எம். எஸ். ஏசுதாசன் M. S. Yesudasan
மண்ணில் : 06-08-1917
விண்ணில் : 22-01-1992
ஊர் : பசுவந்தனை, தூத்துக்குடி
நாடு : இந்தியா
தரிசன பூமி : இந்தியா
புதுவருட ஆராதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் முடிய, கோயிலின் முன்னால் பட்டாசு சத்தம். திடீரென ஒரு பட்டாசு பச்சிளங்குழந்தை மீது விழ, வீறிட்டு அழுதது. சற்று நேரத்திற்குள் உடல் நீல நிறமாக, அந்தோ! அக்குழந்தை பரிதாபமாக மரித்துப் போனது. சபையார் துக்கத்தில் ஆழ்ந்தனர். ஆம்! ஊரே அழுதது.
குழந்தையின் தாய் அழுதுகொண்டே ஆண்டவரிடம் முறையிட்டார்கள். மீண்டும் ஒரு மகனைத் தந்தால், அவனை உம் பணிக்கே அனுப்புவேன் என்று பொருத்தனை செய்தார்கள். அம்மன்றாட்டின் வெளிப்பாடாக பிறந்தவரே ஏசுதாசன்.
வளரும் பருவத்திலே புதுமையான செயல்களைச் செய்தார்; கல்வியில் சிறந்தார்; ஆசிரியரானார்; புதுமையான முறையில், புரிந்து கொள்ளும் வழியில் கற்றுக் கொடுத்தார்; கவிதைப் பாணியில் கடகடவென கல்வியைக் கற்றுக் கொண்டனர் மாணவர்கள். குருத்துவப் பயிற்சி பெற்று நெல்லை திருமண்டலத்தில் ஆயரானார். தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலனாக, உற்ற நண்பராக உழைத்தார். எண்ணிறந்த வாலிபர்களை "கிறிஸ்துவுக்குள் வாலிபர் இயக்கம்" மூலம் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார்.
ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷை பேசும் அற்புத ஜெப வீரர். விசுவாசத்தினாலே தன் தேவைகள் அனைத்தையும் தேவனிடமிருந்து பெற்றவர். தன்னை நாடி வரும் அனைவருக்கும் நல்லதொரு ஆலோசனையாளர். பாடல்களை இயற்றுவதிலும், இசைக் கருவிகளை மீட்டுவதிலும், வேத வியாக்கியானங்கள் செய்வதிலும் சிறந்தவர்.
இறைபணியை இலக்கிய சுவையோடும், இனிமையான நயத்தோடும், இன்பமான முகத்தோடும் செய்தவர். பணப்பற்று இல்லாமல், பொருட் செல்வம் தேடாமல், ஊர் போற்றும் உத்தமராய், இறைவனின் தூதுவராய் வாழ்ந்த இவர், அனைவருக்கும் ஒரு வழிகாட்டி.
அன்பரே! உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு முன்பாக முன்மாதிரியான கிறிஸ்தவராக நீங்கள் வாழ்கிறீர்களா?
"ஆண்டவரே! என்னுடைய தாலந்துகளை அறிந்துகொண்டு, கிறிஸ்தவ திருச்சபையில் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அவற்றைப் பயன்படுத்த எனக்கு உதவி செய்யும். ஆமென்!"
