Type Here to Get Search Results !

Godson Vincent Bible Study in Tamil | இந்து முன்னனி | கர்த்தர் வேடிக்கை பார்க்கவா நம்மை வைத்திருக்கிறார்? | Jesus Sam

இந்து முன்னனி என்கிற அமைப்பின் மாநில பேச்சாளர் சிவகங்கை பிரபாகரன் என்பவர் கிறிஸ்தவ மார்க்கத்தை கொச்சைப்படுத்தியதற்காக, அவரை வன்மையாகக் கண்டிப்பதோடு, தமிழ்நாடு அரசும் காவல்துறையும் அவர்மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிறிஸ்தவ அமைப்புகள் வேண்டுகோள் விடுப்பது சரியா?

சத்திய வேதத்தையும், வேதத்தின் நாயகன் இயேசுகிறிஸ்துவையும் உண்மையாய் நேசிக்கிற உத்தமக் கிறிஸ்தவரால்: கிறிஸ்தவ மார்க்கத்திற்கு எதிராகப் பேசுகிற, செயல்படுகிற எவரையும் கண்டிக்கவோ, அவரை தண்டிக்கும்படி அரசுக்கும், காவல்துறைக்கும் கோரிக்கை வைக்கவோ முடியாது!

தம்மை சமாரியன் (கீழ்ஜாதிக்காரன்) என்றும், பிசாசுபிடித்தவனைன்றும் (யோவான் 8:48), பயித்தியக்காரன் என்றும் (யோவான் 10:20) பழித்து, கலகக்காரன் என்று குற்றப்படுத்திய யூதர்களை (லூக்கா 23:2,5) இயேசுகிறிஸ்து கண்டிக்கவோ, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை வைக்கவோ இல்லை!

*இன்றைக்கும் இயேசுகிறிஸ்துவை நிந்திக்கிற எவரை குறித்தும் கிறிஸ்தவர்கள் அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய எந்த நிந்தனையும் அவருடைய புகழை மங்கச்செய்திடமுடியாது!* 

தமதுனிமித்தம் உலகம் நம்மை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் நம்பேரில் பொய்யாய்ச் சொல்லும்போது: நமக்கு 
பரலோகத்தில் உண்டாகும் மிகுதியானப் பலன் நிமித்தம் சந்தோஷப்பட்டு களிக்கூரவே நமது குருவானவர் நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்! (மத்.5:11,12)

தரமான கிறிஸ்தவர்களுக்கு அடையாளம் கிறிஸ்துவினிமித்தம் தங்களுக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் பிரியப்படுவதுதான்! (2கொரிந்.12:10)

*கிறிஸ்துவினிமித்தம் வரும் பலவீனம், நிந்தை, நெருக்கம், துன்பம், இடுக்கண் இவை எதிலும் பிரியப்படாமல்; ஆசீர்வாதம், ஐசுவரியம், சுகம், சுகபோகம் என்று ஒரு பாதுகாப்பான மண்டலத்தை மட்டுமே வாஞ்சிக்கும் போலிகிறிஸ்தவ உலகமே, கிறிஸ்தவ மார்க்கத்துக்கு எதிரானவர்களுக்கு எதிர்வினையாற்றும்!* 

தாம் கைதுசெய்யப்படும்போது தமது சீஷர்கள் *"ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா"* என்றுசொல்லி, அந்தப்படியே அவர்களில் ஒருவனான பேதுரு பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டி எதிர்வினையாற்றியபோது: *"இம்மட்டில் நிறுத்துங்கள்"* என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தின கருணாமூர்த்தி நமது கர்த்தர்! (லூக்கா 22:49-51)

தமது முதல் இரத்தசாட்சி ஸ்தேவானை கொலைசெய்த கூட்டத்திற்கு தலைமை தாங்கியதோடு (அப்.7:58), தமது மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தி,
(அப்.22:4), தமது சபையை பாழாக்கிக்கொண்டிருந்த (அப்8:1-3) திருச்சபையின் எதிரியான சவுலின் பாதம் (ஆத்துமா) சேதமாகிறதையே விரும்பாமல், *"முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்"* என்ற அன்பின் சொரூபியல்லவா நமது ஆண்டவர்! (அப்.9:5)

நூறு ஸ்தேவனுக்கு இணையான ஊழியத்தை செய்து, மூன்று கண்டங்களில் தேவனுடைய திருச்சபையை ஸ்தாபித்த பவுலை, கிறிஸ்தவ மார்க்கத்தின் எதிரிகள் கூட்டத்திலிருந்துதான் தேவன் தெரிந்துகொண்டார் என்பதை கிறிஸ்தவர் மறந்துவிடக்கூடாது!

