Type Here to Get Search Results !

Godson Vincent K | Pastor David & Vincent | Jesus Sam

🤵🏻‍♂ பாஸ்டர் டேவிட் & வின்சென்ட் (6️⃣)
🤵🏻‍♂ ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் வின்சென்ட்!
🤵 ப்ரெய்ஸ் த லார்ட் பாஸ்டர் டேவிட்!
🤵🏻‍♂ தீவிரமான ஒரு சிந்தன ரேக உங்க மொகத்துல தெரிதே?
🤵 ஆமாம் பாஸ்டர், அப்போஸ்தலர் நடபடிகள்ல கவனிச்ச ஒரு காரியம் என்ன ரொம்ப சிந்திக்கவச்சிடுச்சி பாஸ்டர்.
🤵🏻‍♂ அப்படி எதை ஆழமா கவனிச்சீங்க பாஸ்டர்?
🤵 அப்போஸ்தலர் 2:44,45ல, *"விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்"* இன்னு இருக்குது இல்ல, அதப்பத்திதான் யோசிச்சிக்கிட்டிருக்கிறேன் பாஸ்டர்.
🤵🏻‍♂ அதப்பத்தி என்ன யோசிக்கிறீங்க பாஸ்டர்?
🤵 நம்மத் தலைமுறையில, நம்ம சபையிலயோ, வேற எந்த சபையிலயோ விசுவாசிங்க இப்படிச் செஞ்சதப் பாத்திருக்கிறோமா? இல்ல கேள்விப்பட்டுதான் இருக்கிறோமா பாஸ்டர்?
🤵🏻‍♂ அப்போஸ்தலர் 2:42 சொல்றபடி, *எருசலேம் சபையார் அப்போஸ்தலருடைய உபதேசத்திலயும், அந்நியோந்நியத்திலயும், அப்பம் பிட்கறதலயும், ஜெபம்பண்றதலயும் உறுதியாத் தரிச்சிருந்ததுதான்* அதுக்குக் காரணம் பாஸ்டர்.
🤵 நம்ம சபையார் 
உபதேசம், அந்நியோந்நியம், அப்பம் பிட்குதல், ஜெபம்பண்ணுதல்ம், இந்த நாலு விஷயத்துல ஒன்னுலயாவது உறுதியா தரிச்சிருக்குறாங்களா பாஸ்டர்?
🤵🏻‍♂ இந்த நாலு காரியத்துல ஒன்னையாவது சத்தியத்தின்படி அவங்களுக்கு நாம உருபடியா போதிச்சிருக்கறமா பாஸ்டர்?
🤵 நீங்கக் கேக்கறதும் நியாயந்தான் பாஸ்டர். நாம என்னைக்காவது *இருக்கிற விசுவாசிகள் இல்லாத விசுவாசிகளுக்கு கொடுத்து உதவனும்ன்னு* சபையில போதிச்சிருக்கறமா?
🤵🏻‍♂ நமக்கும் நம்ம ஊழியத்துக்கும் கொடுக்கறதப்பத்தி போதிக்கவே நமக்கு நேரம் பத்தலயே பாஸ்டர்!
🤵 *"விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை, சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது"* இன்னு அப்போஸ்தலர் 4:32ல சொல்லப்பட்டிருக்கிறதப் பாத்து நான் அசந்துட்டேன் பாஸ்டர்!
🤵🏻‍♂ என்ன, கண்ணசந்துட்டீங்களா?
🤵 காமடிப்பண்ணாதீங்க பாஸ்டர். *திரளான ஜனம், ஒரே இருதயம்! எதுவும் நமதல்ல, எல்லாருக்கும் உரியது!!* இந்த அனுபவத்த நம்ம சபைகள்ல பாக்கமுடியுதா?
🤵🏻‍♂ எருசலேம் சபையில 8120 பேருக்குமேல அப்ப இருந்தாங்க. ஆனா அவங்க ஒரே இருதயமுள்ளவங்களா இருந்தாங்க! நம்மகிட்ட இருக்கிற அம்பதுபேருக்கு 5000 இருதயம் இருக்கே பாஸ்டர்? *"என் பணம் பொருள் ஆஸ்தி சபையிலுள்ள எல்லாருக்குமானது"* இன்னு நெனைக்கிற ஒரு ஆளு இங்க ஏது பாஸ்டர்?
🤵 இதுக்கெல்லாம் காரணம் யாரு பாஸ்டர்?
