Type Here to Get Search Results !

நீங்கள் அற்புதங்களை செய்கின்றவர்கள் | உள்ளங்கை மேகம் | Alwin Johnson Bible Study | Daily Short Sermons | Jesus Sam

நீங்கள் அற்புதங்களை செய்கின்றவர்கள்

*எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான்,* அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது. (யாக். 5:17,18)




எலியா தீர்க்கதரிசி கருத்தாய் ஜெபித்த போது, அந்த அக்கிரமம் நிறைந்த தேசத்தில் மழை பெய்யாமல் நின்றது. மறுபடியும் கருத்தாய் ஜெபித்த போது, மழை பெய்தது. *இது எத்தனை பெரிய அற்புதம்.*




*ஒருவர் ஜெபித்து அற்புதம் நடக்கின்றதென்றால், அவர் மட்டும் வானத்திலிருந்து வந்த விசேஷமான தெய்வப்பிறவி அல்ல.* அல்லது, அவர் மட்டும் கர்த்தருக்கு ரொம்ப நெருக்கமானவரும் அல்ல. *அவரும் நம் ஒவ்வொருவரைப் போல பாடுகள் உள்ள மனிதன் தான்.* இதைத்தான், “எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும்,” என்று வசனம் சொல்கின்றது.




அந்த ஊழியக்காரர் ஜெபித்தால் தான் கர்த்தர் கேட்பார். இந்த சுவிசேஷகர் ஜெபித்தால்தான் உடனடி பதில் கிடைக்கும். அந்த தீர்க்கதரிசி ஜெபித்தால்தான் அற்புதம் நடக்கும் என்பதெல்லாம் பொய். இரட்சிக்கப்பட்ட யார் கருத்தாக ஜெபித்தாலும், எத்தனை பெரிய அற்புதமும் நடக்கும் என்பது தான் வேதத்தின் சத்தியம்.




*உங்கள் கருத்தான ஜெபத்திற்கு வல்லமை உண்டு. இப்படி ஜெபிப்பதற்கு நீங்கள் ஒரு பிரபலமான பிரசங்கியாளராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கருத்தாய், மனமுருகி, உண்மையான இருதயத்துடன் செய்யும் ஜெபத்திற்கு கர்த்தர் பதில் தந்து அற்புதம் செய்கின்றார்.*




அதே நேரத்தில் நம்முடைய ஜெபம் சுய நலத்துடனும், சுய சித்தத்துடனுமான ஜெபமாக இருக்கக்கூடாது. அது தேவ சித்தமுள்ள, பொது நலமான ஜெபமாக இருக்க வேண்டும். *“நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்”* (1 யோவான் 5:14) என்று வேதம் சொல்கின்றது.




உங்கள் வாழ்க்கைக்காக ஜெபித்தாலும் வேத வார்த்தைகளின்படியாக ஜெபியுங்கள். தேவ சித்தம் நிறைவேற ஜெபியுங்கள். எத்தகையான எதிர்மறையான சூழ்நிலையாக இருந்தாலும், அது மாறும், அற்புதம் நடக்கும்.




அதற்கும் மேல், உங்களைச்சுற்றியுள்ள தேசத்திற்காய் ஜெபிக்கத் துவங்குங்கள்.




இன்றிலிருந்து ஜெபியுங்கள். கருத்தாய் ஜெபியுங்கள். உங்கள் குடும்பத்தார் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள், தேசம் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள், நம்மைச் சுற்றி நடைபெறும் அக்கிரமங்கள் குறைய ஜெபியுங்கள், வறுமையில் வாடும் மக்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள். நல்ல ஆட்சியாளர்கள் ஆட்சியில் அமர ஜெபியுங்கள்.




