எமில் ரிக்டர் Emil Richter
நாடு : ஜெர்மனி
தரிசன பூமி : இந்தியா
கிழக்கு பிரஷியாவைச் சேர்ந்த ஒரு அகதியான எமில் ரிக்டர் ஃபிராங்ஃபர்ட்டில் பணிபுரிந்தார். ஜெர்மனி இராணுவத்தில் பணியாற்றிய தனது ஒரே மகனை இரண்டாம் உலகப் போரில் அவர் இழந்தார். 1957 ஆம் ஆண்டில் பி. எம். சாமுவேல் என்ற இந்திய நாட்டைச் சேர்ந்த ஒரு போதகரின் பிரசங்கத்தின் மூலம் இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகளின் அவலநிலை குறித்து ரிக்டர் கேள்விப்பட்டார். அதனால் இந்தியாவின் ஏழை மற்றும் அனாதைக் குழந்தைகளின் உதவியற்ற தன்மை குறித்து உதவ அவருக்குள் ஆழ்ந்த பாரம் ஏற்பட்டது. பின்னர் அவர் அந்த குழந்தைகளின் ஆவிக்குரிய மற்றும் அன்றாட தேவைகளை எந்த வகையிலாவது சந்திக்கும்படி முடிவு செய்தார்.
ஆரம்பத்தில் ரிக்டர் தனது வருமானத்தில் ஒரு பகுதியை அந்த இந்திய போதகருக்கு கொடுத்து அந்த ஏழைக் குழந்தைகளை ஆதரிக்க முயற்சி செய்தார். இருப்பினும், 1957 ஆம் ஆண்டில் தனது மனைவியின் பிறந்தநாள் விழாவில், ஏழைகளுக்கு உதவுவதற்கான தனது முயற்சிகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்தார். அவர் ஜெபக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, தேவனுடைய அன்பை நடைமுறையில் காட்ட தனது சக கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்தினார். உலகில் ஏழைமக்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு தேவனுடைய அன்பின் நற்செய்தி மட்டுமே என்று அவர் உறுதியாக நம்பினார். அவருடைய முயற்சி இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்யும்படி ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள கிறிஸ்தவர்களின் உள்ளத்தை தூண்டியது. உதவியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது, எமில் ரிக்டர், எர்வின் கிளிங்குடன் சேர்ந்து, அதே ஆண்டில் ஃபிராங்ஃபர்ட்டில் "கிறிஸ்டியன் மிஷன்ஸ் சர்வீஸ்" ('கிறிஸ்டிலிசர் மிஷன்ஸ்டியன்ஸ்ட்') (சிஎம்எஸ்) என்ற நிறுவனத்தை நிறுவினார்.
நிறுவப்பட்ட ஆரம்ப நாட்களில், சி.எம்.எஸ் இந்தியாவில் உள்ள அனாதை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வளர்ப்பு குழந்தைகள் திட்டத்தின் ("ஃபோஸ்டர் சில்ட்ரன் ஸ்கீம்") கீழ் பல்வேறு கிறிஸ்தவ குழுக்கள் மற்றும் திருச்சபைகள் மூலம் உதவி வழங்கியது. பின்னர் இந்தியாவின் பல கிராமப்புறங்களில் சிறப்பு குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் நிறுவப்பட்டன. கடந்த 64 ஆண்டுகளாக ஒரு தொண்டு நிறுவனமாக சி.எம்.எஸ், சாதி, மதம், பிரிவு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் 50,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டுவந்தது. அங்கு குழந்தைகள் கிறிஸ்துவின் அன்பில் வளர ஊக்குவிக்கப்பட்டு, ஒழுக்கமுள்ள முன்மாதிரியான வாழ்க்கையை வாழ பயிற்சி பெறுகிறார்கள். இந்தியாவின் ஆறு மாநிலங்கள் மற்றும் ஒரு சில நாடுகளிலும் குழந்தைகள் மற்றும் ஊனமுற்றோருக்கான பராமரிப்பு இல்லங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் பள்ளிகளைக் கொண்ட இந்த அமைப்பு, இன்றைக்கும் கிறிஸ்தவ விசுவாசத்தை தொடர்ந்து கிரியைகளினாலே நிருபித்து வருகிறது.