(திரு. V.வீர சுவாமிதாஸ் @ +91 9884120603)
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
ஜோஹன் பிலிப் பெப்ரீஷியஸ் Johann Phillip Fabricius
மண்ணில் : 22-01-1711
விண்ணில் : 23-01-1791
ஊர் : ஃபிராங்ஃபர்ட்
நாடு : ஜெர்மனி
தரிசன பூமி : இந்தியா
ஜோஹன் பிலிப் பெப்ரீஷியஸ் இந்தியாவில் பணியாற்றிய ஒரு ஜெர்மன் மிஷனரி. அவர் கீசன் பல்கலைக்கழகத்தில் சட்ட கல்வி பயின்றார், மற்றும் ஹாலே பல்கலைக்கழகத்தில் இறையியல் பட்டம் பெற்றார். 1739ஆம் ஆண்டில் கோபன்ஹேகனில் கர்த்தருடைய ஊழியம் செய்ய தகுதி பெற்ற பிறகு, அவர் இந்தியாவில் டிராங்கிபார் மிஷனுக்கு நியமிக்கப்பட்டார். எனவே 1740ஆம் ஆண்டில் டிராங்கிபாரை அடைந்த அவர் விரைவிலே தமிழ் மொழியை சிறப்பாக கற்றுக்கொண்டார். பின்னர் அவர் மெட்ராஸுக்குச் சென்று, அங்கு வேப்பரியில் உள்ள ஒரு சிறிய தமிழ் லூத்தரன் திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அவருடைய 30 வருட ஊழியத்தில், சபை வளர்ந்தது மற்றும் பல ஆத்துமாக்கள் சபையில் சேர்க்கப்பட்டனர்.
ஜீகன்பால்க் மற்றும் சுல்ஸ் ஆகியோரால் முடிக்கப்படாத பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் தமிழ் மொழிபெயர்ப்பை முடிப்பதில் பெப்ரீஷியஸ் மிகவும் கவனம் செலுத்தினார். பொதுவான மக்களுக்கு எளிதில் புரியும்படி தற்போதுள்ள மொழிபெயர்ப்புகளை திருத்துவது அவசியம் என்று அவர் உணர்ந்தார். எனவே, ‘முத்து’ என்ற தனது நண்பரின் உதவியுடன் அவர் புதிய ஏற்பாட்டை திருத்தும் பணியை மேற்கொண்டார். இந்த மொழிபெயர்ப்பு பல ஆலோசனைகள் மற்றும் திருத்தங்களுக்குப் பிறகு முடிக்கப்பட்டு, 1766ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அவர் பழைய ஏற்பாட்டை மொழிபெயர்க்கத் தொடங்கினாலும், 1756ஆம் ஆண்டில் சங்கீத புத்தகத்தை மட்டுமே வெளியிட முடிந்தது.
பெப்ரீஷியஸ் ஒரு சிறந்த பாமாலை எழுத்தாளராகவும் இருந்தார். அவர் தனது சொந்த அனுபவங்களிலிருந்து பல பாடல்களை எழுதி இயற்றினார். சில பாடல்களை அவர் ஜெர்மன் மொழியிலிருந்து மொழிபெயர்த்தார். அவர் வெளியிட்டுள்ள 335க்கும் மேற்பட்ட தமிழ் பாமாலைகள் இன்றும் கிறிஸ்தவ திருச்சபைகளில் பாடப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், 1779 இல் முதல் தமிழ்-ஆங்கில அகராதியையும் பெப்ரீஷியஸ் வெளியிட்டார்.
பெப்ரீஷியஸின் ஊழியத்தில் சிரமங்கள் இல்லாமல் இல்லை. அரசியல் அமைதியின்மையின் கடினமான காலங்களில் அவர் ஊழியத்தையும், மொழிபெயர்ப்பதையும் தொடர்ந்து செய்தார். 1758 இல் பிரெஞ்சுக்காரர்கள் கோரமண்டல் மீது படையெடுத்தபோது, அவர் வசித்திருந்த வீடு அழிக்கப்பட்டது. அதனால் அவர் மெட்ராஸ் மற்றும் கடலூர் இடையே அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருந்தது. அத்தகைய குழப்பமான சூழ்நிலைகளில் அவருடைய சில மொழிபெயர்ப்புகளையும், மொழிபெயர்ப்புக்கு உதவியான பொருள்களையும் அவர் இழந்தார். இருப்பினும், சாமானிய மக்களுக்கும் வேதாகமம் கிடைக்க வேண்டும் என்ற அவரது ஆழ்ந்த வாஞ்சை முன்னோக்கி செல்ல அவரை தூண்டியது. கர்த்தரால் தனக்கு ஒப்புவிக்கப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்தபின், 1791ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி, தனது மீட்பரை அடைய இந்த உலகத்தை விட்டு சென்றார் ஜோஹன் பெப்ரீஷியஸ்.