*நீங்கள் சாதாரணமானவரல்ல. உங்கள் ஜெபத்திற்கு மிகப்பெரிய வல்லமையுண்டு. ஆனால் உங்களை மட்டுமே பார்க்காமல் உங்களைச்சுற்றியுள்ள உலகத்தைப் பார்த்து ஜெபிக்கத் துவங்குங்கள்.*




*கர்த்தர் உங்கள் ஜெபத்தின் விளைவாக உங்கள் பட்டணத்தை, தேசத்தை ஆசீர்வதிப்பாராக!*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்

+91 97 9000 2006



உள்ளங்கை மேகம்
இஸ்ரவேலிலே விக்கிரக ஆராதனை காரணமாக 3 வருடம் 6 மாதங்களாக மழையே இல்லை. ஆனால் எலியா தீர்க்கதரிசி கர்த்தரே தேவன் என்று மக்களுக்கு நிரூபித்துக் காட்டின போது, மக்கள் கர்த்தரே தேவன் என்று அறிக்கையிட்டு மனந்திரும்பினார்கள். அதற்குப்பின்பு, எலியா தீர்க்கதரிசி, இஸ்ரவேலை ஆண்ட ஆகாப் ராஜாவிடம், பெரிய மழை வரப்போகின்றது, சீக்கிரமாய் வீட்டுக்கு போய்விடும் என்றான்.




மழை வரும் என்று தைரியமாய் சொல்லிவிட்ட பின்பு, வானத்தைப் பார்த்தால் ஒரு பொட்டு மேகம் கூட இல்லை. எலியா கருத்தாய் ஜெபித்தான். அந்த ஜெபத்திற்குப் பின்பு, அவன் தன் ஊழியக்காரனை நோக்கி போய் வானத்தில் மேகம் இருக்கின்றதா பார் என்றான்.




ஆனால் அவன் ஏறிட்டுப் பார்த்து மழைக்கான எந்த வித அறிகுறியும் இல்லை என்றான். மறுபடியும் பார்க்கச் சொன்னான். மறுபடியும் எந்த மேகமும் இல்லை என்றான். இப்படியே ஏழாவது முறை பார்த்த போது வானத்தில் *ஒரு சிறிய உள்ளங்கை அளவு மேகம் தோன்றியது.*




*கொஞ்ச நேரத்தில் அந்த சிறிய மேகம் வளர்ந்து பெருகி, வானம் முழுவதும் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று.* (1 இராஜா 18:45)




மழைக்கான அறிகுறியே இல்லாத நிலையில் தோன்றிய அந்த சிறிய மேகம், பெருமழையை கொண்டு வந்து, அந்த தேசத்தின் பஞ்சத்தையே போக்கிற்று. கொஞ்சத்தைக் கொண்டு பெரிய அற்புதம் செய்பவர் நம் தேவன்.




*உங்கள் வாழ்க்கையில் பெருமழையின் ஆசீர்வாதம் உண்டாக, அந்த சிறிய உள்ளங்கை அளவு மேகம் உண்டாகும் வரை ஜெபியுங்கள். அதனைக் கொண்டு உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிப்பது தேவனுடைய பொறுப்பு.*




சிறிய உள்ளங்கை மேகம் என்பது, நமக்கு தென்படும் நன்மைக்கான ஒரு சிறிய அறிகுறி, கையிலிருக்கும் கொஞ்சம் பணம், சரீரத்திலிருக்கும் கொஞ்சம் பெலன், சூழ்நிலையில் கிடைக்கும் சிறிய அடையாளம் ஆகியவற்றைக் குறிக்கின்றது .




நம் தேவன் 5 அப்பம் 2 மீனைக் கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்தார், கொஞ்சம் மாவு கொஞ்சம் எண்ணெய்யை கொண்டு பஞ்ச காலமுழுவதும் சாறிபாத் சகோதரியை போஷித்தார், சிறிய கவண் கல்லைக் கொண்டு பெரிய கோலியாத்தை வீழ்த்தினார். சிறிய மேகத்தைக் கொண்டு பெருமழையை கொண்டு வந்தார்.

