அந்நியபாஷை (ஓர் ஆய்வு)
2️⃣6️⃣ பெந்தெகொஸ்தேநாளில் அப்போஸ்தலர்கள் அந்நியபாஷையில் பேசினபோது, பல மொழிகளை பேசக்கூடிய பலதேசத்து யூதர்கள் தங்கள் தங்கள் மொழிகளில் கேட்டு, அவர்கள் தேவனுடைய மகத்துவத்தைப் பேசுகிறதை புரிந்து கொண்டார்கள்.
*ஒரே மொழியைப் பேசக்கூடிய சபையினர் முன்பாக புரியாத பாஷையில் பேசுவதால் என்ன பிரயோஜனம்?*
இந்தக் கேள்வியில் சில பிழைகள் இருக்கின்றன.
அப்போஸ்தலர்கள் மட்டுமல்ல, அனைவரும் அந்நியபாஷைகளில் பேசினார்கள்!
பெந்தெகொஸ்தேநாளில் அப்போஸ்தலர்கள் மட்டும் அந்நியபாஷையில் பேசவில்லை. அங்கு கூடியிருந்த அனைவரும் அந்நியபாஷைகளில் பேசினார்கள்.
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, *அவர்களெல்லாரும்* ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
அப்.2:1 *அவர்களெல்லாரும்* பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே *வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.*
அப்.2:4
மேற்காணும் வசனங்களில் காணப்படும் *'அவர்களெல்லாரும்'* என்கிற வார்த்தையை கவனியுங்கள்.
எவர்களெல்லாரும்?
*அவர்கள்* (சீஷர்கள்) அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள். அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.
அப்.1:13
அங்கே இவர்களெல்லாரும், *ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட* ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
அப்.1:14
*அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது,* அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று;
அப். 1:15
என்கிற மேற்காணும் வசனங்களை கவனியுங்கள்.
அப்போஸ்தலரும், ஸ்திரீகளும், இயேசுவின் தாயாகிய மரியாளும், அவருடைய சகோதரருமாக 120 பேர் அங்கே கூடியிருந்தார்கள்.
இவர்கள் அனைவரும் பரிசுத்தஆவியைப் பெற்று வெவ்வேறு பாஷைகளில் பேசினார்கள்.
அவர்கள் பேசினது அந்நியபாஷை அல்ல, அந்நியபாஷைகள்!
பெந்தெகொஸ்தேநாளன்று இயேசுவின் சீஷர்கள் அந்நியபாஷையில் அல்ல, அந்தியபாஷைகளில் பேசினார்கள்.
அதாவது, அவர்கள் அனைவரும் ஒரேமொழியில் பேசி, கேட்டவர்கள் தங்கள் தங்கள் மொழியில் புரிந்துகொள்ளவில்லை. எருசலேமில் கூடியிருந்த பலதேசத்து யூதர்களின் மொழிகளில் அவர்கள் பேசினார்கள்!
*"நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே,* இதெப்படி?" என்றும் (அப்.2:8),
*"நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள்* தேவனுடைய மகத்துவங்களைப் *பேசக்கேட்கிறோமே* என்றும் (அப் .2:11) அவர்கள் பேசக் கேட்டவர்கள் சாட்சியிட்டது கவனிக்கத்தக்கது.
*"அவர்களெல்லாரும்* பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே *வெவ்வேறு பாஷைகளிலே* பேசத்தொடங்கினார்கள்" என்று வேதம் தெளிவாக சொல்லுகிறதையும் கவனியுங்கள். (அப்.2:4)
இப்படியிருக்க, அப்போஸ்தலர் மட்டுமே பேசினார்கள், அவர்கள் ஒரேமொழியில் பேசினார்கள் என்கிற தவறான கருத்தை திருத்திக்கொள்ளவேண்டியது அவசியம்.
புரியாத மொழியால் சபைக்கு பிரயோஜனம் இல்லை!
ஒரேமொழியை பேசும் ஒரு சபையார், ஒருவருக்கும் புரியாதவகையில் சபையில் அந்நியபாஷைகளில் பேசுவதால் சபையாருக்கு பிரயோஜனம் இல்லை என்றே வேதம் கூறுகிறது.
"சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், *அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஐனம் என்ன?"* என்று பவுல் கேட்பதிலிருந்து, சபையாருக்கு விளங்காத அந்நியபாஷையில் அவர்களுக்கு முன்பாகப் பேசுகிறதினால், அவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை அறிந்துகொள்ளலாம். (1கொரிந்.14:6)
அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் *தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால்,* குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்?
1கொரிந்.14:7
அந்தப்படி *எக்காளமும் விளங்காத சத்தமிட்டால்* எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?
1கொரிந்.14:8
அதுபோல, *நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால்* பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? *ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.*
1கொரிந்.14:9
உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
1கொரிந்.14:10
*ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால்,* பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், *பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்*
1கொரிந்.14:11
என்று பவுல் சொல்லுகிறதை சற்று நிதானித்துப் பாருங்கள்.
புல்லாங்குழல், சுரமண்டலம் போன்ற வாத்தியங்களின்
வித்தியாசமில்லாத தொனிகள் மற்றும் எக்காளத்தின்
விளங்காத சத்தம்
இவைகளால் எப்படி பிரயோஜனம் இல்லையோ, அப்படியே சபையில் உள்ள மற்றவருக்கு புரியாதவகையில் ஒருவர் பேசும் அந்நியபாஷையினாலும் சபைக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்கிறார் பவுல்.
கேட்கிறவர்களுக்கு புரியாதவகையில் அந்நியபாஷையில் பேசுகிறவர்: தனக்கு எதிராக யுத்தம் செய்ய ஒருவரும் இல்லாமலேயே, வெறும் வாளை வீசிக்கொண்டிருக்கிற ஒரு யுத்தவீரனுக்கு ஒப்பாக இருப்பதாகச் சொல்லுகிறார் பவுல்.
*"நாங்கள் பேசுகிறது அசல் அந்நியபாஷைதான். உலகத்தில் எங்கோ ஓரிடத்தில் அந்த பாஷைப் பேசப்படுகிறது. அதற்கு அர்த்தமும் இருக்கிறது"* என்று சாதிக்கிற பலர் உண்டு.
உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல. ஆயினும், இவர்கள் பேசுகிற பாஷையின் கருத்தை அறியாத சபையார் இவர்களுக்கும், சபையார் கருத்தை அறியாதவகையில் பேசுகிற இவர்கள் சபையாருக்கும் அந்நியராகிவிடுகிறதை உணராமலிருக்கிறார்கள்.
ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்கள், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடவேண்டும் என்கிறார் பவுல். (1கொரிந்.14:12)
*கேட்கிற மற்றவருக்கு பக்திவிருத்தி உண்டாகும்படி, தான் பேசுகிற அந்நியபாஷையின் அர்த்தத்தை அவருக்கு சொல்லுகிறதுதான் ஒருவர் அந்நியபாஷையில் பேசும் வரத்தில் தேர்ச்சியடைந்திருப்பதற்கு அடையாளமாகும்!*
அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் *அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக* விண்ணப்பம்பண்ணக்கடவன்.
1கொரிந்.14:13
*இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது,* கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? *நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.*
1கொரிந்.14:16
நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், *ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே*
1கொரிந்.14:17
என்று பவுல் சொல்லுகிறதை, அர்த்தம் சொல்லாமல் அந்நியபாஷையில் பேசுவோர் சிந்திக்கவேண்டும்.
