அந்நியபாஷை (ஓர் ஆய்வு)
2️⃣1️⃣ எல்லாரும் அந்நியபாஷையில் பேசக் கட்டாயப்படுத்தினால், அந்நிபாஷையில் பேசும் வரம் இல்லாதவர்கள் கட்டாயத்திற்கு ஏதோ வாய்க்கு வந்தபடியெல்லாம் உளருவார்கள் அல்லவா?
அந்நியபாஷையில் பேசுகிறவர்கள் மட்டுமே பரிசுத்தஆவியைப் பெற்றிருக்கிறார்கள் என்று மக்களுக்கு போதித்துவிட்டோம்!
அந்நியபாஷையில் பேசாதவர்கள் கனிகள் நிறைந்தவர்களாகவும், வேறு சில வரங்களைப் பெற்றவர்களாகவும் இருந்தாலும் அவர்களுக்குள் ஆவியானவர் இல்லை என்று மறுத்துவிடுகிறோம்!
இதனால் தாங்களும் ஆவியைப்பெற்றவர்கள் என்று நம்மிடத்தில்
சான்றுபெறும் நெருக்கடிக்கு அவர்கள் உள்ளாகிறார்கள்!
மேலும், அந்நியபாஷையில் பேசுகிற சகவிசுவாசிகளால் ஆவியற்றவர்களாய் பார்க்கப்படும் அவமானத்திற்கும் அவர்கள் உள்ளாகிறார்கள்.
*தங்களை ஊழியரும் சகவிசுவாசிகளும் ஆவிக்குரியவர்களாக அங்கீகரிக்கும்படிக்கு அவர்கள் தங்களுக்கு அந்நியபாஷையில் பேசும் வரம் இல்லாவிட்டாலும், ஏதாவது ஒன்றைப் பேசி தங்களை அபிஷேகம் பெற்றவர்களாகக் காண்பித்துக்கொள்ளவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள்!*
இதனால் பலநாட்கள், பலர் அந்நியபாஷையில் பேசியதை திரும்பத்திரும்பக் கேட்டு, தங்கள் மனதில் பதிந்துவிட்ட சில வார்த்தைகளை இவர்கள் பேசமுயற்சித்து, அந்த வார்த்தைகளை ஆராதனைவேளைகளில் திரும்பத்திரும்பப் பேசுகிறார்கள்.
பலர் பேசியத்தைக் கேட்டு, அதில் சில வார்த்தைகளை அந்நியபாஷைகள் என்கிற பெயரில் பேசுகிறோம் என்பது இவர்களுக்கே தெரியாது. தாங்கள் உண்மையாகவே அந்நியபாஷைதான் பேசுகிறோம் என்று இவர்கள் நம்புவார்கள்.
*ஏற்கனவே பரிசுத்தஆவியைப் பெற்று, ஆவியின் கனிகளைக் கொடுப்பதோடு, ஆவியின் வேறு வரத்தையும் பெற்றிருக்கிற பலரை, அந்நியபாஷைப் பேசினப்பின்புதான் தாங்கள் ஆவியைப் பெற்றுக்கொண்டதாக நம்பும் அறியாமையில் அவர்களைத் தள்ளுவது அநியாயம்!*
இதற்கு பதிலாக, அந்நியபாஷையில் பேசும் வரம் உள்ளவர்களை மட்டும் அந்நியபாஷையில் பேசும்படி கேட்டுக்கொள்ளலாம். அதிலும் இரண்டு அல்லது மூன்றுபேரை மட்டும், அதிலும் ஒருவர்பின் ஒருவராக, அதுவும் வியாக்கியானம் பண்ணும் வரம் உள்ளவர் இருந்தால் மட்டும் சபையில் அந்நியபாஷையில் பேச அனுமதிக்கலாம்.
