Type Here to Get Search Results !

Godson Vincent K Bible Study in Tamil | கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக விசுவாசிகள் பேசலாமா? | Jesus Sam

ஐயா, நான் ஒரு பென்டகாஸ்டல் சபையில் ஐக்கியமாக இருக்கிறேன். எங்கள் சபையில் ஒருநாள், ஒரு விசுவாசி போதகருக்கு ஒரு மோதிரத்தை அணிவித்தார். அந்த மோதிரத்தை பெற்றுக்கொண்ட போதகர், "அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்" (எபேசி.4:13) என்கிற வசனத்தைக் வாசித்து, "மேய்ப்பர் நான்காவது இடத்தில் வருகிறபடியினால், கட்டை விரலிலிருந்து நான்காவது விரலில் மோதிரம் அணிந்துகொள்ளலாம்" என்று போதகம்பண்ணினார். இது சரியா? இந்த சபைக்கு நாங்கள் செல்லலாமா? வேண்டாமா?

தேவன் மேய்ப்பரை தமது சபையில் நான்காவது இடத்தில் ஏற்படுத்தியிருப்பது, நான்காவது விரலில் மோதிரம் அணிந்துகொள்வதற்கு அல்ல.

சபையார் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலையை செய்யவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை பக்திவிருத்தி அடையப்பண்ணவுமே, தேவன் மேய்ப்பர் உட்பட ஐந்துவிதமான ஊழியர்களை தமது சபைக்கு ஏற்படுத்தியிருக்கிறார். (எபேசி.4:11-13)

தேவனுடைய சபையை கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராக்க, ஐந்துவிதமான ஊழியரும் இரண்டு முக்கியமான காரியங்களை செய்யவேண்டும்.

முதலாவது சபையார் குழந்தைகளாகவும், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாகவும் இராதபடிக்கு அவர்களை பாதுகாக்கவேண்டும். (எபேசி.4:14)

இரண்டாவது அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், வளருகிறவர்களாயிருக்கும்படி சபையாரை வழிநடத்தவேண்டும். (எபேசி.4:15)

*தனது அழைப்பின் நோக்கத்தை விளங்கிக்கொள்ளாத ஒருவர், ஒரு சபையின் மேய்ப்பராயிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது!* 

சபையார் ஆவிக்குரிய ஜீவியத்தில் குழந்தைகளாகவும், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாகவும் இராதபடிக்கு அவர்களை பாதுகாக்க அழைக்கப்பட்டிருக்கிற ஒரு மேய்ப்பர்: சபையாரை ஆவிக்குரிய ஜீவியத்தில் குழந்தைகளாக வைத்திருப்பதோடு, சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகத்தை செய்கிறவராக இருப்பாரானால், அவர் நடத்துகிற சபைக்கு செல்வதை தவிர்த்து, அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவின் குணங்கள் எல்லாவற்றிலேயும் நீங்கள் வளரும்படி, திருவசனத்திலும் உபதேசத்திலும் உண்மையாய் பிரயாசப்படுகிற உண்மையுள் ஊழியர் (1தெச.5:12,13; 1தீமோத்.5:17) நடத்துகிற ஒரு சபையில் ஐக்கியமாவது நல்லது.

*தங்கள் அழைப்பை குறித்த தேவனுடைய நோக்கத்திற்கு எதிராக செயல்படும் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகளாகள், சுவிசேஷகர், மேய்ப்பர் மற்றும் போதகரிடமிடமிருந்து தங்கள் ஆத்துமாவை காத்துக்கொள்ள தேவஜனங்கள் விழிப்பாக இருக்கவேண்டும்!* 

வேதத்தை தூக்கினவர் எல்லாரும் தேவனுடைய ஊழியர் அல்ல, அவர்கள் போதிக்கிற எல்லாமே சத்தியமும் அல்ல!

காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய விசுவாசிகளை: தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களையே விளங்கிக்கொள்ளமுடியாத கேள்வியில் மந்தமுள்ளவர்களாயும், மறுபடியும் உபதேசிக்கப்படவேண்டியதாயிருக்கிற பாலை உண்ணத்தக்கக் குழந்தைகளான நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவர்களாயும், நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானோந்திரியங்கள் அற்றவர்களாயும் (எபிரே.5:11-14) வைத்திருக்கிற; அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் (அவருடைய சுபாவங்கள்) எல்லாவற்றிலேயும் வளருகிறவர்களாயிருக்கும்படி (எபேசி.4:15) சபையாரை வழிநடத்தாத ஐந்துவித ஊழியரில், (எந்த சபைபிரிவை சேர்ந்த) எந்த ஊழியர் செய்வதும் சரியான ஊழியம் அல்ல!

இவர்கள் கிறிஸ்துவாகிய அஸ்திபாரத்தின்மேல், அக்கினியில் வெந்துப்போகத்தக்க மரம், புல், வைக்கோல்களாக விசுவாசிகளைக் கட்டுகிறவர்கள். (1கொரிந். 3:10-13)

*இவர்களோடு செலவழிக்கும் நேரம், இவர்களுக்குக் கொடுக்கும் காணிக்கை & தசமபாகம், இவர்களுடைய ஊழியங்களுக்காய் கொடுக்கும் உடல் உழைப்பு, படும் பிரயாசம் இவைளில் ஒன்றும் பரலோகம் செல்லப் பயன்படாது!* 

நித்தியம் வரை நிலைத்திருக்க விரும்புகிற கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட ஊழியர்களை விட்டு விலகி, தங்களை கிறிஸ்துவின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல் போன்று உறுதியாகக் கட்டப் பிரயாசப்படுகிற (1கொரிந்.3:12,14) உத்தம ஊழியர்களைக் கண்டுபிடித்து, அவர்களோடு ஐக்கியப்படுவதுதான் புத்திசாலித்தனம்!!

க. காட்சன் வின்சென்ட்
        8946050920



தவறாக வாழ்கிற மற்றும் உபதேசிக்கிற ஒரு ஊழியர் நடத்தும் சபையை விட்டு விலகி வேறொரு சபைக்கு செல்வதற்கு பதிலாக, விசுவாசிகள் ஊழியரின் தவறை சுட்டிக்காட்டி, அவரை திருத்தி, அந்த சபையிலேயே நிலைத்திருக்கலாம் அல்லவா?

 இப்படி செய்கிறதுதான் ஆரோக்கியமானதும் அருமையானதுமான அணுகுமுறையாகும்.

தங்கள் தவறுகளை சுட்டிக்காட்ட ஊழியக்காரர்கள் விசுவாசிகளுக்கு வாய்ப்பளிக்கவேண்டும்.

பவுல் சொல்லுகிறபடி முதிர்வயதுள்ளவரை தகப்பனைப்போலவும், முதிர்வயதுள்ள ஸ்திரிகளைத் தாய்களைப்போலவும்,
பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், பாலிய ஸ்திரிகளை சகோதரிகளைப்போலவும் பாவிக்கிற ஊழியர்கள் (1தீமோத்.5:1,2), தங்கள் ஆவிக்குரிய தகப்பன், தாய், சகோதரர், சகோதரிகள் தங்கள் தவறுகளை சுட்டிக்காட்ட தாராளமாய் அனுமதிக்கக்கூடும்!

விசுவாசிகளும் ஊழியர்களை தங்கள் மகனாக, சகோதரராக பாவித்து, அவர்களுடைய தவறுகளை அன்புடனும் அக்கறையுடனும் சுட்டிக்காட்டவேண்டியது அவசியம்.

விசுவாசிகள் அனுமதிக்கப்படுகிறார்களா? 

தங்கள் ஜீவியத்திலும் ஊழியத்திலும் உள்ள குறைகளை தங்களுக்கு சுட்டிக்காட்டி, தங்களை திருத்துவதற்கு விசுவாசிகளை அனுமதிக்கிற ஊழியர்களை இன்று காணமுடிகிறதா?

*தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்?* தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். 
                 ரோமர் 8:33
*ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்?* கிறிஸ்துவே மரித்தவர், அவரே எழுந்துமிருக்கிறவர், அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், *நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே* 
                 ரோமர் 8:34
என்கிற வசனங்களை காண்பித்து, *"ஊழியக்காரர்களை கேள்விகேட்கவோ, குற்றப்படுத்தவோ உங்களுக்கு அதிகாரமில்லை"* என்று விசுவாசிகளின் வாய்களை அடைத்துவிடுகிற ஊழியர்களையே இன்று அதிகம் காணமுடிகிறதல்லவா?

உண்மையில் மேற்காணும் வசனங்கள் விசுவாசிகள் மற்றும் ஊழியர்கள் இருசாராருக்கும் பொதுவானது என்பது அநேக ஊழியர்களுக்கு தெரியவில்லை, விசுவாசிகளுக்கும் புரியவில்லை!

*ஊழியத்திற்கு அல்ல, பரலோகத்தில் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்தவர்களைப் பற்றி பொதுவாகப் பேசுகிற வசனங்கள் அவை.* (ரோமர் 8:29-32)

மேற்காணும் வசனங்களின்படி
தேவன் தெரிந்துகொண்ட ஊழியர்களின் தவறுகளை விசுவாசிகள் சுட்டிக்காட்டக்கூடாது என்றால், தேவன் தெரிந்துகொண்ட விசுவாசிகளின் குறைகளை ஊழியர்களும் சுட்டிக்காட்டி பிரசங்கிக்கவோ, கண்டிக்கவோ, புத்திசொல்லவோ கூடாதல்லவா?

*உலகம் தேவனுடைய பிள்ளைகளை குற்றப்படுத்தவோ, நியாயந்தீர்க்கவோ முடியாது* என்பதை குறித்து பேசுகிற வசனங்களை, *"விசுவாசிகள் ஊழியர்களை குற்றப்படுத்தவோ, நியாயந்தீர்க்கவோ கூடாது"* என்று கூறுவதாக வியாக்கியானம்பண்ணி, ஊழியர்கள் தங்களை தற்காத்துகொள்வது சரியல்ல.

விசுவாசிகளுக்கு உரிமை உண்டு!

ஊழியர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் உரிமை விசுவாசிகளுக்கு உண்டு.

நேர்மையான ஊழியர்களுக்கு அடையாளம் சரியான சாட்சிகளுடன் தங்கள் குற்றங்களை சுட்டிக்காட்டி, தங்கள்மேல் நடவடிக்கை எடுக்க விசுவாசிகளை அனுமதிப்பதுதான்.

*மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல்* நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது. 
             1தீமோத்.5:19
மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, *பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்* 
             1தீமோத்.5:20
என்று எபேசு சபை கண்காணிகளுக்கு பொருப்பாளராயிருந்த தீமோத்தேயுவுக்கு பவுல் சொல்லுகிற ஆலோசனை கவனிக்கத்தக்கது.

ஊழியருக்கு விரோதமாக சரியான சாட்சிகளுடன் கொடுக்கப்படும் புகாரை அவர்களுக்கு மேலாக இருக்கிற ஊழியர் நேர்மையாக விசாரித்து, சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார் பவுல்.

அப்படியானால், ஊழியர்களுடைய குற்றங்களை சுட்டிக்காட்டவும், அவர்கள் தங்களை திருத்திக்கொள்ளவில்லையென்றால், அவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கவும் விசுவாசிகளுக்கு உரிமை உள்ளது என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

*ஊழியரின் தவறுகளை இரண்டொருதரம் விசுவாசிகள் அன்புடனும் மரியாதையுடனும் தனிமையில் சுட்டிக்காட்டலாம்.*

சுட்டிக்காட்டப்படும் தன் தவறுகளை ஊழியர் சரிசெய்துகொள்வாரானால், அவருடன் தொடர்ந்து பயணிக்கலாம்.

