பாத்திரத்தின் உள்ளே!
ஒரு ஹோட்டலுக்கு உணவருந்த சென்றிருந்தேன். மிக ஆடம்பரமாக அனைத்தையும் வைத்திருந்தனர். தண்ணீர் குடிக்கும் டம்ளர் முதல் சாப்பிடும் தட்டு, ஸ்பூன் என அனைத்தும் பளபளத்தது. மிகவும் ஆவலாய் பளபளக்கும் டம்ளரில் தண்ணீர் ஊற்றி குடிக்க முற்பட்ட போது டம்ளருக்கு உள்ளே கவனித்துப் பார்த்தேன். ஆங்காங்கு அழுக்குகள் ஒட்டிக் கொண்டிருந்தது. அந்த அழுக்கு ஊற்றப்பட்ட தண்ணீரில் கலந்துவிட்டிருந்தது. அத்தனை தண்ணீரையும் அது அழுக்காக்கியிருந்தது.
*ஒரு பாத்திரத்தின் வெளியே எத்தனை சுத்தமாகவும், ஆடம்பரமாகவும் இருந்தாலும், அதன் உள்ளே அழுக்கு காணப்படுமானால் அந்த பாத்திரத்தை எவரும் பயன்படுத்த முடியாது. மேலும் அதனுள் ஊற்றப்படுகின்ற அனைத்தையும் அது கெடுக்கும்.*
*சிலர் தங்கள் வெளிப்புறத்தை சுத்தமாக்குவதிலும், வெளிப்புறத்தில் பிரமாண்டமாய் தோற்றமளிப்பதிலும் அதிக கவனம் செலுத்துகின்றார்கள். ஆனால் தங்கள் உட்புறத்தை கவனிப்பதேயில்லை.*
அப்படிப்பட்டவர்களைப் பார்த்து இயேசு சொல்கின்றார்: “பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், *உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.* மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ?” (லூக். 11:39-40)
வெளிப்புற சுத்தம் மற்றும் உட்புற சுத்தம் இதில் எது முக்கியம்? இரண்டுமே தேவைதான். *ஆனால் உட்புற சுத்தமே அதிக முக்கியம்.* அதைத்தான் இயேசுவும் சொல்கின்றார்.
வெளிப்புற சுத்தமும், அலங்காரமும், ஆடம்பரமும் இந்த உலகத்தில் அதிகமாய் முக்கியப்படுத்தப்படுகின்றது. மற்றவர்கள் மத்தியில் தங்களை நீதிமானாக, நல்லவர்களாக காட்டுவதில் அதிக கவனமாய் இருக்கின்றார்கள். இந்த உலகத்தில் தங்களின் இமேஜை சுத்தமாக காத்துக்கொள்ள வேண்டும் என்று ஜாக்கிரதையாயிருக்கின்றார்கள். *ஆனால் தனி வாழ்க்கையில், சிந்தனை வாழ்வில் அவர்களுக்கு சுத்தம் உண்டா?*
இயேசு தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அந்தரங்க ஜீவியத்தில் அதிக கரிசனை கொண்டவராய் இருக்கின்றார் என்பதை வேதத்திலிருந்து கற்றுக் கொள்ள முடியும். *“அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.”* (மத். 5:4)
*வெளியே நாம் போடும் ஸ்டன்ட் எல்லாம் பார்த்து இந்த உலகம் வேண்டுமானால் ஏமாறலாம். ஆனால் நம் ஆழ்மனதின் நோக்கங்களையும் நன்கு அறிந்திருக்கும் நம் ஆண்டவராகிய கர்த்தரை ஒருபோதும் நாம் ஏமாற்றவே முடியாது.*
உங்கள் வாழ்வின் உட்புறம் எப்படி உள்ளது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். பாத்திரம் உட்புறத்தில் சுத்தமாயில்லாத பட்சத்தில், அதில் போடப்படும் அனைத்தையும் அது கெடுத்துவிடும். பின்னர் அவைகளை கீழேதான் கொட்ட நேரிடும். *அது போல உங்கள் மனதில் சுத்தமில்லாத போது, உங்கள் வாழ்வில் உங்களுக்கு கிடைக்கும் அனைத்து நன்மைகளும் கெட்டு, உங்களை விட்டு எடுபட்டுப் போகும்.*
*இனி வரும் நாட்களில் உங்கள் முகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உங்கள் மனதிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.*
கர்த்தர் சாமுவேல் தீர்க்கதரிசியிடம் சொன்னார்: *“நீ …முகத்தையும், …சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; …மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.”*
*முகத்தையும், தோற்றத்தையும் வைத்து ஊழியக்காரனைக் கூட மயக்கிடலாம். ஆனால் கர்த்தரை ஒருவரும் ஒருபோதும் மயக்கமுடியாது. ஏனென்றால் கர்த்தர் இருதயத்தை அல்லது மனதைப் பார்க்கின்றார். உட்புற சுத்தம்தான் அவருக்கு இன்றியமையாதது.*
*உங்கள் உட்புறத்தை (மனதை) சுத்தப்படுத்துங்கள். அது கர்த்தர் வாசம் பண்ணும் ஆலயம்!*
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
நீ மரணமடையமாட்டாய்!
