===================
பிரான்சிஸ் ஆஸ்பரி (1745 - 1816)
===================
அநேக தாய்மார்கள் மனோதத்துவம் படிக்காதவர்களும், அதற்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதவர்களாயிருந்தாலும் மிக அருமையான மனோதத்துவ நிபுணர்களாய் இருந்திருக்கின்றனர்.
இரட்சண்ய சேனைத் தலைவர் ஜென்ரல் வில்லியம் பூத்தின் மனைவி திருமதி கேத்ரின் பூத், தூங்கிக் கொண்டிருக்கும் தன் பிள்ளைகள் தொட்டிலருகே முழங்கால்படியிட்டு அவர்களின் காதருகே சன்னமாய், "டார்லிங், நீங்க இங்க இந்த உலகத்தில உங்களுக்காகவே வாழ வரல தெரியுமா? நீங்க இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்டதே மத்தவங்களுக்காகத்தான்.. இந்த உலகமே உங்களுக்காகக் காத்துக் கிடக்குமா.." என்று கிசுகிசுப்பார். பிள்ளைகளை எப்படிப்பட்ட சிந்தனையோடு தூங்கவைக்கும் நல்லமுறை பாருங்கள்! வில்லியம் பூத்தின் பிள்ளைகள் எல்லாருமே தாகம் நிறைந்த உலகத்துக்கு ஊழியம் செய்யத் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள விசேஷித்த திறமைகளைத் தங்களுக்குள் வளர்த்துக் கொண்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!
1745ல் இங்கிலாந்திலே இந்த உலக மாயைகளுக்கெல்லாம் மனம் மயங்காத தாய் ஒருவரைக் காண்கிறோம் நாம். அவள் தன் அக்கம்பக்கத்தாரிடம் சொல்வாள்..."நான் ஒரு தரிசனம் கண்டேன்; என் மகன் Asbury ஆண்டவரை அறியாத புறஜாதிகள் நடுவில் பெரிய ஆவிக்குரிய தலைவனா வருவான் பாருங்க.. நான் இப்போ இருந்தே அவன் பக்கத்திலிருந்து பாட்டுப்பாடிப் பாடி, ஒவ்வொரு நாளும் என் பிள்ளை மேல கைவச்சு ஜெபம் பண்றேன்.." என்பாள். அவளுடைய வார்த்தை சிலரை புருவம் உயர்த்தச் செய்தாலும், அது என்னவோ, அவள் தன் ஜெபத்தினால் ஆண்டவரையே வளைத்தது போலிருந்தது..
மிஸஸ். ஆஸ்பரி தேவனோடு தானும் மென்மையாய் நடந்ததுமல்லாமல், தன் மகன் Francis Asbury ஐயும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்திலும் ஆவியிலுமே வளர்த்தாள். பிள்ளை இன்னும் சிறியவனாய் இருக்கும்போதே, இங்கிலாந்தின் பிர்மிங்காமிலுள்ள ஹேன்ஸ்வொர்த் மாவட்டத்தின் மற்ற பிள்ளைகளை விட வித்தியாசமாகவே காணப்பட்டான். அவனோடு பள்ளியிலிருந்த மற்ற பிள்ளைகள் அவனைச் சீண்டி, அடிக்கடி அவனை வேண்டுமென்றே சண்டைக்கு இழுத்தாலும், அவனோ அவைகள் எல்லாவற்றையும் தனக்குச் சாதகமாகவே மாற்றிக்கொள்வான்.
ஆஸ்பரி பற்றி ரேவன்ஹில் தொடர்கிறார்......
ஒரு வசதியான கிறிஸ்தவக் குடும்பத்திலிருந்து, அந்தக் குடும்பத்தோடேயே இருந்து வேலை செய்யும்படியான ஒரு வாய்ப்பு சிறு வயதிலேயே ஆஸ்பரிக்கு வர, அதை ஒப்புக் கொண்ட அவனுக்கு, அந்தக் குடும்பத்தின் பிள்ளைகளோடே இலவசமாய்க் கல்வி கற்கும் வாய்ப்பும் கிடைத்தது.
