உங்கள் வாழ்வில் வளர்ச்சி இருக்கா? | அந்தஸ்தில் வளர்ச்சி! | அடிவாங்குபவன் பெரியவன் அடித்தவன் சிறியவன் | வாழ போராடுங்கள் | சவக்கடலும் ஆரோக்கியமாகும் | அழித்தால் பிழைப்பீர்கள் | தரிசனத்தின் அவசியம் | ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமாவது | இதுதான் முக்கியம் | காணிக்கைகளை (தியாகங்களை) கவனிக்கும் இயேசு | மாற்றத்தின் காரணி | உங்களில் ஒருவன்
=======================
உங்கள் வாழ்வில் வளர்ச்சி இருக்கா?
=======================
கண்ணுக்கு தெரியாத மிகச்சிறிய பாக்டீரியா கிருமி அதிகபட்சம் ஒவ்வொரு 20 நிமிடத்திலும் இரண்டு மடங்காக பெருகுமாம். இரண்டு நான்காகும், நான்கு எட்டாகும், எட்டு பதினாறாகும், பதினாறு முப்பத்திரண்டாகும்… இப்படி கணக்கிட்டுப்பார்த்தால் ஒரு பாக்டீரியா நான்கு மணி நேரத்தில் 524,288 ஆக பெருகுகின்றது.
உயிருள்ள எந்த பொருளும் வளரும். அது கண்ணுக்குத் தெரியாத சிறிய கிருமியாயிருந்தாலும் சரி, கண்ணுக்கு தெரியும் எந்த பெரிய மரம், மனிதன், விலங்குகளாயிருந்தாலும் சரி.
வளர்ச்சியும் பெருக்கமும் தேவனுடைய ஆசீர்வாதம்.
பின்பு தேவன் அவர்களை நோக்கி: *நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி,… என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். (ஆதி 1:28)
மீன்கள், பறவைகள், விலங்குகளைக்கூட தேவன் ஆசீர்வதித்து, *“நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள்* என்றும், பறவைகள் *பூமியில் பெருகக்கடவது* என்றும் சொன்னார்.”. (ஆதி. 1:22)
கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட *“தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்”* என்று வேதத்தில் வாசிக்கின்றோம். 2 சாமுவேல் 5:10.
*வளர்ச்சி என்பது எண்ணிக்கையில் மட்டுமல்ல தரத்திலும் இருக்க வேண்டும்.*
*தாவீது ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் என்ற ஸ்தானத்திலிருந்து படிப்படியாக உயர்ந்து உயர்ந்து இஸ்ரவேலின் பேரரசன் என்ற உயர்ந்த ஸ்தானத்திற்கு உயர்ந்தான். இன்று வரை தாவீதைப் போன்ற உயர்வான பேரரசன் இஸ்ரவேலில் காணப்படவில்லை.*
*நம் வாழ்க்கை படிப்படியாக அடுத்தடுத்த நிலையை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். தேங்கி நின்றுவிடக்கூடாது.*
*உங்கள் வாழ்வில் நாளுக்கு நாள் வளர்ச்சி இருக்கின்றதா இல்லை பல வருடங்களாக அப்படியே தான் இருக்கின்றீர்களா?*
*உயிருள்ள ஒரு உயிரினத்தில் வளர்ச்சியில்லை என்றால் அந்த உயிரினத்தில் ஏதோ பிரச்சனை இருக்கின்றது என்று தான் அர்த்தம். உங்களை சுயபரிசோதனை பண்ணி பாருங்கள்.*
இரட்சிக்கப்பட்டு 30 வருடமாகிவிட்டது, இன்னும் ஆவிக்குரிய வாழ்விலோ, சுவாபத்திலோ எந்த வளர்ச்சியும் இல்லை என்றால் நீங்கள் யோசிக்க வேண்டும்.
பொருளாதாரத்திலும் பல வருடங்களாக சிக்கி மீள முடியாமல் அதே நிலையில் இருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் யோசிக்க வேண்டும்.
ஊழியத்திலும் பல வருடங்களாக எந்த வளர்ச்சியும் இல்லை, தேய்பிறையாக தேய்ந்து கொண்டு போகிறதென்றால், நீங்கள் யோசிக்க வேண்டும்.
*இன்னும் வாழ்வில் எல்லா நிலைகளிலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். வளர்ச்சி நிற்பது என்பது ஆபத்தானது.*
*வளர்ச்சிக்கு தடையான காரியங்கள் உங்கள் வாழ்வில் என்னென்ன இருக்கின்றது என்று தேவ சமுகத்தில் அமர்ந்து உங்களையே ஆராய்ந்து பாருங்கள். கர்த்தர் நிச்சயம் உங்களுக்கு உணர்த்துவார். அவைகளை நீக்கினீர்களென்றால் நீங்கள் இன்றிலிருந்து வளரத்துவங்குவது நிச்சயம்.*
*கர்த்தர் உங்களை வளரச் செய்வாராக!*
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
======================
அந்தஸ்தில் வளர்ச்சி!
====================
ஒரு விதையை நிலத்தில் விதைத்தால் அது வளர்ந்து ஒரு பெரிய மரமாகின்றது. ஆனால் அது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சர்ரென்று வளர்ந்து விடாது. *கொஞ்ச கொஞ்சமாய் வளருகின்றது.* அப்படியே இருப்பதைப் போலத்தான் தெரியும், ஆனால் அடுத்த நாள் ஒரு புதிய இலை வந்திருக்கும். அதற்கடுத்த நாள் இன்னொரு இலை… இப்படியாக அந்த செடி மரமாகி கனி கொடுக்கின்றது.
*இது தான் கர்த்தர் நமக்கு கொடுக்கும் வளர்ச்சியாகிய ஆசீர்வாதம்.*
*நீதிமான் பனையைப் போல் செழிப்பான்* என்று வேதம் சொல்கின்றது. பனை மரம் வளர்வதை யாரும் பார்க்க முடியாது. ஆனால் அது வளர்ந்து கொண்டே இருக்கின்றது. பனை செடி அற்பமாய் தோற்றமளிக்கும், சிறிது காலம் கழித்துப் பார்த்தால் பிரமாண்டமாய் வளர்ந்து நிற்கும்.
இப்படிப்பட்ட வளர்ச்சிக்கு சரியான உதாரணம் தாவீது தான்! *தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.* 2 சாமுவேல் 5:10. இது தாவீது தனி நபராக தன் அந்தஸ்தில் எப்படி வளர்ந்தான் என்பதைக் குறிக்கின்றது. *ஒரு ஆடுமேய்க்கும் சிறுவன் என்ற அந்தஸ்திலிருந்து, நாடு ஆளும் அரசன் என்ற அந்தஸ்த்துக்கு உயர்ந்தான். அது தான் வளர்ச்சி!*
*தாவீது ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிடவில்லை. பனை மரம் போல கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் வளர்ந்தான். ஆனால் வளர்ந்து கொண்டே இருந்தான்.*
இந்த வளர்ச்சிக்கு அநேக காரணங்கள் இருந்தாலும், அதில் மிக முக்கியமான காரணம் *“சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடே இருந்தார்”* என்பது தான்!
*ஒருவன் என்னிலும் நான் அவனிலும் இருந்தால், அவன் (பெரிய மரமாய் வளர்ந்து) மிகுந்த கனிகளை கொடுப்பான் என்று வேதம் சொல்கின்றது. தேவனோடு நமக்கு உள்ள நெருங்கிய உறவு, நம்மை அந்தஸ்தில் வளர்க்கின்றது.*
*அந்தஸ்து என்பது கனி கொடுப்பதை அல்லது பிறருக்கு உபயோகமாக இருப்பதைக் குறிக்கின்றது.* தாவீது துவக்கத்தில் சில ஆடுகளுக்கு மாத்திரம் உபயோகமாக இருந்தான், பின் நாட்களில் சில நாடுகளுக்கு உபயோகமாக மாறினான். இது தான் அந்தஸ்தில் வளர்ச்சி!
