Type Here to Get Search Results !

உங்கள் ஆசீர்வாதத்திற்கான தடை | Blessing Daily Short Message | தின தியான குறிப்புகள் | Jesus Sam

உங்கள் ஆசீர்வாதத்திற்கான தடை

ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் தேவன் ஈசாக்கை தருவேன் என்று வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். 75 வயதில் வாக்குத்தத்தத்தைப் பெற்ற ஆபிரகாம் 99வது வயது வரை அதை அடையவில்லை. கடைசியில் மூன்று தேவ புருஷர்கள் வடிவில் தேவன் அவனை சந்தித்தார். *அப்போது நடந்த காரியத்தினால் கர்த்தர் அவன் வாழ்வில் அற்புதம் செய்தார்.

ஆபிரகாம் கண்களை ஏறெடுத்து பார்த்த போது, மூன்று புருஷர்கள் நிற்கின்றதைக் கண்டு அவர்களை தன் வீட்டுக்கு அழைத்தான். உடனே சாராளிடம் போய் மூன்றுபடி மாவு (அதாவது 4.5 கிலோ மாவு) எடுத்து புரோட்டா செய்யச் சொன்னான். 89 வயது சாராள் அவன் சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிந்து செய்தாள். ஆபிரகாம் வேலைக்காரனுடன் இணைந்து கறி சமைத்தான். அவர்கள் இணைந்து அந்த புருஷர்களை உபசரித்தார்கள்.

*அந்த மூன்று தேவ தூதர்கள் புருஷர்கள் வடிவில் ஆபிரகாமின் குடும்பத்தை சந்தித்த போது, ஆபிரகாமும் சாராளும் ஒருமனதோடு இணைந்து செயல்பட்டு அவர்களை உபசரித்த போது, அங்கு அவர்களுக்கு திட்டமான காலத்தில் வாக்குத்தத்தம் நிறைவேறும் என்பதை உறுதியாக தேவன் சொன்னார்.*

*குடும்பத்தின் ஒருமனம் குடும்பத்தில் தேவ ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.* ஆபிரகாமும் சாராளும் பல ஆண்டுகளாக சில கருத்து வேற்றுமைகளினால் ஒருமனமில்லாமல் வாழ்ந்திருக்கக்கூடும். ஆகாரினால் ஏற்பட்ட மனவருத்தங்கள் அவர்கள் சமாதானத்தைக்குலைத்திருக்கக் கூடும். ஆனால் இறுதியில் குடும்பத்தில் ஒருமனதைக் கொண்டு வந்தார்கள். அதற்கு சாட்சியே அவர்கள் இணைந்து தேவ தூதர்களை உபசரித்த நிகழ்வு ஆகும்.

திடீரென்று கணவன் மூன்று பேரை அழைத்து வந்து சாப்பாடு கொடு என்று மனைவியிடம் சொன்னால் என்ன நடக்கும் என்று யோசித்துப்பாருங்கள்! யாரைக் கேட்டு அவர்களை அழைத்து வந்தீர்கள்? இப்படி திடீரென்று சொன்னால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று படுக்கை அறையில் படுத்துக் கொண்டு எனக்கு தலைவலியென்று சொல்லுங்கள் என்று சொல்லிவிடுவார்களே! ஆபிரகாம் வீட்டில் அன்று இப்படி நடந்திருந்தால், சாராள் தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்க முடியாது.