பிரியமானவர்களே, கடினமான காலங்களில் கர்த்தரின் மேல் உள்ள உங்கள் பக்தி எப்படி இருக்கிறது?
"ஆண்டவரே, கடினமான காலங்களிலும் உமது அன்பில் உறுதியுடன் இருந்து, உமது ஊழியத்தை வல்லமையுடன் தொடர்ந்து செய்ய எனக்கு உதவி செய்யும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் Graham Stuart Staines
மண்ணில் : 18-01-1941
விண்ணில் : 23-01-1999
ஊர் : பாம்ஸ்வுட், குயின்ஸ்லாந்து
நாடு : ஆஸ்திரேலியா
தரிசன பூமி : ஒடிசா, இந்தியா
கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வில்லியம் ஸ்டெயின்ஸ் மற்றும் எலிசபெத் தம்பத்தினரின் இரண்டாவது குழந்தை. அவருக்கு பதினைந்து வயதாக இருந்தபோது, ஒரு மிஷனரி அந்த இடத்திற்கு வந்து, இந்தியாவில் உள்ள தொழுநோயாளிகளின் அவலநிலை பற்றி பேசுவதை கேட்டார். அவர் காட்டிய புகைப்படங்களால் திகைத்துப்போன ஸ்டெயின்ஸ், இந்தியாவில் தொழுநோயாளிகளிடையே சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதன் பிறகு, மிஷனரி ஊழியம் குறித்த ஒரு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார், அங்கு அவர் மிஷனரி ஊழியத்திற்கான கர்த்தரின் அழைப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொண்டார்.
ஆகவே, கிரஹாம் ஸ்டெயின்ஸ் 'இவாஞ்சலிகல் மிஷனரி சொசைட்டி ஆஃப் மயூர்பஞ்ச்'-யில் சேர்ந்தார். அதன் மூலம் அவர் இந்திய மாநிலமான ஒடிசாவின் பழங்குடிப் பகுதிகளில் பணியாற்ற நியமிக்கப்பட்டார். 1965ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த அவர், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பமான நிலையைப் பார்த்தார். அன்பு மற்றும் அர்ப்பணிப்புடனும், அவர் தொழுநோயாளிகளிடையே சேவை செய்யத் தொடங்கினார். ஒடியா மொழியையும், சாந்தாலி என்ற உள்ளூர் பேச்சுவழக்கத்தையும் சிறப்பாக கற்றுக்கொண்ட பிறகு, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அங்குள்ள பழங்குடியினருக்குப் பிரசங்கித்தார். அவர் 1982ஆம் ஆண்டில் "மயூர்பஞ்ச் லெப்ரசி ஹோம்" (மயூர்பஞ்ச் தொழுநோய் இல்லம்) ஒன்றை நிறுவினார். 1983ஆம் ஆண்டில் பாரிபாடாவில் இருந்த மிஷனின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டார். அதே ஆண்டில் கிளாடிஸ் என்ற ஒரு மிஷனரி செவிலியரை அவர் மணந்தார். கிளாடிஸ் தன் கணவரான கிரஹாம்க்கு ஒரு பொருத்தமான மனைவியாகவும், ஊழியத்தில் ஒரு நல்ல தோழியாகவும் இருந்தார். அந்த தம்பத்தினர் இருவரும் சேர்ந்து கல்வி, மருத்துவ சேவைகள் மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றை அந்த பழங்குடி மக்களுக்கு வழங்க அயராது உழைத்தார்.
