Type Here to Get Search Results !

உன்னை ஆண்டால் உலகத்தை ஆளலாம் | அப்பாவின் அன்புக் கடிதம் | Daily Short Message | Alwin Johnson Sermons | Jesus Sam

அப்பாவின் அன்புக் கடிதம்
யுத்தத்திற்கு சென்ற தகப்பனை எதிரி நாட்டு வீர்ர்கள் நாடு கடத்தினார்கள். தாயாரும் 12 பிள்ளைகளும் தனித்து விடப்பட்டனர். தகப்பன் எங்கிருக்கின்றார் என்று பல மாதங்கள் எந்த தகவலும் இல்லை. அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அக்கம்பக்கத்தார் தங்களுக்குள் பேசிக் கொண்டது பிள்ளைகளின் காதுகளில் விழுந்தது.

தகப்பனை நினைத்து ஏங்கிப் போயிருந்த பிள்ளைகளுக்கு திடீரென ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது. ஆம், *அது அவர்களின் தகப்பனின் அன்பு வார்த்தைகளை சுமந்து வந்த கடிதம் தான்.* கடிதப் போக்குவரத்து மட்டுமே உள்ள அந்த காலங்களில், சொந்த பந்தங்கள் ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் பரிமாரிக்கொள்ள கடிதங்களை மட்டுமே நம்பியிருந்தார்கள்.


தகப்பனின் கடிதத்தை பார்த்த பின்பு, அனைவருக்குள்ளும் மகிழ்ச்சி வெள்ளம். *தகப்பனே நேரில் வந்தது போல துள்ளினர்.* அந்த தாயாரும் 12 பிள்ளைகளும், கடிதத்தை மாறி மாறி வாசித்தனர். தகப்பனின் ஒவ்வொரு நம்பிக்கையூட்டும் வார்த்தையையும் ஆயிரம் முறை வாசித்து வாசித்து மனம் குளிர்ந்தனர். திடன் கொண்டு தங்கள் படிப்பு மற்றும் வேலைகளை தொடர்ந்தனர். வாழ்வில் வெற்றி பெற்றனர்.


*இது போலத்தான் நம் அன்புத்தகப்பன் தேவாதி தேவனும், நமக்கு ஒரு அன்புக் கடிதம் அனுப்பியுள்ளார். அதுவே பரிசுத்த வேதாகமம். நம்பிக்கையற்ற இந்த உலகத்தில் விடாய்த்துப் போன நம் ஆத்துமாக்களுக்கு, நம் தகப்பனின் அன்புக்கடிதமே நம்பிக்கை.*


*பரிசுத்த வேதாகமம் நமக்கு கிடைத்த விலைமதிக்கமுடியாத பொக்கிஷம். வார்த்தையான தேவன் நேரிடையாக நம் கைகளில் கிடைத்திருக்கின்றார். என்னே பாக்கியம்! வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அளவுக்கதிகமான வல்லமையுள்ளது, நம் வாழ்க்கையையே தலைகீழாய் திருப்பும் ஆற்றல் உள்ளது.*


ஆனால் துரதிஷ்டவசமாக, அநேக தேவ பிள்ளைகள் நம் அன்புத்தகப்பனின் அன்புக்கடிதமாகிய பரிசுத்த வேதாகமத்தை திறப்பதேயில்லை. ஞாயிற்றுக் கிழமை மட்டுமே அதை எடுத்துக் கொண்டு சபைக்கு வருகின்றார்கள். மற்ற நாட்களில் மூடிய வேதாகமத்தை அலமாரியில் கிடத்தி விடுகின்றார்கள்.


*“உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.”* (சங். 119:18) என்று சங்கீதக்காரன் சொல்கின்றார். ஆம் உண்மையில் வேதத்திற்குள், அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றது. *உங்கள் வாழ்க்கையின் எந்த சூழ்நிலைக்கும் வேதத்தில் பதில் உண்டு.* வேதத்தின் மகத்துவங்களை அறிந்து கொள்ள சங்கீதம் 119 முழுமையும் தியானியுங்கள்.


