Type Here to Get Search Results !

Florence Nightingale Biography | Missionary Life History in Tamil | பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வாழ்க்கை சரித்திரம் | Jesus Sam

=====================
திருச்சபையின் செல்ல மகள்கள்
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (1820 - 1910)
======================
ஆரம்பகால வாழ்க்கை:
    பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 1820 ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசத்தில் வசதிமிகுந்த பெற்றோருக்கு மகளாக பிறந்தார். இவரது தகப்பனார் வில்லியம் நைட்டிங்கேல் இங்கிலாந்து தேசத்தின் ஷெரிஃபாக இருந்தார். தாயார் பேனிஸ்மித் வில்லியம்இங்கிலாந்து தேசத்தில் 46 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மனித அடிமைத்தன முறையை ஒழிக்கவும் ஏழைகள் மற்றும் உழைப்பாளிகளின் உரிமைகளுக்காகவும் பாடுபட்டு வந்தார். பிளாரன்ஸ் ஆறு வயது ஆவதற்கு முன்பே கடவுளின் சித்தத்தை குறித்த உணர்வுடன் இருந்தாள். பாடசாலையில் படிக்கும்போது எல்லா பாடங்களையும் விரும்பி படித்தாள். இளமையிலேயே இவளது ஆழ்ந்த வாஞ்சை நர்சிங் / செவிலியராக ஆவதைப்பற்றி இருந்தது. வியாதிப்ட்டவர்களின் கஷ்டம் நீக்குவது அவளது மாபெறும் சந்தோஷமாக இருந்தது. சீக்கிரத்திலேயே இவளது புகழ் குடும்பத்தில் பரவலாயிற்று. வியாதி, மரணம், அவசரநிலை அல்லது இக்கட்டானநிலை எதுவாயிருந்தாலும் பிளாரன்ஸிசடம் ஆலோசனை கேட்பார்கள். இவர்களது பண்ணையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தார்கள். இளம்பிராயத்தில் இருந்தே வியாதிப்பட்டவர்களின் வீடுகளுக்குச்சென்று அவர்களுக்கு சேவையாற்றினாள்.

கடவுளின் அழைப்பு:
    பிளாரன்ஸ் 16 வயதில் ஆவிக்குறிய அனுபவத்தை அடைந்தாள். Corner Stone என்ற புத்தகத்தை எழுதிய அமெரிக்க போதகர் மற்றும் கல்வியாளரான ஜேக்கப் ஆபோட் இவளை கடவுளுக்கு நெருக்கமாக கொண்டு வந்தார். இந்நிலையில் "நீ எனக்கு சேவை செய்ய உன்ன நான் தெரிந்து கொண்டேன்" என்ற சத்தத்தை கேட்டாள். பிளாரன்ஸ் சுற்றிப்பார்த்தபோது யாரையும் கானவில்லை. ஆகவே இதை தனது டைரியில் 7/11/1837 அன்று குறித்து வைத்துக்கொண்டாள். இந்த நாள் முதற்கொண்டு தனது எஸ்டேட்டிலும் அருகேயிருந்த கிராமங்களிலும் குடியிருந்த பெண்கள், சிறுபிள்ளைகளை அழைத்து அவர்களுக்கு முன்பாக ஒரு பாடலை பாடி வேதபகுதியை வாசித்து அதன் அர்த்தத்தை விளக்கிகூற ஆரம்பித்தாள். வேதாகம வகுப்புக்கு பின்பு வியாதிப்பட்டோருடன் சிரிது நேரம் செலவழித்து அவர்களுக்கு கொடுக்கவேண்டிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுப்பாள்.

பிளாரன்ஸின் கேள்விகள்:
    ஒருநாள் தன்னுடைய வீட்டிற்கு விருந்தினராக வந்த ஜெர்மானிய தூதர் பெரோன் சார்லஸ் புன்சென் என்பவரிடம் 22 வயதான பிளாரன்ஸ் "உதவியற்றவர்கள் மற்றும் நிர்பந்தமானவர்களின் பாரத்தை நீக்குவதற்கு ஒரு தனிநபர் என்னசெய்ய கூடும்? என்று கேட்டாள். இதற்கு அவர் பெண்கள் அமைப்பு ஒன்றை நிறுவி சேவைசெய்லாம் என்று ஆலோசனை கூறினார். ஆகவே பிளாரன்ஸ் பெண்கள் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி கிறிஸ்தவ பெண்களுக்கு பயிற்ச்சிகொடுத்து பெண் ஊழியர்களாகவும் செவிலியர்களாகவும் பயிற்சி கொடுத்து இங்கிலாந்து முழுவதும் பல்வேறு இடங்களில் சேவைப்பணி செய்ய அமர்த்தினாள். இந்நிலையில் 1842 ஆம் ஆண்டு வடக்கு ஐரோப்பாவில் கடும் பஞ்சம் நிலவியது. அயர்லாந்து, ஜெர்மனி, ஸ்காட்லாந்து நாடுகளில் சுமார் 16,00,000 மக்கள் மரித்துப்போனார்கள். ஆகவே இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இங்கிலாந்திற்குள் தஞ்சம் புகுந்து, மனிதர்கள் வாழமுடியாத சூழ்நிலையிலும் வாழ்ந்தார்கள். சிறுபிள்ளைகள் தொழிற்சாலைகளில் 12 மணிநேரம் வேலைசெய்தார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு உதவிசெய்யாமல் தான் மாத்திரம் மிகவும் வசதியாக வாழ்வது கடவுளுக்கு மகிமையாக இருக்கக்கூடுமா? என்று தனது டைரியில் எழுதிவைத்து சிந்தனை செய்தாள்.