ஆயிரக்கணக்கான மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதை விரும்பாத இந்து மதவெறியர்கள் சதிதிட்டங்களை தீட்டினர். ஜனவரி 23, 1999 இரவு, ஸ்டெயின்ஸ் தனது இரண்டு மகன்களுடன் மனோகர்பூரில் நடந்த ஒரு காட்டு கூட்டத்திலிருந்து திரும்பி வரும்போது, பிரயாணத்தை நடுவில் நிறுத்தி, வாகனத்திற்குள் தூங்கினர். அப்பொழுது ஒரு கும்பல் அவர்களை கோடரியால் தாக்கி, அவர்களை வாகனத்திற்குள் அடைத்து, அதற்கு தீ வைத்தனர். அந்த மூவரும் உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்தக் கொலைகள் பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவ, தீவிரமாக கண்டிக்கப்பட்டது. என்றபோதிலும், கிளாடிஸ் மட்டும் தனது கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றவர்களை மன்னித்து, அவர்கள் மீது அவருக்கு எந்தவிதமான வெறுப்பும் கசப்பும் இல்லை என்று கூறினார். இந்த செயல் இந்திய செய்தித்தாள்களின் முதல் பக்கங்களில் கிறிஸ்துவின் அன்பை அறிவிக்க வழிவகுத்தது. இவ்வாறு அந்த மிஷனரி குடும்பம் கஷ்டங்களையும் துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டதின் பலனாக, பல ஆண்டுகளாக சுவிசேஷத்தை நிராகரித்த பலர் இயேசு கிறிஸ்துவிடம் தவந்தார். தனது குடும்பத்தினரை இழந்த போதிலும், கர்த்தர் அவர்களுக்கு கொடுத்திருந்த வேலையை நிறைவேற்ற கிளாடிஸ் தனது மகளோடு 2004ஆம் ஆண்டு வரை இந்தியாவிலேயே இருந்தார்.
பிரியமானவர்களே, உங்களுக்கு அநீதி இழைத்தவர்களை மன்னிக்க நீங்கள் தயாரா?
"ஆண்டவரே, நான் விசுவாசத்தில் உறுதியாக நின்று, எனக்கு அநீதி இழைத்தவர்களை மன்னிக்க என்னை பலப்படுத்தும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
அந்தியோகியாவின் புனித இக்னேஷியஸ் St. Ignatius of Antioch
மண்ணில் : கி.பி. 50
விண்ணில் : கி.பி 108
நாடு : சிரியா
தரிசன பூமி : அந்தியோகியா
ஆதி கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்காக துன்புறுத்தப்படுவதை விட பெரிய பாக்கியம் வேறுஒன்றுமில்லை என்று நம்பினர். கஷ்டங்களையும் துன்புறுத்தல்களையும் தாங்குவதில் அவர்களின் விடாமுயற்சி கிறிஸ்துவின் மீது அவர்கள் கொண்டிருந்த அன்புக்கு ஒரு சான்றாகும். அத்தகைய ஆதி கிறிஸ்தவர்களில் இக்னேஷியஸும் ஒருவர். மரணத்தை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும் கிறிஸ்துவை மறுக்காத ஒரு நல்ல கிறிஸ்துவின் போர்வீரர் அவர்.
அந்தியோகியாவின் புனித இக்னேஷியஸ், "ஆண்டவரை சுமப்பவர்" (bearing God) என்று பொருள்படும் இக்னேஷியஸ் தியோபோரஸ் என்றும் அழைக்கப்படுவார். சிறு வயதிலேயே அவர் கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். அவர் பாலிகார்ப் அவர்களுடன் புனித யோவானின் சீடராக இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் அந்தியோகியாவின் பிஷப்பாக நியமிக்கப்பட்டார். கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல் குறித்த பயத்திலிருந்து தனக்கு ஒப்படைக்கப்பட்ட மந்தையில் பலவீனமானவர்களை பலப்படுத்துவதற்கு அவர் அயராது உழைத்தார். புதிய ஏற்பாட்டில் பழைய ஏற்பாடு நிறைவேற்றப்படுகிறது என்பதை அவர் உறுதிப்படுத்தி பிரசங்கித்தார்.
