===============
ஒரு ஊழியக்காரர் மரிக்கும்போது, அவர் தனது ஊழியத்தை தனது குடும்பத்தாரிடம் விட்டுச்செல்வதாக சொல்லப்படுவது சரியா?
==================
ஒருவர் எதை போதித்தாலும் அதற்கான வேத ஆதாரத்தைக் காண்பிக்கும் கடமை அவருக்கு இருக்கிறது.
புதிய ஏற்பாட்டு (ஆதி)சபையில் ஊழியம் செய்த ஐந்துவிதமான ஊழியரில் எவரும் தங்கள் ஊழியத்தை தங்கள் குடும்பத்தாரிடமோ, மற்றவரிடம் விட்டுச்சென்றதாக தகவல் இல்லை!
"..... *என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும்,* தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு *நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே* விரும்புகிறேன்.
அப்.20:24
நல்ல போராட்டத்தைப் *போராடினேன்,* ஓட்டத்தை *முடித்தேன்,* விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
2 தீமோ.4:7
மேலே பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள்.
தன் ஒட்டத்தை முடித்துவிட்ட ஒருவர், அதை எப்படி மற்றவரிடம் விட்டுச்செல்லமுடியும்!
தான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றின ஒருவர், அதை எப்படி
குடும்பத்தாரிடமோ, மற்றவரிடமோ ஒப்படைக்கமுடியும்?
அர்க்கிப்பைக் கண்டு: *நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி* கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.
கொலோ.4:17
நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், *உன் ஊழியத்தை நிறைவேற்று.*
2தீமோ.4:5
மேலே பவுல் சொல்லுகிறதையும் கவனியுங்கள்.
தான் கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருக்கிற அர்க்கிப்பு, அதை மற்றவரிடம் எப்படி விட்டுச்செல்லுவான்?
தன் ஊழியத்தை நிறைவேற்றுகிற தீமோத்தேயு, அதை மற்றவரிடம் எப்படி விட்டுச்செல்லமுடியும்?
*ஒரு ஊழியருக்குப் பின்பு, அவரால் ஸ்தாபிக்கப்பட்ட சபையை, ஸ்தாபனத்தை, ஊழிய இயக்கத்தை, தொடர்ந்து நடத்துகிற அவருடைய மனைவி, தன் கணவர் தன்னிடம் விட்டுச்சென்ற ஊழியத்தை தான் தொடர்ந்து செய்வதாகவும்; ஊழியருடைய பிள்ளைகள், தங்கள் தகப்பனார் தங்களிடம் விட்டுச்சென்ற ஊழியத்தை தாங்கள் தொடர்ந்து செய்வதாகவும் சொல்லிக்கொள்ளுகிறதை இன்று காணமுடிகிறது!*
இதை பல மூத்த ஊழியர்கள் ஆதரித்து, குறிப்பிட்ட ஊழியரால் ஆரம்பிக்கப்பட்ட சபையை, ஸ்தாபனத்தை தொடர்ந்து நடத்திசெல்ல, மரித்த ஊழியரின் குடும்பத்தாரை, பிரதிஷ்டை செய்துவைக்கிறதையும் காணமுடிகிறது!
இதற்கு இவர்கள்
ஆரோனின் ஊழியத்தை ஆதாரமாகக் காண்பிக்கிறார்கள். (யாத்.29:1-8; 30:30; 40:13-15)
*ஆரோனுக்கும்* பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
யாத்தி.40:13
*அவன் குமாரரையும் வரச்செய்து,* அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி,
யாத்தி.40:14
*அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்பண்ணினபடியே, அபிஷேகம்பண்ணுவாயாக.* அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் *தலைமுறைதோறும் நித்திய ஆசாரியத்துவத்துக்கு ஏதுவாயிருக்கும்* என்றார்.
யாத்தி.40:15
மேற்காணும் வசனங்களை நன்றாய் கவனியுங்கள்.