தனிமையில் சுட்டிக்காட்டப்பட்டும் தன் தவறுகளைத் திருத்திக்கொள்ளாத ஊழியர்மேல் நடவடிக்கை எடுக்க சரியான சாட்சிகளுடன் நிர்வாகத்திடம் விசுவாசிகள் புகார் அளிக்கலாம். 

நிர்வாகமும் ஊழியரின் தவறுகளை கண்டுகொள்ளாமல் அவருக்கு ஆதரவாக இருக்கிறதென்றால், அந்த ஊழியர் தங்களுக்கு வேண்டாம் என்று முழுசபையும் புறக்கணிக்கலாம். தாங்கள் புறக்கணித்தும் ஊழியர் சபையைவிட்டு விலகாமலும், தன்னை திருத்திக்கொள்ளாமலும் இருப்பாரானால், விசுவாசிகள் அவரைவிட்டு விலகிப்போகலாம்.

*தன் தவறை உணராமலும், தன்னைத் திருத்திக்கொள்ளாமலும், தன்னை நியாயப்படுத்துகிற ஒரு ஊழியர், நிச்சயம் தேவனுடைய சபையை தேவனுடைய திட்டத்தின்படி (எபேசி.4:11-16) நடத்தவேமாட்டார்.* 

அவருடன் தொடர்ந்து பயணிப்பது விசுவாசிகளின் ஆத்துமாவுக்கு மிகுந்த சேதத்தை உண்டாகும்!

அப்படியே, தங்கள் ஊழியர்கள் வேதத்தை புரட்டிப் பேசுகிறதை விசுவாசிகள் திட்டமாய் அறிந்துகொண்டால், இரண்டொருதரம் அவர்களுக்கு புத்திசொல்லவேண்டும். அவர்கள் தங்கள் போதகக்தவறுகளை திருத்திக்கொண்டால் அவர்களுடன் பயணத்தைத் தொடரலாம், இல்லையேல் அவர்களைவிட்டு விலகுவதுதான் உத்தமம்.

*"வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு"* என்று ஊழியர் தீத்துவுக்கு ஆலோசனை சொல்லுகிறார் பவுல். (தீத்து 3:10)

ஒரு நல்ல ஊழியரே வேதத்தைப் புரட்டுகிற கள்ள ஊழியரைவிட்டு விலகியிருக்கவேண்டுமானால், வேதத்தை புரட்டுகிற ஒரு கள்ள ஊழியரிடமிருந்து விசுவாசிகள் விலகியிருக்கவேண்டியது எவ்வளவு அவசியம்!

இவர்களைவிட்டு விலகாத விசுவாசிகள் பரலோகத்தைவிட்டு விலக்கப்படவேண்டியிருக்கும்!! (2பேதுரு 2:1-3)

க. காட்சன் வின்சென்ட்
 8946050920



கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக விசுவாசிகள் பேசலாமா?

 பேசக்கூடாது என்றுதான் ஊழியக்காரர்கள் சொல்லிக்கொடுத்திருக்கிறோம்.

விசுவாசிகளும் ஆவியினால் அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள்தான் என்பதை மறந்துவிடுவிகிறோம்.

*நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது* என்று வேதம் செல்லுகிறதே! (1யோவான் 2:27)

தாவீதை துணைக்கு அழைக்கும் ஊழியர்கள்!

ஊழியக்காரர்களை விசுவாசிகள் குற்றப்படுத்தவோ, அவர்களுடைய தவறுக்குத்தக்க நடவடிக்கைகளை எடுக்கவோ கூடாது என்பதற்கு ஊழியர்களாகிய நாம் தாவீதை துணைக்கு அழைக்கிறோம்.

அவன் (தாவீது) தன் மனுஷரைப் பார்த்து: *கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன் மேல் என் கையைப்போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக. அவர் கர்த்தராலே அபிஷேகம்பண்ணப்பட்டவர்* என்று சொல்லி, 
                   1சாமு.24:6 *தன் மனுஷரைச் சவுலின்மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்.* 
                   1சாமு.24:7

மேற்காணும் வசனங்களை விசுவாசிகளுக்கு போதித்து, *"ஊழியக்காரர்கள் என்ன தவறுசெய்தாலும், கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்ட அவர்களை நீங்கள் குற்றப்படுத்தவோ, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ கூடாது, கர்த்தர் அவர்களை பார்த்துக்கொள்வார்"* என்று சொல்லி, விசுவாசிகளை ஊழியர்கள் பயமுறுத்தி வைத்திருக்கிறோம்.