ஒரு சகோதரன் என்னிடத்தில் ஜெபிக்க வந்தார். அவர் அவருக்கு நெருக்கமான சிலரின் மரணங்களை பார்த்த பிறகு ஒரு வித மரண பயம் அவரை பற்றிக் கொண்டது. சிறிய வயிற்று வலி வந்தாலும், வயிற்றில் கட்டியிருக்குமோ? அந்த கட்டி கேன்சராய் இருக்குமோ? என்று பயந்து நடுங்குவார். கொஞ்சம் படபடவென்று வந்தாலே ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்று பயப்படுவார். ரோட்டில் சென்றால் விபத்து நேரிடும் என்று சொல்லி, தன் வீட்டை விட்டு கூட வெளியே வராமல், வீட்டுக்குள்ளேயே முடங்கிகிடந்தார்.
*மரண பயம் என்பது கொடுமையானது. மரண பயம் என்பது மரணத்தை விட கொடுமையானது. மரண பயம் ஒவ்வொரு வினாடியும் மரணிப்பது போன்ற உணர்வை கொடுத்து நம்மை வேதனைபடுத்தக் கூடியது.*
வேதத்தில் சிமியோன் என்ற ஒரு மனிதன் இருந்தான். அவன் பவுல் அப்போஸ்தலனின் குருவான கமாலியேலின் தந்தை. யூதர்களின் ஆலோசனை சங்கமான சனகரிப் சங்கத்தில் இவர் பிரதானமானவர். இவன் மிகவும் வயதானவன்.
இவர் நீண்ட நாட்களாய் மேசியாவின் வருகைக்காக ஜெபித்து காத்திருந்தான். *“கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய்* என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.” (லூக். 2:26)
அதே போல திடீரென்று ஆவியின் ஏவுதலால் ஒரு நாள் தேவாலயத்திற்கு வந்தான். அப்போது மரியாளும் யோசேப்பும் ஒரு மாத பிள்ளையாகிய இயேசுவை தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு பலி செலுத்த தேவாலயத்திற்கு வந்தார்கள். அந்த குழந்தை இயேசுவை பார்த்த உடனே அவன் மகிழ்ந்தான்.
“அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு தேவனை ஸ்தோத்திரித்து: *ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;…* தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.” (லூக். 28-32)
மேலும் மரியாளிடம் இயேசுவைக்குறித்து தீர்க்கதரிசனமாக சில வார்த்தைகள் பேசினான். *இது தான் அவன் வாழ்வில் தேவன் வைத்திருந்த நோக்கம்.*
*கவனியுங்கள்! அந்த சிமியோன் வெகு வயதாயிருந்தாலும், கர்த்தர் அவனை ஒரு நோக்கத்துடன் உயிருடன் வைத்திருந்தார். அந்த நோக்கம் நிறைவேறும் வரை அவனை மரிக்கவிடவில்லை. “கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய்” என்று தேவன் அவனுடனே பேசியிருந்தார்.*
உங்களுக்கு அருகில் பலர் மரணிக்கலாம், *ஆனால் உங்களுக்கான தேவ நோக்கம் நிறைவேறும் வரை நீங்கள் மரணிக்க மாட்டீர்கள்.* எந்த வியாதி வந்தாலும், எந்த பிரச்சனை நேரிட்டாலும் உங்கள் உயிர் உங்களை விட்டு எடுக்கப்படமாட்டாது. யோபுவைக் குறித்து தேவன் சாத்தானிடம் சொல்லும் போது, “அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; *ஆகிலும் அவன் பிராணனைமாத்திரம் தப்பவிடு* என்றார்.” (யோபு 2:6)
*தேவ பிள்ளைகளின் உயிர் தேவனுடைய கரத்திலிருக்கின்றது. கர்த்தர் விரும்பும் வேளைதான் அந்த உயிர் அவர்களைவிட்டு எடுக்கப்படும். அதற்கு முன் எந்த சாத்தானும், எந்த மனிதனும், எந்த வியாதியும் அந்த உயிரை தொடமுடியாது.*
அதற்காக நாம் அஜாக்கிரதையாக இருந்துவிடக்கூடாது. உங்கள் சரீரத்தை பேணிக் காப்பதும், வியாதியின் நேரத்தில் மருத்துவம் எடுத்து அதை குணமாக்குவதும் உங்கள் கடமை. நாம் நம் கடமையை செம்மையாய் செய்யும் போது, கர்த்தர் அவர் கடமையை செம்மையாய் செய்வார்.