*திடீரென்று வந்தாலும் கணவனின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து, விருந்தினரை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு உபசரித்த உள்ளத்திற்காகத்தான் அன்று கர்த்தர் அவளை ஆசீர்வதித்தார்.*

*உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கும்படி தேவ தூதர்கள் திட்டமிட்டு வந்தாலும், குடும்பத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தீர்களென்றால், உங்களை ஆசீர்வதிக்காமலேயே சென்றுவிடுவார்கள். இப்படி தேவ ஆசீர்வாதத்தை இழந்து கொண்டிருக்கின்ற குடும்பங்கள் அநேகம்.*




*சிறு சிறு கருத்து வேறுபாடுகளுக்கெல்லாம் நீயா நானா என்று பார்க்கலாம் என்று ஈகோவுடன் சண்டையிட்டுக் கொண்டிருப்பீர்களென்றால் உங்களை கர்த்தர் ஒருநாளும் ஆசீர்வதிக்கவே முடியாது. நீங்கள் தேவனிடமிருந்து வாக்குத்தத்தங்களைப் பெற்றிருக்கலாம். ஆனால் அது நிறைவேற வேண்டுமென்றால் குடும்பத்தில் ஒருமனம் தேவை.*




*குடும்ப சண்டையில் தோற்கின்றவர்கள் தேவனிடம் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். அன்று சாராள் ஆபிரகாமின் விருப்பத்திற்கேற்ப விட்டுக்கொடுத்து கீழ்ப்படிந்து, விருந்தினர்களை அன்போடு உபசரித்ததினால், அவளுடைய நிந்தை நீங்கி ஈசாக்கை பெறும் பாக்கியம் பெற்றாள்.*



*உங்கள் வாசலில் தேவ ஆசீர்வாதங்களை சுமந்து கொண்டு தேவ தூதர்கள் அனுதினம் நிற்கின்றார்கள். நீங்கள் ஒருமனதோடு சமாதானமாய் வாழந்தால் அவைகளை நீங்கள் சுதந்தரிப்பீர்கள். இல்லையென்றால் இழந்து போவீர்கள்.*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


ஒன்றுமில்லாமையிலிருந்து ஒன்று
*இவ்வுலகத்தின் சகல காரியங்களும் ஏதாகிலும் ஒரு காரணத்தினால் தான் நடக்கின்றது.* உதாரணத்திற்கு புகை உண்டானால் அதன்பின் நெருப்பு என்ற காரணம் ஒன்று இருந்தாக வேண்டும். நெருப்பே இல்லாமல் புகை இருக்க முடியாது. எனவேதான் *நெருப்பில்லாமல் புகையுமா* என்ற பழமொழி வந்தது. இந்த கோட்பாட்டை *cause and effect (காரணமும் விளைவும்)* என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.




*ஆனால் நம்முடைய தேவன் மட்டும் எந்த காரணமுமில்லாமலேயே விளைவை உண்டுபண்ண வல்லவர் (Effect without Cause). அவர் ஒன்றுமில்லாமையிலிருந்து ஒன்றை உருவாக்க வல்லவர் (Something out of nothing). அதாவது நெருப்பில்லாமலேயே புகை உண்டாகச் செய்கின்றவர் நம் தேவன்.*




கிமு 840களில் இஸ்ரவேலின் யோராம் ராஜாவும், யூதேயாவின் யோசபாத் ராஜாவும், மோவாபியருக்கு விரோதமாக யுத்தம் பண்ண, தங்கள் எண்ணற்ற படைகளோடு ஏதோம் வழியாகச் சென்ற போது, தண்ணீர்த்தட்டுப்பாடு வந்தது. அப்பொழுது எலிசா தீர்க்கதரிசியை அழைத்து ஆலோசனை கேட்டனர்.



எலிசாவின் மூலம் கர்த்தர் பேசின வார்த்தை, *“நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”* (2 இராஜா. 3:17)




மழை தண்ணீரை கொண்டுவரும் என்று நாம் எதிர்பார்த்திருக்கும் போது, மழையில்லாமலேயே தண்ணீரை கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்கின்றார். *எப்படி வரும், எங்கிருந்து வருமென்று தெரியாது. ஆனால் வரும்.*




*இதுதான் நம் ஆண்டவரின் செயல். அவர் ஒன்றுமில்லாமையிலிருந்து ஒன்றை உருவாக்கும் தேவன். வெறுமையான இந்த உலகத்தில் தம் வார்த்தையினால் அத்தனையையும் படைத்தவர்.* விஞ்ஞானிகள் உலகத்தின் அத்தனை படைப்புகளுக்கும் காரணம் தேடுகின்றனர். பல கோடான கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த நுண்ணுயிரில் இருந்து தான் அத்தனை உயிரினங்களும் தோன்றியுள்ளது என்கின்றனர். அப்போ, அந்த நுண்ணுயிர் எங்கிருந்து வந்தது?




