குட்டிக் கதை
முட்டாளுக்கு புத்தி சொல்வது வீண்
ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.
கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக்
கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச்சென்று மின்னியவாறு பறந்து சென்றது. அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து
தரையில் போட்டது.
மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன. பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன. ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்.
பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளிக் கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பறவை கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது.
பிறகு குரங்குகளை நோக்கி நண்பர்களே மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசம் எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள் என்று புத்திமதி கூறிற்று. உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார் என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன.
பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது. இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைப் பிடித்து தரையில் மோதிக் கொன்று விட்டன.
Ithu Pola daily message venum endral contact +918148663456
என் அன்பு வாசகர்களே,
முட்டாள்கள் என்றால் புத்தி மழுங்கியவர்கள் மட்டுமல்ல தாங்கள் செய்வதுதான் சரி என்று வீம்பு பேசுகிறவர்களும் மூடர்கள் தான். ஏனெனில் மூடர்களுக்கு எது சரி எது தவறு என்று தெரியாது எனவே தாங்கள் செய்வது சரி என்ற மனப்பாங்கில் தான் அவர்கள் எல்லா காரியத்திலும் ஈடுபடுவர். இப்படிப்பட்டவர்களுக்கு நாம் நன்மை செய்ய முற்பட்டால் நம் ஜீவனும் கேள்விக்குறி தான் என்பதில் சந்தேகமில்லை.
வேதத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல், தாவீதை கொலை செய்ய எத்தனிக்கும் போது தன் குமாரனாகிய யோனத்தான் தாவீது பட்சமாய் பேசி அவனை தப்புவிக்க நினைத்து சவுலிடம் அவனுக்குக்காக பரிந்துபேசி சவுல் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டினான். மேலும் எந்நேரமும் சவுலின் கூடவே நடந்தான். இறுதியில் பெலிஸ்தியர்களால் இருவரும் கொல்லப்பட்டனர்.
இதுபோலத்தான் தங்கள் உயர் அதிகாரிகள், தங்களோடு பணிசெய்பவர்கள் என யாராகிலும் தவறான வழியில் மூடரைப்போன்று செயல்படுவார்கள் என்றால் அவர்களிடம் இருந்து விலகிவிட வேண்டும் இல்லையேல் அவர்கள் நிமித்தம் நாமும் நிச்சயம் சிட்சிக்கப்படுவோம். அந்த நேரத்தில் புலம்பி எந்தவொரு பயனும் இல்லை.
6 மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள், சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
பிரசங்கி 10:6
மகா உயர்ந்த பதவியில் இருக்கின்ற எவரேனும் நம்மை தவறான வழியில் நடத்த முயற்சித்தால் அவர்களிடமிருந்து விலகி ஞானிகளின் தேவனிடத்தில் சேருவோம், தேவனுக்கேற்ற ஞானத்தோடு வாழ்வோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
ஓர் குட்டிக் கதை
புத்திசாலி பூனை பிரபு
முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவர் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். கிழடாகிப் போன அந்தப் பூனையால் எலிகளைப் பிடிக்க முடியவில்லை. இந்தப் பூனையால் எந்தப் பயனும் இல்லை. இதைக் காட்டில் விட்டு விடுவோம், என்று நினைத்தார் அவர். அப்படியே அதைக் காட்டில் விட்டுவிட்டு வந்தார். அந்த காட்டில் பூனையே கிடையாது. அங்கே உலவிக் கொண்டிருந்தது பூனை. பெண் நரி ஒன்று அதைப் பார்த்தது.
“ஐயா! தாங்கள் யார்? இப்பொழுது தான் தங்களை முதன் முறையாகப் பார்க்கிறேன்” என்று கேட்டது அது.
“நான் பூனை பிரபு” என்று கம்பீரமாகச் சொன்னது பூனை.
அதன் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கியது நரி. “ஐயா! என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவியாக நான் நடந்து கொள்வேன். உங்கள் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி வைப்பேன், ஒரு பிரபுவை கல்யாணம் செய்துக் கொண்ட பெருமை எனக்கு கிடடக்கும்” என்றது.
பூனையும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது. இரண்டிற்கும் திருமணம் நடந்தது.