உங்கள் வாழ்க்கையிலும் இன்று தோன்றும் சிறிய மேகத்தைக் கொண்டு பெரிய ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவாராக!*

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2007



முழு நேர ஊழியம்
எலியா தீர்க்கதரிசி, எலிசாவை ஊழியத்திற்கு அழைத்த போது, எலிசா உடனடியாக தான் விவசாயத்திற்கு பயன்படுத்தின “ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்.” (1 இராஜா 19:21)




*இன்று ஒருவர் தன் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பென்சன், VRS பணம் எதுவுமே இல்லாமல் முழு நேர ஊழியத்திற்கு வந்தால் எப்படியோ அப்படித்தான் அன்று எலிசா எலியா தீர்க்கதரிசியினிடத்தில் ஊழியத்திற்கு வந்தான்.*




ஆனால் சில காலம் கழித்து எலியாவின் ஊழியம் முடிந்து அவன் பரலோகம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. *இப்போது எலிசா என்ன செய்வார்? அவருடைய எதிர்காலம் என்ன? சாப்பாட்டிற்கு என்ன செய்வார்?*




இந்நிலையில் எலியா எலிசாவை நோக்கி: *நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள்* என்றான்.




எலிசா, எனக்கு ஒரு கோடி ரூபாயை டெப்பாசிட் செய்துவிடுங்கள் என்று கேட்கவில்லை, மாதாமாதம் என்னை யாராவது பொருளாதாரத்தில் தாங்கும்படி கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்கவில்லை. மாத ஊதியம் பெறும்படி ஏதாவது வேலை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கேட்கவில்லை.




மாறாக, எலிசா எலியா தீர்க்கதரிசியிடம்: *“உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்”* (2 இராஜாக்கள் 2:9)




*பணத்தையும் எதிர்காலத்தையும் ஒரு பொருட்டாக கருதாமல், எலியாவின் ஊழியத்தை தொடர்வதையே முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தான் எலிசா.*




முழு நேர ஊழியர்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல, கர்த்தருடைய ஊழியமே அவர்களின் முழு நோக்கமாக இருக்க வேண்டும். முழு நேர ஊழியர்கள் மனிதனுக்கு ஊழியம் செய்யவில்லை. அவர்கள் தேவாதி தேவனுக்கு ஊழியம் செய்கின்றார்கள். *அவர்களை போஷிக்கும் பொறுப்பு கர்த்தருடையது. அவர்கள் எதிர்காலம், பிள்ளைகளுடைய வாழ்க்கை ஆகியவற்றை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு கர்த்தருடையது.*




*ஆவியின் வரமும் ஊழியமும்தான் ஊழியர்களுக்கு கர்த்தர் கொடுத்திருக்கும் பொறுப்பு. அதை உண்மையாய் செய்ய செய்ய, மற்ற காரியங்களையெல்லாம் கர்த்தர் பார்த்துக் கொள்வார்.* வீடு வாசல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கர்த்தருக்காய் தியாகமாய் ஊழியத்திற்கு வந்த பலருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கை சமாதானமாகவும், ஆசீர்வாதமாகவும் இருப்பதை பார்க்க முடிகின்றது.




*உங்களைக் கர்த்தர் முழு நேர ஊழியத்திற்கு அழைத்தால் தைரியமாக, கர்த்தரை நம்பி களம் இறங்குங்கள். பணத்தைக் குறித்து யோசிக்காதிருங்கள், எப்படி உங்களைக் குறித்த கர்த்தருடைய சித்தத்தை முழுமையாக நிறைவேற்றலாம் என்று யோசியுங்கள். உங்கள் தேவைகளை சந்திப்பது உங்களை அழைத்த கர்த்தருடைய பொறுப்பு.*




*மனிதர்கள் போஷிக்கத்தவறும் போது காகமும் உங்களை போஷிக்கும் என்பதை மறந்து போகாதிருங்கள்.*




*ஒரு வேலை நீங்கள் உலக வேலை செய்து பொருளீட்டுகின்றவர்களாயிருந்தால், முழு நேரமாக ஊழியம் செய்யும் ஊழியர்களை உங்கள் பொருளால் தாங்குங்கள். யாருடைய ஊழியங்களால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுகின்றீர்களோ, அவர்களை உங்கள் பணத்தால் தாங்குவது அவசியம். உங்களைப் போன்றோரைக் கொண்டே கர்த்தர் தம்முடைய ஊழியர்களை போஷிப்பார்.*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


