சிறுபிள்ளைகள் பிரசங்கிக்கிறதை பலர் எதிர்க்கிறார்களே? பெரியவர்கள் பிரசங்கம்பண்ணி, அப்படி என்ன பெரிதாக சாதித்துவிட்டார்கள்?
✍️ எனக்கும் கீழ்காணும் சில கேள்விகள் உண்டு.
👉🏿 *பெரியவர்கள் பிரசங்கம்பண்ணி, அப்படி என்ன பெரிதாகக் கிழித்துவிட்டார்கள்?*
👉🏿 *பெரியவர்கள் போதித்து, எத்தனைப்பேரை கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவர்களாக (கிறிஸ்துவைப்போல) நிறுத்திவிட்டார்கள்?* (கொலோ.1:28)
👉🏿 *பெரியவர்கள் உபதேசித்து, எத்தனைப்பேரை அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் (கிறிஸ்துவின் எல்லா குணங்களிலேயும்) வளருகிறவர்களாக மாற்றிவிட்டார்கள்?* (எபேசி.4:15)
👉🏿 *பெரியவர்கள் உபதேசித்து, எத்தனைப்பேரை கிறிஸ்துவுக்குள் தேறினவர்களாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருக்கிறார்கள்?* (2தீமோ.3:16,17)
👉🏿 *பெரியவர்கள் பிரசங்கித்து, எத்தனைப்பேரை தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாக்கி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராக்கிவருகிறார்கள்?* (எபேசி.4:11)
👉🏿 *பெரியவர்கள் உபதேசித்து, எத்தனைப்பேரை இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும் சம்பூரணமுள்ளவர்களாக்கியிருக்கிறார்கள்?* (1கொரி.1:5)
👉🏿 *பெரியவர்களின் போதகத்தினால் எத்தனைப்பேர் கிறிஸ்துவுக்குள் பரிபூரணமுள்ளவர்களாகியிருக்கிறார்கள்?* (கொலோ.2:10),
👉🏿 *பெரியவர்களின் உபதேசத்தினால் எத்தனைப்பேர் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறி, பூரண நிச்சயமுள்ளவர்களாய் நிலைநிற்கிறார்கள்?*
(கொலோ.4:12)
👉🏿 *'சுவிசேஷம்' என்கிற பெயரில் இன்றைய பிரபல சுவிசேஷகர்கள் பலர் உளறுகிறக் காரியங்களுக்கும், ஆதிசபை ஊழியர்கள் பிரசங்கித்த சுவிசேஷத்திற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?* (ரோமர் 1:4,5,17; 2:16; 16:26; 1கொரி.1:18-24; 2:2; கலா.3:1,8; எபேசி.3:3; கொலோ.1:3-6,14-23; 2தெச.2:14; 1தீமோ.3:16; 2தீமோ.1:10; எபிரே.4:1-11)
👉🏿 *'உபதேசம்' என்கிற பெயரில் இன்றைய மேய்ப்பர்கள் பலர் பிதற்றுகிறக் காரியங்களுக்கும், ஆதிசபை ஊழியர்களின் உபதேசங்களுக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?* (மத்.28:19,20; அப்.4:2; 5:42; 28:31; 1கொரி.1:18-31; 2கொரி.5:19,20; எபேசி.2:20; கொலோ.1:28; 1தீமோ.6:3; தீத்து 2:1-6, 9-15)
மேற்காணும் கேள்விகளுக்கு மூத்த ஊழியர்களும் பிரபல பிரசங்கிகளும்தான் பதில் சொல்லவேண்டும்
*குறிப்பு:*
சிறுவர் பிரசங்கிக்கிறதை ஆதரித்து அல்ல, பெரியவர்களின் பிரசங்கம் அப்படி ஒன்றும் பெரிதாய் சாதித்துவிடவில்லை என்பதை காண்பிக்கவே இந்த பதிவு!!