சபைக்கு பக்திவிருத்தி உண்டாகிறதற்காகவே வியாக்கியானம்பண்ணுகிறவர்கள் இருந்தால் மட்டும் சபையில் அந்நியபாஷையில் பேசவும், அர்த்தம் சொல்லுகிற ஒருவரும் சபையில் இல்லாவிட்டால் தனிமையில் பேசிக்கொள்ளவும் ஆலோசனை கொடுக்கிறார் பவுல். (1கொரிந்.14:27,28)
தான் சபைக்கு எழுதுகிறவைகள் தனது சொந்தக் கருத்துக்கள் அல்லவென்றும், அவை கர்த்தருடைய கற்பனைகளென்றும் அவர் தெளிவுபடுத்தியிருகிறார். (1கொரிந்.14:37)
*"அடுத்தவருக்கு விளங்காவிட்டாலும் நாங்கள் சபையில் அந்நியபாஷையில் பேசியேத்தீருவோம்" என்று அடம்பிடிக்கிறவர்கள், கர்த்தருடைய கற்பனைகளை கவனிக்கப் பழகவேண்டும்!*
உண்மையான தீர்க்கதரிசிகளும், மெய்யாகவே ஆவியைப் பெற்றவர்களும் இதை ஆமோதிப்பார்கள்!! (1கொரிந்.14:37)
க. காட்சன் வின்சென்ட்
8946050920
அந்நியபாஷை (ஓர் ஆய்வு)
2️⃣7️⃣ இந்நாட்களில் பேசப்படுகிறவை உண்மையிலேயே அந்நியபாஷைகளா? பல ஆண்டுகள் சொன்ன வார்த்தைகளையே பலர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே? அவை மொழிகளைப்போல தெரியவில்லையே?
அந்நியபாஷைகளை வெவ்வேறு பாஷைள் (அப்.2:4), பல பாஷைகள் (அப்.10:45) பற்பல பாஷைகள்
(1கொரி.12:10),
நவமான (புதிய) பாஷைகள் (மாற்கு 16:17) என்றெல்லாம் வேதம் குறிப்பிடகிறது.
தாங்கள் பேசின வார்த்தைகளையே திரும்பத் திரும்பப் பேசாமல், புதிய வார்த்தைகளில் பேசுகிறவர்கள், யோசித்துப் பேசுவதுபோல் அல்லாமல், தங்குதடையின்றி இயல்பாக பேசுகிறவர்கள், ஒவ்வொரு முறையும் புதிய மொழிகளில் பேசுகிறவர்கள்,
உண்மையிலேயே அந்நியபாஷைகளில் பேசும் வரத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்று நம்பலாம்.
*பல ஆண்டுகள் குறிப்பிட்ட வரிகளையே அல்லது குறிப்பிட்ட வார்த்தைகளையே திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருக்கிறவர்கள்: வெவ்வேறு பாஷைளை, பல பாஷைளை, பற்பல பாஷைகளை, நவமான (புதிய) பாஷைகளை, அதாவது அந்நியபாஷைகளை பேசும் வரம் அற்றவராக இருக்கவேண்டும்!*
தங்களுக்கு அருகில் உள்ள சிலர் பேசக்கேட்டவைகளில் சில வார்த்தைகள் தங்கள் மனதில் பதிந்துவிட, அவைகளை உணர்ச்சிவசப்பட்டு திரும்பத் திரும்ப உச்சரித்துக்கொண்டு, தாங்களும் அந்நியபாஷையில் பேசும் வரம் பெற்றிருப்பதாக இவர்கள்
நம்பிக்கொண்டிருப்பவர்கள்!
சொன்ன வார்த்தைகளையே திரும்பத் திரும்ப பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருக்கிற இவர்கள், தாங்கள் அசல் அந்நியபாஷையில் பேசுகிறதாக நம்புகிறார்கள்!
*இவர்கள் உண்மையிலேயே அந்நியபாஷையில் பேசும் வரத்தைப் பெற்றவர்களானால், வார்த்தைகள் எப்படி இவர்களுக்கு வற்றிப்போகும்?*
ஏதோ சில வார்த்தைகளை இவர்கள் திரும்பத் திரும்ப உச்சரிக்காமல் போனால், இவர்களை ஆவியைப் பெறாதவர்களாக அற்பமாய் பார்க்கும் சூழல் இன்றைய ஆவிக்குரிய சபைகளில் நிலவுகிறது!
தாங்கள் ஆவியற்றவர்களாக அற்பமாய் பார்க்கப்படும் சூழலுக்குத் தப்பவே பலர் கட்டாயமாக ஏதோ சில வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப உச்சரிக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்று தோன்றுகிறது.
