அந்நியபாஷை (ஓர் ஆய்வு)
3️⃣1️⃣ 1கொரிந்தியர் நிருபத்தில் கூறப்படும் 'அந்நிய பாஷை' என்கிற வார்த்தை, 'பரவசப் பேச்சு' என்பதாகத் திரு விவிலியத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அது அப்.நடபடிகளில் குறிப்பிடப்படும் வெவ்வேறு பாஷைகளோடு தொடர்பற்ற வார்த்தையாகிவிடுகிறது. இப்படியிருக்க, பரவசப் பேச்சு எவ்வாறு வேறொரு பாஷையாக இருக்கமுடியும்? அதற்கு என்ன பொருள் இருக்கமுடியும்?
அப்போஸ்தலர் 19:6ல் சொல்லப்பட்டுள்ள 'அந்நியபாஷை' என்கிற வார்த்தைக்கும், 1கொரிந்தியர் 14:2,4,5,6ல் சொல்லப்பட்டுள்ள 'அந்நியபாஷை' என்கிற வார்த்தைக்கும் *γλῶσσα* (glōssa) என்கிற கிரேக்கப்பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
*க்ளோசா* என்பதற்கு குறிப்பிட்ட வசனங்களின் சூழலில், "மற்ற நாடுகளிலிருந்து வேறுபட்ட ஒரு குறிப்பிட்ட மக்களால் பயன்படுத்தப்படும் மொழி அல்லது பேச்சுவழக்கு" அல்லது "இயற்கையாகப் பெறப்படாத ஒரு மொழி" என்று பொருள்.
இப்படியிருக்க, அப்போஸ்தலர் நடபடிகளில் குறிப்பிடப்படும் வெவ்வேறு பாஷைகளுக்கும் 1கொரிந்தியர் 14ல் குறிப்பிடப்படும் அந்நியபாஷைக்கும் தொடர்பில்லை என்பது தவறான கருத்து ஆகும்.
1கொரிந்தியர் நிருபத்தில் கூறப்படும் *'அந்நிய பாஷை'* என்கிற வார்த்தையை *'பரவசப் பேச்சு'* என்று திருவிவிலியத்தில் மொழிபெயர்த்திருப்பது சரியில்லை.
*அந்நியபாஷைகளில் பேசுகிறது சிலருக்கு பரவசமான அனுபவமாக இருக்கலாம். ஆனால் 'பரவசபாஷை' என்று அந்நியபாஷைகளில் எதுவும் இல்லை.*
அந்நியபாஷைகளைப் பேசினவர்கள் பரவசமாகப் பேசினார்கள் என்பதற்கான வேத ஆதாரம் எதுவும் இல்லை.
தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவர் ஆவியானவர் தனக்கு தந்தருளும் வரத்தின்படியே கன்னடத்தில் பேசுகிறார் என்று வைத்துக்கொள்வோம். தனக்கு அர்த்தமே தெரியாத மொழியில் அவர் எப்படி பரவசமாகப் பேசமுடியும்.
ஒருவர் தூதர்பாஷையையே பேசுகிறார் என்று வைத்துக்கொள்வோம். தான் பேசுகிறது தூதர் பாஷையென்றும், அதன் அர்த்தம் இன்னதென்றும் அறியாத அவரால், அதை எப்படி பரவசமாகப் பேச இயலும்?
*அந்நியபாஷை ஒருவரின் பக்திவிருத்திக்காக கொடுக்கப்பட்டிருக்கிறதேயல்லாமல் (1கொரி.14:4), பரவசத்திற்காகக் கொடுக்கப்படவில்லை!*
மேலும், அந்நியபாஷையானது ஒரு மொழியாக இருக்கிறபடியால்அதற்கு பொருள் இல்லாமல் இருக்கமுடியாது.
1கொரிந்தியர் 14:2,4,5,6ல் சொல்லப்பட்டுள்ள அந்நியபாஷை பொருளற்றப் பேச்சானால், அதின் அர்த்தத்தை பிறருக்கு சொல்லும்படி விண்ணப்பம்பண்ண பவுல் எப்படி கொரிந்து சபையாருக்கு ஆலோசனைக் கொடுத்திருக்கக்கூடும்?
உலகத்திலே *எத்தனையோவிதமான பாஷைகள்* உண்டாயிருக்கிறது, *அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல*
1கொரிந்.14:10
என்று பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது.
அந்நியபாஷை உலகத்திலுள்ள ஏதோ ஒரு மொழியானால், அதற்கு நிச்சயம் அர்த்தம் இருக்கிறது.
*அந்நியபாஷையில் பேசுகிறவர் உலகத்திலுள்ள ஏதோ ஒரு மொழியை பேசினாலும், அதை கேட்கிறவர் தனக்கு அந்நியராயிராதபடிக்கும், தான் கேட்கிறவருக்கு அந்நியராயிராதபடிக்கும், கேட்கிறவருக்கு பக்திவிருத்தி உண்டாகும்படிக்கும் அந்நியபாஷையின் அர்த்தத்தை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்.* (1கொரிந்.14:11-13)
"நாங்கள் மனுஷர் பேசுகிற அந்நியமொழிகளில் பேசினால் எங்களால் அர்த்தம் சொல்லக்கூடும். தூதர்பாஷையைப் பேசும்போது அதற்கான அர்த்தத்தை எங்களால் எப்படி சொல்லக்கூடும்?" என்று சொல்லுகிறது அந்நியபாஷையை குறித்த அறிவற்றிருப்பதற்கு அடையாளமாகும்!
நாம் மனுஷர் பாஷைகளை பேசினாலும், தூதர் பாஷைகளை பேசினாலும் (1கொரிந்.13:1) நமது சுயதிறமையினால் அவைகளை நாம் வியாக்கியானம்பண்ணுகிறதில்லை. பரிசுத்தஆவியானவரே நமக்கு அதன் அர்த்தத்தை சொல்லிக்கொடுக்கிறார்.
..... *அந்த ஆவியினாலே* .....
1கொரிந்.12:9
...... வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
1கொரிந்.12:10
*இவைகளையெல்லாம் அந்த ஒரே அவியானவர் நடப்பித்து,* தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்
1கொரிந். 12:11
என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.