*"உங்கள் ஆண்டவர் காதல் தோல்வியடைந்து தாடிவளர்த்துக்கொண்டவர், சிலுவையில் தன்னையே காப்பாற்றிக்கொள்ளமுடியாதவர், உங்களை எப்படி காப்பாற்றுவார்?"* என்று, எனக்கு நற்செய்தி சொன்ன என் கல்லூரி நண்பர்களை ஒருகாலத்தில் பரியாசம் செய்த என்னையும் தமது தொண்டனாக்கி, பல லட்சம் மக்களுக்கு சத்தியத்தை விதைக்கும் பாத்திரமாகவும், பல நூறு ஊழியர்களை திருச்சபை ஊழியத்தில் பயிற்றுவிக்கும் ஊழியனாகவும் பயன்படுத்திவருகிற என் நேசர் இயேசுவை ஸ்தோத்திரிக்கிறேன்! 

*நமது சத்துருக்களைச் சிநேகிக்கவும், நம்மைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதிக்கவும், நம்மைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யவும், நம்மை நிந்திக்கிறவர்களுக்காகவும் நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணவுமே நாம் நம் எஜமான் இயேசுவினால் கட்டளையிடப்பட்டிருக்கிறோம்!* (மத்.5:44)

சத்துருக்களுக்கு சத்துருவாகவும், சபிக்கிறவர்களைச் சபிக்கவும், பகைக்கிறவர்களுக்கு தீமைசெய்யவும், நிந்திக்கிறவர்களோடும் துன்பப்படுத்துகிறவர்களோடும் சண்டையிடவும் இயேசுவின் உண்மை சீஷனுக்கு அனுமதியில்லை!

*"என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே"* என்று கிறிஸ்து சொன்னதை (யோவான் 18:36) கிறிஸ்தவர் நினைவில் நிறுத்தவேண்டும்!

நமது ஆண்டவரின் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதாயிராதபடியினால், அவருடைய ஊழியர் அவருக்காய் உலகத்தோடு போராடவேண்டிய அவசியமே இல்லை!

*முடிவில்லாத அவருடைய நித்திய ராஜ்யதிற்கு முடிவுரை எழுதுவது இந்த உலகத்திற்கு ஒருபோதும் சாத்தியமில்லை!* (லூக்கா 1:33)

நமது எஜமான் இயேசுவை உண்மையாகவே கனம்பண்ணுகிற கிறிஸ்தவர்கள், *"பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்"* என்கிற அவருடைய கட்டளையின்படி: நமது பரமபிதாவின் பூரணசற்குணத்தை பூமில் உள்ள சகமனுஷரிடம் காண்பிக்கவேண்டியதே இன்று நமக்கு அவசியமாயிருக்கிறது. (மத்.5:48)

*நமது பரமபிதா தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்!* (மத்.5:45)

தங்களைச் சிநேகிக்காதவர்களையும் சிநேகிக்கிற இயேசுவின் சீடர்களை இந்த உலகம் தேடுகிறது! (மத்.5:46)

தங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்தாமல், எதிரிகளையும் வாழ்த்தும் இயேசுவின் சீடர்களை இந்த உலகம் தேடுகிறது! (மத்.5:47)

*புறஜாதிகள் நம்மை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் நமது நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ள கிறிஸ்தவர் கடமைபட்டுள்ளோம்!* (1பேதுரு 2:12)

உலகத்தாரால் எத்தரென்னப்பட்டாலும் *நிஜஸ்தராகவும்,* அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் *நன்றாய் அறியப்பட்டவர்களாகவும்,* சாகிறவர்கள் என்னப்பட்டாலும் *உயிரோடிருக்கிறவர்களாகவும்,* தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் *கொல்லப்படாதவர்களாகவும்,* 
துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் *எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும்,* தரித்திரர் என்னப்பட்டாலும் *அநேகரை (ஆவிக்குரிய) ஜசுவரியவான்களாக்குகிறவர்களாகவும்,* ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும், *(ஆவிக்குரிய) சகலத்தையுமுடையவர்களாகவும்* நம்மை விளங்கப்பண்ண, குறிப்பாக ஊழியக்காரர்கள் கடமைப்பட்டிருக்கிறோம்! (2கொரிந்.6:8-10)

*உலகத்தார் பரியாசம்பண்ணக்கூடிய அளவுக்கு திருச்சபைகளில் காணப்படும் வேதத்திற்கு முரணான மூடப்பழக்கங்களை திருத்திக்கொள்ளவேண்டியக் கடமை திருச்சபைகளுக்கு இருக்கிறது!* 

நம்மைத் திருத்திக்கொள்ளாமல் பரியாசம் செய்வோரை பகைப்பது, ஆண்டவரே சகிக்கவியலாத அயோக்கியத்தனமாகும்!

