🪦 🪦 🪦 🪦 🪦 🪦 🪦
*எழுப்புதல் வீரர்களின் வாழ்க்கைச் சுருக்கங்கள்*
*Chapter - 6*
*கிதியோன் ஓஸ்லே*
1762 - 1841
*(பகுதி-1)*
🪦 🪦 🪦 🪦 🪦 🪦 🪦
--------------------------------------------
Bio-Sketches By
Rev. LEONARD RAVENHILL
- தமிழில் -
Pr. Romilton
---------------------------------------------
*கிதியோன் ஓஸ்லே*
அயர்லாந்தின் ஜாண் வெஸ்லி
1762 லே அயர்லாந்தின் கால்வே நகருக்கு, இரண்டாவது முறையாகத் தன் ஆவிக்குரிய போர்ப்படைகளோடு வந்து இறங்கியிருந்தார் ஜாண் வெஸ்லி. ஆனால் அங்கே அந்த நாட்டின் தூரமான மூலை ஒன்றில் அதே நேரத்தில், ஆண் குழந்தை ஒன்று தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. அக்குழந்தை தான் பிற்காலத்தில், தாம் தமது பணிவிடை ஓட்டத்தை முடிக்கும்போது, தம்மைப் போன்ற அசுர பலத்தோடும் அக்கினியில் மூழ்கி எழுந்த ஸ்நானத்தோடும் தமக்குப் பின் எழுந்து வரும் என்று அப்போது அந்த மெத்தடிஸ்ட் வீரர் அறியாதிருந்தார். தேவனால் நிரம்பிய அந்த ஆத்தும ஆதாய வீரன் பிறந்தது அயர்லாந்தின் டன் மோரிலே. பெப்ரவரி 24, 1762.
*பெயர் : கிதியோன் ஓஸ்லே*
கிதியோன் ஓஸ்லேயின் தகப்பனாரின் ஒரு வித கல்ட் க்ரூப்பான "தெய்வத்துவத்தின் கொள்கைகளிலிருந்து" தன் மகனை மிகக்கவனத்தோடு பாதுகாத்து வைத்திருந்தாள் அவனது தாய். அவன் ஒவ்வொரு நாளும் படுக்கைக்குச் செல்லுமுன், அவள் அவனுக்குப் படித்துக்காட்டியதெல்லாம் Tillotsonன் பிரசங்கக் குறிப்புகளும், Young என்பவரின் "இரவின் நினைவுகள்" மற்றும் "கடைசி நாள்" போன்ற புத்தகங்களையே. அவைகள் அந்த இளம் மனதை விட்டு காலத்தால் அழியாமலேயே இருந்தன.
ஆனால் தானும் ஒரு மனந்திரும்பாத பாவி என்பதை Fourth Royal Irish Dragoo Guards மற்றும் தேவசேனை என்ற இரண்டு இராணுவங்களிலும் இணைந்து ஒரே நேரத்தில் போரிட்டுக் கொண்டிருந்த இராணுவ வீரன் ஒருவன் மூலம் எழுப்புதலடையாத வரை கிதியோன் ஓஸ்லே அறியாமலேயே இருந்தார். அவரது முதல் விழிப்புணர்வு வந்தது, பெயர் தெரியாத அந்த இராணுவ வீரன் மூலமாகவே.
அதன் பின் அவர் சந்தித்த ஜாண் ஹார்லேயின் பிரசங்கங்களும், அவரது அவரது அபிஷேகம் நிறைந்த வேத பாடங்களும் கிதியோனை ஆழமாய் அசைத்தன. 1791 மே மாத மத்தியில், தனது 29ம் வயதில், "இதோ எனது பாவத்தை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி இதுவே" என்று இயேசுவை அவர் கண்டு கொண்டபோது, அவரது பாவ இருளும் பாரமும் நீங்கி, நீண்ட நாளாய் அவர் தேடிக் கொண்டிருந்த தேவ சமாதானம் அவரைத் தேடி வந்தது.
ஒரு நாள் தன் வேத வகுப்புக் கூட்டங்களில் ஜாண் ஹார்லே, "உன் பாவங்களைக் கர்த்தர் மன்னித்து விட்டாரென்று நீ விசுவாசிக்கிறாயா?" என்று கேட்க, "ஆம், என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது, என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.." என்று சொன்னார் ஓஸ்லே.