இப்படியிருக்க, "தூதர்பாஷைக்கு எங்களால் விளக்கம் கொடுக்கமுடியாது" என்பது:
பரலோத்திலிருந்து வந்தப் பரிசுத்தஆவியானவருக்கு பரலோகபாஷைத் தெரியாது என்றும், அதின் அர்த்தத்தை அவரால் நமக்கு சொல்லிக்ககொடுக்க முடியாது என்றும் மறுதலித்து, ஆவியானவரை சிறுமைப்படுத்துவதாகும்.
*அந்நியபாஷையில் பேசுகிறவர்கள் அர்த்தத்தை சொல்லத் தவறுகிறதினாலும், அந்நியபாஷையை வேத விதிமுறையின்படி பேசத்தவறுகிறதினாலும் அவர்கள் பேசுகிறது அந்நியபாஷையே இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிடுகிறது தவறாகும்!*
மேலும், "1கொரிந்தியரில் சொல்லப்பட்டுள்ள 'அந்நியபாஷை' ஒரு அர்த்தமற்ற பரவசப்பேச்சு" என்பது வீண்பேச்சு அல்லாமல், வேறல்ல!!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
அந்நியபாஷை (ஓர் ஆய்வு)
3️⃣2️⃣ அந்நியபாஷைகளில் பேசுகிறவர்களை ஆவிக்குரிய உச்ச இடத்தில் வைத்துப் பார்கிறது ஆரோக்கியமானதுதானா?
அந்நியபாஷைகளில் பேசுகிறவர்கள் ஆவிக்குரிய உயர்ந்த நிலையில் இருப்பதாகப் பார்க்கிறது ஆவிக்குரிய வெளிச்சமின்மையின் வெளிப்பாடாகும்!
அந்நியபாஷை ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல!
அந்நியபாஷையில் பேசுகிறவர்கள் அனைவரும் ஆவிக்குரிய வாழ்வில் தேறினவர்கள் என்று சொல்லிவிடமுடியாது.
அந்நியபாஷைகளில் பேசுகிறதில் அதீத ஆர்வமுள்ளவர்களாய் இருந்த கொரிந்து சபையார், தங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் பிரிந்து வாக்குவாதம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்! (1கொரிந்.1:11,12)
..... சகோதரரே, *நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல்,* மாம்சத்துக்குரியவர்களென்றும், *கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று*
1கொரிந்.3:1
*நீங்கள் பெலனில்லாதவர்களானதால்,* உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன். *இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால்,* இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
1கொரிந்.3:2
பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், *நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து* மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?
1கொரிந்.3:3
ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் *நீங்கள் மாம்சத்துக்குரியவர்களல்லவா?*
1கொரிந்.3:4
என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.
கொரிந்து சபையார் அந்நியபாஷையில் ஆர்வமுள்ளவர்களாயிருந்தும், பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உள்ளவர்களாய் இருந்தபடியால் பவுல் அவர்களை ஆவிக்குரியவர்களாகப் பாராமல், மாம்சத்துக்குரியவர்களாகவே பார்த்தார்.
கிறிஸ்துவுக்குள் அவர்கள் குழந்தைகளாகவும் பெலனற்றவர்களாகவும் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
அவர்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடப்பதாக பவுல் தெரிவிக்கிறார்.
அவர்கள் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டுகிறவர்களாகவும்,
(1கொரிந்.3:21), ஒரு ஊழியரினிமித்தம் மற்றொரு ஊழியருக்கு விரோதமாய் இறுமாப்புள்ளவர்களாகவும் இருந்தது
(1கொரிந்.4:6), அவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் குழந்தைகளாகவே (ஆரம்பநிலையிலேயே) இருந்ததை வெளிப்படுத்தியது.
தன் தகப்பனுடைய மனைவியுடன் விபச்சாரம் செய்துகொண்டிருந்த விசுவாசி ஒருவனை சபையைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருந்தார்கள் இந்த அந்நியபாஷைப் பிரியர்கள்! (1கொரிந்.5:1,2)
அவிசுவாசிகளுக்கு முன்பாக சகோதரரோடே சகோதரர் வழக்காடி, அநியாயஞ்செய்து, நஷ்டப்படுத்தினார்கள்! (1கொரிந்.6:6-8)
அவர்களில் சிலர் கிறிஸ்தவராகி பல ஆண்டுகள் கடந்தப்பின்னும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, அவைகளுக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறவர்களாய் இருந்தார்கள்!
(1கொரிந்.8:7)
கர்த்தருடைய பாத்திரத்தில் பானம்பண்ணகிற அவர்கள் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணி, கர்த்தருடைய போஜனபந்தியில் பங்குள்ளவர்களாயிருந்த அவர்கள் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருந்து, பேய்களோடே ஐக்கியம் பாராட்டி,
கர்த்தருக்கு எரிச்சலை மூட்டினார்கள்!
(1கொரிந்.10:20-22)
தங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்த ஊழியர்கள் தங்கள் சரீரநன்மைகளை அறுவடைசெய்கிறதை அவர்கள் பெரிய காரியமாக எண்ணினார்கள்!
(1கொரிந்.9:3-11)
பணக்கார விசுவாசிகள் ஏழை விசுவாசிகளைக் குறித்த கரிசனையற்றவர்களாய் இருந்தனர்! (1கொரிந்.11:20-22)
*மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசுகிறதில் ஆர்வமாயிருந்த அவர்கள், அன்புள்ளவர்களாய் இருப்பதில் ஆர்வம் காட்டவில்லை!* (1கொரிந்.13:1-3; 14:1)
பரிசுத்தவான்களுக்கு செய்யும் தர்மசகாயத்தில் அவர்கள் ஆர்வமற்றவர்களாய் இருந்தனர். அதைகுறித்து பவுல் அவர்களுக்கு அழுத்தமாய் போதிக்கவேண்டியிருந்தது! (1கொரிந்.16:1,2: 2கொரிந்.8:1-9:15)
இப்படியிருக்க, அந்நியபாஷையில் பேசுகிறவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் தேர்ச்சியும் முதிர்ச்சியும் அடைந்துவிட்டார்கள் என்று நினைப்பது தவறாகும்.
அந்நியபாஷையில் பேசுகிறதினால் மட்டும் ஒருவர் ஆண்டவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக நினைப்பது அறியாமையே!