*என் வாழ்க்கையைக் குறித்து கர்த்தர் என்ன சொல்கின்றார் என்று பல ஊழியர்களிடம் தலையை கொடுக்கும் தேவ பிள்ளையே, உங்கள் வாழ்க்கையைக் குறித்து உங்களோடு பிரத்யேகமாய் பேசி எழுதிக் கொடுத்திருக்கும் தேவனின் அன்புக் கடிதத்தை ஏன் மறந்தாய்?*


*அனுதினம் ஒரு வேத பகுதியை வாசித்து தியானித்து, கர்த்தருக்கு ஒப்புக் கொடுங்கள். உங்கள் வாழ்க்கை செழிக்கும்.*


*கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.* (சங். 1:2,3)


*அப்பாவின் அன்புக் கடிதத்தை அசட்டை செய்துவிட்டு, வாழ்வில் நிலை தடுமாறி நிற்க வேண்டாம்.*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


கொலை பாதகன் தேவனான கதை!
உலகத்தில் நாலு விதமா பேசும் நாலு பேர் எப்போதும் இருக்கின்றார்கள். நாம் என்ன செய்தாலும் அதை வாழ்த்தவும் தாழ்த்தவும் உடனே நாலு பேர் வரிசையில் வந்து விடுவார்கள். அதற்கு பயந்தே அநேகர் எதையுமே செய்ய முற்படுவது இல்லை.


ஒரு முறை அப்போஸ்தலனாகிய பவுல் சென்ற கப்பல் உடைந்தது. ஆனால் அதிஷ்டவசமாக அந்த கப்பலில் இருந்த அனைவரும் உயிர்தப்பி, மெலித்தா என்ற ஒரு தீவின் கரையில் ஒதுங்கினார்கள். அங்கே அவர்கள் குளிர்காய்ந்து கொண்டிருந்த போது, ஒரு பாம்பு விறகுகளுக்குள்ளிருந்து எழும்பி வந்து பவுலின் கையை கவ்வி கொத்தியது.


உடனே அங்கிருந்த தீவு மக்கள், *“இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை;* இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.” (அப். 28:4) அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது *அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.* (28:6)


ஆனால் பவுல் அந்த பாம்பை தீயிலே உதறிபோட்டுவிட்டு எந்த தீங்கும் அடையாதிருந்தான். மக்கள் நெடுநேரமாய் பவுலை பார்த்துக்கொண்டிருந்தும், “ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, *வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்.”* (28:6)


*கொஞ்ச நேரத்திற்கு முன்னர் பவுலை கொலைபாதகன் என்று சாடிய மக்கள், இப்போ தேவன் என்று புகழ ஆரம்பித்துவிட்டார்கள். இதுதான் மக்களின் மனப்பான்மை.*


*எந்த மனிதனையும் உடனே நியாயந்தீர்த்து பெயர் சூட்டி அடையாளப்படுத்திவிடுவார்கள்.* அவர்கள் யார், அவர்கள் சூழ்நிலை என்ன, எதையுமே ஆராயாமல், பார்த்த ஒரு காரியத்தை வைத்து கொலைபாதகன் என்று முத்திரை குத்திவிடுவார்கள். பின்னர் பாம்பு கடித்தும் சாகவில்லை என்று பார்த்த உடன், கடவுளாக உயர்த்தி பேசுவார்கள்.


*இதிலிருந்து இரண்டு காரியங்கள் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.*


1️⃣ *ஒன்று, நாம் யாரையும் பற்றி பேசுவதற்கு முன் ஆயிரம் முறை யோசித்து, அவர்கள் பின்புலத்தை நன்கு ஆராய வேண்டும். அவசரப்பட்டு எவரையும் நல்லவர் அல்லது கெட்டவர் என்று முத்திரை குத்தி விடக்கூடாது. வாட்ஸ்அப்பில் வரும் ஒரு கிளிப்பிங்கை வைத்துக் கொண்டு எவரையும் நியாயம் தீர்க்கக்கூடாது.*


ஒரு போதகர் ஒரு பெண்ணை பலவந்தம் செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த செய்தி காட்டுத்தீயாக பரவியது. அனைவரும் அவரை கரித்து கொட்டினர். பின்னர், நன்கு விசாரித்துப் பார்த்த போது, அவர் நிரபராதி என்றும், கிறிஸ்தவ விரோதிகளால் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டார் என்பதும் தெரியவந்தது. அவரைப் பற்றி பேசினவர்கள், இப்போ என்ன செய்யப் போகின்றார்கள்!


