அந்நியபாஷை
3️⃣6️⃣ சபை முழுவதும் பரிசுத்த ஆவியானவரால் ஆளுகைசெய்யப்பட்டிருக்கையில், அவர்கள் அந்நிய பாஷை பேசுவது தவறு என்று எப்படி சொல்லமுடியும்? இரண்டு அல்லது மூன்றுபேர் மட்டும் அந்நிய பாஷையில் வேண்டும் என்று எப்படி கட்டளையிடமுடியும்? அர்த்தம் சொல்லுவோர் இல்லாத வேளையில் சபையில் அந்நியபாஷையில் பேசக்கூடாது என்பது ஆவியானவரை கட்டுப்படுத்துவதாகாதா?
இங்கு நம்மைநாமே சில கேள்விகளை கேட்டுக்கொள்ளவேண்டியது அவசியம்.
சபை கூடுகையின்போது மட்டுமே நாம் ஆவியானவரால் ஆளுகை செய்யப்படுகிறோமா?
ஒரு சபையை சேர்ந்த அனைவரும் ஓரிடத்தில் கூடிவரும்போது மட்டுமே பரிசுத்தஆவியானவரால் ஆளுகைசெய்யப்படுவதாக அநேகர் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஓரிடத்தில் நாம் கூடிவரும்போது மட்டுமே பரிசுத்த ஆவியானவர் நம்மை நிரப்புவதாக நாம் நினைப்பது தவறாகும்.
*இரட்சிக்கப்பட்டவர்கள் ஓரிடத்தில் கூடியிருந்தும் பரிசுத்தஆவியானவரைப் பெற்றுக்கொள்ளமுடியும் (அப்.2:1-4; 10:44,45; 19:1-6), தனிப்பட்டவிதத்திலும் பெற்றுக்கொள்றமுடியும். பவுல் பரிசுத்தஆவியைப் பெறும்போது அவருடன் வேறு எவரும் பெறவில்லை. (அப்.9:17,18)*
மேலும், பரிசுத்தஆவியைப் பெற்ற ஒவ்வொருவரும், ஒவ்வொரு நிமிடமும் பரிசுத்தஆவியானவரால் ஆளுகைசெய்யப்படுகிறோம் என்பதை நாம் முதலாவது அறியவேண்டும்.
"நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது *என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச்* சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும். இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது, *அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால்,* நீங்கள் அவரை அறிவீர்கள்" என்று ஆண்டவர் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது. (யோவான் 14:16,17)
பரிசுத்தஆவியானவரைப் பெற்ற ஒவ்வொருவரையும் அவர் ஒவ்வொரு நிமிடமும் ஆளுகைசெய்கிறார், வழிநடத்துகிறார்.
"கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் *ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு* ஆக்கினைத்தீர்ப்பில்லை" என்றும் (ரோமர் 8:1), *"எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ,* அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்" என்றும் (ரோமர் 8:14) பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.
இப்படியிருக்க, ஆவியானவரால் ஆளுகைசெய்யப்படும்போதெல்லாம் ஒருவர் அந்நியபாஷையில் பேசவேண்டுமானால், அவர் ஒவ்வாரு நொடியும் அந்நியபாஷையில் பேசிக்கொண்டிருக்கவேண்டியிருக்கும்.
இரட்சிக்கப்பட்டவர்கள் ஓரிடத்தில் கூடியிருக்கும்போது பரிசுத்தஆவியைப் பெற்று, அவர்களில் அந்நியபாஷையில் பேசும் வரம் பெற்றவர்கள் அந்நியபாஷையில் பேசுகிறதுபோல, ஒருவர் தனிமையில் ஆவியானவரால் நிரப்பப்படுவதோடு, அவருக்கு அந்நியபாஷையில் பேசும் வரம் கொடுக்கப்பட்டால், அவர் தனிமையில் அந்நியபாஷையில் பேசவும் முடியும்.
இதனால்தான் *"அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்"* என்று பவுலால் சொல்லமுடிந்தது. (1கொரிந்.14:28)
இப்படியிருக்க, அனைவரும் சபையில் கூடியிருக்கையில் மட்டுமே ஆவியில் நிறைந்து அந்நியபாஷையில் பேசமுடியும் என்பது வேதம் சார்ந்த போதனையல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
மேலும், சபையார் பரிசுத்தஆவியானவரால் நிரப்பப்படுபோது அந்நியபாஷை மட்டுமே பேசுவார்கள் என்பது சரியான கருத்து அல்ல.
அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, *அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்* என்று சொல்லப்பட்டுள்ளதை கவனியுங்கள்.
(அப்.4:31)
அந்நியபாஷையில் பேசுகிறதுமட்டுமல்ல,
தேவவசனத்தைத் தைரியமாய் பேசுகிறதும் பரிசுத்தஆவியைப் பெற்றிருப்பதற்கான அடையாளமாகும்!
இரண்டு அல்லது மூன்றுபேர் மட்டும் சபையில் அந்நியபாஷையில் பேசவேண்டும் என்று தீர்மானிக்க நாம் யார்?
இந்தக் கேள்வியை நியாயமாக பவுலிடம்தான் கேட்கவேண்டும். ஏனெனில், அவர்தான் அவ்வாறு ஆலோசனை கொடுத்திருக்கிறார். (1கொரி.14:27,28)
பவுலிடம் மட்டுமல்ல, தேவனிடமும் இந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும். ஏனெனில், தான் எழுதுவது தேவனுடைய கற்பனை என்று சொல்லியிருக்கிறார் பவுல். (1கொரி.14:37)
*சபை முழுவதும் பரிசுத்த ஆவியானவரால் ஆளுகை செய்யப்பட்டிருக்கையில் சபையார் அந்நிய பாஷையில் பேசுகிறதை எவரும் கட்டுப்படுத்தமுடியாது* என்று நமக்கு தெரிந்திருப்பதுகூட, தேவனுக்கும் பவுலுக்கும் தெரியாமலிருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது!
*"ஆவியில் நிரம்புகிற அனைவரும் கட்டாயம் சபையில் அந்நியபாஷையில் பேசவார்கள்"* என்று நாம் போதிக்கையில், "யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்" என்றும், "அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்" என்றும் பவுல் சொல்லுகிறது எத்தனை அறியாமை! (1கொரிந்.14:27,28)
*அந்நியபாஷையில் பேசும்படி சபையில் உள்ள எல்லாரையும் ஆவியானவர் ஏவுகிறார் என்று நாம் போதித்திருக்கையில்,* இரண்டு அல்லது மூன்றுபேர் மட்டும், அதுவும் அர்த்தம் சொல்லுகிறவர் இருந்தால் மட்டும் சபையில் அந்நியபாஷையில் பேசவேண்டும் என்று பவுல் சொல்லுகிறது ஆவியானவருக்கு விரோதமானக் காரியம் அல்லவா?
*அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாவிட்டாலும் சபையில் அந்நியபாஷையில் பேசலாம் என்று நாம் உற்சாகப்படுத்துகையில்,* அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாவிட்டால் சபையில் அந்நியபாஷையில் பேசாமல், தனிமையில் பேசிக்கொள்ளவேண்டும் என்று பவுல் சொல்லுகிறது எத்தனை துணிக்கரம்?
அந்நியபாஷையைக் குறித்து நமக்கு தெரிந்திருக்கிற காரியங்கள்கூட பவுலுக்கு தெரிந்திருக்கவில்லையே!
*"அர்த்தம் சொல்லுகிறவர் சபையில் இல்லாவிட்டாலும், ஆவியில் நிறையும்போது சபையில் உள்ள எல்லாரும் அந்நியபாஷையில் பேசுகிறதை எவரும் கட்டுப்படுத்தமுடியாது"* என்று நாம் சொல்லுகிறது சரியாக இருக்குனால், பவுல் சொல்லுகிறது நிச்சயம் தவறாக இருக்கவேண்டும்.
*"அர்த்தம் சொல்லுகிறவர் இருக்கும்பட்டத்தில் இரண்டு அல்லது மூன்றுபேர் மட்டும் ஒவ்வொருவராக அந்நியபாஷையில் பேசமுடியும்"* என்றும், *"அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாதபட்சத்தில், சபையில் பேசுகிறதை தவிர்த்து, நமக்கும் தேவனுக்கும் தெரியப் பேசமுடியும்* என்றும் பவுல் சொல்லுகிறது சரியாக இருக்குமானால், நாம் சொல்லுகிறது நிச்சயம் தவறாக இருக்கவேண்டும்!
பரிசுத்தஆவியால் நிரப்பப்படும்போது அந்நியபாஷையில் பேசுகிறதை கட்டுப்படுத்தமுடியாது என்பது சரியான கருத்து அல்ல.
*முதன்முதலாக ஆவியால் நிரப்பப்படும்போது அந்நியபாஷையில் பேசும் வரம் கொடுக்கப்படுகிறவர்கள் பொதுவெளியில் அந்நியபாஷையில் பேச வாய்ப்பு உண்டு.*
இவர்கள் சிலநேரங்களில் கேட்கிறவர்களுக்கு தெரிந்த மொழியிலேயே பேசக்கூடும். (அப்.2:4-11; 10:44-46)
மேலும், அந்நியபாஷையில் பேசும் வரம் பெற்றவர்கள் குறிப்பிட்டக் காலம்வரை சபையில், கேட்கிறவர்களுக்கு புரியாத வகையில் பேசக்கூடும். (1கொரிந்.14:16,23)
ஆரம்பநாட்களில் கேட்கிறவர்களுக்கு விளங்காத மொழியில் சபையில் பேசுகிறவர்கள், பின்னாட்களில் கேட்கிறவர்கள் பக்திவிருத்தியடையும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாய் தேறவேண்டும். (1கொரிந்.14:12-17)
அர்த்தத்தை சொல்லும் வரம் தங்களுக்கு
இல்லாதபட்சத்தில், அர்த்தம் சொல்லுகிறவர்கள் சபையில் இருப்பார்களானால், அந்நியபாஷை வரம் பெற்றவர்கள் அனைவரும் சபையில் ஒரேநரத்தில் பேசாமல், இரண்டு அல்லது மூன்றுபேர் ஒவ்வொருவராகப் பேசவேண்டும். அர்த்தம் சொல்லும் வரம்பெற்றவர் அந்நியபாஷையில் பேசப்படுகிறதை, சபைக்கு பக்திவிருத்தியுண்டாகும்படிக்கு
விளக்கி சொல்லவேண்டும். (1கொரிந்.14:27)
*அந்நியபாஷையில் பேசும் வரமுள்ள மற்றவர்கள் தனிமையில் பேசிக்கொள்ளலாம்.*
அர்த்தம் சொல்லுகிற ஒருவரும் சபையில் இல்லாதபட்சத்தில் அந்நியபாஷையில் பேசும் வரமுள்ள ஒருவரும் சபையில் பேசாமல், தங்களுக்கும் தேவனுக்கும் தெரியத் தனிமையில் பேசிக்கொள்ளவேண்டும். (1கொரிந்.14:28)
*சபையில் ஒருவரும் அந்நியபாஷையில் பேசாததால் சபைக்கு ஒரு நஷ்டமும் உண்டாகப்போவதில்லை.*
அர்த்தம் சொல்லாமல், அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாமல் அனைவரும் அந்நியபாஷையில் பேசுகிறதினால் சபையில் உள்ள ஒருவருக்கும் ஒருலாபமும் உண்டாகப்போவதில்லை. (1கொரிந்.14:6-11,14-20)
சபையில் அந்நியபாஷையில் பேசாவிட்டால் தனிமையில் பேசுகிறது நின்றுவிடும் என்று அஞ்சுகிறதும், தனிமையில் பேசுகிறதைவிட சபையில் பேசினால்தான் வல்லமையாக இருக்கும் என்று நினைக்கிறதும் வேத அடிப்படையற்றதாகும்.
சபையில் அந்நியபாஷையில் பேசாதது ஆவியானவரை கட்டுப்படுத்துவதாகுமா?
அர்த்தம் சொல்லுவோர் இல்லாத வேளையில் சபையில் அந்நியபாஷையில் பேசாதது ஆவியானவரை கட்டுப்படுத்துவதாகாது. ஏனெனில், அந்நியபாஷை ஆவியானவர் அல்ல.
*சபையில் அந்நியபாஷையில் பேசுகிறது கட்டுப்படுத்தமுடியாதக் காரியம் அல்ல!*
அர்த்தம் சொல்லுவோர் இல்லாதவேளையில்
சபையில் அந்நியபாஷையில் பேசுகிறதை தவிர்ப்பது குறித்தும், தனிமையில் பேசிக்கொள்வதைகுறித்தும் அந்நியபாஷையில் பேசும் வரம் பெற்றவரே தீர்மானிக்கமுடியும் என்பதால்தான் பவுலால் அத்தகைய ஆலோசனையை கொடுக்கமுடிந்தது.