எதிர்பாராத திருமண ஏற்பாடு:
    1842 ஆம் ஆண்டில் ஹென்றி நிக்கல்சன் என்ற உறவினரிடம் இருந்து பிளாரன்ஸ்க்கு ஒரு கடிதம் வந்தது. அதில் தான் அவளை நேசிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் எழுதியிருந்தார். ஆனால் பிளாரன்ஸ், தான் கர்த்தரை சேவிப்பதற்காகவும் ஏழைகளுக்கு உதவிசெய்யும் பொறுட்டு தனியாகவே இருக்க விரும்புவதாக தெரிவித்தாள். மூன்று ஆண்டுகள் ஆண்டுகள் கழிந்த நிலையில் பிளாரன்ஸ், இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ரிச்சர்டு மாங்க்டன் மில்னஸ் என்பவரை சந்தித்தாள். அவர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற Trinity கல்லூரியில் பட்டம் பெற்று Cambridge பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாகவும் கவிஞராகவும் எழுத்தாளராகவும் இருந்தார். இவ்விருவரும் சிறந்த நண்பர்களானார்கள். இந்நிலையில் மில்னஸ், பிளாரன்ஸை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால் பிளாரன்ஸ் ஒரு செவிலியராக விரும்பினார். இக்காலத்தில் செவிலியர்பணி இழிநிலையாக கருதப்பட்டது. ஏனெனில் செவிலியர்களே நோயாளிகளின் துணிகளை துவைத்து, மருத்துவமனையை சுத்தம் செய்யவேண்டியிருந்தது. செவிலியராகவேண்டுமானால் எவ்வித திறமையும் புத்தி சாதுரியமும் தேவையில்லை என்பதாகக் கருதப்பட்டது. செவிலியர்கள் எல்லோரும் சமுதாயத்தில் அடித்தட்டு மக்களாகவும், சன்மார்க்க ஒழுங்கு நெறியற்றவர்களாகவும் இருந்தார்கள். இதன் விளைவாக செவிலியர்பணி கீழான அந்தஸ்தை பெற்றதோடு, ஒழுக்ககேடும் சேர்ந்து கொண்டது. ஆனால் பிளாரன்ஸ் மக்களுக்கு சேவை செய்வதில் செவிலியர்பணி மூலமாக பல இலட்சக்கணக்கான பெண்களுக்கு கண்ணியமிக்க தொழிலாக மாற்றமுடியும் என்று உறுதியாக நம்பி செயல்பட ஆரம்பித்தாள். பிளாரன்ஸ் இதை கடவுளின் உன்னத அழைப்பாக கண்டாள். செவிலியர்பணி என்பது புத்தி, தைரியம், திறமை, மற்றும் சிறந்த மருத்துவ அறிவு கொண்ட தொழிலாக மாற்றமுடியும் என்று நம்பினாள். ஆகவே அறிவிலும் உபயோகத்திலும் அந்தஸ்திலும் செவிலியர்பணி மருத்துவர்கள் அளவிற்கு உயர்த்தப்படகூடும் என்று கண்டாள்.

வீட்டில் ஏற்பட்ட புயல்:
    பிளாரன்ஸ் தன் பெற்றோரிடம் தான் ஒரு குறுகியகால செவிலியர்பணி பயிற்சிபெற விரும்புவதாக தெரிவித்தாள். உடனே அவளது தாயார் கூச்சலிட்டு நம் குடும்பத்திற்கு அவமானத்தை கொண்டுவரும் காரியத்தை செய்யாதே என்று அடிக்க வந்துவிட்டார். பிளாரன்ஸின் மூத்த சகோதரிகள், நீ ஒருபோதும் இந்த அவமான தொழிலை செய்யக்கூடாது என்று அதட்டினார்கள். பிளாரன்ஸின் தகப்பனார் இதற்காகவா உன்னை உயர்கல்வி படிக்கவைத்தேன் என்று கூறி வெறுப்புற்றவராய் லண்டன் சென்றுவிட்டார். பிளாரன்ஸ் கடவுளின் அழைப்பிலும் தனது அற்பணிப்பிலும் உறுதியாய் இருந்தபடியினால் 1851 ஆம் ஆண்டு ஜெர்மனியில் செவிலியர்பணி பயிற்சி எடுத்துக்கொள்ள போவதாக பெற்றோரிடம் கூறினாள். பெற்றோர்கள் பிளாரன்ஸிடம் திருமணம் செய்துகொண்டு தங்களுடன் இருக்க கேட்டுக்கொண்டார்கள். இதையும் பிளாரன்ஸ் மறுத்துவிட்டார்.
இறுதியில் மிகுந்த தயக்கத்தோடு அவளது செவிலியர் பயிற்சிக்கு செல்ல பெற்றோர் சம்மதித்தார்கள்.