*இது நமக்கு புரியாது. புரியவும் தேவையில்லை. இதை நாம் விசுவாசித்தால் போதும். எந்த காரணமுமில்லாமல் ஒரு விளைவை உருவாக்க நம் தேவனால் மாத்திரம் முடியும். ஒன்றுமேயில்லாத வெறுமையில் திடீரென ஒரு அழகான உலகை உருவாக்கினவர் நம் தேவன்.*




*இன்று உங்கள் வாழ்க்கையிலும் அவரால் சகலத்தையும் உருவாக்க முடியும். இது எப்படியாகும் என்று மரியாள் கேட்டது போல நாமும் கேட்டு கேட்டு குழம்பிப் போயிருக்கலாம். எப்படியாகும் என்பதை ஒரு நாளும் நாம் விளங்கிக்கொள்ள முடியாது. ஆனால் ஆகும். நம் தேவனால் ஆகும்.*




*செத்துப்போன சாராளின் கர்ப்பத்தில் பிள்ளையை உருவாக்கவும் அவரால் முடியும், புருஷனை அறியாத மரியாளின் கர்ப்பத்திலும் பிள்ளையை உருவாக்க அவரால் முடியும். ஏன், மண்ணையே மனிதனாய் மாற்றவும் அவரால் முடியும்.*




*நம் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. இன்று அவரை விசுவாசியுங்கள். பெரிய காரியங்களை காண்பீர்கள்.*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்

+91 97 9000 2006


குறைவுள்ளவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்
சில வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் லவ் பேர்ட்ஸ் என்று சொல்லக்கூடிய குருவிகளை வளர்த்தோம். பெரிய கூண்டில் 4 ஜோடி குருவிகளை வளர்க்க ஆரம்பித்தோம். ஒரு வருடத்திற்குள் அவை 38 குருவிகளாகப் பெருகியது. பார்ப்பதற்கு மிகுந்த அழகாக இருக்கும் அந்த பறவைகளில், நான் வெறுத்த காரியம் ஒன்றைத்தான் இன்று பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.




அந்த குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கையில், அதில் சில குஞ்சுகளை, அவைகளே கொத்தி சாகடித்தது. இரத்தக்களரியாய் அந்த குஞ்சுகள் சாகடிக்கப்படுவதைப் பார்க்க அதிர்ச்சியாயிருந்தது. அதைக் குறித்து நான் விசாரித்த போது, *சில குஞ்சுகள் நல்ல ஆரோக்கியமாய் இல்லை என்று தாய்ப் பறவைகண்டறிந்தால், அவைகளை தாய் பறவையே கொத்தி கொன்று போடும்* என்று சொன்னார்கள்.




இது கேட்பதற்கு விநோதமாய் இருந்தாலும், இது தான் உலக நடைமுறையாயிருக்கின்றது. *குறையுள்ளவர்களை சகித்து, அரவணைத்து வாழ இந்த உலகம் மறுக்கின்றது.* ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி ஹிட்லர், தன் ஆட்சியின் காலத்தில் குறையில்லாத நாட்டை அமைக்கப் போகின்றேன் என்று அறிவித்தான். *அதன் விளைவாக ஜெர்மனி தேசத்தில் 1939 முதல் 1945 வரை சரீர குறைபாடுள்ளவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் 3 லட்சம் பேரை கொன்று குவித்தான்.* அதில் ஏராளமான குழந்தைகளும் அடங்குவார்கள்.




