுள்ள ஊழியர்கள் வாஞ்சிப்பார்கள்.

மேலும், *சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து* உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், *அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?* 
            1கொரிந்.14:6
என்று மற்றெலெல்லாரிலும் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசின (1கொரிந். 14:18) பவுலே கேட்கிறதை கவனிக்கவும்.

தான் ஒரு சிறந்த அப்போஸ்தலராயினும் ஒருவருக்கும் அர்த்தம் விளங்காத அந்நியபாஷைகளில் பேசுகிறதினால் தன்னாலே தங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்று (கொரிந்து) சபையாரிடம் அறிக்கையிடுகிறார் பவுல்.

அர்த்தம் சொல்லாமல் அந்நியபாஷையில் பேசினாலும் சபைக்கு ஏதோ ஒரு ஆசீர்வாதம் இருக்கிறது என்று சபையாரை நம்பப்பண்ணுகிற இன்றைய ஊழியர்களிடம் பவுலின் நேர்மையை தேவன் எதிர்பார்க்கிறார்.

*உங்களிலெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன்,* இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். 
         1கொரிந். 14:18
அப்படியிருந்தும், *நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும்,* மற்றவர்களை உணர்த்தும்படி *என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்* 
          1கொரிந்.14:19
என்பதே அறிவார்ந்த ஊழியர்களின் அறிக்கையாக இருக்கும்!

ஒரு சபையில் உள்ள எல்லாரும் அந்நியபாஷையில் பேசமுடியுமா?
*தேவனானவர் சபையிலே* முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், *பலவித பாஷைகளையும்* ஏற்படுத்தினார். 
          1கொரிந்.12:28
எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? 
          1கொரிந்.12:29
எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? *எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா?* எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா? 
          1கொரிந்.12:30
என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.

தேவனானவர் சபையிலே அப்போஸ்தலரையும், தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும்,
ஏற்படுத்தினார். ஆகிலும் சபையில் உள்ள அனைவரையும் அப்போஸ்தலராகவும், தீர்க்கதரிசிகளாகவும், போதகர்களாகவும்
ஏற்படுத்தவில்லை.

தேவனானவர் சபையில் அற்புதங்களையும், குணமாக்கும் வரங்களையும் ஏற்படுத்தினார். ஆகிலும் சபையில் உள்ள அனைவரையும் 
அற்புதங்களைச் செய்கிறவர்களாகவும், குணமாக்கும் வரங்களையுடையவர்களாகவும் ஏற்படுத்தவில்லை.

*அப்படியே தேவனானவர் சபையிலே பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார். ஆகிலும் எல்லாரையும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களாக ஏற்படுத்தவில்லை.* 

இப்படியிருக்க, ஒரு சபையில் உள்ள எல்லாரும் அந்நியபாஷையில் பேசமுடியாது என்பதை நாம் அறியவேண்டும்.

*சபையில் அந்நியபாஷையில் பேசும் வரமுள்ளவர்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒரேநேரத்தில் அந்நியபாஷையில் பேச சொல்லுகிறவது வேதம்சார்ந்த செயல் அல்ல.* 

இரண்டுபேரை அல்லது மிஞ்சினால் மூன்றுபேரைமட்டும், அதுவும் ஒவ்வொருவராய், அதுவும் அர்த்தம் சொல்லுகிறவர் சபையில் இருந்தால் மட்டுமே சபையில் அந்நியபாஷையில் பேச அனுமதிக்கவேண்டும், அர்த்தஞ் சொல்லுகிறவரில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேச சபையாருக்கு ஊழியர்கள் அறிவுறுத்தவேண்டும்! (1கொரிந்.14:27,28)

தேவனுடைய இந்த ஒழுங்கை ஏற்றுக்கொள்ளுகிற சபையாரே, உண்மையில் பரிசுத்தஆவியைப் பெற்றவர்களாக இருக்கமுடியும்! (1கொரிந்.14:37)