பிரியமானவர்களே, ஏழைகளின் தேவைகளை சந்திப்பதில் உங்களுடைய பங்கு என்ன?
“கர்த்தாவே, ஏழைகளுக்கு உமது அன்பை கிரியைகளினால் காட்ட என்னை பலப்படுத்தும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
ஜோஹன்னா வீன்ஸ்ட்ரா Johanna Veenstra
மண்ணில் : 19.04.1894
விண்ணில் : 09.04.1933
ஊர் : பேட்டர்சன், நியூ ஜெர்சி
நாடு : அமெரிக்கா
தரிசன பூமி : நைஜீரியா
ஜோஹன்னா வீன்ஸ்ட்ரா போதகரான வில்லியம் வீன்ஸ்ட்ராவின் மகள். அவர் தனது பதினான்கு வயதில் நியூயார்க் நகரில் சுருக்கெழுத்தாளராக (ஸ்டெனோகிராஃபராக) பணியாற்றத் தொடங்கினார். நகர வாழ்க்கையைப் பற்றி அவர் ஆர்வமாக இருந்தபோதிலும், தேவனோடு சரியான உறவு இல்லை என்ற குற்ற மனசாட்சியோடிருந்தார். நிம்மதி இல்லாத ஆத்துமாவை அமைதிப்படுத்த சமாதானத்தை தேட ஆரம்பித்தார். ஒரு நாள் அவர் தனது நண்பருடன் ஒரு ஆராதனை கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவரது தேடல் கிடைத்தது. அங்கு அற்புதமான மனமாற்றத்தை அனுபவித்த ஜோஹன்னா, கிறிஸ்துவுக்கு தன் வாழ்க்கையை ஒப்புக் கொடுக்க தீர்மானம் பண்ணினார்.
பத்தொன்பதாம் வயதில், அவர் நியூயார்க் நகரிலுள்ள யூனியன் மிஷனரி பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார். குறிப்பிட்டக் காலம் ஆப்பிரிக்காவில் பணியாற்றிய டாக்டர் கார்ல் கும் அவர்களின் அனுபவத்தால் ஈர்க்கப்பட்ட ஜோஹன்னா, ஆப்பிரிக்காவில் ஒரு மிஷனரியாக பணியாற்ற சூடான் யுனைடெட் மிஷனுக்கு விண்ணப்பித்தார். சுருக்கமான மருத்துவப் பயிற்சிக்குப் பிறகு, தனது 25 வயதில் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டார். ஜோஹன்னா 'கிறிஸ்டியன் ரிஃபார்ம்ட் சர்ச்' என்ற திருச்சபையிலிருந்து வட அமெரிக்காவிற்கு வெளியே மிஷனரியாக பணியாற்றிய முதல் மிஷனரி ஆவர். அவர் பல மாதங்கள் கடினமான கடல் பயணத்தைத் துணிந்து செய்து, 1920 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நைஜீரியாவின் லாகோஸ் நகரத்தை அடைந்தார். அங்கு அவர் ஒரு வருடம் மொழியியல் பயிற்சி பெற்றார். பின்னர், 1921 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அவர் லுப்வே என்ற தொலைதூர கிராமத்திற்குச் சென்றார்.
