மார்க் டேனியல் பன்டேன் Mark Daniel Buntain
மண்ணில் : 26-01-1923
விண்ணில் : 04-06-1989
ஊர் : வின்னிபெக்
நாடு: கனடா
தரிசன பூமி : கொல்கத்தா, இந்தியா
மார்க் டேனியல் பன்டேன், மனிடோபாவின் வின்னிபெக்கில் உள்ள ஒரு பெந்தேகோஸ்தே சபையில் பணியாற்றிய ஒரு போதகரின் மகன். ஆவிக்குரிய சூழலில் வளர்க்கப்பட்ட பன்டேன் மிஷனரி கதைகளால் ஈர்க்கப்பட்டு, தானும் ஒரு மிஷனரியாக வேண்டும் என்று விரும்பினார். ஒரு வானொலி ஒலிபரப்பாளராக பணிபுரிந்தபோது, கர்த்தரின் ஊழியத்திற்கான அழைப்பை அவர் உணர்ந்தார். ஹுல்தா மன்ரோவை மணந்த பிறகு, அவர் தனது வேலையை விட்டுவிட்டு, கனடாவின் சஸ்காட்சுவனில் ஆயராக பணியாற்றினார். மேலும், தைவான், இலங்கை, பிலிப்பைன்ஸ், ஹாங்காங் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒரு மிஷனரி சுவிசேஷகராகவும் பணியாற்றியுள்ளார்.
கர்த்தரின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்த அவரும் அவரது மனைவியும், 1954 ஆம் ஆண்டில் தங்களது ஒரு வயது மகளுடன் கொல்கத்தா வந்தனர். அங்கே அவர்கள் ஒரு வெற்று இடத்தில் கூடாரத்தை அமைத்து, இயேசு கிறிஸ்துவின் அன்பைப் பற்றி மக்களுக்குச் சொல்லத் தொடங்கினர். ஒரு நாள் மார்க் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் கூடாரத்துக்குள் நுழைந்து, “போதகரே, முதலில் எங்கள் வயிற்றுக்கு உணவளித்து, பின்னர் பரலோக கடவுளைப் பற்றி சொல்லுங்கள்” என்றார். மார்க்கு இதயத்தை ஆழமாக தோட்ட அந்த நிகழ்வு, 1964 ஆம் ஆண்டில் "கல்கத்தா மெர்சி" மிஷனை உருவாக்க வழிவகுத்தது. ஏழைகளுக்கு உணவு, கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்த சேவையின் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் பல ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றிய "அசெம்பிளி ஆஃப் காட் சர்ச் ஸ்கூல்" என்ற பள்ளியை மார்க் நிறுவினார். மேலும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் மருத்துவ சேவைகளை வழங்க அவர் ஒரு சிறிய மருத்துவமனையை கட்டினார். பின்னர் இது பல சிறப்பு (மல்டி-ஸ்பெஷாலிட்டி) மருத்துவமனையாக உருவாக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக மார்க் கொல்கத்தாவில் உள்ள "அசெம்பிளி ஆஃப் காட்" சபையின் போதகராக பணியாற்றினார். இந்த சபை வட இந்தியாவில் 900 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகளின் வளர்ச்சிக்கான மையமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், அவர் இந்தி, ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழிகளில் ஒளிபரப்பு மூலம் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். மார்க் உடல்நலக்குறைவால் 1989 ஆம் ஆண்டில் மரணமடைந்த போதிலும், அவரது மனைவி ஹூல்தா இந்தியாவிலேயே தங்கி தொடர்ந்து சேவை செய்ய முடிவு செய்தார். அவர்கள் தொடங்கிய சேவைகளை மேற்பார்வையிட்டும் உதவிகள் செய்த்துகொண்டும் அவர் இன்றுவரை தொடர்ந்து கர்த்தரின் சேவையை செய்கிறார். சேவையில் நன்றாக வளர்ந்த ‘கல்கத்தா மெர்சி', இன்று உலகெங்கிலும் உள்ள 21 நாடுகளில் ஏழைகளுக்கு ஆதரவளித்து கொண்டிருக்கின்றது.