*எனவே பயப்படாதீர்கள். உங்களை கர்த்தர் காத்துக்கொள்வார். உங்களுக்கான தேவ நோக்கம் நிறைவேறும் வரை நீங்கள் நிச்சயம் மரணமடைய மாட்டீர்கள்!*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
திடீரென்று நடக்கின்றதா? திட்டமிட்டு நடக்கின்றதா?
*நம் வாழ்வில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் தரக்கூடிய சம்பவங்கள் மாறி மாறி நடந்து கொண்டே தான் இருக்கின்றன.* ஒவ்வொரு எதிர்பாராத நிகழ்வும் நடக்கும் போது நம் மனதில் குழப்பங்கள் உண்டாகின்றன. விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும் போது ஏன்? ஏன்? என்ற கேள்விகள் உண்டாகின்றன. நமக்கு அனுகூலமான காரியங்கள் நடக்கும் போது ஆச்சரியம் உண்டாகின்றது. இதினால் நம் வாழ்க்கையை குறித்த வெளிச்சம் நமக்கு இல்லாமல் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
வேதத்தில் *இயேசுவின் தாயாகிய மரியாள் வாழ்க்கையிலும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் தரும் சம்பவங்கள் மாறி மாறி நடந்தது.*
👉 திடீரென்று கன்னியாகிய மரியாள் கர்ப்பவதியானார்கள்,
👉 திடீரென்று நிறைமாத கர்ப்பினியாய் பெத்லகேமுக்கு சென்று மாட்டுக் கொட்டிலில் பிள்ளை பெற்றார்கள்,
👉 திடீரென்று அவள் பெற்ற பிள்ளையாகிய இயேசுவை தூதர்கள் பாடி துதிக்கின்றார்கள்,
👉 திடீரென்று தூர தேசத்து சாஸ்திரிகள் எல்லாம் வந்து பார்த்தார்கள்,
👉 திடீரென்று அந்த நாட்டின் ஏரோது அரசன் இயேசுவாகிய பிள்ளையை கொல்லத் தேடுகின்றான்,
👉 திடீரென்று அறியாத தேசமாகிய எகிப்துக்கு குடும்பமாக தப்பி செல்கின்றார்கள்,
👉 திடீரென்று பிள்ளையாகிய இயேசுவை காணாவில்லை என்று தேடினால் தேவாலயத்தில் ஞானிகளுடன் பேசிக்கொண்டிருக்கின்றார்
👉 திடீரென்று இயேசு ஊழியத்திற்கென்று பிரிந்து சென்றுவிட்டார்
👉 திடீரென்று இயேசுவை கைது செய்து சிலுவையில் அறைந்து விட்டார்கள்
👉 திடீரென்று இயேசு உயிர்த்தெழுந்து அனைவருக்கும் தரிசனமானார்
👉 திடீரென்று இயேசு பரமேறிச் சென்றுவிட்டார்
*திடீரென்று திடீரென்று எத்தனை காரியங்கள் நடந்தாலும், மரியாள் எதற்கும் அதிர்ச்சியும் அடையவில்லை, குழப்பமும் அடையவில்லை. மாறாக வேறொன்றைச் செய்தார்கள்:*
“… யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். *மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.”* (லூக். 2:18-19)
“அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள். *…அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.”* (லூக். 2:47, 51)
*அனைவரும் ஆச்சரியத்தோடும், அதிர்ச்சியோடும் அனைத்தையும் எதிர்கொள்கையில், மரியாள் நடக்கும் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்தில் வைத்து சிந்தனை பண்ணினார்கள் என்று வேதம் கூறுகின்றது. மனதில் வைத்து சிந்தனை செய்தல் என்றால் என்ன?*