அந்நியபாஷையில் பேசுகிறவர்களிலும் மதிப்புக்குரியவர்கள்!
அந்நியபாஷையில் பேசும் வரம் பெற்றவர், அதின் அர்த்தத்தை பிறருக்கு சொல்லாதபட்சத்தில் தனது சொந்த பக்திவிருத்திக்காகவே அந்நியபாஷையில் பேசுகிறார். (1கொரிந்.14:4)
ஆனால் மற்ற வரங்களை உடையவர்களோ மற்றவரின் ஆவிக்குரிய மற்றும் சரீர நன்மைகளுக்காய் அவைகளைப் பயன்படுத்துகின்றனர். (1கொரிந்.12:8-10)
இப்படியிருக்க, அர்த்தம் சொல்லாமல் அந்நியபாஷையில் பேசுகிறவர்களைவிட, பிற வரங்களை செயல்படுத்துகிறவர்களே அதிக கனத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள்.
*அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்* பேசுகிறான். *தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப்* பேசுகிறான்.
1கொரிந்.14:4
நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன். ஆகிலும், *அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்.* ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்
1கொரிந்.14:5
என்று பவுல் சொல்லுகிறதை கவனிக்கவும்.
அர்த்தம் புரியாத அந்நியபாஷையில் பேசுகிறவர்களிலும், சபையாருக்கு தெரிந்த மொழியில் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களே அதிக மரியாதைக்குரியவர்கள்!
*இப்படியிருக்க, அந்நியபாஷைகளில் பேசுகிறவர்களை பெரிய சாதனையாளர்களாகவும், அரிய ஆவிக்குரியவர்களாகவும் கற்பனை செய்கிறது அறியாமை என்பதை நாம் அறியவேண்டும்!*
க. காட்சன் வின்சென்ட்
8946050920
அந்நியபாஷை (ஓர் ஆய்வு)
3️⃣3️⃣ அந்நியபாஷைப் பேசி ஒருவர் தன்னை அபிஷேகம் பெற்றவராகவும், ஆவிக்குரியவராகவும் காண்பித்துக்கொள்ளுகிறது சரியா?
ஒரு கூடுகையில் ஒருமுறையேனும் அந்நியபாஷையில் சில வார்த்தைகளையாகிலும் பேசாதவர்களை, பரிசுத்த ஆவியைப் பெறாதவராக சந்தேகிக்கும் நிலை இன்று இருப்பதால், சில வார்த்தைகளையாவது அந்நியபாஷையில் பேசி, தங்களை அபிஷேகம் பெற்றவர்களாகக் காண்பித்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இன்றைக்கு குறிப்பிட்ட சபை பிரிவினராகிய நாம் இருக்கிறோம்!
*அந்நியபாஷையில் பேசி நம்மை ஆவிக்குரியவர்களாகவும், அபிஷேகம் பெற்றவர்களாகவும் காண்பித்துக்கொள்வது, நமது ஆவிக்குரிய வளர்ச்சியின்மையையே காண்பிக்கிறது.*
தாம் கர்த்தருடைய ஆவியானவரால் அபிஷேகம்பண்ணப்பட்டிருந்ததை
தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதிலும்: இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்குவதிலும்; சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்துவதிலும்; நொறுங்குண்டவர்களை விடுதலையாக்குவதிலும்;
கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்துவதிலும் வெளிப்படுத்தினார் நமது ஆண்டவர்.
(லூக்கா 4:18,19)
நசரேயனாகிய இயேசு நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் இருந்ததால், அவர் தேவனால் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணப்பட்டிருந்ததை கண்டுகொண்டார் பேதுரு. (அப்.10:38)
*ஒருவர் தான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதை முதலாவது ஆவியின் கனிகள் மூலமாகவும் (கலாத்.5:22,23), பின்பு தனக்கு அளிக்கப்பட்டுள்ள ஆவியின் வரங்கள் மூலமாகவும் (1கொரிந்.12:8-10) விளங்கப்பண்ணக் கடமைப்பட்டிருக்கிறார்.*
அந்நியபாஷையில் பேசும் வரத்தினால் மட்டுமல்ல, தனக்கு அளிக்கப்பட்டுள்ள ஆவியின் எந்த வரத்தின் மூலமாகவும் தான் பரிசுத்தஆவியானவரை பெற்றிருக்கிறதை ஒருவர் வெளிப்படுத்தலாம்.
சத்திய ஆவியானவரை பெற்றிருக்கிறதை நாம் எப்படியெல்லாம் காண்பிக்கலாம்?
சகல சத்தியத்திற்குள்ளும் நடப்பதில் காண்பிக்கலாம். (யோவான் 16:13; 2யோவான் 1:4; 3யோவான்1:3,4)
சத்தியமும் சொஸ்தபுத்தியமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறதில் காண்பிக்கலாம். (அப்.26:25)
அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படுகிறதில் காண்பிக்கலாம். (1கொரிந்.13:6)
வெட்கமான அந்தரங்க காரியங்களை வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதில் காண்பிக்கலாம். (2கொரிந்.4:2)
சத்தியவசனத்திலும் தேவஊழியராக விளங்கப்பண்ணுகிறதில் காண்பிக்கலாம். (2கொரிந்.6:7)
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், வளருகிறதில் காண்பிக்கலாம். (எபேசி.4:15)
சத்தியம் என்னும் கச்சையை அரையில் கட்டினவர்களாய் இருப்பதில் காண்பிக்கலாம். (எபேசி.6:14)
சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறதில் காண்பிக்கலாம். (1தீமோத்.3:15)
வெட்கபடாத ஊழியக்காரராயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவராயும் நம்மை தேவனுக்கு முன்பாக உத்தமராக நிறுத்துகிறதில் காண்பிக்கலாம். (2தீமோத்.2:15)
சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகிறவரை சத்தியத்திற்கு திருப்புகிறதில் காண்பிக்கலாம். (யாக்.5:19,20)
நாம் அறிந்திருக்கிற சரியான சத்தியத்தில் உறுதிப்பட்டிருக்கிறதில் காண்பிக்கலாம். (2பேதுரு 1:12)
வெறும் வார்த்தையினாலும் நாவினாலுமல்லாமல், குறைச்சலிலுள்ள சகோதரருக்கு உதவிசெய்கிறதின்மூலம் கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூருகிற சத்தியத்திற்குரியவர்களாய் இருப்பதில் காண்பிக்கலாம். (1யோவான் 3:16-19)
சத்தியத்தை அறிந்திருந்து, சத்தியத்தின்படி பிறரை நேசிக்கிறதில் காண்பிக்கலாம். (2யோவான் 1:1)
சத்தியத்தால் நற்சாட்சிபெற்றிருப்பதில் காண்பிக்கலாம். (3யோவான் 1:12)
தேவனால் உண்டான சத்திய ஊழியர்களுக்கு செவிகொடுக்கிறதில் காண்பிக்கலாம். (1யோவான் 4:6)
சத்தியமில்லாதவர்களும் (1தீமோத்.6:5; 1யோவான் 2:4); சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களும் (ரோமர் 2:8; கலாத்.3:1; 5:7); சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாதவர்களும் (கலாத்.2:14); சத்தியத்தைச் சொல்லுகிறவர்களை சத்துருவாக பார்க்கிறவர்களும்
(கலாத்.4:16); சத்தியத்தின்மேலுள்ள அன்பை அங்கிகரியாதவர்களும், சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிறவர்களும் (2தெச.2:10,11); சத்தியத்தை விட்டு விலகினவர்களும்
(2தீமோத்.2:18); எப்பொழுதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களும்
(2தீமோத்.3:7);
சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறவர்களும்
(2தீமோத்.3:8); சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகிறவர்களும் (2தீமோத்.4:4); சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களும் (எபிரே.10:26); தங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்திருந்து, சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லுகிறவர்களும் (யாக்.3:14); சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களும் (1யோவான் 1:6) அந்நியபாஷைகளைப் பேசும் அற்புதமும் இன்று நிகழ்கிறது!