ஆகவே, *"இம்மட்டில் நிறுத்துங்கள்"* என்கிற ஆண்டவரின் சத்தம், கிறிஸ்தவ மார்க்கத்திற்கு எதிரானவர்களுக்கு எதிர்வினையாற்றும் திருச்சபைகளின் செவிகளில் கேட்கட்டும்!

திருச்சபையின் மாண்பை உண்மையாகவே விரும்புகிற கிறிஸ்தவர்கள், திருச்சபைக்கு வெளியே இருந்து சத்தியத்தை அறியாமல் திருச்சபைகளுக்கு எதிராக செயல்படுகிறவர்களைவிட்டு: ஜாதிபலத்தாலும், பணபலத்தாலும், ஆள்பலத்தாலும், அரசியல் பலத்தாலும் திருச்சபையில் முக்கிய இடத்தை ஆக்கிரமித்து, தேவனுடைய சபையை கள்ளர் குகையாக்கிவிட்டவர்களுக்கும்; பலருடைய ஜெபத்தினாலும், உழைப்பினாலும், தியாகமான காணிக்கையினாலும் வளர்ந்த சபையை, ஸ்தாபனத்தை பரம்பரைப் பரம்பரையாய் தங்கள் குடும்பத்தார் மட்டுமே ஆளுகைசெய்வதற்கேற்ப தங்கள் குடும்பசொத்தாக்கிக்கொண்ட கொள்ளையர்களுக்கும்; சுகபோகப்பிரியரான செழிப்பின் உபதேசிகளுக்கும்; ஊழியத்தை ஆதாயத்தொழிலாக்கிக்கொண்ட வேதப்புரட்டர்களுக்கும்; பூமிக்குரிய ஆசீர்வாதங்களை மட்டுமே போதிக்கும் இயேசுவின் சிலுவைக்கு (பாடுகளுக்கு) பகைஞரான தங்கள் வயிற்றை தேவனாகக் கொண்டவர்களுக்கும் எதிராக, தங்கள் கண்டனத்தைத் திருப்பவேண்டியது அவசியம்!

*திருச்சபையின் பிரதான எதிரிகள் திருச்சபைக்கு வெளியில் அல்ல. கிறிஸ்தவர் & ஊழியர் என்கிற போர்வையில் திருச்சபைக்கு உள்ளேயே இருக்கிறார்கள்! தேவனுடைய சபை அதிகம் பாதிக்கப்படுவதும், பாழாவதும் இவர்களாலேயே!!*

இவர்களிடமிருந்து தேவன் தமது சபையை பாதுகாக்கவே கிறிஸ்தவர்கள் அதிகம் போராடி ஜெபிக்கவேண்டும்!

பொதுவாக, திருச்சபைக்கு உள்ளே இருக்கும் திருச்சபையின் எதிரிகளே, வெளியே இருக்கும் எதிரிகளுடன் திருச்சபையின் பாதுகாப்புக்காக மல்லுகட்டுவார்கள்!

*ஆண்டவரின் உண்மை சீடரான ஊழியர்களும் விசுவாசிகளும் அவருடைய வழியிலேயே எதிர்ப்பாளர்களை எதிர்கொள்ளுவார்கள்!!* 

[தேவனுக்கு பயந்த கிறிஸ்தவரும் ஊழியரும் மட்டுமே இதை ஏற்றுக்கொள்ளுவார்கள், மற்றவருக்கும் பகிருவார்கள்]

க. காட்சன் வின்சென்ட்
           8946050920




நமது தேவனுடைய நாமத்தை கோலியாத், ஆமான், சன்பல்லாத்து, தொபியா தூஷிக்கிறான்! தாவீதுக்களும், நெகேமியாக்களும், மொர்தெகாய்களும், எஸ்தர்களும் கொதித்தெழவேண்டாமா? கர்த்தர் வேடிக்கை பார்க்கவா நம்மை வைத்திருக்கிறார்?

