Type Here to Get Search Results !

Psalm 35-39 | எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம் | Deep Bible Study | சங்கீதம் 35-39 | Jesus Sam

சங்கீதம் 35 - 39
☘️☘️☘️☘️☘️

"உம்மில் வாழ்வின் ஊற்று".

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️நமது ஆன்மீக அனுபவத்தில் மனித அறிவுரையோ அனுதாபமோ நம்மை ஆறுதல்படுத்தவோ உதவவோ தவறிய நேரங்கள் உண்டு.

நமது கருணையுள்ள பிதா இதை அனுமதிக்கிறார்.

அவர் இல்லாமல் நாம் அதிகமாக வாழ்ந்து வருவதே இதற்குக் காரணம்.

ஆதலால் நாம் சார்ந்திருக்கும் பழக்கவழக்கங்கள் அனைத்தையும் அவர் எடுத்துப் போடுகிறார்.

நீரூற்றின் உச்சியில் வாழ்வதே பாக்கியம்.

ஆகார் மற்றும் இஸ்மவேலைப் போலவே, நாமும் வனாந்தரத்திற்குச் செல்லும்போது அவை வறட்சியாக இருந்தால், "நம்முடைய தேவன் நம்மைப் பார்க்கிறார்" என்பதைத் தவிர வேறு எதுவும் நமக்கு உதவாது.

நம் ஆண்டவர் தேசத்தில் சிறுமை வருமாறு நமக்கு செய்கிறார், அது நம்மை மேலும் மேலும் அவரை நாடச் செய்யும்.

கர்த்தரின் அருளில் முழுமையாகவும் நேரடியாகவும் வாழ்வதே ஒரு நபருக்கு சிறந்த நிலை ஆகும்

கிறிஸ்து ஒரு முழுமையான பரிகாரம் செய்தார்.எனவே நாம் இரட்சிக்கப்பட்டோம்.

நாம் அவரில் பூரணமாக இருக்கிறோம்.

இயேசுவின் தயவால் இளைப்பாறுவோம்.

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

மேபி சுந்தர்


➡️ *எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்.* ⬅️

☄️ *“இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.”* (சங்கீதம் 39:5-6)

🔸 மனித வாழ்வு எவ்வளவு குறுகியதும் பாதிக்கப்படக்கூடியதும் என்பதை புரிந்துகொள்வதற்கான நுண்ணறிவுக்காக தாவீது தேவனிடம் ஜெபிக்கிறான். மோசேயும் கூறுகிறான்: *"ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டோம்."* (சங்கீதம் 90:9). மனிதன் மாயையும் வெறுமையானதுமான ஒரு வாழ்க்கையையே வாழ்கிறான். வீணானவைகளுக்காகக் கஷ்டப்படுகிறான். மனிதன் தனது *செல்வத்தைப் பெருக்குவதற்குப் பெரும் முயற்சி செய்கிறான்.* கஷ்டப்பட்டு சேர்த்த அந்த செல்வத்தை, அவனுக்குப்பின் யார் எடுத்துக்கொள்வார்கள் என்பது அவனுக்குத் தெரியாது; அவனாலும் அதை *நித்தியத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது.* என்ன பரிதாபம்!

🔸 பவுல் வெளிப்படுத்துகிறான்: *“பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.”* (1 தீமோத்தேயு 6:10). நமது தேவைகளை பூர்த்தி செய்ய பணம் தேவைப்படுகிறது. இருப்பினும், பண ஆசை நமது ஆவிக்குரிய வாழ்வில் பேரழிவை கொண்டுவரும். தேவன் நமக்குக் கொடுப்பதில் திருப்தியடைய பவுல் நமக்குக் கற்பிக்கிறான்; ஏனென்றால், நம்மால் எதையும் நித்தியத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது. *“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.”* (1 தீமோத்தேயு 6:6-7). *“இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலத்தின் வேஷம் கடந்துபோகிறதே.”* (1 கொரிந்தியர் 7:31).

🔸 *"பொருளாசை விக்கிரகாராதனை."* (கொலோசெயர் 3:5). பொருளாசை என்பது மாயையான விக்கிரகாராதனை என்பதால், பொருளாசை தேவனுடைய கிருபையை இழக்கச் செய்யும். *"பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்."* (யோனா 2:8).