லுப்வே மிகவும் பின்தங்கிய கிராமமாக இருந்தது. அங்கு வாழும் மக்கள் ஆவிகளை வணங்குவது, பலதார மணம் மற்றும் நரமாமிசம் உண்ணும் ஆகியவற்றை பழக்கமுடையவர்களாய் இருந்தார்கள். அவர்களிடையே ஊழியம் செய்வது ஆபத்தானது என்றாலும், ஜோஹன்னா ஒரு தைரியமான சுவிசேஷகியாக முன்னேறினார். முன்னேறினார். ஊழியத்தில் உதவியாளரான கிளாரா ஹை உடன் சேர்ந்து கட்டிடங்களைக் கட்டினார், குடிசைகளை சரிசெய்தார் மற்றும் அடிப்படை மருத்துவ சேவை செய்தார். மேலும், போதித்துக்கொண்டு, பிரசங்கித்துக்கொண்டு, ஜெபக் கூட்டங்களை நடத்திக்கொண்டும் கிராமத்திலிருந்து கிராமத்திற்கு பயணம் செய்தார். மற்றவர்கள் செல்லத் துணியாத இடங்களுக்கும் ஜோஹன்னா சென்றார். அவருடைய ஊழியத்தின் மூலமாக, பலர், குறிப்பாக குடேப் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இயேசு கிறிஸ்துவை தமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். இளைஞர்களை சுவிசேஷகர்களாகப் பயிற்றுவிப்பதற்காக ஒரு தங்கி பயிலும் பள்ளியையும் (Boarding school) அவர் ஏற்படுத்தினார்.
அங்கிருந்து அவர் எழுதிய கடிதங்கள் ஆப்பிரிக்காவில் ஊழியத்தில் ஈடுபட கிறிஸ்தவ திருச்சபையையும் மிஷனரி அமைப்புகளையும் ஊக்குவித்தன. சூடான் மற்றும் நைஜீரியாவின் சில பகுதிகளில் ஒரு கடுகு விதை போல முளைத்து ஒரு பெரிய மரமாக வளர்ந்தார் ஜோஹன்னா வீன்ஸ்ட்ரா அவர்கள். தனது வாழ்க்கையின் மூலம் கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றிய அவர் திடீரென்று நோய்வாய்ப்பட்டு, 1933 ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.
பிரியமானவர்களே, கர்த்தர் உங்களிடம் எதிர்ப்பார்ப்பதை செய்ய நீங்கள் ஆயத்தமா?
“கர்த்தாவே, மற்றவர்கள் செல்லத் துணியாத இடங்களுக்குச் செல்ல என்னை தைரியப் படுத்தும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
ஃபிலிப் ஜேம்ஸ் எலியட் (ஜிம் எலியட்) Philip James Elliot (Jim Elliot)
மண்ணில் : 08-10-1927
விண்ணில் : 08-01-1956
ஊர் : போர்ட்லேண்ட், ஓரிகான்
நாடு : அமெரிக்கா
தரிசன பூமி : ஈக்வடார்
ஜிம் எலியட் என்று அழைக்கப்படும் ஃபிலிப் ஜேம்ஸ் எலியட், ஃபிரெட் எலியட் மற்றும் கிளாராவின் மூன்றாவது குழந்தை. கர்த்தருடைய பயத்தில் வளர்க்கப்பட்ட அவர் வேதாகமத்தை தவறாமல் படிக்க ஊக்கப்படுத்தப்பட்டார். மிஷனரிகளை பற்றி கேட்டு வளர்ந்த ஜிம், அவரும் ஒருநாள் மிஷனரியாக வேண்டும் என்ற வாஞ்சை கொண்டிருந்தார். போர்ட்லேண்டில் உள்ள பென்சன் பாலிடெக்னிக் உயர்நிலைப் பள்ளியில் கட்டடக்கலை வரைதல் (ஆர்கிடெக்ச்சரல் ட்றாயிங்) படித்த அவர், அங்குள்ள மாணவர்களுக்கு முன்னால் ஒரு முன்மாதிரியான கிறிஸ்தவ வாழ்க்கையைக் காட்டினார்.