🤵🏻‍♂ வேறயாரு? ஊழியக்காரங்களான நாமதான் பாஸ்டர்! *நம்மோட பணம் பொருள் ஆஸ்தி சபையிலுள்ள எல்லாருக்குமானதுன்னு மொதல்ல நாம நெனைக்கிறமா? போதிக்கவாவது செய்யறமா?*
🤵 பொதுவுடமை கொள்கையின் பிறப்பிடம் தேவனுடைய திருச்சபைதானே பாஸ்டர்? *இன்னக்கி கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்கக்கிட்ட இருக்கிற பொதுவுடமை சிந்தையில கால்பாகமாவது நமக்கும், சபையாருக்கும் இருக்கா?*
🤵🏻‍♂ அப்போஸ்தலர் 3:6ல பாக்கறபடி
 *வெள்ளியையும் பொன்னையும் (பணத்தை) பெருசா நெனைக்காம, இயேசுகிறிஸ்துவ பெருசா நெனைக்கிற பேதுரு போன்ற ஊழியக்காரங்களாலத்தான் சகலத்தையும் பொதுவா வச்சி அநுபவிக்கிறதபத்தி போதிக்கமுடியும், வாழவும் முடியும்* பாஸ்டர்!
🤵 1தீமோத்தேயு 6:9,10 சொல்றபடி: *ஐசுவரியவான்களாகனுங்கிற விருப்பமும், பணஆசையும் உள்ளவங்களால பொதுநல சிந்தையோட வாழவோ, போதிக்கவோ முடியாது* இங்கறீங்க?
🤵🏻‍♂ சந்தேகமே இல்ல!
🤵3120 பேர்களுக்குமேல அங்கத்தினர்களா இருந்த ஒரு திருச்சபையின் *மூத்த ஊழியரா இருந்தும், "வெள்ளியும் பொன்னும் (பணம்) என்னிடத்திலில்லை" இன்னு பேதுரு சொன்னது* இன்னைக்கு அதிசயத்திலும் அதிசயம் இல்லையா பாஸ்டர்?
🤵🏻‍♂ அப்படி இருந்ததனாலத்தான் *இன்னைக்கு நம்மல்ல எவரும் செய்யமுடியாத அதிசயத்த அவரால செய்யமுடிஞ்சது* பாஸ்டர்.
🤵 இதுவும் கவனிக்கப்படவேண்டிய விஷயந்தான் பாஸ்டர்.
🤵🏻‍♂எருசலேம் சபையார்ல நிலங்களையும் வீடுகளையும் உடையவங்க அவைகள வித்து, விக்கப்பட்டவைகளின் கிரயத்தக் கொண்டுவந்து எங்க வச்சதா அப்போஸ்தலர் 4:34,35 சொல்லுது பாஸ்டர்?
🤵 *"அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள்"* இன்னு இருக்கு பாஸ்டர்.
🤵🏻‍♂ ஆதி அப்போஸ்தலர் பணத்துக்கு கொடுத்த மரியாத அவ்வளவுதான்!
🤵 நாம பணத்துக்கு நம்ம தலைக்குமேல இல்ல எடங்கொடுக்கிறோம்!
🤵🏻‍♂ தங்கள் பாதத்திலே வைக்கப்பட்ட 
நிலம், வீடு இவைகளின் கிரயத்த அப்போஸ்தலர் என்ன பண்ணதா அப்போஸ்தலர் 4:35 சொல்லுது பாஸ்டர்?
🤵 *"அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை"* இன்னு சொல்லுது பாஸ்டர்?
🤵🏻‍♂ இன்னக்கி விசுவாசிங்க நிலங்களையும் வீடுகளையும் வித்து, விக்கப்பட்டவைகளின் கிரயத்தக் கொண்டுவந்து நம்ம பாதத்துல வச்சா என்ன நடக்கும்?
🤵 *அது அப்படியே நம்ம பேருல நிலங்களா, வீடுகளா மாறிடும், நமக்கு ஒன்றும் குறைவாயிருக்காது* பாஸ்டர்!
🤵🏻‍♂ இதுதான் நமக்கும் ஆதிசபை ஊழியர்களுக்கும் உள்ள வித்தியாசம்!
🤵 இன்னுங்கொஞ்சம் புரியறமாதிரி சொல்லுங்க பாஸ்டர்.
🤵🏻‍♂ ஆதிசபை ஊழியருங்க ஏழ விசுவாசிகளோடக் குறைவுகள எப்படி நெறைவாக்கனாங்க?