உன்னிடத்தில் என்ன இருக்கின்றது?
ஒரு ஊழியக்காரன் திடீரென்று மரித்துப் போனார். அவருடைய மனைவியும், இரண்டு மகன்களும் உடைந்து போனார்கள். இதில் இன்னும் கொடுமை அவர்களுக்கு ஏராளமான கடன் பிரச்சனை வேறு! கடன் கொடுத்தவர்கள் சற்றும் இரக்கமில்லாமல், ஊழியக்காரன் பெற்ற கடனுக்காக, இரண்டு பிள்ளைகளையும் கொண்டு செல்ல திட்டம் தீட்டுகின்றனர்.




அவ்வேளையில் அந்த விதவைத்தாய் பெரிய ஊழியக்காரனாகிய எலிசாவை சந்தித்து, விஷயத்தை சொல்லி உதவி கேட்டாள். அதற்கு எலிசா, *உன்னிடத்தில் என்ன இருக்கின்றது?* என்று பதில் கேள்வி கேட்பதை நாம் பார்க்க முடியும். (2 இராஜா. 4:2).




*எனக்கு என்ன கிடைக்கும்?* என எதிர்பார்த்து உதவி கேட்ட வேளையில், *உன்னிடத்தில் என்ன இருக்கின்றது?* என்ற பதில்-கேள்வி அந்த பெண்ணிற்கு பெரும் ஏமாற்றமாய்தான் இருந்திருக்கும். *ஆனால் அந்த கேள்வியில் தான் அவளுடைய ஆசீர்வாதமே அடங்கியிருந்தது.*




அதற்கு அவள்: *“ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை”* என்றாள் (2 இராஜா. 4:3). உடனே அந்த பெண்ணிடத்தில் இருந்த ஒரு குட எண்ணெயை பெருகச் செய்து, அவளுடைய கடன் அனைத்தும் கொடுத்து தீர்க்கத்தக்கதாய் கர்த்தர் அவளை ஆசீர்வதித்தார்.




*அநேக நேரங்களில் நாமும் பிறரிடத்திலிருந்து ஏதாவது கிடைக்குமா என்றுதான் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். அவர் தருவார், இவர் தருவார் என் ஒவ்வொரு மனிதனின் முகத்தையும் கையையும் ஏக்கத்தோடு நோக்குகின்றோம். இதில் ஏமாற்றம்தான் மிஞ்சுகின்றது.*




*ஆனால் நம்மிடத்தில் இருக்கும் ஒரு குட எண்ணெயை நாம் மறந்து விடுகின்றோம். அதை நாம் அற்பமாய் எண்ணி விடுகின்றோம். அதை முக்கியப்படுத்துவதில்லை. நம்முடைய தேவைகளோடு ஒப்பிடும் போது, அது கொஞ்சம் என்றாலும், நம் வாழ்க்கைக்கு தேவையான அற்புதத்தை நடத்தும் வல்லமை அந்த ஒரு குட எண்ணெயில் தான் உள்ளது.*




*இன்று கர்த்தர் உங்களிடத்திலும் அதே கேள்வியை கேட்க விரும்புகின்றார். உங்களிடத்தில் என்ன இருக்கின்றது? இல்லை இல்லை என்று சொல்லி உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். எப்பொழுதும் யாரிடத்திலாவது ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தே உங்களை வாழ்க்கையை வீணாக்காதீர்கள். உங்களுக்கு தேவையானதை உருவாக்கும் ஆற்றலை கர்த்தர் உங்களுக்குள்ளேயே வைத்திருக்கின்றார்.*