ஆவியானவர் எல்லாருக்கும் அந்நியபாஷையில் பேசும் வரத்தைக் கொடுத்துவிடுவாரா?
எல்லாரும் அந்நியபாஷையில் பேசும்படி தேவன் அநுக்கிரகம்பண்ணின காலம் ஒன்று உண்டு. (அப்.2:4; 10:44,45; 19:6,7)

திருச்சபையின் ஆரம்பக்காலத்தில் அந்நியபாஷைகளைப்பேசித் தீர்கதரிசனஞ்சொல்லவைத்த
பரிசுத்தஆவியானவர் (அப்.19:6),
சபைக்கு பல வரங்களை பகிர்ந்துகொடுக்க ஆரம்பித்தப்பின்பு, தமது சித்தத்தின்படியே அவனவனுக்கு தான் விரும்பும் வரத்தை பகிர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கிறார். 
(1கொரிந். 12:8-11)

சபையாருக்காக வரங்களை வாஞ்சிக்கிற சத்தியத் தெளிவுள்ள ஊழியர்கள், சபையார் எல்லாரையும் அந்நியபாஷை வரத்தைக் கேட்கும்படி ஏவாமல்,
பவுலைப் போல: *"ஞானவரங்களையும் விரும்புங்கள். விஷேசமாய்த் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்"* என்று ஏவவேண்டும்!
(1கொரிந்.14:1)

அந்நியபாஷையை குறித்த பவுலின் ஆலோசனையை, அவருடைய சொந்தக்கருத்து என்று ஆவிக்குரிய சபைகள் என்று சொல்லிக்கொள்ளுகிற நாம் அசட்டைப்பண்ணுகிறோம்!

ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், *நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்* 
          1கொரிந்.14:37
என்று பவுல் சொல்லுகிறதை நாம் சிந்திக்கவேண்டும்!!

க. காட்சன் வின்சென்ட்
        8946050920


அந்நியபாஷை (ஓர் ஆய்வு)

1️⃣8️⃣ சபையார் அனைவரையும் அந்நியபாஷை வரத்தை கேட்கும்படி உற்சாகப்படுத்துகிற ஊழியக்காரர்கள், அந்நியபாஷையை வியாக்கியானம்பண்ணுகிற வரத்தைக் கேட்கும்படி ஏன் ஒருவரையும் உற்சாகப்படுத்துகிறதில்லை?

ஒரு பெந்தெகொஸ்தே சபையின் அங்கத்தினனாக, ஒரு முழுநேர போதகனாக, ஒருகாலத்தில் எங்கு பிரசங்கம்பண்ண சென்றாலும் "எல்லாம் அந்நியபாஷை பேசவேண்டும்" என்று போதித்தவனாக, இன்றும் அந்நியபாஷையில் பேசும் வரம்பெற்ற ஊழியனாக, இந்தக் கேள்விக்கு சுத்த மனச்சாட்சியுடன் பதில்தர விரும்புகிறேன்.

அந்நியபாஷையில் பேசும் வரத்தைக் கேட்கும்படி சபையார் அனைவரையும் நாம் ஏன் உற்சாகப்படுத்தகிறோம்?
நம்மை வழிநடத்தின ஊழியர்கள் என்ன செய்தார்களோ, அதை சரியா தவறா என்று ஆராயாமல் அப்படியே நாமும் செய்கிறோம்.

அந்நியபாஷையில் பேசுகிறதுதான் பரிசுத்தஆவியானவரை பெற்றிருப்பதற்கான அடையாளம் என்று நாம் நம்புகிறோம்.

சபையார் பக்திவிருத்தியடைகிறதற்கு அந்நியபாஷையில் பேசுகிறதுதான் ஒரேவழி என்று நாம் நினைக்கிறோம்.

அந்நியபாஷையில் பேசுகிறவர்களில் ஆவியானவர் மிகவும் பிரியப்படுவார் என்று நாம் கற்பனைசெய்துகொண்டிருக்கிறோம்.