க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
சிறுவர்கள் பெரியவர்களுக்கு போதிக்கிறதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையா?*
✍️ சிறுவர்கள் சிறுவர்களுக்கு தாங்கள் அறிந்தவரை தேவனைப்பற்றி சொல்லுகிறதை நான் ஆதரிக்கிறேன்.
ஆனால், அவர்கள் பெரியவர்களுக்கு போதிக்கிறதை என்னால் ஆதரிக்கமுடியாது.
காரணம், பெரியவர்கள் கடந்துவந்த ஆவிக்குரிய அனுபவங்களை சிறுவர்கள் பெற்றிருக்க வாய்ப்பு இல்லை.
உதாரணமாக, பாவத்திற்காய் மனம் வருந்துதல், மனந்திரும்புதல், முழுகி ஞானஸ்நானம் பெறுதல், பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுதல், ஊழிய அழைப்பை பெறுதல் போன்ற எந்த அனுபவமும் இல்லாத சிறு பிள்ளைகள், அந்த அனுபவங்களைப் பெற்ற பெரியவர்களுக்கு போதிக்கும் தகுதியுடையவர்கள் அல்ல.
*"தேவனுடைய கிருபை இல்லாமல் பெரியவர்களைப்போலவே சிறுவர்கள் பேசமுடியுமா?"* என்று சிலர் கேட்கக்கூடும்.
இரட்சிக்கப்படாதவர்களின் பிள்ளைகள் தங்கள் பெற்றோரால் பயிற்றுவிக்கப்பட்டு, பெரியவர்களைப்போல எவ்வளவு நேர்த்தியாய் பேசுகிறார்கள் என்பதை
உலகத்து ஊடகங்களைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
அப்படியே, ஊழியரான அல்லது கிறிஸ்தவரான தங்கள் பெற்றோரால் பயிற்றுவிக்கப்பட்டு இயக்கப்படுகிற சிறுவர் சிறுமிகள், பெரியவர்களைப்போலவே பிரசங்கம்பண்ணக்கூடும்.
இதை தேவகிருபை அல்லது தேவஅழைப்பு என்று எண்ணி, அவர்களை அழைத்து சபைகளில் பயன்படுத்துகிற ஊழியர்கள் வேத வெளிச்சமற்றவர்கள் என்பதை அறியவேண்டும்!
*"ஒரு கழுதையைக் கொண்டு கர்த்தர் தீர்க்கதரிசியோடு பேசும்போது (2பேதுரு 2:16), சிறு பிள்ளைகளைக்கொண்டு பெரியவர்களோடு ஏன் பேசக்கூடாது?"* என்று சிலர் கேட்கக்கூடும்.
கர்த்தர் பேசி கேட்காதவர்கள் கழுதைப் பேசக்கேட்கும் சூழல் வரலாம். ஆகிலும், தேவன் கழுதையை தொடர்ந்து பேசும் பிரசங்கியாக்கிவிடவில்லை என்பதை அறியவேண்டும்.
*"சிறுவன் சாமுவேல் இஸ்ரவேலுக்கு தீர்க்கதரிசியாக இருக்கவில்லையா?"* என்று சிலர் கேட்கக்கூடும்.
சாமுவேல் சிறு பிராயத்தில் தேவசமூகத்தில் வளர்ந்தான். அவன் வளர்ந்தப்பின்பே இஸ்ரவேலருக்கு தீர்க்கதரிசியானான். (1சாமு.3:19,20)
*"சிறுவன் தாவீது இஸ்ரவேலை பெலிஸ்தரிடமிருந்து இரட்சிக்கவில்லையா?"* என்று சிலர் கேட்கக்கூடும்.