மேலும் இது பவுலின் ஆலோசனை அல்ல,
கர்த்தருடைய கற்பனையாகும்.
"ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் *உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று* அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்" என்று பவுல் சொல்லுகிறதை நாம் நம்பி, கர்த்தருடைய கற்பனைக்கு கீழ்ப்படியவேண்டும்! (1கொரிந்.14:37)
அந்நியபாஷை பேசப்படாத ஆராதனை திருப்பதிகரமான ஒரு முழுமையான ஆராதனை அல்ல என்பது பலருடைய எண்ணமாகும்.
பொதுவாக ஆவிக்குரிய ஜீவியத்தில் குழந்தை நிலையில் இருக்கிறவர்களே இப்படி நினைக்கிறார்கள்.
*உங்களிலெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன்,* இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
1கொரிந்.14:18 அப்படியிருந்தும், *நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும்,* மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே *எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.*
1கொரிந்.14:19
சகோதரரே, *நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்.* துர்க்குணத்திலே குழந்தைகளாயும், *புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்*
1கொரிந்.14:20
என்று பவுல் சொல்லுகிறதை, சபையில் அந்நியபாஷையில் பேசாமல் எங்களால் இருக்கமுடியாது என்கிறவர்கள் கவனிக்கவேண்டும்.
நம் அனைவரையும் விட அதிகம் அந்நியபாஷைகளில் பேசுகிறவர், அர்த்தம் சொல்லாமல் சபையில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதைவிட, மற்றவர்களுககு புரியும்வகையில் ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதையே அதிகம் விரும்பியிருக்கிறார்.
மேலும், மற்றவரிலும் அதிகமாய் அந்நியபாஷைகளைப் பேசின பவுலால் சபையில் அந்நியபாஷைகளில் பேசுகிறதைத் தவிர்த்து, மக்களுக்கு தெரிந்த அவர்களின் மொழியிலேயே பேசமுடிந்தது.
*புத்தியிலே குழந்தைகளாயிராமல் புருஷராயிருக்கிறவர்கள் அந்நியபாஷை பேசுகிறதைப் பற்றிய காரியத்தில் இந்த வளர்ச்சியை அடைந்திருக்கவேண்டியது அவசியமாகும்!*
ஆவியினால் நிறந்திருக்கும்போது அந்நியபாஷையில் பேசாமல் இருக்கவேமுடியாது என்பது புத்தியில் குழந்தையாகவே இருக்கிறவர்களின் அறிக்கையாகும்.
'மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், *அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?"* என்று பவுல் கேட்கிறதிலிருந்து (1கொரிந்.14:6),
வரங்களை பயன்படுத்துகிறதில் வளர்ச்சியடைந்தவர்களால் சபையில் ஆந்நியபாஷையில் பேசலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கமுடியும் என்பதை அறிந்துகொள்ளலாம்!!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
அந்நியபாஷை
3️⃣7️⃣ அந்நியபாஷை பேசுகிறதில் ஆரம்பநிலை மற்றும் முதிர்ச்சிநிலை என்று இருக்கிறதா?
அந்நியபாஷையில் பேசுகிறதில் மட்டுமல்ல, பொதுவாக வரங்களைப் பயன்படுத்துகிறதில் ஆரம்பநிலையும் முதிர்ச்சிநிலையும் உண்டு.
ஆரம்பநிலையை குழுந்தைநிலை என்றும் முதிர்ச்சிநிலையை
புருஷர்நிலை என்றும் சொல்லலாம். (1கொரி.13:11; 14:20)
ஆவியின் வரங்களில் ஆரம்பநிலை!
வரங்களை பயன்படுத்துகிறதில் ஆரம்பநிலையில் (குழந்தைகளாய்) இருந்த கொரிந்து சபையார் தாங்கள் கூடிவருகிறபோது: அவர்களில் ஒருவன் சங்கீதம் பாடினான், ஒருவன் போதகம்பண்ணினான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசினான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்தினான், ஒருவன் வியாக்கியானம்பண்ணினான். சபையின் பக்திவிருத்திக்கேதுவாக அவர்கள் வரங்களை பயன்படுத்தாமல், கலகத்திற்கேதுவாகப் பயன்படுத்தினார்கள். (1கொரிந்.14:26,33)
ஆவியின் வரங்களை ஒழுங்கும் கிரமமாகவும், சபையின் பக்திவிருத்திக்கேதுவாகவும் பயன்படுத்தத் தவறுகிறதே ஆரம்பநிலையாகும்!
ஆவியின் வரங்களில் புருஷனான பவுல்!
அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். *அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம்,* அறிவானாலும் ஒழிந்துபோம்.
1கொரிந்.13:8
நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.
1கொரிந்.13:9
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
1கொரிந். 13:10
*நான் குழந்தையாயிருந்தபோது* குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன். *நான் புருஷனானபோதோ* குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்
1கொரிந். 13:11
என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.
அந்நியபாஷை உட்பட ஆவியின் வரங்களை பயன்படுத்துகிறதில் தான் குழந்தை நிலையிலிருந்து புருஷர் நிலைக்கு தேறிவிட்டதாக இங்கு பவுல் அறிக்கையிடுகிறார்.
தீர்க்கதரிசனம் மற்றும் அந்நியபாஷையை குறித்து அவர் சரியான பார்வையை உடையவராகிவிட்டார்.
வரங்களைக் குறித்து கருத்து தெரிவிக்க நாம் அஞ்சுகையில்: தீர்க்கதரிசனங்கள் ஒழிந்துபோம் என்றும், அந்நிய பாஷைகள் ஓய்ந்துபோம் என்றும், நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதல் குறைவுள்ளது என்றும் அவர் அறிக்கையிட்டார்.
ஆவியின் வரங்களை நாம் பெரிதாகக் கொண்டாடுகையில்: கனியற்றவர்களுக்கு வரங்களினால் ஒரு பிரயோஜமும் இல்லை என்று அவரால் தைரியமாக சொல்லமுடிந்தது! (1கொரிந்.13:1-3)
தேவன் சபையில் பலவித பாஷைகளை ஏற்படுத்தியிருந்தாலும், தனது காலத்திலே சபையில் உள்ள எல்லாரும் அந்நியபாஷையில் பேசும் வரம் கொடுக்கப்படுவது முடிவுக்கு வந்துவிட்டதை தெரிவிக்கிறார். (1கொரிந்.12:28-30)
*இதுதான் வரங்களில் முதிர்ச்சியடைந்தவர்களுக்கு அடையாளமாகும்!*
அந்நியபாஷை மற்றும் தீர்க்கதரிசனத்தைப்பற்றி பவுல் சொன்னதுபோல இன்று நம்மில் எவராகிலும் சொல்லிவிட்டால், அவரை நாம் என்னபாடு படுத்திவிடுவோம்!