பின்னர் அவர் வீட்டன் கல்லூரியில் பயிலும் போது, 1948 ஆம் ஆண்டில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த சர்வதேச மாணவர் மிஷனரி மாநாட்டில் கலந்து கொண்டார். அந்நேரத்தில் தென் அமெரிக்காவின் காடுகளில் வாழும் பழங்குடியினருக்கு நற்செய்தியை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்தார். பின்னர் அவர் 1950 ஆம் ஆண்டில் ‘வில்லியம் கேமரூன் டவுன்செண்டின்’ ‘கேம்ப் விக்லிஃப்பில்’ சேர்ந்து, உள்ளூர் மொழியை எழுத்து வடிவ சின்னங்களாக மாற்றுவது எப்படி என்று கற்றுக்கொண்டார். அங்கிருக்கும்போது ஈக்வடாரில் உள்ள ஆகா இந்தியன்ஸைப் பற்றி கேள்விப்பட்ட ஜிம் அவர்கள், அம்மக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க கர்த்தர் தன்னை அழைக்கிறார் என்பதை உணர்ந்தார்.
பல மாதங்கள் ஜெபத்தில் காத்திருந்த பிறகு, ஜிம் தனது நண்பர் பீட் ஃப்ளெமிங்குடன் 1952 ஆம் ஆண்டில் ஈக்வடார் அடைந்தார். முன்பாக அவர்கள் ஷாண்டியா மிஷன் ஸ்தாபனத்தில் இருந்து, கெச்சுவா இந்தியன்ஸிடையே பணியாற்றினர். அங்கு செய்த ஒரு பயனுள்ள ஊழியத்திற்குப் பிறகு, ஹூரானி பழங்குடியினரைச் சந்திக்க ஜிம் தயாரானார். ‘கொடூரமானவர்கள்’ என்று பொருள்படும் 'ஆக்கா' என்று அழைக்கப்படும் இந்த பழங்குடியினர் மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்பட்டனர். எனவே, அவர்களுடன் நட்பு கொள்வதற்காக, எட் மெக் கல்லி, ரோஜர் யூடெரியன், பீட் ஃப்ளெமிங் மற்றும் அவர்களது விமான ஓட்டி (பைலட்) நேட் செயிண்ட் ஆகியோருடன் இணைந்து விமானத்திலிருந்து வாளியில் பரிசுகளை வழங்கி பல மாதங்கள் முயன்றார் ஜிம். தங்கள் ஆரம்ப முயற்சிகளில் வெற்றிபெற்ற அவர்கள், இனி பழங்குடியினரை சந்திக்க முடியுமென்று நினைத்து, ஆகா பழங்குடியினரின் இடத்திற்கு அருகில் இறங்கினர். நான்கு நாள் காத்திருந்தப் பிறகு, பழங்குடியினரை சேர்ந்த நான்கிவி என்ற நபர் வேறு இரண்டு பெண்களுடன் அவர்களை சந்தித்தார். மிஷனரிகள் அவர்களுடன் நட்பு கொள்ள முயன்றனர். ஆனால் நாகரிகத்தை அறியாத அப்பாவி மக்கள் அந்த மிஷனரிகளை தங்களுக்கு அச்சுறுத்தலாக கருதினர். அந்த மூன்று பழங்குடியினர்கள் திரும்பிச் சென்று மற்றவர்களிடம் ஒரு தவறான செய்தியைக் கொடுத்ததால், ஆறாம் நாளில் அந்த ஐந்து மிஷனரிகளை பழங்குடி மக்கள் தாக்கி, கொடூரமாகக் கொன்றார்கள்.
என்றபோதிலும் ஆக்கா மிஷன் இத்துடன் முடிவு பெறவில்லை, இது ஒரு ஆரம்ப நிகழ்வு மட்டுமே. இந்த சம்பவம் நடந்த இரண்டு வருடங்களுக்குள், ஜிம்மின் மனைவி எலிசபெத் எலியட், அவர்களின் மகள் வலேரியுடன் தனது கணவர் இறந்த அதே கிராமத்திற்கு சென்று சேவையை தொடர்ந்தார். எலிசபெத்தின் விலைமதிப்பற்ற எண்ணில்லாத சேவைகள் மூலம் கணக்கற்ற ஆக்கா மக்கள் கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பிரியமானவர்களே, புறஜாதியினருக்கு சுவிசேஷத்தை அறிவிக்க நீங்கள் ஜெபித்து, ஆயத்தப்படுகிறீர்களா?