செவிலியர் கல்லூரி:
    1851 இல் ஜீன் மாதம் செவிலியர் பயிற்சிக்காக ஜெர்மனி வந்த பிளாரன்ஸ் தன்னோடு படிக்கவந்திருக்கும் மாணவிகளை கண்டார். அவர்கள் எல்லோரும் மிகச்சாதாரணமான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்களாய் இருந்தார்கள். விடுதியில் கொடுக்கப்பட்ட உணவு மிகவும் எளிமையாக இருந்தது. இங்கு இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து ஒவ்வொரு நாளும் 16 மணி நேரம் நோயாளிகளை கழுவுதல், அவர்களின் துணிகளை துவைத்தல், மருத்துவமனையை சுத்தம் செய்தல் போன்ற காரியங்களை செய்யவைத்தார்கள். பின்பு இங்கு இரணசிகிச்சை செய்யும் மருத்துவர்களிடம் பணியாற்றி அவர்கள் கொடுக்கும் தகவல்கள், அறிக்கைகள், படிவங்கள், புள்ளிவிபரங்கள், துண்டுபிரசுகரங்களை சேகரித்துக்கொண்டாள். இரவு நேரத்தில் மருத்துவமனைகள், அவற்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நர்சிங் பற்றிய விபரங்களை நன்கு கற்றுக்கொண்டாள். இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு 1853 ஆம் ஆண்டு லண்டன் நகரில் ஒரு மருத்துவமனையில் செவிலியராக நியமிக்கப்பட்டாள். 

லண்டனில் காலரா நோய்:
    1854 ஆம் ஆண்டில் லண்டனில் மிகப்பெரிய காலரா கொள்ளை நோய் குடிசைவாழ் மக்கள் பகுதியில் உண்டானது. எல்லா மருத்துவமனைகளும் நிறம்பி வழிந்தன. இதில் சிகிச்சை செய்த பல செவிலியர்கள் மரித்துப்போனார்கள். தொற்று நோய்க்கு பயந்து அநேக செவிலியர்கள் வேலையை விட்டுவிட்டார்கள். ஆனால் பிளாரன்ஸ் தைரியமாக முன்வந்து கொள்ளைநோயினால் பாதிக்கப்பட்ட ஏழைகள் மற்றும் விலைமாதுக்கள் ஆகியோருக்கு இரவும் பகலும் அவர்களுடைய ஆடைகளை களைந்து, மருத்துவம் செய்து வந்தார். ஆயினும் மரண எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இரவு முழுவதும் நிர்பாக்கியமான, அலறிக்கொண்டிருந்தவர்கள் சுமக்கப்பட்டு கொண்டுவரப்பட்டார்கள். இவர்களுக்கு பிளாரன்ஸ் அம்மையார் தூய்மைபணி செய்து அநேக மக்களை காப்பாற்றினார்கள்.

போர்களத்தில் செவிலியர்கள்:
    1854 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் இங்கிலாந்து தேசமும் பிரான்ஸ் தேசமும் துருக்கி நாட்டுடன் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக யுத்தத்தை நடத்தியது. இந்த யுத்தத்தில் போர்களத்தில் மரித்த இராணுவ வீரர்களைவிட மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த இராணுவ வீரர்கள் அதிகமானோர் மரித்துப்போனார்கள். காயம்பட்ட வீரர்களுக்கு நர்சிங் செய்ய ஆட்கள் இல்லாமற்போனார்கள். 
    அப்போது யுத்தத்தில் காயம்பட்டு, வியாதிப்பட்டு, கஷ்டப்படுகிற இராணுவ வீரர்களுக்கு உதவிசெய்ய செவிலியர்க்ளுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆகவே பிளாரன்ஸ் ஏற்றுக்கொண்டு தன்னுடன் 38 செவிலியர்களையும் அழைத்துச்சென்று ஊதியம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் போரில் காயம்பட்ட இராணுவ வீரர்களுக்கு சேவைசெய்ய அற்பணித்தார்கள். இதில் 24 செவிலியர்கள் ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் ஆவார்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் உயிரை பணயம்வைத்து தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு, போர்களத்தில் காயம்பட்டு உயிருக்காக போராடிக்கொண்டு இருந்த வீரர்களுக்கு தூய்மையான சேவை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

துருக்கியில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்:
    1854 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ம் தேதி பிளாரன்ஸ் தலைமையில் வந்த செவிலியர்கள் துருக்கி வந்தடைந்தார்கள். இங்கு எந்த ஒரு மரசாமான்களோ, உணவோ, உணவு தயாரிக்கும் சாதனமோ,படுக்கைகளோ எதுவும் இல்லை. இங்கு மின்விளக்குகளும் மெழுகுவர்தியும் குறைவாகவே இருந்தது. இக்குழுவினர் அனைவரும் இருளில்தான் தங்கள் படுக்கையறைக்கு சென்றார்கள். அந்த அறைகள் முழுவதும் கரப்பான் பூச்சிகளும், இங்குமங்கும் ஓடித்திரிகிற எலிகளாலும் நிறைந்திருந்தது.

