Type Here to Get Search Results !

Martin Luther King Life History | தேவசகாயம் பிள்ளை வாழ்க்கை சரி்த்திரம் | 5 Missionaries LIfe History Tamil | Jesus Sam

மேரி மெக்லீன் Mary McLean
மண்ணில் : 1857
விண்ணில் : 19-01-1943
ஊர் : பைரி
நாடு : ஆஸ்திரேலியா
தரிசன பூமி : இந்தியா

மேரி மெக்லீன் இந்தியாவில் பணியாற்றிய ஆஸ்திரேலிய பிரஸ்பைடிரியன் மிஷனரி ஆவார். அவர் 1857 இல் நீல் மெக்லீன் மற்றும் ஃப்ளோரா காம்ப்பெல் தம்பத்தினருக்கு மகளாக பிறந்தார். அவரது தந்தை விவசாயம் செய்து வருகிற பெர்ரி என்ற சிறிய கிராமத்தில் அவர் வசித்து வந்தார். மேரி ஒரு உண்மையான கிறிஸ்தவர். ஆரம்பத்தில் ஒரே ஊரில் பல பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்த அவர் சிறு வயதிலிருந்தே கர்த்தருக்காக ஊழியம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார்.

ஒருமுறை அவர் இந்தியாவில் ஜெனானா மிஷனை மேற்கொண்ட திருமதி லாங்ஹர்ஸ்ட் அவர்களின் பிரசங்கத்தை கேட்டார். பெண்கள் மிஷனரிகளை மட்டுமே கொண்டிருந்த இந்த ஜெனானா மிஷன்ஸ், மிக ஏழ்மையான சூழ்நிலைகளில் இருந்த இந்திய பெண்களை சந்தித்து, அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும் ஊழியமாயிருந்தது. அந்த நேரத்தில் திருமதி லாங்ஹர்ஸ்ட் பெண்கள் மிஷனரிகளுக்காக அழைப்பு கொடுத்த போது மேரி அதற்கு தன்னை அர்ப்பணித்தார். ஆகவே பிரஸ்பைடிரியன் வுமென்ஸ் மிஷனரி அச்சோசியேடின் ஆஃப் நியூ சவுத் வேல்ஸ் என்ற அமைப்புக்கு அவர் விண்ணப்பித்தார். அதன் மூலமாக அவர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள சோளிங்கர் மிஷனுக்கு அனுப்பப்பட்டார்.

1891 ஆம் ஆண்டில் ஷோளிங்கரை அடைந்த மேரி விரைவில் தமிழ் மொழியை கற்றுக்கொண்டார். நன்கு கற்பித்தல் திறனும், ஈர்க்கக்கூடிய ஆளுமையும் கொண்ட மேரி சிறந்த ஆசிரியராக திகழ்ந்தார். 1894 ஆம் ஆண்டு மெட்ராஸைச் சுற்றியுள்ள ஐந்து பள்ளிகளின் கண்காணிப்பாளராகவும், மேலும் 1897 ஆம் ஆண்டு திருமதி லாங்ஹர்ஸ்ட்க்குப் பதிலாக மெட்ராஸ் மிஷனின் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். அவரது மேற்பார்வையின் கீழ் ஈசனூர், இராமகிருஷ்ண பேட்டை, சோமசுந்தரம் மற்றும் பரஞ்சி ஆகிய கிராமங்களிலும் பல தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