குறுகிய வட்டத்தில் உள்ள உங்களை, கர்த்தர் கோடிகளுக்கு ஆசீர்வாதமாக மாற்றுவதே, உங்கள் அந்தஸ்தின் வளர்ச்சி!
மறுபடியும் சொல்கின்றேன், *ஒரே நாளில் எல்லாம் தலைகீழாக மாறி, உங்கள் அந்தஸ்து சர்ரென்று உயர்ந்து விடாது. படிப்படியாக, நாளுக்கு நாள், வர வர வளர்ந்து கொண்டே இருப்பீர்கள்.*
*உங்கள் அந்தஸ்து உயர்ந்து கொண்டே வருகின்றதா? நீங்கள் எத்தனை நபர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கின்றீர்கள்? யோசித்துப் பாருங்கள்!*
*பல வருடங்களாக வாழ்க்கையில் தேங்கின நிலையில், ஒரே நிலையில் இருப்பீர்களென்றால், உங்களுக்கும் தேவனுக்கும் உள்ள உறவை சரிசெய்யுங்கள்! “ஒருவன் என்னிலும் நான் அவனிலும்” என்ற தேவனுடைய வார்த்தை உங்கள் வாழ்க்கையின் அனுபவமாகட்டும்!*
*எத்தனை பிஸியான நாட்களிலும் தேவனோடு நேரம் செலவழிக்க மறக்க வேண்டாம். எத்தனை மகிழ்ச்சியான தருணங்களிலும் கர்த்தரைத் தவிர்த்துவிட்டு உலகத்தின் பக்கம் சென்றுவிட வேண்டாம். எத்தனை வருத்தமான காலங்களிலும் அவரது உறவை விட்டுவிட வேண்டாம்.*
*உங்கள் வாழ்வின் அந்தஸ்து வளர தேவனோடு உங்களுக்கு உள்ள உறவே ஆதாரம்!*
கர்த்தர் உங்களை உயர்த்துவாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
=================
அடிவாங்குபவன் பெரியவன் அடித்தவன் சிறியவன்
==================
*ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு.* (மத் 5:39 ). இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள். (மத் 5:45)
*இவ்வுலகத்தில் வல்லவன் அடிப்பான் எளியவன் அடிவாங்குவான். ஆனால் இயேசுவுடைய உபதேசம் அடிப்பவன் எளியவன், அடிவாங்குபவன் வல்லவன். உணர்ச்சியை வெளிக்காட்டி எல்லோரிடத்திலும் தீமையை வெளிப்படுத்துகிறவன் பெலவீனன். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தீமையை நன்மையால் வெல்லுபவன் பெலவான்.* நீதி 16:32 பலவானை பார்க்கிலும் சாந்தமுள்ளவன் சிறந்தவன். வெற்றிவீரனை காட்டிலும் மனதை அடக்குகிறவன் சிறந்தவன். வேதம் சொல்லும் கிறிஸ்தவம் தீமைக்கு தீமை செய்யாது (1 பேதுரு 3:9; ரோமர் 12:17; 1 தெச 5:15) தீமைக்கு நன்மையே செய்யும் (ரோமர் 12:21).
அடிவாங்கும் அளவுக்கு நாம் தாழ்த்த ஒப்புக்கொடுக்கும் போது நாம் உயர்த்தப்படுவோம் என்று வேதம் கூறுகிறது 1பேது.5:5 பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார் தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். *தாழ்ந்தால் உயர்வு, பெருமைபட்டால் தாழ்வு. தாழ்மை என்பது நாம் மற்றவர்களுடைய நிலைக்கு தகுந்தவாறு நாம் நம்மை தாழ்த்திக்கொள்வதாகும்.*
உதாரணத்திற்கு: நம்மை விட சமுதாயத்தில், பொருளாதாரத்தில், கல்வியில் குறைந்த ஒருவர் நம்மோடு பழகும் போது நாம் ஒய்யாரத்திலேயே உட்கார்ந்து கொண்டு பேசக்கூடாது. அல்லது அவர்களை அற்பமாக எண்ணவோ அவர்களை விட்டு விலகவோ கூடாது. பிலி 2:8 *அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார்.* இயேசு கடவுளின் சக்தியனைத்தும் பெற்றிருந்தும் மனிதனோடு மனிதனாக வாழ்ந்து நமக்கு ஊழியம் செய்தார்.
இயேசு இதை தன் வாழ்வில் கடைபிடித்தே காட்டினார். சீஷர்கள் எவன் பெரியவன் என்று சண்டையிட்டுக் கொண்டிருந்த போது, இயேசு வந்து அவர்கள் கால்களை கழுவி விட்டார். அக்காலத்தில் கால்களை கழுவுவது அடிமையின் வேலை. இயேசு தன் சீஷர்களுக்கு அடிமையாக வேலை செய்தார். ஏனென்றால் *அதுதான் உயர்வின் ரகசியம்.* நீங்கள் உயர வேண்டுமா? மற்றவர்களுக்கு முன் தாழ்ந்து போங்கள். மற்றவர்களுக்கு ஊழியம் செய்யுங்கள்.
1பேது 4:10 அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.உங்களுக்கு யார் மேல் கசப்பு வைராக்கியம் இருக்கிறதோ, அவர்களுக்கு ஊழியம் செய்ய இன்றே துவங்குங்கள். (ரகசியம்….) கர்த்தர் உங்களை உயர்த்துவார்.
*இயேசு ஒரு வித்தியாசமான வாழ்கை கோட்பாட்டை மனுக்குலத்திற்கு போதித்திருக்கிறார்.* உலகமெல்லாம் பணம் அதிகாரம் ஆக்கிரமிப்பு என்று திரியும் நாட்களில் இயேசு மாத்திரம் மாறுபட்டு அன்பை குறித்து போதித்தார். இயேசுவின் நாட்களில் இயேசுவைத்தவிர சுமார் 12 பேர் நான் தான் மேசியா என்று எழும்பினதாக சரித்திர குறிப்பு ஒன்று சொல்கிறது. இந்த 12 பேரும் ஆயுதம் எடுத்து போராடி வெற்றி பெறவிரும்பினார்கள்.
இவர்களுடைய பெயர்களும் மறக்கப்பட்டு அவர்களை சார்ந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டு போனர்கள். ஆனால் மனுஷ குமாரன் இயேசு தேவனுடைய சுவாபங்களை தன்னில் வெளிப்படுத்தி, தன் சீஷர்களுக்கும் போதித்தார். இன்று உலகில் பாதிப்பேர் இயேசு காட்டின வழியில் வாழ்ந்து வருகிறார்கள். நீங்களும் நானும் அவர் பிள்ளையாக இருக்கிறோம். இயேசுவின் மாறுபட்ட உபதேசங்களை உங்கள் வாழ்க்கையில் அப்பியாசப்படுத்துங்கள்.
உங்கள் அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களால் நீங்கள் நிந்திக்கப்படும்போதும், காயப்படும்போதும், துன்பப்படும்போதும் *பதில் செய்யாமல் அமைதியாயிருங்கள். அதுவே உங்களது பலம்.* பழிக்கு பழி வாங்கி நான் பெரியவன் என்று நிரூபிக்க நினைப்பது இயேசுவின் உபதேசத்தின் பிரகாரம் பெலவீனம். *அஹிம்சையில் ஒரு வல்லமை இருக்கிறது.* அதைத்தான் காந்தியடிகள் வேதத்திலிருந்து கற்றுக் கொண்டு, அதன் மூலம் நம் நாட்டிற்கு விடுதலை வாங்கிதந்தார்.