தேவன் ஆரோனின் குமாரரை அவன் மரித்தப்பின்பு ஆசாரிய ஊழியத்திற்கு ஏற்படுத்தவில்லை. அவன் வாழ்ந்த காலத்திலேயே அவனுடன் ஊழியத்திற்கு ஏற்படுத்தினார்.
மேலும் ஆரோனின் குமாரர் செய்தது ஆரோன் கொடுத்த ஆசாரிய ஊழியத்தை அல்ல, கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த ஆசாரிய ஊழியத்தையே அவர்கள் செய்தார்கள்.
அவர்கள் பெறும் ஆசாரிய ஊழிய அபிஷேகம் *தலைமுறைதோறும் நித்திய ஆசாரியத்துவத்துக்கு ஏதுவாயிருக்கும்* என்று சொன்ன கர்த்தரே, "உன் பிதாவின் வீட்டார் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கையில், நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி, என் பலிபீடத்தின்மேல் பலியிடவும், தூபங்காட்டவும், என் சமுகத்தில் ஏபோத்தைத் தரிக்கவும், இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் *அவனை (ஆரோனை) எனக்கு ஆசாரியனாகத் தெரிந்து கொண்டு, உன் பிதாவின் வீட்டாருக்கு* இஸ்ரவேல் புத்திரருடைய தகனபலிகளையெல்லாம் கொடுக்க வில்லையா? *உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக.* என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன். என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள். *நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்.* அவன் என்னால் அபிஷேகம்பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துகொள்ளுவான். *உன் வீட்டாரில் மீதியாயிருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப்பணத்துக்காகவும் ஒரு அப்பத்துணிக்கைக்காகவும் அவனிடத்தில் வந்து: நான் கொஞ்சம் அப்பம் சாப்பிட யாதொரு ஆசாரிய ஊழியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்ளும் என்று கெஞ்சுவான்"* என்று சொல்லி, ஏலியின் காலத்தில் ஆரோன் குடும்பத்தாரின் ஊழியத்திற்கு முடிவுகட்டினார்.
(1சாமு.2:27,28,30,36)
ஆரோனின் குடும்பத்தாரின் ஊழியத்தை மாதிரியாக எடுத்துக்கொண்டால், இன்றைய ஊழியரின் குடும்பத்து சகோதரிகள் சபையில் ஊழியம் செய்யமுடியாது!
பழைய ஏறபாட்டுக் காலத்தில் இஸ்ரவேலின் 12 கோத்திரத்தில், லேவிகோத்திரத்தாரை மட்டுமே தேவன் ஆசாரிய ஊழியத்திற்குத் தெரிந்துகொண்டார். (எண்.18:6; எபி.7:11) ஆனால், புதிய ஏற்பாட்டுக்காலத்தில் இரட்சிக்கப்பட்ட இஸ்ரவேலின் எந்த கோத்திரத்தாரும், புறஜாதியாரும் ஊழியம் செய்கிறதற்கு எந்தத் தடையும் இல்லை!
*லேவிகோத்திரத்தை சேர்ந்த இரட்சிக்கப்பட்ட ஆசாரியர் அநேகர், புதிய ஏற்பாட்டு சபையில் லேவிகோத்திரத்தாரல்லாத அப்போஸ்தலரின் கீழ் விசுவாசிகளாய் இருந்தது ஆச்சரியம் அல்லவா? (அப்.6:7)*
பழைய உடன்படிக்கையின் ஊழியமாகிய ஆசாரிய ஊழியம் தேவனால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது! (எபி.7:11-18; 8:7-13; 9:1-14; 10:1-18)
விளங்குகளின் இரத்தத்தினாலுண்டான பழைய உடன்படிக்கையின் ஊழியத்திற்கும், இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலுண்டான புதிய உடன்படிக்கையின் ஊழியத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. (எபி.9:12; மத்.26:28; 2கொரி.3:5-18)
*பொதுவாக, தங்கள் ஊழியத்திற்கு ஆதாரத்தை பழைய ஏற்பாட்டில் தேடுகிறவர்கள்: சபையில், ஸ்தாபனத்தில், தங்கள் இடத்தில் தங்கள் குடும்பத்தாரை வைத்துவிட்டுப் போக விரும்புகிறவர்களாகவே இருக்கிறார்கள்!*
இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்குப் பின்பு தங்கள் குடும்பத்தார் மட்டுமே சபையில், ஊழிய ஸ்தாபனத்தில் முக்கியமான இடத்தில் இருப்பதற்கு வசதியாக, தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அறங்காவலர்களாகக் கொண்ட, குடும்ப அறக்கட்டளையை நடத்துகிறவர்களாக இருக்கிறார்கள்!
