Type Here to Get Search Results !

Godson Vincent Bible Study in Tamil | அநீதத்தின் கூலியால் அழைப்பை இழந்தவன்! | Jesus Sam

=========================
"எங்கள் கோட்பாடு அப்போஸ்தலரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது, அவர்களின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல" என்று சில திருச்சபையினர் சொல்லுகிறது சரியா?
=======================

✍️ அப்போஸ்தலரின் அனுபவங்கள் அவர்களுடைய போதனைகளுக்கு முரண்பட்டதாக இருக்குமானால், அவர்கள் சொல்லுகிறது சரியாக இருக்கும்.

அப்போஸ்தலரின் அனுபவங்கள் அவர்களுடைய போதனைகளுக்கு முரண்பட்டவை என்பதை வசன ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டியக் கடமை குறிப்பிட்ட திருச்சபைகளுக்கு இருக்கிறது! அப்போஸ்தலர் மற்றும் ஆதிசபையாரின் எந்தெந்த ஆவிக்குரிய அனுபவம், அப்போஸ்தலரின் எந்தெந்தெ போதனைக்கு முரணாக இருக்கிறது என்று இவர்கள் காண்பிக்கவேண்டும்!

தங்கள் ஆவிக்குரிய அனுபவங்களுக்கும் தங்கள் போதனைகளுக்கும் தொடர்பில்லை என்று ஆதிஅப்போஸ்தலர் அறிக்கையிட்டதுண்டா? *"எங்கள் போதனைகளை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள், எங்கள் ஆவிக்குரிய அனுபவங்களை உங்கள் அனுபவங்களாக்கிக்கொள்ளவேண்டாம்"* என்று ஆதிசபையாரை அப்போஸ்தலர் கேட்டுக்கொண்டதுண்டா? *"என்னுடைய வார்த்தைகளுக்கும் உங்கள் அனுபவங்களுக்கும் தொடர்பில்லை"* என்று தேவன் ஆதிஅப்போஸ்தலரையும் ஆதிசபையாரையும் கடிந்துகொண்டதுண்டா?

பெந்தெகொஸ்தேநாளில் பரசுத்தஆவியினால் நிரப்பப்பட்ட அனுபவத்திற்கு (அப்.2:1-4) யோவேல் 2 ஆம் அதிகாரம் 28முதல் 32வரை உள்ள வசனங்களைத்தானே அடிப்படையாகக் காண்பித்தார் பேதுரு! (அப்.2:16-21) சமாரிய சீஷர் (அப்.8:16,17), கொர்நேலியு வீட்டில் கூடியிருந்தோர் (அப்.10:24,44,45), எபேசு சீஷர் (அப்.19:1-6) வெளியரங்கமாய் பரிசுத்தஆவியால் நிரப்பப்பட்ட அனுபவத்திற்கும் யோவேல் 2:28-32தானே அடிப்படையாக இருக்கமுடியும்!

அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்ட (அப்.2:43), ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்த (அப்6:8), 
பிலிப்பு அநேகரிலிருந்த அசுத்தஆவிகளை துரத்தி, அநேகந் திமிர்வாதக்காரரையும் சப்பாணிகளையும் குணமாக்கின (அப்.8:5-7), பெந்தெகொஸ்தேநாளில் எருசலேமிலும் (அப்.2:4), செசரியாவிலும் (அப்.10:44,45) எபேசுவிலும் (அப்.19:6) சீஷர்கள் அந்நியபாஷைகளில் பேசின அனுபவங்களுக்குப் பின்னால்: *"வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்"* என்றும் (மத்.10:8), *"விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்: நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள்: சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது: வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்"* என்றும் (மாற்கு 16:17,18) ஆண்டவர் சொன்ன வார்த்தைகள் இருக்கிறதை எவரேனும் மறுக்கமுடியுமா?

வசனங்களை மறுதலிக்கலாமா?
"வசனங்களை நாங்கள் நம்புவோம், ஆனால் வசனத்தின் அடிப்படையிலான அனுபவங்களை ஏற்றுக்கொள்ளமாட்டோம்" என்பது மனக்கடினத்தை அல்லவா வெளிப்படுத்துகிறது! திருவசனத்தின் அடிப்படையிலான ஆவிக்குரிய அனுபவங்களை மறுப்பது திருவசனத்திற்கு எதிராக முரட்டாட்டம் செய்வதாகாதா? .

பொதுவாக, பரிசுத்தஆவியைப் பெறுதல், ஆவியின் வரங்களைப் பயன்படுத்துதல் போன்ற அனுபவங்களை மறுக்கிற திருச்சபையினரே, தங்கள் கோட்பாடு அப்போஸ்தலரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டவை என்று சாதிக்கின்றனர். அப்போஸ்தலரின் போதனைகளுக்கும் அனுபவங்களுக்கும் தொடர்பில்லை என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

*"சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்"* என்கிறவர்கள்
(2கொரிந்.13:8), சத்தியத்திற்கு தொடர்பில்லாத ஆவிக்குரிய அனுபவங்களுக்கு தங்களை எப்படி ஒப்புவித்திருப்பார்கள்? *சபை சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாக இருக்க வாஞ்சித்தவர்கள்* (1தீமோத்3:15), சத்தியத்திற்கு மாறான ஆவிக்குரிய அனுபங்களுக்குள் சபையை எப்படி நடத்தியிருப்பார்கள்?

தங்கள் ஆவிக்குரிய அனுபவங்கள் சத்தியத்தின் அடிப்படையிலானவை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

ஆதிஅப்போஸ்தலரின் அனுபவங்கள் திருவசனத்தை அடிப்படையாகக் கொண்டவைகளாயிருக்க, அந்த அனுபவங்களை மறுதலிக்கிறவர்கள் திருவசனத்தை சரியாய் விளங்கிக்கொள்ளவில்லை என்றே அர்த்தம்!

ஆவிக்குரிய அனுபவங்களில் நடத்தின அப்போஸ்தலர்!
தங்களுக்கு உண்டான ஆவிக்குரிய அனுபவங்கள் தாங்கள் நடத்தின மக்களுக்கும் உண்டாகவேண்டும் என்று வாஞ்சித்தனர் ஆதிஅப்போஸ்தலர். ஆவிக்குரிய அனுபங்களைப் பற்றின வாக்குத்தத்தங்கள் தங்களோடு முடிவடைந்துவிட்டதென்று அவர்கள் நினைக்கவில்லை.