*தீமையை நன்மையால் வெல்லுங்கள்.*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
=============
வாழ போராடுங்கள்
================
அநேக பறவைகள் இனப்பெருக்கத்திற்காக கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்லும். அவைகள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பறந்து பிழைப்புக்கேற்ற இடங்களுக்குச் செல்லும். அப்படிப்பட்ட பறவைகளில் ஒன்றான, *ஐந்து மாத வயதேயான பார்டெயில்டு காட்விட் (Bar-tailed godwit)* என்ற பறவை அமெரிக்காவிற்கு வடக்கே இருக்கும் அலாஸ்காவிலிருந்து தெற்கே ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவிற்கு எங்கேயும் நிற்காமல் *தொடர்ச்சியாக 11 நாட்கள் பறந்து வந்ததாம்.* அது பறந்து வந்த *மொத்த தூரம் 13,560 கிலோ மீட்டர்கள்* ஆகும்.
அந்த பறவை இடையில் களைப்படைந்தால் கூட அது கீழே இறங்க முடியாது, ஏனென்றால் அது பறந்து சென்ற *அத்தனை தூரமும் (13560 கிமீ) முழுக்க முழுக்க கடல் பரப்பு* ஆகும். கீழே இறங்கினால் செத்துப் போகும். அந்த பயணமே அதற்கு ஒரு வாழ்வா சாவா போராட்டம் தான்!
*ஐந்தறிவு உள்ளது என்று நாம் அழைக்கும் அந்த பறவை கூட தான் வாழுவதற்காக எத்தனை போராட்டம் போராடுகின்றது.* வழியில் எத்தனையோ முறை களைப்பு ஏற்பட்டிருக்கும், சோர்வு, பெலவீனம் ஏற்பட்டிருக்கும். அதன் மத்தியிலும் சோர்ந்து விடாமல் தொடர்ந்து 11 நாட்கள் பறந்து சென்று செல்ல வேண்டிய இடத்தை அடைந்துள்ளது.
சமீபத்தில் ஒரு வியாதிப்பட்ட சகோதரனை சந்தித்து ஜெபிக்கச் சென்றேன். அவர் தனக்கு வந்திருந்த வியாதினிமித்தம் சோர்வடைந்து, நான் மரித்துப் போகட்டும் என்று ஜெபியுங்கள் பாஸ்டர் என்றார். வேதனையினால் அவர் தளர்ந்து விட்டார்! உலகத்தில் வாழ விருப்பமில்லை!
இது தவறான காரியம்! *வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழ்நிலை வழியாக நாம் கடந்து சென்றாலும், போராடி மேற்கொள்ளவே கர்த்தர் அழைக்கின்றார்.* இதை விட்டு விட்டு, சிறிய சிறிய காரியத்திற்கெல்லாம் நான் செத்துப் போனால் நலம் என்று அடிக்கடி சொல்லி சோர்வை வெளிப்படுத்துவது தவறு.
ஆகையால் *நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு,* தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள் (எபி. 12:3) என்று வேதம் சொல்கின்றது. *இயேசு சந்திக்காத போராட்டத்தையா நீங்களும் நானும் சந்தித்துவிடப்போகின்றோம்?*
இயேசு கெத்சமனே தோட்டத்தில் பட்ட வியாகுலத்தை வேறு யாரும் அனுபவித்திருந்தால் மாரடைப்பு வந்து அங்கேயே மரித்திருப்பார்கள். ஆனால் இயேசு உறுதியான மனதுடன் அதை போராடி மேற்கொண்டார்.
சதையை பிய்த்து இழுக்கும் வாரினால் 39 முறை இயேசுவை அடித்தார்களே, அப்படி ஒரு தண்டனையை வேறு யாரும் பெற்றிருந்தால், அங்கேயே மரித்திருப்பார்கள். ஆனால் இயேசு அத்தனையையும் கடந்து பிலாத்துவின் முன் வந்து நின்றார்.
பின்னர் காயப்பட்ட சரீரத்தோடு 136 கிலோ எடையுள்ள சிலுவையை சுமந்து கொண்டு கஷ்டப்பட்டு கொல்கொதா மலையின் மீது ஏறிச் சென்று அங்கே சிலுவையில் அறையப்பட்டு மரித்தார். சிலுவையில் தான் மரிக்க வேண்டும் என்பது தான் பிதாவின் சித்தம்.
*அந்த பிதாவின் நோக்கத்தை நிறைவேற்ற அவர் சிலுவையில் அறைப்படும் வரை மரிக்காமல் இருக்க அவருக்குள் இருந்த மனதைரியமும், போராடும் மனப்பான்மைதான் அவரை காப்பாற்றியது.*
*என்ன நடந்தாலும் சோர்ந்து போகாதிருங்கள். உங்கள் மனது இளைத்துப் போக ஒரு நாளும் இடம் கொடாதிருங்கள். மனது இளைத்துவிட்டால் வாழ்க்கை கசந்து விடும். போராட பலம் இருக்காது.*
*வானமே இடிந்து விழுந்தாலும் கைகளை தூக்கி அதை பிடிக்க முயலுங்கள். சுனாமியே எதிர்த்து வந்தாலும், அதிலும் நீச்சலடித்து மீள முயலுங்கள். சரீரம் முழுவதும் பெலவீனமடைந்தாலும் மனதை இரும்பாய்க் கொண்டு நிமிர்ந்து நில்லுங்கள். கழுத்திற்கு கத்தியே வந்தாலும், கற்றுக் கொண்டதில் உறுதியாய் நிலைத்திருங்கள்.*
*வாழ்வில் எதையும் துணிந்து சந்தியுங்கள். சீக்கிரத்தில் துவண்டு போகாதிருங்கள். வாழ்வின் கடைசி மூச்சு வரை போராடுங்கள்.*
*போராடினால் ஜெயம் உங்களுக்கே!*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
======================
சவக்கடலும் ஆரோக்கியமாகும்
===================
இஸ்ரவேல் தேசத்தில் யோர்தானுக்கு அடுத்து, சவக் கடல் என்று ஒன்று உள்ளது. சவக்கடல் என்று அதற்கு பெயர்வரக் காரணம், அதன் அதிக உப்புத்தன்மை கொண்டது. 1 லிட்டர் அந்த கடல் தண்ணீரில் 1.25 கிலோ உப்பின் அடர்த்தி காணப்படுமாம். யோர்தான் நதி காலமுழுவதும் மதுரமான, நல்ல தண்ணீரை இந்த கடலில் கொண்டு வந்து கொட்டுகின்ற போதும், இதன் உப்புத்தன்மை சற்றும் குறையவில்லை.
அதிக உப்புத்தன்மை காரணமாக, 50 கிலோ மீட்டர் நீளமும் 15 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட இந்த கடலில் மீன் போன்ற எந்த உயிரினமும் வசிக்க முடியாதாம். கடல் பாசி, மற்றும் கடல் தாவரங்கள் கூட அங்கு இல்லை. எந்த உயிரும் வாழ தகுதியற்ற ஒரு ஆரோக்கியமற்ற கடலாகையால் அது சவக்கடல் என்று பெயர் பெற்றிருக்கின்றது.
*ஆனால் எல்லாவற்றையும் சாகடிக்கும் இந்த சவக்கடலையும் சுகமாக்கி ஆரோக்கியமான தண்ணீராய் மாற்றும் ஒரு வல்லமையைக் குறித்து எசேக்கியல் 47ம் அதிகாரத்தில் எழுதியுள்ளது.*
பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரப்பண்ணினார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாயிருந்தது;... அவர் என்னை நோக்கி: *இந்தத் தண்ணீர் கிழக்கு தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், வனாந்தரவழியாய் ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.* (எசேக். 47:1, 8).
