Type Here to Get Search Results !

Vedanayagam S. Azariah Life History | ஃபெலிக்ஸ் மான்ஸ் சரித்திரம் | Christian Five Missionaries Life History | வேதாகம புனிதர்கள் சரித்திரம் | Jesus Sam

வேதநாயகம் எஸ். அசரியா Vedanayagam S. Azariah

மண்ணில்: 17.8.1874
விண்ணில்: 01.01.1945
ஊர்: வெள்ளான்விளை
நாடு: இந்தியா
தரிசன பூமி: இந்தியா

வேதநாயகம் சாமுவேல் அசரியா கிறிஸ்தவ ஆங்கிலிக்கன் பாதிரியாரான தாமஸ் வேதநாயகம் என்பவரின் மகன் ஆவார். அவர் தன் பதினைந்தாம் வயதில் தந்தையை இழந்த போதிலும் தன் தாயால் கண்டிப்பான கிறிஸ்தவ நெறிமுறைகளில் வளர்க்கப்பட்டார். அவர் தன் பள்ளிப்படிப்பை கிறிஸ்தவ மிஷனரி போர்டிங் பள்ளியில் படித்த பின்பு கணிதத்தில் பட்டப்படிப்பை மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் தொடர்ந்தார். அவர் தன் உடல்நலக்குறைவால் பட்டப்படிப்பை தொடர முடியாத போதிலும் தலைமை குணங்கள் பெற்ற திறமை வாய்ந்த இளம் வாலிபராக திகழ்ந்தார்.

அசரியா தன்னுடைய 19ஆம் வயதில் இளம் ஆண்கள் கிறிஸ்தவர் சங்கத்தின் (YMCA)உறுப்பினர் ஆனார். மேலும் அவர் தென்னிந்திய (YMCA) அமைப்பின் செயலாளராகவும் சுவிசேஷகராகவும் மாறினார். அவர் ஊழியத்திற்காக ஸ்ரீலங்காவில் உள்ள யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அங்குள்ள சக கிறிஸ்தவ மக்களால் முழுவதுமாக தாங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிற உள்நாட்டு மிஷனரி சொசைட்டி ஆழமான தாக்கம் ஏற்பட்ட இந்தியாவில் உள்ள திருச்சபைகளின் வளர்ச்சியும் சாதாரணமான கிறிஸ்தவரை இயேசுவினிடமாய் வரவழைப்பதற்கு மேற்கத்திய செல் வாக்கை விட உள்நாட்டு தலைமைத்துவம் முக்கியம் என உணர்ந்தார். அசரியாவின் ஊக்கமான ஜெபத்திற்கு பிறகு K.T. பவுலுடன் இணைந்து IMS ஐ நிறுவினார். இந்தியாவில் மட்டுமல்லாது ஆஃப்கானிஸ்தான் திபெத் மற்றும் நேபாளம் ஆகியவற்றிலும் நற்செய்தியை பரப்பும் தரிசனத்தோடு இந்தியாவில் உள்ள முக்கியமான சுவிசேஷகர்களுடன் அசரியா அவர்கள் ஒருங்கிணைந்ததால் தேசிய மிஷனரி ஸ்தாபனம் நிறுவப்பட்டது.

1909ஆம் ஆண்டில் அசரியா YMCA உடனான தனது பதவியை விட்டு விலகினார். பின்னர் ஆங்கிலிக்கன் பாதிரியாராக நியமிக்கப்பட்டார் மேலும் தோர்ணக்கல் மறை மாவட்டத்தின் உடைய முதல் பிஷப்பாக பதவி ஏற்றார். தன்னுடைய மனைவியான அன்பு மாரியம்மாள் உடன் இணைந்து மாட்டு வண்டியிலும் மிதிவண்டியில் பயணித்து பரந்து விரிந்த மறை மாவட்டம் முழுவதும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து பல திருச்சபையை நிறுவினார் .அங்கு நான்கு அரக்கர்களாகிய பாவம், வியாதி, கடன், குடி ஆகியவற்றை கண்டித்து உபதேசிப்பது மூலம் அவருடைய கிராமத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தார். மேலும் 2000 கிராம போதகர்களையும், 250 குருமார்களையும் 1935க்குள் உருவாக்குவதற்கு அவருடைய இந்திய சமுதாயத்தின் அடிமட்டத்தை தொடவேண்டும் என்ற தரிசனம் ஊன்றுகோலாக அமைந்தது. அவர் ஒரு பிரபலமான கிறிஸ்தவ தலைவராக இருந்து கொண்டு அதே நேரத்தில் ஒரு பாசமிக்க தனி மனிதனாகவும் திகழ்ந்தார். மக்கள் அன்பாக அசறியாவை “தண்டிகாரு” அப்பா என்று அழைத்தனர்.