    யுத்தம் அதிகரித்த நிலையில் அநேக இராணுவ வீரர்கள் காயம்பட்டார்கள். ஆகவே வியாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. படுக்கைகள் பற்றாக்குறையால் நோயாளிகள் தரையிலே கிடத்தப்பட்டார்கள். பிளாரன்ஸ் தலைமையிலான செவிலியர்கள் ஒவ்வொருநாளும் அங்கிருக்கும் கழிவறைகளை சுத்தம் செய்து நோய்வாய் பட்டவர்ஙளின் படுக்கையை நன்கு சுத்தம் செய்து அவர்கள் படுத்திருந்த தரையை நன்கு கழுவிவிட்டு உன்னதமான தூய்யைபணி செய்தார்கள். இதனால் வியாதிபட்டவர்கள், சீதபேதி காயம்பட்டவர்கள் சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தார்கள்.

பிளாரன்ஸ் நைட்டிங்கேலிடம் போங்கள்:
    1855 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் நாள் மிகப்பயங்கரமான புயல் துருக்கியில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் இராணுவ வீரர்களுக்கு பணி செய்துகொண்டிந்த க்ரீமியாவை தாக்கியது. இதில் பாதுகாப்பு கூடாரங்கள் பலமைல்களுக்கு அப்பால் வீசி எறியப்பட்டன. இராணுவத்தினருக்கு உதவிசெய்ய வந்த கப்பல்கள் புயலின் தாக்குதலுக்கு உள்ளாயின. இதில் இருந்த குளிர்கால உடைகள், மருத்துவ சாதனங்கள், மருந்துகள் எல்லாம் கடலில் மூழ்கியது. இதனால் பிளாரன்ஸ் அம்மையார் தான் வசூலித்திருந்த நிதி ஆதாரங்களை கொண்டு மருத்துசிகிச்சைக்கு தேவையான மருந்துகளை அங்கிருந்த மார்கெட்டில் இருந்து வாங்கி காயம்பட்ட வீரர்களுக்கு தூய்மைபணி செய்தார். 1856 ஆம் ஆண்டில் டைபஸ் என்ற விஷக்காய்ச்சல் 1000 இராணுவ வீரர்களை தாக்கியபோது அவர்களுக்கு தேவையான அளவு ஒயின், வேர்க்கிழங்கு, மாமிச எஸ்ஸன்ஸ் ஆகியவற்றை தேவைப்படுகிறவர்களுக்கு பிளாரன்ஸ் அம்மையார் அனுப்பிவைத்தார்கள். அங்கிருந்த வார்டுகள் செப்பனிடப்பட்டு, சுத்தமாக வைத்துக்கொண்டார். இதைக்குறித்து இங்கிலாந்தின் The Times பத்திரிக்கை குறிப்பிடும்போது ஆயிரக்கணக்கான வியாதிப்பட்ட வீரர்கள் மரித்துபோன சடலங்களைப்போல கழுதைகளில் வந்திரங்கினார்கள். அவர்கள் எலும்பும் தோலுமாய் கானப்பட்டு எலுமிச்சை சாறும் போதிய காய்கறிகளும் இல்லாததினால் பற்கள் வெளியே கொட்டின. சிலர் கட்டைவிரலை இழந்திருந்தார்கள். ஜனவரி 1855 இல் 12,000 இராணுவ வீரர்கள் மருத்துவமனையில் இருந்தார்கள். 11,000 வீரர்கள் மாத்திரமே போர்களத்தில் இருந்தார்கள் என்ற செய்தியை வெளியிட்டது. இந்த சம்பவத்தை கண்ணால் கண்ட நைட்டிங்கேல் அம்மையார் இதை "ஆழமான துயரத்தின் சரித்திரத்தின் ஈடு இணையற்ற ஆழ்ந்த துயர்நிலை" என்று எழுதியுள்ளார். இங்கிருந்த இராணுவ வீரர்களின் காயங்களை கட்டவும் ஆறுதல் படுத்தவும் நைட்டிங்கேல் அம்மையார் 14 மணிநேரம் செலவிட்டார். சில நேரங்களில் 18 மணி நேரம் இடைவிடாமல், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இடமளிப்பது, பொருட்களை விநியோகிப்பது, தனது பணியாளர்களுக்கு வேலையளிப்பது, அறுவை சிகிச்சைக்கு உதவுவது போன்ற பணிகளில் செலவிட்டார். நாள் முழுவதும் அவரது உதவிநாடி அவரைச்சுற்றி கூட்டமாக இருப்பார்கள். வியாதியுள்ளவர்களின் போக்குவரத்து கேப்டன்கள், ராயல் என்ஜினியர்களின் அதிகாரிகள், நர்சுகள், வியாபாரிகள், டாக்டர்கள், சப்ளையர்கள் ஆகியோர் நைட்டிங்கேல் அம்மையாரிடம் எல்லாவற்றிர்க்கும் கேட்பார்கள். வியாதிப்பட்டவர்களின் உணவுசீட்டு எழுதுவதற்கு தாள், சட்டைகள், உலோக பிளேட்டுகள், பேண்டேஜ்கள், போர்ட் ஒயின், அடுப்புகள் மற்றும் வெண்ணைகள்ஆகியவற்றை அம்மையாரிடம் கேட்பார்கள்.