தங்களுக்கு உண்டான ஆவிக்குரிய அனுபவங்கள் இனி கிறிஸ்தவர்களாகிறவர்களுக்கு அவசியமில்லை என்று ஆதிஅப்போஸ்தலர் நினைத்திருந்தால், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்கள்மேல் கைகளை வைத்து ஜெபித்திருப்பார்களா? (அப்.8:16,17; 19:6) மூப்பராகிய சங்கத்தார் தீமோத்தேயுவின்மேல் கைகளை வைத்துபோது தீர்கதரிசனத்தினால் அவனுக்கு வரம் அளிக்கப்பட்டதே? (1தீமோத்.4:14)

அப்போஸ்தலரை கடந்து அவர்களுக்கு உண்டான ஆவிக்குரிய அனுபவங்கள் சபையார்வரை தொடர்ந்ததே!

இயேசுகிறிஸ்து சொன்னபடி (லூக்கா 11:13) பிதாவினிடத்தில் ஜெபித்து பரிசுத்த ஆவியைப் பெறுவது பழைய ஏற்பாட்டுக் காலம் என்றும், இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போதே பரிசுத்தஆவியானவர் ஒருவருக்குள் வந்துவிடுகிறார் என்றும் எபேசியர் 1:13ஐ தவறாக வியாக்கியானம் செய்கிற பலர் உண்டு!

இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போதே பரிசுத்தஆவியானவர் ஒருவருக்குள் வந்துவிடுவாரானால், ஏற்கனவே பரிசுத்தஆவியைப் பெற்றவர்கள்மேல், பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி கைகளை வைத்து ஜெபிக்க பேதுருவும் யோவானும் பவுலும் பைத்தியங்களா? (அப்.8:16,17; 19:5,6)

ஒருவர் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போதே அவருக்குள் பரிசுத்தஆவியானவர் வந்துவிடுகிறார் என்கிற அர்த்தத்தில் எபேசியர் 1:13ல் பவுல் பேசியிருப்பாரானால், இயேசுவை ஏற்றுக்கொண்டபோதே பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொண்ட எபேசு சீஷர்கள்மேல் கைகளைவைத்து, அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர் ஜெபிக்கவேண்டிய அவசியம் என்ன?

*பொதுவாக ஆவிக்குரிய அனுபவங்கள் ஒன்றும் இல்லாதவர்களே, மற்றவர்களை அந்த அனுபவங்களுக்குள் நடத்த மறுப்பதோடு, அவ்வித அனுபவங்கள் தற்போது கிடையாது என்று சாதிக்கின்றனர்!*

"அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கு மட்டுமே இயேசு அதிகாரங்கொடுத்தார். வேறு எவருக்கும் அந்த அதிகாரம் கொடுக்கப்படவில்லை" (மத்.10:1) என்று சாதிக்கிறவர்கள் உண்டு. அப்படியானால், சாதாரண விசுவாசிகளாகிய ஸ்தேவானும் (அப்.6:8), பிலிப்புவும் (அப்.8:5-13), 12 சீஷர் பட்டியலில் இல்லாத பவுலும் (அப்.13:8-12; 14:8-10; 16:16-18; 19:11,12; 28:3-9) எப்படி அசுத்த ஆவிகளைத் துரத்தி, சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கியிருக்கமுடியும்?

"மத்தியாவுடன் சேர்ந்த 12 அப்போஸ்தலருக்குப் பின்பு வேறு ஒருவரும் அப்போஸ்தலராக ஏற்படுத்தப்படவில்லை" (அப்.1:15-16) என்றும் சாதிக்கிறவர்கள் உண்டு! 12 அப்போஸ்தலருக்குப் பின்பு வேறு ஒருவரும் அப்போஸ்தலராக ஏற்படுத்தப்படவில்லை என்றால், பர்னபாவும் பவுலும் எப்படி அப்போஸ்தலராகியிருக்கமுடியும்? (அப்.14:14; கலாத்.2:7-9)

*வேதத்திலுள்ள மேற்காணும் காரியங்களை நன்றாக அறிந்திருந்தும் அதை மறைக்கிறவர்களே, தாங்கள் அப்போஸ்தலரின் போதனைகளை தங்கள் திருச்சபைக்கான கோட்பாடுகளாக எடுத்துக்கொண்டதாக பொய்சொல்லுகிறார்கள்!* 

இத்தனை தெளிவாய் காணப்படுகிற காரியங்களை திரித்தும் மறைத்தும் போதிக்கிற இவர்கள், அடுத்த சபைபிரிவினரின் வேதத்திற்கு எதிரானக் காரியங்களை வெளிச்சம்போட்டுக்காட்டப் புறப்படுகிறதில் என்ன நியாயம் இருக்கிறது?

- மிகுந்தத் தாழ்மையுடன்....

க. காட்சன் வின்சென்ட்
    (கோயம்பத்தூர்)
          8946050920


=========================
அநீதத்தின் கூலியால் அழைப்பை இழந்தவன்!
அப்போஸ்தலரில் ஒருவனாக எண்ணப்பட்டவன்!
========================
யூதாஸ் அப்போஸ்தலர்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, ஆண்டவரின் ஊழியத்தில் பங்கு பெற்றவனாயிருந்தான்! (அப்.1:15,17)

மற்ற பதினொரு அப்போஸ்தலரைப் போலவே ஆண்டவர் இவனையும் தெரிந்துகொண்டு (மாற்கு 3:13-19), அவர்களுக்கு சமமாகவே நடத்தினார் (யோவான் 15:13-15; மத்.26:50), பயன்படுத்தினார்! (லூக்கா 9:1-6)

*அநீதத்தின் கூலியில் ஆவல் கொண்டவன்!* 

யூதாஸ் பணம் சம்பாதிப்பதையே தனது ஊழியத்தின் தரிசனமாகக் கொண்டிருந்தான்!