சபையில் உள்ள எல்லாரும் அந்நியபாஷையில் பேசும் வரத்தைக் கேட்டாலும், தமக்கு சித்தமானவர்களுக்கு மட்டுமே ஆவியானவர் அந்த வரத்தை அளிப்பார் என்பதை நாம் அறியாதிருக்கிறோம். (1கொரி.12:9,10)

சபையில் உள்ள எல்லாருக்கும் அந்நியபாஷையில் பேசும் வரத்தை ஆவியானவர் கொடாதபட்சத்தில், எல்லாரும் அந்நியபாஷையில் பேசமுடியாது என்பதை நாம் அறியாதிருக்கிறோம். (1கொரி.12:28-30)

நாம் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் (அந்நியபாஷைகளை) பேசினாலும், அன்பு நமக்கிராவிட்டால், நாம் சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் (பயனற்றவர்களாக) இருப்போம் என்பதை உணராதிருக்கிறோம். (1கொரிந்.13:1)

அந்நியபாஷையில் பேசுகிற வரத்திலும் தீர்க்கதரிசனம் உரைக்கும் வரமே விசேஷமானது என்பதை நாம் அறியாதிருக்கிறோம். (1கொரி.14:1)

விசுவாசிகள் அனைவரும் அந்நியபாஷையில் பேசுகிறதிலும், அனைவரும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறதே சபைக்கு பிரயோஜனமுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளாதிருக்கிறோம். (1கொரி.14:4-6)

"அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்" (1கொரி.14:28) என்று
பவுல் மூலமாக தேவன் நமக்கு கொடுத்துள்ள கற்பனையை (1கொரிந்.14:37) நாம் மதிக்க மனதில்லாதிருக்கிறோம்.

"எல்லாரும் அந்நியபாஷையில் பேசுங்கள்" என்று ஆதிசபை ஊழியர் எவரும் சபையாரை உற்சாகப்படுத்தியதில்லை என்று அறிந்திருந்தும், நாம் பழக்கதோஷத்தில் அப்படி தொடர்ந்து செய்கிறோம்.

"எல்லாரும் அந்நியபாஷையில் பேசுங்கள்" என்று இத்தனைக் காலம் சபையாரை பழக்கப்படுத்திவிட்டு, திடீரென்று அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொண்டால், நாம் பின்மாற்றம் அடைந்துவிட்டதாக சபையார் நினைத்துவிடுவார்கள் என்று அச்சப்படுகிறோம்.

மேற்காணும் காரணங்களினாலேயே எல்லாரும் அந்நியபாஷை வரத்தைக் கேட்கவும், அந்நியபாஷையில் பேசவும் நாம் சபையாரை உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

வியாக்கியானம்பண்ணும் வரத்தைக் கேட்கும்படி நாம் ஏன் ஒருவரையும் உற்சாகப்படுத்துகிறதில்லை?
அந்நியபாஷை வரத்தை அனைவருக்கும் கொடுக்கும் ஆவியானவர், வியாக்கியானம்பண்ணும் வரத்தை அனைவருக்கும் கொடுப்பார் என்று நாம் விசுவாசிக்கிறதில்லை. 

சபையில் பற்பல பாஷைகளைப் பேசுகிறதற்கு சமமான இடம் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுகிறதற்கும் உண்டு என்பதை நாம் அறியாமலிருக்கிறோம். (1கொரிந். 12:10,30)

வியாக்கியானம்பண்ணும் வரம்முள்ளவர்கள் இருந்தால் சபையில் பலர் பேசுகிறது அந்நியபாஷையே இல்லை என்று தெரிந்துவிடும் என்று நாம் அஞ்சுகிறோம்.

வியாக்கியானம்பண்ணும் வரம் உள்ளவர்கள் சபையில் பேசப்படும் அந்நியாஷையின் அர்த்தத்தை சபையில் சொல்லும்போது, சிலருடைய அந்தரங்கக் காரியங்கள் வெளியே தெரியவந்து சபையில் குழப்பம் ஏற்படும் என்று நாம் பயப்படுகிறோம்.