35 ஆண்டுகளாக தன்னலமின்றி இந்திய மக்களுக்கு சேவை செய்த மேரி, தனது சேவைகளின் மூலம் பல பெண்களை கிறிஸ்துவிடம் அழைத்துச் சென்றார். ‘பூர்தா’ முறையின் தடைகளை தாண்டி கல்வி, ஆரோக்கியம் மற்றும் சுவிசேஷத்தை அங்குள்ள பெண்களுக்குக் கிடைக்கச்செய்தார். மிக முக்கியமாக, ‘உடன்கட்டை ஏறுதல்’ போன்ற கொடூரமான சமூக விரோத செயல்களிலிருந்து விதவைகளை விடுவிக்க அவர் கடினமாக உழைத்தார். கல்வியை வழங்குவதற்கான அவரது முயற்சிகள் நேர்மறையான சமூக மாற்றத்தை தூண்டியது மட்டுமல்லாமல், சமூகத்தில் சமத்துவத்தையும் ஊக்குவித்தன. ஓய்வு பெற்ற பிறகு அவரது பிரசாங்கங்களின் மூலம் மிஷனரி ஊழியத்திற்காக பெண்களை ஊக்குவித்துக்கொண்டு மேரி பல நாடுகளுக்கு பயணம் செய்தார். மிஷனரியாக தனது ஊழியத்தை விட்டு வெளியேறிய பிறகும் சிட்னி பிரஸ்பைடிரியன் சர்ச் மூலம் மிஷனரி பணிகளுக்கு அவர் தொடர்ந்து ஆதரவளித்தார். அவரது சேவைகளின் நினைவாக 1952 ஆம் ஆண்டு சோளிங்கரில் "மேரி மெக்லீன் பள்ளி" திறக்கப்பட்டது.

பிரியமானவர்களே, சமூகத்தில் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு நீங்கள் செய்த ஊழியம் ஒரு காரணமாக இருக்கிறதா?


“கர்த்தாவே, என்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளில் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான சாதனமாக என்னை மாற்றும். ஆமென்!"


BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்


ஜோயான் ஷெட்லர் Joanne Shetler
மண்ணில் : 1936
ஊர் : கலிபோர்னியா
நாடு : அமெரிக்கா
தரிசன பூமி : பிலிப்பைன்ஸ்

ஹெலிகாப்டர் நெருங்கும் சத்தம் கேட்டபோது பலங்காவோ கிராமம் முழுவதும் உற்சாகத்தால் நிறைந்தது. அந்த ஹெலிகாப்டர் புதிய மருத்துவமனைக்கான கட்டுமான பொருட்களினால் நிரம்பியிருந்தது. திடீரென்று அது ஒரு பாக்கு மரத்தில் மோதி சரிந்து, எரிபொருள் கசிந்ததால் தீப்பிடித்தது. அதற்குள் இருந்த சிமென்ட் பைகளின் கீழ் சிக்கிக்கொண்ட ஒரு பெண், "ஆண்டவரே, நான் இப்போது இறக்க முடியாது, ஏனென்றால் நான் இறந்தால் மொழிபெயர்ப்பை முடிக்க முடியாது" என்று கர்த்தரிடம் ஜெபித்து கொண்டிருந்தார். அவரது பெயர் ஜோயான் ஷெட்லர்.

ஜோயான் ஷெட்லர் கலிபோர்னியாவில் ஒரு பண்ணையில் வளர்ந்தார். அவரது பதினொரு வயதிலேயே ஒரு வேதபாட வகுப்பு கூட்டத்தில் இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். ஒரு ஞாயிற்றுக்கிழமை, உலகில் 90% மக்கள் கிறிஸ்துவைப் பற்றி இன்னும் கேள்விப்படவில்லை என்று ஒரு மிஷனரி கூறினதை ஜோயான் கேட்டார். அந்நேரத்தில் மிஷனரி சேவைக்கான கர்த்தரின் அழைப்பை அவர் உணர்ந்தார். எனவே பயோலா கல்லூரியில் வேதாகம கல்வி பயின்ற அவர் அதற்கு பின் விக்லிஃப் வேதாகம மொழிபெயர்ப்பாளர்களுடன் சேர்ந்தார். பட்டம் பெற்ற பிறகு, 1962ஆம் அண்டில் ஜோயான் பிலிப்பைன்ஸின் தொலைதூர கிராமமான பலங்காவோவுக்கு அனுப்பப்பட்டார்.

உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்வதும், வேதாகமத்தை அந்த மொழியில் மொழிபெயர்ப்பதும் அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலை. அந்த பணி எளிமையானதாகத் தோன்றினாலும், ஜோயான் அங்கு பல பெரிய சவால்களை எதிர்கொண்டார். அந்த கிராமத்தின் மக்கள் தீய ஆவிகளால் துன்புறுத்தப்பட்டனர். எனவே, அவர்கள் அந்த ஆவிகளை சமாதானப்படுத்த பலிகளை கொடுப்பார்கள், இல்லையெனில், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் இறந்துவிடுவார்கள். ஜோயான் அந்த தீய ஆவிகளை பலமுறை எதிர்கொள்ள நேர்ந்தது. அனாலும் அவரது வல்லமையுள்ள ஜெபத்தினால் அவைகளை ஜெயித்தார். ஆவிகளுக்கு பலிக் கொடுக்காதிருங்கள் என்று அவர் உள்ளூர்மக்களிடம் மன்றாடி, அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய அந்த மக்கள், படிப்படியாக தீய ஆவிகள் மீதான கர்த்தரின் அதிகாரத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கினர். பல அற்புதங்களின் மூலம் ஆண்டவர் பல உள்ளூர் மக்களை ஆவிக்குரிய தமது குடும்பத்திற்குள் கொண்டுவந்தார்.

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பிய ஜோயான், 1982 ஆம் ஆண்டில் புதிய ஏற்பாடு மொழிபெயர்ப்பதை முடித்தார். அவர் வேதபாட வகுப்பு முகாம்களை நடத்தினார், மேலும் அண்டை கிராமங்களுக்கும், எதிரி பழங்குடியினருக்கும் சுவிசேஷத்தை எடுத்துச் செல்லும் குழுக்களை ஏற்படுத்தினார். பழைய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பைத் தொடங்கிய பின்னர் அவர் அமெரிக்கா திரும்பினார். அவர் பல்வேறு பட்டறைகளை நடத்திக்கொண்டும், மிஷனரி சேவைக்காக மக்களை ஊக்குவித்துக்கொண்டும் இன்றைக்கும் கர்த்தரின் சேவையை தொடர்ந்து செய்கிறார். இன்று பலங்காவோ பள்ளத்தாக்கில் அநேக திருச்சபைகள் உண்டு. இந்த சபைகளின் மூலம் அநேக மிஷனரிகள் உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

பிரியமானவர்களே, உங்கள் சொந்த மொழியில் வேதாகமத்தை கொண்டிருப்பதற்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்களா?

“கர்த்தாவே, வேதாகமம் இல்லாதவர்களுக்கு உமது வார்த்தையை கிடைக்கச் செய்ய எனக்கு உதவி செய்யும். ஆமென்!

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்


மேரி ஸ்லெசர் Mary Slessor
மண்ணில் : 02-12-1848
விண்ணில் : 13-01-1915
ஊர் : அபெர்டீன்
நாடு : ஸ்காட்லாந்து
தரிசன பூமி : நைஜீரியா

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த மேரி மிட்செல் ஸ்லெசர் நைஜீரியாவில் ஒரு மிஷனரியாக பணியாற்றினார். செருப்பு தயாரிப்பாளரின் குடும்பத்தில் பிறந்த அவர் ஏழ்மையான சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்டார். பதினொரு வயதிலேயே மேரி குடும்பத்தின் தேவைகளுக்காகவும் தனது கல்விக்காகவும் ஒரு ஆலையில் பகுதிநேர வேலை செய்தார். தேவ பயத்தில் வளர்ந்த அவர் சிறு வயதிலேயே மிஷனரி ஊழியத்தை செய்யும் திறன் கொண்டிருந்தார். அவர் டண்டியில் ஒரு மிஷனில் சேர்ந்து, கிறிஸ்தவ வழியைக் கற்றுக்கொடுப்பதற்கு ஏழைகளிடையே பணியாற்றினார். ஆப்பிரிக்காவில் ஊழியம் செய்த லிவிங்ஸ்டனின் முன்மாதிரியான ஊழியத்தினால் அவர் ஈர்க்கப்பட்டார். எனவே, லிவிங்ஸ்டனின் மரணம் குறித்து கேள்விப்பட்டபோது, அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஆப்பிரிக்கா செல்ல முடிவு செய்தார் மேரி.