திருச்சபையில் காணப்படும் அரசியலையும், செய்யப்படும் ஊழலையும், தலைதூக்கும் ஜாதிவெறியையும், வர்க்கபேதங்களையும், குடும்ப ஆதிக்க ஊழியங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்!

இதையெல்லாம் வன்மையாகக் கண்டிக்க என்றைக்காவது நமக்கு உணர்வு வந்திருக்கிறதா? உணர்ச்சியற்றவர்களாகத்தானே இருக்கிறோம்?

ஆண்டவரை அறிந்தவர்கள் தேவனுடைய சபையை கெடுக்கும்போது வராத வைராக்கியம், ஆண்டவரை அறியாதவர் அவருக்கு எதிராக ஏதாகிலும் பேசும்போது மட்டும் எங்கிருந்து வருகிறது?

*"எங்கள் தேவனையும், அவருடைய சபையையும் அசிங்கப்படுத்தும் உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு, அதை வெளியிலுள்ள எவருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம்"* என்கிறோமா?

இன்று அநேக கிறிஸ்தவர்கள் இன்னும் யூதமார்கத்திலேயே இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் கிறிஸ்தவ மார்க்கத்தாராக மாறவேயில்லை!

இன்று திருச்சபைக்கு எதிராக செயல்படுவோர் கோலியாத், ஆமான், சன்பல்லாத், தொபியாக்களும் அல்ல. நாம் தாவீது, நெகேமியா, மொர்தெகாய், எஸ்தர் போன்ற இஸ்ரவேலர்களும் அல்ல!

*பழைய ஏற்பாட்டு பக்தர்களான இஸ்ரவேல் ஜனங்கள், இராஜாக்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் தங்கள் பகைஞரையும், அந்நிய தேசத்தவரையும் அணுகியதுபோல அணுக புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்கு அனுமதியில்லை!*

தங்களுக்கு தீமைசெய்தவர்களுக்கு அதே தீமையை செய்ய பழைய ஏற்பாட்டு
பக்தர்களை தேவன் அனுமதித்திருந்தார்! (மத்.5:38)

தேவனுடைய குமாரனோ, *"தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம், ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ"* என்று தமது சீஷருக்கு கட்டளையிட்டிருக்கிறார்! (மத்.5:39-41)

வேதபாரகரும் பரிசேயரும் "உனக்கடுத்தவனை (யூதனை) சிநேகித்து, உன் சத்துருவை (புறஜாதியானை) பகைப்பாயாக" என்று யூதருக்கு வசனத்தை திரித்து போதித்திருந்தனர். (மத்.5:43)

அதாவது யூதர்கள் தங்கள் சத்துருக்களை எதிர்க்கவும், தங்களைச் சபிக்கிறவர்களைச் சபிக்கவும், தங்களைப் பகைக்கிறவர்களுக்கு தீமை செய்யுவும், தங்களை நிந்திக்கிறவர்களை நிந்திக்கவும், தங்களைத் துன்பப்படுத்துகிறவர்களைத் துன்பப்படுத்தவும் பரிசேயரால் பழக்குவிக்கப்பட்டிருந்தனர்.

நமது குருவான இயேசுகிறிஸ்துவோ, *"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்"* என்று தமது சீஷருக்கு கட்டளையிட்டிருக்கிறார். (மத்.5:44)

"ஊழியர்கள்" என்கிற பெயரில் இருக்கிற சில பரிசேயர்கள்: விசுவாசிகள் தங்கள் சத்துருக்களை எதிர்க்கவும், தங்களைச் சபிக்கிறவர்களைச் சபிக்கவும், தங்களைப் பகைக்கிறவர்களுக்கு தீமைசெய்யுவும், தங்களை நிந்திக்கிறவர்களை நிந்திக்கவும், தங்களைத் துன்பப்படுத்துகிறவர்களைத் துன்பப்படுத்தவும் அல்லவா பழக்குவித்துவருகிறார்கள்!

*தம்மை சமாரியன் (கீழ்ஜாதிக்காரன்) என்றும், பிசாசுபிடித்தவனைன்றும் (யோவான் 8:48), பயித்தியக்காரன் என்றும் (யோவான் 10:20) பழித்து, கலகக்காரன் என்று குற்றப்படுத்திய யூதர்களுக்கு (லூக்கா 23:2,5) எதிராக இயேசுகிறிஸ்து எடுத்த நடவடிக்கை என்ன?* 

அவர்களை அவர் கண்டித்தாரா? அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை வைத்தாரா?