தேவன் தாவீதை ஓர் அரசனாகவும் யுத்தவீரனாகவும் பயிற்றுவித்தாரேயல்லாமல், அவனை இஸ்ரவேலுக்கு போதகனாகப் பயிற்றுவிக்கவில்லை என்பதை அறியவேண்டும். (1சாமு.17:31-37)
*"இஸ்ரவேல் தேசத்திலிருந்து சீரியாவுக்கு சிறைப்பிடித்துவரப்பட்ட ஒரு சிறு பெண், குஷ்டரோகியாயிருந்த சீரிய படைத்தலைவன் நாகமானின் மனைவிக்கு 'என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும், அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்' என்று அறிவிக்கவில்லையா?"* (2இரா.5:1-3) என்று சிலர் கேட்கக்கூடும்.
இஸ்ரவேலின் சிறுபெண் கொடுத்த தகவலினால் நாகமான் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானது உண்மைதான். (2இரா.5:15) ஆகிலும், அந்த சிறுபெண் தொடர்ந்து பிரசங்கியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை அறியவேண்டும்.
இப்படியிருக்க, சிறுவர்கள் தேவனைப்பற்றி தங்களுக்குத் தெரிந்தவைகளை பெரியவர்களுடன் தனிப்பட்ட விதத்தில் பகிர்ந்துகொள்வது தவறில்லை. ஆனால், அவர்கள் பெரியவர்கள் கூடிவரும் சபையில் பிரசங்கிப்பது முறையல்ல.
*"12 வயதான இயேசு தேவாலயத்தில் போதிக்கவில்லையா?"* (லூக்கா 2:46) என்று சிலர் கேட்கக்கூடும்.
12 வயதில் இயேசு தேவாலயத்தில் போதிக்கவில்லை. மாறாக, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்து, அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், தனது ஐயங்களை வினாவவுமே செய்தார்.
*"பின்பு அவர் தன் பெற்றோருடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்"* என்கிற வாக்கியங்கள் கவனிக்கத்தக்கவை. (லூக்கா 2:51)
12 வயதுமுதல் 30 வயதுவரை அவர் ஒரு பிரசங்கமும் செய்ததாகத் தகவல் இல்லை.
சிறுவர்கள் பெரியவர்கள் மத்தியில் அமர்ந்து அவர்கள் பேசுகிறதை கேட்கலாம். தங்களுக்கு எழும் ஐயங்களை பெரியவர்களிடம் கேட்கலாம். ஆனால், பெரிவர்களுக்கு பிரசங்கிகளாக இருக்கக்கூடாது என்பதற்கு ஆண்டவரே மாதிரி!
*"குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?"* என்று ஆண்டவர் பிரதான ஆசாரியரையும் வேதபாரகரையும் கேட்டாரே என்று சிலர் சொல்லக்கூடும்.
(மத்.21:15)
தாம் செய்த அதிசயங்களினிமித்தம் "தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா!" என்று தேவாலயத்திலே பிள்ளைகள் ஆர்ப்பரித்ததை கண்டு,
பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கோபமடைந்தபோது, சங்கீதம் 8:2ஐ அவர்களுக்கு இயேசு பதிலாகக் கூறுகிறார். (மத்.21:15,16)
தேவாலயத்தில் சிறுவர்கள் தேவனை துதித்தார்களேயல்லாமல், ஆசாரியருக்கும் வேதபாரகருக்கும் பிரசங்கம் பண்ணவில்லை.
சிறுபிள்ளைகள் சபைகளில் தேவனை துதிக்க எந்தத் தடையும் இல்லை. ஆனால் பெரியவர்களுக்கு பிரசங்கிக்க ஒருபோதும் அவர்கள் ஆதிசபைகளில் அனுமதிக்கப்பட்டதில்லை!
*"சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்* (மத்.19:14) என்று இயேசுவே தமது சீஷரிடம் சொல்லியிருக்கும்போது, அவர்கள் பிரசங்கிக்கிறதை நாம் தடைசெய்யலாமா?" என்று சிலர் கேட்கக்கூடும்.
சிறு பிள்ளைகள் தம்மிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுக்க ஆண்டவர் சொன்னாரேயல்லாமல், அவர்களுக்கு பிரசங்கிக்க இடங்கொடுக்கும்படி சொல்லவில்லை.