தன் வாலிப வயதிலிருந்தே கடுமையாய் உழைக்கும் பழக்கத்தைத் தனக்குள்ளே கொண்டிருந்த வளர் வயதினனான Francis Asbury, தீப்பொறியாய்ப் பறந்து செல்லும் ஒவ்வொரு நிமிஷத்தையும் கச்சிதமாய்ப் பயன் படுத்திக்கொண்டே ஆகவேண்டும்" என்ற, வாழ்வின் முக்கியமான கோட்பாட்டு உண்மையை எங்கோ எப்போதோ கற்றுக்கொண்டிருந்தான். அந்தப் பழக்கம் அவனது வாழ்நாள் முழுக்க அவனோடு ஒட்டிக்கொண்டுவிட்டது.
இந்தப் பையனின் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாய் விளங்கிய ஒரு சம்பவத்துக்கு அடிக்கல்லாய் விளங்கியது, அவன் மேல் கண்ணுங் கருத்துமாயிருந்த அவனது தாய். ஒரு நாள் அவள்,"தம்பி, என்னோடு மெத்தடிஸ்ட் கூட்டங்களுக்கு வருகிறாயா?" என்று கேட்டபோது, அவளோடு அங்கு சென்ற அந்த 13 வயதுப் பையன், தேவனோடு கூட தன் முதல் சந்திப்பை அங்கே கண்டான். குற்ற உணர்வினால் குத்துண்ட ஒரு மனசாட்சியையோ, உடைந்த வாழ்வின் உடைந்த மனதையோ அவன் அங்கே தனக்குள்ளே காணவில்லை. மாறாக, மிகவும் இன்றியமையாத ஏதோ ஒன்று தனக்குள்ளே இல்லாத ஒரு வெறுமையையும், மிக மிக அவசியமான ஒருவர் தனக்குள்ளே காணப்படாத ஒரு வெற்றிடத்தையும் வெகு தீவிரமாய் உணர, அதைக் கண்டடையத்தக்க இரக்கத்தைத் தேடி அங்கேயே அதைக் கண்டு கொண்டான் அவன். அதன் பின் கிறிஸ்துவே மிகப் பிரகாசமான ஜீவனுள்ள ஒருவராய், அன்றாட வாழ்வில் அவன் ருசித்து அனுபவிக்கும் உண்மையிலும் உண்மையாய் அவனுக்கு மாறிப்போனார்.
அந்த மனந்திரும்புதலுக்கு இரண்டு வருஷத்துக்குள்ளாகவே ஆஸ்பரி பிரசங்கிக்கத் தொடங்கிவிட்டார். வேறு யாராலும் அல்ல, புகழ்பெற்ற ஜாண் வெஸ்லியின் கைகளினாலே, தன் 22 வயதிலேயே மெத்தடிஸ்ட் ஊழியராய் நியமனம் செய்யப்பட்டார் அவர். அவருக்குள்ளிருந்த ஒளி, மங்கி மின்மினுக்கிக் கொண்டிருந்த ஒன்று அல்ல, மாறாக, மறக்கப்பட்ட புறஜாதிகளுக்குள்ளே வெட்டி ஒளிவீசும் பட்டயமாய்ப் புறப்பட்டது அது.
தாம் வேண்டிக்கொண்டபடியே அந்த இளவயது ஊழியர் 1771 ல் அமெரிக்காவுக்கு ஊழியத்துக்கு அனுப்பப்பட்டார். அடுத்த வருடம் பொதுக்காரியதரிசி என்ற பொறுப்பு அளிக்கப்பட்டு தாமஸ் ரெய்க்கின் என்பவருக்கு உதவியாளராய் நியமிக்கப்பட்டார் அவர்.