பிரியமானவர்களே, உங்களைச் சுற்றியுள்ள ஏழைகளுக்கு சேவை செய்கிறீர்களா?
"ஆண்டவரே, மற்றவர்களிடம் கருணை காட்டவும், நீர் என்னை வைத்த இடத்தில் இரக்கமுள்ள இதயத்துடன் சேவை செய்யவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
புனித ஆரிஜென் Saint Origen
மண்ணில் : ~ கி. பி. 185
விண்ணில் : ~ கி. பி. 253
ஊர் : அலெக்ஸாண்ட்ரியா
தரிசன பூமி : அலெக்ஸாண்ட்ரியா, சிசேரியா
அலெக்ஸாண்டிரியாவின் புனித ஆரிஜெனின் முழுபெயர் ஆரிஜெனிஸ் அடமெண்டியஸ். அவர் ஆரம்பகால மிகப்பெரிய கிறிஸ்தவ இறையியலாளர்களில் ஒருவர். அவருக்கு கிறிஸ்தவ கோட்பாடுகளோடு இலக்கியம் மற்றும் தத்துவத்தையும் கற்பித்த அவரது தந்தை லியோனிடெஸ் அவர்களால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். சிறுவயதிலிருந்தே ஒவ்வொரு நாளும் வேதவசனங்களை மனப்பாடம் செய்யப் பழக்கப்பட்ட ஆரிஜென், தேவைப்படும் போதெல்லாம் அவற்றை ஞாபகபடுத்திகொண்டு அறிக்கை செய்வார். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினதற்காக அவரது தந்தைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, குடும்ப பொறுப்பை ஆரிஜென் ஏற்றுக்கொண்டார். அவரது பதினெட்டு வயதில் "காடெகெடிகல் ஸ்கூல் ஆஃப் அலெக்ஸாண்ட்ரியா" என்ற கிறிஸ்தவ இறையியல் பள்ளியில் கிறிஸ்தவ கொள்கைகளை கற்பிக்கும் 'காடெகிஸ்டாக' நியமிக்கப்பட்டார். அங்கு அவர் ஒரு கிறிஸ்தவ துறவியின் வாழ்க்கை முறையை பின்பற்றி எளிய வாழ்க்கை வாழ்ந்தார். வெறுங்காலுடன் நடந்து செல்லும் ஆரிஜென், தனது பெரும்பாலான நேரத்தை கற்பித்தல், உபவாசம் மற்றும் ஜெபம் ஆகியவற்றில் செலவிட்டார்.
பல்வேறு உள்ளூர் கிறிஸ்தவ சபைகளிடையே கோட்பாடுகளில் ஒருமித்த கருத்து இல்லாத ஒரு காலத்தில் ஆரிஜென் வாழ்ந்து வந்தார். எனவே அவர் கிறிஸ்தவத்தின் நம்பிக்கையை விளக்குவதற்காக வேதாகம விளக்க உரைகளையும் பிரசங்கங்களையும் எழுதத் தொடங்கினார். ஆரிஜென் எழுதிய "ஆன் தி ஃபஸ்ட் ப்ரின்சிபள்ஸ்" (முதல் கோட்பாடுகளின் மேல்) என்ற கட்டுரை கிறிஸ்தவ இறையியலைப் பற்றி முறைப்படுத்தப்பட்ட முதல் கோட்பாடுகளின் வெளிப்பாடு ஆகும். கிறிஸ்தவத்தின் சில பிரிவுகளில் உள்ள புராணக்கதைகளையும் கற்பனைகளையும் அவர் கண்டித்து, வேத வசனங்களின் அடிப்படையில் சரியான கிறிஸ்தவ முறையை அவர்களுக்கு காட்டினார். வேத வசனங்களின் அடிப்படையில் சரியான கிறிஸ்தவ முறையானது எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதை அவர் காட்டினார். அதுமட்டுமல்லாமல், அவர் காடெகிஸ்டாக தனது வேலையை விட்டுவிட்டு, மத்திய தரைக்கடல், ரோம் மற்றும் அரேபியா பகுதிகள் முழுவதும் பயணம் செய்து, வேதவசனங்களை ஒரு முறையான வழியில் எவ்வாறு புரிந்துகொள்வது என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுத்தார். பெரும்பாலும் அவர் வேதத்தின் வெவ்வேறு பகுதிகளை ஒன்றிணைத்து ஒரு ஆழமான இறையியல் உருவாக்குவார். இருப்பினும், ஆரிஜென் கொண்டிருந்த வேதவசனங்களைப் பற்றிய புரிதல் அவருடன் வாழ்ந்தவர்களுடன் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆகவே அவருடைய போதனைகளை அவர்கள் மறுத்து, அவருடைய ஊழியத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள்.