🤵 இருக்கிற விசுவாசிங்கக்கிட்டருந்து வாங்கி, இல்லாதவங்களுக்கு கொடுத்து நெறைவாக்கனாங்க.
🤵🏻‍♂ ஏழ விசுவாசிங்க நம்மகிட்ட தங்களோட தேவய சொல்லி, ஜெபிக்கக் கேட்டிருந்தா, நாம என்னபண்ணியிருப்போம்?
🤵 *"எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் தசமபாகத்த தவறாம கரக்டா கொடுத்துட்டீங்கனா, கர்த்தர் உங்கள இடங்கொள்ளாமப்போகுமட்டும் ஆசீர்வதிப்பார்"* இன்னு சொல்லி அனுப்பியிருப்போம் பாஸ்டர்.
🤵🏻‍♂ இப்ப புரியுதா ஆதிசபை ஊழியருக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்?
🤵 நல்லா புரியுது பாஸ்டர்! ஒரு சபையில விசுவாசிங்க லோனுக்கு பிடித்தம்போக வரும் சம்பளத்துல இருந்து கொடுக்கிற தசமபாகத்த வாங்காம, முழுசம்பளத்தக் கணக்குபண்ணி அதுலருந்து தசமபாகத்த கண்டிஷனா வாங்கி, அவங்கள ரொம்பக் கொடுமபடுத்தறாரு பாஸ்டர்!
🤵🏻‍♂ ஆதிசபையில இப்படி ஒரு ஊழியர நம்மாலப் பாக்கமுடியுமா?
🤵 *ஆதிசபை ஊழியருங்களப்பத்தி இன்னைய கிறிஸ்தவங்களுக்கு சரியா தெரிஞ்சிட்டா, நம்மளல்லாம் ஊழியக்காரங்களா மதிக்கவேமாட்டாங்க* பாஸ்டர்!
🤵🏻‍♂ ஆதிசபயபத்தி நம்ம சபை மக்களுக்கு தெரியாதவரைக்கும் நமக்கு பிரச்சனயில்ல பாஸ்டர்.
🤵 ஏழை விசுவாசிகளின் திருமணம், படிப்பு, உணவு, உடை, தொழில் இவைகளுக்கு பணக்கார விசுவாசிங்க தங்களோட பங்களிப்ப கொடுக்கனும் இல்லையா பாஸ்டர்?
🤵🏻‍♂ கொடுக்கனுங்றதவிட, ஊழியக்காரங்க கொடுக்கவைக்கனும் பாஸ்டர்.
🤵 *"நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக.* நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். 
 *ஆகையால்* நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, *யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்"* இன்னு 
கலாத்தியர் 6:9,10ல பவுல் போதிச்சதுபோல நாமும் சபையாருக்கு போதிக்கனும் இல்லையா பாஸ்டர்?
🤵🏻‍♂ கலாத்தியர் 6:6ல, *"திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்"* இன்னு ஊழியருக்குக் கொடுக்கிறதப்பத்திப் போதிக்கிற பவுல்: கலாத்தியர் 6:10ல *"நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்"* இன்னு மற்றவர்களுக்கும், குறிப்பாக விசுவாச குடும்பத்தாருக்கும் கொடுக்கிறதப்பத்தி போதித்திருக்கிறதுதான், *கொடுக்கறதப்பத்தின சமநிலைபோதகம்* பாஸ்டர்.
🤵 *"பரிசுத்தவான்களுடைய (ஊழியர் & விசுவாசிகளுடைய) குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்"* இன்னு ரோமாபுரி சபைக்கும் பவுல் ஆலோசன கொடுக்கிறத
ரோமர் 12:13ல பாக்கலாம் பாஸ்டர்.
🤵🏻‍♂ *மக்கெதோனியா நாட்டுச் சபைகள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்பட்டு, கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், பரிபூரண சந்தோஷத்தினாலே, யூதேயாவில் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட பரிசுத்தவான்களுக்கு மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்ததை* கொரிந்து சபைக்கு நினைப்பூட்டி, *அவங்களும் உற்சாகமாய் கொடுக்கும்படி பவுல் ஆலோசன கொடுப்பத* 2கொரிந்தியர் 7 & 8ஆம் அதிகாரங்கள்ல பாக்கலாம் பாஸ்டர்.
🤵 மக்கதோனிய சபைகள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுக்கக் காரணம், அவங்களுக்கு பவுல் கொடுத்த உபதேசம்தானே பாஸ்டர்?
🤵🏻‍♂ அதுல சந்தேகமே இல்ல பாஸ்டர்.