அந்நாட்களில் அமெரிக்காவில் வெடித்தது உள்நாட்டுப் புரட்சிப்போர். அப்போது ராங்க்கின் இங்கிலாந்துக்குத் திரும்பி விட, அமெரிக்காவில் ஊழியத்தில் தங்கி விட்ட ஆஸ்பெரி பட்டபாடுகள் கொஞ்சநஞ்சமல்ல. உள்நாட்டுப்போரில் சபையானது ஒரு தலைப்பட்சமாய், குறிப்பிட்ட ஒரு சாராரின் பட்சத்தில் நிற்கக் கட்டாயப்படுத்தப்பட்ட போது, மெத்தடிஸ்ட் தலைவராய் விசுவாச சத்தியப்பிரமாணம் செய்து கொடுக்க அவர் அதிகமாய் நெருக்கப்பட்டபோது, அவ்வளவு அழுத்தத்துக்கும் ஈடு கொடுத்து நிற்க வேண்டிய நிர்ப்பந்தத்திலும் எப்பக்கமும் சமரசம் செய்யாமல் மனசாட்சியின்படி உறுதியாய் நின்றார் அவர். உள்நாட்டுப்போருக்குப் பின்பு, தங்கள் சபையினை ஒழுங்குபடுத்தும் வேலையில் மெத்தடிஸ்ட்டுகள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். 1784 கிறிஸ்மஸ் மாநாட்டில் ஆஸ்பரியும் கோக் என்பவரும் மேற்பார்வை செய்யும் சூப்பரின்டெண்டன்ட் டுகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களது இடைவிடா உழைப்பைக் கண்ட வெஸ்லி, பின்னர் அவர்களை பிஷப்புகளாக நியமித்தார்.
பிரான்சிஸ் ஆஸ்பரி முறைப்படுத்திய மூன்று பழக்கங்களினாலே அவரது வெற்றியின் இரகசியம் கண்டறியப்பட்டது. அவருக்குப் பின்வந்த முன்னோடி மிஷினரிகள் அந்த மூன்று மிக முக்கிய பழக்கங்களையே தங்கள் அன்றாட திட உணவாகவும் ஆகார பானமாகவும் ஆக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
*அந்த 3 பழக்கங்கள் :
*1. வேதத்தை நேசித்து அதின் பல பகுதிகளை மனப்பாடம் செய்வது..*
*2. மனப்பாடம் செய்த தேவபக்திப் பாடல்களையே அன்றாட ஆராதனையாய் மாற்றியது..*
*3. தன் ஜெப மறைவிடத்தை அதிகமாய் நேசித்து அதையே தன் உறைவிடமாய் மாற்றிக்கொண்டது..*
இடைவிடாமல் பழுதின்றி ஓடிய ஒரு டீசல் காரைப்பற்றி பெருமை பொங்க ஒருவர் என்னிடம் சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தார். "எந்தவொரு சிறு சிராய்ப்போ உராய்வோ இன்றி இதுவரை 1,25,000 கிமீ அது ஓடியிருக்கிறது என்று மிகவும் பெருமிதத்தோடு சொன்னார் அவர். இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? கண்ணாடியாய் சறுக்கிச் செல்லும் சாலைகள், குண்டு குழிகள், ஏற்றத்தாழ்வுகள் ஏதுமின்றி நீண்டுசெல்லும் நெடுஞ்சாலைகள், குறுக்கும் நெடுக்குமானவைகள் சீராக்கப்பட்டு நேராக்கப்பட்டு, அம்பாய்ப் பாய்ந்து செல்லும் நேர் ரோடுகள்...இன்றைய அதிநவீன வாகனங்களில் அமர்ந்து செல்வது என்பது ஈஸிசேரில் படுத்துப் பயணிப்பதே அல்லாமல் வேறல்ல. இதில் அதிசயம் வேறென்ன உண்டு?