*சிந்தனை பண்ணினாள்* என்ற வார்த்தைக்கு கிரேக்க பதத்தில் *συμβάλλω* என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அர்த்தங்களில் ஒன்று *தனக்குள் உரையாடுதல்.* அதாவது *நடக்கும் காரியங்களை ஆதி முதல் அந்தம் வரை ஒன்றுக்கொன்று ஒப்பிட்டு தனக்குள் பேசிக் கொள்வது.*
*மரியாள் தன் வாழ்வில் திடீரென்று ஒன்று நடந்தாலும், அதை ஆரம்பம் முதல் தன் வாழ்வில் நடக்கும் அனைத்துக் காரியங்களோடும் ஒப்பிட்டு, அவைகளை ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி, அதில் உள்ள தெய்வீக திட்டத்தின் நடத்துதலை உணர்ந்த படியினால் அவர்கள் எதற்கும் அதிர்ச்சி அடையவில்லை. எல்லாவற்றையும் தன் இருதயத்தில் வைத்து தனக்குள் பேசிக் கொண்டு அமைதியாயிருந்தார்கள்.*
இயேசுவைப் பெற்ற பின் அவர்கள் மிக மேன்மையும் அடைந்தார்கள், அதே நேரத்தில் மிக வேதனையின் வழியாகவும் கடந்து போக நேரிட்டது. ஆனால் அவை அனைத்திலும் யெகோவோ தேவன் ஆளுகை செய்து வழிநடத்துவதை அறிந்திருந்தார்கள். தேவ திட்டம் அவர்கள் மூலமாய் நிறைவேறுவதை அறிந்திருந்தார்கள். *சாதகமோ, பாதகமோ, எதுவும் திடீரென்று நடப்பதில்லை, தேவ திட்டப்படியேதான் நடக்கின்றது என்பதை புரிந்திருந்தார்கள்.*
*உங்கள் வாழ்வில் ஆதி முதல் இன்று வரை நடக்கும் காரியங்களை தொடர்பு படுத்தி, அவைகளில் உள்ள தெய்வீக திட்டத்தை புரிந்து கொண்டீர்களென்றால், நீங்களும் பதட்டப்படாமல் சமாதானமாய் வாழ முடியும். வாழ்க்கையில் விரும்பும் நிகழ்வுகள் நடக்கும் போது அதிகமாய் குதிக்கவும் மாட்டோம், விரும்பாத நிகழ்வுகள் நடக்கும் போது அதிகமாய் புலம்பவும் மாட்டோம்.*
*கர்த்தருடைய கரம் மரியாள் மேலிருந்தது போல உங்கள் மேலும் இருக்கின்றது. உங்கள் வாழ்வில் நடக்கும் அனைத்திற்கும் ஒரு தெய்வீக காரணமுண்டு. அந்த காரணம் உங்களுக்கு இன்று புரியாவிட்டால் பரவாயில்லை. அழுது புலம்பாதீர்கள், முறுமுறுக்காதீர்கள், சோர்ந்து போகாதீர்கள்.*
*ஆதிமுதல் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் காரியங்களை ஒன்றுக்கொன்று ஒப்பிட்டுப் பாருங்கள். அப்படி பார்க்கும் போது, கர்த்தர் சரியான பாதையில், தம் தெய்வீக திட்டப்படி உங்களை நடத்துகின்றார் என்பதை அறிந்து கொள்வீர்கள்.*
*மரியாள் மூலமாய் இயேசு பிறந்து எப்படி இந்த உலகம் ஆசீர்வதிக்கப்பட்டதோ, அதே போல உங்கள் மூலமாகவும் இந்த உலகம் ஆசீர்வதிக்கப்படும்.*
*தேவ பிள்ளைகள் வாழ்வில் தீடீரென்று நடப்பவைகள் எதுவும் திடீரென்று நடக்கவில்லை. அவைகள் தேவன் திட்டமிட்டே நடக்கின்றன.*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
எலியாவே இங்கு உனக்கு என்ன காரியம்?