*ஏதோ ஒரு திறமை, ஒரு தாலந்து, ஒரு அனுபவம் உங்களுக்குள் ஒளிந்திருக்கின்றது. அது சாதாரணமானது அல்ல. அதை அற்பமாய் எண்ணாதீர்கள். அது தான் உங்களை உயர்த்தும் வல்லமையுள்ள ஒரு குட எண்ணெய். அதை நீங்கள் எடுத்து பயன்படுத்தினால், அது பெருகும். மிக அதிகமாக பெருகும், இடம் கொள்ளாமல் போகுமட்டும் பெருகும். உங்களை பலமாய் ஆசீர்வதிக்கும்.*




கடந்த கொரோனா முழு அடைப்பு காலங்களில், வேலை இழந்த அநேகரில் சிலர் மட்டும் தங்களுக்குள் ஒளிந்திருந்த திறமைகளை பயன்படுத்தி புதிய வியாபரங்கள் மற்றும் தொழில்களை செய்து பெரிய அளவில் பொருளீட்டினதை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோமே!




*ஒன்றும் முயற்சிக்காமல், நடந்ததை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டு, குறைகளை எண்ணி புலம்பிக் கொண்டு, அடுத்தவர்களிடம் கையேந்திக் கொண்டிருக்கும் வரை உங்கள் வாழ்க்கை பரிதாபமாகத்தான் இருக்கும்.*




*உங்களுக்குள் கர்த்தர் கொடுத்திருக்கும் அந்த தாலந்தை நீங்கள் எடுத்து பயன்படுத்தாதவரை கர்த்தரால் கூட உங்களை ஆசீர்வதிக்க முடியாது.*




*உங்களிடத்தில் என்ன இருக்கிறது? உங்கள் ஒரு குடம் எண்ணெய் என்ன? நன்றாய் சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!!*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்

+91 97 9000 2006


நீங்கள் கல்லெறியும் கூட்டமா?
“கேட்டீங்களா அண்ணே! நம்ம டேவிட் என்ன செய்தாரு தெரியுமா? வெளிய சொன்னா அசிங்கம். ஆனாலும் உங்கட்ட மட்டும் சொல்றேன். இப்படிப்பட்ட ஆட்களயெல்லாம் சும்மா விடக்கூடாது” என்று டேவிட்டை குறித்து குற்றப்படுத்தி அவதூறாய் சில காரியங்கள் என் காதில் ஓதிவிட்டு சென்றார் Mr. பரிசுத்தவான்.


இப்படி எத்தனை பேர் நம் காதுகளில் வந்து மற்றவர்களைப் பற்றி குறைகளை பேசி விட்டு செல்கின்றார்கள்! நாமும் அதைக் கேட்டு, மற்ற சிலரிடம் அவற்றை பகிர்ந்து கொள்கின்றோம். *இப்படி பிறரை குறைசொல்லி குறைசொல்லி கல்லெறியும் கூட்டம் ஊருக்குள் பெருகிக் கொண்டே போகின்றது.*




யோவான் 8ம் அதிகாரத்தில், ஒரு கூட்டத்தார் விபச்சார பாவம் செய்த ஒரு பெண்ணை பிடித்துவந்தார்கள். *அவளை கல்லெறிய ஆயத்தமாய் நின்றது அந்த கூட்டம்.* அதுமட்டுமல்ல, அந்த கூட்டம் இயேசுவினிடத்தில் வந்து, அந்த பெண்னை கல்லெறிய இயேசுவையும் துணைக்கு கூப்பிட்டது. அதற்கு இயேசு, *“உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்”* (யோவான் 8: 7) என்றார்.