பிரியமானவர்களே, உங்களுடைய வாழ்க்கையின் சாட்சி மக்களிடையே ஊழியத்திலும் சமுதாயத்திலும் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

“கர்த்தாவே, சமுதாய மாற்றத்தையும், ஆவிக்குரிய மாற்றத்தையும் கொண்டு வரும் கருவியாக என்னை பயன்படுத்தும். ஆமென்!

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்


புனித பேசில் Saint Basil

மண்ணில்: கி.பி 330
விண்ணில்: கிபி 379
ஊர்: சிசெரியா
நாடு: கப்பத்தோக்கியா
தரிசன பூமி: சிசெரியா

சிசெரியா பட்டணத்தை சேர்ந்த புனித பேசில் "மாமனிதர் பேசில்" என்றும் அழைக்கப்பட்டார். அவர் மத்திய ஆசியாவின் மைனரை சேர்ந்த சிசெரியா பட்டணத்தை சேர்ந்த பிஷப் ஆவார். துருக்கியில் கப்பத்தோக்கியவில் உள்ள செல்வம் வாய்ந்த மேன்மை மிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். அவர் சிசெரியா, ஏதென்ஸ் கான்ஸ்டாண்டிநோபிள் போன்ற பட்டணங்களில் கல்வி பயின்றார். சட்டத்தை கற்பித்த ஒரு வருடத்திற்கு பின் வாழ்வின் உலக கவலைகளை விட்டு துறவர வாழ்க்கையை வாழ தீர்மானித்தார். சிரியா எகிப்து தேசத்திலுள்ள மடாலயத்தில் வசிக்கும் துறவிகளின் சிக்கனமான வாழ்க்கையை கற்றுக் கொள்ள பயணம் மேற்கொண்டார். பின்னர் பொந்து என்னும் இடத்திற்கு திரும்பி வந்தபோது ஐரீஸ் என்னும் ஆற்றங்கரையில் மடாலயத்தை நிறுவினார். அந்த மடாலயத்தில் வசிக்கும் துறவிகளின் வேலையையும் தொழுகையையும் சமநிலைப்படுத்த தாக்கத்தை உண்டு பண்ணினார்.

கிழக்கு மரபுவழி திருச்சபையிலும் இடைக்கால கிறிஸ்தவ சமயத்தில் பேசில் ஒரு முக்கியமான நபராக இருந்தார். அப்பொழுது திருச்சபைக்கு எதிராக எழுந்த நான்காம் நூற்றாண்டின் ஏரியானிசத்தினுடைய மத எதிர் கொள்கைகளை அவர் உறுதியாக எதிர்த்தார். ஏரியானிசம் என்பது அலெக்சாந்திரியா பட்டணத்தை சார்ந்த ஏரியஸ் என்னும் திருச்சபை மூப்பர் உருவாக்கியது. தெய்வத்துவத்தை மறுதலித்த ஒரு தத்துவம் ஏரியானிசம். அப்பொழுது இருந்த பேரரசர்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த இயக்கமாக இருந்த போதிலும் பேசில் விடாப்பிடியாக அதை எதிர்த்தார்.

பேரரசர் வேலன்ஸ் மரபுவழி விசுவாசிகளை துன்புறுத்திய அச்சமயத்தில் பேசில் தொடர்ந்து உறுதியாக நின்று சத்தியத்தை பாதுகாத்தார். கிபி 307 இல் சிசெரியாவின் பிஷப்பாக பேசில் புனிதர் ஆக்கப்பட்டபோது அம்மறைமாவட்டம் ஆவிக்குரிய ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வளம் மிக்கதாய் மாறியது. அவர் ஆயர் பராமரிப்பில் அயராது உழைத்தார். திரித்துவத்தின் கருத்தை திருச்சபை உபதேசமாக பெரிய கூட்டங்களில் ஒரு நாளில் இருமுறை பிரசங்கித்து அதை விளம்பரப்படுத்தினார். பேசில் கடுமையான அதிகார மனப்பண்பு உள்ளவராக இருந்தாலும் அவர் உதாரகுணம் உடையவராகவும் அனுதாப மிக்கவராகவும் இருந்தார். சுவிசேஷத்தைப் பிரசங்கித்தது மட்டுமின்றி அவர் தொண்டு நிறுவனங்களையும் தாங்கினார் மற்றும் சமூக நீதியை அவர் ஊக்குவித்தார். அவருடைய பிரசங்கங்கள் முக்கியமாக சமுதாய பிரச்சனைகளையும் நெறிமுறைகளையும் மையப்படுத்தியதாக இருந்தது. தேவையுள்ளவர்களுக்கும் ஏழைகளுக்கும் அவர் மருத்துவமனையை கட்டினார். மேலும் எல்லோராலும் அறியப்பட்ட புகழ்பெற்ற எழுத்தாளர் ஆக இருந்த பேசிலின் எழுத்துக்கள் கிழக்கிந்திய மரபுவழி திருச்சபையில் துறவறம் வளர்ச்சி பெறுவதற்கு ஒரு ஆழமான ஊன்றுகோலாக அமைந்தது.