ஒரு ஊழியரால் ஸ்தாபிக்கப்பட்ட சபையை, ஊழிய ஸ்தாபனத்தை அவருக்குப் பின்பு அவருடைய குடும்பத்தார் நடத்த நேரிடலாம். ஆகிலும், அந்த ஊழியர் விட்டுச்சென்ற ஊழியத்தைத் தாங்கள் தொடர்வதாக அவருடைய குடும்பத்தார் சொல்லுகிறது வேத அடிப்படையற்றதாகும்! ஏனெனில், எந்த ஊழியரும் தனது ஊழியத்தை தனது குடும்பத்தாரிடமோ, அல்லது குடும்பத்தாரல்லாதவரிடமோ விட்டுச்செல்லமுடியாது!
*ஒரு ஊழியரின் குடும்பத்தார் தொடர்ந்து ஊழியம் செய்தாலும், அதை கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த ஊழியமாக எண்ணவேண்டுமேயல்லாமல், தங்கள் கணவர் அல்லது தகப்பனார் தங்களுக்கு விட்டுச்சென்ற ஊழியமாகக் கருதக்கூடாது!*
கர்த்தரால் தாங்கள் ஊழியத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக சொல்லுகிற ஊழியரின் குடும்பத்தார்: கர்த்தர் தங்களை அனுப்புகிற எந்த இடத்திற்கும் சென்று, தேவன் தங்களுக்கு கொடுத்துள்ள அழைப்பின்படியான ஊழியத்தை செய்வதற்கு ஆயத்தமாய் இருக்கவேண்டும்!
தங்கள் புருஷர் அல்லது தகப்பன்மாரால் ஸ்தாபிக்கப்பட்ட சபையை, ஸ்தாபனத்தை பற்றிப்பிடித்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.
ஊழிய அழைப்பில்லாத ஊழியரின் குடும்பத்தார், குறிப்பிட்ட ஊழியரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சபையை, ஸ்தாபனத்தை, தேவனால் ஏற்படுத்தப்டுகிற தகுதியான மக்களுக்கு விட்டுக்கொடுத்து, பின்னால் இருந்து தங்கள் ஜெபத்தாலும் பொருளாலும் ஊழியத்தத் தாங்கலாம். தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கிருபை வரங்களுக்கேற்ப, அவர்களுக்கு ஊழியத்தில் உதவியாக இருக்கலாம்!
*ஒரு ஊழியர் எந்த அழைப்புள்ளவராக இருந்தாரோ, அவருடைய குடும்பத்தாரில் சிலர் அதே அழைப்புள்ளவராகவோ, அந்த ஊழியர் ஸ்தாபித்த சபையை, ஊழிய ஸ்தாபனத்தை நடத்துகிறவராகவோ தேவனால் ஏற்படுத்தப்பட்டால், அதை ஒருவரும் தடைசெய்யமுடியாது. ஆனால், தங்கள் முன்னோரால் ஸ்தாபிக்கப்பட்ட சபையில், ஊழிய ஸ்தாபனத்தில் தலைமுறை தலைமுறையாக தாங்களையே தேவன் முக்கியப் பொறுப்புகளில் வைத்திருப்பதாக வாரிசுகள் சொல்லுகிறதற்கு புதிய உடன்படிக்கையின் ஊழியத்தில் ஆதாரமில்லை.*
ஆதிசபை ஊழியரில் ஒருவரும் தங்கள் ஊழியத்தை தங்கள் குடும்பத்தாரிடம் விட்டுச்சென்றதுமில்லை. அவர்கள் தங்களிடம் ஊழியத்தை விட்டுச்சென்றிருப்பதாகச் சொல்லி, அவர்களுடைய குடும்பத்தார் அவர்கள் ஸ்தாபித்த சபையை ஆக்கிரமித்துக்கொண்டதுமில்லை!