*அது வரை தன்னிடம் வந்த தண்ணீரையும் நச்சுத்தண்ணீராய் மாற்றிக் கொண்டிருந்தது அந்த சவக்கடல், ஆனால் இப்போது ஆலயத்திலிருந்து புறப்பட்டு வரும் தண்ணீர் அதில் விழுந்த உடன், அந்த ஒன்றுக்கும் உதவாத தண்ணீர் ஆரோக்கியமாயிற்றாம்.* அதுமட்டுமல்ல, “இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மீன்கள் உண்டாயிருக்கும்; இந்த நதிபோகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும்” என்று எழுதப்பட்டுள்ளது (எசேக். 47:9).
*இந்த தீர்க்கதரிசனம் கிறிஸ்துவைப்பற்றியும் அவரால் உலகமுழுவதிலும் உண்டாகும் மாற்றத்தைக் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. அன்று ஆலயம் என்பது கையினால் கட்டப்பட்ட கட்டிடம். ஆனால் இன்று கர்த்தருடைய மக்களாகிய நாம்தான் தேவாலயம். கிறிஸ்துவைப்பற்றிய சுவிசேஷம்தான் நம்மிடமிருந்து புறப்பட்டு தேசமெங்கும் ஓடும் தண்ணீர்.*
இந்த சுவிசேஷத்தின் வல்லமையைப் பாருங்கள். *விஷத்தன்மை கொண்ட சவக்கடல் போன்ற மனிதர்களை கூட மாற்றும் வல்லமை இந்த சுவிசேஷத்தில் உள்ளது. அது செல்லும் இடமெல்லாம் மாற்றத்தை உண்டுபண்ணிக் கொண்டே செல்லுமாம். உண்மைதானே! மனிதனை மனிதன் கொன்று தின்னும் மலை வாழ் மக்களைக் கூட இந்த சுவிசேஷம் மாற்றியிருக்கின்றதே! எத்தனை கொடூரமான குற்றவாளிகளை திருத்தியிருக்கின்றதே!*
*இத்தனை வல்லமையை நமக்குள் அடக்கி வைத்துக் கொண்டு, ஒன்றுமில்லாதவர்கள் போல ஒரு ஓரமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.*
*இந்த இயேசுவின் நற்செய்தி இன்று உங்களுக்குள் இருக்கின்றது. நீங்கள் செல்லும் இடமெல்லாம் உப்பாக சுவை தந்து, வெளிச்சமாக பிரகாசித்து மாற்றங்களை கொண்டு வாருங்கள். நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல. உங்களுக்குள் இருக்கும் இயேசுவின் நற்செய்தி சவக்கடலையும் மாற்ற வல்லமையுள்ளது.*
நம்மைச் சுற்றி அநேகர் பாவத்திலும், சாபத்திலும் வாழ்ந்து நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். அனுதினமும் எத்தனை கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள்... தேசத்தில் நடக்கின்றவைகளை கேட்க காது கூசுகின்றது. இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையை மாற்றும் வல்லமையும் பொறுப்பும் நம்மிடம் இருக்கின்றது.
*நாம் அனைவரும் பொறுப்பை உணர்ந்து, சுவிசேஷ ஊழியத்தை, வார்த்தையிலும் வாழ்க்கையிலும் கருத்தாய் செய்தோமென்றால் தேச முழுவதும் இந்த நதி பெருக்கெடுத்து ஓடி, ஆவிக்குரிய செழிப்பைக் கொண்டுவரும். சவக்கடல் போன்ற சாபத்தில் வாழ்பவர்கள் ஆசீர்வாதமடைவார்கள்.*
உணர்வோம்! செயல்படுவோம்!!
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
===============
அழித்தால் பிழைப்பீர்கள்
==============
அசுத்தமான படங்களுக்கு அடிமையான ஒரு வாலிப சகோதரன் என்னிடத்தில் ஜெபிக்க கேட்டுக் கொண்டான். அவன் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் ஆபாச படங்களை பார்ப்பானாம். அவைகளைப் பார்க்காமல் அவனால் இருக்க முடியாது. இதனால் அவனால் கல்லூரியில் ஒழுங்காக படிக்க முடியாமல், அதிக பாடங்களில் அரியர் வைத்திருக்கின்றான். இப்படியாக அந்த பழக்கம் அவன் சிந்தையை கெடுத்து, அவன் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கின்றது.
*நம் மாம்ச சரீரம் இது போன்ற பல காரியங்களை ஆசைப்படுகின்றது. அவைகளில் பெரும்பாலானவைகள் நமக்கு தீமை இழைக்கக்கூடிவைகள்.*
உதாரணத்திற்கு:
அசுத்தமானவைகளை காண கண்கள் ஆசைப்படுகின்றது, அது நம் சிந்தையை கெடுத்து செயல்களை தீமையாக்கிவிடும்
சமூக வலைதளங்கள் போன்ற பயனற்ற பொழுது போக்குகளை அதிகம் விரும்புகின்றது, அவைகள் நம் நேரத்தை வீணடித்து நம் எதிர்காலத்தை சூனியமாக்கிவிழும்.
நாவுக்கு ருசியான துரித உணவுகளை அதிகம் விரும்புகின்றது, அவைகள் நம் ஆரோக்கியத்தை கெடுத்து நம்மை நோயாளியாக்கி அழித்துவிடும்.
போதை வஸ்துக்களை அதிகம் விரும்புகின்றது, அவைகள் நம் சமூகத்தையே கெடுத்துவிடும்.
இவ்விதமாக இன்னும் பலவற்றை நம் சரீரம் கேட்கும்.
*உங்கள் சரீரங்கள் எவைகளை கேட்கின்றன? அவைகள் உங்கள் வாழ்க்கையை எப்படி அழிக்கின்றன என்பதை யோசித்துப் பாருங்கள்.*
இன்று பெரும்பாலும் மக்கள் தங்கள் சரீரம் கேட்பதை கொடுக்காமல் இருப்பதில்லை. உதாரணத்திற்கு சிறு பிள்ளைகள் பாக்கெட்டில் அடைத்து விற்கும் லேஸ், குர்குர்ரே போன்ற தின்பண்டங்களை அதிகம் விரும்புகின்றனர். அவர்களுக்கு அதை கொடுக்கவில்லையென்றால், தரையில் கிடந்து புரண்டு, அழுது அடம்பிடித்து எப்படியாகிலும் வாங்கிவிடுவார்கள். தங்கள் ஆசையை அவர்கள் நிறைவேற்றிவிடுவார்கள். ஆனால் அவற்றினால் அவர்களின் ஆரோக்கியம் கெடுகின்றது என்பதை உணருவதில்லை.