பரிசுத்தஆவியானவரைப் பெற்றிருக்கிறதை நாம் எப்படி காண்பிக்கலாம்?
சுவிசேஷத்தினிமித்தம் சவால்களை சந்திக்கும் வேளையில் பிதாவின் ஆவியானவரால் பேசுகிறதில் காண்பிக்கலாம். (மத்.10:20)
பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிறதில் காண்பிக்கலாம். (லூக்கா 4:1; அப்.8:29,39; 10:19; 11:12)
திட்டமும் தெளிவுமான தீர்க்கதரிசனம் உரைக்கிறதில் காண்பிக்கலாம். (அப்.11:28)
ஆவியானவரின் சத்தத்தை தெளிவாய் கேட்டு, அதன்படி செயல்படுகிறதில் காண்பிக்கலாம். (அப்.13:2-4; 16:6,7)
மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசுகிறதில் காண்பிக்கலாம். (1கொரிந்.2:10-13)
கர்த்தருடைய ஆவியானவரால் பாரம்பரியங்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறதில் காண்பிக்கலாம். (2கொரிந்.3:13-17)
பரிசுத்தஆவியானவரின் சத்தத்தைக் கேட்பதில் காண்பிக்கலாம். (எபிரே.3:7; வெளிப்.2:7)
பரிசுத்தமாய் வாழ்கிறதில் காண்பிக்கலாம். (1பேதுரு 1:2)
கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டு, நம்மேல் தங்கியிருக்கிற தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவரை மகிமைப்படுத்துகிறதில் காண்பிக்கலாம். (1பேதுரு 4:14)
*அந்நியபாஷையில் பேசுகிறதினால் மட்டுமே நம்மை ஆவிக்குரியவர்களாகவும், நாம் பரிசுத்தஆவியானவரை பெற்றிருக்கிறதையும் காண்பிக்க முயற்சிப்போமானால், நாம் இன்னும் ஆவியில் குழந்தைகளாகவே இருக்கிறோம் என்று அர்த்தம்!!*
க. காட்சன் வின்சென்ட்
8946050920
அந்நியபாஷை (ஓர் ஆய்வு)
3️⃣4️⃣ இன்றைய சபைகளில் அந்நியபாஷை பேசும் விதத்தை விமர்சிக்கிறவர்களை ஆவியானவருக்கு விரோதமாகப் பேசுகிறதாகச் சொல்லுகிறார்களே?
அந்நியபாஷையும் ஆவியானவரும் ஒன்று என்று பலர் நினைக்கிறபடியினால், அந்நியபாஷைகளைப் பேசுகிறதில் வேதஅடிப்படையற்ற முறைகளை கையாள்வதை விமர்சிக்கிறதை பரிசுத்தஆவிக்கு எதிராகப் பேசுகிறதாக பலர் நினைக்கின்றனர்.
உண்மை என்னவெனில்: வேதமாதிரியின்படியும், ஆலோசனையின்படியும் அந்நியபாஷைகளைப் பேசாதவர்களே தங்களுக்கு வரங்களை அளிக்கிற பரிசுத்த ஆவியானவரை அவமதிக்கிறார்கள்!
👉🏿 பொதுவெளியில் அந்நியபாஷைகளில் பேசின எருசலேம் சபையார் பலதேசத்து மக்களின் தாய்மொழிகளில் பேசினார்கள்! (அப்.2:4-11)
"அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன் (1கொரிந்.14:13), அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்"
(1கொரிந்.14:28) என்கிறது வேதம்.
*இந்த விதமுறைகளைக் கடைபிடிக்காமல் அந்நியபாஷைகளைப் பேசுவோரே பரிசுத்தஆவிக்கும், பரிசுத்த வேதத்திற்கும் எதிராக செயல்படுகிறவர்கள்.*
👉🏿 சமாரிய விசுவாசிகள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி பேதுருவும் யோவானும் அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
அவர்கள்மேல் கைகளை வைத்தபொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள். (அப். 8:14-17)
விசுவாசிகள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி பேதுருவும் யோவானும் ஜெபித்தபோது, அவர்கள் அந்நியபாஷையில் பேசும் வரத்தைப் பெற்றுக்கொள்ளும்படி குறிப்பாய் ஜெபிக்கவோ, அந்நியபாஷைகளில் பேசுவதற்கான பயிற்சியை அவர்களுக்கு அளிக்கவோ இல்லை.