அதன்பின் நடந்ததை விவரிப்பவன் யார்?
"அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளிகளே, இயேசுவின் இரத்தத்தினால் தாகம் தணிக்கப்படுவீர்களோ?" என்ற ஜாண் வெஸ்லியின் பாடலை, இந்தப் புரவியிலே (குதிரையில்) பிறந்த பிரசங்கி, (அதிகமாய்க் குதிரையிலேயே பிரயாணம் செய்பவர் என்பதால் இப்பெயர்) அயர்லாந்தின் அழகான கிராமப்புறங்களிலே குதிரையின் மேல் பாடிக்கொண்டு செல்லச் செல்ல, அங்கிருந்த வாயில்லா ஜீவன்களும் தங்கள் வேலிகளிலிருந்து தலைதூக்கிப் பார்க்குமாம்.
நான் சொல்லும் இந்த ஐரிஷ் ஊழியனுக்கு இருந்ததோ ஒரே ஒரு கண்.
ஆனால் "மனந்திரும்பாமல் ஒரு தரம் மரிக்கும் மனிதன் என்றென்றைக்கும் மரித்தவனே!" என்று மிகத் தெளிவாய் நித்தியத்தைப் பார்த்த இந்த ஒற்றைக்கண் மனிதனைப் போன்ற பார்வை எந்த இரட்டைக் கண் மனிதனுக்கும் இருந்ததில்லை.
அவனைப் பொறுத்தவரை மனிதர்கள் மனிதர்களல்ல, தசையாலும் இரத்தத்தாலும் மூடப்பட்ட ஆத்துமாக்கள். கிறிஸ்து தன்னுயிர் தந்த ஆத்துமாக்கள் - (எந்த ஆத்துமாக்களுக்காக கிறிஸ்து உயிர் கொடுத்தாரோ அந்த ஆத்துமாக்கள்). அவன் அவர்களைக் கிறிஸ்துவின் சிரசில் மணிமகுடமாகவும், அதே நேரம் நரக அக்கினிக்கு எரிபொருளாகவுமே பார்த்தான்.
அந்த அயர்லாந்தின் கரடுமுரடான பாதைகளிலே "இன்று இல்லையேல் என்றும் இல்லையே" என்று மனிதர்களைத் தேடி அவன் தலைதெறிக்க ஓடிய ஓட்டம், அவன் ஏறிச்சென்ற பாயும் குதிரையின் நாசியின் அக்கினிப்பொறிகளிலும், அவைகளின் நுரைதள்ளும் வாயிலும், வியர்த்து ஓடும் அதின் மேனியிலும் தெரிந்தது. ஒன்று, இவன் நரகத்தின் முன்னோட்டக் காட்சி ஒன்றை முன்னமே பார்த்திருக்க வேண்டும், அல்லது "அடுத்த 24 மணி நேரத்துக்குள் உலகமே உருண்டு பாதாளத்துக்குள் தள்ளுண்டு போகப்போகிறது" என்று இப்போது தான் காபிரியேல் வந்து இவனிடம் துண்டுச்சீட்டு கொடுத்து விட்டுப் போயிருக்க வேண்டும் என்று ஒருவன் நினைக்குமளவு இருந்தது அவனது ஓட்டமும் அணையாத ஆத்தும பாரமும். உம்முடைய வீட்டைக் குறித்த பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று இந்த ஆசீர்வதிக்கப்பட்டவன் சொல்வானானால் அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
~ தொடரும் ~
🪦 🪦 🪦 🪦 🪦 🪦 🪦
அடைபட்ட அக்கினி
Pr. Romilton
9810646981
🪦 🪦 🪦 🪦 🪦 🪦 🪦
🪦 🪦 🪦 🪦 🪦 🪦 🪦
*எழுப்புதல் வீரர்களின் வாழ்க்கைச் சுருக்கங்கள்*
*Chapter - 6*
*கிதியோன் ஓஸ்லே*
1762 - 1841
*(பகுதி-2)*
🪦 🪦 🪦 🪦 🪦 🪦 🪦
--------------------------------------------
Bio-Sketches By
Rev. LEONARD RAVENHILL
- தமிழில் -
Pr. Romilton
---------------------------------------------
*கிதியோன் ஓஸ்லே*
அயர்லாந்தின் ஜாண் வெஸ்லி
----------------------------
அமெரிக்காவின் பால் ரெவரோ, இங்கிலாந்தின் ஜாண் கில்ப்பினோ இவர்கள் இருவருமே அயர்லாந்தின் வெஸ்லி என்று அழைக்கப்பட்ட கிதியோன் ஓஸ்லேயின் அணையாத தாகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது என்பேன். ஒரு வேளை இங்கிலாந்தின் ஜார்ஜ் ஒயிட் ஃபீல்டுக்கும், அமெரிக்காவின் கில்பர்ட் டென்னென்ட்டுக்கும் இணையாக இவரை இணைக்கலாம். உறவின்படி ஆவியில் இவர் இவர்களின் சொந்தம் தான். இவரது ஐக்கியம் கிறிஸ்தவ வட்டங்களையெல்லாம் தாண்டி நிற்கும் அசாதாரண ஐக்கிய மது. அது இதயம் கொழுந்துவிட்டு எரிபவர்களின் அணையாத ஐக்கியம்.