இது கேட்பதற்கு கொடூரமாக இருந்தாலும், இதே மனநிலை இன்று உலகில் அநேகருக்கு இருக்கின்றது. அநேக பள்ளிகளில் ஞானம் குறைவாய் உள்ள குழந்தைகளை வகுப்பில் சேர்க்க மறுக்கின்றார்கள். அவர்கள் பள்ளி 100 சதவீத தேர்ச்சியை காட்ட வேண்டும் என்று சொல்லி பெயில் ஆகும் பிள்ளைகளை பள்ளியை விட்டு வெளியேற்றி விடுகின்றார்கள்.




*மேலும் ஞானம், பலம், அழகு, ஆரோக்கியத்தில் குறைவுள்ளவர்களை உலகம் கிண்டல் செய்து, கேலி பண்ணி மனம் நோகச் செய்கின்றது. அவர்களை வெறுத்து ஒதுக்குகின்றது, அவர்களை அரவணைத்து செல்வதில்லை.*




இயேசு சொல்கின்றார், *“உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.”* (லூக். 6:36) பழைய ஏற்பாட்டிலும், *“செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்”* என்கின்றார் தேவன். மேலும் *“ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்”* என்றும் வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது (சங். 82:3-4).




*குறைவுள்ளவர்களை அரவணைத்து அவர்களோடு இணைந்து வாழவே தேவன் நம்மை அழைக்கின்றார். குறைவுள்ளவர்களை அரவணைத்து செல்வதினால், ஒருவேளை நாம் செல்வதின் வேகம் குறையலாம், ஆனால் அதுவே தெய்வீக பிரமாணம். பலமும் பலவீனமும் இணைந்து செல்வதில் தான் தேவ நோக்கம் நிறைவேறுகின்றது.*

இயேசு தெரிந்துகொண்ட சீஷர்களின் பட்டியலைப் பார்த்தால் இந்த கருத்து நமக்கு புரியும். மீன்பிடிக்கும் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான், மற்றும் ஆயக்காரனாகிய லேவி, அரசியல் புரட்சியாளனாகிய செலோத்தே எனப்பட்ட சீமோன், திருடனான யூதாஸ் காரியோத்து மற்றும் பலர்… இவர்களில் அனைவரும் பல நிறை குறைவுள்ளவர்கள் தான், ஆனாலும் தேவன் அவர்களை ஒரே அணியாய் இணைத்து அவர்கள் மூலம் சபையை ஸ்தாபித்தார்.




*சரீரத்தில் குறைவுள்ளவர்கள், சுவாபத்தில் குறைவுள்ளவர்கள் மற்றும் ஆவிக்குரிய விசுவாச வாழ்க்கையில் குறைவுள்ளவர்கள் நம்மை சுற்றிலும் சூழ்ந்துள்ளனர். இன்னும் ஒரு படி மேலே சொன்னால், நாம் எல்லோரும் ஏதாகிலும் ஒரு விதத்தில் குறைவுள்ளவர்கள்தான். நாம் மற்றவர்களுடைய குறைகளை பொருட்படுத்தாமல், அவர்களை இயலாதவர்களாக எண்ணி, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போது, உலகம் பரலோகமாய் மாறும்*.




*“விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்”* என்று பவுல் அப்போஸ்தலன் சொல்வதை கவனியுங்கள்.




*பலவீனமும் பலமும் இணைந்து செயல்படுவது தான் தேவ திட்டம். பலவீனரையும் குறைவுள்ளவர்களையும் ஒதுக்கிவிட தீர்மானித்தால் இந்த உலகில் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள்.*

கர்த்தர் உங்களோடு பேசுவாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


வாழ்க்கை சாதனை
*மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?* (லூக். 9:25)




மகா அலெக்ஸாண்டர் என்ற கிரேக்க பேரரசன் கிமு 326 முதல் 323 வரை யுத்தம் செய்து, அன்று அறிமுகமான உலகின் பெரும்பகுதியை வீழ்த்தி தன் கையின் கீழ் கொண்டுவந்தான். உலகம் முழுவதையும் பிடித்துவிட்டோம் என்று எண்ணினான். ஆனால் அவன் யுத்தம் முடித்து தன் அரண்மனைக்கு திரும்பிச் செல்வதற்குள், அறியாத ஒரு வியாதியினால் மரித்துப் போனான்.