தான் சொன்னபடியே நடந்தது நரி. தனியே சென்று கோழிக் குஞ்சுகளைப் பிடித்து வரும் பூனைக்கு உண்ணக் கொடுக்கும். சில சமயம் அது பட்டினியாகவே கிடக்கும்.
ஒரு நாள் உணவு தேடச் சென்றது நரி. வழியில் அதை முயல் ஒன்று சந்தித்தது.
“நண்பனே! உன் வீட்டிற்கு நான் வரலாம் என்று இருக்கிறேன். எப்பொழுது வருவது?” என்று கேட்டது முயல்.
“என் வீட்டிற்கு வரும் எண்ணத்தை விட்டுவிடு. அங்கே பூனை பிரபு இருக்கிறார். அவர் கொடூரமானவர். உன்னைக் கண்டால் ஒரு நொடியில் கொன்று தின்று விடுவார்” என்றது நரி.
அங்கிருந்து ஓடிய முயல் வழியில் ஓநாயைச் சந்தித்தது. “உனக்குச் செய்தி தெரியுமா? நரியின் வீட்டில் பூனை பிரபு இருக்கிறாராம். அவர் மிகக் கொடூரமானவராம். யாரையும் கொன்று தின்று விடுவாராம்” என்றது அது.
இந்த விந்தையான செய்தியைப் பன்றியிடம் சொன்னது ஓநாய். பன்றி இதைக் கரடியிடம் சொன்னது. முயல், ஓநாய், பன்றி, கரடி நான்கும் ஒன்றாகக் கூடின.
“எப்படியாவது பூனை பிரபுவை நாம் பார்க்க வேண்டுமே?” என்றது கரடி.
“உயிரின் மீது உனக்கு ஆசை இல்லையா?” என்று கேட்டது முயல்.
“எனக்கு நல்ல வழி ஒன்று தோன்றுகிறது நாம் நால்வரும் சேர்ந்து பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்வோம். பூனை பிரபுவையும் நரியையும் விருந்திற்கு அழைப்போம்” என்றது ஓநாய்.
எல்லோரும் இதற்கு ஒப்புக் கொண்டனர்.
மேசையின் மேல் விதவிதமான உணவுப் பொருள்கள் பரிமாறப் பட்டன.
“யார் சென்று பூனை பிரபுவை அழைப்பது?” என்ற சிக்கல் எழுந்தது.
“எனக்கு தூங்கி வழிகின்ற முகம். நான் சென்று எப்படி அழைப்பேன்?” என்று மறுத்தது பன்றி.
“எனக்கு அதிக வயதாகி விட்டது. உடல் நலமும் சரியில்லை” என்றது ஓநாய்.
“ஏதேனும் ஆபத்து என்றால் என்னால் வேகமாக ஓட முடியாது” என்றது கரடி.
மூன்றும் முயலைப் பார்த்து, “விருந்துச் செய்தியை நீதான் சொல்லிவர வேண்டும்” என்றன.
முயல் நடுங்கிக் கொண்டே நரியின் வீட்டை அடைந்தது. நீண்ட நேரம் வெலியிலேயே காத்திருந்தது. வெளியே வந்த நரி முயலைப் பார்த்து வியப்பு அடைந்தது.
“பன்றி, ஓநாய், கரடி மூன்றும் என்னை இங்கே அனுப்பின. நால்வரும் சேர்ந்து விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். உங்களுக்காகவே இந்த விருந்து நீங்களும் பூனை பிரபுவும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்” என்றது முயல்.
“நல்லது. நான் விருந்திற்கு வருகிறேன். பூனை பிரபுவும் என்னுடன் வருவார். நாங்கள் வரும் போது நீங்கள் நால்வரும் எங்காவது ஒளிந்து கொள்ளுங்கள் பூனை பிரபு உங்களைப் பார்த்தால் நீங்கள் செத்தீர்கள். விருந்து எங்கே நடக்கிறது?” என்று கேட்டது நரி.
இடத்தைச் சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தது முயல். தன் நண்பர்களைச் சந்தித்து நடந்ததைச் சொன்னது அது. பயந்து போன நான்கும் என்ன செய்வது என்று சிந்தித்தன.
“நான் அந்த மரத்தில் ஏறிக் கொள்கிறேன்” என்றது கரடி.