    ஒருவர் மரிக்கும் தருணத்தில் இருந்தாலும் அவருக்கு தனது சக்திக்கு ஏற்றபடி சௌகரிகத்தை கொடுத்து மரணம் அவரை விடுவிக்கும்வரை அந்த இடத்தைவிட்டு நகரமாட்டார் என்று ஒரு இராணுவ அதிகாரி தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார். காயம்பட்ட இராணுவ வீரரிடம் உனது காயங்களை குறித்து வெட்கப்படாதே நண்பா என்று பிளாரன்ஸ் அம்மையார் கூறுவார்.
அப்போது காயம்பட்ட ஒரு இராணுவ வீரர் குறிப்பிடும்போது "நாங்கள் அழுக்கான, கடினமான போக்குவரத்திலிருந்து விடுபட்டு நைட்டிங்கேல் அம்மையாராலும் அவர்களோடு பணிபுரியும் செவிலியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சுத்தமான படுக்கையும், சூடான உணவும் தரப்பட்டபோது நாங்கள் பரலோகத்தில் இருப்பதைப்போல உணர்ந்தோம்" என்று தன் டைரியில் குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை நடு இரவில் போதுமான விளக்குகள் இல்லாத மருத்துவமனையில் இருந்து முனகுதல் சத்தம் கேட்டது. உடனே நைட்டிங்கேல் அம்மையார் தன் கைவிளக்கை எடுத்துக்கொண்டு முனுகுதல் சத்தம் கேட்ட திசையை நோக்கிச்சென்றபோது ஒரு இராணுவவீரர் மரணத்தின் விளிம்புநிலையில் துடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவரது கவனிப்புக்குகீழ் வந்த எந்த ஒரு நோயாளியும் தனியாக சாகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஆகவே மரணம் அவரை விடுவிக்கும்வரை அம்மனிதரோடு கூடவே இருந்தார். அந்த மனிதர் மரிக்கும்போது ஆனந்த கண்ணீர்விட்டவாரே மரித்துப்போனார். அந்த அளவிற்கு எல்லா நோயாளிகளிடமும் அன்பாய் பழகினார். இவ்வாறு சுமார் 2000 த்திற்கும் அதிகமானோர் மரித்துப்போனதை அருகில் இருந்து கவனித்தார் என்று ஒரு குறிப்பு நைட்டிங்கேல் அம்மையாரைப்பற்றி குறிப்பிடுகிறது.

கை விளக்கேந்திய காரிகை:
    இலண்டனில் இருந்து வெளிவரும் Illustrated London News என்ற பத்திரிக்கையானது பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் மருத்துவமனையின் ஒருவார்டில் கைவிளக்குடன் காயம்பட்ட இராணுவ வீரர்கள் மத்தியில் செல்லும் ஒரு படத்தை வெளியிட்டிருந்தது. அதில் நைட்டிங்கேல் அம்மையாரை ஒரு "பணிவிடைதூதன்" என்று சிறப்பித்திருந்தது. அவருடைய மெலிந்த உருவம் ஒவ்வொரு காரிடர் வழியாகவும் நகர்ந்து செல்லும்போது அவரை பார்த்தவுடன் காயம்பட்ட ஒவ்வொரு இராணுவ வீரனும் படுக்கையில்இருந்து எழும்பி நன்றியுடன் முகமலர்சியோடு மரியாதை செய்வார்கள் என்று குறிப்பிட்டிருந்தது. எல்லா மருத்துவ அதிகாரிகளும் தங்கள் ஓய்வுக்கு சென்ற பின்னர் அமைதியும் இருளும் சூழ்ந்த பின்னர் மைல் கணக்கில் படுக்கவைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நடுவில், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் மாத்திரம் தனியாக ஒரு கைவிளக்குடன் அவர்களை பார்க்க செல்வார். அவர் தன் தலையை அசைத்து, தேவைப்படுபவர்களுடன் பேசி, அநேகருக்கு தன் புன்முறுவலை அளிப்பார். அவரது நிழல் எங்கள் தலைமீதும் தலையணை மீதும் விழும்போது நாங்கள் அதை அன்பாக முத்தமிட்டால் அது எங்களுக்கு போதுமானது என்று ஒரு இராணுவ வீரர் தன்னுடைய கடிதத்தில் பதிவிட்டுள்ளார்.