🔸 பூமியில் ஒரு மனிதனின் வாழ்க்கை அர்த்தமற்றதும் குறுகியதும் என்பதால், அதின்மேல் அதிகமாக அக்கறை கொள்வது மதியற்றதாகும். சிறந்ததும் நிரந்தமானதுமான வாழ்க்கையை பெற்றுக்கொள்ள முயற்சி எடுப்பதே புத்திசாலித்தனமானதாகும். ஒரு மனிதன் *நித்தியமான தேவனுடன் கொள்ளும் உறவே அவனுடைய வாழ்க்கையின் உண்மையான நோக்கமாக இருக்க முடியும்.*

🔸 பல நவீன கிறிஸ்தவர்கள் பூமியில் வசதியான வாழ்க்கையை நடத்த மட்டுமே கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் பவுல் அப்படிப்பட்டவர்களை எச்சரிக்கிறான்: *"இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்."* (1 கொரிந்தியர் 15:19). எனவே, பவுல் கூறும் அறிவுரை: *“பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.”* (கொலோசெயர் 3:2).

🔸 இயேசுவே நமக்குக் கூறும் அறிவுறுரை: *பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்."* (மத்தேயு 6:20). எனவே நாம் தேவனுடைய சித்தத்திற்கு அடிபணிந்து, அவருக்கு முழு மனதுடன் ஊழியம் செய்வோம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை முழுமனதுடன் பின்பற்றி, பரலோகத்தில் நம்முடைய பொக்கிஷங்களை சேர்த்து வைக்க ஞானமுள்ளவர்களாக இருப்போம்.

🔹 *நித்தியமான தேவனுடனான நமது உறவு மட்டுமே நம் வாழ்வின் உண்மையான நோக்கம் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?*

🔹 *கிறிஸ்துவின் மீதான நமது நம்பிக்கை இவ்வுலக வாழ்வுக்காகவா அல்லது நித்திய வாழ்வுக்காகவா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *பூமியில் ஒரு மனிதனின் வாழ்க்கை அர்த்தமற்றதும் குறிக்கியதும் என்பதால், சிறந்ததும் நிரந்தமானதுமான வாழ்க்கையை பெற்றுக்கொள்ள முயற்சி எடுப்பதே* புத்திசாலித்தனமானதாகும்.

2️⃣ *இவ்வுலத்தின் வேஷம் கடந்துபோகிறது. எனவே, பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாட வேண்டும்.*

3️⃣ *இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கக்கூடாது; நம் நம்பிக்கை நித்திய ஜீவனுக்காக இருக்க வேண்டும். இதுவே மனிதனைக்குறித்து தேவனுடைய அநாதி திட்டமாகும்.*

Dr. எஸ். செல்வன்

சென்னை


நானோ செவிடனை போல, ஊமையனை போல*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கீதம் 38: 13, 39: 1, 2.
1. இங்கு தாவீது *நான் செவிடனை போல கேளாதவனாகவும், ஊமையனை போல வாய் திறவாதவனாகவும் இருக்கிறேன்* என்கிறார்.

*நான் மவுனமாகி ஊமையனாயிருந்தேன். நலமானதையும் பேசாமலிருந்தேன். என் வாயை கடிவாளத்தால் அடக்கி வைப்பேன்* என்கிறார்.




2. *எந்த சூழ்நிலையில் செவிடனை போலிருப்பேன்* என்கிறார்?




*பிராண சிநேகிதர், இனத்தார் , துன்மார்க்கர் , பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளை பேசும் போது.*




3. *ஏன் மவுனமாயிருக்கிறார்?*




*நாவினால் பாவம் செய்யாதபடி, தன் வழிகளை காத்துக்கொள்ள*.




4. ஆம், நாமும் கூட நம்முடைய குடும்ப பிரச்சனைகள் மத்தியில் , அதாவது *கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள், மாமியார் மருமகள் மத்தியில், சகோதரர்கள், நண்பர்கள் மத்தியில், வேலையிடத்தில், சபை விசுவாசிகள் மத்தியில்* பேசி சண்டையிடாதபடி செவிடனை போல, ஊமையனை போல பாவம் செய்யாதபடி மவுனமாயிருக்க வேண்டும்.




