கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே அகில உலக கிறிஸ்தவத்தில் 14/02/24 தினத்தை சாம்பற்புதன் கிழமையாக ஆசரிக்க இருக்கின்றார்கள். இது லெந்து காலம் அல்லது தவக்காலத்தின் முதலாம் நாள் ஆகும். இந்த லெந்து காலங்களை ஒருசில திருச்சபை பிரிவுகளை தவிர எல்லா திருச்சபை பிரிவுகளும் கடைபிடிக்கின்றார்கள். ஆகவே லெந்து காலத்தின் சிறப்பு அம்சங்களை குறித்து இந்த பாடத்தை இன்று அனுப்புகிறோம்.
இதில் சாம்பற்புதன் கிழமை, தவக்காலத்தின் செயல்பாடுகள், சாம்பல் பற்றிய வேதாகம ஆதாரங்கள், லெந்து காலத்தின் பொருள் என்ன? லெந்து காலமும் வேதாகம நிழலாட்டமும்,
லெந்து காலத்தில் பயன்படுத்தப்படும் வழிபாட்டு நிறம், சாம்பற்புதன் வரலாறு, செப்துவகெசிமா ஞாயிறு, செக்சகெசிமா ஞாயிறு, குயின்ககெசிமா ஞாயிறு என்றால் என்ன?
லெந்துகாலத்தின் ஆரம்பம் புதன்கிழமையா? ஞாயிற்றுக்கிழமையா? சாம்பற்புதன் கிழமை எவ்வாறு கணக்கீடு செய்யப்படுகிறது? சாம்பற்புதன்கிழமை ஆராதனை சத்தியங்கள், பரிசுத்த வாரம் என்றால் என்ன? சாம்ற்புதன் கிழமைக்கு ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும்,
லெந்து காலம் என்பது, கடவுளோடு செய்துகொண்ட உடன்படிக்கைகளை புதுப்பிக்கும் காலம்:
1) ஞானஸ்நான உடன்படிக்கைகள்
2) திடப்படுத்தல் உடன்படிக்கைகள்
3) திருமண உடன்படிக்கைகள்
4) திரீப்பணிவிடையாளர்களின் உடன்படிக்கைகள்
a) உதவி ஆயர்கள்
b) ஆயர்கள்
c) பேராயர்கள்
லெந்துகாலத்தின் 3 தூண்கள், இயேசுவானவர் சந்தித்த சோதனைகள், லெந்துகாலம் கற்றுகொடுக்கும் செய்திகள், என்று பல காரியங்களை கற்றுகொள்ள இருக்கின்றோம்.
லெந்து காலம் கடைபிடிப்பது அவசியமா?
===================
லெந்து காலம் என்பதற்கு வசந்த காலம் என்று பொருள். ஆங்கிலத்தில் Spring Season என்று பொருள். குளிர் காலத்திற்கும், கோடை காலத்திற்கும் இடையே உள்ள இந்த வசந்த காலத்தில் 40 நாட்களை தான் லெந்து காலம் என்று அழைக்கிறார்கள். இந்த நாட்களில் 40 நாட்களை சிறப்பு நாட்களாக உலகமெங்கும் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்களே, இது ஏன்? அவசியமா? வேதத்தில் இதைக் குறித்து என்ன சொல்லியிருக்கின்றது?
எது லெந்து காலம்?
லெந்து நாட்கள் என்பது சாம்பல் புதன் கிழமையிலிருந்து ஈஸ்டர் ஞாயிறுவரை மொத்தம் 46 நாட்கள். இதில் 6 ஞாயிற்றுக் கிழமைகள். ஞாயிற்றுக் கிழமை ஆண்டவர் உயிர்த்தெழுந்த மகிழ்ச்சியின் நாள் என்பதனால் அன்று மனம் வருந்தி உபவாசிக்க தேவை இல்லை என்று திருச்சபை அந்த 6 நாட்களை உபவாச நாட்களாகச் சேர்க்கவில்லை. மீதமுள்ள 40 நாட்கள் உபவாச நாட்கள்.
இந்த சாம்பல் புதன் கிழமை ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 இலிருந்து மார்ச் 10 வரை ஏதாவது ஒரு நாளில் மாறி மாறி வரும். அது போல ஈஸ்டர் ஞாயிரும் ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரை ஏதாவது ஒரு நாளில் வரும்.