அவனுடைய பேச்சு, செயல்கள் அனைத்தும் அவனுடைய பணஆசையை அடிப்படையாகக் கொண்டவையாகவே இருந்தன! (யோவான் 12:4-6; மத்.26:8-16; லூக்கா 22:3,4)

*இயேசுவின் ஊழியன், அவரை எதிர்த்தவர்களுக்கு ஊழியனான்!* 

யூதாஸ் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத்தலைவர்களிடத்திலும்போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான். (லூக்கா 22:4)

அவர்கள் தனக்கு கொடுக்கப்போகும் பணத்திற்காக ஜனக்கூட்டமில்லாத வேளையில் இயேசுவை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான். (லூக்கா 22:5,6)

இயேசுவைப் பிடித்தவர்களுக்கு அவன் வழிகாட்டினான்!
(அப்.1:16; யோவான் 18:1-3)

*அநீதத்தின் கூலியினால் தலைகீழாக விழுந்தான்!* 

தன் ஆண்டவரை காட்டிக்கொடுத்து சம்பாதித்த பணத்தை அனுபவிக்க அவன் உயிரோடு இல்லை!

தனது துரோகத்தினிமித்தம் மனச்சாட்சியின் வாதிப்பினால் தூக்குப்போட்டு செத்துப்போனான். (மத்.27:3-5) (அவனுடைய எடையை தாங்கக்கூடாமல் கயிறு அறுந்து) தலைகீழாக விழுந்தான். அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. (அப்.1:18)

அவன் நிலத்தை வாங்கவில்லை, அவன் தேவாலயத்திலே எறிந்துவிட்ட வெள்ளிக்காசை
பிரதான ஆசாரியர் எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி, 
ஆலோசனைபண்ணினபின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள். 
(மத்.27:7) அவனுடைய பணம் யூதரின் பார்வையில் அற்பமானக் காரியத்திற்கே பயன்படுத்தப்பட்டது! 

கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தின் விலையால் வாங்கப்பட்ட நிலமாதலால் (மத்.27:4) அந்த நிலம் "இரத்தநிலம்" என்று அழைக்கப்பட்டது! (அப்.1:19)

"அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக" என்றும், "அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன்" என்றும் சங்கீதத்திலேயே சபிக்கப்பட்டிருக்கிறான் யூதாஸ்காரியோத்து! (அப். 1:20; சங்.69:25; 109:8)

இயேசுவை விற்று சம்பாதிக்கும் பணம் ஆசீர்வாதமாய் இராது என்றும், அவ்விதமான ஊழியம் நெடுங்காலம் நிலைக்காது என்றும் யூதாசின் ஜீவியம் மற்றும் ஊழியத்தின் மூலம் பரிசுத்தஆவியானவர் நம்மை எச்சரிக்கிறார்!! (அப்.1:16)

க. காட்சன் வின்சென்ட்
    (கோயம்பத்தூர்)
          8946050920


========================
கிறிஸ்தவ ஊழியர், விசுவாசிகள் வெள்ளை உடைதான் அணியவேண்டுமா?
========================
✍️ ஊழியரும் விசுவாசிகளும் வெள்ளை உடை அணிவதில் தவறில்லை. 

தேவனுக்கும் வெண்மைக்கும் அதிக தொடர்பு உண்டு!

நீண்ட ஆயுசுள்ளவராகிய நமது தேவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையானது! (தானி.7:9)

தேவகுமாரன் ஜெபம்பண்ணுகையில், அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது. (லூக்கா 9:29)

பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களில்
உட்கார்ந்திருக்கும் இருபத்துநான்கு மூப்பர்களும் வெண்வஸ்திரந்தரித்திருப்பதாகவே யோவான் கூறுகிறார். (வெளிப்.4:4)

பரலோகத்தில் தேவன் தம்முடையவர்களுக்கு வெண்வஸ்திரத்தையே தரிப்பிக்கவிருக்கிறார். (வெளிப்.3:4,5)

பரலோகத்தில் வெண்வஸ்திரம் தரிப்பித்துக்கொள்ளப்போகிற ஊழியர்களும் விசுவாசிகளும் பூமியில் வெண்வஸ்திரத்தை அணிந்துகொள்வதில் தவறேதுமில்லை.

ஆகிலும், ஊழியர்களும் விசுவாசிகளும் வெண்மையான வஸ்திரம்தான் தரித்துக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயமோ, கட்டளையோ இல்லை.

"ஊழியரும் விசுவாசிகளும் வெள்ளை வஸ்திரத்தைத்தான் தரிக்கவேண்டும்" என்று சாதிக்கிறவர்கள், "உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக" (பிரசங்கி 9:8) என்கிற வசனத்தையே ஆதாரமாகக் காண்பிக்கிறார்கள்.

எப்போதும் தூய்மையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கவேண்டும் என்பதையே மேற்காணும் வசனத்தின்மூலம் வலியுறுத்துகிறார் சாலமோன். 

வெள்ளை ஆடைகள் மகிழ்ச்சியின் அடையாளமாகும்.
யூதர்கள் பண்டிகை காலங்களில் வெள்ளை ஆடைகளை அணிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

கிறிஸ்தவர்கள் வெள்ளையுடையைத்தான் உடுத்தவேண்டுமென்கிற கட்டளை எதுவும் இல்லை.

நமது கலாச்சாரச் சூழலில் சில இடங்களில் வெள்ளை உடையை தரிப்பது சுவிசேஷப்பணிக்கு பாதகமாகவும்,
தவிர்ப்பது
சாதகமாகவும் அமையும் என்பதை நாம் அறியவேண்டும்!

எந்தச் சூழலிலும் எவ்விடத்திலும் எந்தநிறத்தினாலானதானாலும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதற்கு தகுதியான வஸ்திரத்தை தரித்துக்கொள்ளவேண்டியது கட்டாயம்!! (1தீமோத்.2:10)

க. காட்சன் வின்சென்ட்
     (கோயம்பத்தூர்)
           8946050920


=======================
"இலவசம் தேவையா? தேவையில்லையா?" என உலகம் விவாதிக்கிறது "வாக்குத்தத்தம் தேவையா? தேவையில்லையா?" என சபை விவாதிக்கிறது. எனக்குத் தேவையில்லை என்பதினால் பிறருக்கும் வாக்குத்தத்தம் தேவையில்லை என நான் கூறுவது நியாயமா?
==========================
 இது நியாயமான கேள்விதான்.