அந்நியபாஷையில் பேசுகிறவர் ஆவியினாலே தேவனோடு இரகசியங்களைப் பேசுகிறபடியால் (1கொரிந்.14:2), தேவனிடத்தில் தன் இரகசியப் பாவங்களைக் குறித்துப் பேசுகிறார் என்றும், அதை வியாக்கியாணம்பண்ணுகிறவர் சபையில் வெளிப்படுத்திவிட்டால் சங்கடமாகிவிடும் என்றும் அச்சப்பட்டுகிறோமா?

பல ஆண்டுகள் அந்நியபாஷையில் பேசி, பக்திவிருத்தயடைந்திருக்கிற ஒருவர், எப்படி இரகசியப் பாவங்களில் ஜீவிக்கமுடியும்?

அந்நியபாஷையில் நாம் தேவனுடைய மகத்துவங்களைப் பேசுகிறோம் (அப்.2:4,11), தேவனைப் புகழுகிறறோம்
(அப்.10:45), ஜெபிக்கிறோம் (1கொரிந்.14:14-16), ஸ்தோத்திரம்பண்ணுகிறோம் 1கொரிந்.14:17) என்பதை நாம் அறிந்திருந்தோமானால், அந்நியபாஷையை வியாக்கியானம்பண்ணும் வரத்தைக் கேட்கவும் சபையாரை நாம் உற்சாகப்படுத்துவோம்!

இப்படியிருக்க, சபையில் உள்ள அனைவரையும் அந்நியபாஷை வரத்தைக் கேட்கும்படி உற்சாகப்படுத்துகிற நாம், சிலரையாவது வியாக்கியானம்பண்ணும் வரத்தை கேட்கும்படி உற்சாகப்படுத்துவதுதான் நியாயம்!

சபையில் அந்நியபாஷையில் பேசும் வரம் பெற்றவர்கள் சிலர் இருப்பதுபோலவே, வியாக்கியானம்பண்ணும் வரம் பெற்ற சிலரும் இருக்கவேண்டியது அவசியம்!!

க. காட்சன் வின்சென்ட்
         8946050920




அந்நியபாஷை (ஓர் ஆய்வு)

1️⃣9️⃣ வியாக்கியாணம்பண்ணும் வரத்தைக் கேட்டாலும் ஆவியானவர் சபையில் உள்ள ஒருவருக்கும் கொடுப்பதில்லையே?

"அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாமல் ஏன் சபையில் அந்நியபாஷையில் பேசுகிறீர்கள்?" என்று கேட்கிறவர்களை, "அர்த்தம் சொல்லுகிற வரம் உள்ளவர் இருந்தால் அர்த்தம் சொல்லமாட்டோமா? ஒருவரும் இல்லாததால் தானே அர்த்தம் சொல்லாமல் அந்நியபாஷையில் பேசுகிறோம். எல்லாருக்கும் அந்நியபாஷை வரம் தருகிற ஆவியானவர், ஒருவருக்கும் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுகிற வரத்தை தரமாட்டேன் என்கிறாரே!?" என்று சமாளிப்பதை நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்!

*அந்நியபாஷையில் பேசும் வரத்தை சபையில் உள்ள அனைவருக்கும் கொடுக்கிற ஆவியானவர், வியாக்கியானம்பண்ணும் வரத்தை ஒருவருக்கும் கொடுப்பதில்லை என்று சொல்லுகிறது ஏற்கத்தக்கதல்ல.* 

சபைக்கு அந்நியபாஷை வரத்தை கொடுக்கிற ஆவியானவர், நிச்சயம் வியாக்கியானம்பண்ணும் வரத்தையும் கொடுக்கிறார். (1கொரி.12:10)

வியாக்கியானம்பண்ணுகிறவன் இல்லாவிட்டால் சபையில் அந்நியபாஷையில் பேசவேண்டாம் என்று பவுல் சொல்லுகிறதிலிருந்து (1கொரி.14:27,28), சபையில் அந்நியபாஷைகளை வியாக்கியானம்பண்ணும் வரத்தை உடைய சிலர் இருப்பார்கள் என்பது விளங்குகிறதல்லவா?