ஆரம்பநிலையிலிருந்து முதிர்ச்சிநிலைக்கு அழைத்த பவுல்!
நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், *சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்.*
1கொரிந்.14:12
அந்தப்படி *அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக* விண்ணப்பம்பண்ணக்கடவன்.
1கொரிந்.14:13
*இல்லாவிட்டால்,* நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, *கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்?* நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.
1கொரிந். 14:16
நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், *ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே*
1கொரிந்.14:17
என்று அந்நியபாஷையில் பேசுகிறதில் ஆரம்பநிலையிலிருந்து முதிர்ச்சிநிலைக்கு அழைப்புவிடுக்கிறார் பவுல்.
அருகிலுள்ளவர்க்கு தான் பேசும் அந்நியபாஷையின் அர்த்தத்தை சொல்லுகிறதே, ஒருவர் ஆந்நியபாஷை வரத்தில் தேறியிருப்பதற்கு அடையாளம்!
உங்களிலெல்லாரிலும் *நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன்,* இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
1கொரிந்.14:18
அப்படியிருந்தும், *நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும்,* மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
1கொரிந். 14:19
சகோதரரே, *நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்.* துர்க்குணத்திலே குழந்தைகளாயும், *புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்*
1கொரிந். 14:20
என்று, தான் ஸ்தாபித்த சபை அந்நியபாஷையில் பேசுகிறதைப் பற்றியக் காரியத்தில் தன்னை போன்று முதிர்ச்சி நிலைக்கு முன்னேறும்படி ஆலோசனை சொல்லுகிறார் பவுல்.
மற்றவரிலும் அதிகம் அந்நியபாஷைகளில் பேசுகிறவர், அர்த்தம் சொல்லாமல் சபையில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதைவிட, மற்றவர்களுக்கு புரியும்வகையில் ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதையே அதிகம் விரும்புகிறதாக சொல்லுகிறார்.
மேலும், மற்றவரிலும் அதிகமாய் அந்நியபாஷைகளைப் பேசின அவரால் சபையில் அந்நியபாஷைகளில் பேசுகிறதைத் தவிர்த்து, மக்களுக்கு தெரிந்த அவர்களின் மொழியிலேயே பேசமுடிந்திருக்கிறது.
*புத்தியிலே குழந்தைகளாயிராமல் புருஷராயிருக்கிறவர்கள் அந்நியபாஷை பேசுகிறதைப் பற்றிய காரியத்தில் இந்த வளர்ச்சியை அடைந்திருக்கவேண்டியது அவசியமாகும்!*
சபையில் வரங்களை எவ்வளவு முதிர்சியோடு பயன்படுத்தவேண்டும் என்று பவுல் மேலும் பாடம் நடத்துகிறார்.
யாராவது *அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால்,* அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
1கொரிந்.14:27
*அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால்,* சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.
1கொரிந்.14:28
*தீர்க்கதரிசிகள்* இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், *மற்றவர்கள்* நிதானிக்கக்கடவர்கள்.
1கொரிந்.14:29
*அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால்,* முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன்.
1கொரிந்.14:30
*எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும்,* நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம்.
1கொரிந்.14:31
*தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே.*
1கொரி.14:32
*தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல்,* சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார், *பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது*
1கொரிந்.14:33
என்று குழந்தை நிலையிலிருந்து கொரிந்து சபையை புருஷர் நிலைக்கு அழைத்துசெல்கிறார் பவுல்.
அந்நியபாஷையில் பேசுகிறதில் மட்டுமல்ல, தீர்க்கதரிசனம் சொல்லுகிறதிலும் அவர் இங்கு ஒரு ஒழுங்கை ஏற்படுத்துகிறார்.
சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படுவதே
(1கொரிந்.14:40) பரிசுத்தவான்களின் சபைக்கான அடையாளம் என்றார்.
*தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் அவர்களுக்கு அடங்கியிருக்கிறதுபோலவே, அந்நியபாஷை வரமும் அதை பேசுகிறவர்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறது!*
அதாவது, தீர்க்கதரிசன வரத்தைப் பெற்றவர்கள் பலர் சபையில் இருந்தாலும்: இரண்டு அல்லது மூன்றுபேர் மட்டும் பேசவும், சபையில் மற்றவர்கள் நிதானிக்கவும் கூடுகிறதுபோலவே, அந்நியபாஷையில் பேசும் வரமுள்ளவர்கள் பலர் சபையில் இருந்தாலும், இரண்டு அல்லது மூன்றுபேர்மட்டும் சபையில் பேசவும், மற்றவர்கள் நிதானிக்கவும் கூடும்.
அப்படியே, ஒருவர் தீர்க்கதரிசனம் சொல்லும்போது
அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவருக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவர் பேசாமலிருக்கக்கக் கூடுகிறதுபோலவே, மற்றவர் அந்நியபாஷையில் பேச ஆரம்பிக்கிறபோது, ஏற்கனவே பேசிக்கொண்டிருக்கிறவரால் பேசாமல் இருக்கமுடியும். அதாவது
ஒருவர் அந்நியபாஷையில் பேசும்போது அந்நியபாஷையில் பேசும் வரம் பெற்ற மற்றவர்களால் அமைதிகாக்கக்கூடும்.
*சபையில் எத்தனைப்பேர் அந்நியபாஷையில் பேசுகிறோம், எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைக்கிறோம் என்பது முக்கியமல்ல. எல்லாரும் பக்திவிருத்தி அடைகிறோமா, எல்லாரும் கற்கிறோமா, எல்லாரும் தேறுகிறோமா என்பதே முக்கியம்!*
வரங்களை பயன்படுத்துகிறதில் தேறினவர்கள் சபையிலுள்ள மற்றவர்கள் தேறும் விதத்திலேயே அவைகளைப் பயன்படுத்துவார்கள்!