"எனக்கு வாக்குத்தத்தங்கள் தேவையில்லை" என்று எவரும் சொல்லமுடியாது.
கிறிஸ்தவர்களாகிய நாம் சில வாக்குத்தத்தங்களுடன் நெருங்கியத் தொடர்புள்ளவர்களாக இருக்கிறோம்! (லூக்கா 24:49; அப்.1:4,5; 2:33,38,39; ரோமர் 4:16; 9:8; கலாத்.3:14-22,29; எபேசி.1:13; 3:3; 6:3; தீத்து 1:3; எபிரே.4:1; 6:11,12,17; 9:25; 10:23,36; யாக்.1:12; 2:5; 2பேதுரு 1:4; 3:13; 1யோவான் 2:25)

*ஆகிலும் அனுதின, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர வாக்குத்தத்தம் என்று கிறிஸ்தவர்களுக்கு சில வசனங்களை வாக்குத்தத்தங்களாகப் பிரித்துகொடுப்பது இயேசுகிறிஸ்துவும் அப்போஸ்தலரும் நமக்கு காண்பித்த மாதிரியல்ல என்பதை நாம் அறியவேண்டும்!* 

இன்றைக்கு, இந்த வாரத்திற்கு, இந்த மாதத்திற்கு, இந்த வருடத்திற்கு என்று நாம் கொடுக்கும் வாக்குத்தத்த வசனங்கள்: நாளை, அடுத்தவாரம், அடுத்தமாதம், அடுத்தவருடம் காலாவதியாகிவிடுகிறதா என ஊழியர்கள் யோசிக்கவேண்டும். 

மேலும், யூதருக்கு மட்டுமான வாக்குத்தத்தங்கள் எவை? யூதரும் பிறவினத்தாரும் சேர்ந்த பொதுவான கிறிஸ்தவர்களுக்கான வாக்குத்தத்தங்கள் எவை? தனி நபருக்கான வாக்குத்தத்தங்கள் எவை?
பூமிக்குரிய ஆசீர்வாதங்களைக்குறித்த வாக்குத்தத்தங்கள் எவை? நித்திய ஆசீர்வாதங்களுக்கான வாக்குத்தத்தங்கள் எவை? நிறைவேறிவிட்ட வாக்குத்தத்தங்கள் எவை? இன்னும் நிறைவேறவேண்டிய வாக்குத்தத்தங்கள் எவை? என்று வாக்குத்தத்தங்களைக்குறித்து ஊழியர்கள் சபைக்கு நிதானமாய் பகுத்து போதிக்கவேண்டியது அவசியம்!

*அற்புதம், அதிசயம், ஆசீர்வாதம் மற்றும் பெருக்கம் குறித்து பேசுகிற வசனங்களையெல்லாம் எடுத்து, அவை யாருக்கு? எப்போது? ஏன்? சொல்லப்பட்டது என்பதை அறியாமல்; அதனுடன் சிறிதும் தொடர்பில்லாதவர்களுக்கு வாக்குத்தத்தமாக வாக்களிக்கிறது தவிர்க்கப்படவேண்டும்!* 

தேவன் யூதர்களுக்கு மட்டுமே வாக்குப்பண்ணினக் காரியங்களை கிறிஸ்தவர்களுக்கும்; சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வாக்குப்பண்ணினக் காரியங்களை இன்று ஒவ்வொருவருக்குமான ஆசீர்வாதமாகவும்; ஏற்கனவே நிறைவேறிவிட்ட வாக்குத்தத்தங்களை, இனி நடக்கப்போவதாகவும்; எதிர்காலத்தில் நடைபெறவிருக்கிறக் காரியங்களை, நிகழ்கால ஆசீர்வாதங்களாகவும் வாக்குப்பண்ணுவது ஆரோக்கியமானதல்ல!

*இன்றைக்கும் என்றைக்கும் தமது வார்த்தைகளைக்கொண்டு தேவன் தமது ஜனங்களுடன் பேசுகிறார் என்பதும், தாம் பேசுகிறபடியே அவர்களை நடத்துகிறார் என்பதும் உண்மையே!* 

நாம் ஆசீர்வாதமான வசனங்களை வாக்குத்தத்தங்களாக ஜனங்களுக்கு வழங்காவிட்டாலும், தேவன் எவரை எவ்வாறு நடத்த, உயர்த்த சித்தமாயிருக்கிறாரோ, அவரை அவ்வாறு நடத்தவும், உயர்த்தவும் வல்லவராக இருக்கிறார்.

பூமிக்குரிய ஆசீர்வாதம், மேன்மை, உயர்வு இவைகளைகுறித்த ஆவலையும் நம்பிக்கையையும் உண்டாக்கத்தக்க வசனங்களை வாக்குத்தத்தங்களாக எடுத்துக்கொடுக்க தேவன் எவரையும் ஊழியத்திற்கு அழைக்கவில்லை. பரலோகத்திற்கு நேராக நடத்தவே அழைத்திருக்கிறார்! (பிலிப்.3:17-21)

*"தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே"* என்று பவுல் சொல்லுகிறதில் (2கொரிந்.1:20), "தேவனுடைய வாக்குத்தத்தங்கள்" என்று குறிப்பிடப்படுகிறவை குறிப்பாக மறுமையைப் பற்றியவை என்பதை நாம் அறியவேண்டும்!
(2கொரிந்.1:4,5,14,15,21,22)

*"நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை"* (யோசுவா 1:5) என்கிற வாக்குத்தத்தத்தையும், *"கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்"* (சங்.56:4,11) என்கிற விசுவாச அறிக்கையையும்:
பணஆசையில்லாதவர்களாய் நடந்து, தங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுகிறவர்களாய் தேவஜனங்களை உருவாக்குவதற்கே ஆதிசபை ஊழியர் பயன்படுத்தியிருக்கிறார். (எபிரே.13:5,6)

நாமோ நமது அறியாமையால் "வாக்குத்தத்தம்" என்கிற பெயரில் தேவவசனங்களை துஷ்பிரயோகம் செய்து, தேவஜனங்களை பணப்பிரியர்களாகவும், ஐசுவரிய ஆர்வலர்களாகவும், சுகஜீவிகளாகவும், செழிப்பின் பற்றாளர்களாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறோம்!