லண்டனிலே புனித பவுல் தேவாலயத்தில் இருந்தது ஒரு மிக அழகான மார்பிள் பிரசங்க பீடம். அதே லண்டனிலிருந்த சிட்டி ரோடு ஆலயத்திலே ஜாண் வெஸ்லிக்கு இருந்தது, மிக அழகாய் பாலிஷ் செய்யப்பட்ட பிரசங்க பீடம் ஒன்று. இயேசுவோ, கிணற்றின் மேல் உறை வட்டத்தையே தமது பிரசங்க பீடமாய் மாற்றியிருந்தார். ஆனால் நமது ஹீரோ ஓஸ்லேயின் பீடமோ குதிரையின் முதுகிலிருக்கும் சேணமோ அல்லது கால் வைத்துக்கொள்ளப் பயன்படும் பாதமிதியோ தான்.
அந்தக் காலங்களின் அயர்லாந்திய வனப்புற கிராமப்பகுதிகளின் அந்தக் கல்வியறிவில்லாத மக்கள் மத்தியில் ஜெபத்தில் மூழ்கி எழுந்த ஓஸ்லேயின் மிஷினரிப் பயணம் ஒன்றை இங்கே சற்று கவனியுங்கள். அந்த நாட்களில் என்ன நடந்தது பாருங்கள்!
அங்கே கிராமப்புற ஆலயம் ஒன்றின் வெளியே குருவானவர் ஒருவர் அன்று நடக்கவிருந்த திருமணத்துக்காக மணமக்களின் வருகைக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறார். சற்று நேரத்தில் மணமகனையும் மணமகளையும் சுமந்து வந்த சாரட் வண்டி அங்கே வந்து நிற்க, அந்தப் பக்கமாய்ப் போய் கொண்டிருந்த நமது பிரசங்க வேந்தர் அவர்களை நோக்கி வருகிறார். அந்தத் திருமண நாளன்றே, அவர்களது திருமணத்துக்கும், உலக மகிழ்வுத் திளைப்புகளுக்கும் மேலாக நித்திய வாழ்வின் தீவிரத்தையும், இரட்சிப்பின் மேன்மையையும் மென்மையாக அவர்களுக்கு உணர்த்த, அவரது வார்த்தைகளால் தொடப்பட்ட மணமக்கள், தங்கள் திருமண உடன்படிக்கைக்கு முன்பாகவே முழந்தாள் படியிடுகின்றனர், பிழம்பாய் நிற்கும் அந்தப் பிரசங்கியின் முன் ஜெபிக்கும்படியாக..
அங்கிருந்து முன்னே செல்கிறது அவரது குதிரை. அங்கே ஒரு கல்லறைத் தோட்டம். அதின் மதில் சுவரிலிருந்து எட்டிப் பார்க்கிறார். தங்களுக்கு அன்பானவர்கள் தங்களை விட்டு எங்கே போனார்கள் என்ற பயத்தில் விறைத்து ஏங்கி ஏங்கி அழுது நிற்கும் மனிதர்களைப் பார்க்கிறார். சரீரம் உறைந்து போகும் அவர்களது அழுகைச் சத்தத்தையும் தாண்டி ஒலிக்கிறது அவர்களுக்காக அவர் செய்த அவரது ஜெபத்தின் ஓங்கிய சத்தம்.