மேலும், ஆவியின் வரங்களில் தேறினவர்கள் மற்றவர்களை தேறினவர்களாக்கவே பிரயாசப்படுவார்கள்!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
அந்நியபாஷை
3️⃣8️⃣ ஆவியின் வரங்களில் ஆரம்பநிலையிலேயே (குழந்தையாகவே) இருக்கிறவர்களுக்கு அடையாளம் என்ன?
கீழ்காணும் காரியங்கள் எவரிடம் காணப்படுகின்றனவோ, அவர்கள் ஆவியின் வரங்களில் குழந்தைகளாகவே இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.
*அன்பில்லாமல் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும்; தீர்க்கதரிசன வரத்தை உடையவர்களாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும்; மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவர்களாயிருந்தாலும் தாங்கள் ஒன்றுமில்லை* என்பதை அறிந்திருந்தாலும் (1கொரிந்.13:1,2), அன்புள்ளவர்களாகிறதைப் பார்க்கிலும் அந்நியபாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசுகிறதில் அதிக ஆர்வமாய் இருப்பார்கள்.
*அன்பை நாடுகிறதைவிட, ஞானவரங்களை விரும்புகிறதைவிட, விஷேசமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புகிறதைவிட* (1கொரிந். 14:1), அந்நியபாஷை பேசுகிறதில் மிகவும் ஆர்வமாய் இருப்பார்கள்.
*சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தை சொல்லாமல் அந்நியபாஷைகளில் பேசுகிற தங்களிலும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்கள் மேன்மையுள்ளவர்கள்* என்பதை அறிந்திருந்தாலும் (1கொரிந். 14:5), அந்நியபாஷையில் பேசுகிறதிலேயே அதிக ஆர்வமாய் இருப்பார்கள்.
*சபையாருக்கு இரகசியங்களை வெளிப்படுத்தாமல், அறிவுண்டாக்காமல், தீர்க்கதரிசனத்தை அறிவிக்காமல், போதகத்தைப் போதிக்கிறதற்கு ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசுகிறதினால் தங்களால் சபையாருக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை* என்பதை அறிந்திருந்தாலும் (1கொரிந்.14:6), இவர்களால் சபையில் அந்நியபாஷையில் பேசாமல் இருக்கமுடியாது.
*தாங்கள் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று மற்றவர்க்கு தெரியாது என்பதையும், தாங்கள் ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்போம்* என்பதை அறிந்திருந்தும் (1கொரிந்.14:9), இவர்கள் மற்றவர்க்கு முன்பாக அந்நியபாஷைகளைப் பேசுகிறதில் தீவிரமாக இருப்பார்கள்.
*தாங்கள் பேசுகிற அந்நியபாஷையின் கருத்தை அறியாத சபையார் (தாங்கள் அந்நியபாஷையில் பேசும்போது) தங்களுக்கு அந்நியராகிவிடுகிறார்கள்* என்பதையும், *தாங்கள் சபையாருக்கு அந்நியராகிவிடுகிறோம்* என்பதையும் இவர்கள் அறிந்திருந்தாலும் (1கொரிந்.14:11), சபையில் அந்நியபாஷையில் பேசாவிட்டால், அந்தநாள் ஆராதனையில் இவர்களுக்கு திருப்தியே இருக்காது.
*ஆவிக்குரிய வரங்களை நாடுகிற இவர்கள், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடவேண்டும்* என்பதை அறிந்திருந்தாலும் (1கொரிந்.14:12), ஆவிக்குரிய வரங்களில் தேறுகிறதில் நாட்டம் காட்டமாட்டார்கள்.
*தாங்கள் ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, அர்த்தம் அறியாதவர் தங்கள் ஸ்தோத்திரத்திற்கு 'ஆமென்' என்று சொல்லும்படிக்கும், பக்திவிருத்தியடையும்படிக்கும் அந்நியபாஷையில் பேசுகிற தாங்கள் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக ஜெபிக்கவேண்டும்* என்று வேதம் செல்லுகிறதை அறிந்திருந்தாலும் (1கொரிந்.14:13,16,17), வியாக்கியானம்பண்ணும் வரத்திற்காய் ஜெபிக்கிறதில் இவர்கள் அக்கறை காட்டமாட்டார்கள்.
*சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, அதின் அர்த்தம் தெரியாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் தங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்கள்* என்பதை அறிந்திருந்தாலும் (1கொரிந்.14:23), "யார் என்னசொன்னாலும் சபையில் அந்நியபாஷையில் பேசுகிறதை நாங்கள் விடமாட்டோம்" என்று முரண்டுபிடிப்பார்கள்.
*எல்லாரும், தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன் அல்லது கல்லாதவனொருவன் உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான். அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும். அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்* என்பதை அறிந்திருந்தாலும்
(1கொரிந்.14:25), இவர்கள் சபையில் அந்நியபாஷைக்கு கொடுக்கும் இடத்தை தீர்க்கதரிசனத்திற்கு கொடுக்கவே மாட்டார்கள்.
தாங்கள் சபையில் கூடிவந்திருக்கிறபோது, ஒரேநேரத்தில் தங்களில் ஒருவர் சங்கீதம் பாடுவார், ஒருவர் போதகம்பண்ணுவார், ஒருவர் அந்நியபாஷையைப் பேசுவார், ஒருவர் இரகசியத்தை வெளிப்படுத்துவார், ஒருவர் வியாக்கியானம்பண்ணுவார், *ஆகமொத்தம் சபையின் பக்திவிருத்திக்கேதுவாக ஒன்றையும் செய்யமாட்டார்கள்.* (1கொரிந்.14:26)
*யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்* என்று வேதம் செல்லுகிறதை அறிந்திருந்தாலும்
(1கொரிந்.14:28),
அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாவிட்டாலும் அனைவரும் ஒரேநேரத்தில் அந்நியபாஷைகளில் பேசுவார்கள். சபையில் அந்நியபாஷையில் பேசாவிட்டால் தாங்கள் ஆவியில் நிறைந்திருக்கிற உணர்வே இவர்களுக்கு வராது.
*தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன். எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம்* என்று வேதம் சொன்னாலும்
(1கொரிந். 14:29-31), மற்றவர்க்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து, தாங்கள் மட்டுமே தீர்க்கதரிசனம் சொல்ல விரும்புவார்கள்.
*தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறது* என்று வேதம் சொன்னாலும்
(1கொரிந்.14:32), மற்றவர் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பிக்கும்போது தங்களை அடக்கிக்கொள்ளமாட்டார்கள்.
*தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார், பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது* என்பதை அறிந்திருந்தாலும் (1கொரிந். 14:33), வரங்களைப் பயன்படுத்துகிறதில் இவர்கள் வேத ஒழுங்கை கடைபிடிக்கமாட்டார்கள்.
*"ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்"* என்று பவுல் சொன்னாலும்
(1கொரிந்.14:37), அந்நியபாஷையில் பேசுகிறதைப் பற்றிய பவுலின் ஆலோசனைகளை இவர்கள் தேவனுடைய கற்பனைகளாக ஏற்றுக்கொள்ளவோ, அவைகளை கடைபிடிக்கவோ மாட்டார்கள்.
*"அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்"* என்று பவுல் சொல்லுகிற ஒற்றை வாக்கியத்தை
(1கொரிந்.14:39) இவர்கள் பிடித்துக்கொண்டு, *"அர்த்தம் சொல்லாமல் சபையில் அந்நியபாஷையில் பேசினாலும் அதை தடைபண்ணக்கூடாது"* என்பார்கள். அதே பவுல், *"சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது"* என்று சொல்லுகிறதை (1கொரிந்.14:40) இவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
*"அந்நியபாஷையில் பேசவே வேண்டாம் என்று பவுல் சொல்லவில்லை, அர்த்தம் சொல்லாமல், அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாமல் சபையில் பேசவேண்டாம் என்றுதான் தான் சொல்லுகிறார்"* என்று நாம் சொல்லும்போது, *"அந்நியபாஷையே பேசக்கூடாது"* என்று நாம் சொல்லுகிறதாகக் குற்றப்படுத்துவார்கள்.
*தனிமையில் அந்நியபாஷையில் பேசுகிறதை சபையில் பேசுகிறதற்கு இணையாக இவர்கள் கருதமாட்டார்கள்.* சபையில் பேசுகிறதைதான் மிகவும் ஆசீர்வாதமாக, ஆவியானவருக்கு உகந்ததாகக் கருதுவார்கள்.
*"உங்களிலெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும். சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள். துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்"* என்று பவுல் சொல்லுகிறதை (1கொரிந்.14:20) நன்கு அறிந்திருந்தாலும், சபையிலே மற்றவர்களை உணர்த்தும்படி தங்கள் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதிலும், அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலேயே இவர்கள் அதிக ஆர்வமாய் இருப்பார்கள். *புத்தியில் தாங்கள் தேறினவர்களாயிருப்பதைவிட, அந்நியபாஷைக்காக புத்தியிலே குழந்தைகளாயிருப்பதில் மகிழ்ச்சியடைவரார்கள்.*
க. காட்சன் வின்சென்ட்
8946050920
அந்நியபாஷை
3️⃣9️⃣ மற்ற வரங்களைவிட அந்நியபாஷையில் பேசும் வரத்தை சபையில் முக்கியப்படுத்துவதால் சபைக்கு என்ன நஷ்டம்?
திருச்சபைக்கு பரிசுத்த ஆவியானவர் வரங்களை கொடுக்கும் நோக்கத்தையும், வரங்களால் திருச்சபைக்கு உண்டாகும் பலன்களையும் சரியாய் அறிந்துகொள்வோமானால், அந்நியபாஷை வரத்தை மட்டுமே முக்கியப்படுத்துவதால் தேவனுடைய சபைக்கு உண்டாகும் நஷ்டத்தை நம்மால் புரிந்துகொள்ளமுடியும்.
ஆவியின் வரங்களின் நோக்கம் என்ன?
ஆவியினுடைய அநுக்கிரகம் *அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று* அளிக்கப்பட்டிருக்கிறது
1கொரிந்.12:7
என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.
ஆங்கில வேதாகமங்களில் உள்ள
மேற்காணும் வசனத்தின் தமிழாக்கத்தின்படி: *ஒருவருக்கு அளிக்கப்படும் ஆவியின் அநுக்கிரகம் அவருடைய தனிப்பட்ட பிரயோஜனத்திற்கல்ல, முழுசபையின் பிரயோஜனத்திற்காகவே* என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
*"ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது"* என்று பவுல் சொல்லுகிறதை, *"சபையின் பக்திவிருத்திக்காக ஒவ்வொரு விசுவாசியும் பிரயோஜனப்படுத்திக்கொள்வதற்காக ஆவியினுடைய அநுக்கிரகம் அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது"* என்று புரிந்துகொள்வதுதான் சரியாக இருக்கும்.
சபையின் பக்திவிருத்திக்காக ஒவ்வொரு விசுவாசியும் பிரயோஜனப்படுத்திக்கொள்வதற்காகவே: ஒருவருக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவருக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவருக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவருக்கு அந்த ஆவியினாலே குணமாக்கும் வரங்களும், வேறொருவருக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவருக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவருக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவருக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவருக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. (1கொரிந்.12:10)
சபையில் பயன்படுத்தப்படவேண்டிய வரங்கள்!
சபையிலுள்ள அனைவரின், அனைத்து வரங்களும் சபைக்கு பயன்படுத்தப்படவேண்டியது அவசியம்!
அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் *தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும்* நல்ல உக்கிராணக்காரர்போல, *ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்*
1பேதுரு 4:10
என்று பேதுரு சொல்லுகிற ஆலோசனை அதிகம் கவனிக்கப்படவேண்டியதாகும்.
தேவன் தங்களுக்கு கொடுத்துள்ள கிருபையுள்ள ஈவுகளை நல்ல உக்கிராணக்காரர்போல, சபையார் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொடுத்து உதவிசெய்யவே அழைக்கப்பட்டிருக்கிறார்கள்!
*நமக்கு அருளப்பட்ட கிருபையின் படியே* நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் *தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன்* விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.
ரோமர் 12:6
*ஊழியஞ்செய்கிறவன்* ஊழியத்திலும், *போதிக்கிறவன்* போதிக்கிறதிலும்,
ரோமர் 12:7 *புத்திசொல்லுகிறவன்* புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன், *பகிர்ந்துகொடுக்கிறவன்* வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன், *முதலாளியானவன்* ஜாக்கிரதையாயிருக்கக்கடவன், *இரக்கஞ்செய்கிறவன்* உற்சாகத்துடனே செய்யக்கடவன்
ரோமர் 12:8
என்று பவுல் சொல்லுகிற ஆலோசனையை ஒவ்வொரு சபையாரும் பின்பற்றவேண்டியது அவசியம்!