ஒரு ஊழியக்காரர் வேத அடிப்படையற்றக் காரியங்களை போதிக்கிறதையும், செய்கிறதையும் குறித்து அவருடைய ஊழியத்தைத் தாங்குகிற மக்கள் கேள்வி எழுப்பினால் மட்டுமே, அவர் தன் தவறான போதனையையும் செய்கையையும் மாற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது!
*பொதுவாக இந்தியக் கிறிஸ்தவர்கள் ஊர், ஜாதி, மொழி மற்றும் சினிமா தாக்கம் அதிகம் உள்ளவர்கள். தங்கள் ஊரை, தங்கள் ஜாதியை, தங்கள் மொழியை சேர்ந்த, தங்கள் அபிமான நட்சத்திரமான ஊழியர்கள் என்ன சொன்னாலும் இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்! என்ன செய்தாலும் சகித்துக்கொள்ளுவார்கள்!*
இங்கு தேவனைவிட தேவஊழியரை ஆராதிக்கிறவர்களும், வேதத்தைவிட வேதத்தை போதிக்கிறவர்களை மதிக்கிறவர்களும் அதிகம்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
=======================
திருச்சபைகளில் எழுப்புதல் வந்துவிட்டதற்கான அடையாளமாக ஏதாகிலும் ஒன்றை சொல்லமுடியுமா?
=========================
✍️ மிகவும் பிரபலமான, அதிக அனுபவமுள்ள, பெரிய சபைகளை நடத்துகிற ஊழியர்கள்கூட அறிந்திராத சத்தியங்களை, விசுவாசிகளான இளையத்தலைமுறையினர் பலர் அறிந்திருக்கிறது எழுப்புதலுக்கான அடையாளங்களில் ஒன்றல்லவா!
"பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! *இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால்* உம்மை ஸ்தோத்திரிக்கிறேன், ஆம், பிதாவே! *இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது"* என்று இயேசு ஆவியிலே களிகூர்ந்து சொன்னது இங்கு நினைவுக்கு வருகிறதே!
(லூக்கா 10:21)
தங்களை பெரிய ஞானிகள், கல்விமான்கள், அனுபவமிக்கவர்கள், பெரிய ஊழியர்கள் என்றெல்லாம் எண்ணிக்கொள்ளுகிறவர்களுக்கு தெரியாத, அவர்களுக்கு புரியாத சத்தியங்களை சின்ன தம்பி, தங்கச்சிகள் அறிந்திருக்கிறது ஆச்சரியம் அல்லவா? இது பிதாவாகிய தேவனால் ஆகும் காரியமல்லவா?
பிரபல ஊழியர்களும், "நாங்கள்தான் சபையை நடத்தும் அழைப்புப் பெற்ற அவதாரப்புருஷர்கள்" என்கிறவர்கள், காலங்காலமாக 'சத்தியம்' என்று மக்களை நம்பப்பண்ணின சத்திய அடிப்படையில்லாத போதனைகளை இளம் தலைமுறையினர் தோலுரித்துக்காட்டத் தொடங்கிவிட்டனரே!
தங்களின் தவறான உபதேசத்தையும் செய்கைகளையும் குறித்து இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியாமல் மூத்த ஊழியர்களும் மூர்த்சித்துக்கிடக்கிறார்களே!