அநேக வேளைகளில் கர்த்தர் நம் வாழ்க்கையில் இந்த விதமான சூழ்நிலைகளை அனுமதிக்கிறார். *நம்மை சோதிப்பதற்காக, நன்மைக்காக தான். நாம் பொறுமை, தாழ்மை, நீடிய சாந்தம், மன்னிக்கும் குணம், சகிக்கும் குணம் ஆகியவற்றை, அதாவது கிறிஸ்துவின் சாயலை, சாட்சியின் வாழ்க்கையை கற்று, கர்த்தரை மகிமைப்படுத்தும் படியாகவே தான்*.




மட்டுமல்ல, *அநியாயத்தை சகிக்க, பொல்லாதவர்கள் மேல் எரிச்சலடையாத படி, கசப்பு, வைராக்கியம், சண்டை, கோபம் ஆகியவை நம் இருதயத்தில் குடி கொள்ளாதபடி நம் இருதயத்தை பரிசுத்தமாக காத்துக் கொள்ள தருணத்தை கர்த்தர் தருகிறார். நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் வளர இவர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள்.*




அதுமட்டுமல்ல, *நாம் வாய் திறவாத போது, நம் சத்துருக்கள் கிறிஸ்துவின் சாயலை பார்க்கும் போது, இது அவர்களுடைய மனந்திரும்புதலுக்கு ஏற்றதாயிருக்கும்.*




5. ஆம், *இயேசு கிறிஸ்துவும் நெருக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும் அவர் தம் வாயை திறக்கவில்லை. மட்டுமல்ல, அவர் தன்னுடைய ஆத்தும வருத்தத்தின் பலனை கண்டு திருப்தியாவார். அதாவது அநேகரை நீதிமான்களாக்குவார்*. ஏசாயா 53: 7, 11.




ஆம், நாம் செவிடனை போல, ஊமையனை போல நலமானதையும், நீதி நியாயத்தையும் கூட பேசாமல் மவுனமாயிருக்கும் போது, இந்த பொல்லாதவர்கள் கூட மனந்திரும்ப ஏதுவாகும்.




இன்று பொல்லாதவர்களால் இருதயம் காயப்பட்டு, துக்கத்தோடு, கேள்விகளோடு காணப்படுகிறோமா? கர்த்தர் நம் ஒவ்வொருவரோடும் பேசுவாராக. *செவிடனை போல, ஊமையனை போல மவுனமாயிருக்க தீர்மானிப்போம். இந்த சாட்சியுள்ள வாழ்க்கையினால் கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக. சமாதானம், சந்தோஷம் நமக்கு உண்டாவதாக.* ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*


📗 *சிறிய குறிப்பு* 📗




🍂 *ஒருபோதும் கைவிடப்படவில்லை* 🍂




கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு எந்த *நன்மையும் குறைவுபடாது* என்று தாவீது முன்பு எழுதினான். *நீதிமான்கள் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை* என்பதை இப்போது அவன் கவனித்தான். *நீதிமான்களின் சந்ததியினரைக்* கூட கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். தாவீது இதைத் தன் வாழ்க்கையில் நேரில் பார்த்திருக்கிறான். எனவே அவன் நம்பிக்கையுடன் அறிவித்தான்:




📖 *“நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.” (சங்‬ ‭37‬:‭25‬)*




பலர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். *நாம் கர்த்தருக்கு பயப்படும் பயத்தில் நடக்கும்போது, ​​நம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம் உள்ளது.* ஆண்டவர் அவர்களைப் பாதுகாத்து வழிநடத்துகிறார். பயத்திற்கு இடம் கொடுப்பதற்குப் பதிலாக * தேவனுக்குப் பயந்து வாழும் வாழ்க்கையை நடத்த முயற்சிப்போம்.* தேவனிடத்தில் நம் பிள்ளைகளுக்கு திட நம்பிக்கை உண்டு.
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻


*🌈நம்பிக்கைக்குறிய தேவன்🌈*

சங்கீதம் 36-39

☄️சங்கீதம் 36-39, நறுங்குண்ட ஆவியின் அழுகை மற்றும் தேவனுடைய இறையாண்மையில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையுடன் தேவனுடைய அனைத்தையும் உள்ளடக்கிய அன்பைக் கையாள்கிறது.