*தேவன் தமது சபைக்கு ஐந்துவிதமான ஊழியர்களை ஏற்படுத்தியிருந்தாலும் (எபேசி.4:13-15) விசுவாசிகளின் ஊழியம் இல்லாமல் சபையின் வளர்ச்சி முழுமையடையாது.*
இன்றைய சபைகள் தேவன் எதிர்பார்க்கிற தரத்திற்கு வளரமுடியாததற்கு முக்கியக் காரணம், சபைகளில் விசுவாசிகளின் ஊழியம் வேதம் அனுமதிக்கிற எல்லைவரைக்கும் அனுமதிக்கப்படாததே!
சபையாரின் பக்திவிருத்திக்காக ஒவ்வொருவரும் பிரயோஜனப்படுத்திக்கொள்ளவே ஆவியின் அநுக்கிரகமான ஞானத்தைப் போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், விசுவாசம், குணமாக்கும் வரங்கள், அற்புதங்களைச் செய்யும் சக்தி, தீர்க்கதரிசனம் உரைத்தல், ஆவிகளைப் பகுத்தறிதல், பற்பல பாஷைகளைப் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல் போன்ற வரங்கள் ஆவியினாலே அளிக்கப்படுகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (1கொரிந்.12:7-10)
அந்நியபாஷை வரத்திலும் அவசியமான வரங்கள்!
சபையின் முழுமையான பக்திவிருத்திக்கு அந்நியபாஷை வரத்திலும் அவசியம் பயன்படுத்தவேண்டிய வரங்கள் சில இருக்கின்றன.
*"முக்கியமான வரங்களை நாடுங்கள்"* என்று சபையாரை உற்சாகப்படுத்துகிற பவுல் (1கொரிந்.12:31): *"ஞானவரங்களையும் விரும்புங்கள்.* விஷேசமாய்த் *தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்"* என்று வழிகாட்டுகிறதையும் கவனியுங்கள். (1கொரிந்.14:1)
பவுல் சொல்லுகிற முக்கியமான வரங்கள் எவை? ஞானவரங்கள் (spiritual gifts) எவை?
1கொரிந்தியர் 12:31ல் "முக்கியமான வரங்கள்" என்று குறிப்பிடுகிறதைதான் 14:1ல் 'ஞானவரங்கள்' என்று குறிப்பிடுகிறார் பவுல்.
ஞானத்தைப் போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், தீர்க்கதரிசனம் உரைத்தல், ஆவிகளைப் பகுத்தறிதல், பற்பல பாஷைகளைப் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல் ஆகியவையே முக்கியமான ஞானவரங்களாகும்.
*மேற்காணும் ஞானவரங்களில் விசேஷமானது மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாக்குகிற தீர்க்கதரிசனஞ் சொல்லும் வரமாகும்.*
(1கொரிந்.14:1,3,24,25)
சபையாரின் சுவிசேஷப்பணிக்கு (எபேசி.4:12) ஞானத்தைப் போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், விசுவாசம், குணமாக்கும் வரங்கள், அற்புதங்களைச் செய்யும் சக்தி ஆகிய வரங்கள் மிகவும் அவசியமானவை.
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது
பக்திவிருத்தி அடைந்து
பரிசுத்தவான்கள் சீர்பொருந்தி (எபேசி.4:12), கிறிஸ்துவின் நிறைவான வளர்சிக்குத்தக்க பூரண புருஷராக:
ஞானத்தைப் போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், தீர்க்கதரிசனம் உரைத்தல், ஆவிகளைப் பகுத்தறிதல், பற்பல பாஷைகளைப் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல் ஆகிய வரங்கள் மிகவும் அவசியமானவை.
மேற்காணும் வரங்களில் அந்நியபாஷை வரத்திலும் சபைக்கு அவசியமானவை ஞானத்தைப் போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், தீர்க்கதரிசனம் உரைத்தல், ஆவிகளைப் பகுத்தறிதல் ஆகியவையாகும்!
மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து *உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது* ஏதுவானதைச் சொல்லாமல், *அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஐனம் என்ன?*
1கொரிந்.14:6
என்று பவுல் கேட்கிறதிலிருந்தே: அறிவை உண்டாக்குவதற்கான அறிவை உணர்த்தும் வசனம், இரகசியங்களை வெளிப்படுத்துவதற்கான தீர்க்கதரிசனம் உரைத்தல், போதகத்தைப் போதிப்பதற்கான
ஞானத்தைப் போதிக்கும் வசனம் ஆகிய வரங்கள், அந்நியபாஷை வரத்திலும் சபைக்கு அவசியமானவை என்பதை அறிந்துகொள்ளலாம்.
அந்நியபாஷை வரத்தை சபையில் பிரதானப்படுத்துவதால்?
"ஆவிக்குரிய சபைகள்" என்று தங்களை அழைத்துக்கொள்ளுகிற அநேக சபைகளில் இன்று அந்நியபாஷை வரத்தைத் தவிர வேறு வரங்களைப்பற்றி போதிக்கப்படுவதில்லை.
பல சபைகளில் அந்நியபாஷை வரத்திற்கு இணையாக மற்ற வரங்களைக்குறித்து போதிக்கிறதில்லை.
"அன்றியும், சகோதரரே, *ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை"* என்று சொல்லுகிறதோடு, ஆவிக்குரிய ஒன்பது வரங்களை கொரிந்து சபையாருக்கு பட்டியலிட்டுக் காண்பித்தார் பவுல். (1கொரிந்.12:1,8-10)
நாமோ அந்நியபாஷை வரம் ஒன்றைத் தவிர மற்ற வரங்களை சபையாருக்கு இருட்டடிப்பு செய்துவிடுகிறோம்!
ஆவிக்குரிய ஒன்பது வரங்களை பட்டியலிட்டுக் காண்பிக்கிறதோடு நில்லாமல், *"முக்கியமான வரங்களை நாடுங்கள்"* என்று சபையாரை உற்சாகப்படுத்திய பவுல் (1கொரிந்.12:31), *"விஷேசமாய்த் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்"* என்றும் வழிகாட்டினார்.
1கொரிந்.14:1
*"நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன். ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்"*(1கொரிந்.14:5) என்று தங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான ஊழியகாலத்தில் சபையாரிடம் ஒருமுறைக்கூட சொல்லாத நூற்றுக்கனக்கான ஆவிக்குரிய சபைகளின் ஊழியர்கள் நம் மத்தியில் உண்டல்லவா?