பிரியமானவர்களே, கர்த்தருடைய ஊழியத்திற்கும் அவரை சேவிப்பதற்கும் எந்த உலக கவலையானது உங்களுக்கு தடையாக உள்ளதா?

 “கர்த்தாவே, எல்லா உலக கவலைகளில் இருந்தும் என்னை முழுவதுமாக கழுவி உம்மை தாழ்மையுள்ள ஆவியோடு பணிந்துகொள்ள என்னையே நான் ஒப்படைக்கிறேன். ஆமென்.”

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்


டமியான் டி. வெஸ்டர் Damien de Veuster
மண்ணில்: 03.01.1840
விண்ணில்: 15.04.1889
ஊர்: டிரம லோ
நாடு: பெல்ஜியம்
தரிசன பூமி: ஹவையன் தீவு

பெல்ஜியம் தேசத்தில் டிரமலோ பகுதியில் பிறந்த ஜோசப் வெஸ்ஸ்டர் டமியான் வெஸ்டராக பெயர் மாற்றப்பட்டு தந்தை டமியான் என்று அழைக்கப்பட்டார். அவருக்கு பதிமூன்று வயது இருக்கும்போது தன் பள்ளிப்படிப்பை விட்டு தன் குடும்ப பண்ணையில் வேலை செய்தார். அவர் தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் நாலாம் நூற்றாண்டின் மருத்துவரும் தியாகியுமான டமியான் என்பவருடைய பெயரை தனக்காக பொருத்திக்கொண்டு இயேசு மற்றும் மரியா ஆகியோரின் திரு இருதயங்களின் சபையில் அங்கத்தினராக சேர்ந்தார். 1863 ஆம் ஆண்டில் அவருடைய சகோதரன் ஹவாயா தீவுக்கு ஊழியத்துக்கு செல்ல இருந்தபோது சுகவீனம் அடைந்தால் அவருடைய இடத்திற்கு கடந்து சென்று அவருடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஹொனலூலு பகுதிக்கு சென்று 1864 ஆம் ஆண்டு தமியான் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார்.

ஹவாய் இன் அரசாங்கம் ஹவாயில் உள்ள மொளகாய் தீவில் தொழுநோய் மிக அதிக அளவில் பரவியதால் அதை தடுக்கும் பொருட்டு கடுமையான முறையில் மக்களை தனிமை படுத்தி இருந்தது. மக்களின் பரிதாப நிலையைக் கண்டு மனம் நெகிழ்ந்து. தொழுநோயாளிகளுக்கு டமியான் தொண்டு செய்ய தீர்மானித்தார். சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு தவறாக நடத்தப்பட்ட மக்களிடையே நற்செய்தியை கொண்டு செல்ல வேண்டும் என்று விழைந்தார். மொலோகையை சேர்ந்து ஆறு மாதம் ஆன பிறகு தனது சகோதரனுக்கு எழுதிய கடிதத்தில் தொழுநோயாளிகளை இயேசுவின் பக்கமாய் திருப்பும் படியாக என்னையே ஒரு தொழுநோயாளியாக மாற்றிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் தொழுநோயாளிகளின் சரீரப் பிரகாரமான ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சி பூர்வமான எல்லாத் தேவைகளையும் சந்தித்தார். தொழுநோயில் துன்பப்பட்டுக் கொண்டிருந்தவர்களுடைய அடிப்படை வசதிகளை சந்திக்கும் படியாக அனேக திட்டங்களை மேற்கொண்டார். அந்தத் தீவில் திருச்சபைகள் பள்ளிகள் அனாதை ஆசிரமங்கள் அவரால் நிறுவப்பட்டதால் அங்குள்ள தொழு நோயாளிகளின் வாழ்க்கை தரம் துரிதமாகவும் கணிசமாக மேம்படுத்தப்பட்டது.