“கர்த்தாவே, உம்மை தள்ளிவிட்டு தூரம்போனவர்களை உமது அன்பினாலே சந்திக்க என்னை ஆயத்தப்படுத்தும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
ஜார்ஜ் ஃபாக்ஸ் George Fox
மண்ணில் : ஜூலை 1624
விண்ணில் : 13-01-1691
ஊர் : ஃபென்னி டிரேடன், லீசெஸ்டர்ஷைர்
நாடு : இங்கிலாந்து
தரிசன பூமி : இங்கிலாந்து
கிறிஸ்டோபர் ஃபாக்ஸின் மூத்த மகனான ஜார்ஜ் ஃபாக்ஸ், ஒரு நெசவு தொழிலாளர் மற்றும் ஃபென்னி டிரேடன் கிராமத்தில் ஒரு சபையின் மேற்பார்வையாளராகவும் (சர்ச்வார்டனாகவும்) அவர் பணியாற்றினார். உள்ளூர் செருப்பு தயாரிப்பாளரிடம் பயிற்சி பெற்ற அவர், கம்பளி வர்த்தகத்தில் விடாமுயற்சியுடன் செயல்பட்ட ஒரு நல்ல உழைப்பாளி. சிறுவயதிலிருந்தே மத சம்பந்தமான மனப்பான்மையைக் கொண்டிருந்த அவருடைய வாழ்க்கையில் வேதாகமம் முக்கிய பங்கு வகித்தது. திருச்சபையின் மதகுருக்களுடன் அவர் பெரும்பாலும் மத சம்பந்தமான விவாதங்களில் நீண்ட நேரம் செலவிடுவார். ஆனால் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட மக்களின் பாவ வாழ்க்கையை பார்த்து மனம் வருந்தினார். அத்தகைய நிலையில் கிறிஸ்தவர்கள் இருப்பது அவரது மனதில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியது. ஆவிக்குரிய போராட்டங்களினால் மனம் சோர்வுற்ற அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி லண்டனுக்குச் சென்றார். அங்கு அவர் பல மதபோதகர்களை மன அமைதிக்காக சந்தித்தார்.
மனிதர்கள் மூலம் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தபோது அவர் ஆண்டவரிடம் திரும்பினார். கர்த்தரின் பிரசன்னத்தில் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு, இறுதியாக கர்த்தருடைய ஒளி அவர் உள்ளத்தில் பிரகாசித்தது. ஆகவே, 1647 ஆம் ஆண்டில் மத சடங்குகளை புறக்கணித்து ஆவிக்குரிய மாற்றத்தை அடையும் படி தைரியமாக மக்களுக்கு பிரசங்கிக்கத் தொடங்கினார். மதக் கல்வியை விட பரிசுத்த ஆவியின் அபிஷேகம் கொண்டிருப்பது ஊழியத்திற்கு தகுதியானது என்று அவர் உறுதியாக நம்பினார். கர்த்தருடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்ட ஜார்ஜின் போதனைகள் பல கிறிஸ்தவ சபைகளில் எழுப்புதலைக் கொண்டுவந்தன. நான்கு வருடங்களுக்குள் ஆண்டவரைப் பற்றிய வாஞ்சை அதிகமாக கொண்டிருந்த இளைஞர்கள் அவருடன் சேர்ந்து கொண்டனர். இந்த குழு தங்களுக்கு "ஃபிரெண்ட்ஸ் ஆஃப் ட்ரூத்" (சத்தியத்தின் நண்பர்கள்) என்ற பெயரை வைத்துக்கொண்டனர். ஆனால், அவர்களை வெறுப்பவர்கள் “குவாக்கர்கஸ்” (கலகம் பண்ணுபவர்கள்) என்று அவர்களை கேலி செய்தனர். என்றபோதிலும், ஆயிரக்கணக்கான மக்கள் மனமாற்றமடைந்து, தங்களை ஆவியில் புதுப்பித்துக்கொண்டனர்.