*அந்நியபாஷையில் பேசாதவர்கள் ஆவியற்றவர்கள் என்பதும், ஆவிக்குரியவர்கள் அனைவரும் கட்டாயம் அந்நியபாஷையில் பேசியே ஆகவேண்டும் என்பதும், வேதத்திற்கு முரண்பாடான அறிவீனமாகும்!*
ஒரு சபையில் உள்ள அனைவருக்கும் ஆவியானவர் அந்நியபாஷைகளில் பேசும் வரத்தைக் கொடுத்துவிடுவதில்லை. (1கொரி.12:7-11)
ஒரு சபையில் உள்ள அனைவரும் அந்நியபாஷைகளில் பேசமுடியாது. (1கொரி.12:28-30)
*"பெந்தெகொஸ்தேநாளில் அனைவரும் பேசியதுபோல, நாங்கள் அனைவரும் அந்நியபாஷைகளில் பேசுவோம்" என்கிறவர்கள்: அந்நிய தேசங்களிலிருந்து வந்திருக்கிறவர்கள் அறிந்திருக்கிற அந்நிய மொழிகளில் பேசவேண்டும்!*
பெந்தெகொஸ்தேநாளில் பேசப்பட்டதுபோலவே மற்றவர்களுக்கு விளங்கும் வகையில் ஒருபோதும் அந்நியபாஷைகளைப் பேசாதவர்கள், தங்களை பெந்தெகொஸ்தே சபையினர் என்று அழைத்துக்கொள்வதில் கொஞ்சமாகிலும் நியாயம் இருக்கிறதா?
[அடியேனும் பெந்தெகொஸ்தே சபை என்று சொல்லப்படுகிற ஒரு சபையில் அங்கமாக இருக்கிறவன்]
*தேவனுடைய சபையானது சத்தியத்திற்கு தூணும் ஆதாரமுமாக இருக்கவேண்டும்!* (1தீமோத்.3:15)
தேவனுடைய ஊழியர்கள் சத்தியத்திற்கு விரோதமாக ஒன்றுஞ்செய்யாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே எதையும் செய்யவேண்டும்.
(2கொரிந்.13:8)
நமக்கு முன்னிருந்த பரிசுத்தவான்கள் சொல்லிக்கொடுத்தார்கள் என்பதற்காக, வேதத்திற்கு தொடர்பில்லா அநுபவங்களைத் தொடர்வது சரியில்லை. வேதமாதிரியற்ற அநுபவங்களிலிருந்து தேவனுடைய சபையை விடுவிக்க தேவஊழியர்கள் முன்வரவேண்டும்!
*நமக்கு முன் இருந்த பெரியப் பரிசுத்தவான்களெல்லாரும் முழுமையான வேதவெளிச்சம் பெற்றிருந்தார்கள் என்று நம்பி, அவர்களுடைய ஊழியத்தையும் உபதேசத்தையும் அப்படியே பின்பற்றுகிறது திருச்சபையை வேதத்தைவிட்டு விலகச் செய்துவிடும்!*
ஆண்டவர் தமது அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் மூலமாகக் கொடுத்திருக்கிற அஸ்திபாரமாகிய உபசேங்களையும், ஆதிசபைகளின் மாதிரியையும் நாம் பின்பற்றினால் மட்டுமே ஆரோக்கியமான சபைகளை உருவாக்கமுடியும்.