உணர்சிகரமான கடிதங்கள்:
    பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் போரில் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் ஒவ்வொரு இராணுவ வீரனையும் தன் சொந்த சகோதரனாக கண்டார். எப்பொழுதெல்லாம் ஒரு வீரர் மரணத்திற்கு சமீபமாக இருக்கின்றாரோ அவரருகே கட்டாயம் அமர்ந்திருப்பார். ஒருபோதும் ஒரு இராணுவவீரன் தனியாக மரிக்கவிடமாட்டார். அவரது கையில் பேனாவும் பேப்பரும் இருக்கும். மிக ஜாக்கிரதையாக தேசத்திற்காக மரிக்கும் வீரனின் கடைசி ஆசைகள், செய்திகள் இவற்றை எழுதி அவரது குடும்பத்தினருக்கு அனுப்பிவைப்பார். இக்காரியமானது மரித்தவரின் குடும்பத்திற்கு அளவில்லாத ஆறுதலை தரும். ஒரு தாய் பிளாரன்ஸ் அம்மையாருக்கு எழுதும்போது "என் அன்பான செல்வியே, நான் எனது மகனுடைய இழப்பை மிகவும் உணருகிறேன். ஆனாலும் அவன் தனது தாய்நாட்டைவிட்டு எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருந்தும் தன் நண்பர்கள், மற்றவர்களால் கனிவுடன் கவனித்துக்கொள்ளப்ட்டான் என்ற எண்ணத்தில் தேற்றப்படுகிறேன்" என்று கடிதம் எழுதினாள். ஒரு சகோதரி "எனது சகோதரனின் மரணம் குறித்த கனிவோடு எனக்கு எழுதியதற்காக நான் நன்றி கூறுகின்றேன். அவனது ஆத்துமாவும் சரீரமும் கனிவோடு பராமரிக்கப்பட்டது என்பதை அறிவது மிகவும் பெரிய ஆறுதல்" என்று எழுதினாள். மற்றொருவர் "நீங்கள், நான் பார்த்த ஒவ்வொரு வீரனுக்கும் அருமையானவர்கள்" என்று எழுதியுள்ளார்.

வியாதிப்பட்ட பிளைரன்ஸ் அம்மையார்:
    அன்றைய ரஷ்யாவிலும் இன்றைய உக்ரேனின் க்ரீமியா மருத்ததுவமனையில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போது தொற்றுநோயான கீரீமியன் காய்ச்சலுக்கு உள்ளானார். இச்செய்தி படைவீரர்களுக்கு பரவியதும் அவர்கள் தங்கள் முகத்தை சுவருக்குநேராக திருப்பி கடவுளிடம் மன்றாடினார்கள். நைட்டிங்கேல் அம்மையார் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. அவரை எழுதவிடாதமல் அமைதியாக வைத்திருக்க முடியாததாதலால் ஒரு பேப்பரையும் பேனாவையும் கொடுத்தார்கள். காய்சல் குறையாததினால் அவரது சரீரம் குளிர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக அவருடைய அழகான கூந்தலை வெட்டவேண்டியதாயிற்று. இவரது சுகவீனம் இங்கிலாந்தில் பேரரதிர்சியை ஏற்படுத்தியது. எல்லோருடைய ஜெபத்தையும் கேட்ட கர்த்தர் பரிபூரண சுகத்தை கொடுத்தார். அவர் சுகம்பெற்றதும் நன்கு ஓய்வு எடுக்க இங்கிலாதுக்கு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். ஆனால் நைட்டிங்கேல் அம்மையார் ரஷ்யாவின் போர்களத்தைவிட்டு செல்ல மறுத்து அங்கே தங்கிவிட்டார். அவரைப்பார்த்ததும் படைவீரர்கள் சொல்லமுடியாத மகிழ்சிக்குள்ளானார்கள். ஐந்து மருத்துவமனைகளுக்கு பொறுப்பாக இருந்த நைட்டிங்கேல் அம்மையார் சாலைவசதி யில்லாத, கடினமான குளிர், உறைபணி புயல்கள் மத்தியில் குதிரைமீது சவாரிசெய்து பணிகளை கவனித்து வந்தார்கள்.

சமாதான உடன்படிக்கை:
    இந்நிலையில் மார்ச் 30, 1856 இல் இங்கிலாந்திற்கும் ஷ்யாவுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. போர் முடிவுக்கு வந்தது. செவிலியர்கள் தங்கள் பணிகளை நிறைவுசெய்து பிரியாவிடைபெற்று தங்கள் தாய்நாடு திரும்பிச் சென்றார்கள். இறுதியில் ஜூலை 16, 1856 இல் கடைசி நோயாளியும் வெளியேறியதும் நைட்டிங்கேல் அம்மையாரின் பணி நிறைவுக்கு வந்தது. இங்கிலாந்திலிருந்த மக்கள் யாவரும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை வரவேற்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். இவரைப்பற்றிய செய்திகள், கட்டுரைகள், கதைகள் யாவும் அம்மையாரை பிரபலப்படுத்தியிருந்தது. இங்கிலாந்திலிருந்து பிளாரன்ஸுக்கு அனுப்பப்பட்ட ஈவுகளை பெற்றுக்கொள்ள "நைட்டிங்கேல் நிதி" என்ற குழு அமைக்கப்பட்டது. இங்கிலாந்து மகாராணியார் அவருக்கு ஒரு சிலுவையையும் அதன்மீது ஒரு வைரக்கீரீடத்தையும் "இறக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்" என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஈவை அனுப்பியிருந்தார்கள். துருக்கியின் சுல்தான் அம்மையாருக்கு ஒரு வைரத்தை பரிசாகவும் அவரிடம் பணியாற்றிய எல்லா செவிலியர்ளுக்கும் ஒரு தொகையை ஈவாக அனுப்பிவைத்தார். போர்களத்திலிருந்து இங்கிலாந்திற்கு அனுப்பிவைக்க "யுத்த-மனிதர்" என்ற போர்கப்பலை அனுப்பிவைத்தது. இங்கிலாந்துக்கு திரும்பிவந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேலை வரவேற்க சிவப்பு கம்பளம் விரிப்பதற்கு மேயர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். லண்டன் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச்செல்ல விசேஷ வண்டிகள், வரவேற்பு வளையங்கள், தோரணங்கள், வாத்திய முழக்கங்கள், ஆனால் எல்லா வரவேற்பு நிகழ்சிகளையும் வேண்டாம் என்று நைட்டிங்கேல் அம்மையார் கூறிவிட்டார். அவர் கடவுளின் சித்தத்தை நிறைவேற்ற புறப்பட்டார். இப்போது அதை நிறைவேற்றியதில் திருப்தியடைந்தார். இப்படிப்பட்ட தலைவன் வணக்கத்தை அம்மையார் விரும்பாமல்போனது அவரது நன்மதிப்பை இன்னும் பரவச்செய்தது.