🤵 நமக்குன்னு கேட்டா சபையார் கொடுத்துடுவாங்க பாஸ்டர். ஏழ விசுவாசிங்களுக் கொடுக்கசொன்னா கொடுப்பாங்களா?
🤵🏻‍♂ ஏழ விசுவாசிகளுக்குகொடுக்கும்படி கேக்கவோ, கெஞ்சவோக் கூடாது பாஸ்டர். 1 தீமோத்தேயு 6:17-19ல பவுல், *"இவ்வுலகத்திலே ஜசுவரியமுள்ளவர்கள் .... நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும் .... அவர்களுக்குக் கட்டளையிடு"* இன்னு தீமோத்தேயுவுக்கு சொல்லுகிறபடி, ஏழை விசுவாசிகளுக்கு உதவிசெய்ய பணக்கார விசுவாசிகளுக்கு நாம கட்டளையிடனும் பாஸ்டர்.
🤵 நமக்கு தசமபாகம் கொடுக்கலனா சாபம் வரும்ன்னு தைரியமா சொல்லி, தவறாம வாங்கிக்கிற நாம; ஏழ விசுவாசிகளுக்கு கொடுக்கக் கட்டளையிட்டு, கொடுக்கவும் வைக்கிறதுதானே நியாயம்?
🤵🏻‍♂ யாக்கோபு 1:27ல, *"திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும்,..... பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது'* இன்னு யாக்கோபு சொல்லுவதுபோல சொல்லவும்; யாக்கோபு 2:15-17ல, *"ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,* 
உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், *சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?"* இன்னு யாக்கோபு கேக்கறதுபோல விசுவாசிகளக் கேக்கவும் நமக்கு தைரியம் வேணும் பாஸ்டர்.
🤵 தைரியம் மட்டுமில்ல பாஸ்டர், *நாம நடத்தற ஜனங்கள்மேல நமக்கு உண்மையான அன்பும், அக்கறையும், ஏழை விசுவாசிகளின் தேவைகளக்குறிச்ச பாரமும் அவசியம்* பாஸ்டர்!
🤵🏻‍♂ உண்மதான் பாஸ்டர். சில காரியங்கள்ல விசுவாசிகள எந்த எல்லைக்கும் போய் திட்ற அளவுக்கு தைரியமுள்ள நமக்கு: ஏழை விசுவாசிகள்மேல உண்மையான அன்பு இல்லாததுதான் அவங்களுக்கு உதவிசெய்ய பணக்கார விசுவாசிகளுக்கு கட்டளையிட முடியாததுக்கு காரணம்!
🤵 1 யோவான் 3:16-18ல, *"அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே* அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். *நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.* ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, *தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால்,* அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? *என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்"* இன்னு அன்பின் அப்போஸ்தலன் கட்டளையிடுகிறார் அல்லவா?
 
🤵🏻‍♂ *ஆதிசபை விசுவாசிகளின் இருதயம் நம்ம சபை விசுவாசிகளுக்கும், ஆதிசபை ஊழியர்களின் இருதயம் நமக்கும் உண்டாக* அதிகம் ஜெபிக்கனும் பாஸ்டர்!
🤵 *ஏழை விசுவாசப் பிள்ளைகளின் திருமணத்த பணக்கார விசுவாசிங்க சேர்ந்து நடத்திவைக்கனும், ஏழை பிள்ளைகள படிக்கவைக்கனும், கடன்பட்டவங்கள விடுவிக்கனும், உணவு உடைக்காய் சிரமபட்றவங்களுக்கு அவைகள கொடுக்கனும், சொந்தமா ஏதாச்சும் தொழில் செஞ்சி பொழச்சிக்க வழிகாட்டனும். மொத்தத்துல இல்லாதவர்களின் குறைவை இருக்கிறவர்கள் நிறைவாக்கும் ஆதிசபையின் அதிசயம் நம்ம சபைகள்ல நடக்கனும்* பாஸ்டர்! 
🤵🏻‍♂ அவசியம் ஐயா! தேவன் நம்மையும் *நாம் நடத்தும் அவருடைய சபையையும் ஆதிசபையின் அநுபவங்களுக்கு* நிச்சயம்
 நடத்துவார்!
🤵 மகிழ்ச்சி ஐயா, மறுபடியும் சந்திப்போம்!!
- ஊழியர்களின் சிந்தனைக்கு உடன் ஊழியன்.....
 க. காட்சன் வின்சென்ட்
            8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.