“அந்தப் புதரில் நான் ஒளிந்து கொள்கிறேன்” என்றது ஓநாய்.
“உன் அருகிலேயே நானும் பதுங்கிக் கொள்கிறேன்” என்றது முயல்
“அடர்ந்த அந்த மரங்களுக்குப் பின்னால் நான் மறைந்து கொள்கிறேன்” என்றது பன்றி.
பூனை பிரபுவும் நரியும் வரும் ஓசை கேட்டது. நான்கும் பதுங்கிக் கொண்டன.
பலவிதமான உணவுப் பொருள்களைப் பார்த்தது பூனை. அதற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ‘மியாவ், மியாவ்’ என்று கத்திக் கொண்டே சாப்பிடத் தொடங்கியது.
To get daily story contact +918148663456
புதரில் இருந்த ஓநாய், “எவ்வளவு பயங்கரமான விலங்கு? என்ன கொடூரமான குரல்? சாப்பிடும் வேகத்தைப் பார்த்தால் நம் விருந்து அதற்குப் போதாது. நம்மையும் கொன்று தின்னும் போல இருக்கிறது” என்றது.
“ஆமாம்” என்று நடுங்கிக் கொண்டே சொன்னது முயல்.
மரத்தில் இருந்த கரடியும் மறைந்து இருந்த பன்றியும் நடுங்கின.
பூனை விருந்தை வயிறார உண்டது. மேடையின் மேல் படுத்துத் தூங்கத் தொடங்கியது.
மரத்தின் மறைவில் பதுங்கி இருந்த பன்றியின் வாலைக் கொசு ஒன்று கடித்தது. உடனே பன்றி தன் வாலை அசைத்தது.
சத்தம் கேட்டு விழித்தது பூனை. பன்றியின் வாலை எலி என்று தவறாக நினைத்தது அது.
“மாட்டிக் கொண்டாயா?” என்று கத்திக் கொண்டே எலியைப் பிடிக்கப் பாய்ந்தது. நேராகப் பன்றியின் முகத்தில் போய் மோதியது அது.
எதிர்பாராமல் நடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது பன்றி. அங்கிருந்து ‘தப்பித்தேன்’ என்று கத்திக் கொண்டே ஓட்டம் பிடித்தது.
பன்றியைக் கண்டு பயந்த பூனை ஒரே பாய்ச்சலில் அருகில் இருந்த மரத்தில் ஏறியது.
அங்கிருந்த கரடி தன்னைத்தான் பூனை பிரபு கொல்ல வருகிறார் என்று பயந்தது. விரைந்து மரத்தின் உச்சிக் கிளைக்குச் சென்றது. அதன் எடை தாங்காமல் கிளை முறிந்தது. புதரில் மறைந்திருந்த ஓநாயின் மேல் விருந்தது அது.
அலறி அடித்துக் கொண்டு ஓநாயும் ஓட்டம் பிடித்தது. முயலும் அதைத் தொடர்ந்து ஓடியது. வலியைத் தாங்கிக் கொண்டு ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று கரடியும் ஓடியது.
நீண்ட நேரத்திற்குப் பிறகு நான்கும் சந்தித்தன.
“பூனை பிரபு பார்ப்பதற்குச் சிறியவராக இருக்கிறார். நம் நால்வரையும் கொன்று தின்றிருப்பார். நல்ல வேளை தப்பித்தோம்” என்றது கரடி.
மற்ற மூன்றும் “ஆமாம்” என்றன.
அதன் பிறகு பூனை பிரபுவின் வழிக்கே அவை செல்லவில்லை. வயதானாலும், அதிஷ்டத்தாலும், தன் வாய்சொல் திறமையாலும் பூனையானது மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.
என் அன்பு வாசகரே,
சிறுமைப்பட்டவர்களுக்கும் நிச்சயமாக ஒரு நாள் வாழ்வு வரும் என்பதே இக்கதையின் கருத்து.
இன்றைய சுழ்நிலையில் வயது முதிர்ச்சியின் காரணமாக அநேக பிள்ளைகள் தங்கள் பெற்றோரை சிறுமைப்படுத்தி அவர்களை வெறுத்து ஒதுக்குகின்றனர். அநேக பெற்றோர் தாங்கள் பெற்ற பிள்ளைகளை வெறுக்கின்றனர். அது அவர்கள் மனதை வெகுவாய் பாதிக்கின்றது.