1 இராஜாக்கள் 19
ஒரு காலத்தில் உயிருக்கு பயப்படாமல், ராஜாவுக்கு முன்பாக சவால் விட்டு பேசினார் எலியா தீர்க்கதரிசி. ஜனங்களுக்கு முன்பாக புரட்சிகரமான பிரசங்கம் செய்து: "நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்" என்று சவால் விட்டான். வெறும் பேச்சு மட்டுமல்ல, வானத்திலிருந்து அக்கினியை இறக்கி கர்த்தரே தெய்வம் என்று நிரூபித்தான்.
ஆனால் இன்று ராணி யேசபேல் தன்னை கொலை செய்ய தேடுகிறாள் என்று பயந்து ஓடி, வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்.
*ஆனால் நாம் சோர்ந்து போகும் நேரங்களில் நம்மை தூக்கி எடுத்து, மீண்டும் நிலைநிறுத்த, நம் கர்த்தர் நம்மை நோக்கி வருவார்.* வசனத்தில் வாசிக்கிறோம், கர்த்தருடைய தூதன் எலியாவை தட்டியெழுப்பி, ஆகாரங்கொடுத்து அவனை பலப்படுத்தினார். அவனோ சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கினான். கர்த்தர் அவனை அவசரப்படுத்தவில்லை. நம்முடைய பலவீனங்களை அறிந்த தேவன். எலியா திடப்படுவதற்கு அவனுக்கு சற்று நேரங்கொடுத்தார்.
பின்னர் அவனை கர்த்தருடைய தூதன் உற்சாகப்படுத்தி, நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான். எலியா எழுந்து 40 நாட்கள் நடந்து ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதத்திற்கு சென்று, அங்கும் ஒரு கெபிக்குள் போய் தங்கினான்.
*சோர்வு என்பது ஒரு வல்லமையான பிசாசின் ஆயுதம். எத்தனை பெரிய வீரனையும் தாக்கி, வீழ்த்தி, உட்கார வைக்கும். மேடையில் முழங்கினவனை, வனாந்திரத்திலும், கெபியிலும் முடங்க வைத்ததே! தீவிரமாய் ஓடினவனை, தரிசனம் மறந்து பதுங்க வைத்ததே!*
அந்நேரத்தில் தான் கர்த்தருடைய குரல் அவனுக்கு நேராக வருகின்றது, *"எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்?" நீ இருக்க வேண்டிய இடம் இதுவல்லவோ? நீ அரண்மனையில் இராஜாவுக்கு சவால் விட்டு பேச வேண்டியவன் அல்லவா? நீ ஜனங்கள் மத்தியில் எழுப்புதலை கொண்டு வருகின்றவன் அல்லவா? நீ தேவனுக்காய் வைராக்கியம் பாராட்டுகின்றவன் அல்லவா?*
*எங்கோ தேவனுக்காய் பிரகாசித்துக் கொண்டு இருக்க வேண்டிய நீ, இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாய்? என்று கர்த்தர் எலியாவிடம் கேள்வி எழுப்பினார். இன்று உங்களிடமும் அதே கேள்வியை கர்த்தர் எழுப்புகின்றார்.*
*ஒருவேளை இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள், சில சூழ்நிலைகளால் சோர்ந்து போய், மனமுடைந்து உட்கார்ந்திருந்தீர்களென்றால், எழும்புங்கள். நீங்கள் இருக்கவேண்டிய இடம் இதுவல்ல. நீங்கள் இருக்க வேண்டிய நிலையும் இதுவல்ல. நீங்கள் போக வேண்டிய தூரம் வெகுதூரம்! உங்களுக்காக கர்த்தர் ஒரு பெரிய காரியத்தை வைத்திருக்கின்றார்.*
*எழும்புங்கள்! சோர்வைக் கொடுத்து பிசாசு உங்களை வஞ்சித்துக் கொண்டிருக்கின்றான். உங்கள் மூலமாய் தேவன் செய்ய நினைக்கும் காரியங்களை தடுக்க நினைக்கின்றான். அவனுக்கு செவிகொடுக்காதிருங்கள். கர்த்தருடைய சத்தம் கேளுங்கள். எழும்பி கிரியை செய்யுங்கள்!*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
என் தேவனே ஏன் எனக்கு தூரமாயிருக்கிறீர்?