*தவறு செய்யாத மனிதனில்லை, பாவம் செய்யாத ஆத்துமாவும் இல்லை. ஏதாகிலும் சில குறைகள் அத்தனை பேரிடமும் இருக்கும். மற்றவர்களுடைய தவறுகளை பெரிதுபடுத்தும் மனிதன், தன்னுடைய தவறுகளை ஒரு போதும் பொருட்படுத்துவதில்லை. மற்றவர் தவறும் போது, அவர்கள் மேல் கல்லெறிய, சொல்லெறிய முதல் ஆளாய் வரிசையில் நிற்கின்றார்கள்.*




*ஆனால் இயேசு சொல்கின்றார், “உங்களில் எந்த பாவமும் இல்லாத சுத்தவான் மற்றவர்களை நியாயந்தீர்க்கட்டும் அல்லது கல்லெறியட்டும்.” செய்யும் தவறுக்கெல்லாம் கல்லெறியென்றால் நாமனைவருமே என்றோ மரித்திருக்க வேண்டும். நாம் நம் தவறுகளுக்காய் மனம் வருந்தி ஜெபிக்கும் போது, இயேசு நம் தவறுகளை மன்னிக்கின்றார். “இனி பாவம் செய்யாதே” என்று மற்றொரு வாய்ப்பைத் தருகின்றார்.*




இவ்வுலகில் 99 சதவீதம் பேர் கல்லெறியும் கூட்டமாகவே காணப்படுகின்றார்கள். எப்போதும் கல்லை (கடுஞ்சொல்லை) கையில் வைத்துக் கொண்டு யார் மீது வீசலாம் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்கள் உங்களையும் தங்கள் கூட்டத்தோடு சேர்த்துக் கொண்டு மற்றவர்கள் மேல் கல்லெறிய துடிக்கின்றனர். *இயேசு கல்லெறியும் கூட்டத்தோடு சேரவில்லை.* நீங்களும் அவர்களோடு ஒரு போதும் சேராதீர்கள்.




*தன் டவுசரின் ஓட்டையென்றால் மறைக்க முயற்சிக்கும் உலகம், மற்றவரின் டவுசரின் ஓட்டையென்றால் அதை, அனைவரிடமும் காட்டி கைகொட்டி சிரிக்கின்றது. எல்லோருடைய வாழ்க்கையிலும் குறைகள் உண்டு. ஒருவருக்கொருவர் கல்லெறிந்து கொண்டால், வாழ்க்கை நரகமாகி விடும். உங்கள் குறைகளை மறைக்க முயல்வது போல், மற்றவர்களின் குறைகளையும் மூடி மறைக்க முயற்சி எடுங்கள்.*




*கல்லெறியும் கூட்டத்தை இயேசு புறக்கணித்தது போல, நீங்களும் புறக்கணியுங்கள். உங்கள் காதுகளில் மற்றவர்களைக்குறித்து புரணி பேச வருபவர்களை வெளிப்படையாகவே தவிர்த்துவிடுங்கள். இயேசு மன்னித்தது போல, நாமும் அனைவரையும் மன்னிப்போம். வாழ்க்கை மிக குறுகினது. அவ்வாழ்க்கையை அன்போடு வாழ முயற்சிப்போம்.*

கர்த்தர் உங்களை உணர்த்துவாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


இரட்சிக்கப்பட்ட விசுவாசி பாவம் செய்வாரா?
சமீபத்தில் காட்டுப் பன்றிகளை பிடிக்கும் ஒரு முறையைக் குறித்து கேள்விப்பட்டேன். கெட்டு நாறிப் போன கோழிகறி கழிவுகள், மற்றும் உணவுக் கழிவுகளை ஒரு பெட்டியில் கொண்டு சென்று காட்டினில் கொட்டி அங்கு பன்றிகளை பிடிக்க பொறி வைத்துவிடுவார்களாம். அந்த கழிவுகள் நாம் நிற்க முடியாத அளவு பயங்கர நாற்றத்தை கொடுக்குமாம்.




ஆனால் பன்றிகள் அந்த நாற்றத்தை முகர்ந்து கொண்டு அதை தேடி பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து கூட வருமாம். சரியாக அந்த கழிவுகளை சாப்பிட தன் வாயை அதில் வைக்கும் போது, பொறியில் சிக்கி, வேட்டைகாரர்களுக்கு இரையாகும்.