2️⃣ *இரண்டாவது, மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன பேசுகின்றார்கள் என்பதையே கவனித்துக் கொண்டிருக்கக்கூடாது. நம்மைப் பற்றி நாலு பேர் நாலு விதமாய் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். ஊர் வாயை அடைக்க முடியாது. ஆனால் நம் காதை அடைத்துக் கொள்ள முடியும். மற்றவர்கள் வார்த்தைகளையெல்லாம் மனதில் வாங்கிக்கொண்டு, அழுது கொண்டிருந்தால் தவறு உங்கள் மீதுதான்!*


சவுல் ராஜாவாகின்ற போது, அவனைப் பற்றி மக்கள் கனவீனமாய் பேசின போது, *“அவன் காது கேளாதவன் போல இருந்தான்”* என்று சொல்லப்பட்டுள்ளது. சொல்லப்படும் எல்லா வார்த்தைகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டே இருந்தீர்களென்றால் உங்களுக்கான தேவ நோக்கத்தை நீங்கள் நிறைவேற்ற முடியாது.


*மக்கள் பேசும் வார்த்தைகள் அது புகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இரண்டையும் மனதுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. கர்த்தர் உங்களோடு என்ன பேசுகின்றார் என்பதையே உற்று கவனிக்க வேண்டும்.*


கர்த்தர் உங்களோடு பேசுவாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


உன்னை ஆண்டால் உலகத்தை ஆளலாம்

பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; *அவர்கள்* சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் *ஆளக்கடவர்கள்* என்றார். (ஆதி 1:26)


*மனிதனை கர்த்தர் படைத்த போது இந்த பூமியை ஆளும்படியாகத்தான் படைத்தார். தேவனுடைய பிரதிநிதியாக இந்த பூமியை ஆளவும், பராமரிக்கவும் மனிதன் ஏதேன் தோட்டத்தில் வைக்கப்பட்டான்.* மனிதனுக்கு தீங்கு செய்வதற்கு அவ்வுலகில் எவரும் இல்லை. எல்லா மிருகங்கள், பறவைகள், நிலம், நீர், காற்று, நெருப்பு என அத்தனையும் மனிதனுடைய ஆளுகைக்குட்பட்டு, அவனுக்கு நன்மையையே செய்தன.


ஆனால் பாவத்தால் அந்த மகத்தான ஆளுகையை மனிதன் இழந்து போனான். அப்படி என்ன பொல்லாத பாவம்? *தன்னை ஆளத்தெரியாத பாவம் தான் அந்த பாவம்.*


தேவன் சாப்பிடக்கூடாது என்று சொன்ன கனியை சாப்பிட்டார்கள். விளைவு அத்தனை ஆளுகையும் போச்சு!


*தன் உணர்ச்சி, ஆசை இச்சைகளை ஆளத்தெரியாமல், அலைபாய்கின்ற எவனாலும் இந்த உலகை ஆள முடியாது.*


எல்லாமே எனக்கு விரோதமாக நடக்கின்றது, எனக்கு யாராவது ஜெபியுங்கள், உதவி செய்யுங்கள் என்று புலம்பிக் கொண்டிருக்கும் தேவ பிள்ளையே, *உங்கள் சூழ்நிலைகளை ஆளும் சக்தியை கர்த்தர் உனக்குள் கொடுத்திருக்கின்றார்.* ஆனால் அதற்கு முன் நீங்கள் உங்களையே ஆள கற்றுக் கொள்ள வேண்டும்.


அதிகாலை 5 மணிக்கு எழும்பி உங்களால் ஜெபிக்க முடியவில்லை, ஒழுங்காக வேதத்தை வாசித்து தியானிக்க முடியவில்லை, இச்சைகளுக்கு விலகி ஓட முடியவில்லை, செல்போன் அடிமைத்தனத்திலிருந்து எழும்ப முடியவில்லை, கோபம், எரிச்சல் போன்ற உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்று நீங்கள் சொல்வீர்களானால் உங்களையே உங்களுக்கு ஆளத்தெரியவில்லை என்று தான் அர்த்தம்.


*இரட்சிக்கப்ட்ட தேவ பிள்ளைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் ஆளப்பிறந்தவர்கள். ஆனால் உங்களை நீங்கள் ஆளத்தவறிய காரணத்தால் அடிமைகளாக, கூனி, குறுகி காணப்படுகின்றீர்கள். மனம் திரும்புங்கள், ஆளுகையை திரும்பப் பெறுங்கள்.*


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


என்ன செய்வதென்று தெரியாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

யூதா தேசத்தின் ராஜாவாகிய யோசபாத்தின் காலத்தில் அவனுக்கு விரோதமாக மூன்று அண்டைநாடுகளான, அம்மோன், மோவாப் மற்றும் சீரியா ஆகிய தேசத்தார் யுத்தத்திற்கு வந்தார்கள். திடீரென்று இலட்சக்கணக்கில் படைவீரர்கள் தேசத்தை சூழ்ந்து கொண்டவுடன் இராஜாவுக்கு நடுக்கம் பிடித்தது. யுத்தம் செய்தால் உறுதியான தோல்விதான். ஏனென்றால் அத்தனை திரளான எதிரிகள் சூழ்ந்திருக்கிறார்கள்.