*இம்மைக்கும் மறுமைக்குமான தேவைகளுக்காய் தேவனை சார்ந்துகொள்ள தேவஜனங்களை உற்சாகப்படுத்த அப்போஸ்தலரின் உபதேசங்களையே நாம் மாதிரியாக எடுத்துக்கொள்ளவேண்டும்!*

தேவனுடைய ஜனங்களை அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றிய அவர்களுடைய உபதேசத்தின்மேல்
இசைவாய் இணைத்து, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாகவும் தேவனுடைய வாசஸ்தலமாகவும் கட்டுகிறதில், பரிசுத்தஆவியானவருடன் இணைந்து செயல்படுகிறதுதான் ஆரோக்கியமான ஊழியர்கள் செய்யவேண்டியக் காரியமாகும்!! (எபேசி.2:20-22)

க. காட்சன் வின்சென்ட்
     (கோயம்பத்தூர்)
            8946050920


======================
இன்று நாம் வாக்குத்தத்தங்களாக கொடுக்கும் வசனங்களை நன்றாக அறிந்திருந்தபோதும், ஆதிஅப்போஸ்தலர் ஏன் அவைகளை நம்மைப்போல சபையாருக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர வாக்குத்தத்தங்களாகக் கொடுக்கவில்லை?
=======================
✍️ நாம் இன்று கிறிஸ்தவர்களுக்கு வாக்குத்தத்தங்களாகக் கொடுக்கும் காரியங்களில் அநேகம், உண்மையில் இஸ்ரவேலருக்கே வாக்குத்தத்தமாகக் கொடுக்கப்பட்டவையாகும். 

நம்முடையவைகளாக நாம் உரிமைபாராட்டும் வாக்குத்தத்தங்களை நேரடியாகப் பெற்ற இஸ்ரவேலராக இருந்தபோதிலும், அவைகளில் பல கிறிஸ்தவர்களுக்கான இயேசுகிறிஸ்துவின் உபதேசங்களுக்கு முரணாகக் காணப்பட்டதினால், அவைகளை கிறிஸ்தவர்களுக்குமான வாக்குத்தத்தங்களாகப் போதிக்கிறதை அவர்கள் தவிர்த்துவிட்டனர்.

*"கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்"* 
(ஏசாயா 60:20) என்கிற வசனத்தை அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு வாக்குத்தத்தமாகக் கொடுத்திருப்பார்களானால்: அது, *"துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள்"* (மத்தேயு 5:4) என்கிற ஆண்டவரின் சீஷத்துவ போதனைக்கு முரண்பட்டிருக்கும்!

*"நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய், கொடுமைக்குத் தூரமாவாய், பயமில்லாதிருப்பாய், திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை"*  
(ஏசாயா 54:14) என்கிற வசனத்தை அவர்கள் வாக்குத்தத்தமாகக் கொடுத்திருப்பார்களானால்: அது, *"நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது"* (மத்.5:10) என்கிற ஆண்டவரின் சீஷத்துவ போதனைக்கு முரண்பட்டிருக்கும்!

*"கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார். இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார். இனித் தீங்கைக் காணாதிருப்பாய்"* (செப்.3:15) என்கிற வசனத்தை வாக்குத்தத்தமாகக் கொடுத்திருப்பார்களானால்: அது, *"என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்"* (மத்.5:11) என்கிற ஆண்டவரின் சீஷத்துவ போதனைக்கு முரண்பட்டிருக்கும்.

 *"உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது"* (சங்.91:7) என்கிற வசனத்தை வாக்குத்தத்தமாகக் கொடுத்திருப்பார்களானால்: அது, *"மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் உங்களை ஆலோசளைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள். அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்"* (மத்.10:17,18) *"நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும், நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள், அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்"*
(யோவான் 15:19-21) என்கிற ஆண்டவரின் வார்த்தைகளுக்கு முரண்பட்டிருக்கும்!

*"உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார், ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள், ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்"* (உபா.28:7) என்கிற வசனத்தை வாக்குத்தத்தமாகக் கொடுத்திருப்பார்களானால்: அது, *"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்"* (மத்.5:44) என்கிற ஆண்டவரின் கட்டளைக்கு முரண்பட்டிருக்கும்!

*"பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது"* (சங்.91:10) என்கிற வசனத்தை வாக்குத்தத்தமாகக் கொடுத்திருப்பார்களானால்: அது, *"உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்"* 
(யோவான் 16:33) என்கிற ஆண்டவரின் வார்த்தைக்கு முரண்பட்டிருக்கும்!

*"தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்து வைப்பீர்"* (யோபு 22:24) என்கிற வசனத்தை வாக்குத்தத்தமாகக் கொடுத்திருப்பார்களானால்: அது, *"பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம், ....பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்"* (மத்.6:19,20) என்கிற ஆண்டவரின் கட்டளைக்கு முரண்பட்டிருக்கும்!

*"அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக"* (சங்.20:4) என்கிற வசனத்தை வாக்குத்தத்தமாக கொடுத்திருப்பார்களானால்: அது, *"ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்"* (லூக்கா 9:23) என்கிற ஆண்டவரின் கட்டளைக்கு முரண்பட்டிருக்கும்!

*"நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்"* 
(ஆதி.12:2) என்கிற வசனத்தை வாக்குத்தத்தமாகக் கொடுத்திருப்பார்களானால்: அது, *"உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்"*
(லூக்கா 14:33) என்கிற ஆண்டவரின் கட்டளைக்கு முரண்பட்டிருக்கும்!

*"கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்"* (நீதி. 10:22) என்கிற வசனத்தை வாக்குத்தத்தமாகக் கொடுத்திருப்பார்களானால்: அது, *"தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது"* (லூக்கா 6:20), *"ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ, உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது"* (லூக்கா 6:24) என்கிற ஆண்டவரின் வார்த்தைகளுக்கு முரண்பட்டிருக்கும்!

*"நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்தி வந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள். என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை"*
(யோவேல் 2:26) என்கிற வசனத்தை வாக்குத்தத்தமாகக் கொடுத்திருப்பார்களானால்: அது, *"இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள், இனி திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள், இனி நகைப்பீர்கள்"* (லூக்கா 6:21), *"திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ, இனி பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ, இனி துக்கப்பட்டு அழுவீர்கள்"*
(லூக்கா 6:25) என்கிற ஆண்டவரின் வார்த்தைகளுக்கு முரண்பட்டிருக்கும்!