*பாவமும் அந்த நாற்றமெடுத்த கழிவுகளும் ஒன்றுதான். பன்றிகளுக்கு அந்த கழிவு நறுமணமாகவும், அறுசுவையாகவும் தெரிவது போல, இரட்சிக்கப்படாதவர்களுக்கு பாவம் கவர்ந்திழுக்கும் இனிமையாகவும், நறுமணமாகவும் இருக்கும். அதிலே போய் சிக்கி தங்கள் வாழ்க்கையை இழந்து போவார்கள்.*




*ஆனால் இரட்சிக்கப்பட்ட விசுவாசிக்கு பாவம் இனிமையாய் தெரியாது.* அது அருவருப்பாய், துர்நாற்றமாய், அசுத்தமாய் தெரியும். நாற்றமெடுக்கும் இடத்திலே நம்மால் நிற்க முடிமா? எவ்வளவு சீக்கிரம் அங்கிருந்து ஓட முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அங்கிருந்து ஓடி விடுவோமல்லவா?




வேதம் சொல்கின்றது, *பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்* (1 யோவான் 3:8). பிசாசின் வித்தினால் உண்டானவர்கள் யார்? அவர்களும் பிசாசின் பிள்ளைகள்தானே! சாத்தான் அருவருப்பானவன், எனவே அவனால் உண்டானவர்களும் அருவருப்பானவர்கள். *அவர்களுக்கு இயற்கையாகவே அருவருப்புகளின் (பாவங்களின்) மேல் ஒரு இழுப்பு இருக்கும்.*




அதே நேரத்தில் அடுத்த வசனம் மற்றொரு காரியத்தையும் சொல்கின்றது, *“தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்,* ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.” (1 யோவான் 3:9) தேவனால் பிறந்தவன் தேவனுடைய பிள்ளை. *அவர்களுக்கு இயற்கையாகவே பாவத்தின் மேல் ஒரு அருவருப்பு இருக்கும். அங்கே அவர்களால் நிற்க முடியாது.*



*“இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்.”* (1 யோவான் 3:10)




*நீங்கள் யாருடைய பிள்ளை என்பதை யோசித்துப் பாருங்கள்!*




*நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்களா, இல்லையா என்பதை அளக்கும் அளமானியாக இதை வைத்துக் கொள்ளலாம். பாவத்திற்கும் உங்களுக்கும் இருக்கும் தொடர்பை வைத்து உங்கள் இரட்சிப்பை அளந்து விடலாம்.*



*நான் சபைக்கு செல்கின்றேன், நான் ஊழியம் செய்கின்றேன், நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன், நான் செழிப்பாய் இருக்கிறேன் என்பதெல்லாம் இரட்சிப்பின் அடையாளங்கள் அல்ல. பாவத்தின் மேல் கசப்பு இருக்கின்றதா? தவறி சிறு பாவம் செய்துவிட்ட போதும், மனது அடித்துக் கொள்கின்றதா? இச்சைகள் மேலும் அசுத்தங்கள் மேலும் அருவருப்பு உண்டாகின்றதா? இவைகளே இரட்சிப்பின் முக்கிய சில அடைளாயங்கள்.*

உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்!

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
*நம் துவக்கமும் முடிவும் இயேசு*
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

டைட்டானிக் என்ற கப்பலை குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். 1912ம் வருடம், சுமார் 15000 பேர் சேர்ந்து, இன்றைய மதிப்பில் சுமார் 5000 கோடி ரூபாய்க்கும் மேலாக செலவு செய்து, 3 வருடத்தில் கட்டப்பட்ட மிக உறுதியான கப்பல். 66000 டன் எடையை தாங்கக்கூடியதாம். 2500 பேர் வரை பிரயாணம் செய்ய வசதிகள் இருந்தது. கடவுளால் கூட டைட்டானிக் கப்பலை கவிழ்க்க முடியாது என்று பெருமையோடு சொல்வார்களாம். 