*நம் சரீரம் கேட்பதையெல்லாம் கொடுத்துக் கொண்டே இருப்பதற்கு நாம் நம் சரீரத்திற்கு அடிமைகள் அல்ல.*
இதைத்தான் வேதம் சொல்கின்றது, *ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.* (ரோமர் 8:12-13)
*மாம்சத்தின்படி என்றால் நம் சரீரத்தின் ஆசைகளின்படி என்று அர்த்தம். நம் சரீரத்தின் ஆசைகளின் படியெல்லாம் செய்து கொண்டே இருப்பீர்களென்றால் சாவீர்கள் என்று வேதம் எச்சரிக்கின்றது. ஆவியானவரின் உதவியோடு நம் சரீரத்தின் ஆசைகளையும், அதிலிருந்து எழும்பும் செயல்களையும் அழித்தால் பிழைப்போம்.*
*சரீரத்தின் ஆசைகளை மறுத்துவிடுங்கள்.*
*உங்கள் சரீரம் கேட்பவைகளை மறுக்க பழகுங்கள். அப்படி மறுக்க மறுத்தீர்களென்றால், அது உங்களை அழிவின் பாதையில் இழுத்துச் செல்லும்.*
* ஆபாசப் படங்கள்,
* அசுத்தமான உறவுகள்,
* கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம்,
* நேரத்தை விரயமாக்கும் மொபைல் போன்,
* போதை வஸ்துக்கள்,
* பொருளாசையின் மயக்கம்,
*போன்றவைகளின் ஆசைகள் உங்களுக்கு உண்டாகும் போதெல்லாம், அதை உங்கள் சரீரத்திற்கு கொடுக்க மறுத்து விடுங்கள். உனக்கு கிடையாது என உங்களையே பார்த்து உறுதியாகச் சொல்லுங்கள். அதன் இழுவைக்கு உங்களை விட்டுக் கொடுக்காதிருங்கள்.*
*இல்லையென்றால் அவைகள் உங்களை அடிமைப்படுத்தி, உங்கள் கழுத்தில் சங்கிலியால் கட்டி, நரகத்திற்கு நேராக இழுத்துக் கொண்டு செல்கின்றது என்பதை மறக்காதிருங்கள்.*
*ஆசைகளை சாகடியுங்கள்! சரீரத்தின் செயல்களை அழித்துவிடுங்கள்!! அப்பொழுது பிழைப்பீர்கள்!!!*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
============
தரிசனத்தின் அவசியம்
=============
தனது 75ம் வயதில் பிள்ளையில்லாமல் இருந்த ஆபிரகாமை, கர்த்தர் அழைத்து நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன் என்று வாக்குத்த்த்தம் பண்ணினார். ஆபிரகாம் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து கானானுக்கு சென்றான். ஆனால் கர்த்தர் வாக்குப்பண்ணி 10 வருடம் கழித்தும், (85 வயதிலும்) ஆபிரகாமுக்கு பிள்ளை இல்லை. இதை நினைத்து தன் கூடாரத்திலே மிகச் சோர்வோடு இருந்தான் ஆபிரகாம்.
*இன்று நம்மில் பலர் இப்படி ஆபிரகாமைப் போலத்தான் கூடாரத்திற்குள் மல்லாக்க படுத்துக் கொண்டு வாழ்க்கையைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.* கூடாரம் என்பது ஆபிரகாமின் நிலையில்லாத வாழ்க்கையைக் குறிக்கின்றது. அது மட்டுமல்ல, கூடாரம் மிகச் சிறியது, குறுகினது. *அது போல நாமும் நம்முடைய குறுகின, நிலையில்லாத, பிரச்சனைகள் நிறைந்த வாழ்வை நினைத்து நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.*
கூடாரத்திற்குள் படுத்து, கூடாரத்தையே வெறிக்க பார்த்து நொந்து கொண்டிருந்த ஆபிரகாமை கர்த்தர் கூடாரத்தை விட்டு வெளியே அழைத்தார். *“அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்”* (ஆதி. 15:5).
*ஒடுங்கின கூடாரத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு, பரந்த வானத்தை பார்க்கும்படி வெளியே வா! வானத்து நட்சத்திரங்களைப் பார், அதை எண்ண முடிந்தால் எண்ணு என்று கர்த்தர் வெளியே அழைத்தார்.*
அண்ட சராசரங்களில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்தையும் விஞ்ஞானிகள் தோராயமாக கணக்கிட்டதில் *மொத்தம் 1,000,000,000,000,000,000,000 (கோடி கோடி) நட்சத்திரங்கள் என்கிறார்கள்.* மனித ஞானத்திற்கு எட்டின வகையில் தான் இந்த எண்ணிக்கை. இன்னும் எண்ணப்படாதவைகள் எத்தனை கோடி கோடி கோடி இருக்கின்றதோ? *அதற்கு ஒப்பாய் உன்னைப் பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் ஆபிரகாமுக்கு தரிசனம் தந்தார்.*
*உன் சந்ததி கூடாரத்தைப் போல் குறுகினது அல்ல, வானத்தைப் போல் பரந்தது. உன் சந்ததி கூடாரத்தைப் போல் வெறுமையானது அல்ல. வானத்திலே கோடி கோடியான நட்சத்திரங்கள் இருப்பது போல் பெருகினது என்று கர்த்தர் ஆபிரகாமுக்கு தரிசனத்தின் மூலம் உணர்த்தினார். அதே போல் அவனை பிற்காலத்தில் பலத்த ஜாதியாக்கினார்.*
இன்று இதை வாசிக்கும் நீங்களும் உங்கள் சூழ்நிலைகளான கூடாரத்திற்குள் முடங்கி சோர்ந்து போயிருப்பீர்களென்றால், *கர்த்தர் உங்களை வெளியே அழைக்கின்றார். வெளியே வந்து கர்த்தர் உங்களுக்கு தருகின்ற தரிசனத்தைப் பாருங்கள். அந்த தரிசனத்தை விசுவாசியுங்கள்.* ஆபிரகாம் தரிசனம் தந்த கர்த்தரை விசுவாசித்தான், அதை கர்த்தர் அவனுக்கு நீதியாக எண்ணினார் என்று வேதம் சொல்கின்றது (ஆதி. 15:6).
ஆபிரகாமுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் கர்த்தர் ஒரு நோக்கம், ஒரு திட்டம் வைத்துள்ளார். அதை அவர் தரிசனமாக உங்களுக்கு வெளிப்படுத்துவாராக! *அந்த தரிசனம் உங்கள் மனதில் படமாக பதிய வைக்கப்படும் போது எத்தனை பிரச்சனைகள், எத்தனை தோல்விகள், எத்தனை தாமதங்கள், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து ஓடுவீர்கள்.*
*எப்பொழுதெல்லாம் ஆபிரகாமுக்கு பிரச்சனைகள் தோன்றியதோ, அப்பொழுதெல்லாம் அவன் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து வானத்தை அண்ணாந்து பார்த்திருப்பான். தரிசனத்தை பார்க்க பார்க்க, விசுவாசம் கட்டப்பட்டு, தொடர்ந்து தேவனுக்கு உண்மையாய் நடந்திருப்பான். அதனால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்து 100வது வயதில் ஈசாக்கை அவனுக்குத் தந்தார்.*
*கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் நோக்கம் என்ன? கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தரிசனம் என்ன? அதை நோக்கிப் பாருங்கள். விசுவாசத்தில் உறுதிப்படுங்கள். வாக்குத்தத்தங்கள் நிச்சயம் நிறைவேறும்.*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
================
ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமாவது
=================
இயேசு தாம் சிலுவைக்கு போவதற்கு முன், கெத்சமனே தோட்டத்தில் ஜெபிக்க சென்றார். அப்போது தம்மோடு ஜெபத்தில் துணை நிற்கும்படியாக பேதுரு, யோவான், யாக்கோபு என்ற 3 சீஷரை தெரிந்து கொண்டு அழைத்து சென்றார். ஆனால் ஜெபம் துவங்கின உடனேயே இந்த மூன்று சீஷரும் தூங்க ஆரம்பித்து விட்டார்கள்.
மற்ற சீஷரை காட்டிலும் இவர்கள் நன்றாக ஜெபிப்பார்கள் என்று நினைத்து தான் அழைத்து சென்றிருப்பார். இயேசு இந்த மூன்று பேரையும் பார்த்து என் ஆத்துமா மரணத்துக்கு ஏதுவான துக்கம் கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி என்னோடே விழித்திருங்கள் என்று தம்முடைய மனபாரத்தை பகிர்ந்து கொண்ட பின்பும், சற்றும் உணர்வில்லாமல் தூங்க ஆரம்பித்து விட்டார்கள்.
*அருகில் இயேசு துக்கத்தோடே வியாகுலத்தோடே கதறி ஜெபிக்கின்ற வேளையில் எப்படித்தான் இவர்களுக்கு தூக்கம் வந்ததோ?*
இயேசு அவர்கள் தூங்குவதை பார்த்து வேதனையடைந்தவராய், அவர்களிடம் வந்து *ஒரு மணி நேரமாவது விழித்திருந்து ஜெபிக்கக்கூடாதா?* என்று கேட்டார். அன்று ஜெபிக்காமல் தூங்கின சீஷர்களை பார்த்தால் நமக்கு கோபம் வருகிறதல்லவா? இன்று நம்மில் அநேகருடைய நிலையும் அதுதான் என்பதை நாம் உணர வேண்டும்.