அசல் அந்நியபாஷைகளை பேசினவர்களையே அர்த்தத்தைச் சொல்ல அப்போஸ்தலன் பவுல் பணித்தார். (1கொரி.14:13-17)
அசல் அந்நியபாஷையானாலும் அர்த்தம் சொல்லுகிறவர்கள் இல்லாவிட்டால், தனக்கும் தேவனுக்கும் தெரியத் தனிமையில் பேசிக்கொள்ள அவர் அறிவுறுத்தினார். (1கொரி.14:27,28)
அந்நியபாஷையைப்பற்றித் தெரியாத, அதன் அர்த்தம் புரியாத அவிசுவாசிகள்,
சபையாரை "பைத்தியம் பிடித்தவர்கள்" என்று சொல்லுகிறதை தவிர்ப்பதற்காகவே, அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாதபட்சத்தில் எல்லாரும் அந்நியபாஷைகளில் பேசுகிறதற்கு பவுலின் ஆலோசனையின் மூலம் தடைவிதித்திருக்கிறார் கர்த்தர். (1கொரிந். 14:23,27,28,37)
நாமோ, ஆண்டவரை அறியாத அவிசுவாசிகளும், அறிந்திருக்கிற பாரம்பரியத் திருச்சபையினரும் நம்மை எவ்வளவு பரியாசம்பண்ணினாலும், *"அர்த்தம் சொல்லாவிட்டாலும் சபையிலுள்ள எல்லாரும் அந்நியபாஷைகளில் பேசுகிறதிலிருந்து பின்வாங்கமாட்டோம்"* என்று அடம்பிடிக்கிறோம். *"எவருக்கும் அர்த்தம் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை"* என்று வேதத்திற்கு எதிராக முரட்டாட்டம்பண்ணுகிறோம்!
அர்த்தம் சொல்லாமல் நாம் பேசும் அசல் அந்நியபாஷைகளே நமக்கு "பைத்தியங்கள்" என்கிறப் பட்டத்தைப் பெற்றுத்தருமானால், பல ஆண்டுகளாக நாம் திரும்பத் திரும்பப் பேசும் சில வார்தைகள், அவிசுவாசிகளை நம்மைகுறித்து எப்படியெல்லாம் நகைக்கத் தூண்டும் என்று நாம் யோசிக்கவேண்டும்.
இப்படி ஆண்டு கணக்கில், பேசின வார்த்தைகளையே பேசிக்கொண்டிருக்கிறவர்களை: தாங்கள் அந்நியபாஷையில் பேசாவிட்டாலும் பரவாயில்லை, அந்நியபாஷையில் பேசும் வரம் தங்களுக்கு இல்லாவிட்டாலும் கவலைப்படவேண்டியதில்லை என்று ஊழியர்கள் அறிவுறுத்தவேண்டும்.
அந்நியபாஷையில் பேசும் வரம் தங்களுக்கு இருப்பதாகவும், தாங்கள் பேசுகிறது அந்நியபாஷைதான் என்று தாங்கள் விசுவாசிப்பதாகவும் கூறுகிறவர்களுக்கு, அடுத்தவர்க்கு கேட்காதவகையில் தனிமையில் பேசிக்கொள்ள ஊழியர்கள் புத்திசொல்லவேண்டும்!
*அந்நியபாஷைகளைப் பேசுகிறதில் குழந்தை நிலையில் (ஆரம்ப நிலையில்) இருக்கிறவர்களை, புருஷர் நிலைக்கு (அடுத்த நிலைக்கு) நடத்வேண்டியக் கடமை புருஷரான ஊழிர்களூக்கு இருக்கிறது!!* (1கொரி.13:11; 14:12)
க. காட்சன் வின்சென்ட்
8946050920
அந்நியபாஷை (ஓர் ஆய்வு)
2️⃣8️⃣ வேறு மொழியை பேசுகிற மக்கள் மத்தியில் தேவமனிதர் சிலர் தங்கள் தாய்மொழியில் பேச, அதைக் கேட்கிறவர்கள் தங்கள் மொழியில் புரிந்துகொள்ளும் சம்பவங்கள் சில நிகழ்கிறதே? இதுவும் அந்நியபாஷையில் பேசும் வரத்தினால் உண்டாகிறதா?
தாங்கள் அறிந்திராத மொழியில் பேசும் மக்கள் மத்தியில், சில தேவமனிதர், தங்கள் தாய்மொழியில் பேச, அதைக் கேட்கிறவர்கள் தங்கள் சொந்தமொழியில் புரிந்துகொள்ளும் அற்புதமான சில நிகழ்வுகளைக் கேள்விப்படுகிறோம்!
தேவன் இவ்விதமானக் கிரியைகளையும் நடப்பிக்க வல்லவராக இருக்கிறார்!