ஜார்ஜ்யின் போதனை பொதுவானதாக இல்லாததால் அனைவராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் உலக அதிகாரிகளுக்கு மேலாக ஆண்டவரை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்ததினால், அது கிறிஸ்தவ சபைக்கு உள்ளேயும் வெளியேயும் அவருக்கு எதிரிகளை ஏற்படுத்தியது. திருச்சபையின் கோட்பாடுகளைப் பின்பற்றவில்லை என்று அவர் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார், பலமுறை தாக்கப்பட்டார், மேலும் எட்டு முறை சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருடைய போதனைகளால் மாறினவர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது, அவரைத் துன்புறுத்தும் சூழ்நிலைகளும் அதிகமானது. ஆயினும், ஜார்ஜ் எதற்கும் பின்வாங்காமல் தைரியத்துடன் நின்று, சத்தியத்திற்காக அனைத்தையும் சகித்தார். அவர் ஒரு கடினமான போதகராக இருந்தபோதிலும், மற்றவர்களை சம்மதபடுத்தும் ஒரு மென்மையான போதகராகவும் இருந்தார். சேவையின் நிமித்தம் ஐரோப்பா, வெஸ்டிண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விரிவாகப் பயணம் செய்த பின்னர் ஜார்ஜ் தனது வாழ்க்கையின் கடைசி நாட்களை தனது எழுத்துக்கள் மூலம் கிறிஸ்துவர்களை ஊக்கப்படுத்த பயன்படுத்தினார்.
பிரியமானவர்களே, நீங்கள் பாரம்பரிய சடங்காசார கிறிஸ்தவ வாழ்க்கையை விட்டுவிட்டீர்களா?
“கர்த்தாவே, சடங்காசார பக்தியிலிருந்து என்னை விடுவித்து, சத்தியத்தை உண்மையாக நாடும்படி என்னை மாற்றும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
ஐசக் ஜோக்ஸ் Isaac Jogues
மண்ணில் : 10.01.1607
விண்ணில் : 18.10.1646
ஊர் : ஓர்லீன்ஸ்
நாடு : பிரான்ஸ்
தரிசன பூமி : வட அமெரிக்கா
ஐசக் ஜோக்ஸ் வட அமெரிக்காவில் ஊழியம் செய்த ஒரு பிரெஞ்சு மிஷனரி ஆவார். லா ஃப்ளெச் கல்லூரியில் தத்துவத்தைப் பயின்ற அவர் ரூயெனில் ஆசிரியராக பணியாற்றினார். அச்சமயத்தில், மிஷனரி ஊழியத்தின் மேல் அவர் கொண்டிருந்த வாஞ்சை அவரை இறையியல் படிக்க தூண்டியது. எனவே பாரிஸில் உள்ள கோலேஜ் டி கிளெர்மான்ட் கல்லூரியில் பயின்ற அவர் 1936 ஆம் ஆண்டில் ஒரு போதகராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் தனது சேவையின் முதல் படியாக வட அமெரிக்காவில் ஹூரான் மக்களிடையே ஊழியம் செய்ய புறப்பட்டார்.