தங்களுக்குப் பிடிக்காத எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்த இயேசுவை சமாரியர் தங்கள் ஊரில் ஏற்றுக்கொள்ளாததினால், அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் , *"ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா?"* என்று கேட்டபோது, *"நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள்"* என்று அதட்டி, *'மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார்"* என்று அறிவுறுத்தி, அவர்களை வேறொரு கிராமத்துக்கு அழைத்துச் சென்றாரே நமது ஆண்டவர்! (லூக்கா 9:53-56)

எதிரிகளை சுட்டெரித்து அழிக்கும் எலியாவின் ஆவியை உடையவர்களாய் இருக்க அல்ல, எவரையும் இரட்சிக்கும் தமது அன்பின் ஆவியை உடையவர்களாய் இருக்கவே ஆண்டவர் நம்மை அழைத்திருக்கிறார்!

*உலகத்திற்கு இன்று எலியாக்கள் அல்ல, இயேசுக்கள்தான் வேண்டும்!*

இன்று எலியாவின் ஆவியைக் கேட்கிறவர்களை இயேசுகிறிஸ்து அதட்டவே செய்கிறார்!

பிரதான ஆசாரியனின் சேவகன் தம்மை அறைந்தபோது,
இயேசு அவனை நோக்கி: *"நான் தகாத விதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி, நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய்"* என்று கேட்டார். (யோவான் 18:22,23) ஆனால், தம்மை அடித்தவன்மேல் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்று அவர் நிற்கவில்லை.

கிறிஸ்துவை விசுவாசிப்பதினிமித்தம் நமக்கு அநியாயம் இழைக்கப்படும்போது நியாயம் கேட்பதில் தவறில்லை. ஆனால், அநியாயம் செய்தவர்மேல் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்று நிற்பது கிறிஸ்துவை வெளிப்படுத்தும் அணுகுமுறையில்லை!

சவுக்கால் அடித்து விசாரிக்கப்பட தான் வாரினால் அழுந்தக் கட்டப்படும்போது, பவுல் சமீபாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி; *"ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா?"* என்று கேட்டு, தனது ரோமக் குடியுரிமையைப் பயன்படுத்தி, அடித்து விசாரிக்கப்படுவதிலிருந்து தன்னைக் காத்துக்கொண்டது உண்மைதான்.

சட்டப்படியான நமது உரிமைகளைப் பயன்படுத்தி நம்மை தற்காத்துக் கொள்வது தவறல்ல, ஆனால் நமது விசுவாசத்தினிமித்தம் நமக்கு எதிராக செயல்படுகிறவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பது கிறிஸ்துவின் சீடர்களுக்கு அழகல்ல!

யூதர்கள் தன்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு தேசாதிபதி பெஸ்து என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடாதபடிக்கு ரோமசக்கரவர்த்தி இராயனுக்கு பவுல் அபயமிட்டது உண்மைதான். (அப்.25:7-11)

"யூதர்கள் அதற்கு (என் விடுதலைக்கு) எதிர்பேசினபோது, நான் இராயனுக்கு அபயமிடவேண்டியதாயிருந்தது. *ஆயினும் என்ஜனத்தார்மேல் யாதொரு குற்றஞ் சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை'* 
(அப்.28:18,19) என்று பவுல் சொல்லுகிறதையும் நாம் கவனிக்கவேண்டும்.

அநியாயமான குற்றசாட்டுகளால் வரும் தண்டனையிலிருந்து தப்புவதற்கு ஒரு கிறிஸ்தவர், மேலான அதிகாரங்களுக்கு அபயமிடுவது தவறல்ல. ஆனால், தன்னை குற்றப்படுத்துகிறவர்களை குற்றப்படுத்தி, அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர முனைவது பவுலின் மாதிரி அல்ல!