*இந்த உலகத்தையும் அதின் ஆஸ்திகளையும் சேர்க்க சேர்க்க மனிதனுக்கு ஏதோ சாதிப்பது போன்ற உணர்வு உண்டாகின்றது. ஆனால் அந்த உணர்வு ஒரு நாளில் வெறும் புஸ்வானமாக மாறிப் போகும்.*




*அப்போ எது உண்மையான சாதனை?*




*மனிதன் தன்னை படைத்த தேவனிடம் திரும்பி, தன் ஆத்துமாவை இயேசு சிந்தின இரத்தத்தின் மூலம் நரகத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதும், பிற மனிதர்களுடைய ஆத்துமாக்களும் அவ்வாறே இரட்சிக்கப்பட அவர்களுக்கு ஊழியம் செய்வதுமே இந்த உலகத்தில் நாம் செய்யக் கூடிய அதிக பட்ச சாதனை.*




*அந்த ஆத்துமாவின் இரட்சிப்பில் நிலைத்திருந்து கனி கொடுக்கவே நாம் வாழ்வில் அதிக பிரயாசங்கள் எடுக்க வேண்டும். மற்ற காரியங்களுக்கு நாம் எடுக்கும் அத்தனை பிரயாசங்களும் வீணானதே!*




*ஒரு நாளில் உங்கள் ஆத்தும வாழ்விற்காக நீங்கள் எடுக்கும் பிரயாசங்கள் என்னென்ன? உலக காரியங்களுக்காக நீங்கள் எடுக்கும் பிரயாசங்கள் என்னென்ன? இவைகளை பட்டியலிட்டு ஒப்பிட்டுப் பாருங்கள். உங்கள் வாழ்க்கை சரியானபடி வாழப்படுகின்றதா இல்லையா என்பது உங்களுக்கு புரியும்.*




*நம்மில் பெரும்பான்மையானோர் தவறான இலக்கை நோக்கி விரைந்து ஓடிக்கொண்டிருக்கின்றோம். போலியான இலக்குகளை அடைய நாடி தேடுகின்றோம். விழிப்படைவோம்.*




*கர்த்தருடைய வருகை வெகு சமீபம். நாமும் ஆயத்தமாவோம், பிறரையும் ஆயத்தப்படுத்துவோம்! இதுவே இந்த உலக வாழ்க்கையில் நாம் செய்யக் கூடிய பெரிய சாதனை!*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


அவரோ தனித்துப் போய்

பரபரப்பான உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மக்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள். பொருள் ஈட்டுவது, உலக காரியங்களை செய்வது, உறவுகளை நாடுவது, சிற்றின்பங்களில் ஈடுபடுவது என 24 மணி நேரமும் ஓட்டம்தான். அத்தனை ஓட்டம் ஓடியும் நிம்மதி, சமாதானம் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.




கிறிஸ்தவர்கள் நமக்குமே நிறைய குடும்பப் பொறுப்புகள், உலக வேலைகள், மற்றும் கர்த்தருக்கு செய்யும் ஊழியங்களும் இருக்கின்றது. ஆனால் இந்த வேலைகளால் நாம் மூழ்கிப் போய்விடக்கூடாது. *இவையெல்லாவற்றைக் காட்டிலும் நமக்கு ஒரு முக்கியமான இன்னொரு வேலை இருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது.*




“திரளான ஜனங்கள் அவருடைய (இயேசுவின்) உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள். *அவரோ (இயேசுவோ) வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.”* (லூக். 5:16)




இயேசு மூன்றரை ஆண்டுகாலம் ஊழியம் செய்த காலத்தில், அவர் செய்த அற்புத அடையாளங்களை பெற வேண்டியும், அவருடைய உபதேசங்களை கேட்பதற்காகவும் ஆயிரக்கணக்கானோர் எப்போதும் அவரை பின்பற்றினார்கள். இயேசு தம் ஊழியத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நாட்கள் அவை!