*"இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்"* (சகரியா 9:12) என்கிற வசனத்தை வாக்குத்தத்தமாகக் கொடுத்திருப்பார்களானால்: அது, *"நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்"*
(மத்.6:34), *"போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்"*
(1தீமோத்.6:6), *"நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணங்கள்"* (எபிரே.13:5) என்கிற வசனங்களுக்கு முரண்பட்டிருக்கும்!
 
இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த பூமிக்குரிய ஆசீர்வாதக்களைப் பற்றிய வாக்குத்தத்தங்கள் பல, கிறிஸ்தவர்களுக்கான ஆண்டவரின் போதனைகளுக்கு முரணானவை என்பதை ஊழியர்கள் அறியவேண்டும்!

 *பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலர்களும் புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களும் ஒன்றல்ல என்பதையும் (ரோமர் 2:28,29; பிலிப்.3:2,3), இஸ்ரவேலருக்கும் கிறிஸ்தவர்களுக்குமான பிரமாணங்கள் ஒன்றல்ல என்பதையும் (ரோமர் 7:1-6; 2கொரிந்.3:2,3) நாம் அறியவேண்டும்!* 

இப்படியிருக்க, வாக்குத்தத்த வசனங்களைக் கொடுக்கிறவர்கள், அந்த வசனங்கள் ஆண்டவர் மற்றும் ஆதிஅப்போஸ்தலர் புதிய ஏற்பாட்டு சபைக்கு கொடுத்துள்ள உபதேசங்களுக்கு முரண்படாதவகையில் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்! 

மக்களை சந்தோஷிப்பிக்கவும், தங்கள் ஆதாயத்திற்காகவும் கிறிஸ்தவ ஜீவியத்திற்கு தொடர்பில்லாதக் காரியங்களைப் பற்றிய வசனங்களை வாக்குத்தத்தமாக கொடுக்கிறவர்கள், ஆண்டவரின் வார்த்தைகளாலேயே நியாயந்தீர்க்கப்படுவார்கள்! (யோவான் 12:48)

*பொதுவாக ஆதிசபை ஊழியர்கள் பின்பற்றாத வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர வாக்குத்தத்தம் வழங்கும் முறையை விட்டுவிட்டு; நித்திய ஜீவனைக்குறித்த நம்பிக்கையைப் பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவிலும் விசுவாசத்திலும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை நடத்துவதே தேவஊழியருக்கு உகந்ததாகும்!!* (தீத்து 1:3)

- தேவனுடைய ஊழியனும் உங்கள் சகோதரனுமான...

க. காட்சன் வின்சென்ட்
     (கோயம்பத்தூர்)
            8946050920


======================
தேவனுடைய ஜனங்களை பலப்படுத்தவும், திடப்படுத்தவும், ஆறுதல்படுத்தவும், உற்சாகப்படுத்தவும்; வேதத்திலுள்ள ஆசீர்வாதமான வசனங்களை எடுத்து பயன்படுத்துகிறது தவறா?
==========================

✍️ தேவனுடைய ஜனங்களை பலப்படுத்தவும், திடப்படுத்தவும், ஆறுதல்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் வேதத்திலுள்ள ஆசீர்வாதமான வசனங்களை எடுத்து ஒவ்வொரு நாளும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் தவறு ஒன்றும் இல்லை. 

ஆகிலும், இந்த வசனம் இந்த வாரத்திற்கான வாக்குத்தத்தம், இந்த வசனம் இந்த மாதத்திற்கான வாக்குத்தத்தம், இந்த வசனம் இந்த வருடத்திற்காக வாக்குத்தத்தம் என்று பிரித்துகொடுப்பது சரியல்ல, இப்படி ஒரு வழக்கம் ஆதிசபையில் காணப்படவும் இல்லை.

வாக்குத்தத்த வசனத்தை கொடுக்கிறவர்கள், வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டதின் நோக்கத்தை புரிந்துகொள்ளவேண்டியது அவசியம்!

"தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, *இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது"* என்று பேதுரு சொல்லியிருக்கிறது நன்கு கவனிக்கத்தக்கது.

தேவன் தம்முடைய திவ்விய வல்லமையினால் இரண்டு காரியங்களை செய்திருக்கிறார்.

1. தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்த தம்மை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் நமக்குத் தந்தருளினார்.

2. இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களை நமக்கு அளித்தார்.
 
🫵 *வாக்குத்தத்தங்கள் அளிக்கப்பட்டதின் நோக்கம்?* 

இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, நாம் திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகவேண்டும் என்பதற்காகவே, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களை தேவன் நமக்கு அளித்திருக்கிறார்.

மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள் எவை?
இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பவும், தேவனுடைய திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகவும் நம்மில் ஆவலை உண்டாக்குகிற வாக்குத்தத்தங்களே மகா மேன்மையும் அருமையுமானவை! உலக ஆசையையும் (1யோவான் 2:15,16), பொருளாசையையும் (கொலோ.3:5), பணஆசையையும், பூமியில் ஐசுவரியவான்களாகவேண்டும் என்கிற ஆவலையும் (1தீமோத்.6:9,10) தூண்டுகிற வாக்குத்தத்தங்கள் மகா மேன்மையும் அருமையுமானவையும் அல்ல.

*கிறிஸ்தவர்களுக்கு வாக்குத்தத்த வசனங்களை கொடுக்கிற ஊழியர்கள், இச்சையினால் உண்டாகும் கேட்டுக்குத் தப்புவதற்கு வழிகாட்டத்தக்க வசனங்களையும்; விசுவாசம், தைரியம், ஞானம், இச்சையடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதரசிநேகம், அன்பு ஆகிய திவ்விய சுபாவங்களில் பெருகுவதற்கு அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாக்கத்தக்க வசனங்களையும் கொடுக்கவேண்டியது அவசியம்!* (2பேதுரு 1:4-8)

தேவனுடைய திவ்விய வல்லமையானது
தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவின்மூலமாகவே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் நமக்குத் தந்தருளினது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்! (2பேதுரு 1:3)

(நித்திய) ஜீவனுக்காகவும் தேவபக்திக்காகவுமே நாம் தம்மை அறிந்துகொள்ளவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
(2பேதுரு 1:3; யோவான் 17:3)
தேவனுடைய ஜனங்களை தேவபக்திக்கும் நித்திய ஜீவனுக்கும் ஏதுவான சத்தியத்தில் நடத்துவதே மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களுக்கு நேராக நடத்துவதாகும்!    