ஸ்தேவான் யூதர்களால் கொலைசெய்யப்பட்டபோது *தேவபக்தியுள்ள மனிதர்கள் அவனை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்களேயல்லாமல், கிறிஸ்தவர்களை யூதர்களுக்கு எதிராகத் தூண்டிவிடவில்லையே!* (அப்.7:57-8:2)

சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரிகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தபோது, *சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்களேயல்லாமல், பவுலை சபித்து, அவனுடைய அழிவைக்காண அமர்ந்திருக்கவில்லையே!* (அப்.8:1,3,4)

யூதரின் ஆலோசனை சங்கத்தார் தங்களை அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு அனுப்பினபோது, *அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று அப்போஸ்தலர் பிரசங்கித்தார்களேயல்லாமல்,* திருச்சபையாரை ஆலோசனை சங்கத்துக்கு எதிராக ஏவிவிடவில்லையே! (அப்.5:42)

சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத்தொடங்கி. 
 *யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்த ஏரோதுராஜாவுக்கு எதிராக திருச்சபை எடுத்த நடவடிக்கை என்ன?* (அப்.12:1,2)

 பிலிப்பியில் *குற்றஞ்சாட்டப்பட்டு, வஸ்திரங்கள் கிழிக்கப்பட்டு, அநேக அடிகள் அடிக்கப்பட்டு, சிறைச்சாலையிலே உட்காவலறையிலே அடைத்துவைக்கப்பட்டு, கால்கள் தொழுமரத்தில் மாட்டிவைக்கப்பட்ட பவுலும் சீலாவும்* (அப்.16:16-24) அதற்கு காரணமானவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன?

"கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, *அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது"* என்று பிலிப்பியரை பாடுபட ஆயத்தப்படுத்துவதோடு (பிலிப்.1:29), *"நீங்கள் என்னிடத்தில் கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு"* என்று பிலிப்பி சபையாருக்கு முன்னறிவித்தாரே பவுல்! (பிலிப்1:30)

தெசலோனிக்கேயாவிலிருந்தபோது, *"நமக்கு உபத்திரவம் வரும்"* என்று சபைக்கு முன்னறிவித்ததோடு, அப்படியே நேரிட்டபோது, *"இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம்"* என்று அவர்களை திடப்படுத்தினாரே பவுல்! (1தெச.3:3,4)

*"ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்"* என்று கிறிஸ்தவர்களை பாடுபட பலப்படுத்தினாரே பேதுரு! (1பேதுரு 4:16)

இப்படி ஆதிசபை ஊழியர்கள் பாடுபட்டதோடு, சபையாரையும் பாடுபட ஆயத்தப்படுத்தியிருக்க, நமக்கும் நமது சபையாருக்கும் பாடுகளற்ற ஒரு உலகத்தைப் படைக்க நாம் முயற்சிப்பது சரியா?

*அன்புக்குரிய உடன் ஊழியர்களே, நாம் வாழ்கிற வாழ்வும், செய்கிற ஊழியமும் ஆதிசபை ஊழியரின் வாழ்வையும் ஊழியத்தையும் மாதிரியாகக் கொண்டதல்ல என்பதை தயவாய் உணருவோம்!* 

ஆண்டவருக்கு சீடர்களை அல்ல, அவருடையப் பாடுகளுக்கு பங்காளிகளாகும் மனதற்ற, ஆசீர்வாத, ஐசுவரிய, சுகபோகப் பிரியர்களையே நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதையும் அறிந்திடுவோம்!

*ஆண்டவரும் ஆதிசபை ஊழியரும் கற்பிக்காதவைகளை கற்பித்து, கிறிஸ்து இல்லாத ஒரு கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபிக்கிறதிலிருந்து முதலாவது நாம் மனந்திரும்புவோம்!!*

தேவனுடைய ஜனங்களை திருச்சபைக்கு எதிரானவர்களுக்கு எதிராக நடத்துவதற்கு பதிலாக, தங்கள் அன்பினால் தங்களிலிருக்கும் கிறிஸ்துவை எதிராளிகளுக்குள் கடத்துவதற்கு பழக்குவிப்போம்!

இனிவரும் காலம் கிறிஸ்தவ மார்க்கத்தாருக்கு மிகுந்த நெருக்கடியானக் காலமாகவும் இருக்கலாம்!

*கிறிஸ்தவர்களுக்கு எதிரானவர்களுக்கு எதிராக சிலுவைப்போர் நடத்த அல்ல, நம்மைநாமே வெறுத்து, நமது சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, ஆண்டவரின் பின் நடக்க ஆயத்தமாவோம்! திருச்சபையை ஆயத்தப்படுத்துவோம்!!*

- உங்கள் உடன் ஊழியன்....

க. காட்சன் வின்சென்ட்.
              8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.