எனது நண்பரின் வாகனம் இப்படிப்பட்ட வழுக்கு சாலைகளில் 1,25,000 கிமீ எவ்வித விபத்துமின்றிப் பயணித்தது பெரிய விஷயமில்லை. முழு இங்கிலாந்தின் பரப்பளவு, அகண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் அளவு கூட இல்லாதிருப்பினும், அந்தக்கால எவ்வித வசதியுமற்ற நிலப்பரப்புகளின் நீள அகலத்தை ஜாண் வெஸ்லி எத்தனை முறை தன் குதிரையின் மேல் பயணித்துக் கடந்திருப்பார் என்று அறிவீர்களோ? இப்போது இந்த பிரான்சிஸ் ஆஸ்பரியைப் பாருங்கள்! தான் பயணித்த 2,70,000 மைல்களையும் தன் குதிரையின் மேலேயே அமர்ந்து பயணித்திருந்தார் அவர். பாதையும் வழியுமற்ற சதுப்பு நிலங்களின் நடுவே பல மைல்களும் மணிநேரங்களும் பயணித்துக் கடந்து சென்றிருந்த அவர், ஒரு முறையாவது முறுமுறுத்ததே இல்லை. எத்தனை முறை சதுப்பு நிலங்களுக்குள்ளும் சகதி மண்ணிலும் சிக்கிக்கொண்டு, மூழ்க இருந்த தன்னையும் தன் குதிரையையும் காப்பாற்ற அவர் பட்ட பாடுகளை அவர் ஒருவரே அறிவாரேயன்றி, அதை நம்மில் யார் அறிவோம்?
திக்குத்தெரியாத இருண்ட கடும் கானகங்களிலே கடுமையாய் முன்னேறிச் சென்றார் ஆஸ்பரி. பாதையற்ற பாழ்வனங்களிலே அம்மனிதன் சந்தித்த பயங்கரங்கள் தான் எத்தனை எத்தனை ! அநேக நேரங்களில் குடிதண்ணீரே கிடைக்காமல் சொட்டுத் தண்ணீருக்குக் காட்டில் தவியாய்த் தவித்து அலைந்து திரியும் நிலை! ஆனால் தண்ணீருக்குத் தவித்த அவரது நாவின் தாகத்தை விட, ஆத்துமாக்களுக்காகத் தவியாய்த் தவித்த அவரது தாகமும் தியாகமும் அதிகமதிகமாய் இருந்தது.
அவர் சரமாரியாய்ச் சந்தித்த சோதனைகளுக்கும் போராட்டங்களுக்கும் அவருக்குக் கை கொடுத்து அவரது ஆத்துமாவைக் கடைசிவரை காத்துக்கொண்டது ஒன்று உண்டானால், அது அவர் தன் வழிநெடுக பாடிக்கொண்டே சென்ற, தான் மனப்பாடம் செய்து வைத்திருந்த அழகான ஆவிக்குரிய பாடல்கள் தான்.
தன் வீட்டிலிருந்து எங்கோ ஒரு தொலைவில், மனையற்றவராய், மனைவியற்றவராய், ஆகாரமற்றவராய், உறக்கமற்றவராய், அநேக நேரங்களில் உடனாளியும் துணையாளியும் அற்றவராய் ஆயிரக்கணக்கான மைல்கள் அந்தக் கடுங்கானகங்களில் அலைந்து திரிந்தார் அவர்.
ஆஸ்பரி மனைவியற்ற ஒருவராய் இருந்தாரென்று நான் சொன்னேன். அந்த நாட்களில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நாடோடிகளாய் அலைந்து திரிந்து சுவிசேஷம் அறிவித்து வந்த மெத்தடிஸ்ட் ஊழியர்களின் வாழ்க்கைமுறை அப்படித்தான் இருந்தது.
"ஒன்று செய்கிறேன்.. பின்னானவைகளை மறந்து.." என்ற பவுல் அப்போஸ்தலனின் வார்த்தைகளே ஆஸ்பரியின் சுலோகமாகவும் மாறியிருக்க வேண்டும்! மற்றவர்கள் எதெதெற்குப் பின்னோ அலைந்து திரிந்தபோது அவர் அவைகளில் எத்தனையோ காரியங்களை மறந்துவிட்டிருந்தார். இன்று அவர்கள் மறக்கப்பட்டுப் போனார்கள். ஆஸ்பரியின் பெயர் மட்டும் மறக்கப்படாமல் இன்று வரை நிற்கிறது!