சவுலை கொல்லுவதற்கு இரண்டாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோதும்,
*"கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமல்போகிறவன் யார்?"* என்று அபிசாயிடம் சொல்லி, சவுலை கொல்லாதபடிக்கு அவனை தாவீது தடுத்ததையும் (1சாமு.26:7-9) சபையாருக்கு சொல்லி, அவர்களுக்கு பீதியுண்டாக்கி வைத்திருக்கிறோம் அல்லவா? 

இதனால் நாம் என்ன அக்கிரமம் செய்தாலும், எவ்வளவு அசுத்தமாய் வாழ்ந்தாலும், எவ்வளவு தவறாக போதித்தாலும் அதை சகித்துக்கொண்டு, *"கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம்வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்துக்குப்போய் மாண்டாலொழிய, நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்"* என்று சவுலை குறித்து தாவீது சொன்னதுபோல (1சாமு.26:10,11), இன்று விசுவாசிகளும் ஊழியர்களைக் குறித்து சொல்ல அவர்களை பழக்கப்படுத்திவிட்டோம் அல்லவா?

சவுல் - தாவீது நிகழ்வு, ஊழியர் - விசுவாசிகளுக்கு பொருந்துமா? 

தாவீது சவுலை கொல்லுவதற்கு ஏற்ற சமயம் உண்டானபோது சவுல் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனாகவே இருந்தானா?

அப்பொழுதும் அவன் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்ட இராஜாவாகவே இருந்தானா?

இல்லை!

*கர்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்.* கர்த்தரால் வரவிடப்பட்ட *ஒரு பொல்லாதஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.* (1சாமு.16:14)

தாவீது சவுலை கொல்லுவதற்கு ஏற்ற சமயம் உண்டானபோது,
கர்த்தருடைய ஆவியை இழந்து பொல்லாத ஆவியையுடைய மனுஷனாக இருந்தான் சவுல்.

தம்முடைய வார்த்தையைப் புறக்கணித்த சவுலை, இஸ்ரவேலின்மேல் *ராஜாவாயிராதபடிக்கு புறக்கணித்துத் தள்ளி,* அவனிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு, *அவனைப் பார்க்கிலும் உத்தமனாயிருந்த தாவீதுக்கு அதைக் கொடுத்திருந்தார் கர்த்தர்.* (1சாமு.15:26,28)

சவுலை கொல்லுவதற்கான சந்தர்ப்பம் தாவீதுக்கு நேரிட்டபோது, சவுல் அபிஷேகம்பண்ணப்பட்டவனாகவோ, தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ராஜாவாகவோ இருக்கவில்லை.

*கர்த்தர் சவுலின் ராஜ்யபாரத்தை அகற்றி, தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற தாவீதை தமக்குத் தேடி, அவனை தம்முடைய ஜனங்களின்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டிருந்தார்.* (1சாமு.13:14)

அப்பொழுது தாவீதே தேவனால் ராஜாவாகத் தெரிந்துகொள்ளப்பட்டு, அபிஷேகம்பண்ணப்பட்டிருந்தார். கர்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார். 
(1சாமு.16:1,2,13)

கர்த்தரால் இஸ்ரவேலின் இராஜாவாக அபிஷேகப்பண்ணப்பட்டு, தேவனுடைய ஆவியைப் பெற்றிருந்த தாவீது: கர்த்தரால் இராஜாவாயிராதபடிக்கு தள்ளப்பட்டு, தேவஆவியை இழந்து பொல்லாத ஆவியில் நிறைந்திருந்த சவுலை, *"கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன் மேல் என் கையைப்போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக. அவர் கர்த்தராலே அபிஷேகம்பண்ணப்பட்டவர்"* என்று சொல்லி தப்பவிட்டது சரியல்ல!