*அன்று இயேசு சீஷர்களிடம் கேட்ட அதே கேள்வியை இன்று நம்மிடமும் கேட்கிறார். நீங்கள் அனுதினமும் ஒரு மணி நேரமாவது விழித்திருந்து ஜெபிக்கக்கூடாதா?*
இயேசுவை கைது செய்ய போர்ச்சேவகர்கள் வந்தத போது, பேதுரு டென்சனாகி அவர்களில் ஒருவனை காதற வெட்டினான் என்று வாசிக்கிறோம். இயேசுவை காப்பாற்ற பட்டயத்தை எடுத்து வெட்ட ஆரம்பிக்கின்றான். கழுத்த வெட்டுவதற்கு பதிலாக காதை வெட்டுகின்றான்.
பேதுருவுக்கு, *இயேசுவுக்காக கத்திய எடுத்து சண்ட போட முடியுது, ஆனா தன் தூக்கத்தை கட்டுப்படுத்தி இயேசுவுக்காக ஒரு மணி நேரம் ஜெபிக்கமுடியவில்லை.* அநேகர் சபையில் வேலைகளை செய்வார்கள், அல்லும் பகலும் ஓடி உழைப்பார்கள், கிறிஸ்துவுக்காக வீதியில் இறங்கி கூட போராட முதல் ஆளாக வருவார்கள். ஆனால் ஜெபம் என்றால் தலைதெறிக்க ஓடி விடுவார்கள்.
சபைக்காக உழைப்பதை நான் தவறு சொல்லவில்லை. கண்டிப்பாக கர்த்தருக்காய் உழைக்க வேண்டும். ஆனால் அதை விட முக்கியமான “ஜெபத்தின்” முக்கியத்துவத்தை நாம் மறந்துவிடக்கூடாது என்பதையே வலியுறுத்துகிறேன்.
*ஏனென்றால் இயேசுவுக்காக கத்தியை எடுத்து சண்டை போட ஆயத்தமாயிருந்த பேதுரு, சிறிது நேரத்தில் இயேசு என்றால் யாரென்றே தெரியாது என்று மறுதலித்ததையும் நாம் பார்க்க முடியும்.*
ஜெபிக்காததின் விளைவு இதுதான். விசுவாச ஜீவியத்தில் நிலைத்து நிற்க ஆவிக்குரிய பலம் அவர்களுக்கு இருக்காது. ஓடி ஓடி ஊழியத்திற்காக உழைப்பார்கள். எல்லாவற்றிலும் முன்னிலையில் நிற்பார்கள். ஆனால் திடீரென்று கிறிஸ்துவை விட்டு பின்வாங்கி பழைய பாவ வாழ்க்கைக்கே போய்விடுவார்கள். எப்படி என்று நாம் ஆச்சரியப்படும் வகையில் செய்வார்கள்.
*நீங்கள் அனுதினமும் ஒரு மணி நேரமாவது ஜெபிக்கிறீர்களா?*
*அனுதினமும் கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து ஒரு மணி நேரம் ஜெபிக்க தவறுவீர்களென்றால் நீங்கள் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியாது. எத்தனை உறுதியான விசுவாசியும், தான் ஜெபிக்கத்தவறும் போது நொடிப் பொழுதில் தவற வாய்ப்புண்டு.*
*ஜெபமே கிறிஸ்தவனின் உயிர் மூச்சு. ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்.*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
==========
இதுதான் முக்கியம்
==========
சில வருடங்களுக்கு முன் ஒரு முறை, எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் நபரிடத்தில் ஒரு புத்தகத்தை கொடுத்து கம்ப்யூட்டரில் டைப் செய்ய சொல்லி விட்டு, வெளியூருக்கு கடந்து சென்றுவிட்டேன். அந்த நபர் தூங்காமல் கொள்ளாமல் வெகு தீவிரமாக வேலை செய்து அந்த வேலையை முடித்துவிட்டதாக சொன்னார். நான் திரும்பி வந்து பார்த்து போது, அந்த நபர் நான் சொல்லாத வேறு ஒரு புத்தகத்தை டைப் செய்து வைத்திருந்தது எனக்கு தெரியவந்தது. அந்த நபர் பட்ட பிரயாசம் முற்றிலும் வீணானது.
*எத்தனை தீவிரமாக வேலையை செய்தாலும், சரியான வேலையை செய்யவில்லை எனில் நம்முடைய பிரயாசம், நேரம் அத்தனையும் வீணாகும்.*
*அதே போல் ஆவிக்குரிய வாழ்வில் நாம் பக்திக்காக எத்தனை காரியங்களை செய்தாலும், செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களை தவறவிடுவோமாகில், நம்முடைய அனைத்து பிரயாசங்களும் வீணாகப் போகும்.*
முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் *அவரிடத்தில் அன்பு கூருகிறதும்,* தன்னிடத்தில் அன்புகூருகிறது போல் *பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே* சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான். (மாற்கு 12:33)
முழு வேதாகமத்தையும் பிழிந்து எடுத்தால் இரண்டே கற்பனைதான் வருகின்றன. அதில் *முதலாவது தேவனை நேசி, இரண்டாவது பிற மனிதனை நேசி* என்பது தான். *இந்த இரண்டும் இல்லாமல் நாம் தேவனுக்காக அல்லது பக்திக்காக செய்கின்றோம் என்று நினைத்து செய்யும் அனைத்தும் முற்றிலும் வீண்.*
இன்று மதம் என்ற போர்வையில் அநேக சடங்காச்சாரங்கள் கிறிஸ்தவத்திற்குள் நுழைந்து வீணான சகல காரியங்களையும் நாம் பின்பற்ற வைத்துள்ளது. அதன்படி ஆடைகளுக்கு முக்கியத்துவம், நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம், வீண் சடங்குகளுக்கு முக்கியத்துவம், பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் என்று அர்த்தமில்லாத பல காரியங்களை பெரும் பக்தியோடு, கோடிகள் செலவழித்து செய்து வருகின்றோம்.
*ஆனால் அதில் ஒரு துளி கூட பிரயோஜனமில்லை, தேவன் அதை துளியும் விரும்புவதில்லை என்பதை நாம் அறியவில்லை.*
தேவன் கேட்காதவைகளையெல்லாம் கடும் பிரயாசப்பட்டு செய்து விட்டு, கர்த்தாவே இவையெல்லாம் உங்களுக்காகத்தான் செய்தேன் என்று அவரிடம் சொன்னால், *நான் என்ன இவைகளை செய்யச் சொல்லி உன்னிடத்தில் கேட்டேனா என்பார்!*
ஆலயத்திலும், குடும்பத்திலும், தனி வாழ்விலும் நாம் செய்யும் அனைத்தையும் கீழ்க்காணும் இரண்டு சல்லடையில் போட்டு பார்க்க வேண்டும்.
*தேவனை நேசி என்ற கட்டளையின் அடிப்படையில் நான் செய்யும் செயல்கள் மூலம்*
நான் தேவனுடைய உறவில் நாளுக்கு நாள் வளருகின்றேனா?
நான் ஜெபம், வேத வாசிப்பு ஆகியவற்றை விருப்பத்துடன் செய்கின்றேனா?
நான் என் வாழ்வில் இன்னும் பரிசுத்தமாகின்றேனா?
என் சுவாபங்கள் தெய்வீக சுவாபங்களாக மாறுகின்றனவா? என்று ஆராய்ந்து பாருங்கள்.
*மேலும் மனிதனை நேசி என்ற கட்டளையின் அடிப்படையில் நான் செய்யும் செயல்கள் மூலம்*
நான் சக மனிதனை எனக்கு சமமாக நடத்துகின்றேனா?