அந்த நேரத்தில் யோசபாத் ராஜா, *இந்த திரளான கூட்டத்திற்கு முன்பாக நிற்க பெலனில்லை. நாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று எங்களுக்கு தெரியவில்லை* என்று புலம்புவதை பார்க்கிறோம். (2 நாளா 20:12)


இது இக்கட்டான நேரம் தான். நாம் கூட சில நேரங்களில் எந்த பக்கமும் தப்ப முடியாத இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்கிறோமல்லவா? அந்த நேரங்களில் செய்வதறியாது திகைக்கிறோம். எங்கு போக? என்ன செய்ய? யாரிடம் உதவி கேட்க? என்று அங்கலாய்க்கிறோம்.


இந்த நேரத்தில் தான் பலர் தவறாக செயல்பட்டு, தவறான தீர்மானங்கள் எடுத்து தங்கள் வாழ்க்கையை சிக்கலில் அகப்படுத்துகிறார்கள். ஏனென்றால் இக்கட்டான சூழ்நிலையில் நம் சிந்தையின் செயல்பாடு பயத்தினால் உறைந்துவிடும். சுயநலமுள்ளவர்கள் பலர் இந்த நேரத்தை பயன்படுத்தி நம்மை சுரண்டவும் காயப்படுத்தவும் முயற்சிப்பார்கள்.


யோசபாத் ராஜா என்ன செய்வதென்று தெரியாத நேரத்தில் என்ன செய்தான்?


*யோசபாத் பயந்து கர்த்தரை தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தை கூறுவித்தான். அப்படியே யூதா ஜனங்கள் கர்த்தரிடத்தில் சகாயந்தேடக் கூடினார்கள்.* (2 நாளா 20:3,4)


*முடிவெடுக்கமுடியாத இக்கட்டான நேரங்களில் உபவாசம் இருந்து தேவனுடைய பாதத்தில் ஜெபியுங்கள்.* குழப்பமான சூழ்நிலைகளில் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல் சிறிது காலம் வேறு எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தேவ சமுகத்தில் எல்லாவற்றையும் ஒப்புக் கொடுத்து ஜெபிக்கும் போது, கர்த்தர் நமக்காக செயல்படுவதை நீங்கள் பார்க்கமுடியும்.


பிலிப்பியர் 4:6 சொல்கிறது, *நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்துங்கள்.*


நீங்கள் ஜெபிக்கும் போது நீங்கள் செய்வது இதுதான். உங்கள் பாரங்களை அவரிடம் சொல்லி அவர் மீது இறக்கி வைக்கிறீர்கள். இதன் மூலம் உங்கள் மனதின் பாரம் இலகுவாகும். உங்கள் மனதில் தைரியம் உண்டாகும். நீங்கள் அடுத்து செய்ய வேண்டிய காரியத்தை குறித்த தெளிவை கர்த்தர் உங்களுக்கு தருவார். அதே நேரத்தில் நம் கர்த்தர் உங்களுக்காக செயல்படுவதை பார்க்கும் விசுவாச கண்களும் திறக்கும்.


இன்று இது போன்ற குழப்பமான, இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றீர்களா? உங்கள் வேலைக்கு 3 நாள் லீவு போட்டு, உங்கள் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, உபவாசத்தோடு தேவ சமுகத்தில் அமர தீர்மானம் செய்யுங்கள். பலர் புலம்புவார்கள், தவிப்பார்கள் ஆனால் நேரம் ஒதுக்கி ஜெபம் செய்ய முன்வரமாட்டார்கள். இப்படி செய்தால் உங்கள் இக்கட்டு மாறாது, குழப்பம் நீங்காது.


*உங்கள் இக்கட்டுக்கு பதில் கர்த்தருடைய சமுகத்தில் உள்ளது. தேடிச் செல்லுங்கள்!*

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 90002006

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.