அதுமாத்திரமல்ல வேலை செய்யும் இடங்களில் அதிக அனுபவம் உள்ளவர்கள் தம்மை விட குறைந்த அனுபவமுள்ளவர்களை மட்டுப்படுத்தி சிறுமைப்படுத்துகிறார்கள். வேலை இடங்களில் மாத்திரமல்ல ஊழியத்தில் கூட இது போன்ற காரியங்கள் அநேக இடங்களில் நடக்கின்றது.
எவரேனும் இது போன்ற சுழ்நிலையில் சிறுமைப்பட்டு வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்களா?? இயேசு கூறுகிறார்,
28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
மத்தேயு 11:28
இன்றே இயேசுவண்டை வாருங்கள் அவர் ஒருவரே சமாதான காரணர். வருத்தப்படுகிறவர்களுக்கும், பாரஞ்சுமக்கிறவர்களுக்கும் அவரே ஆறுதலாய் தேறுதலாய் எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார்.
உலகத்தில் உள்ள பெரும் செல்வந்தர்கள் எல்லாம் ஒரு கால கட்டத்தில் தங்கள் சொந்த பந்தங்களால் புறக்கணிக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டவர்கள் தான். அவர்களை தேவன் உயர்த்துவார் என்றால் நம்மையும் உயர்த்த போதுமானவராய் இருக்கிறார்.
22. சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.
ஏசாயா 60:22
எனவே ஏற்ற காலம் வரும்வரை காத்திருங்கள் நீங்கள் நினைத்ததற்கும் மேலாய் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.....
#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஓர் குட்டிக் கதை
நியமித்த வேலை
மாணிக்கபுரியில் வசித்து வந்த பிரபல வியாபாரி பத்மநாபன் தன் ஒரே மகளான பிரத்யுஷாவிற்குத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தார். தன்னுடைய நண்பரின் மகனான ஆனந்தனுக்கேத் தன் மகளை மணமுடிக்க முடிவும் செய்தார். ஆனால், திடீரென, திருமணத்திற்கு சில தினங்கள் முன் பிரத்யுஷாவிற்கு ஒரு விசித்திர நோய் ஏற்பட்டது.
அவளால் பேசவே முடியாமல் வாய் அடைத்துப் போனது. இதனால் பத்மநாபன் துடிதுடித்துப் போனார். பல ஊர்களில்இருந்து தலைசிறந்த வைத்தியர்களை வரவழைத்து சிகிச்சை செய்தும் பலனில்லை. கடைசியில் ஒருநாள் தனஞ்சயன் என்ற வைத்தியர் அவளைப் பரிசோதித்து அவளுடைய நோய் என்னவென்று கண்டு பிடித்தார். அவர் பத்மநாபனை நோக்கி, “உங்கள் மகளின் குரல்வளை நரம்புகள் செயலற்று விட்டன.
அதனால் அவளால் பேச முடியவில்லை. இந்த நோயை தசமூலம் எனும் மூலிகையினால் மட்டுமே குணப்படுத்த முடியும். ஆனால் அந்த மூலிகை வங்காளக் கடலில் உள்ள நாகத்தீவில் மட்டுமே கிடைக்கும். ஆனால், அங்கு செல்வது மிகவும் கடினம்!” என்றார். வைத்தியர் சொன்னதைக் கேட்டு ஆனந்தன், “வைத்தியரே! நான் பிரத்யுஷாவிற்காக தசமூல மூலிகையை உலகின் எந்தத் திசையிலிருந்தாலும் எடுத்து வருவேன். அந்த முயற்சியில் என் உயிரே போனாலும் பரவாயில்லை!” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினான்.
அவனைப் பெருமிதத்துடன் பார்த்த தனஞ்செயர், “நீ அந்த மூலிகையை நீ எப்பாடுபட்டாவது எடுத்து வந்தால், அது பிரத்யுஷாவிற்கு மட்டுமன்றி, அதே நோயால் பீடிக்கப்பட்டுள்ள பல நோயாளிகளுக்கும் பலன் கிடைக்கும். நீ தனியாகச் செல்ல வேண்டாம். உன்னுடன் என் சீடன் சஞ்சய் வருவான். அவனையும் அழைத்துச் செல்!” என்றார்.