கி.பி. 107 ஆம் ஆண்டில், ட்ரோஜன் பேரரசர் ரோமானிய தெய்வங்களை வணங்க கிறிஸ்தவர்களும் மற்றவர்களுடன் ஒன்றுபட வேண்டும் என்று கட்டளையிட்டார். இந்த கட்டளை அந்த ராஜ்ஜியம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களை சிலைகளுக்கு பலியிட கட்டாயப்படுத்தியது. அதற்கு கீழ்ப்படியாதவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. கிறிஸ்துவை மறுக்க மறுத்ததற்காக இக்னேஷியஸுக்கும் அவர்கள் மரண தண்டனை விதித்தனர். ஆகவே, படையினர் அவரை சங்கிலியால் கட்டி ரோம் நகருக்கு அழைத்துச் சென்றனர். அவர் பயணம் செய்தபோது, பிலதெல்பியா, சர்தை மற்றும் சிமிர்னா நகரங்களின் வழியாகப் பயணம் செய்தார். கிறிஸ்தவ திருச்சபையின் மூப்பர்களும், பிரதிநிதிகளும் நகரத்திலிருந்து நகரத்திற்கு அவருடன் சென்றார். இறுதியாக சிமிர்னாவில் அவர் தனது நண்பரான பாலிகார்பை சந்தித்தார்.
அந்த பயணத்தையும் கர்த்தரின் சேவைக்கு பயன்படுத்தினார் இக்னேஷியஸ். தனது பயணத்தில், கிறிஸ்துவில் உறுதியுடன் நிலைத்திருக்கவும், அவருக்கு உண்மையாக வாழவும் கிறிஸ்தவர்களை ஊக்குவிக்க ஏழு கடிதங்களை எழுதினார். இந்த கடிதங்கள் கிறிஸ்தவர்களை தவறான போதனைகளைப் பற்றி எச்சரித்தன, மேலும் வசனத்தில் உள்ள உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தெய்வீக வாழ்க்கையை வாழ வழிகாட்டின. ரோமில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு அவர் எழுதிய கடைசி கடிதத்தில், கிறிஸ்துவுக்காக தான் ஒரு இரத்தசாட்சியாக மரணிக்கும் பாக்கியத்தை நிறுத்த வேண்டாம் என்று அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். கிறிஸ்துவின் பரிபூரண சீடராக இருப்பதற்கு கிறிஸ்துவின் சாயலில் நடப்பதும், அவருடைய துன்பங்களில் அவரோடு பங்கெடுப்பதும் தான் சிறந்த வழி என இக்னேஷியஸ் நம்பினார். ரோம் நகரை அடைந்த பிறகு அவர் காட்டு மிருகங்கள் நிறைந்த விளையாட்டு மைதானத்திற்குள் வீசப்பட்டு கிறிஸ்துவுக்காக தனது உயிரை இழந்தார்.
பிரியமானவர்களே, கிறிஸ்துவுக்கு உண்மையாக வாழ நீங்கள் மற்றவர்களை ஊக்குவிக்கிறீர்களா?
*"ஆண்டவரே, என் துன்பங்களை சகித்து விசுவாசத்துடன் தொலைநோக்கு பார்வையை கொண்டிருக்கவும், உம்மில் மற்றவர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு கருவியாக இருக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
அப்போஸ்தலனாகிய பவுல் Apostle Paul
மண்ணில் : ~ கி.பி. 5
விண்ணில் : ~ கி.பி. 67
ஊர் : தர்சு (தற்போதைய துருக்கி)
தரிசன பூமி : உலகின் பல பகுதிகள்
தர்சஸின் சவுல் என்றும் அழைக்கப்படும் அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு பக்தியுள்ள யூத குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டார். யூத மத விசுவாசத்திற்கு உண்மையுள்ளவராகவும், மத ரீதியாக தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவராகவும் இருந்ததினால் அவர், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களை வெறுத்தார் (அப்போஸ்தலர் 22:3,4). ஸ்தேவானை கல்லெறிந்து கொலை செய்ததில் ஈடுபட்ட சவுல், அவருடைய மரணத்தை சம்மதித்திருந்தார் (அப்போஸ்தலர் 8:1). இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றவர்களைத் துன்புறுத்துவதற்காக அவர் ஒருமுறை தமஸ்குக்குச் சென்றார். அவர் தமஸ்கு நகரத்தை நெருங்கியபோது ஒரு தரிசனத்தைக் கண்டார். ஒரு பெரிய ஒளி அவரைச் சுற்றிப் பிரகாசித்தது. அப்பொழுது, "சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்" என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் அவர் கேட்டார். அதற்கு அவர், "ஆண்டவரே, நீர் யார்?" என்று கேட்கபோது, "நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே" என்ற பதில் வந்தது. இந்த தரிசனம் அவரது வாழ்க்கையை மாற்றியது மற்றும் அவர் ஒருபோதும் அந்த பரமதரிசனத்துக்கு கீழ்ப்படியாதவராயிருக்கவில்லை. உடனே அவர் “இயேசு தேவனுடைய குமாரன்” என்று அறிவிக்க ஆரம்பித்தார்.