மேலும், சிறு பிள்ளைகளின் மேல் ஆண்டவர் கைகளை வைத்து ஜெபம்பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்களேயல்லாமல் (மத்.19:13), உடனடியாக அவர்களை ஊழியராக்கும்படி கொண்டுவரவில்லை!
சிறு பிள்ளைகள் தேவசமூகத்திற்கு வருவதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால், அவர்களை பிரசங்கிகளாகப் பயிற்றுவித்து பெரியவர்களுக்கு போதிக்கவிடுகிறது முறையல்ல!
"அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது: *உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத்தேவன் பகிர்ந்தவிசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்"* என்று பவுல் சொல்லுகிறதை முதலாவது ஊழியர்கள் உணரவேண்டும். (ரோமர் 12:3)
சிறுவர்களை தாங்கள் சிறுவர்கள் என்று உணர பெற்றோர் விட்டுவிடவேண்டும்.
இரட்சிக்கப்படாத, ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாத, ஊழிய அழைப்பில்லாத, தன் சொந்தக் குடும்பத்தை நடத்தின அனுபவமில்லாத சிறு பையன்களை செயற்கையாக பயிற்றுவித்து, அவர்கள் தங்களை ஊழியக்காரர்களாக எண்ணிக்கொள்ளும்படி செய்வது வேதத்திற்கு எதிரானக் காரியமாகும்.
*தங்கள் பிள்ளைகளை போதகர்களாகப் பயிற்றுவிக்கிறவர்களும், அவர்களுடைய பிள்ளைகளும், அவர்களை அழைத்து பயன்படுத்துகிறவர்களும் அதிக ஆக்கினையடைவார்கள்!* (1தீமோ.3:6,7)
போதுமான வேத அறிவில்லாத ஊழியரும் சபையாருமே, தங்களுக்கு போதிக்க சிறு பையன்களே போதும் என்று அவர்களை அழைத்து பயன்படுத்துகிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது!
வேதவெளிச்சமுள்ளவர்கள் ஆதிசபைகளில் காணப்படாத இப்படிப்பட்டக் காரியங்களை உற்சாகப்படுத்தமாட்டார்கள்!
செயற்கையாக பெரிதாக்கப்படும் பிராய்லர் கோழிகள் உடம்புக்கு எப்படியோ, அப்படியே செயற்கையாக போதகர்களாக பயிற்றுவிக்கப்படும் சிறுபிள்ளைகள் கிறிஸ்தவரின் ஆவிக்குரிய ஜீவியத்திற்கு இருப்பார்கள்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
கிறிஸ்தவ உலகத்தில் நல்ல ஊழியர்கள் அதிகமா? கள்ள ஊழியர்கள் அதிகமா? இதை அறிந்துகொள்ளவேண்டியக் கடமை கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா?
✍️ நான் சொன்னால் குறைசொல்வதாக சிலர் நினைக்கக்கூடும்.
🫵 *கள்ள ஊழியர்களே அதிகமாக இருப்பார்கள் என்று இயேசுவே கூருகிறார்.*
"அந்நாளில் *அநேகர்* என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, *அக்கிரமச் செய்கைக்காரரே,* என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்".
(மத்.7:22,23)
*"அநேகர் வந்து,* என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்". (மத்.24:5)
*"அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும்* எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்". (மத்.24:11)
🫵 *கள்ள ஊழியர்களே அதிகம் இருப்பதாக பவுல் கூறுகிறார்!*
*"அநேகரைப்போல,* நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்".
(2 கொரி.2:17)
*"அநேகர்* வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுதும் கண்ணீரோடும் சொல்லுகிறேன்".