(1கொரி.14;27,28)
*அந்நியபாஷை வரத்தைக்குறித்து போதிக்கிறவர்கள், தாங்கள் தவறாக போதிக்கப்பட்டபடியே மற்றவர்களை நடத்துகிறதைத் தவிர்த்து, சத்தியத்தின்படியான அறிவை அடைந்து, அப்படியே மற்றவர்களை நடத்தவேண்டியது அவசியம்!*
பரிசுத்த ஆவியைப்பெறாதவர்களுக்கு ஆவியின் அபிஷேகத்தை குறித்து போதிக்கிறதும், ஆவியின் நிறைவுக்குள் அவர்களை நடத்துகிறதும் அவசியம்.
பரிசுத்தஆவியைப் பெற்று, ஆவியின் கனிகளைக் கொடுப்பதோடு, ஆவியின் அநுக்கிரகமான வேறு வரத்தைப் பெற்றிருக்கிறவர்களை, அவர்கள் அந்நியபாஷையில் பேசவில்லை என்பதனால், அவர்கள் பரிசுத்தஆவியைப் பெறவில்லை என்று அவர்களுக்கு போதிக்கிறதோடு, அந்நியபாஷை வரத்தை பெறுவதற்கு ஆவியானவரின் சித்தம் இல்லாத அவர்களையும், அந்நியபாஷையில் பேசுவதுதான் தாங்கள் ஆவியைப்பெற்றதற்கான அடையாளம் என்று நம்பவைத்து, தாங்கள் ஆவியைப் பெற்றவர்கள் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிக்க, கட்டாயமாக எதையோ பேசும்படி அவர்களை நிர்பந்திக்கிறவர்கள், தங்கள் அறியாமையை விட்டுவிடவேண்டும்!
*அந்நியபாஷையையை குறித்த அறியாமைக்குப் பின்னால் நிச்சயம் ஆவியானவர் இருக்கமாட்டார்!*
க. காட்சன் வின்சென்ட்
8946050920
அந்நியபாஷை (ஓர் ஆய்வு)
2️⃣2️⃣ சபையாரெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறதைவிட தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறதாக பவுல் சொல்லியிருக்க, இன்று அந்நியபாஷையில் எல்லாரும் பேசவேண்டும் என்று அநேக ஊழியர்கள் விரும்புகிறதும், ஒருவரும் தீர்க்கதரிசனம் சொல்ல விரும்பாதிருக்கிறதும் சரியா?
"நான் மாம்சமான யாவர் மேலும் *என் ஆவியை ஊற்றுவேன்,* அப்பொழுது *உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்,* உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்" என்று வாக்குப்பண்ணியிருந்தார் தேவன். (யோவேல் 2:28)
பிதாவின் இந்த வாக்குத்தத்தத்தின் அடிப்படையில்தான், *"நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்"* என்று இயேசு தமது சீஷர்களுக்கு வாக்குப்பண்ணினார். (யோவான் 14:16)
சீஷர்கள் எருசலேமை விட்டுப் போகாமல், தம்மிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் இந்த வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருக்கக் கட்டளையிட்டார் ஆண்டவர். (அப்.1:5)
*பெந்தெகொஸ்தே என்னும் நாளில் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்த சீஷர்களை தமது பரிசுத்தஆவியினாலே நிரப்பி, ஆவியின் வரத்தையும் அளித்து, அவர்களை வெவ்வேறு பாஷைகளில் பேசவைத்தார் கர்த்தர்.* (அப்.2:1-4)
இந்த நிகழ்வு,
"கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்" என்று தேவன் பண்ணியிருந்த வாக்குத்தத்தத்தின்படி நடப்பதாக யூதர்களுக்கு சாட்சியிட்டார் பேதுரு. (அப்.2:13-21)
*பெந்தெகொஸ்தேநாளில் ஆவியைப்பெற்றவர்களில் ஒருவரும் தீர்க்கதரிசனம் உரைக்காமல் அனைவரும் அந்நியபாஷைகளில் பேசினதினாலே, அந்நியபாஷையில் பேசும் வரமே அவசியமானது என்று நினைக்கிற பலர் உண்டு.*
பல தேசங்களிலிருந்து எருசலேம் பண்டிகைக்கு வந்திருந்த யூதர்களின் விசுவாச்தைத் தூண்டுகிறதற்காக, அவரவர் பாஷைகளில் தம்முடையவர்கள் பேசும் அற்புதத்தை நிகழ்த்தினார் தேவன்!