*"பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக் குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப் பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்"* என்று பவுல் சொல்லுகிறதும் கவனிக்கத்தக்கது. (தீத்து 1:4)

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு அவர் நித்திய ஜீவனைக் குறித்து வாக்குப்பண்ணியிருக்கிறார். நித்தியஜீவனைக்குறித்த நம்பிக்கையைப் பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவையும் விசுவாசத்தையும் தம்மால்
தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு
உண்டாக்கவே தேவன் தமது வார்த்தையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

*நித்தியஜீவனை குறித்த நம்பிக்கையையும், அதற்கேதுவான தேவபக்தியையும் பெருகப்பண்ணுகிற சத்தியத்தில் தேவனுடைய ஜனங்களை நடத்தவேண்டியது தேவஊழியர்களின் கடமையாகும்!* 

அழிந்துப்போகிற உலகக்காரியங்களை வாக்குப்பண்ணுகிறதை தவிர்த்து, அழியாத ஜீவனுக்குரிய வாக்குத்தத்தங்களில் தேவஜனங்களை நடத்துவதுதான் மகா மேன்மையும் அருமையுமான ஊழியமாகும்!!

*"இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால்,* பிரியமானவர்களே, *மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்"* என்று பவுல் சொல்லுகிறதையும் கவனியுங்கள். (2கொரிந்.7:1)

எப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருப்பதாக பவுல் குறிப்பிடுகிறார்?
2 கொரிந்தியர் ஆறாம் அதிகாரத்தின் இறுதிப்பகுதியில்: 
*"ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்"*
என்று பவுல் சொல்லுகிறது இங்கு கவனிக்கத்தக்கது. (2கொரிந்.6:17,18)

அவிசுவாசிகளுடனான விக்கிரகாராதனை உட்பட தேவனுக்குப் பிரியமில்லாத அனைத்து தொடர்புகளிலிருந்தும் விசுவாசிகள் விலகியிருக்க ஆலோசனை சொல்லும் சூழலில்தான் (2கொரிந்.6:13-16); பழைய ஏற்பாட்டில் ஏசாயா 52:11; எரேமியா 7:23; 11:3; 30:22 போன்ற வசனங்களில் தேவன் அளித்துள்ள வாக்குத்தத்தங்களை நினைப்பூட்டுகிறார் பவுல்.

*மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரலோக வாழ்வுக்காக பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தத்தக்க வாக்குத்தத்த வசனங்களையே தேவஊழியர்கள் தேவஜனங்களுக்கு எடுத்துக்காண்பிக்கவேண்டும்!* 

அற்பமானதும் அநித்தியமானதுமான உலக ஆசீர்வாதங்களை குறித்துப் பேசுகிற வசனங்களை எடுத்து வாக்குத்தத்தங்களாகக் கொடுத்து, தேவனுடைய ஜனங்களின் இருதயங்களை பூமிக்குரிவைகளையே பற்றிக்கொள்ளத் தூண்டும் பாவத்தை ஆதிசபை ஊழியரில் ஒருவரும் செய்ததில்லை.

பூமிக்குரியவைகளையே சிந்திக்கிற, தங்கள் வயிறை தேவனாகக் கொண்டிருக்கிற சிலுவையின் (பாடுகளின்) பகைஞரே இப்படிச் செய்யக்கூடும்! (பிலிப்.3:18,19)

*இப்படிச் செய்கிறது தங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு, அநுதினமும் ஆண்டவருக்கு பின்செல்லும் அவருடைய சீடருக்கு தகுதியானக் காரியம் அல்ல!!* 

- தேவனுடைய ஊழியனும் உங்கள் சகோதரனுமான...

க. காட்சன் வின்சென்ட்
     (கோயம்பத்தூர்)
             8946050920


========================
தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கையில், வாக்குத்தத்த வசனங்களை எடுத்து விசுவாசிகளுக்கு கொடுப்பது தவறாகுமா?
======================
✍️ தேவன் இஸ்ரவேலருக்கு பூமிக்குரிய பொதுவான ஆசீர்வாதங்களைகுறித்து சில வாக்குத்தத்தங்களை கொடுத்தார். (எண்.10:29; உபா.7:12-15; 26:19; 28:1-12; 1இராஜா. 8:56; சங்.105:42-45; ஏசாயா 41:8-20; 43:1-6; 44:1-5)

இஸ்ரவேலரில் சிலருக்கு தனிப்பட்டவிதத்தில் சில வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். (ஆதி.12:1-4; 13:14-17; 15:4,5; 17:1-8; 22:15-18; 28:13-15; 37:5-10; யாத்.4:12,17, 34:10; யோசுவா 1: 5-9; நியா.12-16; 2சாமு.7:11-17; 1இராஜா.3:11-14; எரே.1:5,7-10)

இஸ்ரவேலர் மற்றும் பிறவினத்தாருக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக உண்டாகும் மீட்பை குறித்த வாக்குத்தத்தங்களையும் கொடுத்தார். (ஏசாயா 9:1; 40:5; 42:7; 49:6; யோவேல் 2:28-30; ஆகாய் 2:7)

பொதுவான இஸ்ரவேலருக்கோ, இஸ்ரவேலில் தனிப்பட்ட நபருக்கோ தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்களை எடுத்து வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர வாக்குத்தத்தமாக விசுவாசிகளுக்குக் கொடுக்கும் வழக்கம் ஆதிசபையில் காணப்படவில்லை.

*"எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே"* என்று சொன்ன பவுலும் (2கொரிந்.1:19,20): இன்றைக்கு கிறிஸ்தவர்களுக்கு நாம் வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர வாக்குத்தத்தமாகக் கொடுக்கிற வசனங்களை எடுத்து ஆதிசபையாருக்கு வாக்குத்தத்தங்களாகக் கொடுத்ததில்லை. 

"தேவனுடைய வாக்குத்தத்தங்கள்" என்று இன்று நாம் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கும் பூமிக்குரிய ஆசீர்வாதங்களைக்குறித்த வாக்குத்தத்தங்களை பவுல் குறிப்பிடவில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.

தேவனுடைய வாக்குத்தத்தங்களாக பவுல் எவைகளை குறிப்பிடுகிறார்?
*நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை.* அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி. 
            2கொரிந்.1:18
என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், *உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார்*
            2கொரிந்.1:19
என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.