எனவே அவர் சிசேரியாவுக்குச் சென்று, அங்கு இளைஞர்களுக்கு இறையியலில் பயிற்சி அளிக்க கிறிஸ்தவ கல்வி மையங்களை அமைத்தார். மேலும், அவர் பொது விவாதங்களை நடத்தி, இறையியல் ரீதியாக சரியான பக்தி வாழ்க்கையை வாழ பலரை சம்மதிக்க செய்தார். இருப்பினும், டெசியஸ் பேரரசரின் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவர்கள் பரவலாக துன்புறுத்தப்பட்டனர். ஏறக்குறைய கி.பி. 250 இல், ஆரிஜென் கூட கைது செய்யப்பட்டு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை கைவிட மறுத்ததற்காக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார். இரண்டு வருட கடுமையான சிறைவாசத்திற்குப் பிறகு, மோசமாக காயமடைந்த தனது உடலை இந்த உலகில் விட்டுவிட்டு, பரலோக வாசஸ்தலத்தில் தனது இறைவனை அடைய சென்றார்.
பிரியமானவர்களே, தேவனுடைய வசனத்தைப் பற்றிய உங்கள் ஞானத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்களா?
"ஆண்டவரே, உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
ஜான் கிப்சன் பாட்டன் John Gibson Paton
மண்ணில் : 25-04-1824
விண்ணில் : 28-01-1907
ஊர் : கிர்க்மஹோ
நாடு: ஸ்காட்லாந்து
தரிசன பூமி : நியூ ஹைப்ரடீஸ் தீவுகள்
ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் கிப்சன் பாட்டன் தென் பசிபிக் கடலில் உள்ள நியூ ஹைப்ரடீஸ் தீவுகளில் மிஷனரியாக பணியாற்றினார். ஒரு பாரிஷ் பள்ளியில் படித்த அவர், தனது 12 வயதிலேயே துணி உற்பத்தி தொழிலைக் கற்றுக்கொண்டார். அவரது தந்தையின் ஜெப வாழ்க்கையால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். கர்த்தர் தன்னை மிஷனரி ஊழியத்திற்கு அழைக்கிறார் என்பதை உணர்ந்த அவர், கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் மருத்துவம் படிக்க சென்றார். பட்டம் பெற்ற பிறகு அவர் துண்டுப்பிரதிங்களை விநியோகிக்கத் தொடங்கினார் மற்றும் கிளாஸ்கோவில் உள்ள ஏழைகளிடையே மிஷனரி சேவையை மேற்கொண்டார்.