ஒருவேளை ஒரு சபையில் அந்நியபாஷைகளை வியாக்கியானம்பண்ணும் வரத்தை உடையவர் இல்லாதபட்சத்தில், அவர்கள் சபையில் அந்நியபாஷைகளில் பேசாமல் தனிமையில் பேசிக்கொள்ளவேண்டும் என்பதே தேவ ஆலோசனையாகும். (1கொரி.14:27,28,37)

அந்நியபாஷையில் பேசும் நூறு சபைகளில் ஒன்றிரண்டு சபைகளில் பாஷைகளை வியாக்கியானம்பண்ணும் வரத்தை ஆவியானவர் ஒருவருக்கும் கொடுக்காமற்போகலாம், இன்று அந்நியபாஷையில் பேசும் நூறு சபைகளில் ஒரு சபையில்கூட பாஷைகளை வியாக்கியானம்பண்ணும் வரத்தை உடையவர் ஒருவரும் இல்லையே?

*பாஷைகளை வியாக்கியானம்பண்ணும் வரத்தை ஒருவருக்கும் கொடுக்காத ஆவியானவர் அந்நியபாஷையில் பேசும் வரத்தைமட்டும் அனைவருக்கும் எப்படி கொடுத்துவிடுகிறார்?* 

சபையில் ஆவியானவர் வேறு வரத்தைக் கொடுக்கிறாரோ இல்லையோ, அந்நியபாஷையில் பேசும் வரத்தைமட்டும் அனைவருக்கும் கொடுத்துவிடுகிறார் என்போமானால், *"இவைகளையெல்லாம் அந்த ஒரே அவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்"* என்று வேதம் சொல்லுகிறது பொய்யாகுமா?
(1கொரிந்.12:11)

வியாக்கியானம்பண்ணும் வரமுள்ளவர் சபையில் ஒருவரும் இல்லை என்கிறவர்கள், ஏன் சபையில் அந்நியபாஷைகளில் பேசவேண்டும்?

"அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், *சபையிலே பேசாமல்,* தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்" என்கிற கட்டளையை கடைபிடிக்கலாமே! (1கொரிந்14:28)
 
 "..... வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், *வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது"* என்கிறது வேதம் (1கொரிந்.12:10)

பாஷைகளை வியாக்கியானம்பண்ணும் வரத்தை சபையில் உள்ள சிலருக்கு அளிக்க தேவன் விரும்பவேசெய்கிறார். 

*நமக்கோ அந்நியபாஷைகளை பேசுகிறதில் உள்ள ஆர்வம், பாஷைகளை வியாக்கியானம்பண்ணுகிறதில் இல்லை.* 

எல்லாரும் அந்நியபாஷை வரத்தைக் கேட்க உற்சாகப்படுத்துகிற நாம், பாஷைகளை வியாக்கியானம்பண்ணும் வரத்தை கேட்க ஒருவரையும் உற்சாகப்படுத்துகிறதில்லை.

எல்லாரும் அந்நியபாஷைகளில் பேசும் வரத்தைக்கேட்க ஏவுகிற நாம், பாஷைகளை வியாக்கியானம்பண்ணும் வரத்தைகேட்க ஒருவரையும் ஏவுகிறதில்லை.

எல்லருக்கும் தேவன் அந்நியபாஷை வரத்தைக் கொடுப்பார் என்று விசுவாசிக்கிற நாம், ஒருவருக்காவது பாஷைகளை வியாக்கியானம்பண்ணும் வரத்தை கொடுப்பார் என்று விசுவாசிக்கிறதில்லை!

*"தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்"* என்று சொல்லுகிற கர்த்தர் (ஏசாயா 44:3), ஒரு சபையார் தாகத்தோடு வியாக்கியானம்பண்ணும் வரத்தைக் 
கேட்கும்போது, ஆவியானவர் தமக்கு சித்தமான சிலருக்காகிலும் அந்த வரத்தை கொடாமல் இருப்பாரா?