நான் தேவையுள்ளோரை காணும் போது எனக்குள்ளவைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேனா?
நான் அனைவருடனும் அன்போடும் பரிவோடும் நடந்து கொள்கின்றேனா?
ஒருவருக்கும் பழிக்கு பழி செய்யாமல், தீமைக்கு நன்மை செய்கின்றேனா? என்று ஆராய்ந்து பாருங்கள்.
*மேற்கண்ட காரியங்கள் உங்கள் பக்தியினால் நடக்கவில்லையெனில் உங்கள் நடக்கைகள் முற்றிலும் வீணாணது என்று வேதம் சொல்கின்றது.*
*சிந்தித்து செயல்படுங்கள்!*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
====================
காணிக்கைகளை (தியாகங்களை) கவனிக்கும் இயேசு
====================
உன் வலது கை செய்வதை உன் இடது கை அறியாதிருக்க க்கடவது என்று நாம் கொடுப்பதையெல்லாம் மனிதருக்கு தெரியாமல் இரகசியமாய் கொடுக்கச் சொன்னார் இயேசு. ஆனால் நாம் கொடுப்பதையெல்லாம் அவர் மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றார் என்றால் நம்ப முடிகின்றதா?
*“இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப்பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்”* (மாற்கு 12:41) என்று வாசிக்கின்றோம்.
ஒரு கலை நிகழ்ச்சி நடக்கும் போது எப்படி சேர் போட்டு உட்கார்ந்து கவனமாய் கவனிப்போமோ, அது போல ஜனங்கள் காணிக்கை கொடுக்கும் போது நம் ஆண்டவர் அதை கவனமாய் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றார்.
பணக்காரர்கள் அநேகர் வந்து அதிகமான காணிக்கைகளை போட்டார்கள், ஆனால் ஒரு ஏழையான விதவை வந்து *ஒரு துட்டுக்கு சமமான இரண்டு காசை* போட்டாள் என்று பார்க்கின்றோம். (மாற்கு 12:41-42)
*காசு (mite) என்பது அக்காலத்தின் பண அளவுகளில் இருப்பதிலேயே மிகச்சிறிய பண அளவு.* வெறும் 4 கிராம் எடை கொண்ட மெல்லிய செப்பு காசு. இரண்டு காசுகள் சேர்ந்தால் ஒரு துட்டு எனப்படும். 40 துட்டுக்கள் சேர்ந்தால் ஒரு தினாரி அல்லது தினார். அக்காலத்தில் ரோமர்களின் கணக்கின்படி ஒரு நாள் கூலி ஒரு தினார் ஆகும். ஆனால் பாலஸ்தீனர்களின் கூலி அதிலும் ஐந்தில் ஒரு பகுதியே ஆகும். *எனவே நம்முடைய இக்கால மதிப்பில் அந்த ஏழை பெண் போட்ட காணிக்கை ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் இருக்கலாம்.(
*பணக்காரர்கள் போட்ட லட்சங்களை சற்றும் சட்டை செய்யாத நம் இயேசு, அந்த இரண்டு காசு போட்ட அந்த பெண்ணைப் பார்த்து வியந்தார். காரணம் அந்த பெண் தன்னுடைய 100 சதவீத சொத்தையும் அப்படியே போட்டுவிட்டாள். எத்தனை தியாகம்! இயேசுவைத் தவிர வேறு யாரும் அதை பாராட்டியிருக்கவே மாட்டார்கள்!*
*நம்மில் அநேகர் நம்முடைய இல்லாமை மற்றும் இயலாமையின் மத்தியிலிருந்து கர்த்தருக்காக கொடுக்கின்றோம், பிரயாசப்படுகின்றோம். ஆனால் அநேக நேரங்களில் அவைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை, அங்கிகரிக்கப்படுவதில்லை. நம்முடைய பங்களிப்பு சிறியதாயிருக்கின்றபடியினால் அற்பமாய் எண்ணப்பட்டு ஒதுக்கப்படுகின்றோம். இதினிமித்தம் நாம் சோர்ந்து போகின்றோம்.*
*நாம் சோர்ந்து போக வேண்டிய அவசியமில்லை! இயேசு நாம் கர்த்தருக்காக கொடுக்கின்ற ஒவ்வொரு காசையும் கவனித்துப் பார்க்கின்றார். நாம் கர்த்தருக்காக செய்கின்ற ஒவ்வொரு பிரயாசத்தையும் கணக்கில் வைத்துள்ளார். அவர் நாம் கொடுக்கின்ற பணத்தின் அளவை அல்ல, தியாகத்தின் அளவையே பார்க்கின்றார். உங்கள் தியாகத்தின் அளவிற்கு தக்கதாய் உங்களுக்கு பலனளிப்பார்.*
*நீங்கள் …தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே. (எபி 6:10) என்று வேதம் சொல்கின்றது.*
*கர்த்தருக்காக நீங்கள் இழந்த இழப்புக்கள், அடைந்த வேதனைகள், செலவழித்த பணங்கள், பட்ட பிரயாசங்கள், வடித்த கண்ணீர்கள் அத்தனைக்கும் தக்கதாக நூறத்தனையான பலனை கர்த்தர் உங்களுக்கு தருவார் (மாற் 10:29-30)*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
===============
மாற்றத்தின் காரணி
================
பல வாசனை பொருட்கள், மாசாலா பொருட்கள் மற்றும் மட்டன் ஆகியவற்றை கொண்டு மணக்க மணக்க பிரியாணி செய்தாலும், அதில் உப்பு என்ற ஒன்றை போடவில்லையென்றால் சப்பென்றுதான் இருக்கும். உப்பிற்கு மொத்த உணவிற்கும் சுவையூட்டும் சக்தியுண்டு. அதனால் தான் இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை பார்த்து நீங்கள் உலகத்திற்கு உப்பாயிருக்கிறீர்கள் என்று சொன்னார்.
சுமார் கிமு 849ல் சீரியா என்னும் தேசத்தார், இஸ்ரவேலிலிருந்து ஒரு சிறுபெண்னை கடத்திக் கொண்டுபோய், அடிமையாக அவர்கள் நாட்டில் வைத்திருந்தார்கள். அந்த பெண் அந்நாட்டு படைத்தலைவன் வீட்டில் அடிமைப்பெண்ணாக இருந்து வேலை செய்து வந்தாள். என்ன ஒரு பரிதாபமான நிலை! ஓடி விளையாட வேண்டிய சிறுவயதில் கடத்தப்பட்டு அடிமையாக வேலை வாங்கப்படுவது எத்தனை கொடூரமான செயல்!
ஆனாலும் *இந்த சிறுபெண் தான் அடிமையாக வாழ்ந்த வீட்டில் ஒரு மாற்றத்தின் காரணியாக மாறினாள்.* எப்படி? தன் வீட்டு எஜமானாயிருந்த படைத்தலைவனுக்கு குஷ்டரோக வியாதி இருந்ததை அறிந்த அந்த சிறுபெண், அதிலிருந்து தெய்வீக சுகம் பெறுவது எப்படி என்று அவருக்கு ஆலோசனை கூறினாள். அந்த படைத்தலைவனும் அப்படியே இஸ்ரவேலில் உள்ள தீர்க்கதரிசி எலிசாவிடம் சென்று தெய்வீக சுகம் பெற்றான்.
கவனியுங்கள்! குஷ்டரோகம் என்பது குணமாக்க முடியாத மரண வியாதி. இந்த அற்பமாய் எண்ணப்பட்ட சிறு அடிமைப்பெண், மரணத்தின் விளிம்பில் இருந்த அந்த பெரிய படைத்தலைவனின் வாழ்க்கையிலே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டாள். கண்டிப்பாக இந்த அற்புத சுகத்திற்கு பின் இந்த சிறு பெண்ணை அவர்கள் வீட்டில் அடிமையாக அல்ல, மகளாகவே நடத்தியிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.