*குறிப்பிட்ட தேவமனிதர் தங்கள் சொந்தமொழியிலேயே அந்நியமக்கள் மத்தியில் பேசுகிறபடியால், அது அந்நியபாஷையில் பேசும் வரத்தினால் உண்டாகிறதல்ல.*
கேட்கிறவர்கள் தங்கள் தாய்மொழியில் விளங்கிக்கொள்ளும் அற்புதத்தை தேவன் நிகழ்த்துகிறபடியால். இது ஒருவிதமான அற்புதம் ஆகும்!
2️⃣9️⃣ அந்நியபாஷையில் பேசுகிறவர்கள் உரக்கக் கத்திப்பேசுகிறது சரியா?
பெந்தெகொஸ்தேநாளில் வானத்தின்கீழிருந்த சகல தேசத்தாரிலுமிருந்து வந்திருந்த பல ஆயிரங்கணக்கான யூதர்களின் ஜென்மபாஷைகளில் பேசிய பரிசுத்தஆவியைப் பெற்றவர்கள் (அப்.2:4-8,41), ஆயிரங்கணக்கானவர்களுக்கு கேட்கும் விதத்தில் உரக்கச் சத்தமாய் பேசவேண்டிய சூழல் இருந்திருக்கலாம்.
ஒரு சிறு கூட்டமாய் கூடியிருக்கிற இடத்தில் உரக்கக் கத்தி அந்நியபாஷையில் பேசவேண்டிய அவசியம் இல்லை.
*அந்நியபாஷைகளை உரத்தச் சத்தத்தில்தான் பேசவேண்டும் என்கிற கட்டளை எதுவும் இல்லை.*
அதிக ஆர்ப்பாட்டமின்றி
நமது தாய்மொழியில் பேசுகிறதுபோல, இயல்பாக அந்நியபாஷையில் பேசுகிறதில் தவறில்லை.
*வரங்களைப் பயன்படுத்துகிறதில் நாம் ஒழுங்கையும் கிரமத்தையும் கடைபிடிக்கிறது நமது ஆவிக்குரிய வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறதாகும்!!* (1கொரி.13:11; 14:40)
க. காட்சன் வின்சென்ட்
8946050920
அந்நியபாஷை (ஓர் ஆய்வு)
3️⃣0️⃣ "அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்" என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்க, சபையில் பேசுகிறவர்களை ஏன் தடுக்கவேண்டும்?
"இப்படியிருக்க, சகோதரரே, *தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்"* என்று சொல்லுகிற பவுல்:
*"சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது"* என்று சொல்லுகிறதையும் நாம் கவனிக்கவேண்டும். (1கொரிந்.14:39,40)
1கொரிந்தியர் 14 ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள ஆலோசனைகளின் நோக்கம் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறதையோ, அந்நிய பாஷைகளைப் பேசுகிறதை தடைபண்ணுகிறதல்ல. மாறாக, நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்ய வழிநடத்துவதே.
*யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால்,* அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், *அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும்,* ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
1கொரிந்.14:27
*அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால்,* சபையிலே பேசாமல், *தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.*
1கொரிந்.14:28
*தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம்,* மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள்.
1கொரிந்.14:29
*அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால்,* முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன்.
1கொரிந்.14:30
எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், *நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம்.*
1கொரிந்.14:31
என்று பவுல் சொல்லுகிறதை நன்றாக கவனியுங்கள்.
சபையில் அந்நியபாஷையில் பேசுகிறதானாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிறதானாலும் சபையார் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்கையும் கிரமத்தையும் இங்கு பவுல் சொல்லிக்கொடுக்கிறார்.
அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாதபட்சத்தில் சபையில் அந்நியபாஷையில் பேசவேண்டாம் என்று அவர் சொல்லுகிறாரேயல்லாமல், தனக்கும் தேவனுக்கும் தெரிய ஒருவர் தனிமையில் அந்நியபாஷையில் பேசுகிறதற்கு தடைவிதிக்கவில்லை.