தங்களால் பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து நிச்சயமுள்ளவராக இருக்கிறதுபோல, தாங்கள் கொரிந்தியருக்குச் சொன்ன வார்த்தையும் நிச்சயமானவைகள் என்கிறார் பவுல்.

அப்படியானால், தாங்கள் கொரிந்தியருக்கு சொன்ன தேவவார்த்தைகளையே பவுல் இங்கு தேவனுடைய வாக்குத்தத்தங்களாகக் குறிப்பிடுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம்.

பவுல் கொரிந்தியருக்கு சொன்ன தேவவார்த்தைகள் எவை?

ஏனென்றால், *நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை;* முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன். 
            2கொரிந்.1:13
*கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை* ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே
            2கொரிந்.1:14
என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளில் உண்டாகும் புகழ்ச்சியைப்பற்றி அதாவது நித்தியவாழ்வை குறித்து தாங்கள் எழுதின காரியங்களையே கொரிந்தியருக்கு சொன்ன தேவவார்த்தைகளாக பவுல் குறிப்பிடுகிறார்.

அப்படியெனில், நித்தியஜீவனைப்பற்றி தாங்கள் சொன்ன வார்த்தைகளையே தேவனுடைய வாக்குத்தத்தங்கள் என்று பவுல் சொல்லுகிறதை புரிந்துகொள்ளலாம்.

உங்களோடேகூட எங்களையும் *கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி,* நம்மை *அபிஷேகம்பண்ணினவர்* தேவனே. 
            2கொரிந்.1:21
*அவர் நம்மை முத்திரித்து,* நம்முடைய இருதயங்களில் *ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்* 
            2கொரிந்.1:22
என்று பவுல் சொல்லுகிறதையும் கவனியுங்கள்.

கிறிஸ்துவுக்குள் தேவன் தங்களை ஸ்திரப்படுத்தி, அபிஷேகம்பண்ணி முத்திரித்து, தங்களுடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறதைப் பற்றி தாங்கள் சொன்ன சத்தியங்களையே பவுல் தேவனுடைய வாக்குத்தத்தங்களாகக் குறிப்பிடுகிறார் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

"பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், *தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு* உண்டென்று அறிந்திருக்கிறோம். ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, *நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள* மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம். தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம். இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம். இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், *மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப்* போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம். 
 *இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே. ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே"* என்று பவுல் சொல்லுகிறதும் கவனிக்கத்தக்கது. (2கொரிந்.5:1-5)

பரலோகத்திலே நமக்கு இருக்கிற நித்திய வீட்டுக்கு நம்மை ஆயத்தப்படுத்தவும் அதற்கான ஆதாரமாகவுமே பரிசுத்தஆவியானவர் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறார்.

 *"அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்"* என்று பவுல் சொல்லுகிறதும் கவனிக்கத்தக்கது. (எபேசி.1:14) 

அப்போஸ்தலர் 13:23,33; 26:6,7; ரோமர் 1:4,5; 4:14-16; 9:8; 15:8; கலாத்தியர். 3:14-19,22,29; 4:23,24; எபேசியர் 3:3; 1தீமோத்தேயு 4:8; 2தீமோத்தேயு 1:1; தீத்து 1:3,4 ஆகிய வசனங்களில் பவுல் குறிப்பிடும் வாக்குத்தத்தங்கள் இயேசுகிறிஸ்துவின் மூலமாக உண்டாகும் இரட்சிப்பு மற்றும் நித்திய மகிமையுடன் தொடர்புடையவையாகும்.

இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதாக பவுல் சொல்லும் 
தேவனுடைய வாக்குத்தத்தங்கள், இயேசுகிறிஸ்துவின் மூலமாக உண்டாகும் இரட்சிப்பு மற்றும் நித்திய மகிமையுடன் தொடர்புடையவை என்பதை ரோமர் 1:4; 15:8,9; கலாத்தியர் 3:14,17,18,22,29; எபேசியர் 3:3; 2தீமோத்தேயு 2:1 ஆகிய வசனங்களின் வழியாய் நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.

இப்படியிருக்க, நம்மில் பலர் வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்தர வாக்குத்தத்தமாகக் கொடுக்கும் பூமிக்குரிய ஆசீர்வாதங்களைப்பற்றியக் காரியங்கள் கிறிஸ்துவுக்குள்
ஆம் என்றும், ஆமென் என்றும் இருக்கிறதாக அர்த்தப்படுத்துகிறது சரியல்ல.

*நமது இம்மைக்குரிய வாழ்வுக்கான வாக்குத்தத்தங்கள் நிறைவேறுகிறதிலும் கிறிஸ்து முக்கிய பங்காற்றுகிறார். எனினும், மறுமை வாழ்வுக்கான வாக்குத்தத்தங்களில் தேவஜனங்களை நடத்துகிறதிலேயே ஊழியர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்பதே இயேசுகிறிஸ்துவின் விருப்பமாகும்!*

மறுமை வாழ்வுக்காக முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுகிறவர்களின் இம்மை வாழ்வுக்கான தேவைகள் கொடுக்கப்படும் என்று இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணியிருக்கிறார். (மத்.6:31-33)

நாளையத் தேவைகளுக்காகக் கவலைப்பட அவசியமில்லாத இயேசுவின் சீடனுக்கு (மத்.6:34), நாளைய மறுநாளின் தேவைகளுக்கான வாக்குத்தத்தங்கள் அவசியமில்லை.

*"நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணங்கள். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே"* (எபிரே.13:5) என்று போதிக்கிற ஆதிசபை ஊழியரைப் போலவே, தேவஜனங்களை நாளையதினத்தைக் குறித்த நம்பிக்கையுள்ளவர்களாக நடத்தவேண்டும்!

உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களுக்கான வாக்குத்தத்த வசனங்களுக்காய் அலைகிறவர்களாக தேவஜனங்களை மாற்றுவது, அன்றன்றுள்ள ஆகாரத்தை மறவாமல் அளிக்கும் தேவன்மேல் உள்ள அவர்களுடைய விசுவாசத்தை சேதப்படுத்துவதாகும்!!

- தேவனுடைய ஊழியனும் உங்கள் சகோதரனுமான...

க. காட்சன் வின்சென்ட்
     (கோயம்பத்தூர்)
           8946050920

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.