தனது ஆவிக்குரிய யுத்தத்தில் அஞ்சிப் பின்வாங்காத ஒருவராகவும், தன் பிரயாணங்கள் எல்லாவற்றிலும் பயந்து கலங்காத ஒருவருமாகவே இருந்தார் ஆஸ்பரி. இயற்கையிலேயே நகைச்சுவை நிறைந்திருந்த அவர், நிர்வாகத்தில் நிபுணராகவும், அசாதாரண நுண்ணறிவும் புத்திக்கூர்மையும் உள்ளவராக மட்டுமல்ல, ஆழ்ந்த உள்நோக்கும், பரந்த வெளிநோக்கும் கொண்டவராகவே இருந்தார்.
நாலாயிரம் ஊழியர்களைத் தன் கைகளினால், தானே பிரதிஷ்டை செய்ததும், 240 வருடாந்திர மாநாடுகளை வெவ்வேறு மாவட்டங்களில் நடத்தியதும், பரந்துவிரிந்து கிடந்த அமெரிக்க தேசத்தைப் பற்பல மாவட்டங்களாக வகுத்துப் பிரித்ததும், அவைகளில் ஒவ்வொன்றிலும் கல்வி நிறுவனங்களை நிறுவியதும் - இவைகள் எல்லாமே அவரது கதையின் ஒரு பகுதிதான்!
1791ல், மெத்தடிஸ்டின் தலைவரும் தளபதியுமான ஜாண் வெஸ்லி மரித்தபோது, அதுவரை பிரான்சிஸ் ஆஸ்பரியுடன் அமெரிக்காவில் வருடத்தில் பாதி நாட்கள் இருந்து வந்த பிஷப் கோக், நிரந்தரமாக இங்கிலாந்திலேயே இருந்துவிடச் சென்றுவிட்டார். அதன் பிறகு அமெரிக்க மெத்தடிஸ்ட் சபையின் பொறுப்பின் பாரம் முழுவதும் ஆஸ்பரியின் விரிந்த தோள்களின் மேல் விழுந்தது. அதின் மிகப்பெரிய பளுவைத் துணிச்சலாகவே தன் மேல் எடுத்துக் கொண்டார் அவர். வெஸ்லியின் பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்த "நான் பிரசங்கித்தேன்" என்ற பகுதியின் அமெரிக்க மொழியாக்கம், ஆஸ்பெரியின் பத்திரிகையிலும் அப்படியே அச்சு அசலாய் வெஸ்லியின் எழுத்தாகவே வெளிவந்தது.
"ஜனங்களின் வாழ்க்கையை வனையும் பிரசங்கங்களே மிகச்சிறந்தவை" என்று பிரசங்கிக்கும் முறையைப் பற்றிச் சொல்வார் ஆஸ்பரி. தேவனின் இதயத்துடிப்பையும், பாரத்தையும் துல்லியமாய்க் கேட்டறியும் திறன் கொண்ட அவர், அதைத் தன் இருதயத்தின் ஆழத்திலிருந்து கேட்பவர்களின் இருதயத்துக்குள் அப்படியே இறக்கிவிடுவார். அவருக்கு வேண்டியதெல்லாம் பிரசங்கத்தின் பலன் ஒன்றே! சொல்லாற்றலும் மொழியாற்றலும் அவரைப் பொறுத்தமட்டில் கடையானவைகளே!
புகழ்ச்சியெல்லாம் அவர் மேல் வெற்றி காண முயற்சி கண்டு தோல்வி கண்ட ஒன்றே! அப்படியே, அவர் பிரசங்கித்த ஏதோ ஒரு பிரசங்கத்தினிமித்தம் அவர் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடப்பட்டிருப்பாரானால், அது அவரைப் பொறுத்தமட்டில் தோல்வியுற்ற ஒரு வெற்றுப் பிரசங்கமே! அவரது பிரசங்கங்கள் ஒரு போதும் நித்தியத்தைத் தொடாமல் இருந்ததில்லை. அவர், தான் பிரசங்கித்த செய்தி ஒன்றைக் குறித்து, தானே, தனது பத்திரிகையில் இப்படி எழுதியிருந்தார். "ஒரு பயங்கரமான செய்தியொன்றைக் கொடுத்தேன் நான்..அது மிகவும் பயந்து நடுங்கப் பண்ணும் ஒன்று..நான், நானே அதினால் அசைக்கப்பட்டு விட்டேன்" என்று எழுதினார் அவர்.