ஆனந்தனின் நண்பன் சிவநாதனும் அவனுடன் செல்ல முன் வந்தான். அங்கு இருந்தவர்களில் ஒருவனான கபாலி, “எனக்கு வீரதீர சாகசங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் இந்தப் பயணத்தில் நானும் கலந்து கொள்வேன். நால்வருமாகச் செல்வோம்! வெற்றியுடன் திரும்புவோம்!” என்று முடிவு செய்தனர்.
ஒரு நல்ல நாளில் நால்வரும் மாணிக்கபுரியை விட்டுக் கிளம்பினர். கால்நடையாகப் பல நாள்கள் சென்றபின் கிழக்குக் கடற்கரையான வங்கக் கடலை அடைந்தனர். ஒரு கட்டுமரப் படகில் நால்வரும் நாகத்தீவை நோக்கிப் பயணித்தனர். முதல் ஐந்து நாள்கள், பயணத்தில் அபாயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஆறாம் நாளன்று திடீரென ஒரு திமிங்கிலம் தன் வாலைச் சுழற்றி அவர்களுடைய கட்டுமரத்தையடிக்க, அது துண்டு துண்டாக உடைந்தது. நால்வரும் கடலில் மூழ்கினர். ஆனந்தன் கடலுக்குள் மூழ்கவிருந்த சமயம், அவன் நண்பன் சிவநாதன் உடைந்த படகின் ஒரு துண்டை அவனிடம் தள்ளிவிட்டான். தனக்கு தகுந்த சமயத்தில் உதவி செய்த நண்பனுக்கு நன்றி கூறத் திரும்பினான்.
ஆனால் சிவநாதனைக் காணவில்லை. மற்ற இருவரும் சற்றுத் தொலைவில் உடைந்தப் படகுத்துண்டுகளைப் பிடித்துக் கொண்டு மிதப்பது தெரிந்தது. தனக்குதவி செய்த நண்பன் மட்டும் காணாமற்போனதைக் கண்டு ஆனந்தன் வருந்தினான். மிதந்து கொண்டே சென்ற மூவரும், கடலின் நடுவில் இருந்த குன்றுகள் சூழ்ந்த ஒரு தீவில் ஒதுங்கினர். அப்போது வானில் ஒரு பறக்கும் தட்டு தெரிந்தது.
அந்தப் பறக்கும் தட்டு அவர்கள் இருக்குமிடத்தில் கீழே இறங்கியது. அதில் மிகவும் வயதான ஒரு கிழவர் உட்கார்ந்திருந்தார். அவரை மிகுந்த ஆச்சரியத்துடன் மூவரும் நோக்க, அவர், “பயப்படாதீர்கள்! நானும் உங்களைப் போல் மனிதன்தான்! வானில் பறக்கவேண்டுமென்பது எனது நீண்ட நாள் கனவு! அதற்காகக் காலமெல்லாம் முயன்று இந்தப் பறக்கும் தட்டை உருவாக்கினேன்” என்றார். “ஐயா! தசமூலம் எனும் மூலிகையைத் தேடி நாங்கள் நாகத் தீவிற்குப் புறப்பட்டோம். அது எங்கிருக்கிறது என்று தெரியுமா?” என்று ஆனந்தன் கேட்டான்.
“இதுதான் நாகத்தீவு! மலையின் மீது வஞ்சிநகர் என்ற ஊர் உள்ளது. அங்கு இந்தப் பறக்கும் தட்டில்தான் செல்ல வேண்டும்! உங்களில் யாராவது தன் இளமையை எனக்குத் தியாகம் செய்தால், இதை நீங்கள் எடுத்து உபயோகிக்கலாம்!” என்றார் அந்த கிழவர்! உடனே சஞ்சய் தன் இளமையைத் தியாகம் செய்ய முன் வந்தான். ஆனந்தன் அவனைத் தடுத்தும் சஞ்சய் கேட்கவில்லை.
உடனே, கிழவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை சஞ்சய் உச்சரிக்க, அவன் சிறிது நேரத்தில் கிழவனாக மாறினான். கிழவர் குமரனாக மாறினார். குமரனான கிழவர் ஆனந்தனிடம் பறக்கும் தட்டைக் கொடுத்தார்.