*ஆனால் எத்தனை புகழ், எத்தனை மக்கள் கூட்டம், எத்தனை பொறுப்புகள் இருந்தாலும், தனியே போய் பிதாவிடம் ஜெபிக்க அவர் ஒருநாளும் தவறியதில்லை. அதுதான் இயேசுவின் வெற்றியின் இரகசியம்! அதனால் தான் அவரால் பிதாவின் சித்தத்தை முழுமையாக நிறைவேற்ற முடிந்தது.*




சில நேரங்களில் கர்த்தருக்கு செய்யும் ஊழியமே நம் வாழ்க்கையை கர்த்தரை விட்டு பிரித்துவிடும். கர்த்தரோடு உறவாடாமல், கர்த்தருக்கு ஊழியம் செய்ய தேவையில்லை. *கர்த்தரோடு நமக்கிருக்கும் உறவின் நிரம்பி வழிதலே, நம் ஊழியமாக இருக்க வேண்டும்.* முதலில் நாம் நிரம்ப வேண்டும், பின்புதான் நம்மிலிருந்து பிறர் நிரம்ப முடியும்.




*ஊழியத்திலோ, உலக வேலையிலோ நாம் வெற்றிகளை காணத் துவங்கும் போது, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வெற்றிகள் நம்மை வஞ்சித்து திசைமாற்றிவிடும். கர்த்தருடைய உறவை விட்டுவிட்டு, நாம் வெற்றிகளின் பக்கம் ஓட ஆரம்பிக்கும் ஆபத்து இருக்கின்றது. ஒரே பரபரப்பாய் காணப்படுவோம், ஆனால் முடிவில் உன்னை நான் அறியேன் என்று சொல்லும் தேவ சத்தத்தை கேட்கவேண்டியதிருக்கும்.*




*இயேசு எத்தனை வெற்றிகளின் மத்தியிலும், அத்தனையும் ஒதுக்கிவிட்டு விட்டு, அமைதியாய் பிதாவின் சமுகத்தில் அமர்கின்றார். அதுவே ஆறுதல்! அதுவே பேரமைதி!! அதுவே பேரானந்தம்!!!*




பிசாசின் தந்திரம் என்னவென்றால், கர்த்தருடைய பிரசன்னத்தில் தனியே அமருவதைவிட முக்கியமான வேலை இருப்பதாக நமக்கு காட்டுவான். ஆனால் நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். *தேவ சமுகத்தில் அமருகின்ற நேரத்தில் அதை விட முக்கியமான வேலை எதுவும் இல்லை! இல்லவே இல்லை!*




*இன்றே தீர்மானியுங்கள்! தனித்துப் போய் தேவ சமுகத்தில் அமர்ந்து, அவரோடு உறவாடுங்கள்!*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006


அழகான வாழ்க்கை
மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை பிறருக்கு முன்பாக அழகாக வெளிப்படுத்த, எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். ஆடம்பரமான ஆடைகள், விலையுயர்ந்த கார், ஆபரணங்கள் என்று தங்களை மற்றவர்கள் மெச்சிக் கொள்ளும் அளவிற்கு வெளிக்காட்டுகின்றார்கள். இதற்கும் மேல் பலவித கிரீம்கள் மற்றும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்கின்றார்கள்.




*ஆனால் ஆண்டவராகிய தேவனே, நம் வாழ்க்கையைப் பார்த்து, “எவ்வளவு அழகானவை” என்று மெச்சிக் கொண்டால், அது எத்தனை பெரிய ஆசீர்வாதம்.*




இஸ்ரவேலைப் பார்த்து கர்த்தர் சொன்னார், *யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!* (எண். 24:5).