*உப்பு எளிமையாக இருந்து முழு உணவையும் சுவையாக்குவது போல, இந்த சிறு பெண் இந்த குடும்பம் முழுமைக்கும் சுவையை ஏற்படுத்திவிட்டாள்.*
*நாம் எத்தனை எளிமையானவர்களாயிருந்தாலும் பரவாயில்லை, நாம் எந்த தாழ்மையான இடத்திலிருந்தாலும் பரவாயில்லை, நம்மை சுற்றியுள்ள மக்கள் மீது நம்மால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்த சிறு பெண் ஒரு சாட்சி. நாம் ஒரு மாற்றத்திற்கான காரணியாக விளங்க முடியும்.*
*மாற்றத்தின் காரணியாக நாம் என்ன செய்ய வேண்டும்?*
மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி நம்மிடம் இல்லை. அது *தேவனுடைய வார்த்தையிலிருக்கின்றது.* சுவிசேஷத்திலிருக்கின்றது. "பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று" (1 கொரி. 1:21) என்று வேதம் சொல்கின்றது.
*இந்த இயேசுவைப் பற்றிய நற்செய்தி, ஜனங்களுக்குள்ளே மாற்றத்தைக் கொண்டுவரும்.* சமாதானத்தை கொண்டுவரும், சந்தோஷத்தைக் கொண்டுவரும். இயேசுவே உண்மையான தெய்வம், இயேசுவே வழி, சத்தியம், ஜீவன், இயேசு நம் பாவங்களை கழுவி நம்மை நீதிமானாக்குகின்றார் என்ற சத்தியத்தை நீங்கள் பார்க்கிறவர்களிடமெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
*நாம் ஒரு வேளை சிறு அடிமைப் பெண்ணைப் போல இருக்கலாம். அவர்கள் ஒரு வேளை படைத்தலைவனைப் போல் பயங்கரமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் உயிர்காக்கும் மருந்து உங்களிடம் தான் உள்ளது. இவர்களெல்லாம் நம்மை விட உயர்ந்தவர்கள், நாம் சொன்னால் கேட்பார்களா? என்று தயக்கப்பட்டு தயக்கப்பட்டுதான் பல நாகமான்களை சாக (நரகத்திற்கு) விட்டுக் கொண்டிருக்கின்றோம்.*
*தயக்கப்படாமல் யாரிடமும் சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். நம்மிடம் உள்ள உப்பு (சுவிசேஷம்) அவர்கள் வாழ்வில் சுவையை கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.*
கர்த்தர் உங்களை பயன்படுத்துவாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006
=============
உங்களில் ஒருவன்
==============
இயேசு சிலுவையிலறையப்படுமுன் கடைசியாக சீஷர்களுடன் அமர்ந்து சாப்பிடுகையில், இந்த வார்த்தைகளை சீஷர்களிடம் சொன்னார்: என்னுடனே புசிக்கிற *உங்களில் ஒருவன்* என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மாற்கு 14:18)
இயேசுவோடே மூன்றரை ஆண்டுகள் பயணித்து, உண்டு, உறங்கி சகல நன்மைகளையும் அனுபவித்த 12 பேரில் ஒருவன் தான் இயேசுவை காட்டிக் கொடுத்தான். *உங்களில் ஒருவன்* என்று அழைக்கப்பட்ட யூதாஸ் இப்படிப்பட்ட *மகா துரோகத்தை இயேசுவுக்கு செய்யக் காரணம் என்ன?*
*பணம்!*
வேதம் சொல்கின்றது: “அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்: *நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான்.* அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்” (மத். 26:14-15)
யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்கு வேறு பல காரணங்கள் இருந்திருந்தாலும், *பண ஆசை ஒரு முக்கிய காரணம்,* ஏனென்றால், *“நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்”* என்று பிரதான ஆசாரியரிடத்தில் இயேசுவை காட்டிக் கொடுக்க பேரம் பேசினதை கவனியுங்கள். மேலும் யோவான் 12:1-6 வசனங்களை வாசித்தால், *யூதாஸ் பண ஆசையுள்ளவன்* என்பது தெள்ளந்தெளிவாக தெரிகின்றது.
*உங்களில் (சீஷர்களில்) ஒருவன் என்ற நிலையிலிருந்து காட்டிகொடுத்த யூதாஸ் என்ற பெயர் யூதாசுக்கு எப்படி வந்து? பண ஆசையே காரணம்! பண ஆசை இயேசுவையே காட்டிக்கொடுக்க வைக்கும்! பண ஆசை சீஷனையே துரோகியாக்கினது.*
சில வாரங்களுக்கு முன் ஒரு போதகர் தான் ஊழியம் செய்த சிறிய சபையிடமிருந்து 12 லட்சம் ரூபாய் மற்றும் கால் கிலோ தங்கம் ஆகியவற்றை காணிக்கை பெற்றார் என்றும், பணத்திற்காக இயேசுவோடு பேரம் பேசினார் என்றும் பெருமையாய் சொல்லி மக்களுக்கு பண ஆசை காட்டியிருந்த வீடியோவை பார்த்து வேதனை அடைந்தேன்.
பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பது பழமொழி! இதற்கு விசுவாசி ஒன்றும் விலக்கல்ல! கோடிகளைப் பற்றி பேசி மக்கள் மனதை மயக்குவதெல்லாம் தன் கல்லாவை கட்டுவதற்குத்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
*பண ஆசை ஒரு போதும் இயேசுவுக்கு அருகில் கொண்டு செல்லாது, பண ஆசை சீஷனையே துரோகியாக்கும் வல்லமையுள்ளது. ஐசுவரியத்தின் மயக்கம் கேட்கும் வசனங்களையெல்லாம் பலன் கொடுக்க விடாமல் நெருக்கி அழித்துப் போடும் என்று வேதம் சொல்கின்றதை கவனியுங்கள்.* (மாற்கு 4:18)
“எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும்” (மாற்கு 14:21) என்று *இயேசு கடுமையாக எச்சரித்த பிறகும் தன் மனதை கல்லாக்கிக் கொண்டு செல்கின்றானென்றால் பணம் எந்த அளவிற்கு மனிதனை மயக்குகின்றது என்பதை கவனித்துப் பாருங்கள்.*
*மற்ற 11 சீஷர்களும் ஒன்றும் பெரிய பரிசுத்தவான்களல்ல, ஆனால் அவர்கள் பிற்காலத்தில் உலகத்தை கலக்கும் அப்போஸ்தலர்களாய் தேவனால் பயன்படுத்தப்பட்ட போது, பண ஆசை கொண்ட யூதாஸ் தற்கொலை செய்து பரிதாபமாக மரித்துப் போனான் என்பது வேதனையான விசயம்.*
இன்று பண ஆசையினால் ஊழியங்களிலும் கிறிஸ்துவை வியாபார பொருளாக்கி, தங்கள் செல்வத்தை சேர்ப்பவர்கள் அதிகமாகிவிட்டனர். உலக வியாபாரிகளுக்கு ஒப்பாக எந்தெந்த வழியிலெல்லாம் பணம் ஈட்ட முடியுமோ அந்த வழிகளையெல்லாம் பின்பற்றுகின்றார்கள். இது விசுவாச துரோகத்தில் போய் முடியும்.
*“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” என்று இயேசு தெளிவாய் போதித்துள்ளார்.*
*ஆனால் பணத்தை முதலாகவும், இயேசுவை இரண்டாவதாகவும் தேடினால் இன்றைய “உங்களில் ஒருவன் (சீஷன்)” நாளைய துரோகிகளாக மாறுவதில் ஆச்சரியமில்லை.*
*பண ஆசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!*
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. ஆல்வின் ஜான்சன்
+91 97 9000 2006

Thanks for using my website. Post your comments on this