பிறகு ஆனந்தன், கபாலி இருவர் மட்டும் பறக்கும் தட்டில் ஏறி வஞ்சிநகரை சேர்ந்தனர். வஞ்சிநகரில் அவர்கள் கண்ட காட்சி அவர்களை திடுக்கிடச் செய்தது. அந்த ஊரிலுள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் மிருகங்களின் தலைகளுடனும், மனிதர்களின் உடலுடனும் தென்பட்டனர். கிழவர்களும், கிழவிகளும் மட்டும் முழு மனித வடிவத்தில் இருந்தனர். அங்கு யாரை என்ன கேட்பது, தசமூல மூலிகையை எப்படித் தேடுவது என்று புரியாமல் அவர்கள் அலைந்து திரிந்து கடைசியில் ஒரு கிழவியின் குடிசையை அடைந்தனர்.
அந்தக் கிழவியிடம் தசமூல மூலிகையைப் பற்றிக் கேட்டனர். அதற்குக் கிழவி, “அந்த மூலிகை இளவரசியின் நந்தவனத்தில் இருக்கிறது. ஆனால் அதை உங்களால் பெற முடியாது. இளவரசியே இப்போது ஒரு மந்திரவாதியின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறாள்” என்றாள்.
“யார் அந்த மந்திரவாதி? ஏன் இந்த ஊரில் இளவயதினர் விசித்திரமான தோற்றத்துடன் காணப்படுகிறார்கள்?” என்று கபாலி கேட்டான். “அது பெரிய கதை! மகாதம்பன் என்ற மந்திரவாதி இளவரசி நந்தினியை அடைய விரும்பினான். ஆனால் இளவரசிக்கு அவனைச் சிறிதும் பிடிக்கவில்லை. அதனால் கோபங்கொண்ட மந்திரவாதி இந்த ஊரிலுள்ள இளைஞர்களையெல்லாம் மிருகத்தலைகளுடன் தோன்றுமாறு சபித்து விட்டான். எங்களைப் போன்ற வயதானவர்களை விட்டுவிட்டான். இளவரசி தன்னைத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே, சாபத்தை நீக்கிக் கொள்வான் என்று கிழவி சொல்லிக் கொண்டிருக்கையில், அந்தப் பக்கமாக மந்திரவாதி சென்று கொண்டிருந்தான்.
உடனே கபாலி அவன் எதிரில் போய் நின்று, “ஏய் மந்திரவாதி! உன் அக்கிரமத்தை ஒடுக்க நான் வந்து இருக்கிறேன். மரியாதையாக, உன் சாபத்தைத் திரும்பப் பெறு!” என்று துணிச்சலுடன் கூறினான். “யாரடா நீ? நான் மந்திரவாதி மகாதம்பன்! என்னிடமா விளைாயடுகிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்று கோபத்துடன் கூவிக் கொண்டே, அவன் தன் மந்திரக்கோலை உயர்த்தினான். உடனே, சற்றும் எதிர்பாராதவிதமாய், கபாலி அவன் மீது பாய்ந்து அவன் மந்திரக்கோலைப் பிடுங்கிக் கொண்டான்.
மந்திரக்கோல் கை மாறியதும் தன் சக்தியை இழந்த மந்திரவாதி தப்பியோட முயலுகையில், அவனை ஆனந்தனும், கபாலியும் பிடித்துக் கட்டிப்போட்டனர். உடனே, செய்தி அறிந்த இளவரசி அங்கு வந்து மந்திரவாதியை சிறையிட கட்டளையிட்டாள். பிறகு, ஆனந்தனையும், கபாலியையும் ராஜமரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசாரம் செய்தாள். அவர்கள் அங்கு வந்ததன் நோக்கத்தையறிந்து, தசமூல மூலிகைகளை வேண்டிய அளவு தன் நந்தவனத்திலிருந்து எடுத்துக் கொடுத்தாள்.
செல்லுமுன், கபாலி அங்குள்ள மக்களுக்கு மந்திரக்கோலைப் பயன்படுத்தி சில மந்திர உச்சாடனங்கள் செய்து சுய உருவம் கொடுத்தான். வஞ்சிநகரை விட்டுச் செல்லும் போது ஆனந்தன், “கபாலி! இனி அந்த மந்திரக்கோல் தேவை இல்லை. அதைத் தூக்கி எறிந்து விடு!” என்றான்.