வேத அடிப்படையற்ற போதனைகளை கொடுத்தும், காரியங்களை செய்தும் வருகிற பிரபல ஊழியர்கள் இவர்களிடம் சிக்கிக்கொண்டு விழிக்கின்றனரே!
எழுப்புதலுக்காக ஜெபிக்கிற பிரபல ஊழியர்கள் இப்படிப்பட்ட ஒரு எழுப்புதலை எதிர்பார்த்திருக்கமாட்டார்களோ!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
=====================
எதிர்க்க இடங்கொடுங்கள்!
=====================
மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, *அவன்மேல் குற்றஞ் சுமந்ததினால்,* நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன்.
கலா.2:11
எப்படியெனில்,
*யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே* அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான். *அவர்கள் வந்தபோதோ,* விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து விலகிப் பிரிந்தான்.
கலா.2:12
*மற்ற யூதரும்* அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள். அவர்களுடைய மாயத்தினாலே *பர்னபாவும்* இழுப்புண்டான்.
கலா.2:13
அந்தியோகியா சபையை பார்வையிட வந்திருந்த ஆதிசபையின் தூண்களில் ஒருவரான பேதுரு, புறஜாதியாரிலிருந்து இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளுடன் சாப்பிட்டார்.
நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களும், யூத முறைமைகளின்படி நடக்கிறவர்களுமான (அப்.21:20,21) சில யூதவிசுவாசிகள்
யாக்கோபினிடத்திலிருந்து (எருசலேமிலிருந்து) அந்தியோகியா சபைக்கு வந்தார்கள்.
அவர்கள் வந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்களாகிய அவர்களுக்குப் பயந்து, புறஜாதி விசுவாசிகளுடன் சாப்பிடுகிறதை தவிர்த்தார் பேதுரு.
அந்தியாகியா சபையில் இருந்த மற்ற யூதரும் அவருடனேகூட மாயம்பண்ணினார்கள். இதுவரை எந்த வித்தியாசமும் பார்க்காமல் சபையாரை நடத்திவந்த அந்தியோகியா சபையின் ஊழியர்களில் ஒருவரான பர்னபாவும் (அப்.13:1), பேதுரு மற்றும் யூத விசுவாசிகளின் மாயத்தினாலே இழுப்புண்டு, புறஜாதி விசுவாசிகளுடன் சாப்பிடுகிறதை தவிர்த்தார்.
எருசலேம் சபையிலிருந்து தங்கள் ஜாதி விசுவாசிகள் வந்ததும் பேதுருவும் யூத விசுவாசிகளும் பர்னபாவும் தங்கள் சுயரூபத்தை காட்டிவிட்டது புறஜாதி விசுவாசிகளுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.
அந்த சமயத்தில் பவுல் அந்தியோகியாவிற்கு வருகிறார்.
கிறிஸ்தவருக்குள் யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. விருத்தசேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறார்கள். கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார் (கலா.3:28; கொலோ.3:11), கிறிஸ்துவுக்குள்ளான யூதர், புறஜாதியார் அனைவரும் ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருக்கிறார்கள் (எபே.2:13-19) என்கிற கருத்துள்ளவர் அவர்.
பேதுருவும் மற்ற யூதவிசுவாசிகளும் தங்களை நடத்தின விதத்தை குறித்து புறஜாதி விசுவாசிகள் அவரிடம் கூறினார்கள்.
இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை பவுல் கண்டபோது, அதற்கு வழிகாட்டின பேதுருவை எல்லாருக்கும் முன்பாக முகமுகமாய் கடிந்துகொண்டார். (கலா.2:11,14)
"ஆண்டவரின் சீஷர்களில் அதிக செல்வாக்கு பெற்றவனும் (லூக்கா 22:32), சபையின் தூண்களில் ஒருவனும் (கலா.2:9), மூத்த அப்போஸ்தலனுமான (அப்.2:14) என்னை, நேற்று ஊழியத்திற்கு வந்த நீ கடிந்துகொள்கிறாயா? நீ எனக்கு அட்வைஸ் பண்ணுகிறாயா? எல்லாம் எனக்கு தெரியும். உன் வேலையை பாரு" என்று சொல்லாமல், பேதுரு அமைதிகாத்தார்.