சங்கீதம் 22ல் சங்கீதக்காரன் தாவீது கர்த்தரை நோக்கி அபயமிடுகிறார். தன்னுடைய பிரச்சனைகளின் மத்தியில், தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தும் விதமாய் கதறுகிறார். (சங். 22:1) *என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?*
தாவீது தன் வேதனையின் மத்தியில் கேட்கும் இந்த கேள்விகளில் முரண்பாடு இருப்பதை காண்கிறேன். நம்முடைய ஆண்டவர் யோசுவா 1:5-6ல் “நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; *நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.* பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு *நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.”* என்று கர்த்தர் யோசுவாவிடம் சொல்கின்றதை பார்க்கின்றோம்.
நம்மை ஒரு திட்டத்தோடு கர்த்தர் நடத்திக் கொண்டிருக்கும் போது, அவர் நம்மோடு கூடவே இருக்கின்றார். அவர் நம்மை விட்டு எந்த சூழ்நிலையிலும் விலகவே மாட்டார் என்று வேதம் அழுத்தமாய் சொல்கின்றது. தாவீதையும் தம் திட்டத்தின்படி அரசனாக்கும்படி கர்த்தர் தான் அபிஷேகம் பண்ணியிருக்கின்றார். அப்படியிருக்க தாவீது தன் பிரச்சனைகளின் மத்தியில் ஏன் தூரமாயிருக்கிறீர்? ஏன் கைவிட்டீர் என்று கேட்பது முரண்பாடாக இருக்கின்றது.
நாம் கூட அநேக நேரங்களில் ஆண்டவர் நம்மை விட்டு தூரமாயிருப்பது போல உணருகிறோம் அல்லவா? நம்முடைய பிரச்சனைகளில் நம்மை கண்டு கொள்ளாமல் கர்த்தர் விட்டு விட்டார். மறந்து விட்டார் என்றெல்லாம் நினைக்கின்றோம், அறிக்கையுமிடுகிறோம். ஆனால் உண்மை என்ன?
*கர்த்தர் நம்மை விட்டுவிலகுவதேயில்லை. நம்மை விட்டு ஒருபோதும் தூரம் போவதுமில்லை.*
*நாம் வேண்டுமானால் தேவனை விட்டு தூரம் போயிருக்கலாம். நாம் வேண்டுமானால் நம் பிரச்சனைகளின் மத்தியில் கர்த்தரை உணராமல் மறந்து போயிருக்கலாம்.* விலகுவதும், கைவிடுவதும் நாம் செய்கின்ற காரியங்கள். ஆனால் ஆண்டவரை பார்த்து ஏன் தூரமாயிருக்கிறீர் என்று வாய் கூசாமல் கேட்டுவிடுகின்றோம். பழியை அடுத்தவர் மேல் போடுவது பொதுவான மனித இயல்புதானே!
எந்த வேளையிலும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கர்த்தர் விலகிவிட்டார், தூரம் போய்விட்டார் என்பது போல உணர்ந்தீர்களென்றால் உடனே புரிந்து கொள்ளுங்கள், நாம் தூரமாய் போகின்றோம், நாம் விலகுகிறோம். பிரச்சனைகளும் துன்பங்களும் நம்முடைய கண்களை மறைக்கின்றது.
கடந்த நாட்களில் ஒரு தாங்க முடியாத பிரச்சனையினால் எனக்கும் இந்த உணர்வு ஏற்பட்டது. எனக்கும் கர்த்தருக்கும் பல கிலோமீட்டர் தொலைவு இருப்பது போல் ஒரு உணர்வு உண்டானது. என்னடா வாழ்க்கை என்ற அங்கலாய்ப்பு என்னை சூழ்ந்து கொண்டது. ஆனால் ஆவியானவர் உடனே என்னை ஜெபிக்க ஏவினார். *என்ன ஆச்சரியம் ஜெபிக்க ஆரம்பித்த உடன் அந்த தூரம் மறைந்தது, நான் தேவனுடைய மடியில் இருப்பதை போல உணர ஆரம்பித்தேன்.* துக்கம் மறைந்து, நம்பிக்கை பிறந்தது, மகிழ்ச்சி கரைபுரண்டது.
ஜெபத்தில் தேவ சமுகத்தில் அமருங்கள்! ஆண்டவருக்கு அருகில் வாருங்கள்!! பிரச்சனைகளை மேற்கொள்ளும் பெலத்தை பெறுங்கள்!!!