1️⃣ *சங்கீதம் 36 - தேவனின் அனைத்தையும் உள்ளடக்கிய அன்பு*




🔹மனிதகுலத்தின் அக்கிரமத்தை தேவனின் உறுதியான அன்பு மற்றும் நீதியுடன் ஒப்பிடுவதன் மூலம் இது தொடங்குகிறது.

🔹தன்னைத் தேடுபவர்களுக்கு அடைக்கலம் தரும், பரலோகம் வரை செல்லும் தேவனின் அன்பின் பரந்த தன்மையைக் கண்டு சங்கீதக்காரன் வியக்கிறான்.

🔹தேவனுடைய உண்மைத்தன்மை விவரிக்கப்பட்டுள்ளது மற்றும் உலகின் குழப்பங்களுக்கு மத்தியில் அவரது பிரசன்னத்தில் ஆறுதலைக் கண்டு, அவருடைய அன்பில் அடைக்கலம் புகுவதற்கு நாம் ஊக்குவிக்கப்படுகிறோம்.




2️⃣ *சங்கீதம் 37 - தேவனின் இறையாண்மையில் நம்பிக்கை*




🔸சங்கீதம் 37 தேவனின் இறையாண்மை மற்றும் இரக்கத்தின் மீது நம்பிக்கையுடன் வாழ்க்கையின் சவால்களை கடக்க வழிகாட்டியாக செயல்படுகிறது.

🔸துன்மார்க்கர் மேல் பொறாமைப்படும் சோதனையை எதிர்க்கும்படி நீதிமான்களை சங்கீதக்காரன் ஊக்குவிக்கிறார், தேவன் இறுதியில் நீதியைக் கொண்டு வந்து தம் மக்களை நியாயப்படுத்துவார் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறார்.

🔸தேவனுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றி, உரிய காலத்தில் நீதியை நிலைநாட்டுவார் என்பதை அறிந்து, தேவனுடைய நேரத்தை நம்பி, சுறுசுறுப்பாக நன்மை செய்து, அவரில் மகிழ்ச்சி அடைவதை இந்த சங்கீதம் நமக்குக் கற்பிக்கிறது.




3️⃣ *சங்கீதம் 38 - நொருங்குண்ட ஆவியின் கதறல்*




🔺இது புலம்பல் மற்றும் ஒப்புதல் வாக்குமூலத்தின் வெளிப்பாடாகும், பாவம் மற்றும் துன்பத்தால் பாரமாக இருக்கும் ஆத்துமாவின் வேதனையை வெளிப்படுத்துகிறது.

🔺சங்கீதக்காரன் தனது சொந்த தோல்விகளை ஒப்புக்கொள்கிறார் மற்றும் தேவனுடைய இரக்கம் மற்றும் குணப்படுத்துதலுக்காக மன்றாடுகிறார்.

🔺நமது இருண்ட தருணங்களிலும், நாம் தேவனிடம் திரும்பலாம், நம் பாவங்களை அறிக்கையிடலாம், அவருடைய மறுசீரமைப்பில் ஆறுதல் காணலாம் என்பதை இந்த சங்கீதம் நமக்கு நினைவூட்டுகிறது.

🔺நம்முடைய வலியைப் பற்றி தேவனிடம் நேர்மையாக இருக்கவும் அவருடைய அன்பான பதிலில் நம்பிக்கை வைக்கவும் இது நம்மை ஊக்குவிக்கிறது.




4️⃣ *சங்கீதம் 39 - வாழ்க்கையின் நிலையற்ற தன்மை*




◾️இந்த சங்கீதம் மனித வாழ்வின் குறுகிய காலத்தையும், ஞானம் மற்றும் புரிதலைத் தேடுவதன் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.

◾️நமது வாழ்வு விரைவாக கடந்து போகும் என்பதால், உலக நோக்கங்களின் பயனற்ற தன்மையை உணர்ந்து, சங்கீதக்காரன் பேசுகிறார்.

◾️அவரது நோக்கம் மற்றும் சித்தத்திற்கு ஏற்ப வாழ, அவருடைய வழிகாட்டுதலையும், ஞானத்தையும் தேடுவதற்கு, தேவனுடனான நமது உறவை முதன்மைப்படுத்த வேண்டியதன் அவசியம் நமக்கு நினைவுபடுத்தப் படுகிறது.