குறிப்பாக தொழுநோயாளிகளின் ஆத்தும இரட்சிப்பை குறித்து டமியான் ஆழ்ந்த கவலை கொண்டிருந்தார். உலகம் அவர்களை வேறு விதமாக பார்த்தாலும் தேவனுடைய பார்வையில் தொழுநோயாளிகள் விலையேறப்பெற்றவர்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைத்தார். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது தொற்றுநோய்க்கான எச்சரிக்கையை அவர் அறிந்திருந்தாலும் தொழுநோயாளிகளின் மேலிருந்த அவருடைய அன்பு மாறவில்லை. 11 வருட சேவைக்குப் பிறகு தொழுநோய் அவரைத் தொற்றிக் கொண்டது ஆனாலும் அவர் அந்த தீவை விட்டு சிகிச்சைக்காக செல்ல மறுத்தார் . 1984 ஆம் வருடம் வரை தொடர்ந்து தொழுநோயாளிகள் மேம்பாட்டிற்காக கடைசி மூச்சு வரை பணிபுரிந்தார்.

 பிரியமானவர்களே! தனிமையானவர்களையும், உங்களுடைய அயலகத்தில் உள்ள மறக்கப்பட்டவர்களையும் நீங்கள் உற்சாகப்படுத்துகிறீர்களா? 

“கர்த்தாவே, டமியான் போல மற்றவர்களுக்காக தொண்டு செய்ய அர்ப்பணிக்கப்பட்ட இருதயத்தை எனக்குத் தாரும். ஆமென்!”

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்


புனித ஸ்டீஃபன் (ஸ்தேவான்) Saint Stephen

மண்ணில் : ~ கி.பி. 5
விண்ணில் : ~ கி.பி. 34
நாடு : இஸ்ரேல்
தரிசன பூமி : எருசலேம்

இயேசு கிறிஸ்துவின் சீடராக இருந்தால் செலுத்தப்பட வேண்டிய விலைகிரயம் எவ்வளவு பெரிதானது என்பதை இரத்த சாட்சிகளாக மரித்தவர்கள் நமக்கு நினைவூட்டுகிறார்கள். அவர்கள் கிறிஸ்துவை கைவிட்டு சுற்றியுள்ள மக்கள் பின்பற்றும் மதத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இரத்த சாட்சிகளாக மரித்திருக்க மாட்டார்கள். ஆயினும், அழிந்து போகும் இந்த உடலில் உலக பிரகாரமான வாழ்க்கையோடு ஒட்டிக்கொள்வதை விட, கிறிஸ்துவைக் கொண்டிருந்தவர்களாக மரிப்பது மிகவும் விலையேறப்பெற்றதாக அவர்கள் கருதினர். ஆரம்பகாலத்திலிருந்தே செலுத்தப்படுகிற இந்த விலைகிரயமானது பலரின் வாழ்க்கையினால் இன்றைக்கும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு ஆராய்ச்சி அறிக்கையின்படி, 21 ஆம் நூற்றாண்டில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 11 கிறிஸ்தவர்கள் இரத்த சாட்சிகளாக மரிக்கின்றனர்! தமிழ் வேதாகமத்தில் ஸ்தேவான் என்று குறிப்பிடப்பட்ட ஸ்டீஃபன், அந்த அற்புதமான இரத்த சாட்சிகளின் குழுவில் முதன்மையாக திகழ்ந்தார்.