1858 ஆம் ஆண்டில் ரிஃபார்ம்ட் பிரஸ்பிடிரியன் திருச்சபையால் கரத்தருக்கு சேவை செய்ய தகுதி பெற்ற அவர், ஒரு மிஷனரியாக பணியாற்ற தென் பசிபிக் தீவுகளுக்கு அனுப்பப்பட்டார். அதே ஆண்டில், பாட்டன் அவரது மனைவி மேரி ஆன் ராப்சனுடன் தென் பசிபிக் தீவுகளுக்கு பயணம் செய்தனர். அங்கு அவர்கள் தன்னா தீவில் பணியாற்றத் தொடங்கினர். அந்த தீவின் மக்கள் நரமாமிசம் உண்ணுபவர்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் நிறைந்தவர்கள். அங்கு பாட்டனுடைய அனுபவத்தைப் பற்றி சுருக்கமாக சொல்லுனுமானால் துயரமாக இருந்தது என சொல்லலாம். அங்கு வந்த சில மாதங்களுக்குள்ளே மலேரியா நோயால் அவர் தனது மனைவியையும் பச்சிளம்குழந்தையான மகனையும் இழந்தார். அவர் தனது வீட்டிற்கு அருகில் அவர்களை அடக்கம் செய்து, அவர்களின் உடல்களை நரமாமிசங்களிலிருந்து பாதுகாக்க பல இரவுகள் விழித்திருந்தார். அவ்வளவு சோகம் இருந்தபோதிலும், தன்னை பலமுறை தாக்கிய விரோதமான அந்த உள்ளூர் மக்களிடையே அவர் ஊழியத்தைத் தொடர்ந்தார். அவ்வாறு ஒரு முறை அவர்கள் அவரைத் தாக்கிய போது, சரியான நேரத்தில் அவர் ஒரு மிஷனரி கப்பல் மூலம் மீட்கப்பட்டார்.
பின்னர் பசிபிக் பகுதிகளில் மிஷனரி பணிக்காக நிதி திரட்டுவதற்கு பாட்டன் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டார். கிறிஸ்தவ சபைகளில் மிஷனரி சேவைக்கான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தூண்டுவதற்காக அவர் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, சவுத் ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா ஆகிய நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டார். 1866 ஆம் ஆண்டில் நியூ ஹைப்ரடீஸ் தீவுகளுக்குத் திரும்பி வந்த பாட்டன், அனிவா தீவில் ஒரு மிஷன் ஸ்தாபனத்தை நிறுவினார். தன்னா தீவுவாசிகளைப் போலவே, இங்குள்ள உள்ளூர்வாசிகளும் நரமாமிசம் உண்ணுபவர்கள், கொடூரமானவர்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனமானவர்கள். இருப்பினும், பாட்டன் அவர்களின் மொழியைக் கற்றுக் கொண்டு, அவர்களை கிறிஸ்துவிடம் கொண்டு வர கடுமையாக உழைத்தார். அவர் புதிய ஏற்பாட்டை அவர்களின் மொழியில் மொழிபெயர்த்து, முதல் பாடல் புத்தகத்தையும் அவர்களுக்கு வழங்கினார். ஒருபுறம் நோய்கள், மறுபுறம் உள்ளூர் மக்களிடமிருந்து வரும் ஆபத்துகள் இருந்தபோதிலும், பாட்டன் தவறாமல் ஆராதனை கூட்டங்களை நடத்தினார். பல ஆண்டுகள் பொறுமையுடன் செய்த அவரது ஊழியத்தின் விளைவாக அனிவா தீவு முழுவதும் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.
பிரியமானவர்களே, உங்கள் சமூகத்தில் மிஷனரி சேவைக்கான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தூண்டுவதில் உங்களது பங்கு என்ன?
"ஆண்டவரே, மற்றவர்களுக்குள்ளே மிஷனரி சேவைக்கான நோக்கத்தையும் உற்சாகத்தையும் வளர்க்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!”
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
ஸ்டான்லி ஜோன்ஸ் Stanley Jones
மண்ணில் : 03-01-1884
விண்ணில் : 25-01-1973
ஊர் : பால்டிமோர், மேரிலாந்து
நாடு: அமெரிக்கா
தரிசன பூமி : இந்தியா
அமெரிக்காவை சேர்ந்த மிஷனரியான ஸ்டான்லி ஜோன்ஸ் ஒரு இறையியலாளர் ஆவார். அவர் இந்தியாவில் "கிறிஸ்டின் ஆஷ்ரம்" (கிறிஸ்தவ ஆசிரமம்) இயக்கத்தை பின்பற்றினவராக அறியப்பட்டவர். ஸ்டான்லி தனது 17 வயதில் கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். கென்டக்கியில் உள்ள அஸ்பரி கல்லூரியில் சட்ட படிப்பில் பட்டம் பெற்ற அவர், ஒரு வழக்கறிஞராக ஆக வேண்டுமென்று விரும்பினார். ஆனால் கர்த்தரின் அழைப்பிற்கு கீழ்ப்படிந்த அவர், தனது சொந்த நோக்கத்தை விட்டுவிட்டு, கர்த்தரின் ஊழியம் செய்ய முன்வந்தார். எனவே, 1907 ஆம் ஆண்டில் மெதடிஸ்ட் எபிஸ்கோபல் சபையின் மூலம் மிஷனரியாக அவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.