அப்படிப்பட்ட பிரமாண்டமான கப்பல் தன் யாத்திரையை துவங்கி நான்கே நாட்களில், 14 ஏப்ரல் 1912 அன்று பனிப் பாறையில் மோதி, அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. *ஆரம்பம் பிரமாண்டம்தான் ஆனால் முடிவு பரிதாபம்.*

*இப்படிப்பட்டதல்ல நம்முடைய விசுவாச வாழ்க்கை.* வசனம் சொல்கின்றது, எபிரெயர் 12:1 ஆகையால் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மை சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, *விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி* நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.

*நம் விசுவாச வாழ்க்கையின் துவக்கமும் இயேசு முடிவும் இயேசு* என்று எபிரெயர் ஆக்கியோன் எழுதுகிறார். *உங்கள் பார்வை இயேசுவின் மேலேயே இருந்தால் உங்கள் ஆரம்பமும் பிரமாண்டம்தான் முடிவும் பிரமாண்டம்தான்.*
 
நம்மில் அநேகர் *நம் விசுவாச வாழ்வின் நடுப்பகுதியில் நின்று எதிர்காலத்தை குறித்த நிச்சயம் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.* நம்மை குறித்த தேவ தரிசனம் நிறைவேறுமா? நாம் வெற்றியாய் நம்முடைய ஓட்டத்தை ஓடி முடிக்க முடியுமா? நாம் நமக்கு கர்த்தர் வாக்குப்பண்ணியிருக்கிற வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரிப்போமா? என்று குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் அறியவேண்டிய நற்செய்தி என்னவென்றால், *உங்கள் ஆரம்பம் இயேசுதான் என்றால், முடிவிலும் இயேசுதான் நின்று கொண்டிருக்கிறார்.* இடையே உங்களுக்கு என்ன நேரிட்டாலும் நீங்கள் சோர்ந்து போகாமல் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருங்கள். பனிப்பாறையோ புயலோ உங்கள் விசுவாசக்கப்பலை மூழ்கடிக்க முடியாது. 

*நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான், விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி… (எபி 12:1). துவக்கமும் முடிவுமாகிய இயேசுவையே கண் எடுக்காமல் நோக்கிக் கொண்டிருங்கள்.* 

பேதுரு இயேசுவின் வார்த்தையின் பேரில் கடலில் நடந்து இயேசுவிடம் சென்றான். காற்றடித்தாலும், புயலடித்தாலும், *அவன் பார்வை இயேசுவின் மேல் இருந்தவரை அவன் மூழ்கவேயில்லை.* ஆனால் எப்போது அவன் *தன் பார்வையை இயேசுவின் மேலிருந்து எடுத்து, காற்றையும் புயலையும் பார்த்தானோ, அப்போதே மூழ்கிப்போனான்.* பாதர் பெர்க்மான்ஸ் அருமையான பாடல் ஒன்றை பாடியுள்ளார். 

*கண்களை பதிய வைப்போம்,* 
*கர்த்தராம் இயேசுவின் மேல்,* 
கடந்ததை மறந்திடுவோம், 
தொடர்ந்து முன் செல்லுவோம்

*ஓட்டத்தை தொடங்கினவர்* 
*தொடர்ந்து நடத்திடுவார்*
நிறைவு செய்திடுவார்
நிச்சயம் பரிசு உண்டு

*நம் எல்லாரைக்குறித்தும் கர்த்தருக்கு ஒரு திட்டமுண்டு. அந்த திட்டம் நிச்சயம் நிறைவேறாமல் போகாது. உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்புவதாக பிலிப்பிய சபைக்கு பவுல் எழுதுகிறார் (பிலி. 1:5).* 

உங்கள் பார்வையை உலகம் மாமிசம் பிசாசின் மீது வைத்தால் மூழ்கிப் போவீர்கள். பாவம் உங்களை வஞ்சிக்கும், அவிசுவாசம் உங்களை சோர்வடையச் செய்யும். *எந்த நேரமும், முடிவுக் கோட்டில் நிற்கும் இயேசுவையே நோக்கிப் பாருங்கள். நிச்சயமாய் உங்களை குறித்த தேவ நோக்கம் நிறைவேறும் வரை எதுவும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.* 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.