👉🏿 பவுல் எபேசு சீஷர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார். அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்கதரிசனஞ் சொன்னார்கள். (அப்.19:6)
இங்கு பவுல் அந்நியபாஷையில் பேசி தீர்க்கதரிசனம் சொல்லும் பயிற்சியை அவர்களுக்குக் கொடுக்கவில்லை.
👉🏿 பேதுரு பேசிக்கொண்டிருந்த வசனத்தைக்கேட்ட கொர்நேலியுவின் உறவின்முறையார், விசேஷித்த சிநேதிதர் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினபோது
அவர்கள் பல பாஷைகளைப் பேசி, தேவனைப் புகழ்ந்தார்கள்.
(அப்.10:24,44,45)
இங்கு அவர்கள் பரிசுத்தஆவியைப் பெறுகிறதற்கோ, பல பாஷைகளைப் பேசுவதற்கோ பேதுரு எந்தப் பயிற்சியையும் அவர்களுக்கு அளிக்கவில்லை.
*இன்றைக்கு தேவனுக்கும் தேவஜனங்களுக்கும் இடையில் தங்களை இடைத்தரகர்களாகக் கருதிக்கொள்ளும் ஊழியர்கள் பலர்: பரிசுத்தஆவியைப் பெறுவது எப்படி? அந்நியபாஷையில் பேசுகிறது எப்படி? தீர்க்கதரிசனம் உரைப்பது எப்படி என்று பயிற்சியளிக்கிறதையும், அந்தப் பயிற்சிகளுக்கும் பரிசுத்த வேதத்திற்கும் தொடர்பில்லாததையும் காணமுடிகிறது.*
உண்மையில் இவர்களே பரசுத்தஆவிக்கு விரோதமாக செயல்படுகிறவர்கள்!
விசுவாசிகள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ள ஊழியர்கள் அவர்கள்மேல் கைகளை வைத்து ஜெபிப்பதே போதுமானது.
அவர்கள்மேல் வருகிற பரிசுத்தஆவியானவர் தமக்கு சித்தமானால் அவர்கள் அந்நியபாஷையில் பேசவும், தீர்க்கதரிசனங்களை உரைக்கவும் செய்வார். (அப்.2:4; 10:44,45; 19:6; 1கொரி.12:10,11)
*பரிசுத்தஆவியைப் பெறும்போது விசுவாசிகள் அந்நியபாஷையில் பேசாவிட்டாலும், தீர்க்கதரிசனம் சொல்லாவிட்டாலும் அதைகுறித்து கவலைப்படவேண்டியதில்லை.*
எல்லாருக்கும் அந்நியபாஷையில் பேசுகிற, தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தை ஆவியானவர் கொடுப்பார் என்று நாம் எதிர்பார்க்கமுடியாது. (1கொரி.12:28-30)
தாம் ஒருவருக்குள் வரும்போது அவரை அந்நியபாஷைகளில் பேசவைப்பதும் பேசவைக்காததும் ஆவியானவரின் தனிப்பட்ட அதிகாரமாகும்! எல்லாரையும் அந்நியபாஷையில் பேசவைக்கவேண்டும் என்று அவரை கட்டுப்படுத்த எவராலும் முடியாது! (1கொரி.12:11)
*ஆவியைப் பெறும்பொழுது எல்லாரும் அந்நியபாஷையில் பேசப் பயிற்சியளித்து விசுவாசிகளை அலைகழிக்கிறவர்கள், அந்நியபாஷையில் பேசும் வரமற்றவர்களைகட்டாயமாய் போலியான பாஷைகளைப் பேச வழிநடத்தி, பரிசுத்தஆவிக்கு விரோதமாகப் பாவம் செய்கிறார்கள்!*
👉🏿 அந்நியபாஷை ஒருவரின் தனிப்பட்ட மற்றும் அர்த்தம் சொல்லப்படும் பட்சத்தில் சபையின் பக்திவிருத்திக்கும் அளிக்கப்பட்டுள்ளது. (1கொரி.14:4,12,13,26,27)
அந்நியபாஷையைக் குறித்த தேவனுடைய பிரதான நோக்கம் வேறு எதுவும் இல்லை.
தேவஜனங்கள் பக்திவிருத்தியடைய அந்நியபாஷை மட்டுமே வழியல்ல.
அந்நியபாஷை வரம் இல்லாதவர்களுக்கு பக்திவிருத்தி உண்டாக பல வழிகள் இருக்கின்றன.
அந்நியபாஷையில் பேசும் வரம் பெற்றவராயினும், பெறாதவராயினும்: தேவவசனத்தினாலும் (அப்.20:32; தீத்து 1:3,4), பிறரின் மாதிரியான நடக்கையினாலும் (ரோமர் 15:2; 2கொரிந்.12:19), பிறரில் செலுத்தும் அன்பினாலும் (1கொரிந்.8:1), தேவனுக்கு பிரியமானவைகளை மட்டும் அநுபவிக்கிறதினாலும் (1கொரிந்.10:23), தீர்க்கதரிசனத்தினாலும் (1கொரிந்.14:3-5), மற்ற ஆவிக்குரிய வரங்களாலும் (1கொரிந்.14:12,26), பாடல் மற்றும் போதகத்தாலும் (1கொரிந்.14:26; கொலோ.3:16,17; எபேசி.5:18-21), ஐந்துவிதமான ஊழியர்களின் ஊழியத்தினாலும் (எபேசி.4:11-13), சபையாரின் கிரியைகளினாலும் (எபேசி.4:16; 1தெச.5:11), நல்ல வார்த்தைகளினாலும் (எபேசி.4:29),
விசுவாசத்தினாலும் (1தீமோத்.1:2) பக்திவிருத்தி அடைய வாய்ப்பிருக்கிறது.
இப்படியிருக்க,
🤔 அந்நியபாஷையும் ஆவியானவரும் ஒன்றே.....
🤔 அந்நியபாஷை ஆவியின் வரங்களில் ஒன்றல்ல, ஆவியின் வரங்களுக்கும் மேற்பட்டது.....
🤔 எல்லாரும் அந்நியபாைஷை வரத்தைக் கேளுங்கள்.....
🤔 ஆவியில் நிறைந்து எல்லாரும் அந்நியபாஷையில் பேசுங்கள்.....
🤔 அந்நிய பாஷையில் பேசாமல் பக்திவிருத்தியடையமுடியாது.....
🤔 பரலோகபாஷையாகிய
அந்நியபாஷை பிசாசுக்கு புரியாது.....