பெந்தெகொஸ்தேநாளில் அந்நியபாஷைகளில் பேசினவர்கள், பலதேசங்களிலிருந்து வந்தவர்களுக்கு புரியும் விதத்தில் பேசினதுபோல, இன்று அந்நியபாஷைகளில் பேசுவார்களானால் மகிழ்ச்சியடையலாம்! (அப்.2:4-12)
*எபேசுவில் பவுலால் பரிசுத்தஆவியின் நிறைவுக்குள் நடத்தப்பட்டவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்கதரிசனம் சொன்னார்கள்.* (அப்.19:1-6)
அந்நியபாஷையில் பேசுகிறது ஆரம்பநிலை, தீர்க்கதரிசனம் உரைப்பது அடுத்தநிலை.
உத்தரவாதமுள்ள ஊழியர்கள்,
தேவனுடைய ஜனங்களை ஆவிக்குரிய வரங்களின் ஆரம்பநிலையிலிருந்து அடுத்தநிலைக்கு கொண்டுசெல்லவேண்டும்!
அன்பை நாடுங்கள். ஞானவரங்களையும் விரும்புங்கள். *விஷேசமாய்த் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்.*
1கொரிந்.14:1
அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான். *தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.*
1கொரிந்.14:4
நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன். ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன். *ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.*
1கொரிந்.14:5
மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, *தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது,* போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், *அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஐனம் என்ன?*
1கொரிந்.14:6
என்று அந்நியபாஷையில் ஆர்வம் மிகுந்தவர்களாய் இருந்த கொரிந்து சபையாரை, தீர்க்கதரிசம் சொல்லுகிறதான அடுத்த கட்டத்திற்கு பவுல் நடத்துகிறதை கவனியுங்கள்.
ஆவிக்குரிய வரங்களைக்குறித்த அறிவில் முதிர்ச்சியடைந்தவர்கள், *"நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்"* என்றே சபைக்கு போதிப்பார்கள்.
(1கொரிந்.14:12)
ஆவியின் வரங்களைக்குறித்தத் தெளிவற்றக் குழந்தைகள், தேவனுடைய சபையை மழலையர் பள்ளிகளாகவே வைத்திருக்க விரும்புவார்கள்!
*நான் குழந்தையாயிருந்தபோது* குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன். *நான் புருஷனானபோதோ* குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்
1கொரிந்.13:11
என்று பவுல் சொல்லுகிறதை ஆவிக்குரியக் குழந்தைகள் கவனிக்கவேண்டும்!!
ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், *நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று* அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்
1கொரிந்.14:37
என்று பவுல் சொல்லுகிறதையும் பாருங்கள்.
அப்படியானால், *"நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்.* ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன். *ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்"* என்று அவர் எழுதுகிறது கர்த்தருடைய கற்பனைதானே?
(1கொரிந்.14:5)
தேவனுடைய ஆவியைப் பெற்றவர்கள், தேவனுக்கு செவிகொடுக்கிறவர்களாய் இருக்கவேண்டியது அவசியம்!
*தேவனுடைய கற்பனைகளை மதிக்கிற ஊழியர்கள்: அந்நியபாஷையில் பேசுகிறதற்கு சபையாரை உற்சாகப்படுத்துகிறதிலும், தீர்க்கதரிசனம் சொல்லவே அதிகம் உற்சாகப்படுத்தவேண்டும்.*
"எல்லாரும் அந்நியபாஷைகளில் பேசுங்கள்" என்று சபையாரை உற்சாகப்படுத்துகிறதும், தீர்க்கதரிசனம் சொல்ல ஒருவரையும் உற்சாகப்படுத்தாதிருக்கிறதும் தவறாகும்!!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
அந்நியபாஷை (ஓர் ஆய்வு)
2️⃣3️⃣ "அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே (அந்நியபாஷையில்) பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்" என்று வேதத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்க, "அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்" என்கிற ஒற்றை வசனத்தை வைத்துக்கொண்டு, அர்த்தம் சொல்கிறவர் இல்லாவிட்டாலும், "எல்லோரும் சபையில் அந்நியபாஷையில் பேசுங்கள்" என்று பல ஊழியக்காரர்கள் விசுவாசிகளை நிர்ப்பந்திக்கிறது சரியா?
"இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், *அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்"* என்று சொல்லுகிற பவுல் (1கொரிந்.14:39):
*"சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது"* என்று சொல்லுகிறதையும் திருச்சபையை நடத்தும் கனத்திற்குரிய ஊழியர்கள் கவனிக்கவேண்டும். ((1கொரிந்.14:40)
நாம் உண்மையிலேயே சத்தியத்தை நேசிக்கிறவர்களும் மதிக்கிறவர்களுமானால், மேற்காணும் பவுலின் ஆலோசனைக்கு நாம் செவிகொடுக்கவேண்டியது அவசியம்.
ஏனெனில், *"ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்"* என்று சொல்லுகிறார் பவுல். (1கொரிந்.14:37)
மெய்யாகவே தீர்க்கதரிசியாகவோ அல்லது பரிசுத்தஆவியைப் பெற்றவராகவோ இருக்கிற ஒருவர்: சபையாரை முதலாவது தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடும்படி உற்சாகப்படுத்துவதோடு, அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருப்பார்.
அதேவேளையில்,
சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படவேண்டும் என்பதில் அவர் கவனமாக இருப்பார். (1கொரிந்.14:40)
*அதாவது, ஆவிக்குரிய வரங்களை நாடுகிற திருச்சபையாரை, சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுவதற்கு வழிநடத்துவார்.*
(1கொரிந்.14:12)
அந்நியபாஷையில் பேசுகிறவர்கள் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ண ஆலோசனை வழங்குவார்.
(1கொரிந்.14:13)
அந்நியபாஷையில் பேசும் வரம் பெற்றவர்களில் இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில், ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவர் அர்த்தத்தைச் சொல்லவும் அனுமதிப்பார்.
(1கொரிந்.14:27)
அர்த்தஞ் சொல்லுகிறவர் இல்லாவிட்டால், சபையிலே (அந்நியபாஷையில்) பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேச புத்திசொல்லுவார்.
(1கொரிந்.14:28)
தீர்க்கதரிசிகளிலும் இரண்டு அல்லது மூன்றுபேரை மட்டும் தீர்க்கதரிசனம் சொல்ல அனுமதித்து, மற்றவர்களை நிதானிக்க விட்டுவிடுவார்.
(1கொரிந்.14:29)
தீர்க்கதரிசன வரம் பெற்ற மற்றொருவருக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்தி தீர்க்கதரிசனம் சொன்னவர் சொல்லாதிருக்கும்படி கேட்டுக்கொள்வார். (1கொரிந்.14:30)
எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்ல அனுமதிப்பார்.
(1கொரிந்.14:31)
*தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார் என்பதையும், பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது என்பதையும் அவர் பகுத்தறிந்திருக்கிறார்.* (1கொரிந்.14:33)
பகுத்தறிவில்லாத ஊழியர்கள் வரங்களைப் பயன்படுத்துகிறதைக்குறித்த வேத ஒழுங்குக்கு கட்டுப்படமாட்டார்கள். தாங்கள் செய்கிறது ஒழுங்கும் கிரமமும் அல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்தாலும்கூட, அவர்களால் ஒழுங்காகவும் கிரமமாகவும் வரங்களைப் பயன்படுத்தத் திருச்சபையாரை வழிநடத்தமுடியாது!!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
அந்நியபாஷை (ஓர் ஆய்வு)
2️⃣4️⃣ எருசலேமில் பெந்தெகொஸ்தேநாளில் எல்லாரும் அந்நியபாஷையில் பேசியிருக்க, இன்று சபையில் உள்ள எல்லாரும் அந்நியபாஷையில் பேசுகிறதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
நமக்கு என்ன லாபம் அல்லது நஷ்டம் என்று கணக்குப்பார்த்து போதிக்கிறதற்குப் பெயர் ஊழியம் அல்ல, ஆதாயத்தொழில்! (1தீமோத்.6:1-5)
தேவனுடைய லாபநஷ்டத்தை மனதில்வைத்து போதிக்கிறதே நாம் தேவனுக்குச் செய்யும் ஊழியமாக இருக்கமுடியும்!