சில நேரங்களில் அவரது நகைச்சுவை உணர்வு வறட்சியாக இருந்தாலும், அவைகள் மிக அழகானவைகள்.
"ஒரு முறை ஆவியின் அபிஷேகத்தில் அவர் பிரசங்கித்த போது முழுச்சபையும் ஸ்தம்பித்து எழுந்து நின்றுவிட்டது" என்று இந்த பிரான்சிஸ் ஆஸ்பரியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய எஸ்றா டிப்பிள் எழுதுகிறார். ஆஸ்பரி மனிதர்களைப் பாவத்திலிருந்து மனந்திரும்பும்படி அழைத்தார். அவர் மனிதர்களைப் பரிசுத்த வாழ்க்கைக்கு அறைகூவி அழைத்தார். தன்னைப் பின்பற்றி வந்த ஊழியர்களைத் தியாகமும் அர்ப்பணிப்புமுள்ள வாழ்க்கை ஒன்றுக்கு வருந்தியழைத்தார். ஆனால் இவைகள் யாவற்றையும் பவுலைப் போல, ஒரு சேரத் தன்னகத்தே கொண்டிருந்த அவர், தன்னோடிருந்தவர்களோ, தன் பின்னே வந்தவர்களோ, அவர்களில் ஒருவராவது தன்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாத உச்சத்திலே உயர்ந்து நின்றார்.
பரிசுத்தத்தையே பிரசங்கிக்கும் பரிசுத்தப் பிரசங்கி ஒருவரின் வாரிசு இளவலாகவே ஆஸ்பரி இருந்தாரென்று அவரது ரெக்கார்டுகள் அவரைத் தெளிவாய்ப் பதிவு செய்திருக்கின்றன. அவரது ஆத்துமா, மற்ற ஆத்துமாக்களுக்கு, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தில் நிறைந்து செய்த பிரசங்கமொன்றைக் கேட்க எனக்கு வாய்ப்பு ஒன்று கிடைத்தால் நலமாயிருக்கும் என்பேன்.
"அமெரிக்காவின் மெத்தடிஸ்ட் பிரசங்கிகள் யாவரினும் மேலோங்கித் தலையாய் நிற்பவர் ஆஸ்பரி" என்று சாட்சியிடுகிறார் பிஷப் Fowler.
"தனியொரு மனிதனாய் முழங்கி நின்ற ஒருவர்" என்கிறார், நாத்தான் Bangs.
"மிகச் சிறந்த பிரசங்க மேதை" என்று அவரை வர்ணிக்கிறார் ஜெஸிலி.
இவர்கள் எல்லாரைக்காட்டிலும் இந்த மாமனிதரைப் பற்றி ஜார்ஜ் ரஸ்ட் எழுதிய நினைவஞ்சலியை சற்று உற்றுக் கேட்பீர்களோ?
"ஒரு கண்ணியமான மனிதனின் நல்ல நகைச்சுவையையும், ஒரு சிறந்த பேச்சாளனின் நாவன்மையையும், ஒரு கவிஞனின் அழகு ரசனையையும், ஒரு கல்விமானின் அறிவுக்கூர்மையையும், ஒரு தத்துவ ஞானியின் அறிவாழத்தையும், ஒரு கனவானின் ஞானத்தையும், ஒரு தீர்க்கதரிசியின் புத்திசாலித்தனத்தையும், ஒரு தேவதூதனின் பகுத்தறியும் நுண்ணறிவையும், ஒரு பரிசுத்தவானின் தேவபக்தியையும், ஒரு குருமடத்துக்கு வேண்டிய பக்தி அளவையும், ஒரு பல்கலைக்கழகம் நிறைந்த படிப்பறிவையும், ஒரு கல்லூரி மாணவனின் கலை ஞானத்தையும் - இவை யாவற்றையும் ஒருசேரத் தன்னகத்தே ஒருங்கக் கொண்டவர் பிரான்சிஸ் ஆஸ்பரி."
Bio-Sketches By
Rev. LEONARD RAVENHILL
- தமிழில் -
Pr. Romilton
Thanks for using my website. Post your comments on this