இந்தியாவில் அவர் ஒரு முறை ரயிலில் பயணம் செய்யும் போது ஒரு முஸ்லிம் மனிதரை சந்தித்தார். ஒரு மிஷனரியாக அவர் கொண்டிருந்த உற்சாகத்துடன் மத்தேயு சுவிசேஷத்திலுள்ள "மலைப்பிரசங்கத்தை" அந்த மனிதனுக்கு வாசித்தார். அப்பொழுது அந்த மனிதன், “எங்கள் புனித புத்தகமும் இதே சொல்கிறது. எல்லா மதங்களும் ஒன்றுதான், வழிகள் மட்டுமே வேறுபட்டவை.” என்று சொன்னார். அந்த பதிலானது, கிறிஸ்தவம்தான் சரியான வழி என்பதை நிரூபிக்க கிறிஸ்தவமல்லாதவர்களுடன் விவாதிக்க வேண்டுமா, அல்லது அதற்கு வேறு வழி இருக்கிறதா என்று ஸ்டான்லிவை யோசிக்க வைத்தது. இதன் விளைவாக அவர் அதற்கு ஒரு நல்ல தீர்வைக் கண்டார், இது "கிறிஸ்டின் ஆஷ்ரம்" (கிறிஸ்தவ ஆசிரமம்) தோன்ற வழிவகுத்தது. இந்த "கிறிஸ்டின் ஆஷ்ரம்" என்பது மற்றவர்கள் தங்கள் மதங்கள் என்ன சொல்கின்றன, கிறிஸ்தவம் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி விவாதிக்க அவர்களை ஈர்க்கும் ஒரு வழி. அவர் அந்த விவாதங்களை சுவிசேஷத்தை அறிவிக்கும் ஒரு வழியாக பயன்படுத்தினார். நற்செய்தியை அறிவிக்க அவர் மேற்கொண்ட இந்த புதிய அணுகுமுறை, மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு ஈர்க்கப்பட மேற்கத்திய கலாச்சாரத்தின் மூலம் தூண்டபடாமல், இயேசுகிறிஸ்துவை உலகின் இரட்சகராக முன்வைத்தது.
அந்த புதிய அணுகுமுறையை கொண்டிருந்த தனது ஊழியத்தை அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற பல நாடுகளுக்கு ஸ்டான்லி விரிவுபடுத்தினார். வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவுக்கு முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்பதை மையமாக கொண்டிருந்த தலைப்பில் ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகளையும் பிரசங்கங்களையும் தனது வாழ்நாளில் வழங்கினார் ஜோன்ஸ். அவரது பிரசங்கங்கள் லட்சக்கணக்கான மக்களை தொட்டு, அவர்களின் வாழ்க்கையை மாற்றிவிட்டன. கிறிஸ்தவமும் இந்தியாவை சேர்ந்ததே என்பதைக் காட்டும்படி இந்திய கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், பலரின் வாழ்க்கையை மாற்றிய 30 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர் ஜோன்ஸ். "நற்செய்தி இயேசு கிறிஸ்துவிலே இருப்பதை நான் கண்டேன், அந்த நல்ல செய்தி இயேசுவே. நான் கொண்டிருந்த ஒரே நோக்கம் என்றவென்றால், வாழ்வதும் அவரை பற்றி அறிவிப்பதும்." என்று ஜோன்ஸ் தனது குறிக்கோளைப் பற்றி கூறினார். அவர் கூறியது போலவே இந்த உலகில் தனது பணியை நிறைவேற்றிய பின்னர், ஸ்டான்லி ஜோன்ஸ் நல்ல வயதான 90 வயதில் மகிமையில் அடைந்தார்.