"யுனைடெட் பிரஸ்பைடிரியன் சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்தில்" தன்னை ஒரு மிஷனரியாக அர்ப்பணித்துக் கொண்டபோது மேரிக்கு 28 வயதுதான். எடின்பர்க்கில் தனது பயிற்சியை முடித்த பின்னர், அவர் 1876ஆம் ஆண்டில் நைஜீரியாவுக்கு புறப்பட்டார். நைஜீரியாவின் கலபார் அடைந்த பிறகு, சமூக விரோதங்கள், மூடநம்பிக்கைகள், அடிமை வர்த்தகம் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றுடன் அந்த நாடு முழுவதும் பல குழப்பங்களோடு சமாதானமற்ற நிலைமையில் இருப்பதாக மேரி உணர்ந்தார். அவர் உள்ளூர் மொழிகளில் ஒன்றான எஃபிக் மொழியையும், அதன் பழக்கவழக்கங்களையும், கலாச்சாரத்தையும் கற்றுக்கொண்டார். அங்கு அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பல உள்ளூர் மக்களை கிறிஸ்துவிடம் அழைத்துச் சென்றார். தனது தீர்மானத்தில் மிகவும் உறுதியாக இருக்கும் அவர் மற்ற கிராமங்களை அடைய இரவு முழுவதும் பயணம் செய்த சில நேரங்களும் உண்டு. 1888 ஆம் ஆண்டில் அவர் பல மிஷனரிகள் கொல்லப்பட்ட ஒகோயாங் என்ற பகுதிக்குச் சென்று, அங்கு ஒரு மிஷன் ஸ்தாபனத்தை நிறுவி, சுவிசேஷப் பணிகளை மேற்கொண்டார்.

சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் மக்கள் கடைப்பிடித்த மந்திரவாதம் மற்றும் அவர்களின் மூட பழக்கவழக்கங்களுக்கு எதிராக மேரி தீவிரமாகப் போராடினார். அங்கு அவர் போராட வேண்டிய மிக கொடூரமான வழக்கம் என்னவென்றால் இரட்டையர்களைக் கொல்லும் சடங்கு முறையாகும். ஒகோயாங் மக்கள் இரட்டையர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று நம்பினர், எனவே அப்படிப்பட்ட குழந்தைகளை தெய்வங்களுக்கு பலியிடுவார்கள். அவ்வாறு செய்ய வேண்டாமென்று மேரி அவர்களிடம் கெஞ்சினார், மேலும் இரட்டையர்களை தனது வீட்டிற்கு அழைத்து கொண்டுபோய் தனது பராமரிப்பில் வைத்தார். அதுமட்டுமல்லாமல், அவர் பல பள்ளிகளையும் கிறிஸ்தவ ஆலயங்களையும் கட்டினார். அவர் செய்த பணியைத் தொடர பல இளைஞர்களுக்கு பயிற்சியும் கொடுத்தார். நைஜீரியாவில் ஊழியம் செய்த நாட்களில் பெரும்பாலும் அவர் அடிக்கடி மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஊழியத்தின் நிமித்தம் அதை ஒருபோதும் அவர் பெரிதாக எண்ணவில்லை. 1915ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பத்தில், மறுபடியும் மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட மேரி ஸ்லெசர், இந்த உலகில் தனது ஓட்டத்தை வெற்றியுடன் முடித்து, கர்த்தரிடம் சென்றார்.

பிரியமானவர்களே, நீங்கள் புறஜாதி மக்களின் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடி அவர்களின் மனக்கண்களை திறக்க உழைக்கிறீர்களா?

“கர்த்தாவே, புறஜாதியினருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க என்னை பெலப்படுத்தும். ஆமென்! 

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்


தேவசகாயம் பிள்ளை Devasahayam Pillai
மண்ணில் : 23-04-1712
விண்ணில் : 14-01-1752
ஊர் : நட்டாளம்
நாடு : இந்தியா
தரிசன பூமி : இந்தியா (தமிழ்நாடு)

தேவசகாயம் பிள்ளை அவர்களின் இயற்பெயர் நீலகண்ட பிள்ளை. அவர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாளம் என்ற ஊரில் ஒரு உயர் சாதி இந்து குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை இந்து கோவிலில் அர்ச்சகராக இருந்தார். அவரது தாயின் சகோதரர் அவரை கடுமையான இந்து நம்பிக்கை மற்றும் சடங்கு ஆச்சாரங்களுடன் வளர்த்தார். அந்த காலத்தில் திருவாங்கூர் மன்னரான மகாராஜா மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையில் இராஜாவின் ஊழியர்களில் உறுப்பினராக உயர்வுபெற்றார். அங்கே டச்சு கடற்படைத் தளபதியான யூஸ்டாச்சியஸ் டி லானோயுடன் நண்பராக பழகினார்.