♥️ *வாழ்க்கை பாடங்கள்*




💥இந்த சங்கீதங்கள் நமக்கு காலத்தால் அழியாத ஞானத்தையும் ஆறுதலையும் தருகின்றன.

💥நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தேவன் இருக்கிறார் என்பதையும், அவரில் அடைக்கலம், நம்பிக்கை மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றைக் காணலாம் என்பதையும் அவை நமக்கு நினைவூட்டுகின்றன.




*‼️கர்த்தருக்கு முன்பாக அமைதலாக இருந்து அவருக்காக பொறுமையாக காத்திருங்கள்‼️*

பிரின்சஸ் ஹட்சன்

தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை



*🪶சிப்பிக்குள் முத்து🪶*


*சங் : 35 - 39*

*🦋முத்துச்சிதறல்

🌿🌿🌿🌿

*நீரே இதை செய்தீர் என்று*

நான் என் வாயை திறவாமல் மவுனமாயிருந்தேன். *(39 : 9)*

🌿🌿🌿🌿




*சங்கீதம் : 39*




*🍂மனிதர்களாகிய நாம் நம் வாழ்வில் கடினமான நாட்களையும் கூட சந்திக்கும்படி, கர்த்தர் தமது பிள்ளைகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் சோதனைகளையும், பிரச்சனைகளையும், புயலையும், பாடுகளையும், அவமானங்களையும் வரும்படி அனுமதித்து,*

எமது சத்துருக்களுக்கும் எமக்கும் என்னத்தான் வித்தியாசம் என்பதினை நாமே புரிந்துக் கொள்ளும்படி எம்மை விசேஷ விதமாக நடத்துகின்றவராயிருக்கிறார்.

எல்லோரின் வாழ்விலும்.... ஏதோவொரு கால கட்டத்தில்....ஒரு *"எதிர்முனை தாக்குதல்கள்"* உண்டாக தான் செய்கின்றன. *அவ்வேளையில் எமது எண்ணவோட்டங்களை நாம் சரியாக, நிதானமாக வைத்திராவிட்டால்,* எமக்கும் கர்த்தரை அறியாதோருக்கும் யாதோறு வித்தியாசமும் இரா. கர்த்தரை அறியாதோர் மத்தியில்....

நாங்கள் கர்த்தரை அறிந்திருக்கிறோம், அவர் உயிருள்ளவர், அவரை நாங்கள் வணங்குகிறோம் என்போர்.....

தங்கள் வாழ்வில் ஏற்படும் அசௌகரியங்களின் போது....

*கர்த்தரை தாங்கள் யாராக அறிந்திருக்கின்றனர்❓அவரது சர்வ ஆளுமையை என்னவாக புரிந்திருக்கிறார்கள்❓என்பது அப்பொழுதே புலப்படும்.*




🍀எல்லாம் நன்றாகவும், சரியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கையில் நாம் பேசுவனவற்றிருக்கும், எம்மை கூற்றியிருக்கும் சூழல்கள் ஒன்றும் சரியில்லாத பொழுதினில் எம் வாயிலிருந்து புறப்படும் சொற்களுக்கும் வித்தியாசம் உண்டு தான்.




🔰🔰❣️🔰🔰




*நெருக்கத்தின் வேளையில் தாவீது தன் நாவினால் பாவம் செய்யாதபடி, தன் வாயை கடிவாளத்தினால் அடக்கி வைத்துக்கொண்டு, ஒன்றும் பேசாத ஊமையராக, நலம் பொலம் கூட கூறாமல் அமைதியாக இருந்துக்கொண்டார்.*

(வ.2)

ஆண்டவரிடம் அவரது விண்ணப்பமெல்லாம் *"தான் வாழப்போகும் நாட்களின் அளவு இன்னதென்பதை தனக்கு இறைவன் வெளிப்படுத்தும்படி / உணர்த்துவிக்கும்படி வேண்டினார்.*

(வ.1 - 4)

ஆம்,

*எல்லோருக்கும் சம்பவிப்பதே இந்த தேவ பக்தியுள்ள அரசனுக்கும் சம்பவித்தது.* ஆஸ்திகள் இருந்தும் மனிதிற்கு நிம்மதி *(சமாதானம்)* இல்லை.