பிரியமானவர்களே, எந்தவிதமான மோதல்களும் இல்லாமல் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு சுவிசேஷத்தை எவ்வாறு அறிவிக்க முடியும்?
"ஆண்டவரே, நீர் வேறொருவரின் கடவுள் அல்ல, அவர்களுக்குச் சொந்தமானவரே என்று உணரும்படி மற்றவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
லெஸ்லி நியூபிகின் Lesslie Newbigin
மண்ணில் : 08-12-1909
விண்ணில் : 30-01-1998
ஊர் : நியூ காஸல்
நாடு: இங்கிலாந்து
தரிசன பூமி : இந்தியா
ஜேம்ஸ் எட்வர்ட் லெஸ்லி நியூபிகின் ஒரு பிரிட்டிஷ் இறையியலாளர், மிஷனரி, திருச்சபையின் தலைவர் மற்றும் பிஷப் ஆவார். 1929 ஆம் ஆண்டில் அவர் கேம்பிரிட்ஜில் உள்ள க்வீன்ஸ் கல்லூரியில் படிக்கும் போது, இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். வில்லியம் டெம்புல் மற்றும் ஜான் ராலீ மோட் ஆகியோரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட அவர், "ஸ்டூடெண்ட் கிறிஸ்டின் மூவ்மெண்ட்" (எஸ்.சி.எம்)-யில் (மாணவர் கிறிஸ்தவ இயக்கத்தில்) சேர்ந்தார். ஸ்டான்விக் என்ற ஊரில் நடந்த ஒரு எஸ்.சி.எம் கூட்டத்தில் கலந்துகொண்டபோது ஊழியத்திற்கான கர்த்தரின் அழைப்பை அவர் பெற்றுகொண்டார்.
ஆகவே ஊழியம் செய்ய பயிற்சி பெறுவதற்காக 1933 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர், 1936ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 'சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்து' மிஷனரியாக மெட்ராஸ் மிஷனில் பணியாற்ற நியமிக்கப்பட்டார். ஒரு மாதத்திற்குப் பிறகு ஹெலன் ஹென்டர்சனை மணந்த லெஸ்லி, தனது மனைவியுடன் ஊழியத்திற்காக இந்தியாவுக்கு புறப்பட்டார். அங்கு வந்த பிறகு விரைவிலேயே தமிழ் மொழியைக் கற்றுக் கொண்ட அவர், கிராமப்புறங்களில் ஒரு சுவிசேஷகராக தனது ஊழியத்தைத் தொடங்கினார். எனினும், பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகளுக்கிடையிலுள்ள போட்டி மனப்பான்மையை கண்ட அவர் மிகுந்த வருத்தம் அடைந்தார். கிறிஸ்தவ பிரிவுகளுக்கிடையிலான இந்த வேறுபாடுகள் கிறிஸ்தவர்கள் தங்கள் சாதியின் அடிப்படையில் தங்களை பிரித்துக் கொள்ள காரணமாயிருந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் “ஆண்டவர் நம்மை அவருடன் ஐக்கியப்படுத்தியுள்ளார்” என பிரசிங்கிக்கிற சுவிசேஷத்திற்கு முரணானது என்றும் மிஷனரி பணிகளுக்கு முதன்மையான தடையாகவும் அவர் கண்டார். ஆகவே, கிறிஸ்தவ பிரிவுகளிடையே ஒற்றுமையை கொண்டுவர அவர் கடுமையாக உழைத்தார். அவரது முயற்சிகளின் விளைவாக, ஆங்கிலிகன், காங்கிரிகேஷனல், மெதடிஸ்ட் மற்றும் பிரஸ்பைடிரியன் சபைகளை ஒன்றிணைத்து "தென்னிந்தியத் திருச்சபை" ("சர்ச் ஆஃப் சவுத் இந்தியா"-சி.எஸ்.ஐ.) உருவானது. 1947 ஆம் ஆண்டில் அவர் மதுரை மறைமாவட்ட பிஷப்பாக நியமிக்கப்பட்டார். 1959 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் உள்ள 'இன்டர்நேஷனல் மிஷனரி கவுன்சில்'-யின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட லெஸ்லி, அதை 'வேர்ல்ட்டு கவுன்சில் ஆஃப் சர்ச்செஸ்'-உடன் ஒருங்கிணைக்க பொறுப்பாக செயல்பட்டார்.