(பிலிப்.3:18)
*"அநேகர்,* விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதைமயக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்". (தீத்து 1:10)
"ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் *திரளாகச் சேர்த்துக்கொண்டு,* சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். (2 தீமோ.4:3,4)
🫵 *நல்ல ஊழியர்கள் போலவே காணப்படுவார்கள்!*
"கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், *அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு* உங்களிடத்தில் வருவார்கள், *உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்"* என்று எச்சரிக்கிறார் ஆண்டவர். (மத்.7:15)
கள்ள ஊழியர்களில் ஒருவரும் தங்கள் பெயருக்கு முன்னால் கள்ள அப்போஸ்தர், கள்ளத்தீர்க்கதரிசி, கள்ள சுவிசேஷகர், கள்ள மேய்ப்பர் கள்ளப்போதகர், கள்ளச்சகோதரர் என்று போட்டுக்கொள்ளமாட்டார்கள்.
மாறாக, இவர்களும் தங்கள் பெயருக்கு முன்னால் Apostle, Prophet., Evang., Ps., Rev., Dr., Rev.Dr., Rt.Rev.Dr., Bro., என்றே போட்டுக்கொள்ளுவார்கள்.
அப்படியானால், இன்று Apostle, Prophet., Evang., Ps., Rev., Dr., Rev.Dr., Rt.Rev.Dr., Bro., என்று போட்டுக்கொள்ளுகிறவர்களில் மிகுதியானவர்கள் கள்ள ஊழியர்கள் என்பதை கிறிஸ்தவர்கள் அறியவேண்டும்.
🫵 *அடையாளம் காண்பது கிறிஸ்தவரின் கடமை!*
உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், *எல்லா ஆவிகளையும் நம்பாமல்,* அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியவேண்டியது கிறிஸ்தவரின் கடமையாகும்.
(மத்.7:15; 1யோவான் 4:1)
கள்ள ஊழியர்களை அடையாளங்கண்டு அவர்களைவிட்டு விலகி (லூக்கா 21:8), நல்ல ஊழியர்கள் யார் என்று கண்டுபிடித்து, அவர்களை பின்பற்றவேண்டியது (1கொரி.4:16; 11:1; பிலி.3:17; 1தெச.1:6) கிறிஸ்தவரின் பொறுப்பாகும்!
🫵 *கள்ள ஊழியர்களை கண்டுபிடிப்பது எப்படி?*
"அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்" என்கிறார் ஆண்டவர். (மத்.7:20)
இவர்களுடைய ஜெபம் (மத்.7:21) மற்றும் வரங்களை (மத்.7:22) பார்த்து ஏமார்ந்துவிடாமல், அவர்களுடைய செய்கையை (மத்தேயு 7:23) கவனிக்கவேண்டும்.
*ஆவியில் எளிமை, துயரப்படுதல், சாந்தகுணம், நீதியின்மேல் பசிதாகம், இரக்கம், இருதயத்தில் சுத்தம், சமாதானம்பண்ணுதல், நீதியினிமித்தம் துன்பப்படுதல் (மத்.5:3-10) ஆகிய இயேசுகிறிஸ்துவின் குணங்களை (கனிகளை) உடையவர்களே நல்ல ஊழியர்கள்!*
இயேசுவின் மேற்காணும் குணங்கள் இல்லாத Apostle, Prophet., Evang., Ps., Rev., Dr., Rev.Dr., Rt.Rev.Dr., Bro., ஆகியோர் கள்ள ஊழியர்களே!
ஆராதனை வீரர், ஜெபவீரர், அற்புத ஊழியர், ஆசீர்வாத போதகர், செழிப்பின் பிரசங்கி, மோட்டிவேஷனல் ப்ரீச்சர், பெரிய பாஸ்டர் என்று இயேசுவின் சுபாவங்கள் இல்லாதவர்களிடம் ஏமார்ந்துபோகாதபடிக்கு கிறிஸ்தவர்கள் விழிப்பாக இருக்கவேண்டும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்பத்தூர்.
8946050920
Thanks for using my website. Post your comments on this