*"இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன். உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் சொன்ன நாள் இதுதானே"* என்று தனது மனுஷர் சொன்னதை தாவீது கேட்கவில்லை. (1சாமு.24:4)

சவுலை கொல்லுவதற்கு தாவீதுக்கு இரண்டாவது ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்தபொழுது அபிசாப் தாவீதைப் பார்த்து: *"இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். இப்பொழுதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக்குத்தட்டுமா?"* என்று கேட்டும், தாவீது அபிசாயைப் பார்த்து: *"அவரைக் கொல்லாதே. கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமல்போகிறவன் யார்?"* என்று சொல்லி, அவனை தடுத்து, சவுலை உயிரோடே விட்டுவிட்டார்.
(1சாமு.26:8,9)

தாவீது நல்ல மனதுள்ளவரும், தேவனுக்கு பயப்படுகிறவருமாயிருந்தாலும், தனக்கு கிடைத்த இரண்டு சந்தர்ப்பதையும் நழுவவிட்டு தவறுசெய்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

தனக்கு கர்த்தர் கொடுத்த சந்தர்ப்பத்தை தாவீது சரியாகப் பயன்படுத்தி சவுலை கொன்றிருப்பாரானால், அல்லது சவுலை கொல்லுவதற்கு அபிசாயையாவது அனுமதித்திருப்பாரானால், *"சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவர் போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே"* என்று கதறவேண்டிய அவசியமே அவருக்கு வந்திருக்காது.
(2சாமு.1:21)

சவுலின் மரணம் விருத்தசேதனமுள்ள, தேவனால் அபிஷேகப்பண்ணப்பட்ட இராஜாவாகிய தாவீதின் கைகளால், அல்லது விருத்தசேதனமுள்ள அபிசாயின் கைகளால் மேன்மையாக நேர்ந்திருக்கும்.

*சவுல் விருத்தத்தசேதனமில்லாத ஒரு அமலேக்கியனின் கைகளால் மடிந்து, இழிவான ஒரு முடிவை சந்திக்க (2சாமு.1:1-15) தாவீது தானே வாய்ப்பளித்துவிட்டு, பிறகு புலம்புகிறதில் நியாயமில்லையே!*

இப்படியிருக்க, அபிஷேகம்பண்ணப்பட்ட தாவீது, அபிஷேகத்தை இழந்த சவுலை, கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனாக எண்ணி விட்டுவிட்டதை மாதிரியாகக் காண்பித்து: *பரிசுத்தஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்டிருந்தும் தவறுசெய்கிற ஒரு ஊழியரை, பரிசுத்தஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிற விசுவாசிகள் குற்றப்படுத்தவோ, அவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கவோ கூடாது* என்று ஊழியக்காரர்கள் விசுவாசிகளுக்கு போதிக்கிறது கொஞ்சமும் பொருத்தமில்லை!

அபிஷேகத்தை இழந்த ஒருவரை அபிஷேகத்தால் நிறைந்திருந்தவர் விட்டுவிட்டதை காண்பித்து: *அபிஷேகம் பெற்றிருக்கிற தாங்கள் செய்யும் தவறுகளுக்காய், அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிற விசுவாசிகள் நடவடிக்கை எடுக்கக்கூடாது* என்று ஊழியக்காரர்கள் விசுவாசிகளை அச்சுறுத்துவது நியாயம் கிடையாது!

தவறுசெய்யும் ஊழியர்மேல் நடவடிக்கை எடுப்பது தண்டணைக்குரிய குற்றமா?

கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிற ஊழியர் ஒரு தவறும் செய்யாதபட்சத்தில், அவர்மேல் பொய்யாய் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிற விசுவாசிகள் நிச்சயம் தேவனுடைய தண்டனைக்கு தப்பமுடியாது!

கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டிருந்தும் தவறாக வாழ்கிற, அல்லது தவறாக போதிக்கிற ஒரு ஊழியரை விசுவாசிகள் திருத்த முற்சிக்கிறதும், அவர் திருந்தாதபட்சத்தில் அவர்மேல் தேவையான நடவடிக்கை எடுக்கிறதும், தேவனால் தண்டிக்கப்படத்தக்க குற்றமாகுமா?

*கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்ட ஊழியரை குற்றப்படுத்தவோ, அவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கவோ விசுவாசிகளுக்கு உரிமையில்லை என்றால்; கர்த்தரால் அபிஷேகப்பண்ணப்பட்டிருக்கிற விசுவாசிகளின் குற்றங்களை ஊழியர்கள் சுட்டிக்காட்டுவதும், அவர்களுடைய குற்றங்களுக்குத்தக்க நடவடிக்கை எடுப்பதும், சிலரை சபையைவிட்டே நீக்குவதும் நியாயமாகுமா?* 

கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டிருந்த தாவீது, அபிஷேகத்தை இழந்திருந்த சவுலின்மேல் நடவடிக்கை எடுத்திருந்தால், அது தேவனால் பாவமாகவே கருதப்பட்டிருக்காது.

கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்ட ஊழியரால் கண்டிக்கப்படவோ, சபையைவிட்டு நீக்கப்படவோக்கூடிய அளவுக்கு ஒரு விசுவாசி தவறு செய்கிறாரென்றால், *"அவர் நிச்சயம் அபிஷேகத்தை இழந்தவராகத்தான் இருக்கவேண்டும், அபிஷேகத்தை இழந்த அவர்மேல் அபிஷேகிக்கப்பட்ட ஊழியர் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை"* என்று விசுவாசிகள் காரியத்தில் ஊழியர்கள் சுலபமாய் தீர்ப்புசெய்துவிடுவோம்! 

ஆனால், விசுவாசிகள் சபையை விட்டு வெளியேற்றக்கூடிய, அல்லது தாங்கள் சபையைவிட்டு வெளியேறக்கூடிய அளவுக்கு ஒரு ஊழியர் தவறு செய்கிறாரென்றால், அல்லது தவறாகப் போதிக்கிறாரென்றால், *"அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவர்"* என்று சொல்லி அவரை பாதுகாப்போம்!

இது எந்தவிதத்தில் நியாயம்?

மேலும், தாவீது விசுவாசியோ, சவுல் ஊழியக்காரரோ அல்ல. இருவருமே இஸ்ரவேலின் இராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள்!

ஒருவர் அபிஷேகம் பண்ணப்பட்டவர், ஒருவர் அபிஷேகத்தை இழந்திருந்தவர்.

*இராஜாவாயிராதபடிக்கு கர்த்தரால் தள்ளப்பட்டு, அபிஷேகத்தை இழந்திருந்த ஒருவனை, இராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டு, ஆவியில் நிறைந்திருந்த ஒருவர் கொல்லாமல் விட்டுவிட்டதற்கும்; ஆவியினால் அபிஷேகம்பண்ணப்பட்டும் தவறுசெய்கிற ஊழியர்கள்மேல், ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருக்கிற விசுவாசிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.* 

ஊழியக்காரரின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை திருத்த முயற்சிக்கிற, அல்லது திருந்தாத ஊழியர்கள்மேல் சபையின் நலன்கருதி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிற சபையார் அல்ல, தங்களை தற்காத்துக்கொள்ளும்படிக்கு தாவீது - சவுல் நிகழ்வை, விசுவாசிகளை
பயமுறுத்தும்படி திரித்து போதிக்கிற ஊழியக்காரர்களே தேவனுடைய தண்டனைக்குரிய குற்றவாளிகளாகிறோம்!

*சத்தியத்தை நமக்கு சாதகமாய் திரிப்பதற்கு பதிலாக, நம் தவறுகளை திருத்திக்கொள்ளப் பழகலாமே!!* 

- தாழ்மையுடன்
 உடன் ஊழியன்....

க. காட்சன் வின்சென்ட்
            8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.