லெஸ்லி ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, தம் காலத்தில் கிறிஸ்தவத்தில் ஒற்றுமையை வலியுறுத்திய மிகவும் செல்வாக்குமிக்க இறையியலாளர்களில் ஒருவராகவும் இருந்தார். கிறிஸ்தவ சபை என்றால் கர்த்தர் தெரிந்தெடுத்துக்கொண்ட மக்கள் என்றும், அவர் நம்மை தெரிந்துகொண்டது தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக மட்டுமல்லாமல், மிஷனரிகளாக கர்த்தரின் ஊழியம் செய்வதற்கும் என்றும் லெஸ்லி நம்பினார். சபையின் ஒற்றுமையை மிகவும் நாடிய அவர், ஒன்றுபட்டு மிஷனரி பணிகளை பகிர்ந்துகொண்டு செய்வதின் மூலம் உலகெங்கிலும் உள்ள ஊழியத்தில் முன்னேற்றம் அடைய முடியும் என்று பரிந்துரைத்தார். விசுவாசிகளின் எண்ணிக்கையை விட அவர்களது விசுவாசத்தின் தரத்தை வாஞ்சித்தார். அவருடைய இருதயத்தின் தன்மை, மேய்ப்பராக ஆற்றிய சேவைகள், மிஷனரி தரிசனம் மற்றும் அவரது ஊழியத்தின் தன்மை ஆகியவற்றை கொண்டு உண்மையாகவே அவர் வல்லமையுள்ள ஒரு தேவமனிதர் என்று காணமுடியும்.
பிரியமானவர்களே, கிறிஸ்தவ சபைகளின் ஒற்றுமைக்காக நீங்கள் பாடுபடுகிறீர்களா?
"ஆண்டவரே, உலகளாவிய திருச்சபையின் விரிவாக்கத்திற்காக எங்கள் ஊழியத்தில் எங்களை ஒன்றுபடுத்துங்கள். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
சார்லஸ் ஸ்பர்ஜன் Charles Spurgeon
மண்ணில் : 19-06-1834
விண்ணில் : 31-01-1892
ஊர் : கெல்வெடன், எசெக்ஸ்
நாடு: இங்கிலாந்து
தரிசன பூமி : இங்கிலாந்து
சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் கிறிஸ்தவ சங்க அதிகாரிகளின் குடும்பத்தில் பிறந்தவர். அவரது கல்வி நிலை மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், ஸ்பர்ஜன் புத்தகங்களை அதிகமாக நேசித்தார். எனவே அவர் ஜான் பனியன் எழுதிய "மோட்சப் பயணம்" என்று தமிழில் மொழிபெயரப்பப்பட்ட "பில்க்ரிம்ஸ ப்ரோக்ரெஸ்" புத்தகத்தால் ஈர்க்கப்பட்டார். 1850 ஆம் ஆண்டு ஜனவரி 6, ஞாயிற்றுக்கிழமை, ஸ்பர்ஜன் தான் எப்பொழுதும் கலந்துகொள்ளும் சபைக்கு வழக்கமாக புறப்பட்டார். ஆனால், ஒரு பனிப்புயல் வந்ததினால் அருகிலுள்ள 'ப்ரிமிட்டிவ் மெதடிஸ்ட்' ஜெபாலயத்திற்கு செல்ல வேண்டி வந்தது. அங்கு அவர் கேட்ட பிரசங்கம் அவரது இதயத்தை ஆழமாக தொட்டது. அதன் விளைவாக அவர் இயேசு கிறிஸ்துவை தனது வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டார். அதே ஆண்டு அவர் ஞானஸ்நானம் பெற்று பாப்டிஸ்ட் திருச்சபையில் சேர்ந்தார். அப்போது ஸ்பர்ஜனின் வயது 15.