இலக்கை அடைதல்:
    கைவிளக்கேந்திய காரிகையான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் தனது 36 ஆம் வயதில் தனது மூன்று பெரிய இலக்குகளை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். முதலாவது செவிலியர்களுடைய அந்தஸ்துவை உயர்த்துவது. ஒரு செவிலியரின் அந்தஸ்து மருத்துவமனையை சுத்தம் செய்பவர், மிகவும் குறைவான சம்பளம் பெறும் பணி என்ற நிலையில் இருந்து ஒரு பாதுகாக்கும் தூதன் என்ற நிலைக்கு உயர்த்துவதற்கு கர்த்தர் மிக அற்புதமாக உதவிசெய்தார். இரண்டாவதாக செவிலியர்பணி செய்வது பெண்களுக்கு ஒரு கண்ணியமானதாக ஆக்குவது. மூன்றாவதாக பெண்ணின் அந்தஸ்தை மிகவும் திறமையுள்ள பணிசெய்யும் சக்தியாக உயர்த்துவது. இம்மூன்றையும் சாதித்துக்காட்டினார் ஆனாலும் அவருக்குள்ளாகவே ஒரு பெரும்பாதிப்பு உண்டாயிருந்தது. நைட்டிங்கேல் அம்மையார் தனது டைரியில் "ஓ, பாவம் அந்த படைவீரர்கள். அவர்களை க்ரீமியன் (உக்ரேன்) கல்லறைகளில் விட்டுவிட்டு, நான் மட்டும் உயிருடன் வீடு திரும்புகிறதால் நான் ஒரு மோசமான தாய்" என்று பதிவிட்டுள்ளார்.

போர்கள பணிக்குப்பின்:
    இங்கிலாந்து மகாராணியார் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் யுத்தத்தில் இருந்து திரும்பிய ஒருமாத காலத்திற்குள் இங்கிலாந்து அரன்மனைக்கு அழைத்து தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும், எப்படியெல்லாம் இங்கிலாந்து இராணுவ மருத்துவதுறையை மேம்படுத்துவது என்றும், சுகாதார நிலை, நிர்வாகம், இராணுவ மருத்துவமனையின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றை பற்றி ராயல் கமிஷன் (Royal Commission) ஒன்றை ஏற்படுத்தினார். நைட்டிங்கேல் ஆம்மையாரின் ஆலோசனைப்படி இங்கிலாந்து இராணுவத்திற்கு விசேஷமுறையில் உதவிசெய்ய டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை உருவாக்க 1860 ல் இராணுவ மருத்துவ பள்ளி திறக்கப்பட்டது. இம்மருத்துவமனையின் பணிகள் சிறப்பாய் இருக்க நைட்டிங்கேல் அம்மையார் இரவும் பகலும் உழைத்தார்கள். இராணுவ வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் முக்கிய குறிக்கோளாய் இருந்தார். வீரர்கள் மதுபான கடைகளில் தங்கள் சம்பாத்தியத்தை செலவழிக்காமல் இருக்க நூலகங்கள், ஆரோக்கிய விளையாட்டுகள், பொழுதுபோக்குகள், கோட்டைக்குள் ஆலயங்கள், துறைமுகத்தில் ஆலயங்கள், இராணுவ குடியிருப்பில் ஆலயங்களும் பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்த செய்தார். அப்படியே இங்கிலாந்து முழுவதும் தொழில்ரீதியான செவிலியர் கல்லூரி நிறுவ ஏற்பாடுகள் செய்தார். இக்கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவிகள் "நைட்டிங்கேல் நர்சுகள்" என்று அழைக்கப்பட்டார்கள். 1961 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மருத்துவமனைகளில் 27,618 செவிலியர்கள் பட்டபடிப்பு பெற்றார்கள். இவ்வாறு இங்கிலாந்து நாடு நைட்டிங்கேல் அம்மையாரின் அனுபவங்களை பாடமாக்கிக்கொண்டார்கள்.