*உண்மையில் இது பவுலினுடைய ஆலோசனையே இல்லை, தேவனுடைய கற்பனை!* (1கொரிந்.14:37)
சபையில் அந்நியபாஷையில் பேசுகிறதானாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிறதானாலும் சபைக்கு பக்திவிருத்தி உண்டாக்கும் விதத்தில் பேசவும் சொல்லவும் வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
*நீங்கள் கூடிவந்திருக்கிறபோது,* உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான். ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? *சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.*
1கொரிந்.14:26
சங்கீதம் பாடுகிறதிலும், போதகம்பண்ணுகிறதிலும், அந்நியபாஷையில் பேசுகிறதிலும், இரகசியத்தை வெளிப்படுத்துகிறதிலும், வியாக்கியானம்பண்ணுகிறதிலும் கொரிந்து சபையார் ஆர்வமாக இருந்தார்களேயல்லாமல், ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாக்கவேண்டுமென்கிறது அவர்களுடைய நோக்கமாக இருக்கவில்லை.
சபையில் ஒரேநேரத்தில் சங்கீதம் பாடுகிறதினாலும், போதகம்பண்ணுகிறதினாலும், அந்நியபாஷையில் பேசுகிறதினாலும், இரகசியத்தை வெளிப்படுத்துகிறதினாலும், வியாக்கியானம்பண்ணுகிறதினாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் இடையூறாக இருந்தார்கள். இதனால் சபையில் பக்திவிருத்திக்கு பதிலாக கலகமே உண்டானது.
*தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்,* பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது
1கொரிந்.14:33
என்று பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது.
பரிசுத்தவான்களின் சபைக்கு அடையளம் கலத்திற்கு ஏதுவல்லாத ஒழுங்கும் கிரமமுமான ஆராதனைமுறையாகும்!
தேவனுடைய சபையில் செய்யப்படுகிற சகலக் காரியங்களும் சபைக்கு பக்திவிருத்தி உண்டாகிறதற்கேதுவாக செய்யப்படவேண்டியது அவசியம்.
அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாமல் சபையில் அந்நியபாஷையில் பேசுகிறதினால் சபைக்கு பக்திவிருத்தி உண்டாக வாய்ப்பு இல்லை என்கிறதினால், அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாதபட்சத்தில் அந்நியபாஷையில் பேசும் வரம் பெற்றவர்கள், தங்களுக்கும் தேவனுக்கும் தெரியப் பேசிக்கொள்வதுதான் ஒழுங்கும் கிரமமும் ஆகும்.
*பிறகு ஏன் அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள் என்று சொல்லுகிறார் பவுல்?*
"அர்த்தம் சொல்லுகிறவர் இருந்தாலும் சபையில் அந்நியபாஷை பேசவேக்கூடாது" என்று கொரிந்து சபையார் அந்நியபாஷையில் பேசுகிறதற்கு தடைவிதித்துவிடக்கூடாது என்பதற்காக பவுல் அவ்வாறு சொல்லியிருக்கலாம்.
சபையில் அந்நியபாஷைகளில் பேசுகிறதற்கு தடையில்லை. ஆனால், நல்லொழுக்கமாயும் கிரமமாயும் பேசவேண்டியது அவசியமாகும்!
*இரண்டு அல்லது மூன்றுபேர்மட்டில், ஒவ்வொருவராய்ப் பேசுவதும், ஒருவர் அர்த்தத்தைச் சொல்லுவதுமே நல்லொழுக்கமாயும் கிரமமாயும் பேசுவதாகும்.*
(1கொரிந்.14:27)
ஒருவர் தனக்கும் தேவனுக்கும் தெரிய தனிமையில் அந்நியபாஷையில் பேசுவதற்கு எந்தத் தடையும் இல்லை.
*"அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்"* என்று சொல்லப்பட்டிருக்கிறதை எடுத்துக்கொண்டு,
*"அர்த்தஞ் சொல்லுகிறவரில்லாவிட்டாலும் அந்நியபாஷையில் கட்டாயம் சபையில் பேசுவோம்"* என்பது
நல்லொழுக்கமும் கிரமமும் அல்ல என்பதை நாம் உணரவேண்டும்!!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
Thanks for using my website. Post your comments on this