🤔 அந்நியபாஷையில் ஜெபித்தால் அற்புதங்கள் நடக்கும்......
🤔 நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறோம் என்பதற்கு அந்நியபாஷையில் பேசுகிறது மட்டுமே அடையாளம்.....
🤔 அந்நியபாஷை எவருக்கும் விளங்காது, விளங்கவேண்டிய அவசியம் இல்லை.....
என்றெல்லாம் அந்நியபாஷைகளைக் குறித்து வேதத்திற்கு முரணாக காரியங்களை விசுவாசிகளுக்கு போதித்து, அதை நம்பும்படி செய்கிறவர்களே பரிசுத்தஆவிக்கு விரோதமாக செயல்படுகிறவர்கள் என்பதை நாம் அறியவேன்டும்!
*அந்நியபாஷைகளில் பேசுகிறதைப்பற்றி வேதத்தில் காணப்படும் காரியங்களை மறுப்பதும், அந்நியபாஷைகளில் பேசுகிறதைப்பற்றி வேதத்தில் காணப்படும் காரியங்களுக்கு மிஞ்சி மிகைப்படுத்தி பேசுகிறதும் பரிசுத்தஆவிக்கு எதிரான செயலாகும்!!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
அந்நியபாஷை (ஓர் ஆய்வு)
3️⃣5️⃣ நீங்கள் பரிசுத்தஆவியைப் பெற்று, அந்நியபாஷையில் பேசும் அனுபவமுள்ளவரா?
1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் அடியேன் இரட்சிக்கப்பட்டேன்.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை சின்னமலையில் உள்ள AG சபையில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டேன்.
1997ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் நாள் எங்கள் கல்லூரி (CPT - தரமணி) மாணவர் ஜெபக்குழுவினருக்காய் புருஷோத்தமன் என்னப்பட்ட அன்பு அண்ணன் அவர்கள், மகாபலிபுரம் SU Campsiteல் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் திரு. ஆல்பர்ட் தேவதாசன் ஐயா அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்வதைக்குறித்தும், பரிசுத்தஆவியில் நடத்தப்படுவதைக் குறித்தும் செய்தியளித்து எங்களுக்காக ஜெபித்தபோது, என்மேல் அக்கினி கொட்டப்படுவதைப் போன்று உணர்ந்தேன். அப்போது முழங்காலில் நிற்கமுடியாமல் கீழே விழுந்தேன்.
*சிறிதுநேரம் அங்கு என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை, நான் வேறு ஏதோ ஒரு பாஷையில் பேசிக்கொண்டிருந்தேன்.*
அதன் அர்த்தம் எனக்கு தெரியாவிட்டாலும் எனக்கு பேசும்படித் தோன்றிய புதிய வார்த்தைகளைப் பேசி, சற்றுநேரத்தில் ஓய்ந்தேன்.
வேறு சில வாலிபர்களுக்கும் இந்த அனுபவம் உண்டானது.
*நாங்கள் அந்நியபாஷை அடையாளத்தோடு பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொண்டதாக சொன்னார்கள்.*
[பின்னாளில் அந்நியபாஷை அடையாளத்தோடு அல்ல, அந்நியபாஷையில் பேசும் வரத்தோடு ஆவியைப் பெற்றுக்கொண்டதை வசனவெளிச்சத்தில் (அப்.2:4) அறிந்துகொண்டேன்]
அடியேன் பரிசுத்தஆவியைப் பெற்றநாள்முதல் என் தனிப்பட்ட ஜெபத்திலும், சபை கூடுகையிலும், ஜெபக்கூட்டங்களிலும் அந்நியபாஷையில் பேசுகிறவர்களுடன் சேர்ந்து சத்தமாய், உற்சாகமாய் அந்நியபாஷையில் பேசுகிறதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
*அந்நியபாஷையில் பேசுகிறதை பரிசுத்தஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருக்கிறதின் அடையாளமாகவும், ஆவிக்குரிய கௌரவமாகவும் கருதிய அடியேன், எங்கும் எவர்முன்பும் அந்நியபாஷையில் பேச ஆவலாயிருந்தேன்.*
நாம் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தை பெற்றிருப்பதற்கு அடையாளம் அந்நியபாஷையில் பேசுகிறதூதான் என்று அடியேன் கேள்விபட்டிருந்தபடியால், என்னை பிற கிறிஸ்தவர் மத்தியில் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தை பெற்றவனாகக் காண்பித்துக்கொள்ளும்படி அவர்களுக்கு முன்பாக ஒரு நான்கு வார்த்தைகளாவது அந்நியபாஷையில் பேசிவிடுவேன். என்னை சுற்றியிருந்தவர்களும் இப்படிப்பட்ட சிந்தையையுடையவர்களாக இருந்ததை காணமுடிந்தது.
அந்நியபாஷையில் பேசாதவர்களை அபிஷேகம் பெறாதவர்களாகவும் அற்பமாகவும் பார்க்கும் சூழல் இருந்தபடியால், அந்த அவமானத்திற்குத் தப்புவதற்கு சபைகூடுகையில் அந்நியபாஷையில் பேசியே ஆகவேண்டிய நெருக்கடி இருக்கிறதை எவரும் மறுக்கமுடியாது!
*கிறிஸ்தவக் கூடுகைகளில் பேசுகிறதைப் பார்க்கிலும் என் தனிப்பட்ட ஜெபவேளையில் முழுமனதுடனும், உணர்வுடனும் என்னால் அந்நியபாஷையில் பேசமுடிந்தது.*
எல்லா கிறிஸ்தவரும் ஆவியின் ஆபிஷேகத்தைப் பெறுவதையும், அந்நியபாஷையில் பேசுகிறதையும் அடியேன் உண்மையாய் வாஞ்சித்தேன்.
என்னை முழுமையாக ஊழியத்திற்கு அர்ப்பணித்த
1998ஆம் ஆண்டுமுதல் நூற்றுக்கணக்கான சபைகளில் அடியேன் பிரசங்கித்துவருகிறேன்.
*முதல் மூன்று ஆண்டுகள் அந்நியபாஷை அடையாளத்துடன் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்வதுதான் எனது பிரதானமான பிரசங்கமாக இருந்தது.*
பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அடியேன் கைகளைவைத்து ஜெபித்தபோது, பல சபைகளில் சிலர் அந்நியபாஷை அடையாளத்தோடு பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொண்டார்கள்!