எருசலேமில் ஆரம்பகால திருச்சபையில் ஸ்தேவான் உதவி ஊழியக்காரராக இருந்தார். அவர் பரிசுத்த ஆவியினாலும், ஞானத்தினாலும், கிருபையினாலும், விசுவாசத்தினாலும், வல்லமையினாலும் நிறைந்தவராய் இருந்தார். அந்நாட்களிலே, கிரேக்க மொழி பேசும் யூத விதவைகள் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று சர்ச்சை சபையில் எழுந்தது. எனவே, அனைவருக்கும் ஏற்ற வகையில் பந்திவிசாரணை செய்வதற்கு தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் ஸ்தேவான் ஒருவர். இவ்வாறு ஆரம்ப நாட்களில் ஊழியத்தில் உதவியாளராக ஸ்தேவான் ஈடுபட்டார். பின்னர் அவர் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார். அவர் ஒரு மிக சிறந்த சொற்பொழிவாளர். பெரும்பாலும் இயேசுவே கிறிஸ்து என்று ஜெப ஆலயத்தின் தலைவர்களுடன் வாதிட்டார். யூதர்களில் மாறினவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது, யூத அதிகாரிகள் மோசேக்கும் பரிசுத்த ஆலயத்திற்கும் விரோதமாக ஸ்தேவான் தூஷண வார்த்தைகளை பேசினார் என்று குற்றம் சாட்டினர். அவர்கள் எருசலேமில் உள்ள ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக ஸ்தேவானை இழுத்துக்கொண்டுபோனப் போது, பொய்ச்சாட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் அவர் சமாதானமாக இருந்தார். ஆலோசனை சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவரைப் பார்த்தபோது, அவரது முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.

ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக அவர் செய்த பிரசங்கத்தில் கடன இருதயமுள்ள பாவிகளுக்கும் தேவன் காட்டிய ஏராளமான கிருபையை பற்றியும், அவருடைய கிருபையை நாம் புறக்கணித்து, நம்முடைய இருதயங்களை கடினப்படுத்திக்கொண்டால் அதனால் கிடைக்கும் தண்டனைப்பற்றியும் நினைவுபடுத்தினார். இஸ்ரவேலரின் வரலாறும், அவர்கள் சீக்கிரமாய் வழிதப்பி விக்கிரகாராதனைக்கு எவ்வாறு திரும்பினார்கள் என்பதையும், அவர்கள் கொண்டிருந்த கீழ்ப்படியாமை பற்றியும் ஸ்தேவான் அவர்களுக்கு நினைவுபடுத்தினார். பின்பு அவர் தன்னைத் துன்புறுத்தியவர்களை "வணங்காக் கழுத்துள்ளவர்களே" என்று சொல்லி கண்டித்தார். அவருடைய வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் மூர்க்கமடைந்து, அவரைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள். ஆனால் ஸ்தேவான், பரிசுத்த ஆவியிலே நிறைந்ததவனாய், "அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்" என்றார். அப்பொழுது அவர்கள் உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டு அவரை நகரத்துக்குப் புறம்பே தள்ளி அவரைக் கல்லெறிந்தார்கள். அந்த நேரத்திலும் ஸ்தேவான் "கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்" என்றும், "ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்" என்றும் மிகுந்த சத்தமிட்டுச் சொல்லி முதல் கிறிஸ்துவ இரத்த சாட்சியாக மரித்தார். கிரேக்க மொழியில் ‘கிரீடம்’ என்று பொருள்படும் அவரது பெயருக்கு ஏற்றாற்போல ஸ்தேவான் தனது விசுவாசத்தின் மூலம் கர்த்தரிடமிருந்து தனது கிரீடத்தைப் பெற்றுக்கொண்டார்.

பிரியமானவர்களே, ஏழைகளுக்கு ஊழியம் செய்வதற்கு தாழ்மையுள்ளவராகவும், கிறிஸ்துவுக்காக எழுந்து நிற்க தைரியமுள்ளவர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்களா? 

“கர்த்தாவே, மரணத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் உமக்காக உறுதியாக நிற்க தைரியத்தையும் தாழ்மையும் தந்து என்னை உருவாக்கும். ஆமென்!”

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்


ஃபெலிக்ஸ் மான்ஸ் Felix Manz
மண்ணில் : 1498
விண்ணில் : 1527
ஊர் : சூரிச்
நாடு : சுவிட்சர்லாந்து
தரிசன பூமி : சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள சுவிஸ் ப்ரதரென் சபையின் நிறுவனர்களில் ஒருவரான ஃபெலிக்ஸ், அந்த சபையின் முதல் இரத்த சாட்சியும் ஆவார். அவர் எபிரேய, கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளில் அறிஞராக இருந்தார். அவரது தந்தை சூரிச்சில் உள்ள கிராஸ்மான்ஸ்டர் சபையில் பாதிரியாராக இருந்தார்.