அந்நியபாஷைகளைப் பேசுகிற வரத்தைக் கேட்கிறதில் இருக்கிற ஆர்வம், பாஷைகளை வியாக்கியானம்பண்ணுகிற வரத்தைக் கேட்கிறதிலும் நமக்கு இருக்கவேண்டும்!

*உண்மையாகவே வியாக்கியான வரத்தைக் கேட்டும் ஆவியானவர் தரவில்லையென்றால், அதுகுறித்து கவலைப்படவேண்டியதில்லை. ஆனால், வியாக்கியானம்பண்ணுகிற ஒருவரும் இல்லாத சபைகளில், ஒருவரும் சபையில் அந்நியபாஷையில் பேசாமால், தங்களுக்கும் தேவனுக்கும் தெரியும் வகையில் பேசிக்கொள்வதுதான் வேத ஒழுங்காகும்!* 

"யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது *இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில* அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், *ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.* 
அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், *சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.* 
ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், *நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்.* ஒருவன் அறியாதவனாயிருந்தால், *அவன் அறியாதவனாயிருக்கட்டும்".* (1கொரிந்.14:27,28,37,38)
                 - அப். பவுல்

க. காட்சன் வின்சென்ட்
          8946050920


அந்நியபாஷை (ஓர் ஆய்வு)

2️⃣0️⃣ பலர் அந்நியபாஷையில் பேசிவிட்டு, அதின் அர்த்தமாக வேதத்திலுள்ள ஆசீர்வாதமான வசனங்களையே சொல்லுகிறார்களே? இதற்கு பெயர் அந்நியபாஷை வியாக்கியானமா?

பாஷைகளை வியாக்கியானம்பண்ணுகிற வரம் இன்றும் இருக்கிறதையும், சரியாக வியாக்கியானம்பண்ணும் வரம் பெற்ற சிலர் இன்றும் இருக்கிறதையும் எவரும் மறுக்கமுடியாது! (1கொரி.12:10; 14:27)

ஆகிலும் அந்நியபாஷையில் பேசும் சிலர், தாங்கள் பேசும் அந்நியபாஷையை வியாக்கியானம்பண்ணும் விதம், அவர்கள் உண்மையிலேயே உள்ளபடியே வியாக்கியானம்பண்ணுகிறார்களா? அவர்கள் பேசுகிறது உண்மையில் அந்நியபாஷைதானா? என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.

*"வியாக்கியானம் செய்யும் வரமே இல்லாதவர்களும், தாங்கள் நினைத்தபடியெல்லாம் மனம் போனபடி சொல்லிவிட்டு, தாங்கள் வியாக்கியானம் செய்வதாக பொய் சொல்கிறார்கள். அவர்கள் அந்நியபாஷை பேசும் வரம் உள்ளவர்களாதலால் அவர்கள் வியாக்கியானம் செய்வது உண்மையாகவே இருக்கும் என போதகர்களும் நம்புகிறார்கள்"* என்று ஒரு நண்பர் சொல்லுகிறார்.

சிலர் ஒரு வரியில் அந்நியபாஷையில் பேசிவிட்டு, நான்கு ஐந்து வரிகளில் அர்த்தம் சொல்லுகிறார்கள்!

*அவர்கள் பேசுகிறது அந்நியபாஷைதானா என்கிற சந்தேகத்தை இது உண்டுபண்ணுகிறது.* 

சிலர் அந்நியபாஷையை பேசிவிட்டு, வேதத்திலுள்ள சில வசனங்களை அர்த்தமாக சொல்லுகிறார்கள்.?

*அந்நியபாஷை பேசிவிட்டு:* 

பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்.

உன்னை ஆசர்வதித்து உன் பேரை பெருமைப்படுதுவேன்.

உன் வலது கரத்தை பிடித்துக்கொண்டு உனக்கு துணைநிற்கிறேன்.

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் பார்க்கமாட்டீர்களன, உங்கள் வாய்க்கால்கள் நிரப்பப்படும்.

என் கிருபை உனக்கு போதும்.

என்று சில வசனங்களை வியாக்கியானமாக சொல்லுகிறார்கள்!