புகழ்ற்ற வாக்கியம்:
    கடவுளோடு நம்மை பிணைக்கும் பிணைப்பு, அதுவே நம்மை பிறருடன் இணைக்கும் பிணைப்பாகும். ஏழைகளை அசட்டை செய்வதோ அல்லது தவறாக பயன்படுத்துவதோ, வயதான பெண்ளை பலவீப்படுத்துவதோ, ஏழைக்குழந்தை, பலவீனமான குழந்தை, அழகற்ற குழந்தை, ஏழைத்தொழிலாளி, ஊனமுற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோரை அசட்டை செய்வது, தேவதூஷணம் சொல்வது எவ்வளவு பெரிய குற்றமோ, அதைப்போல இதுவும் தேவனுக்கு எதிராக நாம் செய்யும் பெரிய குற்றமாகும்" என்று தன்னுடைய டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை குறித்த நைட்டிங்கேல் அம்மையாரின் பாரம்:
    1857 ஆம் ஆண்டு இந்தியாவில் சிப்பாய் கலகம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான அப்பாவி பிரிட்டிஷ் மக்கள் இந்திய சிப்பாய்களால் கொடூரமாக கொல்லப்பட்டபோது பிளாரன்ஸ் நைட்டிங்கேல் இந்தியாவிற்காக அதிகபாரம் கொண்டார். இதற்காக இந்தியாவிற்கு அனுப்பட இருந்த லார்டு மேயோவை சந்தித்து "இந்தியா போஷிக்கப்படாவிட்டால் இந்தியாவிற்கு ஒன்றுமேசெய்ய முடியாது. எந்த வேலைக்கும் அடிப்படை தேவையான நீர்பாசானம் வரவேண்டும். இல்லாவிட்டால் பஞ்சம் மக்களின் நிரந்தர நிலையாகிவிடும். பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் அரைப்பட்டினி நிலையில் மக்கள் இருக்கும் வரைக்கும் ஆரோக்கியம் சாத்தியமில்லை, நீதி சாத்தியமில்லை, அமைப்புகள் சாத்தியமில்லை. ஆகவே இந்தியா கல்வியில், சுகாதாரத்தில், வேலைவாய்ப்பில், வேளாண்மையில் போஷிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமத்திற்கும் நீர்பாசான வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் திருச்சி, தென் ஆற்காடு மாவட்டம் ஆகியவற்றை கோலரூன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இரண்டு அணைக்கட்டுகள் மூலம் நீர்பாசானத்திற்கு வழிசெய்யப்பட்டது. இதனால் பஞ்சத்தின்போது பட்டினி சாவுகள் தடுத்துநிறுத்தப்பட்டன.

நைட்டிங்கேல் அம்மையாரின் இறுதி ஆண்டுகள்:
    நைட்டிங்கேல் அம்மையார் பணக்காரர்கள் பணம் செலவழித்துப்பெறக்கூடிய மருத்துவ சேவையினை மிக ஏழையான மனிதனும் அதே தரமான சிகிச்சையை பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால்தான் இங்கிலாந்து முழுவதிலும் இலவச மருத்துவ மனைகள் ஏற்படுத்தப்பட்டன. அவை ஆங்கிலேயர் உதவி மூலம் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே இலவச மருத்துவமனைகளின் அஸ்திபாரம் நைட்டிங்கேல் என்றால் மிகையாகாது. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் 90 வயதுவரை உழைத்துக்கொண்டே இருந்தார். அவரது வாழ்நாளில் 200 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதினார். அத்துடன் அறிக்கைகள், சிறு புத்தங்கள், இராணுவ ஆரோக்கியத்திற்கு அதிகமாக உதவியது. தங்கள் இராணுவ மற்றும் சிவில் மருத்துவமனைகளை எவ்விதம் முன்னேற்றுவது என்று அநேக நாடுகளின் அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்கினார். யுத்த காலத்தில் மருத்துவதுறையை எவ்விதம் பாதுகாக்க வேண்டும் என்று அநேக அரசாங்கங்களுக்கு ஆலோசனை கொடுத்தார். இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசு சென்னையில் கட்டப்படவிருக்கும் பொதுமருத்துவமனையின் வடிவமைப்புபற்றி நைட்டிங்கேல் அம்மையாரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நைட்டிங்கேல் அம்மையாரின் வாழ்க்கை ஏற்படுத்திய தாக்கத்தினால் சுவிட்சர்லாந்தில் செஞ்சிலுவை சங்கம் உருவாகுவதற்கு காரணமாக இருந்தது. அது அநேகநாட்டு படைவீரர்களின் வாழ்க்கையை காப்பாற்றியது. இந்நிலையில் ஆகஸ்டு 13, 1910 இல் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் வாழ்வு முடிவுக்கு வந்தது. மதிய நேரத்தில் தூங்கினார், அதன்பின்பு திரும்ப எழுந்திருக்கவில்லை. அவரது பூத உடல் அழிந்தாலும் அவருடைய ஆன்மா இன்னும் பல செவிலியர்களை உறுவாக்கிக்கொண்டு இருக்கிறது. இவரது பிறந்தநாளான மே 12, 1820 ஐ செவிலியர் தினமாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.