அடுத்து பாருங்கள்! சந்தை வெளியில் கிதியோன் ஓஸ்லே நிற்பதை ! அங்கே பட்டப்பகலிலே வெட்ட வெளியிலே பெருங்கூட்ட நடுவிலே மனிதன் ஒருவன் தூக்கிலிடப்படக் காத்திருக்கிறான். நேரே அவனை நோக்கித் தூக்கு மேடைக்கு ஓடுகிறார் நமது பிரசங்கி. கை கால் நடுநடுங்க நின்று கொண்டிருக்கும் குற்றவாளிக்குக் கிறிஸ்துவின் அன்பையும் மன்னிப்பையும் நித்திய நம்பிக்கையையும் சுருக்கமாய்ச் சொல்லி, அங்கேயே அவனைக் கிறிஸ்துவுக்கு நேராய் வழிநடத்திவிட்டு, அந்தத் தூக்கு மேடையையே பிரசங்க மேடையாக்கி, அங்கே வேடிக்கை பார்க்க வந்த ஆயிரங்களை நோக்கி தேவனற்ற நித்திய ஆக்கினையின் அழிவை இடியாய் முழங்குகிறார்.
அவர் பேசப்பேச, தூக்கிலிடப்பட்ட மனிதனின் சரீரம் தூக்குக் கயிறுகளில் துடிதுடித்து ஊசலாடி இறங்குகிறது. கண்ணெதிரே நின்ற சாவின் முன், கவலையற்ற பாவிகளுக்கு நித்திய மரணத்தையும், நரக பாதாளத்தையும் பிரசங்கிக்கிறார் நமது பிரசங்கி. தேவனன்றி நம்பிக்கையற்ற நிலையில் மரிக்கும் ஒவ்வொரு ஆத்துமாவும் நித்தியத்தில் கதறும் கதறலையும் அலறலையும் அவர் அவர்களுக்கு முன் படமாய் விவரிக்க, காட்டுக் களியாட்டமாய் காட்சி காண வந்த கூட்டம் அழுகையும் கண்ணீருமாய்ப் புலம்பி மார்பில் அடித்துக் கொண்டு திரும்புகிறது.
~ தொடரும் ~
🪦 🪦 🪦 🪦 🪦 🪦 🪦
அடைபட்ட அக்கினி
Pr. Romilton
9810646981
🪦 🪦 🪦 🪦 🪦 🪦 🪦
🪦 🪦 🪦 🪦 🪦 🪦 🪦
*எழுப்புதல் வீரர்களின் வாழ்க்கைச் சுருக்கங்கள்*
*Chapter - 6*
*கிதியோன் ஓஸ்லே*
1762 - 1841
*(பகுதி - 3)*
🪦 🪦 🪦 🪦 🪦 🪦 🪦
--------------------------------------------
Bio-Sketches By
Rev. LEONARD RAVENHILL
- தமிழில் -
Pr. Romilton
---------------------------------------------
*கிதியோன் ஓஸ்லே*
அயர்லாந்தின் ஜாண் வெஸ்லி
----------------------------
அன்று ஓஸ்லே பேசியதை நேரில் கண்ட ஒருவர் பிறகு சொல்கிறார்: "ஓ! அன்று அவர் பிரசங்கித்ததை எப்படி நான் விவரிப்பேன்? அங்கே அந்தக் கூட்டத்துக்கு முன்பாகச் சாவு கூத்தாடிக் கொண்டிருக்க, உடைந்த அந்தப் பிரசங்கியின் அன்பின் பிரவாகமும், உள்ளத்தைத் தொடும் அவரது குரலின் மென்மையும், ஏங்கிய பார்வையும், ஊற்றாய்ப் பெருக்கெடுத்த கண்ணீரும், இரட்சகரண்டை அவர் விடுத்த அழைப்பின் கெஞ்சல்களும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை!