டி லானோய் உண்மையான தெய்வம் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவருக்கு விளக்கி, அவரை இரட்சிப்பின் பாதைக்கு அழைத்துச் சென்றார். பிள்ளை அவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருந்தபோது, வேதாகமத்தில் எழுதப்பட்ட யோபுவின் விசுவாசத்தைப் பற்றி டி லானோய் அவருடன் பகிர்ந்துகொண்டு, அவரை ஊக்குவித்தார். வேதாகமத்தில் உள்ள அத்தகைய தேவபக்தியுள்ள மனிதர்களின் வாழ்க்கையால் தொடப்பட்ட நீலகண்ட பிள்ளை இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, இதயத்தில் சமாதானத்தைப் பெற்றுக்கொண்டார். 1745ஆம் ஆண்டில் அவர் ஞானஸ்நானம் பெற்றபோது, அவருக்கு 'கர்த்தருடைய உதவி' என்று பொருள்படும் 'லாசரஸ்', தமிழில் 'தேவசகாயம்' என்ற பெயர் சூட்டப்பட்டது.

அது முதல் அவர் இந்துக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, தனது வாழ்க்கையை இயேசுவுக்காக அர்ப்பணித்துக்கொண்டார். இதன் காரணமாக, அவருடைய குடும்பத்தில் உள்ள சிலர் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர், மேலும் பல புறஜாதி மக்கள் ரட்சிப்பைப் பெற்றுக்கொண்டனர். அதுமட்டுமல்லாமல், தேவனின் வல்லமையினால் அவர் பல அற்புதங்களையும் செய்தார். இருப்பினும், அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதும் அவருடைய ஊழியமும் உயர் சாதி இந்துக்களிடையே அவருக்கு எதிர்ப்பைக் கொண்டுவந்தது. எனவே, இந்து மதத்திற்குத் திரும்பும்படி தேவசகாயம் அவர்களுக்கு இராஜா கட்டளையிட்டார். இராஜாவின் கட்டளையை மறுத்ததினால், அவர் ஒரு தேசத்துரோகி என்றும் உளவாளி என்றும் குற்றம் சாட்டப்பட்டார். இதன் விளைவாக அவர் மூன்று ஆண்டுகள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் கடுமையான குற்றவாளியைப் போல நடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார். ஒரு எருமை மீது அவரை பின்னோக்கி உக்காரவைத்து, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதற்காக அவரை அவமானப்படுத்த மக்களுடன் நெரிசலான பகுதிகளில் அழைத்து செல்லப்பட்டார். துன்பங்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டபோதிலும், தனது விசுவாசத்தில் உறுதியாக நின்றார் தேவசகாயம் பிள்ளை. சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் அவர் ஒரு காட்டில் விடப்பட்டார், அங்கு அவர் படைவீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரியமானவர்களே, உங்கள் சாட்சியின் மூலம் உங்கள் குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறார்களா?

“கர்த்தாவே, என் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே ஒரு உயிருள்ள சாட்சியாக வாழ எனக்கு கிருபை தாரும். ஆமென்!

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்



மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் Martin Luther King Jr.
மண்ணில் : 15-01-1929
விண்ணில் : 04-04-1968
ஊர் : அட்லாண்டா, ஜார்ஜியா
நாடு : அமெரிக்கா
தரிசன பூமி : அமெரிக்கா