ஆனால் கபாலி மந்திரக்கோலை தன்னிடமே வைத்துக் கொண்டான். பிறகு, இருவரும் தாங்கள் கிழவரையும், சஞ்சயையும் விட்டு வந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. சிவநாதன் அங்கு உயிருடன் காணப்பட்டான். சஞ்சய் பழையபடி வாலிபனாக மாறி இருந்தான். கிழவர் பழையபடி கிழவராகவே இருந்தார்.
ஆனந்தனைக் கட்டித் தழுவிய சிவநாதன், “நண்பா! கடல் அலைகள் என்னை வேறு திசையில் தள்ளிவிட்டதால் நான் உங்களைப் பிரிந்து விட்டேன். பிறகு, சிரமப்பட்டு இங்கு வந்து விட்டேன்!” என்றான். கிழவரிடம் பறக்கும் தட்டை ஒப்படைத்துவிட்டு, நால்வரும் மாணிக்கபுரிக்குத் திரும்பினர்.
தசமூல மூலிகையின் மகிமையினால் பிரத்யுஷா விரைவிலேயே குணமடைந்தாள். ஒரு நல்ல முகூர்த்தத்தில் ஆனந்தன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். மந்திரவாதியின் மந்திரக்கோலைக் கைப்பற்றித் தன்னுடைமையாக்கிக் கொண்ட கபாலி அதை வைத்து மந்திரவித்தைகள் காட்டிப் பணம் சம்பாதிக்க முயன்றான். ஆனால் அந்த மந்திரக்கோல் வேலை செய்யாதது மட்டுமன்றி, கபாலியை நன்றாக அடித்துத் துவைக்க, அவன் அந்த ஊரைவிட்டே வெளியேறினான்.
என் அன்பு வாசகர்களே,
நாம் எந்த காரியத்திற்காக அழைக்கப்பட்டோமோ அதை தான் செய்ய வேண்டும் மாறாக அதை விட்டு தேவையற்ற காரியங்களில் ஈடுபட்டால் அது வினையாகிவிடும்.
இன்றைய கதையில் கபாலி ஆனந்தனுக்கு உதவுவதற்காக சென்றான் உதவியும் செய்தான் ஆனால் இறுதியில் தனக்கு தேவையற்ற காரியமான மந்திரக்கோலை எடுத்துவந்ததால் தான் அவனுக்கு இந்த சோதனை. எதற்காக அழைக்கப்பட்டோம் என்பதை அறிந்து அதை மட்டும் செய்தால் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்.
To get daily story contact +918148663456
உதாரணமாக நீங்கள் ஒரு கம்பெனியில் ஒரு பொருப்பில் பணியமர்த்தப்பட்டால் அந்த பொருப்பிற்குரிய வேலையை மாத்திரம் தான் செய்ய வேண்டும் மாறாக எல்லா வேலைகளையும் செய்ய முற்படும்போது அது அந்த பதவிக்கே வினையாகிவிடும். அதுபோலத்தான் ஊழியமும், முழுநேர ஊழியத்திற்காக அழைக்கப்பட்டால் மட்டுமே முழு நேர ஊழியம் செய்ய வேண்டும் மாறாக ஊழியம் செய்தால் தேவனை குறை கூற நேரிடும்.
வேதாகமத்தில் கேரூப் என்ற தேவதூதனை மற்ற எல்லா தூதர்களை காட்டிலும் மிகவும் உயர்ந்த நிலையில் தேவன் வைத்திருந்தார். அவனுடைய பணி தேவனை ஆராதிப்பதில் ஆராதனை வீரர்களுக்கு தலைமையானவன். தேவனை குதிப்பது, ஆராதிப்பது, அவருடைய மகத்துவத்தை பறைசாற்றுவது தான் கேரூப் தூதனின் பிரதான பணி. ஆனால் அவனோ
14 நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன், உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
ஏசாயா 14:14
என்று சொல்லி இறுதியில் வெட்டப்பட விழுந்தான் என்று வாசிக்கிறோம்.
எனவே நாமும் நமக்கு தேவன் நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடுவோம் நித்திய ஜீவனை சுதந்தரிப்போம்.
1 ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.
எபிரேயர் 12:1
##நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!
Thanks for using my website. Post your comments on this