இதற்கு காரணம் என்ன? எண். 24:2ம் வசனத்தில், இஸ்ரவேலை சபிக்க வந்த பிலேயாம், “தன் கண்களை ஏறெடுத்து, *இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்;* தேவ ஆவி அவன்மேல் வந்தது.”




இஸ்ரவேல் தங்கள் கோத்திரங்களின்படி பாளையம் இறங்கியிருந்தது என்பதை கவனியுங்கள். பாளையம் இறங்குவது என்றால் தற்காலிகமாக கூடாரம் போட்டு தங்கியிருப்பது என்று அர்த்தம். எண்ணாகம்ம் 2ம் அதிகாரத்தில் இஸ்ரவேலர்கள் எப்படி தங்கள் கூடாரங்களைப் போட்டு தங்க வேண்டும் என்று கர்த்தர் தெளிவாக விளக்கியிருந்தார்.




*தற்காலிகமாக போடப்படும் கூடாரம் தானே, அவரவர் விரும்பும் இடத்தில், இஷ்டப்படி போட்டுக் கொள்ளட்டும் என்று கர்த்தர் விடவில்லை. சகலத்தையும் ஒழுங்கின்படி செய்யும் நம் ஆண்டவர், தம் பிள்ளைகள் தற்காலிகமாய் கூடாரம் போட்டு தங்கினாலும், வரிசையாய், ஒழுங்காய் அதைச் செய்ய வேண்டும் என விரும்பினார்.*



அப்படி வரிசையாய் அழகாய் போடப்பட்டுள்ள கூடாரங்களைப் பார்த்துதான், கர்த்தர் சொன்னார், “யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!”




*இன்றும் நம் வாழ்க்கையை அழகுபடுத்துவது, நம்முடைய வாழ்க்கையில் காணப்படும் ஒழுக்கம்தான்.* அநேகர் நாங்கள் ஆவிக்குரியவர்கள் என்று சொல்லிக்கொண்டு தங்கள் வாழ்க்கையில் ஒழுங்குகளை கடைபிடிக்காமல் இஷ்டப்படி, அலங்கோலமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அது கர்த்தருடைய பார்வையில் அருவருப்பாகவே உள்ளது.




*அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலைகளைச் செய்வதில் ஒழுங்கு வேண்டும். ஜெபத்தில், வேத தியானத்தில் ஒழுங்கு வேண்டும். சாப்பிடுவதில் ஒழுங்கு வேண்டும். செல் போன் பயன்படுத்துவதில் ஒழுங்கு வேண்டும். உங்கள் ஆடைகளில் ஒழுங்கு வேண்டும். வீடுகளைக்கூட ஒழுங்காய் சுத்தமாய் வைத்திருக்க வேண்டும்.*




சிலருடைய வீடுகளில் பொருட்கள் சிதறிக்கிடக்கும். துணிமணிகள் குவிந்து கிடக்கும். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கமாட்டார்கள். இஷ்டப்படி வாழ்வார்கள். இஷ்டப்படி தூங்குவார்கள்.




இப்படிப்பட்ட வாழ்க்கையை கர்த்தர் அருவருக்கின்றார். *கர்த்தர் ஒழுங்கின் தேவன். அவர் படைத்த இயற்கை எத்தனை ஒழுங்காக, அழகாக படைக்கப்பட்டிருக்கின்றது. சூரியன் சந்திரன் எத்தனை நேர்த்தியாக, இந்த பூமிக்கு வெளிச்சம் கொடுக்கின்றது.*




*ஒழுங்குள்ள வாழ்க்கையை வாழ பிரயாசப்படுங்கள். கர்த்தர் மெச்சிக் கொள்ளும் வாழக்கை ஒழுக்கத்தின் வாழ்க்கை தான். உங்கள் வாழ்க்கையில் காணப்படும் ஒழுங்கின்மைகளை கண்டறிந்து இன்றே மாற்றுங்கள்.*

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.