பவுல் புறஜாதியினருக்கு அப்போஸ்தலராக இருந்தார். தனது வாழ்க்கையில் மூன்று மிஷனரி பயணங்களை மேற்கொண்ட அவர், அந்த பயணங்களினாலே ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் கிறிஸ்தவ சபைகளை நிறுவினார் மற்றும் விசுவாசிகளைப் பலப்படுத்தினார். இயேசுவே வேதத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட மேசியா என்றும், அவரை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே இரட்சிப்பு பெற்றுகொள்ள முடியும் என்றும் அவர் தைரியமாக பிரசங்கித்தார். அவர் யூத சடங்காசாரங்களை நிராகரித்து, சடங்குகளால் அல்லாமல் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட வேண்டும் என்று கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தினார். பவுல் பல அற்புதங்களைச் செய்தார், நோயுற்றவர்களைக் குணப்படுத்தினார் மற்றும் அசுத்த அவிகளை விரட்டினார். அவர் எங்கு சென்றாலும் அங்கு ஒவ்வொரு நாளும் புதிய விசுவாசிகள் சபையில் சேர்க்கப்பட்டார்கள், மேலும் மக்கள் விசுவாசத்தில் வளர்ந்தார்கள். தனது மிஷனரி பயணங்களின் போது அவர் பல திருச்சபைகளுக்கும் மற்றும் தனிநபர்களுக்கும் எழுதிய பதினான்கு கடிதங்கள் கிறிஸ்தவ கோட்பாட்டிற்கு அடிப்படையாகிவிட்டன.
நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மற்ற அப்போஸ்தலர்களைப் போலவே, பவுலும் பல கஷ்டங்களையும் துன்பங்களையும் எதிர்கொண்டார். அவர் யூதர்களால் ஐந்து முறை சாட்டையால் அடிக்கப்பட்டார், மூன்று முறை மிலாறுகளால் தாக்கப்பட்டார், ஒரு முறை கல்லெறிப்பட்டார், மூன்று முறை கப்பற்சேதத்தில் சிக்கினார் (2 கொரிந்தியர் 11: 24,25). ஆயினும், பவுல் தனது துன்பங்களைப் பற்றி வெட்கப்படாமல் அவற்றை இலாபமாக ஏற்றுக்கொண்டார். அவர் இறுதியாக எருசலேமுக்கு வந்தபோது, யூத சடங்காசாரங்களுக்கு எதிராக பிரசங்கிக்கிறார் என்று அவர் கைது செய்யப்பட்டு, ரோம் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கேயும் அவர் அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முன்பாக தைரியமாக நற்செய்தியை அறிவித்தார். கைது செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏறக்குறைய பேதுருவை சிலுவையில் அறையப்பட்ட நேரத்திலேயே, பவுலின் தலையும் துண்டிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
பிரியமானவர்களே, பரமதரிசனத்துக்கு நீங்கள் கீழ்ப்படிந்து வாழ்கிறவர்களாக இருக்கிறீர்களா?
"ஆண்டவரே, எந்தவிதமான துன்பங்கள் வந்தாலும் உம்முடைய பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படிந்து வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
Thanks for using my website. Post your comments on this