இந்த கிதியோன் ஓஸ்லே, பிரசங்கிப்பதற்காகவே முழு இங்கிலாந்தையும் தன் குதிரை மீது அமர்ந்தே பல தடவைகள் சுற்றி வந்திருக்கிறார். அயர்லாந்தைப் போலவே இங்கிலாந்திலும் தேவ வல்லமை மனந்திரும்புதலில் மட்டுமல்ல, கிரியைகளிலும் பலமாய் வெளிப்பட்டது. அவரது பிரசங்கத்தைக் கேட்ட கூட்டம் மகுடிக்கு அடங்கிய பாம்பாய் மயங்கி நின்றது. அவரது அன்பின் அழைப்புக்கோ, உரத்த சத்தத்துக்கோ, அதிர்ந்த குரலுக்கோ அசைவின்றிச் செத்த சிலையாகச் சில நேரங்களில் உட்கார்ந்திருக்கும் அந்தக் கூட்டம், சிறிது நேரத்திலேயே "இரட்சிப்பின் சமாதானத்துக்கு விழித்தெழுந்து நின்றது.
பற்றியெரிந்து பிரசங்கிக்கும் அந்த ஆத்துமா சந்தைவெளி, மந்தைவெளியிலிருந்து மட்டுமல்ல, ஆலய பீடங்களிலிருந்தும் அடிக்கடி அடித்துத் துரத்தப்பட்டது. அவர் காலத்துக் குருக்களும் மதவாதிகளும் அவர் போகுமிடமெல்லாம் தடைக்கற்களாய் நின்று முட்டுக்கட்டை போட, அவரோ அவைகளையெல்லாம் அனாயாசமாகத் தாவிப் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தார்.
நாட்களும் காலங்களும் செல்லச் செல்ல, அவரது ஆவி உற்சாகமாயிருந்தாலும், அவரது மாம்சமோ பலவீனமாகிப் போய்க்கொண்டேயிருந்தது. இருந்தும், குதிரைச் சவாரியையும் தெருப் பிரசங்கத்தையும் நம் ஆள் விடுவதாயில்லை. காட்டுப் பிரயாணங்கள், கடின மனிதர்கள் - இவைகள் யாவும் தங்கள் காலத்தின் தாக்கத்தை அவரது சரீரத்தில் காட்டத் துவங்கின. ஆயினும் தன் 75ம் வயதிலும் கூட, தெருக்களிலேயும் சந்தை வெளிகளிலேயும் நின்று, "வருங்கோபத்துக்குத் தப்பியோடுங்கள்!" என்று ஆங்கிலத்திலும், சில வேளை தனக்கு லாவகமான தனது தாய்மொழி ஐரிஷிலும் கூவிக்கூவிக் கூட்டத்தை அழைத்துக் கொண்டிருப்பார் ஓஸ்லே.
அவரது 76ம் வயதில் (ஊழியரே, இதை நன்றாய்க் குறித்துக்கொள்ளும்!) "கடந்த 16 நாட்களிலும் 36 தடவை பிரசங்கித்தேன்" என்று ஒரு நாள் சொன்னார். "எனது 76 வயதை நெருங்கும் இந்த ஆகஸ்ட் 27 ஞாயிற்றுக்கிழமை முதல் செப்டம்பர் 21, வியாழன் காலைக்குள் 54 முறை பிரசங்கிக்க தேவன் எனக்குக் கிருபை தந்தார்" என்று பின்பு ஒரு முறை எழுதுகிறார்.
தனது 80 வது பிறந்த நாளுக்கு சில நாட்களுக்கு முன்பு, பூரண ஞானத்தோடும், பூரண கிருபையோடும் தன் நாட்கள் பூரணமாகி மரித்தார் கிதியோன் ஓஸ்லே. தேவபக்தியுள்ள மனிதர்கள் அவரை சுமந்து சென்று மவுண்ட் ஜெரோமிலுள்ள கல்லறை பூமி ஒன்றில் அடக்கம் செய்தனர். அங்கே அவரது மண்ணான சரீரம் தன் தாய் மண்ணுக்குத் திரும்ப, அந்த அயர்லாந்தின் அருமை மைந்தரை அந்த மண்ணின் பசும்புல், போர்வையாய்ப் போர்த்தி தனக்குள் பொதிந்து கொண்டது.
~ முற்றும் ~
🪦 🪦 🪦 🪦 🪦 🪦 🪦
அடைபட்ட அக்கினி
Pr. Romilton
9810646981
Thanks for using my website. Post your comments on this