ஏன் இவ்வாறு மாறி மாறி வருகிறது என்றால் பஸ்கா பண்டிகையின் போதுதான் ஆண்டவர் இயேசு பாடுபட்டு, மரித்து, அடுத்த வாரத்தின் முதலாம் நாள் காலையில் (அதாவது இஸ்ரவேலரின் ஓய்வு நாளாகிய சனிக்கிழமைக்கு அடுத்த நாள்) உயிர்த் தெழுந்தார். ஆகவே நாம் இயேசு உயிர் தெழுந்த நாளாகிய ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.
எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலையாகி, பஸ்கா உண்டு, புறப்பட்ட அன்று அது ஒரு முழு நிலவு நாளாக இருந்தது. இஸ்ரவேலரின் பண்டிகைகள் அனைத்துமே நிலவை மையமாகக் கொண்டதாக உள்ளது. ஏனெனில் இஸ்ரவேலர் நிலவை மையமாக கொண்ட ஆண்டைப் (Lunar year) பின்பற்றினார்கள்.
கி.பி. 325 இல் கூடிய நிசீன் கவுன்சிலின் தீர்மானத்தின் படி ஈஸ்டர் ஞாயிறு கணிப்பு அறிவிக்கப்பட்டது. அதாவது இரவும் பகலும் சமமாயுள்ள மார்ச் 21 ஆம் தேதிக்குப் பின் வரும் முழு நிலவுக்கு அடுத்த ஞாயிறு தான் ஈஸ்டர் ஞாயிறு என்று அறிவிக்கப்பட்டது. அந்த முழு நிலவு மாறி மாறி வருவதால் ஈஸ்டர் ஞாயிறும் தேதி மாறி வரும் பண்டிகையாக உள்ளது. இவ்வாண்டு - 2024 - மார்ச் 21 ஆம் தேதிக்குப் பின் வரும் முழு நிலவு March 24 ஆம் தேதி வருவதனால் அதற்கு அடுத்த ஞாயிறு 31 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையாகும் (31/03/2024). இவ்வாறாக ஈஸ்டர் பஸ்கா பண்டிகை முழு நிலவை வைத்துக் கணக்கிடப்படுகிறது. ஈஸ்டருக்கு முந்தின ஞாயிறு குருத்தோலை ஞாயிறாகும் (Palm Sunday). குருத்தோலை ஞாயிறிலிருந்து (24/03/2024) 40 நாட்களுக்கு முன் வரும் புதன் கிழமை சாம்பல் புதன் கிழமையாகும் (Ash Wednesday). இவ்வாண்டு 14/02/2024 சாம்பல் புதன் கிழமை.
ஏன் லெந்து காலம்?
நமக்காக தன்னைத் தானே அர்ப்பணித்த நம் ஆண்டவருக்காக நம்மையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடனே தான் இந்த லெந்து கால உபவாசம் திருச்சபையில் தோற்றுவிக்கப்பட்டது. சாம்பல் புதன் அன்று சில கத்தோலிக்க சபைகளில் சாம்பலினால் நெற்றியில் சிலுவை அடையாளம் போடப்படுவது வழக்கம். சாம்பல் நம்மை தாழ்த்துவதையும், துக்கப்படுவதையும் குறிக்கின்றது. (எஸ்தர் 4:1-3) (எரேமியா 6:26) (தானியேல்:9:3) ஆகிய வேதப்பகுதிகளில் சாம்பலை போட்டுக் கொண்டு உபவாசித்து ஜெபிப்பதை கவனிக்க முடியும்.
இந்த நாட்களில் நம்முடைய மாம்ச தீய குணங்களுக்காக நாம் ஆண்டவரிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டு, அவைகள் மாறும்படி நம்மை அர்ப்பணிக்க வேண்டும். நம் வாழ்க்கையில் காணப்படும் கர்த்தருக்கு பிரியமில்லாத வேண்டாத பழக்க வழக்கங்களை விட்டு விட்டு தேவனுடைய உறவில் வளர இந்த நாட்களை பயன்படுத்துவது மிகுந்த ஆசீர்வாதம். சில சிறப்பு தீர்மானங்களை எடுத்து நம்முடைய வாழ்க்கையை கர்த்தருக்கு பிரியமான பரிசுத்த நல் ஒழுக்கங்களில் நிலைப்படுத்த வேண்டும்.
வேதத்தில் இதைக் குறித்த கட்டளை ஏதும் உள்ளதா?
இல்லை. வேதத்தில் ஈஸ்டருக்கு முந்தைய 40 நாட்கள் உபவாசமிருந்து ஜெபியுங்கள் என்ற எந்த கட்டளையும் கொடுக்கப்படவில்லை.