எருசலேமில் பெந்தெகொஸ்தேநாளில் எல்லாரும் அந்நியபாஷையில் பேசினதுபோல இன்று சபையில் உள்ள எல்லாரும் அந்நியபாஷையில் பேசினால், அது தேவனுக்கு எவ்வளவு லாபம்! திருச்சபைக்கு எத்தனை ஆசீர்வாதம்!!
*பலதேசங்களிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்த யூதர்கள், தங்கள் தங்கள் பாஷைகளில் உள்ளூரிலிருக்கும் இயேசுவின் சீஷர்கள் பேசுகிறதைக் கேட்டு, பிரமித்து, அவர்கள் சொன்ன சுவிசேஷத்தை விசுவாசித்து அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்களே!* (அப்.2:1-41)
இன்று பல மாநிலங்களுக்கு, பல தேசங்களுக்கு பிழைக்கச் சென்று திரும்பிவந்து, நமது திருச்சபைக்கு அருகிலிருக்கும் எவராகிலும், தாங்கள் பிழைக்கச் சென்ற மாநிலங்களில், தேசங்களில் தாங்கள் கற்றுக்கொண்ட மொழிகளில் நம் திருச்சபையார் ஒருநாளாவது ஆவியில் நிறைந்துப் பேசியதாக இதுவரை சாட்சியிட்டதுண்டா?
பாணிப்பூரி விற்கவும், பாலம்வேலைசெய்யவும் வந்து; நமது சபைக்கு அருகில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர் எவராகிலும், நமது சபையார் ஒருநாளாவது, ஒரு வரியிலாவது தங்கள் மொழிகளில் பேசினதாகப் பிரமித்ததுண்டா?
மாறாக, நம்முடைய சபையாரெல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசும்போது, அர்த்தம் புரியாத கல்லாதவர்களும் அவிசுவாசிகளும் நம்மைப் பைத்தியம் பிடித்தவர்களென்கிறார்களே! (1கொரிந்.14:23)
*தேவனுடைய சபைக்கு "பைத்தியங்களின் கூடாரம்" என்று பெயரெடுத்துக்கொடுக்கவா தேவன் நமக்கு அந்நியபாஷையில் பேசும் வரத்தைக் கொடுத்திருக்கிறார்?*
பெந்தெகொஸ்தேநாளில் உள்ளூர் தவளைகள் அந்நியபாஷைகளில் பேசினவர்களை, *"இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்"* என்று பரியாசம்பண்ணினாலும் (அப்2:13), வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்து, அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணின தேவபக்தியுள்ள யூதர்கள் ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: *"இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே"* என்று பிரமித்தார்களே! (அப்.2:8)
பல நாடுகளுக்கு சென்று பல மொழிகளை அறிந்தவர்கள் நமக்கு பக்கத்தில் உள்ள சூழலில், அவர்கள் பிரமித்து ஆண்டவரை விசுவாசிக்கத்தக்கதாக, அவர்கள் அறிந்திருக்கிற அந்நியபாஷைகளில் பேசுகிறது தேவனுக்கு எத்தனை மகிமையாக இருக்கும்!