*"நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்"* (1கொரிந்.14:5) என்று சபையாரிடம் சொன்ன அனுபவம் உலகம் முழுவதும் உள்ள லட்சங்கணக்கான ஆவிக்குரிய சபைகளின் போதகர்களுக்கு ஒருபோதும் உண்டானதில்லை!
*"சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஐனம் என்ன?"*(1கொரிந்.14:6) என்று பவுலைப்போல சபையாரிடம் கேட்கிற நேர்மை இன்றை ஆவிக்குரிய சபைகளின் ஊழியர்களில் எத்தனைபேரிடம் இருக்கிறது?
*"உங்களிலெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன்," இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்"*(1கொரிந்.14:19) என்று இன்று எத்தனை ஆவிக்குரிய சபைகளின் ஊழியர்களால் சபையாரிடம் அறிக்கையிடமுடியும்?
*"சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?"* (1கொரிந்.14:23) என்று, அர்த்தம் சொல்லாமல் அந்நியபாஷையில் பேசின சபையாரை ஒருநாளாவது நாம் கண்டித்த வரலாறு உண்டா?
*அந்நியபாஷை வரத்திலும் அருமையான வரங்கள் இருக்க, அவைகளைப்பற்றி சபையாருக்கு போதியாமல், அவைகளைப் பெற்று சபையின் பக்திவிருத்திக்கு பயன்படுத்த ஒருவரையும் உற்சாகப்படுத்தாமல்; அர்த்தம் சொல்லாமல் சபையில் ஒருவர் அந்நியபாஷையில் பேசுகிறதினால் மற்றவருக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை (1கொரிந்.14:6), அவரால் ஒருவரும் பக்திவிருத்தி அடையப்போதிறதில்லை (1கொரிந்.14:17) என்பதை நன்கு அறிந்திருந்தும்: "எல்லாரும் அந்நியபாஷை வரத்தைக் கேளுங்கள், எல்லாரும் அந்நியபாஷையில் பேசுங்கள்" என்று உற்சாகப்படுத்துவது எத்தனைக் கொடிய வஞ்சகம்!*
அர்த்தம் சொல்லாமல் அந்நியபாஷையில் பேசுகிறதினால் சபைக்கு பிரயோஜனம் இல்லை என்பதை அறிந்திருந்தும்: சபையில் அந்நியபாஷையில் பேசுகிறதை பெரிய சாதனையாகவும், அதை சபைக்கு பெரிய ஆசீர்வாதமாகவும் காண்பித்து, அந்நியபாஷையில் பேசுகிறவர்கள் எல்லாவற்றிலும் தேறிவிட்டதுபோல அவர்களை நம்பப்பண்ணி, அந்நியபாஷையிலும் முக்கியமான சபைக்கு நேரடியாகப் பிரயோஜனப்படுக்கிற வரங்களை அவர்களுடைய கண்களுக்கு மறைத்துபோடுகிறது எத்தனை பெரிய மோசடி?
*அந்நியபாஷை வரத்தை மட்டும் முக்கியப்படுத்துவதன்மூலம் மற்ற வரங்களை மறைமுகமாக மட்டுப்படுத்தி, அந்த வரங்களால் கிடைக்கிற பலன்களை தடைசெய்கிறதினால் தேவனுடைய சபைக்கு நாம் ஏற்படுத்தும் நஷ்டம் எவ்வளவு பெரியது!*
எந்தக் காரணத்தினாலும்ஒரு வரத்தை முக்கியப்படுத்தி, மற்ற வரங்களை புறக்கணிக்கிறதின்மூலம், தேவன் தமது சபைக்கு ஆவிக்குரிய வரங்களை கொடுத்துள்ள நோக்கத்தை மறுதலித்து, அந்த வரங்களால் சபைக்கு கிடைக்கவேண்டிய பலன்களுக்கு குறுக்கே நிற்கிற ஊழியர்கள் அதிக ஆக்கினை அடைவோம் என்பதை அறியவேண்டும்.
*தேவன் தமது சபையின் பக்திவிருத்திக்காய் சபையார் பயன்படுத்திக்கொள்ளும்படி கொடுத்துள்ள வரங்கள் அனைத்தையும் குறித்து சபைக்கு போதியாமல், அவைகள் அனைத்தையும் பெற்று சபையார் பயன்படுத்தும்படி உற்சாகப்படுத்தாமல், சபையின் பக்திவிருத்திக்கு தடையாய் இருக்கும் ஊழியக்காரர்கள் அக்கினிக்கு தப்பமுடியாது!*
வரங்கள் ஆவியானவரால் தரப்படுகின்றன. அவைகளில் ஒரு குறிப்பிட்ட வரத்தை மட்டும் பிடித்துக்கொள்வதும், மற்ற வரங்களை புறக்கணிப்பதும் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான செயலாகும்.
*சபையாருக்கு தமது சித்தத்தின்படியே வரங்களை பகிர்ந்து கொடுத்து, சபையின் பக்திவிருத்திக்காய் தங்கள் வரங்களை பயன்படுத்த ஒவ்வொரு விசுவாசியையும் ஆவியானவரே வழிநடத்த ஊழியர்கள் விட்டுகொடுத்து, சபையை நடத்துகிறதில் பரிசுத்த ஆவியானவரை முழுவதும் சார்ந்துகொள்ளவேண்டும்.* (1கொரி.12:7-13)
"நாங்கள் விரும்புகிறபடிதான் சபையை நடத்துவோம். நாங்கள் விரும்புகிற வரத்தை பற்றிதான் விசுவாசிகளுக்கு போதிப்போம். எங்களுக்கு அவசியமில்லை என்று தோன்றுகிற வரங்களைப் பற்றி சபையாருக்கு போதிக்கவோ, அவைகளை பெற்றுக்கொள்ள உற்சாகப்படுத்தவோ, அந்நியபாஷை வரத்தைத் தவிர வேறு வரங்களை சபையில் பயன்படுத்த அனுமதிக்கவோ மாட்டோம்" என்பது ஆவியானவருக்கு எதிரான துணிக்கரமாகும்!
இதை அறியாமல் செய்கிறவர்கள் இரக்கம் பெறக்கூடும். அறிந்தே செய்கிறவர்கள் தப்பிக்கொள்ள வகைதேடவேண்டியது அவசியம்!!
க. காட்சன் வின்சென்ட்
8946050920
Thanks for using my website. Post your comments on this