சுவிட்சர்லாந்தில் ஒரு கிறிஸ்தவ சீர்திருத்தவாதியான உல்ரிச் ஸ்விங்லி 1519 ஆம் ஆண்டில் சூரிச் நகரத்திற்கு வந்தார். அப்பொழுது ஃபெலிக்ஸ் அவருடன் ஆர்வத்துடன் சேர்ந்து, அவர் நடத்திய வேதபாட வகுப்புகளில் தவறாமல் கலந்து கொண்டார். அந்த குழுவில் இருந்த கான்ராட் கிரேபல் ஃபெலிக்ஸின் நெருங்கிய நண்பரானார். அவர்கள் இருவரும் சேர்ந்து வேதவசனங்களைப் படித்து, கத்தோலிக்க திருச்சபையில் வேததத்திற்கு புறம்பான நடைமுறைகளைக் கண்டித்தனர். குழந்தையாக இருக்கும்போதே ஞானஸ்னானம் கொடுப்பதையும் சபையின் மீது அரசின் அதிகாரத்தையும் ஃபெலிக்ஸ் உறுதியாகக் கண்டித்தார். ஞானஸ்நானம் பெறுவது பகுத்தறிவின் மூலமாகவோ அல்லது பயத்தின் மூலமாகவோ செய்யப்படக்கூடாது என்று அவர் நம்பினார். "கிறிஸ்தவர்" என்ற பெயர் இயேசு கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே பொருந்த வேண்டும் என்றும், ஞானஸ்நானம் பெற்ற அனைவரையும் கண்மூடித்தனமாக கிறிஸ்தவர்கள் என்று அழைக்கக்கூடாது என்றும் ஃபெலிக்ஸ் வாதிட்டார். ஒரு புதிய வெளிப்பாடாக வந்த அவரது கோட்பாடுகள் நெருப்பைப் போல பரவி, சூரிச் நகரத்தில் பலரின் இதயங்களை மாற்றின.

என்றபோதிலும், நகர்ப்புற சிந்தனையாளர்களின் சபை (சிட்டி கவுன்சில்) ஃபெலிக்ஸின் சீர்திருத்தவாத கருத்துக்கள் சபையின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருதினர். எனவே அதிகாரிகள் அவரைப் பிரசங்கிக்க தடை விதித்து, ஃபெலிக்ஸ் தனது நம்பிக்கைகளை திரும்பப் பெறும்படி கட்டளையிட்டனர். இருப்பினும், ஃபெலிக்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் அவ்வாறு செய்ய மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்பதைக் காட்ட ஒருவருக்கொருவர் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டு, கர்த்தருடைய பந்தியையும் அனுசரித்தார்கள். இந்த எழுப்புதல் காட்டுத்தீ போல பரவியதால், பலர் அதை ஏற்றுக்கொண்டு சம்மதத்துடன் ஞானஸ்நானம் பெற்றனர். ஃபெலிக்ஸ் மிகுந்த உற்சாகமாக பிரசங்கித்தார், மேலும் அவரது போதனைகளை மற்ற மொழிகளிலும் மொழிபெயர்த்தார். இதன் காரணமாக அவர் பல முறை கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

1526 ஆம் ஆண்டில் நகர்ப்புற சிந்தனையாளர்களின் சபை (சிட்டி கவுன்சில்) ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அது என்னவென்றால், பெரியவர்கள் மீண்டும் ஞானஸ்நானம் பெற்றால் தண்ணீரில் வீசப்பட்டு மரணமடைவார்கள். இந்த சட்டத்தால் முதல் இரத்த சாட்சியாக மரித்தவர் ஃபெலிக்ஸ் அவர்கள். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்போது சத்தியத்திற்காக மரணமடைய ஆயத்தமே என்று அவர் கூறினார். ஒரு கயிற்றில் கட்டப்பட்ட ஃபெலிக்ஸ், 'இன்டு தை ஹேண்ட்ஸ் ஐ கம்மெண்ட் மை ஸ்பிரிட்' (உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்) என்ற பாடலை சத்தமாக பாடிக்கொண்டே லிம்மாட் நதியில் மூழ்கிவிட்டார்.

பிரியமானவர்களே, நீங்கள் மதத்தினாலே கிறிஸ்தவர்களாக இருக்கிறீர்களா, அல்லது உண்மையான சீடர்களாக இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறீர்களா?

“கர்த்தாவே, பெயரளவிலான கிறிஸ்தவத்திலிருந்து என்னை விடுவித்து, உண்மையாக உம்மைப் பின்பற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்!"

BenjaminForChrist @ +91 9842513842
நன்றி: Dr. எப்சிபா செல்வம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.