மூடர்களின் நிந்தனைக்கு ஆண்டவர் தன்னை ஒப்புவித்து விடக்கூடாது என்பதே தாவீதின் ஊக்கமான விண்ணப்பமாயிருந்தது.

ஆனாலும் அப்படிப்பட்ட சூழல் அவருக்கு ஏற்பட்டப்போது,

*"தன் வாயை திறவாமல் மவுனமாயிருந்துக்கொண்டார்."*

(வ. 9)

ஏன் என்றால்.....

மனித பாவத்தினிமித்தம் தான் இந்த நிலை என்பதை அவர் புரிந்துக் கொள்ள நேர்ந்தது. ஆகையால் தேவனிடம் இருந்து தேறுதலை பெற்றுக் கொள்ள ஆசித்து ஜெபம் செய்தார்.

*(வ. 13)*




💊💊🍏💊💊




*தாவீதுக்கு வெட்கம் உண்டாக கூடிய ஓர் சூழல் ஏற்பட்டதாக தெரிகிறது.*

அதுவும் தனது எதிரிகளுக்கு முன்பும் அவருக்கு வெட்கம் உண்டாகியது போல் அறிய முடிகிறது.

அதே வேளை இறைவனுக்கு முன்பும் கூட நிற்க முடியாதபடி ஒரு சூழல் ஏற்பட்டபடியால்,

*"எந்த மனுஷனும் மாயையே"* என்கிறார்.




ஒரு வேளை ஏதும் வியாதியினால் அவர் தொந்தரவுக்குள்ளாகினாரோ❓ நாம் அறியோம்.

ஆகிலும் கர்த்தர் தன்னை தண்டித்ததாக உணர்ந்துக் கொண்டார்.

*( வ. 10,11)*




📌📌🪶📌📌




🎈எப்படி பேதுரு மீன்பிடி தொழிலின்போது இறைவனின் ஆலோசனைப்படி ஏராளம் மீனை கண்டப்போது,

*"நீர் என்னைவிட்டு போய்விடும்"* என்றாரோ,

*(லூக் - 5 : 8)* அப்படியே இங்கு தாவீதரசர் ஆண்டவரை நோக்கி, *"என்னை ஆளை விட்டுரும் சாமி"* என்கிறார்.




துக்கம் தொண்டையை அடைத்தப்போது ஜெபித்தாராம்.

*(வ. 2, 3)*




*💠தனது குறுகிய மற்றும் வெறுமையான நாட்களுக்காக அவர் வருத்தப்பட்டு, கலங்கி நின்றப்போது, "மனம் பதறி ஏதோன்றையும் உச்சரிக்காமல், தனது அங்கலாய்ப்புகளை ஆண்டவரிடம் ஜெபமாக சமர்ப்பித்து, தனக்கான விடுதலை வாழ்வும், கர்த்தர் தன் மேல் பொறுமையுமாக இருக்க தக்கதாக தன்னை தாழ்த்தியும் நின்றார்.*




*👍இதே விதமான பாதையில் தான் பக்தன் யோபுவும் கடந்து சென்றார்.* அப்பொழுது அவரின் அறிக்கை என்னவாக இருந்தது என்பதை நாம் *யோபு - 7 : 16 - 20 ல்* வாசித்து அறியலாம்.

ஆம்....... பரிசுத்தவான்கள் எல்லோரும் கடின பாதைகளினூடே பயணித்து தான் பரமனிடம் போய் சேர்ந்துள்ளனர்.




*பூமியில் வாழும் எமக்கு இவர்களது வாழ்வு முறை, இறை தொடர்பு நிலை, மற்றும் எண்ண பிரதிபலிப்புகள், போன்றவை எழுத்து வடிவில் கொடுக்கப்பட்டு எம் கைகளில் தவழுகிறது.*

நாம் இவ்வற்றை ஆழ்ந்து தியானித்து, கர்த்தருக்குள் எம்மை திடமாக பலமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.