இதுவும் அவர்கள் பேசுகிறது அந்நியபாஷைதானா என்கிற சந்தேகத்தை உண்டாக்குகிறது.

அந்நியபாஷைகளில் பேசிவிட்டு வசனங்களை சொல்லுகிறதற்கு பதிலாக, வசனங்களையே நேரடியாகச் சொல்லிவிட்டுப்போகலாமே!

தங்களுக்கு வியாக்கியானம்பண்ணும் வரம் மட்டும் உண்டு என்று சொல்லுகிறவர்களும் தவறுதலாக வியாக்கியானம்பண்ணுகிறதைக் காணமுடிகிறது.

தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற ஊழியர்களில் ஒருவர் அடியேனுக்கு அனுப்பிய ஒரு செய்தியை அப்படியே உங்களுடன் கீழே பகிர்கிறேன்.

*"(சென்னை) பட்டாபிராமில் ஒரு தம்பி பேசிய அந்நியபாஷையை பதிவுச்செய்து வியாக்கியானம் செய்யும் வரம் உள்ளதாக சொல்லிக்கொண்ட இரண்டு நபர்கள் மற்றும் ஒரு சகோதரியிடம் தனித்தனியாக கொடுத்து வியாக்கியானம் செய்து தரும்படி கேட்டு, தனித்தனியாக பதிவுச்செய்தேன். என்ன ஆச்சர்யம், இந்த மூவரும் செய்திருந்த வியாக்கியானம் கொஞ்சம்கூட ஒத்துப்போகவில்லை! ஆகமொத்தம் எல்லோரும் பொய் பேசியதை கண்டுபிடித்தேன். அதற்கு பிறகே எனக்கு முழு தெளிவு வந்தது".*

வியாக்கியான வரம் தற்பொழுது சபைகளில் ஆவியானவரால் அருளப்படுகிறதில்லை என்கிற முடிவுக்கு ஒரு பிரபல ஊழியர் வருவதற்கு, ஒருவர் பேசின அந்நியபாஷையை ஆளுக்கு ஒருவிதமாக வியாக்கியானம்பண்ணினவர்களே!

அந்நியபாஷை வரம் இன்றும் இருக்கிறதென்று சில திருச்சபைப் பிரிவுகள் நம்பமுடியாததற்குக் காரணம், வேத ஒழுங்கை பின்பற்றிப் பேசாத அந்நியபாஷை வரம் பெற்றவர்களே!

இப்படி மற்றவர்களை வரங்களைக் குறித்த நம்பிக்கையற்றவர்களாக்குகிறவர்கள், நிச்சயம் கர்த்தருக்கு கணக்கு சொல்லியாகவேண்டும்!

ஒருவர் அந்நியபாஷையை சரியாய் வியாக்கியானம்பண்ணுகிறார் என்பதை எப்படி அறிந்துகொள்ளலாம்?

அவருடைய வியாக்கியானம் தேவனுடைய மகத்துவங்களைப் பேசுகிறதாக இருக்கும். (அப்.2:11)

அவருடைய வியாக்கியானம் தேவனைப் புகழுகிறதாக இருக்கும். (அப்.10:45)

அவருடைய வியாக்கியானம் கேட்கிறவர்களுக்கு பக்திவிருத்தியை உண்டாக்குகிறதாக இருக்கும். (1கொரி.14:12,13,16,17)

அவருடைய வியாக்கியானம் விண்ணப்பம்பண்ணுகிறதாக இருக்கும். (1கொரி.14:14,15)

அவருடைய வியாக்கியானம் ஸ்தோத்திரம்பண்ணுகிறதாக இருக்கும். (1கொரி.14;16,17)

மேற்காணும் காரியங்கள் காணப்படாமல், பூமிக்குரிய ஆசீர்வாதங்களை, மேன்மையை, பாதுகாப்பை, சுகத்தை மட்டும் வாக்குப்பண்ணுகிறதாக இருக்குமானால், அந்த வியாக்கியானிகளிடம் கவனமாக இருக்கவேண்டும்!!

க. காட்சன் வின்சென்ட்
          8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.