தேவன் அடியேனுக்கு குணமாக்கும் வரத்தையும் கொடுத்து அநேகரை வியாதியிலிருந்து சுகமாக்கினார். இயேசுவின் நாமத்தினால் அடியேன் கட்டளையிட எப்பேர்பட்ட ஆவிகளும்
ஜனங்களைவிட்டு புறப்பட்டுப்போயின!
*இதனால் எனது பிரசங்கத்தில் அற்புத அடையாளங்களும் இடம்பிடித்தன.*
[தேவனுடைய ராஜ்யத்தை பிரசங்கிப்பதும், அற்புதங்களை செய்கிறதும்தான் வேதாகம முறை என்பதை (மத்.4:23; 9:35; லூக்கா 9:6) பின்னாட்களில் அறிந்துகொண்டேன்]
காலங்கள் செல்ல, அடியேன் வேதத்தை நிதானமாய் பகுத்துபார்க்க ஆரம்பித்தபோது, நான் அந்நியபாஷையில் பேசும் முறை வேதம் சார்ந்ததல்ல என்பதை அறிந்துகொண்டேன்.
*அடியேன் பரிசுத்த ஆவியையும் அந்நியபாஷையில் பேசும் வரத்தையும் பெற்றிருப்பதில் எவ்வித ஐயமும் எனக்கில்லை. இந்தக் காரியத்தில் ஆவியானவருடைய சான்றைத் தவிர மனுஷர் எவருடைய சான்றும் எனக்கு அவசியம் இல்லை.*
அந்நியபாஷையை குறித்தும், அந்நியபாஷையில் பேசுகிறதை குறித்தும், அந்நியபாஷையை பெற்றுக்கொள்வதைக் குறித்தும் அடியேன் கேள்விப்பட்டபடியே பிறருக்கு சொல்லிக்கொடுக்கும் காரியங்களுக்கும் வேதத்திற்கும் பெரும்பாலும் தொடர்பில்லை என்பதை பரிசுத்தஆவியானவர் என் மனக்கண்களுக்குக் காண்பித்தார்.
👉🏿 பெந்தெகொஸ்தேநாளில் அந்நியபாஷை பேசப்பட்ட விதத்திற்கும், "பெந்தெகொஸ்தேக்காரன்" என்று சொல்லிக்கொண்ட நான் அந்நியபாஷையில் பேசின விதத்திற்கும் தொடர்பில்லை என்பதை முதலாவது அடியேன் வசன அடிப்படையில் அறிந்துகொண்டேன்.
பெந்தெகொஸ்தேநாளில் எருசலேமில் பலதேசத்து யூதர்கள் கூடியிருந்த சூழலில் அவர்களுடைய பாஷைகளில் அன்று எருசலேம் சபையார் பேசினார்கள். (அப்.2:4-11)
*என்னை சுற்றி இந்திக்காரரோ, தெலுங்கரோ, கன்னடரோ அல்லது மலையாளியோ இருக்கும் பட்சத்தில்கூட நான் ஒருபோதும் அவர்கள் மொழியில் (அந்நியபாஷையில்) பேசியதில்லை.*
👉🏿 செசரியா பட்டணத்தில் கொர்நேலியுவின் குடும்பத்தார், அவருடைய உறவின்முறையார் மற்றும் சிநேதிதர் பரிசுத்தஆவியால் நிரப்பப்பட்டபோது,
அவர்கள் பல பாஷைகளில் தேவனைப் புகழுகிறதை பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்டு பிரமித்தார்கள்.
(அப்.10:24,45,46)
நான் அந்நியபாஷையில் என்னசெய்கிறேன் என்று எனக்கு அருகில் இருந்த விசுவாசிகளுக்கு ஒருபோதும் ஒன்றும் விளங்கியதில்லை.
ஆகிலும், நான் ஆதிசபையார் பேசியதுபோலவே அந்நியபாஷையில் பேசுகிறதாக, என் அறியாமையால் பல ஆண்டுகள் சாதித்துவந்தேன்!
👉🏿 அருகிலுள்ளவர் பக்திவிருத்தியடையும்படிக்கு, அந்நியபாஷையில் பேசுகிறவர் அர்த்தத்தையும் சொல்லவேண்டும் என்றும் (1கொரி. 14:12-17), அந்நியபாஷைக்கு அர்த்தஞ் சொல்லுகிறவர் இருக்கும் பட்டத்தில் இரண்டு அல்லது மூன்றுபேர்மட்டில்
அந்நியபாஷையிலே பேசவேண்டும் என்றும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவர் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும் என்றும்,
அர்த்தஞ் சொல்லுகிறவரில்லாவிட்டால் சபையில் பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசவேண்டும் என்றும் (1கொரி.14:26,27), தான் எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று ஒத்துக்கொள்ளவேண்டும் என்றும்
(1கொரி.14:37) பவுல் சொல்லியிருக்க, இவைகளை
கர்த்தருடைய கற்பனைகளென்று ஒத்துக்கொள்ளாமலும், இந்த விதிமுறைகளை கடைபிடிக்காமலும்; அந்நியபாஷையில் பேசுகிறது நமது கட்டுப்பாட்டில் இல்லை, ஆகையால் அந்நியபாஷையின் அர்த்தத்தை எவருக்கும் சொல்லவேண்டிய அவசியமில்லை என்றும், சபையில் உள்ள எல்லாரும் ஆவியில் நிறைந்து ஒரேநேரத்தில் அந்நியபாஷையில் பேசலாம் என்றும் வேதத்திற்கு முரணாக அடியேன் விசுவாசிகளை தூண்டிவருகிறதை பரிசுத்த ஆவியானவர் வசனவெளிச்சத்தில் காண்பித்தார்!
👉🏿 "சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?" என்று பவுல் கேட்கிறது (1கொரிந். 14:23) பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருப்பதாகப் பெருமைப்பட்டுக்கொண்ட எனக்கு பல ஆண்டுகள் உறைக்கவேயில்லை!
ஆண்டவருக்காக பைத்தியமாக மனதற்ற, ஆனால் அந்நியபாஷைக்காக பைத்தியங்கள் என்று பேரெடுக்க ஆயத்தமாயிருந்த முரட்டுபக்தர் கூட்டத்தில் அடியேனும் ஒருவனாக இருந்தேன்!