🍒துன்ப வேளையில் நாமும் கூட இந்த முக்கிய வசனமாகிய,

*"நீரே இதை செய்தீர் என்று நான் என் வாயை திறவாமல் மவுனமாயிருந்தேன்"* (39:9)

என்று தாவீதரசர் கூறியது போல கூறத்தக்கதாக பயிற்சி எடுப்போமா❓

*நாவடக்கமே, மேன்மையான "அடக்க வாழ்வு முறையாம்".*




🥏🥏🔥🥏🥏




*❣️வீட்டு பாடம் ❣️*




*🥗நாம் சரியாக எந்த நாளில், எந்த மணித்துளியில், மரணிப்போம் என்னும் ஞானோதயம் நமக்கு கிட்டினால்,🤔 எந்த ஒன்றே ஒன்றை பூமியில் நிறைவேற்ற யாசிப்போம்❓*

*ஏன் அதை மட்டும் செய்வோம்❓*

என்பதினை




*🥙அறிவார்த்தமாக யோசிப்போம்*

*Sis. Martha Lazar✍️*
*NJC, KodaiRoad*


*சங்கீதம் 35 - 39*




*(தாவீது :) நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்கிறார்கள் என் ஆத்துமா திக்கற்றுப் போகப் பார்க்கிறார்கள். ..... நான் அவனை என் சிநேகிதனாகவும் , சகோதரனாகவும் பாவித்து நடந்து கொண்டேன் ; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்க வஸ்திரம் தரித்துத் தலைகவிழ்து நடந்தேன். சங் 35 : 12 - 14*

தாவீது இங்கேத் தன்னுடைய அனுபவத்தை எழுதி வைத்துள்ளார்.

அவர் தன் சகோதரருக்கு நன்மையையே நினைத்து , அதையே செய்து கொண்டிருக்கும்போது , அவருடைய பகைவர்கள் , அவருக்கு விரோதமாக தீமையையே யோசித்து , அதையே அவருக்கு செய்ததினால் அங்கலாய்க்கிறார் ; *சத்துருக்களை சிநேகியுங்கள் ; சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள் ; பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்* என்ற இயேசுவின் பொன்மொழிகளுக்கேற்ப , பகைவருக்கு அவர் பாராட்டின , அவரது அன்பும் , கருசனையும் , இரக்கமும், ஜெபமும் வீணாகிப் போகவில்லை. ஏற்ற வேளையில் எல்லா ஆசீர்வாதங்களும் வந்து சேர்ந்தது.

தாவீது இளைஞனாக இருந்தாலும் , கோலியாத் இஸ்ரவேலின் தேவனை நிந்தித்தபோது , சவுல் ராஜாவுக்காக , தன் உயிரையும் துச்சமாக நினைத்து, பெலிஸ்தியனாகிய கோலியாத் தோடு , தாவீது யுத்தத்திற்குச் சென்று , கோலியாத்தைக் கொன்று , இஸ்ரவேலை பெலிஸ்தியரின் கைக்குத் தப்புவித்தார் ; ஆனால் அந்த தாவீதை , கொலை செய்யும்படி , சவுல் ராஜாவோ அவரை வனாந்தரத்திலே துரத்தினார் ; அவருக்கும் , மரணத்திற்கும் ஒரு அடி தூரம் மாத்திரம் தான் இருந்தது ; ஆனால் முடிவு என்ன ? பிரியமானவர்களே.

போரில் எதிரியின் கையால் மடிய கூடாது என்று எண்ணி, சவுல் ராஜா தன்னுடையப் பட்டயத்தை நாட்டி , அதன் மீது விழுந்துத் தற்கொலைச் செய்து மடிந்தார்.

ஆனால் தாவீதோ , சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாக உயர்த்தப்பட்டு , பூரணமான ஆயுசு நாட்களுடன் , கர்த்தருடைய சந்நிதியில் சேர்க்கப்பட்டார் . இது தான் கர்த்தரை உத்தமமாய் பின்பற்றுகிறவர்களின் முடிவு !

எனவே பிரியமானவர்களே , நாமும் நம் சத்துருக்களைப் பழிக்கு பழிவாங்காமல் , கர்த்தருடைய கோபாக்கினைக்கு விட்டு விடுவோம். *பழிவாங்குதல் எனக்குரியது* என்று கர்த்தர் சொல்லுகிறார். *கர்த்தர் நீதியுள்ள நியாயாதிபதி ; அவர் நீதி செய்கிறவர்.* *கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர் ; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை ; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள் ; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டு போம். சங் 37 : 28*

*ஆமென் ! அல்லேலூயா ! !*
Rajam Theogaraj ,
Palayamkottai.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.