அதன் பிறகு அவர் கேம்பிரிட்ஜ் சென்றார். அங்கு அவர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்துக்கொண்டு போதிக்கும் ஒரு பயண போதகராக தனது ஊழியத்தைத் தொடங்கினார். 1851 ஆம் ஆண்டில் அவர் ‘வாட்டர்பீச் பாப்டிஸ்ட் சபை’-யின் பாதிரியாக நியமிக்கப்பட்டார். அவர் ஒரு சிறு குழந்தையைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அவரது பிரசங்கங்கள் மிகவும் முதிர்ச்சியடைந்தனவாக இருந்தன. அவரது ஆற்றல் மற்றும் சொற்பொழிவு திறன்கள் கண்டு, விரைவில் லண்டனில் உள்ள நியூ பார்க் ஸ்ட்ரீட் சேப்பலில் பிரசங்கிக்க அழைக்கப்பட்டார். அவரது பிரசங்கங்களைக் கேட்க வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு எந்த ஜெப ஆலயமும் போதுமானதாக இல்லை. எனவே, அந்த சபை 1861 ஆம் ஆண்டில் புதிதாக கட்டப்பட்ட ‘மெட்ரோபோலிட்டன் டாபர்நக்கில்’-க்கு மாற்றப்பட்டது. மரணமடையும் வரை 31 வருடங்களாக வாரத்திற்கு பல முறை அங்கு அவர் பிரசங்கித்துக்கொண்டு வந்தார். அவரது சேவைகள் கிறிஸ்தவ சபைக்கு மட்டுமல்ல, ‘பாஸ்டர்ஸ் கல்லூரி’, ஏழைகளைக்கான தங்குமிடங்கள் மற்றும் அனாதை இல்லங்களை நிறுவுவதன் மூலம் சமூகத்திற்கும் சேவைகள் செய்தார்.
சார்லஸ் ஸ்பர்ஜன் உண்மையாகவே கர்த்தரின் கையில் ஒரு தனித்துவமான கருவியாக திகழ்ந்தார். கிறிஸ்துவை மையமாகக் கொண்ட அவரது வாழ்க்கையிலும், ஊழியத்திலும், பிரசங்கங்களிலும் சுவிசேஷத்தை அறிவிப்பதிற்கான அவரது வைராக்கியத்தை காணலாம். தனது வாழ்நாளில் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்த ஸ்பர்ஜன், தானாகவே 15,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருப்பார். கிறிஸ்தவ நெறிகளை அலட்சியபடுத்தி சுதந்திரமாக வாழ ஊக்கமளிக்கும் தாராளமயத்தை நோக்கி சபை வீழ்ச்சியடைவதை அவர் கண்டபோது, சபையை எச்சரிக்க தயங்காமல் தனது கடமையை ஆற்றினார். பிரசங்கிப்பது மட்டுமல்லாமல், அவர் அடிக்கடி தனது பிரசங்கங்களில் குறிப்பிடும் பல பாமாலைகளையும் எழுதியுள்ளார். ஊழியத்தில் நேரடியாகச் செயல்பட அவர் தூண்டப்பட்டிருந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவராக இருக்க அவர் தேர்வு செய்தார். "பிரின்ஸ் ஆஃப் தி ப்ரீசர்ஸ்" (போதகர்களின் இளவரசர்) என்று பொருத்தமாக அழைக்கப்படும் ஸ்பர்ஜன், இவ்வுலகில் கர்த்தருக்கு ஒரு பான அற்பணமாக தனது வாழ்க்கையை ஊற்றிவிட்டு, 1892 ஆம் ஆண்டில் பரலோக வாசஸ்தலத்திற்கு புறப்பட்டார்.
பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக ஆர்வம் கொண்டிருக்கிறீர்களா?
"ஆண்டவரே, நான் பெற்றுக்கொள்ளும் எல்லா வாய்ப்புகளையும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு பயன்படுத்தும்படி என்னை நிரப்பும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
Thanks for using my website. Post your comments on this