ஒரு ஜூனியர் ஊழியர் பவுல், சீனியர் ஊழியரான தன்னை சபையார் முன்பாகவே கடிந்துகொண்டதை, பேதுரு கௌரவக்குறைவாக எடுத்துக்கொள்ளவில்லை.
சமயம் வரும்போது பவுலை பழிவாங்கிவிடவேண்டும் என்கிற கசப்பை அவர் இருதயத்தில் ஔித்துவைக்கவில்லை.
"மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள். *நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான். எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான். அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது.* கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்" என்று பேதுரு எழுதியிருப்பது
(2பேதுரு 3:16), அவர் பவுல்மேல் வைத்திருந்த அன்பையும் மரியாதையையும் காண்பிக்கிறதல்லவா?
தன்னிலும் இளையவரும் ஊழியத்தில் அனுபவம் குறைந்தவராயினும், பவுலின் கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொண்ட பேதுரு சிறந்த அப்போஸ்தலராக பிரகாசித்தார்!
"ஆகையால் *நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி,* ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், *சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்"* என்று அவர் எழுதியது, அவருடைய மெய்யான மனமாற்றத்தைக் காண்பிக்கிறதல்லவா? (1பேதுரு 1:22)
பவுலின் கண்டித்ததை பேதுரு ஏற்றுக்கொள்ளாமலிருந்திருப்பாரானால், அவர் ஒரு மாயக்காரராகவே தன் ஓட்டத்தை முடித்திருப்பார்.
எத்தனை பெரிய ஊழியரானாலும், எவ்வளவு அனுபவமுள்ளவரானாலும், தன்னிலும் வயது மற்றும் அனுபவத்தில் குறைந்தவரும் தன்னை விமர்சிக்கவும், தனது ஜீவியம் மற்றும் போதகத்தில் காணப்படும் தவறுகளை சுட்டிக்காட்டவும் அனுமதிக்கவேண்டும்.
ஊழியத்தில் நல்ல துவக்கத்தை உடைய பலர், பின்னாட்களில் ஜீவியத்தில் கறைப்பட்டவர்களாகவும் (ரோமர் 16:17,18; பிலிப்.3:18,19; 1தீமோ1:19,20; 6:9,10; 2தீமோ.3:2-5) போதகத்தில் கலப்படம் செய்கிறவர்களாகவும் (2கொரி.2:17; 1தீமோ.4:1-3; 2தீமோ.2:16-18; தீத்து 3:10,11; 2பேதுரு 2:1-3; யூதா 1:4), மாறிப்போகிறதற்கு காரணம்: அவர்களுடைய தவறுகளை அவர்களுக்கு சுட்டிக்காட்டும் ஒருவரும் இல்லாதிருப்பது, அல்லது ஒருவரும் தங்கள் தவறுகளை தங்களிடம் சுட்டிக்காட்ட அவர்கள் அனுமதியாதிருப்பதாகும்.
இப்படியிருக்க, சிறந்த போதகராக பிரகாசிக்க விரும்புகிறவர்கள்: நம்மை திருத்தம் செய்ய, வயதிலும் ஊழிய அனுபவத்திலும் நம்மிலும் குறைந்தவர்களானாலும், மாதிரியான ஆவிக்குரிய ஜீவியம்பண்ணுகிற (2கொரி.6:3), ஆரோக்கியமான உபதேசத்தை போதிக்கிற (2தீமோ.1:13) பவுலை போன்ற ஊழியர்களுக்கு இடமளிப்போமாக!!
*- க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
Thanks for using my website. Post your comments on this