👉🏿 "தேவனானவர் சபையிலே..... பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார். ....
எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா?"
(1கொரிந். 12:28,30)
என்று பவுல் கேட்கிறதிலிருந்து, சபையில் உள்ள அனைவரும் அந்நியபாஷையில் பேசமுடியாது, அந்நியபாஷையில் பேசும் வரம் பெற்றவர்கள் மட்டுமே அந்நியபாஷையில் பேசமுடியும் என்பது விளங்குகிறதல்லவா?
அடியேனோ, எனக்கும் மூத்த ஊழியர்கள் சொல்லுகிறபடியே "எல்லரும் அந்நியபாஷையில் பேசுங்கள்" என்று போகிற இடமெல்லாம் வேதத்திற்கு முரணாக விசுவாசிகளைத் தூண்டிக்கொண்டிருக்கிறதை ஆவியானவர் காண்பித்தார்!
👉🏿 "...... ஞானவரங்களையும் விரும்புங்கள். *விஷேசமாய்த் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்.*
நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன். ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன். *ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்"*
(1கொரிந்.14:1,5) என்று பரிசுத்தஆவியானவரால் பலமாய் நடத்தப்பட்ட உத்தம ஊழியர் பவுல் மூலமாக தேவன் சபைக்கு ஆலோசனை சொல்லியிருக்க, தேவஜனங்களுக்கு தீர்க்கதரிசன வரத்தை மறைத்து, அனைவரையும் அந்நியபாஷைக்கு நேராக நடத்தும் அடியேனின் முரண்பாட்டையும் ஆவியானவர் காண்பித்தார்.
*அந்நியபாஷையை குறித்து வேதத்தில் சொல்லப்பட்டுள்ள காரியங்கள் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அது உபதேசமாக்கப்பட்டும்; அந்நியபாஷையை குறித்து வேதத்தில் காணப்படாத பல நூதனமானக் காரியங்கள் போதிக்கப்பட்டு, அவை சரியென்று நம்பப்பட்டும் வருகிறதை அறிந்துகொள்ள அடியேனுக்கு இருபது ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது!*
சிலருக்கு இன்னும் அதிக ஆண்டுகள் தேவைப்படுமோ!
அடியேனை குறித்து யார் என்ன நினைத்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், அந்நியபாஷையில் பேசுகிறதில் வேத ஒழுங்கை கடைபிடிக்க அடியேன் உறுதியாய் தீர்மானித்தேன்.
*"அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்"* என்கிற வசனத்தின்படி
(1கொரிந்.14:13),
அந்நியபாஷைக்கு அர்த்தம் சொல்லும் வரத்திற்காக அடியேன் ஜெபம்பண்ணினேன். அந்த வரத்தை எனக்கு ஆவியினவர் இதுவரை கொடுக்கவில்லை.
எனவே, *"அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்"*
()1கொரிந். 14:28) என்கிற வசனத்தின்படி தற்பொழுது தனிமையில் மட்டும் அந்நியபாஷையில் பேசிவருகிறேன்.
பொதுவான ஆராதனையில் அடியேன் தங்கள் காதுகள் கேட்க சத்தமாய் அந்நியபாஷையில் பேசாததைக் கண்ட சில ஊழியநண்பர்கள், அடியேன் அபிஷேகத்தை இழந்துவிட்டதாக எண்ணினர்.
சிலர் அடியேன் இன்னும் ஆவியின் அபிஷேகத்தை பெறவில்லை என்று சாதித்தனர்.
*அடியேன் ஆர்ப்பாட்டமாக அந்நியபாஷையில் பேசும்போது அழைத்து ஆர்வமாய் தங்கள் சபைகளில் பயன்படுத்திக்கொண்டிருந்த தேவஊழியர்கள் சிலர், அமைதியாக ஆந்நியபாஷையில் பேச ஆரம்பித்தவுடன், அடியேனை அழைப்பதை தவிர்த்துவிட்டனர்!*
அந்நியபாஷையில் பேசாத என்னை தங்கள் சபையில் ஏற்றுவதில்லை என்று ஒருவர் என்னிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார்!
அடியேன் வேதத்தை உள்ளபடியே பேச ஆரம்பித்ததிலிருந்து வேதவசனங்களை தவறாக வியாக்கியானம் செய்துகொண்டு, அதை சரியென்று சாதிக்கிற பலர் அடியேனை ஊழியத்திற்கு அழைப்பதை அடியோடுவிட்டு விட்டுவிட்டனர்!
அறியாமல் சத்தியத்தை தவறாக போதித்தவர்கள் சிலர் தங்கள் போதகத்தைத் திருத்திக்கொண்டனர்.
சத்தியத்தை உள்ளபடியே போதிக்கும் உறுதியுள்ள சிலர் அடியேனுடன் நட்பில் உறுதியாக இருக்கின்றனர்.
*தவறுதலாகக் கற்றுக்கொண்டு, அதை சரியென்று நிச்சயித்துக்கொண்டு, அதில் நிலைத்திருக்கிற பலர் அடியேனை சத்துருவாகக் கருதுகின்றனர்!*
ஆண்டவரிலும் அந்நியபாஷையில் அதிகப் பிரியப்படுகிறவர்கள், இன்று தாங்கள் வேதவழக்கத்திற்கு முரணாக அந்நியபாஷையில் பேசுகிறது வசனவெளிச்சத்தில் சுட்டிக்காட்டப்படுவதை சகிக்கக்கூடாமல், அடியேன் ஆவியின் அபிஷேகத்தைப் பெறவில்லை என்றும், ஆவிக்குரிய அனுபவங்கள் ஒன்றும் அடியேனுக்கு இல்லை என்று தூஷணம் செய்கின்றனர்!
சத்தியத்தை உள்ளபடியே போதிக்கிறதிலும், அதை அனுபவமாக்குகிறதிலும் எத்தனை நிந்தனைகள் வந்தாலும், எவ்வளவு நஷ்டத்தை சந்தித்தாலும், கஷ்டத்தை அனுபவித்தாலும் மகிழ்வுடன் தொடரவே அடியேன் விரும்புகிறேன்!!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
Thanks for using my website. Post your comments on this