மார்ட்டின் ஒரு தெய்வீக கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை அட்லாண்டாவில் உள்ள எபினேசர் பாப்டிஸ்ட் திருச்சபையில் போதகராக இருந்தார். மார்ட்டினுக்கு ஐந்து வயதாக இருந்தபோது, அவர்களின் ஞாயிறுப்பள்ளி ஆசிரியர் இரட்சிப்பைப் பற்றி சொல்லும்போது, அவர் தனது இதயத்தை கர்த்தருக்காக அர்ப்பணித்தார். இருப்பினும், அவரது கல்லூரி நாட்களில் அவர் ஒரு சந்தேக மனப்பான்மையைக் கொண்டிருந்தார். எனவே, கிறிஸ்தவத்தையும் ஒரு கட்டுக்கதை என்று சந்தேகப்பட்டார். அத்தகைய சூழ்நிலைகளில் தனது நண்பர்களின் தூண்டுதலின் மூலம் அவர் வேதாகமத்தைப் பற்றிய ஒரு பாடத்திட்டத்தை பயின்றார். அதன் மூலமாக தேவனுடைய வார்த்தையின் ஆழமான உண்மைகளை அவர் அறிந்துகொண்டார். அது அவரது இழந்த அமைதியற்ற மனதை அமைதிப்படுத்தியது. ஆகவே, மோர்ஹவுஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, 1948ஆம் ஆண்டில் 'குரோசர் தியொலாஜிக்கல் செமினரி' என்ற இறையியல் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் அவர் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

மார்ட்டின் தனது கல்லூரி நாட்களிலிருந்தே ஊழியம் செய்யத் தொடங்கினார். 1954ஆம் ஆண்டில் அவர் மாண்ட்கோமரியில் உள்ள டெக்ஸ்டர் அவென்யூ பாப்டிஸ்ட் திருச்சபையின் போதகரானார். அவர் அர்ப்பணிப்புள்ள போதகர் மட்டுமல்ல, சிந்தனையில் பகுத்தறிவுள்ளவராகவும் திகழ்ந்தார். ஆகவே, அவரது ஆவிக்குரிய ஞானத்தினால் அவர் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவந்தார். கர்த்தருக்கு முதலிடம் கொடுக்கவும், நடைமுறையில் கிறிஸ்தவ வாழ்க்கை வாழவும் மார்ட்டின் சபைக்கு கற்பித்தார். ஒரு கடினமான போதகராக இருந்த அவர் தனது சக விசுவாசிகளையும், தேவைப்பட்டால், அதிகாரிகளையும் சரிப்படுத்துவதற்கு ஒருபோதும் தயங்கவில்லை. இதனால் அவர் எதிர்ப்பையும், பொருளாதார பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அத்தகைய கடினமான சூழ்நிலைகளிலும் அவர் பின்வாங்கவில்லை, மேலும் அவைகளினால் அவருடைய விசுவாசம் இன்னும் பலப்படுத்தப்பட்டது. மார்ட்டின் தனது சுவிசேஷக் கூட்டங்களில் பில்லி கிரஹாம் அவர்களுடன் சேர்ந்து ஊழியத்தை நிறைவேற்றினார்.

கிறிஸ்தவம் இறுதியில் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மார்ட்டின் உறுதியாக நம்பினார். அமெரிக்காவில் வளர்ந்து வரும் இன பாகுபாடுகளை நினைத்து மிகவும் வேதனைப்பட்ட அவர் 1950ம் ஆண்டுகளில் சிவில் உரிமைகளுக்கான இயக்கத்தை தீவிரமாக வழிநடத்தினார். 1957 இல் அவர் "சதன் கிறிஸ்டின் லீடர்ஷிப் கான்ஃபெரென்ஸுக்கு” (தெற்கு கிறிஸ்தவ தலைமை மாநாடுக்கு) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய எதிர்ப்புகள் சமாதானத்துடன் நடத்தப்பட்டவை மற்றும் அவருடைய போதனைகள் இயேசு கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டிருந்தன. 1968ஆம் ஆண்டு, மார்ச் 29 அன்று, சிவில் உரிமைகளின் முன்னேற்றுவதற்கான அவருடைய முயற்சிகளுக்காக அவருக்கு முப்பத்தைந்து வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அக்காலத்தில் அந்த கனத்தை பெற்ற இளைஞர் இவரே. ஒடுக்கப்பட்ட சுகாதாரத் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக மார்ட்டின் மெம்பிசுக்கு வந்தபோது, அவர் தனது எதிரிகளின் கைகளில் உயிரை இழந்தார்.

பிரியமானவர்களே, உங்கள் சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நீங்கள் அடிப்படையாகக் கொண்டிருக்கிறீர்களா?

கர்த்தாவே, சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய ஒரு நடைமுறை கிறிஸ்தவனாக இருக்கும்படி எனக்கு உதவி செய்யும். ஆமென்!

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.