*அவ்விதமாய் தேவனுடைய சபையார் அந்நியபாஷையில் பேசுகிறதற்கு வேதம் எந்தத்தடையும் விதிக்கவில்லை.*
ஒருவருக்கும் புரியாதவகையில் சபையில் அந்நியபாஷைகளில் பேசுகிறதைத் தவிர்த்து, தனிமையில் பேசிக்கொள்ளவே வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது! (1கொரி.14:27,28)
*நாம் அந்நியபாஷையை அல்ல, தேவனுடைய வார்த்தையை கனப்படுத்தவே அழைக்கப்பட்டிருக்கிறோம். ஏனெனில், அந்நியபாஷை ஆண்டவரோ, பரிசுத்தஆவியானவரோ அல்ல!!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
அந்நியபாஷை (ஓர் ஆய்வு)
2️⃣5️⃣ பெந்தெகொஸ்தேநாளில் பரிசுத்தஆவியைப் பெற்றவர்கள், தனித்தனியாக பல பாஷைகளில் பேசினார்களா? அல்லது அவர்கள் ஒரே பாஷையில் பேசியது அங்கு கூடியிருந்த பலதேசத்து யூதர்களுக்கு அவரவர் மொழிகளில் கேட்டதா?
அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே *வெவ்வேறு பாஷைகளிலே* பேசத்தொடங்கினார்கள்
அப்.2:4
என்று இருக்கிறதை கவனியுங்கள்.
பெந்தெகொஸ்தேநாளில் பரிசுத்தஆவியைப் பெற்றவர்கள் ஒரே மொழியில் பேசவில்லை. அவர்கள் தனித்தனியாக பல பாஷைகளில் பேசியதாகவே வேதத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, *தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே* கலக்கமடைந்தார்கள்.
அப்2:6
எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து; இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
அப்.2:7
அப்படியிருக்க, *நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே,* இதெப்படி?
அப்.2:8
பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
அப்.2:9
பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும்,
அப்.2:10
கிரேத்தரும், அரபியருமாகிய *நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே* என்றார்கள்.
அப்.2:11
பரிசுத்தஆவியைப் பெற்றவர்கள், பல தேசங்களிலிருந்து எருசலேம் பண்டிகைக்காக வந்திருந்த யூதர்களின் சொந்தமொழிகளில் பேசி அவர்களுக்கு பிரமிப்பூட்டினார்கள்!
சீஷர்கள் அனைவரும் ஒரே மொழியில் பேசியதைக் கேட்டவர்கள், தங்கள் தங்கள் மொழிகளில் புரிந்துகொள்ளவில்லை.
அங்கு கூடியிருந்த அனைத்து தேசத்தவரின் மொழிகளிலும் ஆவியைப் பெற்றவர்கள் பேசினார்கள்!
*அவர்கள் ஒரே அந்நியமொழியில் பேசியதைக் கேட்டவர்கள், தங்கள் தங்கள் மொழிகளில் புரிந்துகொண்டார்கள் என்பது தவறான போதனையாகும்.*
இன்றும் ஆவியில் நிறைந்து ஒருவர் ஒரு அந்நியமொழியில் பேசுகிறதை கேட்கிற பலமொழிகளைப் பேசுகிறவர்கள், அதை தங்கள் தங்கள் மொழிகளில் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறது வேத அடிப்படையிலான நம்பிக்கையல்ல.
*பரிசுத்தஆவியைப் பெற்ற பலரோ அல்லது ஒருவரோ ஒரே மொழியில் பேசுகிறதை தங்கள் தங்கள் மொழிகளில் புரிந்துகொள்ளும் வரம் அவிசுவாசிகளுக்கு இல்லையே! விசுவாசிகளுக்கே அவ்விதமான வரம் இருப்பதாக வேதத்தில் காணப்படவில்லையே!!*
அந்நியபாஷையை வியாக்கியானம்பண்ணினால்தானே சபையில் உள்ளவர்களுக்கே விளங்குகிறது!
(1கொரி.14:13,27)
அந்நியபாஷையில் பேசுகிறதை அவரவர் பாஷையில் புரிந்துகொள்ளும் வரம் விசுவாசிகளுக்கு இருக்குமானால் வியாக்கியானம்பண்ணும் வரம் சபைக்கு அவசியமில்லாமல் போகுமே!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
Thanks for using my website. Post your comments on this