வேதத்தில் மோசே தேவ கட்டளைகளைப் பெறுவதற்காக 40 நாட்கள் உபவாசத்தோடு தேவ சமூகத்தில் காணப்பட்டார். எலியா தான் சோர்வுற்ற நாட்களில் கர்த்தர் கொடுத்த ஆகாரத்தின் பெலத்தினால் 40 நாட்கள் நடந்து ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் சென்று தேவனை சந்தித்தார். நம் ஆண்டவராகிய இயேசு 40 நாட்கள் உபவாசமிருந்து ஜெபித்த பின்னர், சோதனைகளை ஜெயித்து தம் ஊழியத்தை நிறைவேற்றினார்.
இதன் அடிப்படையில் ஒரு நபர் தானாக தீர்மானம் செய்து 40 நாட்கள் உபவாசத்தை அனுசரித்தால், அது நன்மையே.
வேதம் சொல்கின்றது, நாட்களை விசேஷித்துக் கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான், நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறபடியால், கர்த்தருக் கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக் கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான் (ரோமர்:14:6).
எனவே லெந்து நாட்களை கடைபிடிப்பதென்பது அவரவருடைய சொந்த பிரதிஷ்டையின் அடிப்படையாகும்.
அர்த்தமற்ற லெந்துகாலம்
பல சமயங்களில் இது போல குறிப்பிட்ட காலத்திற்கான விரதம் அனுசரிக்கப்படுகின்றது. அந்த காலங்களில் அவர்கள் தங்கள் கெட்ட பழக்க வழக்கங்களை விட்டு விட்டு சுத்தமாய் தங்களை காத்துக் கொள்கின்றார்கள். ஆனால் அந்த காலத்தின் முடிவினிலே அவர்கள் அடக்கி வைத்திருந்த மாம்ச ஆசை இச்சைகளை மொத்தமாய் வெளியே கொண்டுவந்து தீர்க்கின்றார்கள். அது போல் நாமும் செய்தால் இதில் எந்த பலனும் இல்லை.
எனக்கு தெரிந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒரு சகோதரன், லெந்து கால முழுவதும் குடிக்க மாட்டார், மாமிசமும் சாப்பிட மாட்டார். ஆனால் ஈஸ்டர் அன்று எல்லாவற்றிற்கும் சேர்த்து குடிப்பார். அன்றிலிருந்து அடுத்த சாம்பல் புதன் வரையிலும் ஒரே குடி தான். இது வெற்று பக்தி. இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. இந்த பக்தியினால் அவர் பரலோகம் சென்று விட முடியாது.
உபவாசமிருந்து சரீரத்தை கட்டுப்படுத்துவது நல்லது தான். ஆனால் இந்த மாம்ச முயற்சியோடு நின்று விடாமல் தேவனுடைய உறவில் வளர வேண்டும். அப்போது தான் உண்மையான மனமாற்றம் நம்மில் நடைபெறும். மோசே 40 நாட்கள் தேவனோடு நெருங்கி ஜீவித்த போது, அவனுடைய முகம் தேவ மகிமையினால் பிரகாசித்தது என்று பார்க்கின்றோம். அது போல இந்த 40 நாட்களின் முடிவில் உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறுமாகில் இந்த லெந்து காலம் உங்களுக்கு அவசியமானதே.
இந்த வருடம் பாரம்பரியமாய் ஏதாகிலும் நன்மை ஆசீர்வாதம் கிடைக்கும் என்று லெந்து காலத்தை அனுசரிக்காதிருங்கள். அப்படி செய்வதில் ஒரு துளியும் பிரயோஜனம் இல்லை. அப்படிப்பட்ட சடங்காச்சாரங்களை கர்த்தர் அருவெருக்கின்றார்.
இந்த வருடம் உண்மையாக லெந்து காலத்தை அனுசரிக்க விரும்பினால், ஆவிக்குரிய நல்லொழுக்கங்களை பின்பற்ற சில தீர்மானங்களை எடுங்கள். உங்கள் வாழ்வை மாற்றும் சில முக்கிய முடிவுகளை எடுங்கள். உங்கள் ஜெப நேரத்தை அதிகரியுங்கள். வேதத்தை விரும்பி தியானியுங்கள். தேவனோடு உள்ள உறவில் வளருங்கள் அது இந்த 40 நாட்கள் மட்டு மல்ல. உங்கள் வாழ்க்கையையே மாற்றி விடும்.
உயிர்த்தெழுந்த கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக!
Thanks for using my website. Post your comments on this