அவர்கள் ஹூரான் ஏரியை அடைந்த சிறிது நேரத்திலேயே, ஜாக்ஸ் ஒரு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இச்சமயத்தில் மிஷனரிகள் மற்றும் உள்ளூர் கிராம மக்களிடையே ஒரு தொற்றுநோய் பரவியது. அதற்கு மிஷனரிகளே காரணமென்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டி, அவர்களை மிரட்டினர். இருப்பினும், கர்த்தரின் கிருபையால் அவர்களால் உறுதியாக நிற்கவும் மேலும் ஹூரான் மக்களிடையே ஜாக்ஸ் தனது ஊழியத்தைத் தொடங்கவும் முடிந்தது. அவர் அவர்களின் மொழியைக் கற்றுக் கொண்டார், அவர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தன்னை பழக்கப்படுத்திக் கொண்டார். ஆறு ஆண்டுகளாக ஜாக்ஸ் கிராமம் கிராமமாக சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பல உள்ளூர் மக்களை கிறிஸ்துவை நோக்கி நடத்தினார்.
அந்நாட்களில் ஹுரான் பழங்குடியினருக்கு ஈராக்வாஸில் உள்ள மொஹாக் பழங்குடியினருடன் எப்போதும் போர் நடந்துகொண்டிருந்தது. ஒருமுறை மொஹாக் பழங்குடியினர் ஜாக்ஸ் மற்றும் கிறிஸ்தவர்களான ஹூரான் மக்களில் சிலரைத் தாக்கி அவர்களை கைதிகளாக சிறைபிடித்தனர். அவர்களில் சில ஹூரான் மக்கள் எதிரிகளின் கைகளில் உயிரை இழந்தனர். ஜாக்ஸ் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, மற்றும் அவரது கட்டைவிரல்கள் வெட்டப்பட்டன. இத்தகைய துன்பங்கள் இருந்தபோதிலும் அவர் தொடர்ந்து சுவிசேஷத்தின் வெளிச்சத்தை அறிவித்தார். இதன் மூலமாக 60 க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். அவர் சிறைப்பட்ட 13 மாதங்களுக்குப் பிறகு டச்சு வணிகர்களால் மீட்கப்பட்டு, அவர் மீண்டும் பிரான்சுக்கு அழைத்து செல்லப்பட்டாலும், அவரது இதயத்தில் மட்டும் வட அமெரிக்காவுக்கு செல்ல மிகுந்த தாகம் இருந்தது.
எனவே. 1646 ஆம் ஆண்டில் ஜாக்ஸ் ஈராக்வாஸ் பகுதிக்குத் திரும்பி சென்றார். போராட்டங்களுடன் அமைதி இல்லாத பழங்குடியினரிடையே சமாதானத்தை நிலைநாட்ட முயன்றார். அவரது முயற்சிகளினால் எதிரிகளான பழங்குடியினருக்கு இடையில் போக்குவரத்து மற்றும் வர்த்தக உறவுகள் தற்காலிகமாக நிலவியது. இருப்பினும், சில பழங்குடியினர் மட்டும் மிஷனரிகளை ஒரு வெளிநாட்டு மந்திரவாதத்தைப் பயிற்றுவிப்பவர்களாகக் கருதினர். அந்த நேரத்தில் மற்றொரு தொற்றுநோய் வெடித்ததும், ஒசெர்னெனனில் பயிர் சேதம் ஏற்பட்டதும் ஜாக்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் தான் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். அத்தகைய நிலைமைகளில் சூழ்நிலையில் அவர்கள் ஒரு நாள் அவர்களைப் பார்க்க வரவேண்டும் என்று ஜாக்ஸை அழைத்தனர். அவர் வந்ததும் ஒரு கோடாரியினால் அவரது மண்டையை அடித்து நொறுக்கினர்.
பிரியமானவர்களே, மரணத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளிலும் கர்த்தரை சேவிப்பதற்கு நீங்கள் எவ்வளவு வாஞ்சை கொண்டிருக்கிறீர்கள்?
“கர்த்தாவே, உம்முடைய அன்பை அறிவிக்கும் ஒரு வல்லமையான பாத்திரமாக என்னை மாற்றும். ஆமென்!"
BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
Thanks for using my website. Post your comments on this