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
உங்கள் வீட்டில் துவங்குகின்றது ஊழியம்
கதரேனருடைய நாட்டில் பிசாசு பிடித்த ஒருவன் இயேசுவுக்கு முன் வந்தான். அவன் நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும் வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்தவனுமாயிருந்தான் என்று வேதம் சொல்கின்றது. அவனுடைய வாழ்க்கையை நான் கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கின்றேன்.
வஸ்திரம் தரியாமல், பிசாசு பிடித்துத் திரியும் ஒருவனை வீட்டில் எப்படி வைத்துக் கொள்வார்கள். அவனை அடித்து துரத்தியிருப்பார்கள். அவன் வீதி வீதியாய் சுற்றியிருப்பான். ரோட்டில் பார்க்கின்றவர்கள் அனைவரும் கல்லெறிந்திருப்பார்கள். இப்படி பிசாசினாலும் மக்களினாலும் துன்புறுத்தப்பட்டதினால், அவன் கல்லறைகளில் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து கொண்டிருப்பான்.
இப்படி அருவருப்பாய் தோற்றமளித்த அவனை இயேசு பிசாசின் பிடியினின்று விடுதலையாக்கினார். வேதம் சொல்கின்றது, *சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.* (லூக். 8:35)
*இது கண்கூடான வாழ்க்கையின் மாற்றம்!*
அதன் பின்பு, பிசாசுகள் நீங்கின மனுஷன் இயேசுவிடம், அவருடனே கூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். ஆனால் இயேசு அவனை நோக்கி: *நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி* என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், *இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.* (லூக். 8:38-39)
*இது மாற்றத்தின் விளைவாய் வந்த சாட்சி!*
ஏற்கனவே அவனை அருவருப்பாய் பார்த்த வீட்டார் மற்றும் சொந்த மக்கள் மத்தியில் சாட்சி சொல்லும் படி இயேசு அவனை அனுப்பி விடுகிறதைப் பார்க்கிறோம்.
*கவனியுங்கள், நமது முதல் ஊழியம் நம் வீட்டார் மற்றும் சொந்த பட்டணத்தில்தான். நாம் இரட்சிக்கப்பட்டு நம் வாழ்க்கை மாறும் போது, நம் வீட்டார், சொந்த பந்தங்கள் மற்றும் சுற்றுப்புறத்தாருக்கு முன் நாம் சாட்சி பகரவேண்டியது அவசியம். நம்மில் நடந்த மாற்றத்தை ஜனங்கள் முன் வெளிப்படையாய் நிரூபித்துக் காட்ட வேண்டியது அவசியம்.*
*நம் வீட்டாருக்கே நாம் முதல் மிஷனரியாயிருக்கின்றோம்.*
*உலகமெங்கும் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் என்ற தேவன், எருசலேமில் துவங்கி தான் பூமியின் கடைசி பரியந்தமும் சாட்சிகளாயிருப்பீர்கள் என்று சொல்வதை கவனியுங்கள்.*
*சொந்த பட்டணத்தில் சாட்சிக் கேடாயிருந்து கொண்டு, நம்மால் உலகத்தைக் கலக்க முடியாது. நம் சாட்சி வாழ்க்கையே நம் குடும்பத்தாரை 90 சதவீதம் மாற்றிவிடும். அநேக குடும்பங்களில் இரட்சிக்கப்பட்டவர்களின் சாட்சிக் கேடான வாழ்க்கையால் மற்றவர்கள் இடறலடைந்து, ஆண்டவரை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதை அறிந்திருக்கின்றேன்.*
*உங்கள் வீட்டார், சொந்தபந்தங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டார்களா? அவர்கள் உங்கள் வாழ்க்கையில் தெய்வீக மாற்றம் நடைபெற்றதை கண்கூடாக பார்க்கின்றார்களா? அவர்களிடம் இயேசுவைப்பற்றி அறிவித்தீர்களா?*
*உங்கள் வீட்டாரின் இரட்சிப்பிற்காய் உபவாசித்து ஜெபியுங்கள். அவர்கள் முன் சாட்சி வாழ்க்கை வாழுங்கள். அவர்களிடம் அவ்வப்போது ஆண்டவரின் அன்பை அறிவியுங்கள். நம் சொந்த குடும்பத்தார், உறவினர் நரகத்தில் வேதனைப்படுவது நமக்கு நன்றாய் இருக்குமோ?*
*உங்கள் ஊழியத்தை உங்கள் வீட்டிலே துவக்குங்கள்!*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006

Thanks for using my website. Post your comments on this